சாந்நித்ய இருப்பில் ஒரு தவக் கோலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2026
பார்வையிட்டோர்: 3,211 
 
 

போரை புறக்கணித்து, நல்லதே நடக்குமென்று நம்புவோம் . இந்த உயிர் விளையாட்டு , எப்போது ஓயுமென்று தெரியவில்லை இந்த கலியுகத்தில் எதுவும் நடக்கலாம். மேற்குலகம் போருக்கே வரிந்து கட்டிக் கொண்டு, நிற்பது போல் படுகிறது காசு ஒன்றையே, குறிவைப்பவர்களுக்கு கடவுள் இல்லையென்பதே, நிதர்ஸனமான உண்மை. அந்த வீட்டை குறிவைத்து ஒருவன் வந்து கொண்டிருந்தான். இது எப்பவே ஒரு தலைமுறைக்கு முன்னால் நடந்தேறிய ஒரு தெய்வீகக் காவியம், அப்போது அங்கே வந்து கொண்டிருப்பவன் அவன் வேறுயாருமில்லை. வேலுப்பிள்ளை தான். மகா குடிகாரன். அவனுக்குக் குடும்பமேயில்லை எவளோ சிங்களத்தியை, வைத்துக் கொண்டிருக்கிறானென்று கேள்வி.

அம்மா அப்போது வாசற்படியில் நின்று கொண்டிருந்தாள், வானத்தைக் கணக்கிடும் நிலையில். மழை வருமோ என்ற பயம் . வேப்பம்பூ கொட்டிக் கிடக்கும் முற்றம் தான் அவளின் தவச் சாலை. வெய்யில் எறித்து விட்டால் படு கொண்டாட்டம் ஊறுகாய் சாடி முதற் கொண்டு, வடகம் வரை வெய்யில் குடித்து உடல் வற்ற, அங்கே வந்து விடும். அவர்கள் வீடு சாப்பாட்டிற்குப் பேர் போன இடம். அப்பா ஓர் ஏழை வாத்தியாராக இருந்தாலும் கடன்பட்டே குடும்பம் நடத்தக் கூடிய, அவரின் தாராள மனசுக்கு இணையாகவே எல்லாம் நடந்தேறும்.

அப்போது ஒருஇருள் கனத்த வேளை. மழை வரும் போலிருந்தது. கேட் திறக்கும் சத்தம், கேட்டு, வாசலையே வெறித்த அவளின் கண்முன்னால், ஒரு குடிகார பேர்வழி. நிறை குடியோடு தள்ளாடி நிலை சரிந்து வரும் வேலுவின் முகம் சகதியாக வந்து கண்களில் அப்பிக் கொண்டது. அதை மறக்க நினைப்பவள் போல், முன்வராந்தாவில் சாய்மணையில் படித்துக் கிடக்கும் அப்பா முகத்தையே ஏறிட்டுப் பார்த்தபடி நிலை தடுமாறி அவள் நின்று கொண்டிருந்தாள். எனினும் அவரின் தவக் கோலமே, கண்களுக்கு பாதுகாப்பாயிருக்க தொலைதூரத்தில், அவன் முகம் சகதிகுளித்து வரும் நிலையில் வெறும் கனாத் தோற்றம் போல் மங்கலாகத் தெரிந்தது.

அம்மா கேட்டாள் என்ன வேலு? இந்த நேரத்திலை வாறாய்?

ஓம் அன்ரி! பொழுதுபடுகுது. நலாய் குடிச்சிட்டன் பசிக்குது, இடியப்ப பார்சல் கொண்டு வந்தனான், தொட்டுக் கொள்ள ஊறு காய் தருவியளே.

ஓ! தாறனே! என்றவள் தொடர்ந்து கேட்டால். ஏன் வேலு! இந்தக் குடியை நீ விட்டால், உன்னை நான் மனிஷனாய் பாப்பன்.

ஏன் சொல்லுறியள்?

இல்லை குடிச்சால். நீ சண்டைக்காரன் தான் குடிச்சிட்டு வந்து உன் தம்பி சிவராசாவோடு ஒழுங்கேக்கை நீயும் அவனும் தடி எடுத்து சண்டை போடேக்கை ஊரே உங்களை வேடிக்கை பாக்குது.

அதுக்காக, என்னை குடியை விடச் சொல்லுறியளே? மூட்டை தூக்கிப் பிழைச்சே, குடிகாரனாய் நான் செத்துப் போறன். உங்களுக்கு என்ன வந்தது?

அதில்லை வேலு. இது உனரை பக்கம் எங்கடை விட்டிலையும் இது நடக்குதே! இது மாற வேண்டுமானால், இது உன்ரை கையிலை தான் இருக்கு!

அதெப்படி? எனக்கு ஒன்றும் புரியேலையக்கா.

இதை வாயாலை சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கு. என்றவள் தொடர்ந்து பேச முடியாமல், வாய் விட்டு அழுதே விட்டாள். பிறகு தேற்றிக் கொண்டு சொன்னாள். சில்லு முறிஞ்ச கதை தான் இஞ்சையும் நடக்குது. ஒருநாள் இது நடக்கேக்கை நீயே வந்து பார் தெரியும்.

அவன் ஊறுகாய் வாங்கி சாப்பிட்டு விட்டு போய் வெகு நேரமாகிறது. படுக்கப் போகிற சமயம், கக்கத்டு வீட்டிலிருந்து முதுகில் பளார் பளாரென்று யாரோ அடிக்கிற மாதிரி, சத்தம் கேட்டது. அவளுக்கு தெரியும் குடித்து விட்டு வந்து வேலுவின் தம்பி சிவராசாதான் மனுஷியை போட்டுத் தள்ளுகிறான். குடி வெறியிலை ஒரு நாளைக்கு, மனுஷியை கொன்றே போடுவான். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு, சும்மா இருப்பதே பெரும் பாவம்.

இது அவர்கள் வீட்டிலும் அடிக்கடி நிகழும். படுக்க மனம் வராமல், அம்மா வாசலுக்கு வந்தாள். சின்ன மகன் சரவணன் வராந்தாவில், பாய் போட்டு உறங்கிக் கொண்டிருந்தான், ஓர் அப்பாவி போல கிடந்தான் பகலில் வேஷம் மாறும், சின்னண்ணன் சாமியோடு அடிக்கடி சண்டை போடுவது, கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். சிலசமயன் வாய்ச் சண்டை முற்றி அடிதடியும் நிகழும் கைகளால் அடித்துக் கொள்வர்கள். அம்மா நடுவில் நின்று தலையை பிய்த்துக் கொண்டிருப்பாள், வேலு தன் தம்பியோடு சண்டை போட்டால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இதுவும், அனால் ஒரு வித்தியாசம் இவர்கள்குடிப்பதில்லை.

அப்பாவின் வாரிசுதானென்றாலும் இந்தக் கொடிய பழக்கம் போர் வெறி வந்தது எதனால்?அவர் போல் சாந்நித்ய இருப்பில் இவர்களும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் . அந்த விஷவிதையை, வளரவிட்டது தான் பெருந் துக்கம்.

மறு நாள் பொழுதும் அப்படியே விடிந்தது. பாரதப் போர் அதைடக் கொடுமை அண்ணன் தம்பிகளே, அடித்துக் கொண்டு சாவது. அன்றும் அது நிகழத்தான் செய்தது. அதைப்பார்த்து விட்டு அம்மா ஆற்றாமையோடு சொன்னாள். தொடங்கி விட்டினம் இந்த வேலுப் பிள்ளை சண்டை எப்ப தான் முடியுமோ தெரியேலை. இது அறைக் கதவருகே நின்று அம்மா சொன்னது, உரத்து சொல்லாமல் மனசுக்குள் முணுமுணுத்தது எப்படியோ அப்பா காதில் விழூந்து விட்டது. அவருக்கு ஒரு தார்மீக சினமே வந்து விட்டது.

போதும் நிறுத்து மங்களம்! எதுக்கு வீணாக வம்பு வளர்க்கிறாய்? இப்படி சொல்லியே இவன்களை நாசமாக்கி விடுவாய் போலிருக்கு. வாயைத் திறந்தால், வேதம் தான் வர வேணும். பூதமே வந்தால், பூமி தான் பிளக்கும் ஒருவரையொருவர் அடிச்சுக் கொண்டு சாகவல்ல இந்த உலகம்.

அப்ப எதுக்கு? நான் தான் கேக்கிறன் சொல்லுங்கோ!

உனக்குத் தெரியாது. மங்கை சண்டை பிடிச்சு சாகிறதுக்குவல்ல இந்த உடம்பு, தவக் கோலம் பூண்டால், சாந்தி மட்டுமல்ல, சாந்நித்ய இருப்பே வரும் , என்று அவர் கூறியதைக் கேட்ட போது மங்கை வெகுவாக சிலிர்த்துப் போனாள். இந்தக காட்சி உலகில் இருவேறு துருவங்கள் தான் இந்த மனிதர்கள். வேலு நின்ற இடத்தில் வெறும் புற்றரைகூட இல்லை பற்றைக் காடுதான் அப்பா நின்ற இடத்தில் அந்த ஆதர்ஸமனிதனிடத்தில் அவள் கண்டது வெறும் ஒரு மனிதனையல்ல. ஒளி பிரகாசமாகத் தோன்றுகிற அவரின் சாந்நித்ய தவக் கோலத்துக்கு முன்னால் இருள் விழுங்கிய பூதங்கள் மறைபொருளாகவே போயின. ஒரு வேலு போலாகாமல் இந்தச் சிறப்பும் பெறுதற்கரிய பேரின்ப தவக் கோலமும் தன் பிள்ளைகளிடமும் வந்தால், அதுவே தான் உச்சிகுளிர்ந்து போகிற ஒரு தருணமாக இருக்குமென்று இப்போது அவள் முழு நம்பிக்கையுடன் நினைவு கூர்ந்தாள்.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *