கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 21, 2026
பார்வையிட்டோர்: 115 
வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஸ்வாகதம்

யாருக்கும் பூர்வ ஜென்ம நினைவு வர முடியுமா?

வடநாட்டில் ஒரு சிறுவனுக்கும், இளம்பெண்ணுக்கும் அப்படி வந்ததாக ஒரு பத்திரிகையில் படித்தேன். நமக்கும் பூர்வ ஜென்ம நினைவு வந்தால் எப்படி இருக்கும் என்று எனக்குத் தோன்றிற்று. அதைப்பற்றிக்கூட ஒரு கதை எழுதி இருக்கிறேன். 

அந்த அடிப்படையில் இந்தத் தொடர் கதையை “தினமணிகதிர்” பத்திரிகையில் எழுதினேன். 

ஒரு பிறவிக்கும் மறு பிறவிக்கும் இடையிலே நான் வகுத்துக் கொண்டுள்ள வித்தியாசங்கள் தத்துவ ரீதியானவை அல்ல. பகவத்கீதையின்படி இது முறையானதுமல்ல. ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு சுவையூட்டவே இப்படி எழுதினேன். 

ஒரு பிறவியில் எப்படி வாழ்ந்தவர்கள் மறு பிறவியில் எப்படிப் பிறக்கிறார்கள் என்பதற்கு இலக்கணம் கிடையாது என்றாலும் சில ஜாடைகள் உண்டு. அவற்றைக்கூட நான் பின்பற்ற வில்லை. 

நான் மேற்கொண்ட இந்தப் போக்கு சரியா தவறா என்று, இதனைப் படிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். 

கதை அம்சத்தில் இது அதிகமான சம்பவக் கோர்வைகளைக் கொண்டதல்ல. 

‘எந்தக் கதைக்கும் சம்பவங்கள் தேவை இல்லை.’ என்றும், ‘சிவ குணசித்திரங்களின் மோதுதலே சம்பவமாகி விடுகிறது’ என்றும் பெர்னாட்ஷா சொன்னதாக ஞாபகம். அந்த உத்தியை நான் கையாண்டிருக்கிறேன். எத்தனை சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை படிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும். 

சரத்பாபுவின் ”சந்திரநாத்” கதையைப் படித்ததிலிருந்து எனக்கு எந்தப் பாத்திரத்திற்குப் பெயர் வைப்பதென்றாலும் ‘சரசு’ என்ற பெயரே ஞாபகம் வருகிறது. 

நாவல் துறையில் நான் பெற்றுவருவது வெற்றியா தோல்வியா என்பதற்கு இதுவும் ஒரு சோதனை. 

இந்த நாவலின் ஒவ்வொருஅத்தியாயத்திற்கும் ஒரு ராகத்தின் பெயரை நான் கொடுத்தேன். ஒரு குறிப்பிட்ட தோக்கத்தோடுதான் சில ராகங்களை இரண்டு அத்தியாயங்களுக்குத் தலைப்பாக்கி இருக்கிறேன். காரணத்தைக் கண்டு பிடிப்பதில் உங்களுக்கே சோதனை வைக்கப்பட்டிருக்கிறது, 

வழக்கம் போல் நான் சொல்லச் சொல்ல இதனை எழுதிய என் தம்பி இராம கண்ணப்பனுக்கும், அழகாக வெளியிட்ட வானதி திருநாவுக்கரசுக்கும் நன்றி.

சென்னை, 
19-2-1980 

அன்பன்,
கண்ணதாசன். 


அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

1. தேவமனோஹரி

அந்தரங்கத்தில் ஆடவர்கள் எல்லோருமே அயோக்கியர்கள். ஏதோ ஒரு ஸ்ரீராமனும், லெட்சுமணனும் காலத்துக்கும் குடும்பத்துக்கும் பயந்து ஏகபத்தினி விரதர்களாக இருந்திருக்கலாம். ஆனால் மனைவியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே மற்றொரு பொண்ணுக்கு ஜாடை செய்வதே ஆடயர்கள் வழக்கம்.

இந்த ஆடவர்களை நம்பி ஒருவனுக்கு ஏன் கழுத்தை நீட்டவேண்டும்? காதல் என்ன காதல், கண்ணறாவி! பிறந்து விட்டவர்கள் எல்லோருமே காதல் செய்துதான் தீரவேண்டுமா? இல்லை, பாலுணர்ச்சியை அனுபவித்துத் தான் ஆக வேண்டுமா? 

மானிட வாழ்க்கை. என்பது பாலுணர்ச்சிக்கும் அப்பாற்பட்டது. அதைத் தெய்வீகமாகவே நடத்திவிட முடியும். 

மானிட ஜாதியில் தேவதைகள் தோன்றலில்லையா? இனி தோன்றவே முடியாதா! 

நான் நர வாடையடிக்காத ஒரு தேவதையாகவே இருந்துவிடப் போகிறேன். 

என்று  பதினாலாவது.  வயதிலேயே முடிவு செய்தவள் சரசு. 

நாகரிக உலகத்தைக் கண்டாலே அவளுக்கு ஒரு வெறுப்பு. மார்பைத் தூக்கிக் கட்டுகின்ற பெண்களைப் பார்த்தால், “கேவலம்! சனியன்கள்” என்று திட்டுவாள். 

‘நம்முடைய மூதாதையர்கள் ரவிக்கை போட்டதில்லை. ஆடம்பரச் சேலை அணிந்ததில்லை. தினுச தினுசான கொண்டைகள் போட்டதில்லை, நாமும் அப்படி ஏன் இருக்க முடியாது?’ என்று எண்ணியவள் சரசு.

அவள் குதுவாகிற வரைதான் பள்ளிக்கூடத்திற்கு போனாள். அதற்குப் பிறகு நாராயணீயமும், லலித சகஸ்ரநாமமும் படித்தாளே தவிர, நாவல் படித்ததில்லை.

ரவிக்கை போடுவதில்னவு என்று பிடிவாதமாக இருந்தாள், முந்தானையாலேயே முழு உடம்பையும் மூடி கொண்டிருந்தாள். கால்களிலே கண்ணகி காலத்து சிலம்பு போட்டிருந்தாள். விரல்களிலே வெள்ளி மெட்டி அணித்திருந்தாள். கிராமத்துத் தாய்மார்களைப் போல் கூந்தலை அள்ளிச் செருகியிருந்தாளே தவிர, பின்னால் செருகவில்லை: உள் பாவாடை கட்டமாட்டாள். ஆனால் கனமான சேலை கட்டுவாள். காலையில் பூ, பழம், தேங்காயோடு கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று சில கலோகங்களைப் பாடாமல் பச்சைத் தண்ணீர்க் கூட குடிக்க மாட்டாள். ஏதாவது செய்தி கேட்டா “கிருஷ்ண! கிருஷ்ண!” என்பாள். யாராவது பெண் அவளைத் தொட்டுவிட்டால்கூட ”கிருஷ்ண! கிருஷ்ண” என்று விலகிக் கொள்வாள். அவள் சினிமா பார்த்ததில்லை; நாடகம் பார்த்ததில்லை; கதாகாலட்சேபம் தவிர வேறு எதையும் கேட்டதில்லை. 

அவளது படுக்கை அறையில்கூடப் பாண்டுரங்கன் படம்தான் மாட்டியிருக்கும். 

அவளது பெற்றோர் ‘இப்படி ஒரு சந்தியாசினி. பெற்று எடுத்தோமே’ என்று வருத்தப்படுவார்கள். 

ஆனால் அவளோ, தான் ஒரு சரியான ‘யோக’ நிலைத்து நிற்பதாகப் பெருமைப்படுவாள் 

சரசுவோடு கூடப் பிறந்தவர்கள் பாமா என்ற தங்கையும், பரஞ்சோதி என்ற தம்பியும் ஆவார்கள்.

சரசவுக்கு வயது இருபத்தைந்து. அவளுக்குத் திருமணமாகித்தான் தங்கைக்குத் திருமணம் ஆக வேண்டும்.

“நான்தான் திருமணமே வேண்டாம் என்கிறேனே? எனக்காகத் தங்கை ஏன் காத்துக் கொண்டிருக்க வேண்டும்?” என்பது சரசுவின் கேள்வி. 

சரசுவின் பெற்றோரோ பழைய பாணி. உயர்ந்த தமிழ்க் குடும்பங்களில் அவர்களும் ஒரு வகை. 

கணவனுக்கு அடங்கிய மனைவி; கதவுக்குப் பின்னாலே நின்று பேசும் சுபாவம். நல்லது கெட்டது எதுவானாலும் கணவனும் மனைவியும் கலந்து கொண்டே செய்யும் பண்பு. எல்லாம் அவர்களிடம் இருந்தன. 

அப்படிப்பட்ட தம்பதியினருக்கு விசித்திரமாக இரண்டு பெண்கள். 

சரசு ஒரு சந்நியாசினி என்றால், பாமா குடும்ப வாழ்க்கையை ஆவலோடு எதிர்பார்ப்பவள்.

குடும்ப வாழ்க்கையை எதிர்பார்ப்பவளே தவிர,  குறுக்கு வழி நாகரிகத்தில் பழக்கம் இல்லாதவள். நவின உலகத்தில் மாறி வருகின்ற பாஷன்கள் அவளைத் தீண்டலில்லை.

ஊரிலே பெண்கள் தங்கள் கணவன்மாரோடு உல்லாசமாக இருக்கும்போது நமக்கும் இப்படி அமையாதா என்று தான் நினைப்பாள். அதைத் தவிர காதல் ஜாடைகளைக் கூட அவள் கற்றுக் கொண்டவளல்ல. 

சரசு, ஒருநாள் அவளைத் தனியே அழைத்தாள். “இந்தா! எனக்காக காத்துக் கொண்டிருந்தால் எப்போதுமே உனக்குத் திருமணம் நடக்காது. நான் அப்பா அம்மாவிடம் சொல்லியிடுகிறேன். உன் கல்யாணப் பேச்சை அவர்கள் முடித்து விடுவார்கள்” என்றாள். 

“என்ன அக்கா இது? ஊரிலே பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள்?” என்றாள் பாமா. 

“எல்லாருக்கும் இது ஒரு பேச்சம்மா. ஊரிலே பார்க்கிறவர்கள், பார்க்கிறார்கள்! நம்மைப் பார்க்கிறவர்களும் கஷ்டம் வந்தால் சோறு போடப் போகிறார்களா? நமக்கு எது சரியோ அதைச் செய்வோம். ‘உன் மனதுக்குச் சரி என்று பட்டதைச் செய்துவிடு’ என்றுதான் வேதங்களே கூறுகின்றன. யாரையும் கேட்டு நாம் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று சொன்ன சரசு, பெற்றோரிடமும் அதைப் பற்றிப் பேசி விட்டாள். 

மூத்த மகளின் குணம் தெரிந்தவர்கள் அவர்கள். 

ஆயிரம் யானைகளைக் கட்டுவதற்குச் சென்னையில் இடம் பிடித்தாலும் பிடித்து விடலாம், ஒரு பெண்ணைக் கட்டுவதற்கு கிராமத்தில் அவ்வளவு சுலபமல்லவே! 

அவர்கள் மாப்பிள்ளையைத் தேடினார்கள். ஆமாம்; தினமும் ஆயிரக்கணக்கான ஆண் குழந்தைகள் பிறக்கின்ற பூமியில் மாப்பிள்ளையைத் தேடத்தானே வேண்டியிருக்கிறது? 

பெற்றோரும் விஞ்ஞானம் படித்த மாப்பிள்ளையைத் தேடினார்கள். 

சரசு, மெய்ஞானம் கற்றவர் வரவேண்டும் என்று விரும்பினாள்.

பாமாவோ, கைக்கு அடக்கமாக இருந்து கஷ்டப்படுத்தாத மாப்பிள்ளையை எதிர்பார்த்தாள். 

அவர்களது சொந்த ஊர் பாண்டிய நாட்டில் மூலங்குடி என்கிற கிராமம். 

கடைசியில் அவர்கள் பார்த்த மாப்பிள்ளை அதே பாண்டிய நாட்டைச் சேர்ந்த வேலங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். பொறியியல் படித்தவர். சிபாரிசு இல்லாமல் தேறியவர். ஆனால் கொஞ்சம் ‘ரப்பு’ பிடித்தவர் என்று ஊரிலே சொல்வார்கள். இந்த ‘ரப்பு’ என்ற வார்த்தைக்கு பாண்டிய நாட்டு நாட்டு வழக்கில் ‘அகம்பாவம்’ என்று அர்த்தம். 

மாப்பிள்ளையின் தகப்பனார் பெயர் சோமசுந்தரம்; தாயார் பெயர் சுந்தரவதனி.

மாப்பிள்ளையும் பெண்ணும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் தான். அவர்கள் கலப்புத் திருமணத்தில் அவ்வளவு முன்னேறியவர்களல்ல. 

‘அக்கா இருக்கும்போது தங்கைக்குத் திருமணமாம்’ என்று ஊர் பேசத்தான் செய்தது.

“ராமன் திருமணத்தை விரும்பவில்லை என்றால், லட்சுமணனுக்குத் திருமணம் ஆகாமல் போய் விடுமா?” என்றாள் சரசு. 

“அப்படி என்னடியம்மா, திருமணத்தின் மீது உனக்கு வெறுப்பு? ஊரிலே உனக்கேற்ற பிள்ளை பிறக்கவில்லை என்பது உன் எண்ணமா?” என்றுகூட சில வயதான முதாட்டிகள் கேளி செய்தார்கள். 

“ஒளவையாரையும் திருமணமே செய்து கொண்டிருக்க வேண்டும் என்று அன்றே நீங்கள் வற்புறுத்தி இருக்க வேண்டும்” என்றாள் சரசு. 

”அன்று நாங்கள் பிறந்திருந்தால் அப்படித்தான் சொல்லியிருப்போம்” என்றார்கள் அவர்கள்.

”சாப்பாடும் திருமணமும் அவரவர்களுடைய விருப்பத்தைப் பொறுத்தவை. அவற்றிலே தலையீடுவது உங்களுக்கே வெட்கமாகத் தோன்ற வில்லை?” என்று முகத்திலடித்து விட்டாள் சரசு.

திருமண வீடு கலகலத்தது.மாப்பிள்ளை ராஜேந்திரன் ஒரு பேரழகன் என்பதை அன்றைக்குத்தான் மூலங்குடி கிராமம் கண்டது. 

தன் கணவனின் அழகைப் பற்றித் தோழியர் வியந்து சொல்வதை உற்சாகமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் பாமா. 

“அழகென்னடி அழகு? பத்து வருஷம் போனால் சுறுத்த தலை வெளுத்துப் போசுப் போகிறது” என்றாள் ஒருத்தி, அவள் வாழ்ந்து முடித்தவள். 

கிராமம் ஒரு வேடிக்கையான அரண்மனை. அதிலே அடுத்தவளுக்குக் கிடைத்து விட்டதே என்று ஆத்திரப்பட்டவர்கள் இருப்பார்கள். தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று தாகம் கொண்டவர்கள் இருப்பார்கள். ‘ம்……. ! இது இன்னும் எத்தனை நாளைக்கு?’ என்று சாபம் கொடுப்பவர்கள் இருப்பார்கள். ‘நானும் இதுபோல ஆயிரம் பார்த்துவிட்டேன் போடி!’ என்று அலட்சியம் கொண்டவர்கள் இருப்பார்கள். 

அவர்கள் மூலங்குடி கிராமத்தில் மட்டும் இல்லாமல் இருப்பார்களா? 

மணவறையிலேயே ஓரக் கண்ணால் கணவனைப் பார்த்து வைத்துக் கொண்ட பாமா, சாந்தி முகூர்த்தத்தின் போது கொஞ்சம் நன்றாகவே பார்த்தாள்.

ராஜேந்திரனுக்குக் கவிதை எழுதவும் வரும். அது இந்தக் காலத்து மகா கவிகள் எழுதுவது போல வசன கவியாக இருக்காது; இலக்கணச் சுத்தமாகவே இருக்கும். 

பாமா கதவைத் திறந்ததையும், உள்ளே நுழைந்ததையும் ஒதுங்கி நின்றதையும் கவிதையிலேயே வருணித்தான் ராஜேந்திரன். 

பாமாவுக்குக் கவிதை எழுதத் தெரியாதே தவிர ரசிக்கத் தெரியும். 

தன் கணவன் நல்ல ரசிகன் என்பதிலே அவளுக்குத் திருப்தி. 

பக்கத்தில் உட்கார்ந்தாள். வெட்கம் வெளிப்பட்டது.

”சொர்க்கத்திற்குள் நாம் நுழையப் போகிறோம்” என்றான் அவன். 

அவள் கன்னங்களை வருடினான். கதகதப்பாக இருந்தது. 

உதடுகளில் மூத்தமிட்டான். மெதுவான ரப்பர் போன்றிருந்தது. 

அவள் தோள்களில் அவன் கை வைத்துத் தடவிக் கொடுத்த போது, அவள் நெஞ்சத்தில் ஓர் அதிர்ச்சி ஏற் பட்டது. 

அப்படியே முதுகிலே கை கொடுத்து முகத்தோடு முகம் பதித்துச் சேர்த்துக் கட்டிக் கொண்டபோது பனிக்காலத்து வெயில் போல் குளிரும், லேசான கொதிப்பும் அதிலே இருந்தன. 

அன்றைய இரவு, பாமாவின் மறக்க முடியாத இரவாயிற்று. 

முதல் நாள் உறவுக்குப் பின்னே பெண்ணுக்கு ஒரு சுகமான தூக்கம் வரும், அந்தத் தூக்கம் பாமாவுக்கும் வந்தது. கணவளைக் கட்டிப் பிடித்துத் தூங்குவதை முதல் நாளிலேயே பெண்கள் கற்றுக் கொள்வதில்லை. 

பாமா திரும்பிப் படுப்பதைத் தடை செய்து தன் பக்கம் திருப்பிக் கொண்டான் ராஜேந்திரன். 

அவர்கள் படுத்திருந்த அறைக்குப் பக்கத்திலே தான் சரசுவின் அறை. 

அன்று. சரசு விரதம், இரவு துளசி தீர்த்தம் சாப்பிட்டு விட்டுத் தூங்க முயன்றாள். தூக்கம் வரவில்லை. 

ஆனால் சராசரிப் பெண்களைப்போல ஏக்கம் அவளுக் கில்லை. 

இந்து மதப் புத்தகங்கள் பலவற்றைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்; மணம் அதில் பதியவில்லை. 

ஒரு புத்தகத்தில், ‘இளம் பருவத்தில் ஆன்மாவை சரீரம் வென்றுவிடும்’ என்றிருந்தது. 

“அது எப்படி நம்மை அறியாமல் வென்றுவிடும்; நம்முடைய ஆன்மா, அது இருப்பது நம்முடைய சரீரத்துக் குள்ளே. முட்டாள்கள், லௌகீக வாழ்க்கையில் விழுந்து விழுந்து இவர்களுக்குப் புத்தியே கெட்டுவிட்டது” என்று தான் அவள் எண்ணினாள். 

ஆனால், லௌகீகத்தில் முதல் இரவை அனுபவித்த பாமாவுக்கும், ராஜேந்திரனுக்கும் எப்போது தூக்கம் வந்ததோ அப்போதுதான் அவளுக்கும் தூக்கம் வந்தது. 

2. புன்னாகவராளி

திருமணம் முடிந்துவிட்டால் அடுத்த பிரச்னை என்ன? தேன் நிலவுதான். அது தேவைதான். அது வரையில்  வாழ்க்கையை அனுபவிக்காதவர்களாக அவர்கள் இருந்தால் தனியாக ஓர் இடத்தில் போய் இருப்பது போன்ற சுகம் வேறெதுவுமில்லை. 

பாமாவும் ராஜேந்திரனும் எங்காவது தேன் நிலவு போகலாமா என்று ஆலோசனை நடத்தினார்கள். 

பெங்களுரர், கொடைக்கானலா, வங்காளத்தில் டார்ஜிலிங்கா – புதுத் தம்பதியர் பரிமாறிக்கொள்வதற்குக் கேட்கவா வேண்டும்? 

எங்கு போனாலும் சரசுவையும் கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்பது பாமாவின் ஆசை. 

“உன் அக்காளைக் கூட்டிக் கொண்டு போவதானால் திருப்பதிக்கோ, திருக்கழுக்குன்றத்துக்கோ கொண்டு போகலாம். புண்ணிய ஸ்தலங்களுக்குத்தான் அவர்கள் லாயக்கு” என்றான் ராஜேத்திரன்.

“அடடே! மாற்றிய மாலைகூட காயவில்லை; அதற்குள் மைத்துனியைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்களே?” என்று கேலி செய்தாள் பாமா. 

“என்னவோ சில பேர் பிறக்கிறார்கள். உன் அக்காள் ஓர் அவதாரம்தான். விடிந்தால் எழுந்தால் மணியோசை கணகணவென்று ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதிகப்படி இந்த வயதில் இப்படி?” என்று கேட்டான் ராஜேந்திரன்.

“யாருக்குத் தெரியும்? என் தாயார் என் அக்காளைக் கருவுற்றிருந்த போது ஏதோ ஒரு சாது சந்நியாசியை வழி பட்டாளாம். கண்ணில் பார்க்கின்ற உருவத்தின் குணங்கள் தானே கர்ப்பத்திலும் பதிகின்றன” என்றாள் பாமா. 

“அடி, பாமா” என்றொரு குரன் கிழே இருந்து  வந்தது. 

அக்கா சரசுதான் அழைக்கிறாள். வேறு யார்?

“என்னக்கா!” என்று மேலேயிருந்தே குரல் கொடுத்தாள் பாமா. 

“கொஞ்சம் இங்கே வா”

பாமா கீழே இறங்கிச் சென்றாள்.

“உன் கணவரின் ஒன்றுவிட்ட தம்பி கீழே உட்கார்ந்திருக்கிறார். இவரை மேலே போகச் சொல், இல்லை. அவரைக் கீழே வரச்சொல்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள் சரசு. 

நடுக்கூடத்தில்  உட்கார்ந்திருந்த வாலிபருக்கு வணக்கம் தெரிவித்தாள் பாமா. 

“திருமணத்தின்போது நான் உங்களைப் பார்க்கவில்லை” என்றாள். 

“இதிலொன்றும் ஆச்சரியமில்லை. நீங்கள்தான் தலையைக் குனிந்து கொண்டிருந்தீர்களே! நான் ராஜேந்திர அண்ணாவின் சிற்றப்பா மகன். என் பெயர் ஜெயசந்திரன், அவருக்குத் தம்பிதான். அவரைவிட இரண்டு வயது குறைந்தவன். நான் கொடைக்கானவில் மகாராஜா பாங்கில் வேலை பார்க்கிறேன் . இன்று புறப்படவேண்டும். அண்ணாவிடம் சொல்லிக்கொண்டு போக வந்தேன்” என்றான் அவன். 

“நல்லது. காப்பி சாப்பிடுங்கள். அவரை வரச் சொல்கிறேன்” என்று மாடிக்கு விரைந்தாள் பாமா.

”அடே! தம்பி வந்திருக்கிறானா? நானும் அவனும் ஒன்றாகவே வளர்ந்தோம். எனக்குச் சரியாகப் படிப்பு வராது, அவன் ரொம்ப சூட்டிகை. இன்றைக்கே அவன் ஏன் போக வேண்டும்; இரண்டு நாட்கள் இருந்துவிட்டுப் போகும்படி நான் சொல்கிறேன். டேய், ஜெயசந்திரா…” என்று மாடியிலிருந்தே குரல் கொடுத்தான் ராஜேந்திரன்.

“உ….என்ன இது? சுட்டில் கலைந்து கிடக்கிறது. இங்கே கூப்பிடுறீர்களே? நீங்களே கீழே போங்கள்” என்று தள்ளி விட்டாள் பாமா. 

“அடேயப்பா! மாற்றிய மாலைகூட இன்னும் காயவில்லை அதற்குள் அதிகாரமா?….” என்று சிரித்தபடி கீழே சென்றான் ராஜேந்திரன்.

தம்பி ஜெயசந்திரனுக்கு லீவு கிடையாதாம். உடனே புறப்படவேண்டும் என்று அவன் ஒற்றைக்காலில் நின்றான். 

“உங்கள் மானேஜரிடம் நான் சொல்லிக் கொள்கிறேன்” என்ற ராஜேந்திரன், “பாமா” என்று அழைத்தான்.

அந்த அன்னக்கொடியாள் மின்னல்போல் வந்து நின்றாள். “அண்ணியைப் பார்த்தாயா? அழகாக இருக்கிறாளா…?” என்று கேட்டான் ராஜேந்திரன்.

“அண்ணி நடந்து வரும்போது, சீதை மண்டபத்துக்கு வருப்போது கம்பன் வருணித்தானே, அப்படி வருணிக்க வேண்டும்போல் தோன்றிற்று அண்ணா!” என்றான் ஜெயசந்திரன்.

“தம்பிக்கு ஒரே இலக்கிய ஈடுபாடு. எல்லாம் உன் அக்கா மாதிரிதான்” என்றான் ராஜேந்திரன் பாமாவிடம். 

அவள் அருகிலே வந்த பாமா, “ஏன் உனக்குச் சொந்தமில்லையா? நீ கொண்டு போய்க் கொடுக்கக் கூடாதா?” என்று கேலி செய்தாள். 

“சரிதான்…இன்றைய ஆடவர்கள் கையைத் தொட்டுத்தான் வாங்குவார்கள். அது உனக்குத்தான் லாயக்கு” என்று சொல்லித் தட்டை அவளிடம் கொடுத்து விட்டாள் சரசு. 

ஜெயசந்திரன் இரண்டு நாள் இருந்து போகச் சம்மதித்துவிட்டான். 

மூலங்குடியின் ஒரு பழைமையான சிறு சக்தி கோவில் உண்டு. எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டிய மன்னன் ஒருவனின் தளபதியால் கட்டப்பட்டது என்பார்கள். 

ராஜேந்திரனும், ஜெயசந்திரனும் மூலங்குஷ கிராமத்தை வலம் வந்தார்கள். 

கிராமத்தில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்று கேட்பார்கள். ஆனால் பார்க்க வேண்டிய இடமே கிராமம்தான் என்னும்படி சில கிராமங்கள் அமைவது உண்டு. 

மூலங்குடியின் வடக்கிலும், கிழக்கிலும் இரண்டு பெரிய கண்மாய்கள், கண்மாய்க் கரைதோறும் வெள்ளாடை சந்நியாசிகளப் போல கொக்குக் கூட்டங்கள்.

யாரும் விருந்து வைக்காமல், நாங்களே வைத்திருக்கிறோம் என்பதுபோன, அவற்றைத் தேடிவரும் மீன்கள்.

தெற்கிலும், மேற்கிலும்  தென்னந்தோப்புகள், எப்புகளுக்கு நடுவே சின்னஞ்சிறிய குடிசைகள்.

மூலங்குடி கிராமத்தில் பெண்கள் மிகவும் அழகாகயிருப்பார்கள் கறுப்போ சிவப்போ கட்டான உடம்பிருக்கும். இடுப்பில் குடத்தை வைத்தால், அது சிம்மாசனத்தில் உட்காருவது போல் உட்கார்ந்து கொள்ளும்.

உடனே பாமா தன் கல்வித் திறமையை அவனுக்குக் காட்டத் தொடங்கினாள். 

“ஸ்ரீ ஆதிசங்கரரின் சௌந்தரிய லஹரி படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள். 

”சௌந்தரிய லஹரியிலிருந்து எந்த சுலோகத்தின் இருந்து என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று கேட்டான் ஜெயசந்திரன், 

“ஆதி சங்கரர் நூல்களில் எனக்கு சௌந்தரிய லஹறியும், கனகதாராவும் ரொம்பப் பிடிக்கும்.. கனகதாரா படிக்கத். தொடங்கியதிலிருந்துதான் வீட்டில் பணக் கஷ்டமே தீர்ந்தது என்று அப்பா சொல்லவார். தரிய லஹரி அம்பிகையைப் பற்றிய வருணனையானாலும் ஏதோ மானிட அம்பிகைகளை நம் மனதில் தோற்றுவிக்க வில்லையா?” என்று கேட்டாள் பாமா. 

“இந்தா பார் பாமா! உங்களுக்கெல்லாம் இதுதான் வேலையா? ஒரே சௌந்தரிய லஹரி, நாராயணீயம்….? வேறு ஏதாவது பேசுங்களேன்?” என்றான் ராஜேந்திரன்.

“இந்தப் பேச்சினால் உங்களுக்கு என்ன தடங்கல் ஏற்பட்டுவிட்டது?” என்று சொல்லிவிட்டு உதட்டைக்  கடித்துக் கொண்டாள் பாமா. 

“வேறு வேலை இல்லாதபோது இதைப் பற்றிப் பேசுங்கள், இப்போது அவன் சாப்பிட்டானா என்றாவது கேட்டியா?” என்றான் ராஜேந்திரன். 

“பாமா! இதைக் கொண்டு போய்க் கொடு” என்றொரு குரல் கேட்டது. 

கையிலே ஒரு பெரிய தட்டில் பலகாரங்களும் நடுவிலே கெட்டியான காபியும் வைத்திருந்தாள் சரசு. 

துல்லியமான கதர் பட்டாடையில் அவள் ஜகஜோதியாக ஜொலித்தாள். 

லேசாகச் சாய்ந்து அவர்கள் நடந்து வருவதைப் பார்த்தால், குட்டித் தென்னை மரங்கள் இளநீர் சுமந்து நடந்து வருவது போல் தோன்றும். 

ஊருக்கு நடுவில் ஒரு தெப்பக்குளம். தெப்பக்குளத்தின் வடகரையில் சிவன் கோயில், தென்திசையில் சக்தி கோவில். 

அந்தச் சிவன் கோயில் வீர பாண்டியன் கட்டியது. கிழக்குக் கரையில் ஓடாத தேர் ஒன்று வெகு காலமாக மூடப்பட்டுக் கிடக்கிறது. 

மேற்குக் கரை ஒரு மார்க்கெட், அங்கு கிடைக்காத பொருளே இல்லை. 

சக்தி கோவிலுக்குள்ளே நுழைந்தார்கள் ராஜேந்திரனும் ஜெயசந்திரனும். ராஜேந்திரனுக்குத் தந்துவ விசாரணைகளில் அவ்வளவு உற்சாகமில்லையே தவிர, கோலிலுக்குப் போவதை அவன் வெறுப்பதில்லை. சொல்லப் போனால் அதில் விருப்பமும் உண்டு. 

நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது என்பதை மரணம் நிரூபித்துக்கொண்டே இருக்கிறதே! 

இரண்டு பேரும் சாமி கும்பிட்டார்கள். கைநிறையக் குங்குமமும் வாங்கிக் கொண்டார்கள். 

பாமாவுக்குக் கொஞ்சம் என்றால் சரசுவுக்கு அதிகம் வாங்கிக் கொண்டார்கள். 

“தாயே, பெரிய நாயகி! சரசுவுக்கு சீக்கிரம் விவாகம் ஆக வேண்டும்?” என்று ராஜேந்திரன் வேண்டிக் கொண்டான். 

ஒரு குடும்பத்தில் உறவு ஏற்பட்டுவிட்டால், அந்தக் குடும்பம் முழுவதிலுமே சிலருக்குப் பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. 

ராஜேந்திரனின் வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பது போல, அம்மனின் கழுத்திலிருந்த புஷ்பம் ஒன்று தீபாராதனைத் தட்டில் விழுந்தது. 

”என்ன அம்பாள் வரம் கொடுத்தாளா?” என்றபடி வீட்டிலே எதிரில் வந்தாள் பாமா. 

“தம்பியின் சௌந்தரிய லஹரியில் அம்பிகை மூழ்கிப் போய் விட்டாள்” என்று சொன்னான் ராஜேந்திரன். 

”அப்படியென்றால் நாம் தேன் நிலவுக்குக் கொடைக்கானலுக்கே போவோம். மத்தியானமெல்லாம் அவரைச் சௌந்தரிய லஹரி பாடச்சொல்லிக் கேட்போம்!” என்றாள் பாமா.

“அதென்ன மந்தியானமெல்லாம்?” என்று இழுத்தான் ராஜேந்திரன். 

“ஐயோ! கருமம்! கருமம்! ஏதோ ஒரு வார்த்தை தப்பி விட்டது?” என்று தலையைக் குனிந்துகொண்டாள் பாமா. 

வேறு பக்கம் திரும்பிக் கொண்டான் ஜெயசந்திரன். 

“அண்ணா! கொடைக்கானலுக்கு வாங்கண்ணா! புதுப்பட்டி ஜமீன்தாரின் பங்களாச்சாவி என் கையில்தான் இருக்கிறது. அற்புதமான பங்களா. அருமையான தோட்டம், பத்து நாட்கள் நிம்மதியாகத் தங்கி விட்டு வரலாம்?” என்றான் ஜெயசந்திரன். 

”சரி, புறப்படுவோம். அக்காளையும் அழைத்துச்செல்வோம்” என்று மீண்டும் சொன்னாள் பாமா. 

3. ரதிபதிப்ரியா

சரசுவைக் கேட்டதற்கு “கொடைக்கானலுக்கு வந்து நானென்ன செய்யப் போகிறேன்? எனக்கு குளிர்ச்சியான இடம் எதற்கு? நீங்கள் தேன் நிலவுக்குப் போகிறீர்கள். என்னையும் ஏன் மடியில் கட்டிக்கொண்டு போகவேண்டும்? சௌக்கியமாகப் போய் வாருங்கள்” என்று அமைதியாகச் சொல்லி விட்டாள். 

“இல்லை அக்கா, கொடைக்கானலைச் சுற்றிலும் பழங்காலக் கோவில்கள் இருக்கின்றனவாம். யார் யாரோ குறுநில மன்னர்கள் கட்டியதாம். மலை ஜாதியினர் வணங்கும் மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்ததாம். நீயும் வந்தால் உனக்கும் பொழுது நன்றாகப் போகும்” என்றாள் பாமா. 

“இல்லாவிட்டால் என்ன, காரை உங்கள் கையில் கொடுத்து விடுகிறோம். மதுரை, திண்டுக்கல் எல்லாமே பக்கம்தான். கன்னியாகுமரி வரையிலே ஒரு ரவுண்டு நீங்கள் போய் வாருங்களேன்?” என்றான் ராஜேந்திரன்.

மூத்த மைத்துனி பேசுவாளா? முகத்தைத் திருப்பிக் கொண்டாள். 

ஆனாலும் அவளுக்கு கொடைக்கானல் போவதில் சபலம் தட்டி விட்டது. 

கோவில்களாமே? போய்ப் பார்காமல் இருக்கலாமா? இந்தியாவில் எத்தனை கோவில்கள் உண்டோ அத்தனையிலும் தன் காலடி பட்டாக வேண்டுமே!….. 

”கிருஷ்ணா!….கிருஷ்ணா! சரி நானும் உங்களோடு வருகிறேன்” என்று சொல்லி விட்டாள் சரசு.

ராஜேந்திரனுக்கு மிகவும் மகிழ்ச்சி. அவனுக்கு எப்போதும் சுற்றம், சொந்தம் எல்லாம் பக்கத்தில் இருந்தால்தான் சந்தோஷம்.

பந்த பாசங்களைக் கூட வைத்துக் கொண்டு கலகலப்பாகப் பேசிக் கொண்டிருப்பதில் உள்ள இன்பம் வேறு எதில் இருக்கிறது? 

“அண்ணியும் வருகிறார்களாம்!” என்று ஜெயாந்திரனிடம் குஷியாகச் சொன்னான் ராஜேந்திரன்.

பாமாவும் ராஜேந்திரனும் முட்டை முடிச்சுகளைக் கட்டும் போது, வேட்டி சேலைகளைத்தான் அதிகம் கவனித்து எடுத்தார்கள். 

ஆனால் சரசுவோ, பகவத் கீதை. கிருஷ்ண கானம் இசைத்தட்டு போன்றவற்றை எடுத்துக் கொண்டாள். 

தமிழ் நாட்டுக்குக் கிடைத்த வரப்பிரசாதம், அதன் மலைகள் – கொடைக்கானல், குற்றாலம். நீலகிரி, ஏற்காடு – இறைவன் இயற்கையை இங்கெல்லாம் விளையாட விட்டிருக்கிறான். 

மேடுகளும், சரிவுகளும், அவற்றின் மீது விளையாடும் மேகங்களும் காணக் காண மனிதன் பிறவி எடுத்ததே பெருமை என்றுதான் தோன்றும். 

ராபர்ட் பிராஸ்ட்கூட தன் கவிதையில், ‘காடுகள் வளர்ந்து அழகாக இருக்கின்றன; ஆனால் அவற்றை ரசிப்பதற்கு நேரமில்லை’ என்று பெருமூச்சு விட்டாரே!

நேருஜி கவலை வரும்போதெல்லாம் அமைதிக்காக மலையைத் தேடி ஓடுவாரே! 

காட்டு மனிதன்கூட, மலையைக் கண்டால் கவிதை பாட மாட்டானா? 

அந்தக் காற்று உடம்பிலே படும்போது. உலகமே மறந்து போகிறது. 

எத்தனை கோடி சொத்து இருந்தாலென்ன, வாழ்க்கையை ஒழுங்காக அனுபவிக்கத் தெரிந்தவன், வருஷத்தில் மூன்று மாதம் – ஏப்ரல், மே, ஜூன் – மலை வாசம் செய்தே ஆக வேண்டும். 

கொடைக்கானல் மலையைப் பார்த்த போது காதலர்களுக்காக இறைவன் விரித்த ரத்தினக் கம்பளம் போலத் தான் பாமாவுக்கும் ராஜேந்திரனுக்கும் தோன்றிற்று. 

ஆனால் சரசுவுக்கோ. மனிதன் தனது சிருஷ்டியைப் பார்த்துத் திகைக்க வேண்டும் என்பதற்காகவே தெய்வம் மலைகளைப் படைத்திருப்பது போலத் தோன்றிற்று. அதன் பொரே கோடைக்கானல்.

கோடைகாலத்துக் கானலை மறப்பதற்கு அதுதானே இடம்! 

அங்கே புதுப்பட்டி ஜமீன்தாரின் பங்களா, அரை ஏக்கர் நிலத்தை அடைத்துக் கொண்டிருந்தது. 

வழுவழுப்பான சுவர்கள். ஆனால் தரை முழுவதும். தேக்கு மரங்களால் ஆனது. கதகதப்பாக இருக்கும் என்றே குளிர்ப்பிரதேசங்களில் தரையில் மரம் பதிந்திருந்தார்கள். 

பழைய ஜமீன்தார் விளையாட்டுக்காரர். புது ஜமீன்தார் பூஜை செய்வார் போலிருக்கிறது. அங்கே ஒரு பூஜை அறையும் இருந்தது. போதுமே சரசுவுக்கு. 

ஆனால் மாடி – யாரோ ஒரு ஜோடி குத்தகைக்கு எடுத்தது போல் தோன்றிற்று. அவர்கள் போகவும் வரவும் வெளியிலேயே படிக்கட்டு இருந்தது. 

யார் இருந்தால் நமக்கென்ன என்று பாமாவும் ராஜேந்திரனும் ஓர் அறையில் தங்கிவிட்டார்கள்! 

பூஜை அறைக்குப் பக்கத்திலேயே தங்கிவிட்டாள் சரசு. அங்கிருந்தபடியே அவள் பாமாவை அழைத்து அவள் காதில் ஏதோ ரகசியம் சொன்னாள். வேறொன்றுமில்லை. ‘பகல் நேரத்தில் உடலுறவு கொள்வது இந்து சாஸ்திரங்களுக்கு விரோதம்’ என்பதே அது. 

சரசு என்ன கிழவியாகிவிட்டாளா? அனுபவித்து முடித்துவிட்டாளா? இத்தகைய உபதேசங்களைச் செய்ய அவளுக்கு எப்படித் தோன்றிற்று. 

மனோபாவத்தில் எல்லாம் கடந்த நிலையை ஒருவர் எட்டிவிட்டால் அத்தனையும் அனுபவித்துவிட்டது போன்ற ஓர் உணர்வு வரும். 

சரசுவின் ஞான உதயம் எல்லாவற்றையும் கடந்த நிலை தான், அவள் கண்ணெதிரே ஒரு கணவனும் மனைவியும் நிர்வாணமாகக் கட்டிப் பிடித்து விளையாடினால் கூட, அவளுக்குச் காம உணர்வு வராது. 

அந்த பூஜை அறையில் ஏராளமான விக்கிரகங்களை அவள் பார்த்தாள். அங்கே கண்ணனையும் கண்டாள்; கந்தனையும் கண்டாள். 

சைவமும் வைணவமும் ஒன்றுக்கொன்று விரோதமான மார்க்கங்களல்ல. இந்து மதம் என்பது இரண்டு வழிப்பாதை. அதைப் புரிந்து கொள்ளாத சில வெறியர்கள் இரண்டையும் மோதவிட்டுப் பார்க்கிறார்கள். 

குமரனும் சுவாமிதான், குமாரசுவாமி. கிருஷ்ணனும் சுவாமிதான். கிருஷ்ணசுவாமி.

சரசு நிம்மதியாகப் பூஜை நடத்தினாள், பாமாவும், ராஜேந்திரனும் குளிர்காலத்தை அனுபவிக்கத் தொடங்கினார்கள். 

ஜெயச்சந்திரன் வேறு இடத்தில் தங்கி இருந்ததால் நிரந்தரமான வாசஸ்தலத்துக்கு அவன் போய் விட்டான். 

மாலை ஆறு மணி சுமாருக்கு மாடி கலகலப்பாயிற்று. ஏராளமான பேர் அங்கே இருப்பதுபோல் தோன்றிற்று. நாகரிகமற்ற சொற்கள் பரிமாறிக்கொள்ளப்படுவது சரசுவுக்கும் கேட்டது. 

அவள், ‘கிருஷ்ணர் கிருஷ்ண!’ என்று காதுகளைப் பொத்திக் கொண்டாள். 

ராஜேந்திரனும் பாமாவும் நடு ஹாலுக்கு வந்து நின்றார்கள் 

”யார் அந்த சனியன்கள், மாடியில் இருக்கின்றன?” என்று கேட்டாள் சரசு.

“யாரோ கணவன் மனைவி மாதிரிதான் தெரிந்தது. ஆனால் ஒரே கூத்தும் கொண்டாட்டமுமாக இருக்கிறதே?” என்றான் ராஜேந்திரன். 

“விவஸ்தை கெட்ட சனியன்கள்! ‘அந்தரங்கம் புனிதமானது’ என்ற நாகரிகம்கூட இல்லாமலா போயிற்று? சேச்சே! என்னென்ன வார்த்தைகள்? காலையில் நாம் வேறெங்காவது போய்விடுவோம்!” என்றாள் சரசு. 

“நாம் ஏன் போசு வேண்டும்? நான் பண்ணுகிற கலாட்டாவில் அவர்களைப் போக வைக்கிறேன். கேவலமான நாய்கள். ‘நடத்தையில் நாகரிகம் இல்லை என்றால் பிறப்பையே சந்தேகப்படு’ என்றானே வள்ளுவன், அது சரியாகப் போய்விட்டது” என்றான் ராஜேந்திரன்.

தங்கை கணவனின் பண்பாட்டை எண்ணிப் பூரித்தாள் சரசு. 

அவர்கள் தங்கள் அறைக்குள்ளே போய்த் தாள் போட்டுக் கொண்டார்கள். 

மேலே கொண்டாட்டம் தொடர்ந்தது. “ஏய்! ரவிக்கையை அவிழ்த்துக் கொள். ரவிக்கையைப் போட்டுக் கொண்டு என்ன நடனம்?” 

“ஐயோ! எல்லோரும் பார்க்கிறார்கள்.”

”ஐயையோ! கடிக்காதீர்கள்….கடிக்காதீர்கள்!” – கொச்சை மொழியிலேயே கும்மாளம் தொடர்ந்தது.

சரசு மணியை ஓங்கி அடித்தபடி அம்பிகையின் சிலையின் முன்னால் உட்கார்ந்தாள். 

அழகை ஆராதிக்கலாம், வருணிக்கலாம். அந்த ஆராதனையும் வருணனையும் அம்பிகையைப் பற்றியதாக இருந்தால் எவ்வளவு சுகமாக இருக்கிறது! 

சரசு, சௌந்தரிய லஹரியை எடுத்தாள். ஏதோ ஒரு பக்கத்தைப் புரட்டினாள். படிக்கத் தொடங்கினாள்.

‘ஜபோ ஜல்ப; சில்பம் சகலம் அபிமுத்ரா விரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமாணாம் அசனாதி ஆஹுதி விதி! 
பர்ணாமா: ஸம்வேசா: 
ஸுசுமலம் ஆத்மார்ப்பணதசா; 
ஸபர்வா பரியாயஸ் தவ பவது யன்மே விலஸிதம்’

என்னுடைய ஒவ்வொரு செயலும் உனக்குச் செய்யப்படும் பூசனை ஆகும். 

நான் வாய் திறந்து உளறுவதெல்லாம் உனக்கு மந்திர ஜப மாகும். 

என்னுடைய அங்க அசைவுகள் ஒவ்வொன்றும் உனக்குச் செய்யப்படும் வணக்கம். 

நான் நடப்பது எவ்வாம் உன்னைச் சுற்றி வளம் வந்து செய்யப்படும் வழிபாடாகும். 

நான் பசி தீர்க்கப் புசிக்கும் உணவும் நீரும் உனக் களிக்கப்படும் நைவேத்தியமாக ஏற்றுக்கொள்வாயாக. 

நான் உறங்கும்போதும், உறக்கத்தில் புரளும்போதும், செய்கின்ற உடல் அசைவுகள் அனைத்தும் உன் முன்னர் தண்டனிட்டுச் செய்கின்ற சர்வாங்க நமஸ்காரம் ஆகட்டும். 

நான் என்னுடைய சௌகரியத்துக்காகச் செய்கின்ற ஒவ்வொரு வேலையும் என்னை உனக்கு ஆத்மார்ப் பணமாகச் செய்யப்படும் வேலையாக ஏற்றுக்கொள் அம்மா! 

சுதாம் அபி ஆஸ்வாத்ய
ப்ரதிபய ஐரா மருத்யு ஹரிணீம் 
விபத்யந்தே விச்வே விதிச தாமகாத்யா திவிஷத:
கராலம் யத் க்ஷ்வேலம் சுபலிதவது; கால்கலனா
நசம்போஸ் தன் மூலம் தவ ஜனனி தாடங்க மஹிமா

அன்னையே! அமுதம் உண்டவர்களை முதுமையும் மரணமும் அண்டாது என்று கூறப்படுகிறது. ஆனால் அத்தகைய அமுதத்தை உண்டவர்களான பிரம்மன் இந்திரன் போன்றவர்கள். அமரர்கள் உலகில் வாழ்ந்தாலும் கடைசியில் அழிகின்றனர். 

ஆனால் சாம்பசிவன் அமுதை உண்ணவில்லை, ஆலகால விஷத்தையே உண்டார். அப்படியிருக்க பிரளயத்தின் போது கூட அவருக்கு அழிவில்லை. 

நிரந்தரமாக எவ்விதத் தொல்லையும் இன்றி இருக்கிறார். 

அதற்குக் காரணம் சுமங்கலியான நீ உன் காதுகளில் அணிந்திருக்கும் தாடங்கத்தின் மகிமைதான்?

சரசு படித்துக் கொண்டே இருந்தாள். 

நள்ளிரவில் பலர் விடைபெறும் சொற்களும், தடா லென்று விழும் சத்தமும் கேட்டன. 

ஒருவன் தடந்தெரியாமல் உள்ளே இருக்கும் படிவழியே இறங்கி சரசுவின் அறைக்குள்ளேயே வந்து, அவளது கட்டிலிலேயே படுத்துவிட்டான்!

– தொடரும்…

– 1978 – 1979, தினமணி கதிர் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

– சரசுவின் சௌந்தர்ய லஹரி, முதற்பதிப்பு: பிப்ரவரி 1980, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *