சாமி சொல்கிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 1, 2025
பார்வையிட்டோர்: 48 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆறு மிகப் பரவலானது. நீரோ சுருங்கிய அளவில் ஓடுகிறது. ஏனைய அடிப்பகுதி முழுதும் வெண் மணல். அதில் அடிவைத்தால் சுடுகிறது. ஆற்றின் இரு புறங்களிலும் கரை உயர்ந்து இருக்கிறது. அவற்றில் புதர்கள் மிகுதியாக வளர்ந்திருக்கின்றன. புதர்களின் இடையில் ஒற்றை அடிப்பாதை ஆங்காங்கு ஏற்பட்டிருக்கின்றது. அதன்வழியே கடுகி நடந்து நீர்ப்பகுதிக்கு ஓடுகிறார்கள். அந்நீரில் அடிவைத்தவுடனே கடவுளே என்ன பாக்கியம் தந்தாய் என்று வாழ்த்திவிட்டுச் சிறிது நேரம் நின்று இளைப்பாறு கிறார்கள். நீரை பையப் பையக் கடந்து எதிர்க்கரையை அடைந்து அதில் ஏறுகிறார்கள். எதிரில் தோன்றுவது பெரிய பனங்காடு. இடையிடையில் புளியமரமும் வேப்பமரமும் நிழலைக் கொடுக்கின்றன. அவற்றின் நிழலிலே நின்று ஒற்றை அடிப்பாதையில் ஒருவர்பின் ஒருவராக ஆயிரக்கணக்கான மக்கள் செல்லுகிறார்கள். சிறிது தொலைவிலே நெருங்கிய சனத்திரள் தெரிகிறது. அனேக பறைகள் அடிக்கும் ஒலி வருகிறது. ஆனால் அவ்வொலியோ கண்டபடி அடிக்கும் அரக்கர் ஒலி அல்ல. காதுக்கு இனிமைத் தரும்படியானதும், தாளத்திற்கு அமைந்ததாகவும் இருக்கும் ஒரு ஒலி. தூரத்திலிருந்து கேட்கிறபடியால் பறைகளின் கொடுமை குறைந்து போய் தாளத்தின் இனிமையே கேட்கிறது இவைகளையெல்லாம் கேட்டுக் கொண்டு பெருங்கூட்டம் செல்கிறது. அவர்களிலே சுப்பனும் குப்பனும் இரண்டு வாலிபர்கள் செல்லுகிறார்கள். 

“குப்பா, இது என்ன, சிரமமாய் இருக்கிறதா? அதோ தெரிகிறதே அந்தத் தோப்பில்தான் திருவிழா நடக்கிறது. இனி நிமிஷத்தில் சென்றுவிடுவோம்” என்றான் சுப்பன். 

“எனக் கென்னமோ அங்கே செல்வதற்கு மனம் வரவே இல்லை. உன்னுடைய நிர்ப்பந்தத்தின் பேரில்தான் வருகிறேன். நமது உபாத்தியாயர் .இப்படிப்பட்ட திருவிழாவில் பிசாசுகள் தான் நடனம் ஆடுகின்றன. தெய்வபக்தியுள்ளவர்கள் போகக்கூடாது. என்று நேற்று கூடச்சொல்ல வில்லையா? நாம் ஏன் அங்கு போய் பாவம் சம்பாதித்துக் கொள்ளவேண்டும்?’ 

“எதையும் ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? நமது முன்னோர்கள் எல்லாரும் அறிவீனர்களோ? அவர்கள் கொண்ட வழக்கங்களில் ஒன்றாவது சரியில்லையா? அவைகளை நேரில் பார்த்து உண்மை தெரிந்து கொள்ளலாம். கடவுள் நமக்குப் பகுத்தறிவு கொடுத்தருளியிருக்கிறார். அல்லவா? நமது உபாத்தியாயர் விவிலிய சமயத்தைச் சேர்ந்தவர் ஆனதனால் நம்மையும் அதில் இழுத்துக் கொள்ளுவதற்காக சமயம் கிடைத்தபோது எல்லாம் நமக்கு இவ்விதமாகவே போதிக்கிறார். 

“சரி, நாம் போய்ப் பார்க்கலாம்” என்று பேசிக்கொண்டே இருவரும் திருவிழா நடக்கும் தோப்பண்டை சென்றார்கள். 

தென்பாண்டி நாட்டிலே தண்பொருநை ஆற்றுக்குத் தெற்கே சிறிது தூரத்தில் உள்ள ஒரு தேரியின் அருகில் ஒரு சிறு ஊர் உண்டு. அத்தேரியின்மீது தானாகவே முளைத்துள்ள பனைத் தோப்புகளில் பலனை எடுத்து பிழைக்கும் குடிகள் அங்கே வாழ்வார்கள். அதற்கு அடுத்து ஒருசிறு சேரி உண்டு. அதிலே சுப்பனும் குப்பனும் இரண்டு அடுத்தடுத்த கூறை வீடுகளில் பிறந்த பிள்ளைகள். மற்ற சேரிப் பிள்ளைகளைக் காட்டிலும் சிறிது அறிவும் தெளிவும் படைத்தவர்கள். வாரம் தோறும் அந்தச் சேரிக்கு வரும் வழக்கத்தைக் கொண்ட மக உபதேசிகன் இப்பிள்ளைகளின் பரந்த நெற்றியைக் கண்டு அவர்களை அடுத்த ஊரில் இருந்தகிறிஸ்தவப்பள்ளியில் சேர்த்து விட்டான். படிப்பு இலவசம். ஆகையால் மிக்க ஏழைகளாக இருந்து அங்கே படித்து எளிதில் ஏழாவது வகுப்பில் தேறிவிட்டார்கள். 

உபாத்தியாயர் அடிக்கடி பிசாசுகளைத் தொழக்கூடாது, அவர்கள் கோயிலுக்குப் போகக்கூடாது, உண்மையான கடவுளையே தொழ வேண்டும் என்று வற்புறுத்தினார். நாளாவட்டத்தில் சில பிள்ளைகள் ஞானஸ்நாநம் பெறுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வேலையும் கிடைக்கும். சுகமாகவும் வாழ்வார்கள். இவ்விஷயம் எல்லாம் இவ்விரு பிள்ளைகள் அறிவார்கள். இருந்தாலும் உண்மையையே அறிய வேண்டும் என்பது இவர்களுடைய நோக்கம். இதனை நிறைவேற்றிக் கொள்ளவே இந்தநாள் திருவிழாவிற்கு ஏகுகிறார்கள். 

சிறிது நேரத்தில் இரண்டு நண்பர்களும் திருவிழாத் தோப்பை அடைந்தார்கள். ஒருபெரிய ஆலமரத்தின் கீழே ஒரு அகலமான மேடை இருந்தது. அதன் பேரிலே ஐந்து மாடங்கள்* கட்டப்பட்டிருந்தன. சதுரக் கோபுரங்கள் போல அவைகள் உருவம் இருக்கும். செங்கல்லில் நான்கு பட்டைக்கொண்ட மாடங்கள் அடியிலே 2 அடி சதுர மாகவும் உச்சியில் 1 அடி சதுரமாகவும், உயரம் 3 முதல் 5 அடி கொண்டதாகவும் உள்ளன. நடுவில் உள்ளது 5 அடியும் இருபுறங்களிலும் 4,3-ம் கொண்ட இவ்விரண்டு மாடங்கள் இருந்தன. இவைகளுக்கு வெள்ளை அடித்து குங்குமமும் மஞ்சளும் தீட்டியிருந்தார்கள் பின்னாலே பச்சைப்பனை ஓலைகளால் வளைவுகள் (பிரபைகள்) கட்டி அலங்காரம் செய்திருந்தார்கள். மேலே பச்சை இலைகளால் பந்தல்போட்டு முன்னாலே மண்டபம்போல சிங்காரித்திருந்தார்கள். அம்மண்டபத்தின் முன்னிலையில் மூன்று கவை கொண்ட கால் நிறுத்தி, அதன்பேரிலே எரிகிற சட்டி நிறுத்தியிருந்தார்கள். மாடங்களைப் பெரிய பூமாலைகளாலும் ஜிகினா மாலைகளாலும் சிங்காரித்தார்கள். சாமான்கள் வைக்கப்பட்டிருந்தன. முன்னாலே பூசை அவைகளிலிருந்து வெளிவரும் வாசனையிலிருந்து அது மதுபானம் என்று தெரிந்தது. இவைகளைக் கண்டு இரு வாலிபர்களுக்கும் அருவருப்பு ஏற்பட்டது. அடுத்திருந்த ஒரு பெரியவரை விசாரித்து இந்த ஐந்து உருவங்களும் ஐந்து தேவதைகளைக் குறிக்கிறது என்று அறிந்தார்கள். அவைகளுக்கு மாடன், சங்கிலிமாடன், சுடலைமாடன், இசக்கியர் இருவர் என்றும் பெயர்களாம். இவர்களுக்குப் பூஜை போட்டு அருள் பெறுவதே அந்த திருவிழாவின் நோக்கமாம். நாட்டில் பஞ்சம், தொத்துநோய் இவைகள் வராமலும் மழைபெய்து மக்கள் சுகமாக இருப்பதற்காகவும் இந்தத் திருவிழா நடக்கிறதென்று அறிந்தார்கள். 

“இந்த உருவங்களையும் இங்கு நடக்கிற பூஜையையும் பார்த்தால் உபாத்தியாயர் சொன்னது சரியென்று தோன்ற வில்லையா” என்றான் குப்பன். 

“அவசரப்படவேண்டாம், இன்னும் கவனிப்போம்.” 

”சரி என்ன பூஜை செய்தாலும் கள்ளை வைத்து ஏன் பூசிக்கிறார்கள்? கள்ளைக்குடிப்பது கெடுதல் என்று தெரிந்ததே?” 

”ஆமாம், இவர்கள் அறியாதவர்கள். நாளாவட்டத்தில் நாட்டில் வழங்கும் துர்ப்பழக்கங்களை சாமிகளுக்கும் ஏற்றி விட்டார்கள். அவர்களை நல்லவழிக்குக் கொண்டு வருவது நமது கடமை. அல்டர் 

”நாம் எல்லோரும் கிறிஸ்தவர்கள் ஆகிவிட்டால் இந்த அர்த்தமில்லாத பூஜையே நின்று போகும் அல்லவா?” 

“நின்று போகலாம். ஆனால் மற்றொன்று கவனிக்க வேண்டும். நாம் வாசித்த நூல்களிலே இந்தக் கள்ளுக்குடி தெய்வங்களைப் பற்றிக் கூறியிருக்கிறதா ? தமிழர் சமயம் இது ஆகுமா? நமது தெய்வப்புலவர் திருவள்ளுவனார் கள்குடிக்கப்படாது. கொலை செய்யக்கூடாது, என்று கூறியிருக்கிறார்கள் அல்லவா? இவர்கள் அதனை அறியாமல் செய்கின்றனர்.ஞாய 

“நீ சொல்வது சரிதான். நாம் தமிழர்களாகப் பிறந்தும் திருவள்ளுவர் பிறப்பில் பேதம் இல்லை என்று வற்புறுத்தியும் நம்மைத் தமிழர்கள் சேர்த்துக் கொள்ளுவதில்லையே? பழக்க வழக்கங்களை மீறி நாம் கட்குடி, ஊன் உண்ணல், முதலிய கெட்ட பழக்கங்களைக் கொண்டால் எவ்வாறு நம்மைச் சேர்த்துக் கொள்ளுவார்கள். 

“அதோ, தெரிகிறதே, உயர்ந்த மகத்தான கோபுரம் அது இந்துக்களு டைய கோயில். இரட்டைத் திருப்பதி என்று கூறுகிறார்கள். உள்ளே உ பர்ந்த வகுப்பார் மட்டும் சென்று வழிபடலாம். நாமும் இந்துக்கள் தானே. நம்மை ஏன் உள்ளே விடுவதில்லை? திருவள்ளுவரும் இதனை ஏற்றுக்கொள்வாரா? 

“நாமும் துர்ப்பழக்கங்களை விட்டு நற்பழக்கங்களைக் கைக் கொண்டால் நம்மையும் உள்ளே விடுவார்கள். அதற்கு நாமே காரணம்.” 

”குற்றம் ஒருபுறத்தில் இருக்க மற்றொருபுறத்தில் ஏற்றுவதா? கிறிஸ்தவர்கள் தங்கள் கோயிலுக்குள் நம்மை விடுவதில்லையா? 

”அவர்கள் நோக்கம் வேறு, சமயமாற்றம் ஒன்றே அன்றி வேறு எண்ணம் ஒன்றும் இல்லை. அதற்கு வழிகள்தான் ஏனைய சௌகரியங்கள். சில தடவைகளில் மாறின பிறகு யாதொரு சலுகையும் காட்டாமல் ஆலாப் பறக்க விடுவதைக் கண்டதில்லையா? 

“சரி, இன்னும் என்ன நடக்கிறது பார்ப்போம். இவ்வாறு பேசிக்கொண்டு மற்றொரு மரநிழலில் வில்லுப்பாட்டுப் பாடுவதைப் பார்த்து அங்கு சென்று அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். வில்லடிக்கு ஏற்ற தாளத்தில் “இராமப்பையன் அம்மானை” பாடிக்கொண்டு இருந்தார்கள். அந்தநாட்டுக்கதை பண்டைக்காலத்து ஆதிதிராவிட வீரனுடைய சரிதம். மிகுந்த உன்னதமான பண்புகள் நடுநடுவுள் வரும். மிகவும் சுவை பொருந்திய கருத்துக்கள், அழகான எளிய தமிழ்நடை, இனிய சந்தம். இக்கதையைக் கேட்ட இரண்டு நண்பர்களும் மிகுந்த மகிழ்சசியுடன் வெகுநேரம் அதிலேயே கேட்டுக் கொண்டிருந்ததினால் பொழுது போனதும் தெரியாமல் ஆழ்ந்திருந்தார்கள். 

மாலை ஆறுமணி சுமாருக்கு இரட்டை வெடி சப்தம் கேட்டது. கதையில் ஆழ்ந்திருந்த நண்பர்கள் திடுக்கிட்டு எழுந்தார்கள். எல்லாரும் திருவிழா மண்டபத்தை நோக்கினார்கள். நூறு பறைகள் ஒருங்கே அடித்தன. மக்கள் அதை நோக்கி சென்றார்கள். வில்லுக்கதை தானே நின்றது. நல்ல சுவை உள்ள இடத்தில் சபையைக் கலக்கி விட்டார்களே என்று இரு நண்பர்கள் மனம் நொந்து ஏனைய மக்களுடன் சென்றார்கள். அங்கே ஒரே கூட்டம். மெதுவாகத் தள்ளிக்கொண்டு ஒரு இடத்தில் நின்று கொண்டு பார்த்தார்கள். கனல் எரியும் சட்டியை பூச்சட்டி என்று சொல்லுவது வழக்கம். அதைச்சுற்றிப் பத்துப்பேர் பறைகளை அடித்துக்கொண்டு குரவைக்கூத்து ஆடினார்கள். அதற்குத் தகுந்தபடி, சிந்து பாடினார்கள். சிறிதுநேரம் ஆனவுடன் ஒரு சேவல், ஒரு ஆட்டுக்குட்டி, ஒரு பன்றி இவைகளைக் கொண்டு வந்தார்கள். மஞ்சள் நீர் தெளித்தார்கள். தம் கதி இன்னது என்று அறியாத ஒரு பாவமும் அறியாச் சீவன்கள் அத்தண்ணீரை நக்கத்தொடங்கின. குளிர்நீர் பட்டவுடனே தலை குலுக்கின. அருகில் இருந்த பூசாரி ஒருபெரிய வாளை எடுத்து ஒரே வெட்டாக வெட்டினான். பாவம் அவ்வுயிர்கள் துடிதுடித்து, இரத்தம் சிந்தி நிலத்தில் சாய்ந்தன. தலை அறுந்தும் உடல் குதித்ததைக் கண்டால் என்ன நரகவாதனை என்று எவர் மனதிலும் இது தோன்றவில்லையே. இது பொது மக்கள்பால் இட்ட காவு. பிறகு தனிமனிதர்கள் தங்கள் பிரார்த்தனைக்கு ஏற்றபடி பல உயிர்களைக் கொண்டுவந்து காவு இட்டார்கள். மண்டபம் முழுதும் இரத்தமயம் ஆகிவிட்டது. உயிர்களைப் பலி இடும்போது அவைகள் கதறின கதறல்களைக் கேட்ட இரண்டு நண்பர்கள்  “அடடா இரக்கமில்லாத இந்தப் பாவிகளை பூசாரிகள் என்று சொல்லுகிறார்களே? இவர்களுடைய பேச்சைக் கேட்டு இத்தனை குடிகளும் பாவத்திற்குள்ளாகினார்களே” என்று பரிதவித்தார்கள். ‘நம் தமிழர்களுடைய உண்மைமதம் திருவள்ளுவர் கூறுகிறபடி கொலை மறுத்தல் அல்லவா? சைவர்களும் வைணவர்களும் இதனையே வற்புறுத்துகிறார்கள்.’ சிவாலயங்களிலும் வைணவாலயங்களிலும் உயிர்ப்பலி இடுவதில்லை யல்லவா? உயிர்கள் எல்லாம் ஈசனுடைய மக்கள் அல்லவா? ஒருமகன் மற்றொரு மகனுடைய கழுத்தை வெட்டினால் தகப்பன் சும்மா பார்த்துக் கொண்டிருப்பானா? ஆகவே இவர்கள் தொழும் தேவதைகள் பிசாசுகளே. என்று இரு நண்பர்களும் எண்ணி வருந்தினார்கள். 

சிறிது நேரத்திற்குள் முதலில் இட்ட முப்பலிகளின் உடல்களையும் பொங்கல்வைத்துச் சமைத்து மாடன்களின் முன் படைத்தார்கள். பிறகு மதுபான வகைகளையும் அருகில் வைத்தார்கள். பூசை நடந்தது. பூசைப்பாடல்களும் பாடப்பட்டன. சிலர் ஆடலும் ஆடினார்கள். ஒருத்திக்கு மருள்வந்து கண்டதைப் பிதற்றினாள். பூசை முடிவதற்குப் பத்துமணி ஆயிருக்கும். பிறகு பிரசாதம் வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. முக்கியமான நாட்டாண்மை களுக்கு முதலிலும் பிறகு மற்றவர்களுக்கும் பிரசாதம்  கொடுக்கப்பட்டது. எல்லாரும் வெகு திருப்தியோடு உண்டுவிட்டு ஆற்றில் கைகழுவிக் கொண்டார்கள். சுப்பனும் குப்பனும் இந்தப் பிரசாதத்தைச் சாப்பிடத் துணியவில்லை. தாங்கள் கொண்டுவந்திருந்த சிறிது உணவை அருந்தி விட்டு அங்கே வீற்றிருந்தார்கள். பூசாரி முதலிய சிலர் மதுபானம் செய்தார்கள். பலபேர் அக்கம் பக்கத்தில் உறங்கினார்கள். பூசாரி முதலியவர்கள் உறங்கவே இல்லை. பிரார்த்தனைக்காரர்களிடம் வசூல் செய்யும் தொழிலிலே இருந்தார்கள். நமது நண்பர்கள் மிகுந்த களைப்பினால் அடுத்திருந்த மணல் மேட்டில் படுத்து உறங்கினார்கள். 

நடுஜாமம் ஆயிற்று. திடீரென்று பத்து வெடிகள் கிளம்பின. எல்லாரும் திடுக்கிட்டு எழுந்தார்கள். சுப்பனும் குப்பனும் எழுந்தார்கள். ஆற்றுக்குப்போய் முகம் கழுவிக்கொண்டுவந்தார்கள். பெரிய கூத்துத் தொடங்கிற்று. முன் மண்டபத்திலே மாடன்களுக்கு முன்னிலையைச் சுத்தப்படுத்தி இருந்தார்கள். இரத்தமயம் எங்கு போயிற்றோ தெரியவில்லை. வெண்மணல் பரப்பப்பட்டிருந்தது. 

அதிலே பூசாரியும் மற்ற சிலரும் கையில் பிரம்பு பிடித்துக்கொண்டு ஆடினதே சாமி சொல்லத் ஆடினார்கள். சிறிது நேரம் தொடங்கினார்கள். வந்த சனங்களிலே பலபேர் அது கேட்க ஆவலுடன் இருந்தார்கள். காணிக்கைக்குத் தகுந்தபடி சாமி சொல்லுமோ என்று நமது நண்பர்கள் நினைத்தார்கள். பலிகொடுத்த பல பேருக்கும் ஆரூடம் சொல்லப்பட்டது. சில பேர் மகிழ்ந்தார்கள். சில பேர் துயரப்பட்டார்கள். இவ்விதம் வெகுநேரம் ஆயிற்று. அரைமணிக்கு ஒருவர் மாறி மாறி ஆரூடம் சொன்னார்கள். மூன்று மணி ஆனவுடன் சில பெண்பிள்ளைகள் கூத்தாடினார்கள். எல்லாரும் கிழவிகளே, இவர்களும் குடித்தவர்களோ என்ற ஐயம் வந்தது. ஒரு பெண் போதை இல்லாவிட்டால் அரைமணி நேரம் குதிக்கமுடியுமோ என்று எண்ணவேண்டும். உண்மை அறிவதற்காகச் சுப்பனும் குப்பனும் நெருங்கினார்கள். இவர்களைக் கண்ட ஒரு கிழவி ஆவேசம் வந்து பாடத்தொடங்கினாள். ஆவேசம் உண்மையோ பொய்யோ என்று அறிவதற்காக அவ்விருவரும் மிகுந்த கூர்மையோடு கேட்டார்கள். சிறிது நேரம் ஏதேதையோ விளங்காதவற்றைக் கூறினாள். பிறகு அடியிற் கண்டபடி சொற்கள் வந்தன: 

“தேரியின் அருகொரு சேரியிலே-ஐயனே
நாரியர் இருவர் நன்கிருந்தார். 
அன்னவர் தமக்கிரு மக்களுளார்-அவர் 
மன்னவர் மொழிதனில் மாண்புறுவார்.
விவிலியர் குலத்தவர் போதிக்க-அவர் 
குவியலில் சேர்த்திட சூழ்ச்சியிட. 
நம்பிக்கை சிறிது தளர்ந்திடவே-அவர் 
நம்மிறை முன்னிலை வந்துளரே. 
மதுவொடு நிணமும் மலிந்திருக்க – அவர் 
விதிவிலக்கிதுவென வெறுத்திடுவார். 
அன்னவர் பெற்றோர் வரலாற்றை-இனி 
முன்னமே நடந்ததை அருளுவனே. 
முன்னொரு நாளில் புனிதமுடை-எங்கள் மம் 
துன்னிடு சோலையில் தேவதைகள். 
சேரியில் வருத்தம் செறித்திடவே -ஊரார் 
கோரிய திருவிழா தொடங்கினரே. 
இவ்விரு குட்டிகள் தந்தையரோ – அதற்கு 
வெவ்விய கேலிகள் வீசினரே 
திருவிழா முற்றும் போதினிலே – அவர் 
கருவி ழுந்தெமனூர் ஏகினரே. 
அதுமுதல் சேரியர் தெய்வமதை -நன்கு 
விதிமுதல் வேண்டுதல் விடுத்தனரே.
இந்நாள் இச்சிறு காளையர்கள் – ஐயர்
முன்னால் செய்ததை விட்டொழிந்தால், 
நல்லதோர் பதவிகள் கிடைத்திடுமே-அஃது 
இல்லதேல் இவர்கேடு ஊர்ந்திடுவார்.தைர்யன் 
இவர்பால் ஒருசொல் விடுத்திடுவேன்-இனி 
தவறுவன் ஒருவன் தனிப்போவான். 
மற்றவன் மேல்மேல் பதவியினை – நன்கு 
இந்தவோர் விதியினில் தவறில்லை-இனி 
உற்றவன் சேரிக் குதவிடுவான். 
சிந்தனை செய்தலும் இவர்கடமை. 

”என்ன ஆச்சரியமாயிருக்கிறது. இவள் சொன்னது உண்மையாகத் தெரிகிறதே” என்றான் சுப்பன்.; 

“ஆமாம் ஆச்சரியம்தான். இதுவரை நடந்த கதை முழுதும உண்மையாகத்தான் கூறகிறாள். இவளுக்கு இது எல்லாம் எப்படித் தெரிந்தது?:” 

“நம் பெரியவர்களைப் பற்றிக் கூறினது உண்மையாக இருக்குமோ? அப்படியிருந்தால் பின்னால் வருவதும் உண்மையாகலாம். 

“என்னமோ எனக்கு நம்பிக்கையில்லை. ஒருபடிப்பில்லாத பெண்ணுக்குத் தெய்வீக உணர்ச்சியும் ஆரூடமும் சொல்லவருமோ?” யாராவது ஒற்று சொல்லி இருக்க வேண்டும். 

“என்னமோ, அதைப்பற்றித் தீரவிசாரிப்போம்” என்று சொல்லிக் கொண்டு வெளியே சென்றார்கள். விடியும்மட்டும் திருவிழா நடந்தது. பிறகு சுவாமி பவனி சென்றார். இவைகளையெல்லாம் பார்ப்பதற்கு இந்த நண்பர்களுக்கும் மனம் இல்லை. ஊருக்குப் புறப்பட்டுவிட்டார்கள். 

ஊர் சேர்ந்ததும் உறவினர்களைத் துப்பு விசாரித்ததில் தம் பெற்றோர்களைக் குறித்து ஆவேசத்தில் சொன்ன உரைகள் எல்லாம் முற்றும் உண்மை எனத் தெரிந்தது. ஆகவே, இரு நண்பர்களும் இனி நடப்பதும் உண்மை ஆகுமா என்று எண்ணினார்கள். ரு 

சில மாதங்கள் சென்றன. குப்பன்தான் உபாத்தியாயரிடம் நடந்ததை முழுதும் கூறினான். அவரோ பாதிரியாரிடம் கூட்டிச் சென்றார். பாதிரியார் பிசாசுகளிடம் ஆரூடம் கேட்டால் பொய்யும் உண்மை போலத் தெரியும். இயேசுவின் நாமம் பட்டால் அப்பிசாசின் வலைகள் சிதறிப்போகும். நீ ஞானஸ்நானம் பெற்றுக்கொள். பின்னால் உன் ஆன்மா சுத்தி அடையும் என்று உபதேசித்தார். குப்பன் அதனை நம்பிக் கிறிஸ்தவனானான். ஒரு பள்ளி உபாத்திமைத் தொழிலும். பெற்று வாழ்ந்துவந்தான். தன் பெயரையும் பீட்டர் கோபன் என்று மாற்றிக் கொண்டான். 

சுப்பனோ இன்ன செய்வது என்று முடிவு இல்லாமல் இருந்தான். அன்றிரவு கிழவி சொன்ன ஆவேசச் சொற்கள் மனதை உறுத்திக்கொண்டே இருந்தன. நாட்டில் எங்கும் சுதந்திரவாஞ்சை இயக்கம் பரவிற்று. ஹரிஜன சேவாசங்கம் வேலை செய்யத் தொடங்கிற்று. அச்சங்கத்துக் காரியதரிசி நெல்லைக்கு வந்தார். சுப்பன் அவரைக் காணச் சென்றான். சுப்பனுடைய படிப்பும் அறிவும் ஆற்றலும் கண்டு அவன் மீது அன்புகூர்ந்து அவனைத் தன்சங்க ஊழியனாகச் சேர்த்துக்கொண்டார். சுப்பன் அச்சங்கத்தில் ஈடுபட்டு தன் சேரியில் ஒரு இரவுப்பாடசாலையும் வாசகசாலையும் ஏற்படுத்தினான். பிறகு ஒரு மாணவர் இல்லமும் வைக்கப்பட்டது. பலபேர் தேசியத் தலைவர்கள் இந்த நிலையங்களைப் பார்வையிட்டு நற்சான்றுகளை வழங்கினார்கள். சுப்பனோ கெடுதலான வழிகளில் செல்லுவபவன் அல்லன். ஆகவே இந்தப் பொதுத் தொழிலில் வயிற்றுக்குப் போதுமான கஞ்சியும் கிடைக்கவில்லை. இருந்தாலும் நாட்டிற்கும் தன் இனத்தார்க்கும் சேவை செய்கிறேன் என்ற நன் மகிழ்ச்சி அடைந்து இன்புடன் இருந்தான். 

சில மாதங்களில் நாட்டில் தேர்தல் நடந்தது. தேசீயக் கட்சியின் சார்பில் அரிசனங்களுக்கு ஒரு இடம் கிடைத்தது. பலபேர் படிப்பில்லாதவர்கள் அதற்கு ஆசைப்பட்டார்கள். ஆனால், தேசீயத்தலைவர்களுக்கோ சுப்பன் செய்து வந்த சுயநலம் அற்ற. தொழிலைப் பற்றித் தெரியும். இவனையே அந்த ஸ்தானத்திற்குத் தெரிந்தெடுத்தார்கள். வெகு சுலபத்தில் யாதொரு செலவும் இன்றி சுப்பன் சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டான். அப்போது அவனுக்கு அவசியமான ஊதியமும் கிடைத்தது வெகு மகிழ்ச்சியுடன் தன் நாட்டிற்கும் குலத்திற்கும் தொண்டு செய்தான். இவனும் கிறிஸ்தவனாகி இருந்தால் இந்தப் பெருமை இவனுக்குக் கிடைத்திருக்குமா. 

சுப்பனும் கோபனும் (முந்திய குப்பன்) நெல்லையில் ஒருநாள் சந்தித்தார்கள். 

“சென்ற ஆண்டு மாடன் திருவிழாவில் சொன்ன ஆரூடம் ஞாபகம் இருக்கிறதா?” 

“அது பிசாசின் கூற்று. அதை மறந்துவிட்டேன்” 

“சரி மறந்து விடலாம். ஆனால் சொன்ன சொற்கள் உண்மை ஆகிவிடவில்லையா?” 

“எப்படி?” 

“நீ இருபது ரூபாய் சம்பளத்தில் இருக்கிறாய்” நான் 150ரூ உதவிப் பணமும் பலவகை மேல் வரும்படியும் பெறுகிறேன். 

“ரூபாய் வருமானம் பெரிதா. ஆன்மா நற்கதி அடைந்திருக்கிறதா?”

“அதற் கென்ன சந்தேகம்” நீ கிறிஸ்தவனாகி நாள் தோறும் தொழுது கொண்டு மாத்திரம் இருக்கிறாய், நாளோ திருத்தொண்டு புரிந்து வருகிறேன். நம் இனத்து ஏழை மக்கள் கண் திறக்கும்படி வேலை செய்கிறேன். தவிர மாடன் கோயில்களில் நடக்கும் ஆபாசங்களை நிறுத்தி சாத்துவிகமான தொழுகை நிலைநிறுத்தும்படி செய்துவருகிறேன். ஈசன் கருணை இருந்தால் நான் வெற்றி அடைவேன். ” 

“என்ன ஆனாலும் பிசாசு பிசாசுதான்.” 

“கடவுள் கடவுள் தான்” என்று கூறிவிட்டு விலகிப்போய்விட்டான் சுப்பன். 

இவனிடம் பேசிப் பயனில்லை என்று பச்சாதாபப்பட்டு சுப்பன் தன் இடத்திற்குச் சென்றான். கோபனோ இவன் சொல்லுவது சரியாகத்தான் தோன்றுகிறது என்று சொல்லிப் பொறாமைப் பட்டுக் கொண்டு வீடு சேர்ந்தான். 

– கோயிற் பூனைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு; 1945, திராவிடர் கழக வெளியீடு, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *