சாத்தப்பட்ட கதவு!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 88

“ஏண்டா பெரியவா… ஆடு மாடெல்லாம் காடிலையே கட்டிக்கெடக்குது. காத்தால எந்திரிச்சு எங்கடா போயிட்டே? சின்னவனையும் காணோம். படுக்கைல கெடக்கற என்னைய ஏண்டா ரெண்டு பேரும் இப்புடி பாடா படுத்தறீங்க?” உடல் நிலை சரியில்லாமல் பாயில் படுத்திருந்த சாவித்திரி தனது மகன்கள் மீது சலித்துக்கொண்டாள்.
பண்டுதக்காரர் எனும் மருத்துவர் வந்து உடல் நிலையை நாடி பிடித்துப்பார்த்து விட்டு “வெள்ளாம வெளைச்சல் நஷ்டமாயிப்போச்சுங்கிற மனக்கஷ்டத்துல உன்ற புருசன் போய் சேந்த மாதிரி, நீயும் போயிட்டீன்னா பசங்க அனாதையாப்போயிருவாங்க சாவித்திரி. உன்ற ஒடம்புக்கு பிரச்சினை ஒன்னுமில்ல. மனசு தான் என்னேரமும் கவலப்பட்டுட்டே ஒடம்பத்தூங்க உடாமத்தடுக்குதுன்னு கருவளிஞ்சு குழியுழுந்து போன உன்ற கண்ணப்பார்த்தாவே தெரியுது. நீயொன்னும் கவலப்படாதே. இந்தூரு இல்லேன்னா வடக்கையோ, தெக்கையோ போயி பொழைச்சுப்போடுலாம். ஒடம்பு கெட்டுப்போயி நடக்க முடியிலேன்னா சொத்தே இருந்தாலும் சித்த தூக்கி உக்கார வைக்க ஆளு இருக்காது. அதத்தெரிஞ்சுக்க மொதல்ல” பண்டுதகாரர் பேசியதால் மனம் பக்குவப்பட்டு பத்து நாட்களுக்கு பின் கஞ்சி குடித்தாள்.
“என்ற பாட்டிக்காரி புருசன் செத்ததும் கொழந்த குஞ்சுகள மறந்து போட்டு புருசனோட ஒடம்பு எரிஞ்ச கட்டைலையே உழுந்து செத்து வீரமாத்தி ஆயிட்டா. நானும் அப்புடிப்போயரோணும்னு தான் நெனைச்சேன். என்ற ஒடம்புக்கு உசுரா இருந்தவரு அரளி வெதைய அரைச்சுக்குடிச்சு செத்துப்போனதுக்கப்புறம் வெறும் கட்டையா எதுக்கு இந்த மண்ணுக்குங்கேடா வாழோணும்னு நெனைச்சேன். அவரு குடுத்த உசுரா ரெண்டு ஆம்பளப்பசங்க வீணாப்போகும்னு தான் புத்திய மாத்தி பக்தியா இருக்கப்பாத்தேன். என்னதான் புத்திய மாத்துனாலும் அவரு இல்லாத ஒலகம் எனக்கு நரகந்தாம்போங்க” சொல்லி கண்ணீர் வடித்தாள்.
சாவித்திரியை கணவன் கணேசன் உயிருக்குயிராக நேசித்தான். திருமணமான காலத்திலிருந்து இருபது வருடங்கள் ஒரு நாள் கூட பிரியாமல் வாழ்ந்துள்ளான்.
முதலாக உறவு என்கிற வகையில் காட்டில் விதைக்க விதை சோளம் வாங்க சாவித்திரி வீட்டுக்கு போன போது முதலாக கணேசனைப்பார்த்த சாவித்திரி வெட்கப்பட்டு ஓடியதும், நேராக நின்று தண்ணீர் கொடுக்காமல் திண்ணைக்கால் பின்புறம் மறைந்தவாறு கொடுத்ததும் அவள் மீது ஈர்ப்பு ஏற்பட காரணமாகி விட, அதன் பின் அவள் காட்டிற்குள் மாடு மேய்க்கப்போகும் பக்கம் தனது மாடுகளையும் மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று அவளுடன் பேசுகின்ற வாய்ப்பை உருவாக்கிக்கொண்டான்.
சில நாட்களில் பிரிக்க முடியாத, பார்க்காமல் இருக்க முடியாத நிலைக்கு இருவரும் போக பெற்றோர் சம்மதத்துடன் மணம் முடித்து வாழ்ந்தனர்.
ஒரு முறை கணவன் கணேசனை திருமணத்துக்கு முன்பு பாம்பு கடித்து மயக்க நிலை வந்த போது, தன்னையும் பாம்புக்கடிக்க வேண்டுமென புத்துக்குள் கைவிட்டு தனது காதலை வெளிப்படுத்தி, உறுதிப்படுத்தினாள் சாவித்திரி.
காவிய காதலர்களைப்போல் தான் நேசித்த கணவன் இறந்து போனது உலகமே சூரியனின்றி இருண்டு போனது போல், உடலே உயிரின்றி சவமானது போல் உணர்ந்ததால் தன்னிலை மறந்து, பெயரை மறந்து, தான் இரண்டு குழந்தைகளுக்குத்தாய் என்பதையும் மறந்து இறந்து போகவேண்டும் எனும் சிந்தனையில் உணவின் மீது விருப்பமின்றி காலத்தை கடத்தியவளை பண்டுதகாரரால் தான் மாற்ற முடிந்தது என்பது அவளது வாரிசுகளுக்கும், உறவுகளுக்கும் நிம்மதி கொடுத்தது.
“சாவித்திரி….”
“ம்…”
“என்னைய பாம்பு கடிச்ச போது செத்துப்போயிருந்தேன்னு வெச்சுக்கோ…” கணவன் கணேசனை அதற்கு மேல் பேச விடாமல் தனது கைகளால் அவனது வாயைப் பொத்தியபடி கண்ணீர் வடித்தாள்.
“எனக்கப்புறம் தான் நீங்க போவீங்க. நான் பூவும்பொட்டோடதான் போகோணும்” என்றாள் உறுதியாக.
“உனக்கும் எனக்கும் பதனைஞ்சு வருடம் வித்யாசம். அத மொதல்ல நீ யோசிச்சுப்பார்த்தியா?”
“வயசுல என்னங்க இருக்கு? மனசுல உங்களப்போல ஒருத்தரு இந்த ஒலகத்துல எங்க தேடுனாலும் எனக்கு கெடைச்சிருக்க மாட்டாங்க. நாங்கும்பிடற கருப்பராயன் தான் நம்மள சேர்த்து வெச்சிருக்குது. உங்களுக்கு பாம்பு கடிச்ச போது கருப்புசாமிங்கிற பேர்ல வந்த பண்டுதகாரர்தான் உங்கள காப்பாத்துனாரு” சொன்னவள் சேலைச்சொங்கில் முடிந்து வைத்திருந்த திருநீற்றை எடுத்து கணவன் நெற்றியில் பூசி விட்டு, அவனது மடியில் தலைவைத்து படுத்தவாறு மகிழ்ந்தாள்.
காதலித்த போது பேசிய உரையாடல்களையும், திருமணத்துக்கு பின் நடந்த செயல்பாடுகளையும் யோசித்தவள் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.
“என்ன சாவித்திரி… சத்தியவான் சாவித்திரி மாதிரியே இருக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தீன்னா அவளாட்டவே எமங்கிட்டிருந்து அவரைக்காப்பாத்தியிருக்கோணும். அதெல்லாம் நடந்துச்சோ, கற்பனைக்கதையோ நம்முளுக்கு தெரியாது. நாமுளும் எத்தன நாளைக்கு உசுரோட வாழ்வோம்னு தெரியாது. இருக்கற வரைக்கும் சந்தோசமா வாழ்ந்து போட்டு போயறோணும்” என கூறிய சினேகிதி மயங்கியை ஏறெடுத்து புரியாமல் பார்த்தாள்.
“புருசனில்லாத பொம்பளைக்கு சந்தோசம் எப்புடி வரும்? நீயே சொல்லு?” சிகேதியைப்பார்த்துக்கேட்டாள் சாவித்திரி.
“வரும்….”
“அதுதான் எப்புடினன்னு கேக்கறேன்….?”
“அதுக்கொரு உபாயமான வழி இருக்குது”
“சொல்லு பார்க்கலாம்”
“நம்மூரு மேட்டுக்காட்டு கண்ணாடிக்கார நஞ்சப்பம்பொண்ணு ராக்காயிக்குங்கூடத்தான் புருசன் செத்துப்போயிட்டான். அவ கலர் சேலை கட்டீட்டு கண்ணீர் வடிக்காம சந்தோசமாத்தானே வாழறா?”
“மனசுக்குள்ளே வேதனை இருக்காமையா இருக்கும்?”
“எனக்குத்தெரிஞ்சு எள்ளளவும் கெடையாது”
“அப்ப…. தப்பு பண்ணறாளா…?”
“எது தப்பு, எது சரி ன்னு ஆரு முடிவு பண்ணறது? தப்பு எல்லாரும் பண்ணும்போது அதை யாரும்மே தப்புன்னு சொல்லறதில்லை. அதத்தெரிஞ்சுக்க நீ மொதல்ல. ஊருக்கே ஞாயம் பேசற சின்னப்பனத்தா அவ வெச்சிருக்கறா…”
“ச்சீ. இதெல்லாம் ஒரு பொழப்பா….? த்தூ…” என்றாள் வெறுப்புடன் சாவித்திரி.
“ராக்காயி பேர்ல ரெண்டேக்கறா காட்ட கெறையமே பண்ணி வெச்சிருக்கான்னா பார்த்துக்குவே. வயசான அவம் பொண்டாட்டிக்கு எதுவுமே முடியறதில்லை. அது மட்டுமில்ல. தெனத்துக்கும் சோறாக்கவே சின்னப்னூட்டுக்கே போறாளாமா. வேலைக்கு போற மாதர போயி பொஞ்சாதியாவே வாழறா…” சினேகிதி மயங்கி சொல்லக்கேட்ட சாவித்திரி தனது இரண்டு கைகளையும் தனது காதுகளில் வைத்து மூடிக்கொண்டாள்.
“நீ எதப்பத்திப்பேசறதுக்கு என்னப்பார்க்க வந்திருக்கிறீன்னு என்ற மனசுக்குள்ள இருக்கிற என்ற புருசன் இப்பவே சொல்லிப்போட்டாரு. இதுக்கு மேல இதப்பத்தி என்ற கிட்டப்பேசாதே…. இந்த மாதர கெட்ட நெனப்போட இருக்கற நீ ஒன்னிமேலு என்ற வாசப்படியக்கூட முதிக்காதே….” என முகம் சிவந்து கோபம் கொண்டு பேசிய சாவித்திரி, தனது மனக்கதவைத்திறந்து சிநேகிதி மயங்கியை வெளியேற்றி விட்டு, வீட்டின் அறைக்கதவைத்திறந்து உள்ளே சென்று சாத்தி தாழிட்டுக்கொண்டாள்!
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
