சிற்றருவிச் சாரல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கலைமகள் குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2025
பார்வையிட்டோர்: 84 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“வரோம் கஜா” என்ற முதலாளி காரிலேறிக் கொள்ள, கனத்த மர கேட்டுகளைத் திறக்க ஓடினான் அவன். ஒவ்வொரு முறை சீஸன் முடிந்து முதலாளி குடும்பம் ஊர் கிளம்புகையில் வருத்தமாயிருக்கும். அந்த மலை பங்களா தன் சிரிப்பு, ஆரவாரம், வகைவகையாய் இறைந்து கிடக்கும் துணிமணிகள், பாத்திரங்கள் அத்தனையையும் கழற்றி மூளிபட்ட உணர்வு. ஆனால், இம்முறை மனம் வேறு உணர்வில் கட்டுண்டிருந்தது. 

வளைவில் அவர் முகம் திருப்பி இவனைப் பார்க்க – மூக்குக் கண்ணாடி பளபளத்தது. இவரது அப்பாவைத்தான் அவன் முதல் முதலில் ‘முதலாளி’ என்று விளித்தது. அப்போது இவர் ‘சின்னவர்’. ‘சின்னம்மா’ புதுப் பெண்ணாய்ப் புகுந்த போது இந்த ‘ஹில் டாப்’ பங்களா எப்படிக் கலகலத்து, ஜொலித்தது! 

கோடை விடுமுறையின் போது வீடு நிரம்பினாலும் ‘பிக்னிக்’ என்ற மந்திரச் சொல்லில் ஒரு மாற்றம் வரும் – அனைவரது கண், கால்களில் ஒரு துள்ளல் புகும். இலக்கேயில்லாமல் ஒருவரையொருவர் முட்டி மோதிக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி சளசளப்பார்கள். சின்னம்மாவோடு வந்தது தான் இந்த ‘பிக்னிக்’ வார்த்தை, அதற்கு முன் ‘கட்டுச் சோறு’ தான். 

வார்த்தை வேறாயிருந்தாலும் உற்சாகத்தில் மாற்றமில்லை. இவனுக்கும்தான். ஜமுக்காளம், பெரிய கேனில் குடிநீர், ஸ்டவ், பாத்திரங்கள் – ஆப்பிள் ஜூஸுக்கென்று கண்ணாடிக் குவளைகள் என்று பார்த்துப் பார்த்து எடுத்து வைப்பான். 

‘கண்ணாடி களாஸெல்லாம் வேணாம்டா. உடஞ்சிடும்’. அப்பா திட்ட, ஒவ்வொன்றிலும் நாப்கின் சுற்றி அடுக்கிக் கொள்வான். பந்து, சீட்டுக்கட்டு, மீன்வலை ஒன்று மறக்க மாட்டான். 

ஊரை விட்டுப் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் பைன் மரங்களின் நடுவே இடம் ஒழித்து அனைவரும் அமர்ந்தவுடன் ‘கோல்ட் காயின்’ ஜூஸை ஜில்லென்று கலந்து பரிமாறி விடுவான். 

‘கஜா சூட்டிகை’ என்று பாராட்டு வரும் குளிர்ச்சியாய். வெள்ளைக்காரர்கள் விருந்தாடி வந்தால் கூடுதல் பரபரப்பு. அவனது ஒவ்வொரு சேவைக்கும் நீல விழி சுருங்க அவர்கள் “தாங்க்ஸ்” “தாங்க் யூ கஜ்ஜா” என்று புன்னகைப்பதில் மகுடங்கள். தலையில் ஏறும். 

கஜேந்திரன் என்ற பெயர் கூடச் சின்னவரின் பாட்டி வைத்தது தான். இவர்கள் வழியில் இவ்வகைப் பெயருக்கெல்லாம் வழியில்லை. 

கொடைக்கானலில் பெரியவர் இந்த பங்களாவை விலை பேசிய கையோடு இவர்களின் குடும்பம் ‘கேர் டேக்கர்’ பதவியில் அமர்த்தப்பட்டது. இவன் பிள்ளைகள் இதில் மூன்றாம் தலைமுறை. 

இவர்கள் மனத்தில் நன்றி விசுவாசமென்றால், ஆண்டான் பக்கத்தில் அன்பு, தாராளம் என்று குறையேயில்லாத நல்லுறவு. மலை ஊர்களில் மாதம் இரண்டாயிரம் வந்தாலும் பற்றாது. வசதியாக இரண்டு அறை, விளக்கு, தண்ணீர் என்று ‘அவுட் இ ஹவுஸ்’ தந்திருப்பதாலும் பின்புறம் முள்ளங்கி, கோஸ், கிழங்கு என்று பயிராக்கிப் பயன்படுத்திக் கொள்வதாலும் சுலபமான வாழ்க்கை, மாதச் சம்பளம் போக, சீசன்தோறும் இவன் குடும்பம் மொத்தத்திற்கும் புது உடைகள் வரும். 

“என்ன கஜா, உன் வீட்டில வருஷத்துக்கு ஒரு உருப்படி கூடியிருது?” சிரித்தபடி நீட்டுவார் சின்னம்மா. இனி அம்மா என்று கூப்பிட வேண்டியது தான். தலையில் இழை இழையாய் நரை ஓடவில்லை? 

“ஏம்மா காசைக் கொட்டிப் புது புதுசா? உங்க பழச ரெண்ட இவளுக்குக் கொடுங்க போதும்.” 

“அட, நா இங்கே பட்டு பட்டாக் கட்டறதப் பார்த்துட்டுக் கேட்கிறியா கஜா? இந்த ஊருக்குத்தான் இப்படி ‘ஜில்’லுன்று கட்டிக்க முடியுது! ஊரிலே பருத்திச் சேலை தான்” என்றபடி மங்காத பட்டை எடுத்து அவன் மனைவிக்குத் தரும் புண்ணியவதி! 

இப்போது பெரியம்மா இல்லை. ஆனாலும் பேரப்பிள்ளைகள், உறவு, சிநேகிதமார் என்று செவில் வீடு ரொம்பி விடுகிறது. பிக்னிக் சமயங்களில் ‘வேன்’ அமர்த்த நேருகின்றது. முன்பு போலவே பார்த்து, கவனமாய் அடுக்கித் தரும் இவன், கூடத் தொற்றிக் கொள்வதில்லை. 

“வரலியா கஜா” 

“இல்லீங்கய்யா – இங்க வேல கிடக்குது…” பதவிசாய் மறுத்து விடுவான். 

மனைவி வந்த பிறகுதான் தனியாகப் போவது ஏதோ கீறலாய் – விசுவாசக் குறைச்சலாய்ப் பட்டது. அவளும் அம்மாளுடன் நின்று புளியஞ்சாதம், வறுவல், சாண்ட்விச் என்று தயாரித்தாலும் யாரும் அவளை அழைப்பதில்லை – இவரும் போவதில்லை. 

மாலையானதும் வெறிச்சிடும் முற்றத்தில் விளையாடும் முத்தவன் ராஜு தொணதொணப்பான். 

“ஏம்ப்பா, இன்னும் அவங்கெல்லாம் பிக்னிக்கு முடிஞ்சு வரலை” 

“மணி அஞ்சுதானல்ல ஆச்சு?” 

“அம்மாவுக்கு நாலு மணிக்கு டீ வேணுமே?” 

“ஸ்டவ் எடுத்துப் போயிருக்காங்கல்ல? அங்கியே போட்டுச் சாப்பிடுவாங்க.” 

“பாலு?” 

“டின்னு பாலுதான்” 

“அது டீக்குச் சரிப்படுமா என்ன?” மனைவி கேட்பாள்.

“பிக்னிக்குன்னு போயி புல்லத் தின்னாக்கூட ருசிதாம் போ. புலவச்சியாறுன்னு ஒரு இடத்துக்கு ஜீப்பில் போனோம் பாரு…” 

“எப்ப?” 

“அது இருக்கும்டா பதினஞ்சு வருசம். என்னா அழகுங்கறா அப்பத்தான் பனியில் செஞ்சு நிறுத்தின மாதிரி ஒரு இடம் வெள்ளிக் கம்பியாச் சாரல் தூலிட்டே இருக்கு. ஓடை நிறைய மீனு, வெள்ளைக்காரன் கொணாந்து வுட்ட ட்ரவுட்டு மீனு. ஸ்பெஷல் தூண்டில் போட்டுப் புடிச்சு அங்கிலே வறுத்துச் சாப்பிட்டோம் பாரு – நினைச்சாலும் நாக்கு எச்சியில் புரளுது, ஏழு மணிவாக்குல வீடு திரும்பறோம். நடுரோட்டுல ஜீப் லைட்டில் குட்டியானை சைஸ்… நின்னாம் பாரு ஒரு பைஸன்!” 

“காட்டெருமத்தானப்பா? நாமளும் ஒரு நா ஐயா கூட இப்படிப் போவலாம்ல?” 

“நாம மட்டுமாப் போனா ஒத்தாசை, ஐஞ்சு பேராப் போனா உபத்திரவம்லடா!” உதடு மறுத்தாலும் ஆசை ஊறியது. 

போன வருடம் ஒரு நேரம் முதலாளி கேட்கத்தான் செய்தார். “ஏங் சுஜா, உங் குடும்பத்தையும் கூட்டிட்டு வாயேன். மோயர் பாயிண்ட் வரைக்குந்தான் போறோம்.” 

வாயெல்லாம் பல்லான அவன் கூறும் முன் அம்மா புகுந்து, “யோசிச்சு தான் பேசுங்களேன். வேணிக்கு எட்டு மாசம். இப்படி ரோட்டிலே குலுங்கிக் குதிச்சுப் போனா பிள்ளையப் பெத்துத் தூக்கிட்டு வர வேண்டியது தான். வர்ர வருஷம் போவோம்” என்றாள். 

முதலாளி சிரித்தபடி, – ‘அது சரி’ என்று விட்டு விட்டார். ஏமாற்றமாயிருந்தாலும் அம்மா சொன்னது உண்மை. அந்தப் பக்கச் சாலைகளை டவுன்ஷிப் கண்டு கொள்ளுவதேயில்லை. 

இந்த வருடம் எஜமானின் மூத்த பெண் கவிதாம்மாவிற்குக் கலியாணம் பேசியிருந்ததில், சம்பந்தி வீட்டார் வரப்போக எனத் திருவிழாக் கூட்டம். அதில் கூட்ட, சமைக்க, கடைக்கு ஓட, கழுவிக் கவிழ்க்க என்று அவளுக்கும் அவனுக்குமாய்க் கிடந்த வேலைகளில் அவர்களைப் ‘பிக்னிக் போலாம் வா’ என்று அழைப்பார் உண்டா என்ன? 

ஆனாலும் மனவிளிம்பில் ஆசை கெட்டித்து ஏக்கமாய் உறைந்து கொண்டது. அடிக்கடி ‘விண்’ணென்று தெறித்துத் தன்னைக் காட்டிக் கொண்டே கிடந்தது. 

ஜூன் முதல் தேதியிலேயே நெடிய பைன், யூகலிப்டஸ் அனைத்தும் காற்றுக்குக்குனிந்து, சுழன்று ஆட ஆரம்பித்து விடும். “பாத்தியா. எங்களை ஊரை நோக்கிப் போ, போன்னு இதுங்க கையாட்டறத?” 

பேசியபடி பெட்டிகளை அடுக்கிக் கொண்டாள் அம்மா. 

இப்போது கிளம்பியாயிற்று, கார் வளைவில் மறைந்தபின் கேட் கதவுகளை இழுத்து மூடியவன், அப்படியே ப்ளம் மரத்தடியில் சாய்ந்து கொண்டான். 

அதோ இதோவென்று அவனுக்கும் முப்பத்தைந்து வயது போயே விட்டது. நாலு குழந்தைகளின் அப்பன். பிறர் கை மிட்டாயைப் பார்த்து ஏங்குவதை விட்டு, ஒன்று வாங்கி வாயிலிட்டால் என்ன? சரி தான். இவனும் குடும்பமாகப் பிக்னிக் போக வேண்டியது நினைப்பிலேயே சிலிர்த்தது. 

வெள்ளி அரைஞாண் போக, அம்மா இந்த நாலாவது குழந்தை விரல்களில் நூறு ரூபாயைச் செருகியிருந்தார்கள். வறுத்த முந்திரியுடன், ஸ்காட்சைப் பதமாகக் கலந்து தந்ததற்காக ஐயா தந்த பத்து, இருபது, சம்பந்தி அம்மா கட்டு வெற்றிலையோடு நீட்டிய ஐம்பது. இப்படி இருநூறுக்கு மேலேயே கையில் துண்டாக நிற்கிறது. 

‘பிக்னிக்’ போய்வர இது போதாது?’ எங்கே? ஒவ்வொரு இடத்தையும் படமாய் நெஞ்சில் நிறுத்தி வைத்துப் பார்த்தான்.

நெப்ட்யூன்ஸ் பூல் (Neptune’s Pool). அந்த இடம் தனி அழகு.

தட்டைப் பாறைகளின் மீது யாரோ வட்டம் வரைந்து வெட்டி எடுத்தாற் போன்ற சிறு வட்டக் குளங்கள் உள்ளேயடங்கிச் சாரலைமட்டும் காட்டும் சிற்றருவி – அதன்சிரிப்பாணி. மறுபக்கச் சரிவு முழுக்க பைன் மரங்கள் தான். காலுக்கடியில் ஓரடிக்குச் கம்பளமாய் ஊசியிலைச் சருகுகள். ஏதேதோ பறவைகளின் கூச்சலும் காற்றின் ஊதலும் தவிர, யாருமற்ற தனிமை சாதம். சாதம், வறுவல் என்று கட்டி எடுத்துக் கொண்டால் போய் வரும் செலவு மட்டுந்தான். ஜூஸ், டீ எல்லாம் தேவைப்படாது. ஊற்றுத் தண்ணீர் அத்தனைக்குத் தித்திப்பு. 

கவுங்சி போகும் ராணிமங்கம்மாளில் ஏறினாலும் அந்த ஒற்றையடிப் பாதை பிரியும் இடத்தில் டிரைவர் நிறுத்துவது சந்தேகம். அந்தப் பக்கம் போகும் வேன் ஒன்றில் தொத்திக் கொண்டால் தொந்தரவில்லை.

ஆனால், திரும்பும் போது…? 

டவுனிலிருந்து பத்து மைல் என்பது பிள்னை குட்டிகளுடன் நடக்கக் கூடிய தொலைவு இல்லை. 

சாயங்காலம் திரும்பரச்ச ‘எங்களையும் அள்ளிப்போட்டுக்கங்க அண்ணாச்சி!’ என்று கெஞ்சினால், வேன் டிரைவர் மாட்டேன் என்றா குலுக்கிக் கொள்வார்? வரும் காசில் அவரும் வீட்டில் பிள்ளைகளுக்கு ரெண்டு கிலோ சீனி பேர் வாங்கிப் போகலாமில்லே? 

எழுந்து உதறி நடந்தவன் கால்களில் ஒரு துள்ளல், வீட்டினுள் குழம்பின் மணம். 

“எது புள்ள?” 

”அம்மா மீந்ததைத் தந்திட்டுப் போயிட்டாங்க தோசை மாவு கூட இருந்துச்சு. உனக்கு நாலு பார்த்து எடுத்து வச்சேன் உக்காரு.” 

வயிறு நிரம்பிப் படுத்த பின்னும் கூட உறக்கம் வரவில்னை. பக்கத்தில் வந்து படுத்தவளின் இடுப்பைத் தடவினான். கம்பளியை மேலேற்றிக் கொண்டவள், வாத்து விரட்டுவது போல நாக்கைச் சுழற்றிச் சொட்டானிட்டாள்.. 

இவனுக்கு. ‘அட சீ… அந்த விஷயமொண்ணுமில்லே’ என்று புரண்டு படுத்து அலட்சியம் காட்டத் தோன்றியது. ஆனால், இந்த விஷயத்துக்கும் வேணி ஒத்தாசை அவசியந்தானே! தவிர மசை குஷியில் உப்பிக் கிடந்தது. 

குரல் குழைய, ‘வேணி, நாமளும் பிக்னிக் போறோம்’ என்றான். 

“பொட்டியிலே அம்மா தந்துட்டுப் போன கோடித் துணி இனாங் காசு, தோசக்குழம்பு… இதான் நமக்குப் பிக்னிக்கு.” 

“ஜடம், மூடம்” என்றெல்லாம் அவளைக் கொஞ்சி இறுக்கியவன், மறுநாளே ஏற்பாடுகளில் இறங்கினான். 

நான்காம் நாள் – சாத முட்டை, கைக்குழந்தைக்குப் பால் பாட்டில், பிஸ்கட், முறுக்கு என்று வேனில் ஏறிக் கொண்ட போது வேணியின் முகம் கூட மலர்ந்து கிடந்தது. முந்தின மதியம் வெந்நீர் வைத்துத் தலைக்கு ஊற்றியிருந்தாள். அதில் தலை முடியெல்லாம் புசுபுசு என்று பம்மிக் காதுக்கருகில் சுருண்டு விழுந்தது. மூக்கின் ஏழுகல் அன்ன முக்குத்தியில் புது ஜொலிப்பு.

பிள்ளைகள் சளபுளவென்று பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

முன் இருக்கைகளில் முக்கிய அதாவது நூறுகளில் ரேட் பேசிய பார்ட்டி ஏறிக் கொள்ள, இவர்கள் கடைசி சீட்டில் ஒடுங்கினர். பல்லி போல ஜன்னலோரம் அப்பிய பிள்ளைகள் எக்கிக் கையாட்டியபடி வந்தனர். ஆனால் வேன் வேகமெடுத்து வளைந்து முன்னேற, வேணி கவிழ்ந்து கொண்டாள். 

“சீனி மிட்டாய் வாங்கினேன். வாயில அதக்கிக்கிறயா? குமட்டாது!” என்றவனிடம், 

“புள்ளையப் பிடிங்க” என்று திணித்தவள், ஜன்னல் வழியே தலை நீட்டி வாந்தி எடுத்தாள். வெளியே காற்று விசிறலில் முன்உச்சிமுடி பிடுங்கிக் கொண்டு பறந்தது. சோர்ந்து தெரித்தவளைத் தோளில் சாய்த்துக் கொண்டான். தலையை நீவினான். 

வனத்தின் ஏகாந்தத்தில் இவளைக் கட்டி நூறு முத்தமிட வேணும்… அடிவயிற்றில் வெப்பமேற அவளை இன்னும் நெருக்கி உட்கார்ந்தான். 

“மெதுவாப் போகச் சொல்லுங்களேன்…” 

“இந்த டூரிஸ்ட்க்ரூப்பு மன்னவனூர் ஆட்டுப்பண்ணைஎல்லாம் பாக்கப் போறவுங்க. பாவம்னு நம்மளையும் முப்பதே ரூவாய்க்கு அண்ணாச்சி ஏத்திக்கிட்டாரு. இதுல அப்படி இப்படிப் போங்குறது எப்படி?” அவன் முணகி முடிப்பதற்குள் மூத்தவனும் ஓங்காரமாய்க் கக்கி விட்டான். குழந்தை, கால்களை உதறிக் கொண்டு வீறிட்டது. முன்னிருந்தவர்களின் முகச் சுளிப்பை உணர முடிந்தது. 

அடுத்த ஐம்பதாவது நிமிடம் அலுங்கிக் கசங்கி இறங்கிய போது வேணி தடுமாறினாள்.

”சித்த உக்காந்து போவலாங்க. கண்ணை இருட்டிக்கிட்டு வருது… ” வானமுமே மங்கித்தான் தெரிந்தது. 

”சீக்கிரமாப் பார்த்தாதாம் புள்ள. மழை வராப்பல இருக்குது…” அவன் அச்சத்தைத் தைரியமாகச் சொல்லிவிட அவள் நிமிர்ந்து முறைத்தாள். நடக்க ஆரம்பித்தனர். பாதி தூரம் மூச்சிரைக்க ஏறியவள், சட்டென்று திரும்பி அங்கும் இங்குமாய்த் தேடிக் கூவினாள். 

“ஐயோ” 

“என்ன? என்னா இப்ப?” 

“சோத்து மூட்டை? யாரு கையிலயும் காணுமே? வேனோட போயிருச்சுப் போலயே?!” 

இப்போது பிள்ளைகளின் முகங்கள் மங்கின.

“மூத்தவன்கிட்ட பையிருக்கே?” 

“அது பாலு பாட்டிலும் பிஸ்கோட்டுந்தான்.” 

மௌனமாய் மேடேறினர். மூச்சிரைப்புச் சீற்றம் தொனிப்பாய்க் கேட்டது. உச்சிமேட்டின் ஓடையைக் கடக்கும் போது மூத்தவன் கால் கல்லின் வழுவழுப்பில் வழுக்கி விட – 

”ஐயோ…” 

“பாத்துடா.” 

“த பிள்ள – சும்மாக் கத்தாத. சும்மாவே பக்ருன்னுதானிருக்கு,”

“பாலு பாட்டிலும் போச்சு போல…” முறுக்கிக் கிடந்த ப்ளாஸ்டிக் பையைக் கவனமாய்ப் பிரித்துப் பார்க்க… உடைந்த சிதறல்களுடன் மின்னிய பாலில் ரப்பர் நிப்பிள் மிதந்தது? 

“பிஸ்கோட்டுமில்ல ஊறி… கண்ணாடி ஏறி நமுத்துருக்கும்.”

மௌனம் மேலும் இறுகியது. இவனுக்கே பசிப்பது போலத் தோன்ற அச்சமாய்க் குழந்தைகளை நோக்கினான். ஆள், கூடை ஏதுமில்லாத வனச்சூழல் அச்சுறுத்தியது. 

“திரும்பிருவோமா வேணி?” 

“எதையோ பார்க்கவுன்னு வந்தோமே. பாத்திட்டுத் திரும்புவோம்”. 

‘தங் தங்’ என்ற நடையில் தன் எரிச்சலைக் காட்டினாள். காலின் கீழே மெத்தையிட்டுத் தந்திருந்த பைன் இலைச் சருகுகளை அவள் உணர்ந்ததாகவே தெரியவில்லை. 

“தோ, இடது பக்கம் பாரு!” சிறுவட்ட வட்ட நீர் தேக்கங்களை அவர்கள் பார்த்து நின்ற போது, முதல் சொட்டு மழை தெரித்தது. 

“ஐயோ!” இம்முறை அலறியது கஜா. 

“கிளம்பு புள்ள, கைப்பிள்ளையும் அதுவுமா இங்க மாட்டிக்கிட்டா வம்பு. அண்ணாச்சி வேனு திரும்ப நாலு மணியாவுமே”. 

‘மறுபடி ‘தங்தங்’கென்று நடந்து, ஓடையைச் சறுக்கிக் கடந்து, மூச்சிரைக்க ஏறி இறங்கிச் சாலையைத் தொட்ட போது ஆறு பேருமே நனைந்து நடுங்கினர். 

காற்று சுழன்று சிரித்தது.

“பசிக்குதுப்பா.”

“குளுருதுப்பா.” 

குழந்தையுடன் பல்லையும் இறுக்கியபடி நின்றிருந்தாள் வேணி. தவிக்கும் குஞ்சு குளுவானைப் பார்த்து இரங்கிய கண்டெக்டர் விசிலூத, வந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டனர். பஸ் வளைவுகளில் சரிந்து விரைகையில் ஒங்களிப்புச் சத்தந்தானே தவிர வாந்தியில்லை! 

‘வயிறு காலியாக் கிடக்கதும் நல்லதுதான்’ எனத் தனக்குள் சமாதானம் பேசினான் கஜா. 

“அண்ணாச்சி…! எச்சேன்ஜீ பக்கம் ஒரு நிமிசம் நிப்பாட்டினீங்கன்னா இறங்கி ஓடிருதோம். பச்சக் குழந்தை இருக்கு. பஸ் ஸ்டாண்டுல வண்டி, ஆட்டோ ஏதுங்கிடையாதே நம்மூருல?” – இளைஞ்சினான். 

தடுமாறி இறங்கி, மழையில கைகோத்தபடி ஓடி, வீடு திறந்து, துவட்டி, மாற்றுடுத்தி, கேப்பையைக் கஞ்சி வைத்து வெல்லங்கூட்டிக் குடித்துப் படுக்கும் போது ‘அப்பாடா’ என்றிருந்தது. 

“நமக்குத் தக்கனதா யோசிக்கணும் – பிக்கு… நிக்கு…” முதுகு காட்டிப் படுத்திருந்தவள் முணங்கினாள் 

உண்மைதான் என்று பட்டாலும் கட்டி இறுகியிருந்த ஏக்கம் கரைந்து போனதில் உள்ளே ஒரு சிறகு சுகம், சுகமாய்க் கண்ணைக் கிறக்கியது. தளர்ந்த உதடுகள் தூக்கத்தில் விரிந்தன. 

‘பிக்கு..நிக்கு’ குழறினாள் சிரிப்புனூடே.

– கலைமகள், தீபாவளி மலர்.

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *