சின்னு என்கிற சின்னசாமியும் அக்கீ என்கிற அக்கீசியாவும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 10, 2025
பார்வையிட்டோர்: 3,368 
 
 

அத்தியாயம 9-10 | அத்தியாயம் 11-12

அத்தியாயம் – 11

சின்னு எப்படியும் வருவான்! அக்கீசியாவின் மனம் ஏங்கியது.

அவள் நினைத்தமாதிரியே சிறிது நேரத்தில் அவன் பார்க்கிங் ஏரியாவிலிருந்து தலையைக் குனிந்தவாறே வந்து—

கொண்டிருந்தான்!

அவனைத் தொலைவில் பார்க்கும்போதே அக்கீசியா அதிர்ந்து போனாள்.

பழைய சின்னு தொலைந்து போயிருந்தான்.

இந்த அழகனுக்கு என்ன வந்தது? அதற்குள் இப்படி உருமாறிவிட்டான்!

வேண்டுமென்றே அவள் முன்பு போய் எதிர்முட்டு முட்டினாள்.

முகத்தை மேலே உயர்த்திப் பார்த்ததும்… ஒரு நிமிடம் ஆடிப்போனான்.

அவனைப் பார்த்ததும், அவளுக்குள் ஒரு கழிவிரக்கம்.

உடனே, அவள் கரத்தைப் பிடித்து ‘தர தர’ வென்று அப்பாலே இழுத்துக்கொண்டு போனான்.

“சின்னு! என்ன பண்றே? என்னாச்சு உனக்கு…”

சற்று ஒதுக்குப்புறமாகச் சென்றதும், அவள் கரத்தையள்ளி முகத்தில்

அடித்துக்கொண்டு கேவிக் கேவி அழுதான்.

அக்கீசியாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இருந்தாலும் அவன் செய்கை,

அவளுக்குத் துயரத்தை வரவழைத்தது.

“ரூபிணியப் பார்த்தியா?” – அவன் கேவலுடன் கேட்டான்.

“பார்க்கலாம்னுதான் போனேன்.. ஆனா”

“பார்க்கற நெலமையிலே அவ இல்லே!”

அவள், கவலை படிந்த அந்த முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

“இந்த நெலமைக்குக் காரணமே நான்தான், அக்கீசியா!”

அவள் புருவம் சுருங்கிற்று. கண்கள் வியந்தன. ‘இவன் என்ன சொல்றான்…’

“உனக்கு விஷயம் தெரியாது… இப்படி, வா உட்காரு… சொல்றேன்”

இருவரும் ஒரு திட்டின்மீது அமர்ந்தார்கள்.

“ஆக்சிடென்ட் எப்படி நடந்துச்சுன்னு தெரியுமா… பிக் மால்லேருந்து வர்றப்போ மழை கொட்டிட்டிருக்கு….ஆட்டோ ரேமண்ட் துணிக் கடைத் திருப்பத்திலே வர்றப்போ…. சட்டென்று அசப்பில் ரூபிணி மாதிரியே… அவளேதான்! நான் அவளைப்பார்த்துட்டேன்… நான் ஓரமா மழைலே நிக்கறதை அவளும் பார்த்துட்டா… ‘சின்னு… சின்னு’ ன்னு தலையை வெளியே நீட்டவும்,, சைட்லே நின்னுட்டிருந்த டவுன் பஸ் மேலே

எதிர்பாராதவிதமா ஆட்டோ உரசி… நிலை தடுமாறி கவிழ்ந்திருச்சு… உடனே அவ தலை குப்புறக் கீழே விழுந்து மயக்கமாய்ட்டா எனக்கு என்ன பண்றதுன்னே தெரிலே… மயங்கிக்கிடக்கிற அவளைத் தூக்கி மடிலே போட்டுட்டு, கொட்டற மழைலே… ஒரு டாக்சி வந்துச்சு… அவளைத் தூக்கிப் போட்டுட்டு…. நேரா ஹாஸ்பிடலுக்கு வந்து காஸுவால்டிலே அட்மிஷன் போட்டு….”

அவனால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

காண்டீனை விட்டு சினத்துடன் ரூபிணி வெளியேறியதை இந்த சூழ்நிலையில் அக்கீசியா வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை. ‘இந்த சின்னசாமி என்ன இப்படி ஏடாகூடமா பேசறான்… ஆக்ஸிடெண்ட்லே சிக்குனவளை இவனல்லவா காப்பாற்றியிருக்கிறான். உண்மையை சொல்லப்போனால், இந்த நெலைமைக்கு நான்தானே காரணமாக இருக்கமுடியும்?’

சிந்தனை வயப்பட்டிருந்த அக்கீசியாவை சின்னசாமி தட்டியெழுப்பினான்.

“அவ இப்ப எப்படி இருக்கா… விசாரிச்சியா?”

“விசாரிச்சேன்… இப்ப எதுவும் சொல்ல முடியாதாம்”

“எனக்கும் அந்த ரூம்லே இருக்கப்பிடிக்கலே… அந்த அம்மாவோட முகத்தைப் பார்க்கவே சங்கடமா இருக்கு, அக்கீசியா”

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது–

மாலினி–ரூபிணியின் சிஸ்டர் கீழே வந்தாள்.

இவனைப் பார்த்ததும் “அண்ணா! மேலே போங்க… அம்மா தனியா இருக்காங்க” என்றவாறு, அக்கீசியாவைப் பார்த்து வறட்சியாய்ச் சிரித்தாள்.

“நான் வீட்டு வரைக்கும் போயிட்டு கொஞ்ச நேரத்தில் வந்துருவேன்” என்றவள் அவன் பதிலுக்குக் காத்திராமல் டூவீலரை எடுக்கப் போனாள்.

“பாவம் சின்னு…. ஆம்பளையில்லாத நேரத்திலே ரொம்பக் கஷ்டப்படறாங்க.. அவளோட அப்பா ட்ரெய்னிங் முடிஞ்சு வர்றதுக்கு நாளாகுமாமே..” என்றாள் அக்கீசியா.

“யாரோட அப்பா?

“ரூபிணியோட அப்பாதான்”

“உனக்கு எதுவுமே தெரியாதா.. அந்த அம்மா சொல்லலையா?”

அவள் கழுத்தை அப்படியும் இப்படியும் ஆட்டினாள்.

“அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர்… வேறொருத்தியோட ஹைதராபாத்திலே

இருக்காரு… திரும்பி வரமாட்டாரு.. சகாதேவன்னு பேரு!”

அவளால், இதனை ஜீரணிக்க முடியவில்லை.

“ரூபிணி காலேஜ் படிப்பை முடிக்கிறாளோ இல்லையோ, வீட்டோட மாப்பிளையாப் பார்க்கணும்னு அந்த அம்மா விரும்பறாங்க… அதுக்குள்ளே இப்படி ஆயிருச்சு”.

அவள் குலுங்கினாள். ‘ஒருவேளை… சின்னச்சாமியைப் பற்றி, ரூபிணி தன் அம்மாவிடம் மனம்திறந்து பேசியிருப்பாளோ… ஆனால், அவன் விரும்பவேண்டுமே… அதற்காகத்தான் என்னை நாடியிருக்கவேண்டும்…. எது எப்படியோ சின்னச்சாமிக்கு அந்தக் குடும்பத்தின் பேரில் இவ்வளவு அக்கறை எப்படி வந்தது? அதுவும், இந்த ஆக்சிடெண்ட்தான் காரணமாக இருக்கவேண்டும்… அதற்குத் தன்னையே பலிகடாவாக்கிக்கொண்டு, உள்ளூரக் காயப்பட்டுக் கிடக்கிற இவனை எப்படி மீட்டெடுப்பது?’

“நீ என்ன யோசனை பண்ணிட்டிருக்கே…?”

அவள் சிந்தனை கலைந்தது.

“இனி எல்லாமே அவ சுகமாயிட்டு வந்த பிறகுதானே..”

அவன் நீண்ட பெருமூச்சை உதிர்த்தான்.

“சரி… நான் மேலே வார்டுக்குப் போறேன்… நீ?” என்றான் சின்னசாமி.

“நான் காலேஜுக்குப் போறேன்… நீ வரலியா?” அக்கீசியா கேட்டாள்.

“இன்னும் பத்து நாளைக்கு அந்தப் பக்கம் வரமாட்டேன்… பிரின்சிபால் கிட்டச் சொல்லிட்டேன்”

“அப்ப…. ஹாஸ்ப்பிடலே கதின்னு கெடக்கப் போறியா?” அவள் ‘வெடுக்’கென்று நாக்கைக் கடித்துக் கொண்டாள். ‘இப்படிச் சொல்லியிருக்கக் கூடாதோ?’

அவன் தடாலடியாய் அவளைப் பார்த்தான். அவன் முகபாவம் மாறி விட்டது. எதுவும் பேசாமல் லிஃப்ட் இருக்கும் பகுதிக்குப் போனான்.

அவளுக்கு முள் குத்தியது போன்ற உணர்வு.

‘சின்னு ரொம்பவும் ‘ஹர்ட்’ ஆகிவிட்டான் போலும். எது எப்படியோ இவள் கனவுக்கு ‘ஆபத்’தாக வந்து முடிந்து விடுமோ என்று கலங்கவே செய்தாள்.

இதற்கிடையில் —

ஒருசிலர் இரண்டாவது தளத்துக்கு அரக்க பரக்க ஓடினார்கள்.

ஏன்…. என்னாச்சு? ஏடாகூடமாய் ஏதாவது நடந்திருக்க வேண்டும்…

அவனுக்குள் மெல்லப் பரவும் ஓர் அனாமதேய வலி.

ஐசியூ விலிருந்த ரூபிணியை ஒரு வெள்ளைத்துணியால் போர்த்தியவாறு

ஸ்ட்ரெச்சரில் வைத்து… அறையில் அவள் அம்மா கல்பனா மயங்கிய நிலையில் வெட்டுண்ட மரம்போல் சரிந்த நிலையில் கிடந்தாள். ஃபிரேம் செய்யப்பட்ட இந்த அசாதாரணமான காட்சிக்குள் சின்னு இடிந்துபோய்க் கிடந்தான்.

ரூபிணியின் இறப்புச் செய்தி காட்டுத்தீபோல் பரவிற்று.

கல்லூரியே அல்லோலகல்லோலமாய் மாறிப்போனது…

ரூபிணியின் வீட்டில் துக்கம் விசாரிக்கவந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனாலும், அக்கம்பக்கம் இருந்தவர்களெல்லாம் திரண்டிருந்தார்கள்.

மற்றபடி, கிட்டத்தட்ட கல்லூரியே குழுமியிருந்தது.

ஒருபக்கம், சின்னு சவம்போல் அசைவற்று நின்றிருந்தான். மறுபக்கம் அக்கீசியா வரப் போக இருப்பவர்களுக்கு, காஃபி, பிஸ்கட் பரிமாறுவது போன்ற சின்னச் சின்ன அலுவல்களை உறவினர்களோடு இணைந்து செய்து கொண்டிருந்தாள்.

இன்னும் சில மணிநேரங்களில் காட்சி மாறிவிடும்.

ஆனால் மனத்தில் கோலம்போட்ட அழியாத சோகம் மாறிவிடுமா, என்ன..

அவ்வப்போது அக்கீசியா, சின்னு அருகே ஒட்டியவாறே அவனை

ஆற்றுப்படுத்திக்கொண்டிருந்தாள். நேரம் கடந்தது. சடங்கு, சம்பிரதாயமெல்லாம் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது.

இரவு மெல்லத் தன் போர்வையை விரித்தது.

சின்னு சொன்னான் :

“அக்கீ… நீ வீட்டுக்குப் போ… போனவளை இன்னும் காணோமேன்னு அவங்க பதட்டப்படுவாங்க… நான் இருக்கறதால கவலைப்படமாட்டாங்க.. இருந்தாலும் ரொம்ப நேரமாயிருச்சு… என்னைப்பத்தியென்ன.. பேச்சலர் ரூம்லே இருக்கறவன்தானே….!”

அவள் எதுவும் பேசவில்லை.

“என்னைக் கொஞ்சம் தனியா இருக்க விடு, அக்கீ…. ப்ளீஸ்”


சின்னசாமி இன்னும் ஆறாத்துயரத்திலிருந்து விடுபடவில்லை .

கிட்டத்தட்ட கல்லூரியிலிருந்து வந்த சகாக்கள் எல்லோரும் கலைந்து போய்விட்டார்கள்.

”என்னைக் கொஞ்சம் தனியா இருக்கவிடு!”

அவன் இப்படிச் சொல்வானென்று அக்கீசியா எதிர்பார்க்கவில்லை.

‘அவனை எப்படித் தேற்றுவது… இன்னும் ரூபிணி நினைவாகவே இருக்கிறானே’

‘கூடப் பிறந்த அண்ணன் கூட இப்படியிருக்கமாட்டானே .. இந்தத் தம்பி யாரு. இப்படி விசனப்படுதே’

ஒரு சிலர் அக்கீசியா காது படவே பேசிவிட்டுப் போனார்கள்.

அவளுக்கே ஆச்சரியம். ரூபிணி கூட அவ்வளவு நெருக்கமா.. அப்புறம் எப்படி அவனால் என்னையும் நேசிக்க முடிகிறது.. அதெல்லாம் கண்டிப்பாக இருக்காது.. அவளுக்கு ஏற்பட்ட ஆக்சிடெண்ட்தான் அவனை இப்படி நிலைகுலையச்செய்திருக்கும்.

“சின்னு! நீ தப்பா நெனைக்கலின்னா ஒண்ணு கேட்கறேன் … நானும் இங்கயே இருந்திக்கறேன்”

அவன் உடனே சிலிர்த்துப்போய் ,”என்ன அக்கீ! புரியாம பேசுற.. நான் தனியா ஒரு ரூம்லே இருக்கேன்.. நான் இங்கே இருந்தாலாவது அவங்களுக்குப் பிரயோஜனமா இருக்கும்… நீ பொண்ணா இருந்துட்டு வர்ற போற பக்கமெல்லாம் தங்கிட்டா வீட்லே தேட மாட்டாங்களா.. அப்போ ஒருநாள் நடுராத்திரிலே வந்தியே அது எவ்வளவு பெரிய தப்பு?” என்றான்.

“இல்லே.. இங்க மாலினி இருக்கா.. அவ சித்தி இருக்காங்க.. அவங்களோட நானும்..?”

“அக்கீ! நீ பேசறது சரியில்லே.. நம்ப காலேஜ்லேருந்து வந்தவங்க இப்ப யாராச்சும் இருக்காங்களா.. அவங்க உண்டு அவங்க வேலையுண்டுன்னு போய்ட்டாங்க இல்லியா” என்றான் சின்னசாமி.

“அதுமாதிரி நீங்களும் இருக்கவேண்டியதுதானே” என்ற அக்கீசியா, மீண்டும் நாக்கைக் கடித்துக் கொண்டாள். ‘இப்படிப் பேசியிருக்கக் கூடாதோ?’

அவன் முகம் வேறுபட்டது.

“முடியாது அக்கீ ..என்னாலே அப்படி இருக்கமுடியாது! இப்ப அவங்களுக்கு வேண்டியது ஒரு ஆம்பளை துணை… இந்த இக்கட்டான சூழ்நிலைலே அதை நான் ஏத்துக்கறதுதான் நல்லது”

“எனக்கும் ஒரு கடமையிருக்கு.. நானும் உங்களைத் தனியா விடமுடியாது!”

அவன் தலையில் அடித்துக்கொண்டான். ‘இவளை எப்படி வழிக்குக் கொண்டு வர்றது?’

அப்பொழுது —

மாலினி வெளியே வந்து “அண்ணா.. நீங்களும் அக்காவும் உள்ள வருவீங்கலாமா.. அம்மா கூப்பிடறாங்க”

இருவரும் உள்ளே போனார்கள்.

“தம்பி… இப்ப மணி என்ன தெரியுமா.. போம்மா.. ரெண்டு பேரும் போய் சாப்பிடுங்க”

“அம்மா.. எங்களுக்கு என்னம்மா.. வந்தவங்களே கவனிங்க.. நாங்க இப்பக் கெளம்பறோம்” என்றான் சின்னசாமி.

“நீங்க போங்க.. வேண்டாங்களே முதல்லே போய் சாப்பிடுங்க… மாலினி! இவங்களை உள்ளே கூட்டிட்டு போ” என்றாள் கல்பனா.

இருவரும் சாப்பிட்டுவிட்டு வெளியே வர —

கல்பனா சின்னச்சாமியை அழைத்தாள்.

“தம்பி.. ஒரு யோசனை… இந்தப் பொண்ணை அனுப்பிச்சிட்டு வா.. நீ இருந்துட்டு காலையிலே போலாமே”

உடனே சின்னசாமி “நானும் இவ கிட்ட அதைத்தான் சொல்றேன்.. கேட்க மாட்டேங்கறா.. இவளும் உங்களுக்குத் துணையா இருப்பாளாம்” என்றான்.

“வேண்டாம்மா… பேரெண்ட்ஸ் தேடுவாங்க.. நாளைக்கு காலேஜ் இருக்குல்லே .. தம்பி இருக்கட்டும் கொஞ்சம் உதவியா இருக்கும்” என்று அக்கீசியாவைப் பார்த்தாள் கல்பனா.

“அதுக்கில்லே.. நான் இங்கிருக்கறது பேரண்ட்ஸுக்குத் தெரியும்”

“வேண்டாமா.. இங்கே இப்ப என்ன.. துணை தேவையில்லே.. சிஸ்டர் இருக்காங்க.. பக்கத்து வீட்டுலே எல்லாம் நல்ல பழக்கம்.. ஒண்ணும் பிரச்சனையில்லே.. போயிட்டு வேணும்னா நாளைக்கு வாம்மா.. தம்பி கூட்டிட்டு போய் ஆட்டோவிலே வச்சிட்டு வா” என்றாள் கல்பனா.

சிறிது நேரத்தில் ஆட்டோ வந்தது.

“அக்கீ! திரும்பவும் சொல்றேன்.. கொஞ்ச நாளைக்கு என்னைத் தனியா இருக்க விடு, ப்ளீஸ்”

அவள் எதுவும் சொல்லாமல் ஆட்டோவில் ஏறினாள்.

அத்தியாயம் – 12

வைகறை நிர்மலமாக விகசித்தது. இரவு மழையில் உலகமே துப்புரவாகிவிட்ட உணர்வு. ஆனாலும் இரவு பூராத் தூக்கமில்லை .சின்னசாமி படுக்கையில் சோம்பல் முறித்தான். ரூபிணி வீட்டுக்கு எதிரேயிரக்கும் ஒரு வீட்டு மாடிதான் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தது.

அதில் குடியிருக்கும் வேலவன் சார், ரூபிணி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கம் நேற்று முழுவதும் அவரும் கூடவே இருந்ததால், சின்னசாமியின் ஈடுபாட்டை அவர் நன்கு கவனித்து, அவன்பேரில் ஓர் இனந்தெரியாத பரிவு அவருக்கு. வேலவன் சார்தான் எழுப்பிவிட்டார்.

“குட்மார்னிங் தம்பி!”

“குட் மார்னிங் சார்” என்றான் சின்னசாமி பதிலுக்கு.

காஃபி வந்தது. குளித்ததும் அயர்ச்சி ஓரளவுக்கு நீங்கிற்று.

டிஃபன் முடிந்ததும் “அங்கிள்! அங்கே போலாமா ? காலைலே சில காரியமெல்லாம் பேசணும்னு சொன்னாங்க” என்றான் சின்னசாமி.

“இருப்பா, மெதுவாப் போலாம்.. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. பாவம்.. ரூபிணியை எனக்குப் பிடிக்கும்.. அங்கிள்.. அங்கிள்ன்னு வாய் நெறையா கூப்பிட்டுட்டு… கண்ணுக்குள்ளயே நிக்குது”

துயரம் பொங்கும் அவரது கண்களை சின்னசாமி பார்த்து வியாகுலப்பட்டான்.

“இரு.. சாவகாசமாப் போலாம்.. அந்த மாலினி வந்து கூப்பிடட்டும்.. தம்பி! ஒரு விஷயம்.. கேக்கலாமா?”

“என்ன சார்.. சொல்லுங்க” “நேத்து பூரா உன்கூடவே இருந்துச்சே.. அந்தப் பொண்ணு யாரு? “ஓஒ… அவ பேரு அக்கீசியா… காலேஜ்மேட் தான்”

“உன்னையே விட்டு நகரவே மாட்டேங்குது!” என்றார் சிரித்தவாறு.

“ஆமா சார்.. நான், ரூபிணி, அவ மூணு பேருமே ஒண்ணாவே இருப்போம்” என்றான் சின்னசாமி, விகற்பமின்றி.

வேலவன் புரிந்துகொண்டார். மேற்கொண்டு விசாரிப்பதில் நியாமில்லையென்று வாளா விருந்துவிட்டார்.

இருவரும் ரூபிணி வீட்டுக்குப் போனார்கள்.

பந்தலின் ஓரத்தில் ஒதுங்கிக்கிடந்த நாற்காலியில் அமர்ந்திருக்க.. மாலினி தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள்.

பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது. அவர்களுக்கெதிரே கல்பனாவும், அவள் அக்கா தங்கமும் வந்தமர்ந்தார்கள்.

கல்பனா இருவரையும் கையெடுத்துக் கும்பிட்டாள்.

“நீங்க செய்த உதவியை…” விழிகள் பொழிந்தன.

“என்னம்மா நீங்க… இதெல்லாம் ஒரு மனிதாபிமானம்தான்.. ரூபிணி எம்பொண்ணு மாதிரி.

இனி என்னையே யாரும்மா ‘அங்கிள்… அங்கிள்’ன்னு கூப்பிடுவா.. அவ நம்மளையெல்லாம் விட்டுட்டுப் போனதை ஏத்துக்கவே முடிலே” –வேலவன் இலேசாய் செருமினார்.

“இந்தத் தம்பி யாருன்னே தெரியாது… இருந்தாலும்..” –கல்பனா கேவிக் கேவி அழுதாள்.

அவனும் குமைந்து போனான்.

“சார்.. நாங்க வீடு காலி பண்றோம்.. சிஸ்டரோட கரூர் போயிறலாம்னு முடிவு பண்ணிட்டோம்” என்றாள் கல்பனா பொருமலுடன்.

“ஆமாம்மா… அது நல்ல முடிவுதான்… இங்கே இருந்தாலும் துக்கம் தணியாது” என்றார் வேலவன், தலையைக் கவிழ்த்தவாறு.

“அம்மா! நாங்க நல்ல விதமா உங்களை அனுப்பி வைக்கிறோம்.. வீடு காலி பண்றது.. பேக்கிங் எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. எப்பப் போறீங்க?” என்றான் சின்னசாமி.

“அவுஸ் ஓனரைப் பார்த்து இந்த மாச வாடகை போக, அட்வான்ஸைத் திருப்பி வாங்கணும்.. மத்தபடி கமிட்மென்ட் வேற எதுவுமில்லே.. ” என்றாள் கல்பனா.

“அம்மா.. நீங்க எதுக்கும் அலைய வேண்டாம்.. அதை நான் பார்த்துக்கறேன்” என்றார் வேலவன்.

“உங்க ரெண்டு பேருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரில.. வெள்ளிக்கிழமை முடிஞ்சா காலி பண்ணிராம்லாம்ன்னு யோசிக்கறேன்”

“சரிங்கம்மா” இருவரும் இருக்கையை விட்டு எழுந்தார்கள்.


ஏறக்குறைய பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. தனிமை எவ்வளவு துயரமானது என்பதை மெல்ல உணரத்தொடங்கினான் சின்னசாமி. அதனால்தான் வலியின் ஈனக்குரலையும் கண்ணீர்ப் பெருக்கையும் இயற்கை அளித்துள்ளதோ?

அக்கீசியாவிடமிருந்து எந்தத் தொடர்புமில்லை.

‘அவளை ஏன் அப்படிக் கடிந்துகொண்டேன்?’

அவள்பேரில் ஒரு கரிசனை. ஆனாலும், ரூபிணியுடைய வடிவம் அவன் மனசில் அப்படியே அழியாத ஓவியம்போல் இருந்தது.

‘ம்ம் .. இனி அவள் திரும்பவா வரப் போகிறாள்… அவளை நினைத்து நினைத்துக் காயப்பட்டுக் கொள்வதில் என்ன பயன்?’

அவன் தன்னையே தேற்றிக்கொண்டான்.


ஒவ்வொரு நாளும் ஒரு பூமாதிரி மலருகிறது. அதில் பொதிந்துகிடக்கும் ஒவ்வொரு இதழும் ஏதேனும் ஒரு புதிய செய்தியைச் சொல்லிவிட்டுத்தான் உதிர்ந்து போகிறதோ?

அன்றைய தினமுகம் இப்படியாக உதித்தது. சுமார் எட்டு மணியளவில், சின்னசாமியைப் பார்க்க வேலவன் சார், அவருடன் யாரோ ஒரு புதியவர்.

“தம்பி… இவர்… உன்னைப் பார்க்கணும்னு வந்திருக்கார்” என்றார் வேலவன்.

“வாங்க சார்… உள்ளே வாங்க…”

உள்ளே வந்த பின்னரும், பொம்மை மாதிரி அவர் மௌனமாயிருந்தார். நடுத்தர வயது. முன் வழுக்கை. முகத்தில் இலேசாய் சுருக்கம்.

அதைக்காட்டிலும் இறுக்கம்.

“தம்பி… இவர்தான் ரூபிணியோட அப்பா!.. சகாதேவன் சார்..” வேலவன் அவரை அறிமுகம் செய்து வைக்க..

அவர் தலை நிமிரவேயில்லை. சின்னசாமி அதிர்ந்து போனான். சகாதேவன்?

அவன் வேண்டா வெறுப்புடன் அவரைப் பார்த்தான்.

“தம்பி… பேசி ஒரு நல்ல முடிவெடுங்க… நான் கிளம்பறேன்”

வேலவன் உடனே சென்று விட்டார்.

அவர் தோற்றம், அப்போதைக்கு அவன் மனசைக் கிளறியது. சகாதேவன் பேச ஆரம்பித்தார்.

“நான் யாரை நம்பிப் போனேனோ… அவ என்னை ஏமாத்திட்டா… அடியாள் வச்சு மிரட்டி இருக்கிற காசு பணத்தையெல்லாம் சுருட்டிட்டு விரட்டிட்டா.. என்னாலே ஒண்ணும் பண்ண முடிலே… எல்லாத்தையும் இழந்துட்டு நிர்க்கதியா… அந்த ஊருலே இருக்கறதுலே எந்தப் பிரயோஜனமும் இல்லேன்னு வந்துட்டேன்..

இங்கே வந்த பிறகுதான் எல்லா விஷயமும் கேள்விப்பட்டேன், தம்பி”

அவர் குலுங்கிக் குலுங்கி சிறுபிள்ளையப்போல் அழுதார்.

சின்னசாமி மோவாயைத் தடவியவாறு யோசித்தான்.

அவரே பேசட்டுமென்றிருந்தான்.

இது துயரத்தின் காலம்! ஒரு மனிதனுக்கு எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு தானே…

“கடைசியா ஒரு உதவி தம்பி.. என்னை கரூரிலே அவ கிட்டக் கொண்டுபோய் விட்டிருப்பா”

கண்களில் கெஞ்சலான பார்வை. குரலில் தொய்வு. வயதில் மூத்த ஒரு மனிதன் கூனிக்குறுகிப்போய் நிற்க…

“சார்… முதல்லே குளிச்சிட்டு ரெடியாகுங்க… டிபன் சாப்பிடுவோம்.. அப்புறமா யோசிப்போம்”.

ஏற்கனவே சின்னசாமி ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். சிறிதுநேரத்தில் வீட்டு ஓனர் வந்தார். காலி செய்துவிட்டு, அட்வான்ஸ் தொகையைத் திரும்பப் பெற்றுக் கொண்டான்.

“சார்… கரூர் போறோம்.. உங்களை அங்க விட்டுட்டு, நான் பூனே போறேன்!

செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்சிருச்சு… என்னோட பேரெண்ட்ஸ்

அங்கதான் இருக்காங்க… எனக்குன்னு இந்த ஊர்லே யாருமே இல்லே!”

அவன் விழிகளில் நீர் துளிர்த்தது.

“தம்பீ…. என்னாச்சு? என்னாலே உங்களுக்கு ஏதாவது” – – அவருக்கு வியப்பாக இருந்தது.

“நத்திங் சார்! கிளம்புங்க… ஆட்டோ வந்திருச்சு.. கரூருக்குப்போகணும்னா

பஸ் ஸ்டான்ட் முதல்லே போகணும்”

அவனாலேயே நம்ப முடியவில்லை. இந்த பெரும்புலர்காலை இவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவைத் தருமென்று.


கரூர் டெக்ஸ் சிட்டி. யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அதுபாட்டுக்கு இயங்கிக்கொண்டிருந்தது. எல்லா நகரமும் அப்படித்தானே இந்த உலகில் யாரும் யாருக்காகவும் கவலைப்படப் போவதில்லை…

“தம்பி.. ஒரு ஆட்டோவிலே போயிருவோம்… எனக்கு வீடு தெரியும்.. நேதாஜி ஸ்ட்ரீட்லே…. ஒரு பெரிய ஆலமரம் இருக்கும் அதுக்குப் பின்னாலே வீடு … போய் பல வருஷம் ஆயிருச்சு… பெரிய ஆலமரம்தான் லாண்ட்மார்க்… அதையே இப்ப விட்டு வச்சிருப்பாங்களான்னு, தெரில…” சகாதேவன் சொன்னார்.

சின்னசாமிக்கு வியப்பாக இருந்தது. காலம் எப்படியெல்லாம் அவரைத் துவட்டியெடுத்து, மீண்டும் இங்கே கொண்டுவந்து துப்பியிருக்கிறது!

ஆட்டோ டிரைவருக்கு ரூட் தெரிந்திருக்கிறது.

“சார்… நீங்க சொன்ன ஆலமரம் வந்திருச்சு… வீடு அதுதான்..

இறங்கிக்க” -என்றான் ஆட்டோ டிரைவர்.

“சார்… நீங்க ஆட்டோவிலேயிருங்க… போய் விசாரிச்சிட்டு வந்துர்றேன்” – என்றவாறே கீழே இறங்கினான், சின்னசாமி.

யாரோ ஒரு பெண் முற்றத்திலிருக்கிற பூஞ்செடிகளுக்கு நீர்

வார்த்துக்கொண்டிருந்தாள்.

அடுத்தநொடி சின்னசாமி வியந்துபோனான். அது… ரூபிணியின் அம்மா கல்பனா!

“அம்மா… சின்னு வந்திருக்கேன்!”

திரும்பிப்பார்த்தவளுக்கு ஒரே ஆச்சரியம். அவளால் நம்பமுடியவில்லை.

“என்னம்மா… நீங்க மட்டும்தான் இருக்கீங்களா?”

“இல்லேப்பா… அக்காவும் மாலினியும் கோயிலுக்குப் போயிருக்காங்க”

“நல்லா இருக்கியா, தம்பி! என்ன இவ்வளவு தூரம்?” என்றாள் கல்பனா.

“உங்களப் பாக்கறதுக்கு ஒருத்தர் வந்திருக்காரு”

“யாருப்பா அது? கூட்டிட்டு வா” ஆட்டோவிலிருந்து இறங்கினார் சகாதேவன்.

ரூபிணியின் அப்பா!

அவரைப் பார்த்த மாத்திரத்தில் முகம் சுளித்தவாறு… கரங்களை இறுக்கிக்கொண்டு… எதிர் திசையில் திரும்பி நின்றுகொண்டாள், கல்பனா.

அந்த மனிதன் ஓடிப்போய் அவள் கால்களில் விழாத குறையாய் விக்கி விக்கி அழுதார். அவள் முகத்திலும் ஆறாய் வடியும் துயரம். அடுத்த நொடி தன் கணவன் நெஞ்சில், உதிர்ந்த சருகுபோல் சரிந்தாள்.

அந்த அபூர்வக் காட்சியைக் கண்ட சின்னசாமி சொன்னான் :

“அம்மா… ரூபிணிக்காக என் வாழ்க்கையிலே எதையும் தர முடிலே.. எனக்காக இந்த வெகுமதியை நீங்க ஏத்துக்குங்க!… நான் புறப்படறேன்”

மெய் மறந்த கோலத்தில் நின்றிருந்த அவர்களுக்கு, அவன் சொன்னது

கேட்டிருக்குமாவென்று தெரியவில்லை.

எத்தனையோ இரவுகள்…. கனவுகள்… அலையலையாய்த் தோன்றினாலும், எல்லாமே ஒரு கட்டத்தில் நீர்க்குமிழிபோல் கரைந்து போய்விடுகின்றன.

…அக்கீசியா… ரூபிணி… ரோகிணி… சின்னசாமியின் மனமென்னும் கோட்டையில் எரிந்த குலவிளக்குகள்!

வெறும் பாத்திரம் போலாகிவிட்ட காலிமனதுடன், சின்னசாமி ஆட்டோவுக்காக, சாலையோரம் காத்திருந்தான்.

அப்பொழுது –

அவனருகே வந்து நின்ற ஆட்டோவிலிருந்து அக்கீசியா தோள்பையுடன் இறங்கினாள்!

சற்றும் எதிர்பாராத சின்னசாமி உணர்வற்ற சவம்போல் நின்று கொண்டிருக்க…

ஒரு பதுமைப் போல் அவனை நெருங்கிய அக்கீசியா, அவன் தோள்பற்றி இறுக அணைத்துக் கொண்டாள்.

(முற்றும்)

– 2023

சந்திரா மனோகரன் சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *