சமுதாயம்
கதையாசிரியர்: கே.ஆர்.டேவிட்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2026
பார்வையிட்டோர்: 278
(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பருத்தித்துறை கடற்கரை வீதி வழியே நடந்த சின்னம்மா சல்லிறோட் என்றழைக்கப்படும் 2ம் குறுக்குத் தெருவில் இறங்கி ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றாள். தொடர்ச்சியான வறுமையிலும் துயரத்திலும் எலும்புந்தோலுமாகிவிட்ட அவளால் அவளது வயிற்றுத் தோற்புரையில் வளர்ந்து பூரணத்துவம் பெற்று விட்ட இன்னொரு சிறு உயிரின் பாரத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
சின்னம்மா நிறைமாதக் கர்ப்பிணி
அவளுக்கு இது புதிய அனுபவமல்ல. இதற்குமுன் இரண்டு தரம் கருத்தரித்து பிரசவித்திருக்கிறாள். அப்போதெல்லாம் சின்னம்மா ஓரளவுக்கு வலுவுள்ளவளாக இருந்தாள்.
நேற்றுவரை கூட சாதாரணமாக இருந்த அந்தச்சுமை இன்று மட்டும் அவளுக்குப் பெருஞ்சுமையாய் கனக்கிறது. உடல் பலவீனம் இந்தச் சுமைக்கு மெருகூட்டுகிறது. இன்று சின்னம்மா கருத்தரித்து முன்றாவது நாள். இயற்கை நியதிப்படி பூரணத்துவம் பெற்றுவிட்ட ஓர் உயிர், உடல் வாழ்விலிருந்து தன்னை விடு வித்துக் கொண்டு உலகத்தோடு தன்னை இணைத்துக் கொள்ள நடத்தும் போராட்ட ஆரம்பக் கட்டம்.
சின்னம்மாவிற்கு இலேசான வயிற்றுக்குத்து. இது கர்ப் பிணியான பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் ‘நோக்காட்டுக் குத்து’ என்பதை அவள் அறியாமலில்லை.
சிவந்த அவளது முகம் வெளிறிப் போய்க் கிடக்கிறது. வெளிறிய அவளது முகத்தில் துளிர்த்து நின்ற வியர்வை முத்துக்கள் தாமரை இலையில் தண்ணீர் உருள்வது போல் பட்டும் படாமலும் வழிந்து கொண்டிருக்கிறது. நடந்து வந்த சின்னம்மா நடக்க முடியாமல் றோட்டுக் கரையில் நின்ற வண்டிச் சில்லிற் பிடித்தபடி நிற்கிறாள். தண்ணீருக்குள் அமிழ்ந்து நிமிர்பவனைப் போல் மூச்சு திக்குத்திணறி வெளிவருகிறது.
“டேய்… குமாரசாமி!” அவளோடு கூடவந்த குமார சாமியை அழைக்கிறாள்.
‘என்ன… என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய் – அவனது கேள்வியில் பாசமும், தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வேதனையும் இந்த இரு நிலைகளாலும் ஏற்பட்ட விரக்தி உணர்வும் இழையோடிப்போய் இருக்கின்றன.
‘என்னால் எனி நடக்கேலாது’
‘அப்ப என்ன செய்யப் போறாய்?’
வண்டிச் சில்லில் பிடித்தபடி நின்றவள் இரு கைகளாலும் அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு வண்டிச் சில்லோடு சாய்ந்து அமர்கிறாள்.
தெரு ஓரத்தில் ஓர் உயிரை தன் உடல் தொடர்பிலிருந்து நீக்கிவிட பலவீனமான இன்னொரு பெண்ணுயிர் படும் வேதனை. பிரசவ வேதனை.
குமாரசாமியால் எதுவும் செய்ய முடியவில்லை. முச்சை கயிறு அறுந்த காத்தாடி போல் மனம் போன பக்கமெல்லாம் சிந் திக்கிறான். இந்த வேதனையில் பங்கு கொள்ள அவனால் முடியுமா?, அல்லது ஆறுதல் கூறித் தணிக்கக் கூடிய வேதனையா?.
போராடித் தீர்க்கப்பட வேண்டிய வேதனை. அனுபவித்துத் தான் தீரவேண்டும். இது இயற்கை. இயற்கை இந்தப் பிரசவ நிகழ்ச் சியில் மட்டும் பாரபட்சமின்றி எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி வேதனையைக் கொடுத்து விட்டது.
‘பிரசவம் பெண்களுக்கு மறுபிறப்பு’ என்று கூறுவார்கள். சின்னம்மாவின் மறுபிறப்பு வீதி ஓரத்தில் தானா?.
‘டேய் குமாரசாமி…!’ அவனைத்தான் அவளால் அழைக்க முடியும். அழைக்கிறாள். குமாரசாமியால் எதுவுமே செய்ய முடிய வில்லை. அங்குமிங்கும் பார்க்கிறான். மத்தியான நேரம் வீதியல் எவருமே இல்லை.
சிறிது நேரத்தின்பின் பக்கத்திலிருந்த தகரக்கதவைத் தட்டுகிறான். ஒருவர் கதவைத் திறக்கிறார். கறுத்த, மிடுக்கான பார்வை, கிட்டத்தட்ட நாற்பது வயதிருக்கும்.
அவர் முதலியார் சின்னத்துரை. முதலியார் கதவைத் திறக்கிறார்.
‘என்ன?’
‘ஐயா…… இஞ்சை பாருங்கோ நிறைமாதப் புள்ளத்தாச்சி, வயித்துக்கை குத்துதாம், ஐயா ஒரு கொஞ்ச இடம்..’ அவனது உள்ளத்தில் நிறைந்து போயிருந்த வேதனைக் குவியில் ஒவ் வொன்றாய் வெடித்துப் பல உருப்பெற்று இதயத்தில் தளம்ப, அவனது கண்களில் கண்ணீர் பனிக்கிறது அவன் தான் ஓர் ஆண் என்பதைக் கூட மறந்து விடுகிறான். முதலியாரின் கழுகுப் பார்வை சின்னம்மாவைச் சுற்றி வட்டமிடுகிறது. கடுமையாக யோசிக்கிறார்.
‘ஐயா… இந்தத் தெருவீதியிலை…. எப்படியையா? சின்னம் மாவைத் தெரு ஓரத்தில் பார்வைப் பொருளாக்கி விடக்கூடாதென்று துடிப்பவனுக்கு “சரி வா” முதலியார் விடை கொடுத்துவிட்டு நடக்கிறார். குமாரசாமி சின்னம்மாவை தாங்கியபடி அவரைப் பின் தொடருகிறான். வீட்டின் பின் புறத்தில் பாவனையற்றுக் கிடந்த அறை கொடுக்கப்படுகிறது. அவளை அறைக்குள் விட்டபின் குமாரசாமி வெளியே வருகிறான்.
‘என்ன பார்க்கிறாய்?’
‘ஒரு சாக்கு… ஏதாவது கிடைச்சால் நல்லது…’ முதலியார் குரல் கொடுக்கிறார். வேலைக்காரன் ஒரு சாக்கை கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போகின்றான். குமாரசாமி சாக்கை விரித்து அதில் சின்னம்மாவைக் கிடத்திவிட்டு வெளியே வந்து தென்னை மர நிழலில் அமர்கிறான். சின்னம்மாவின் முனகல் ஒலி கேட்டுக் கொண்டிருக்கின்றது.
முதலியார் போய்விட வேலைக்காரன் கையில் ஒரு போத்தலுடன் வருகிறான்.
‘இந்தா இதைக் கொண்டு போய் குடு’ – கையிலிருந்த தேநீர்ப் போத்தலை நீட்டுகிறான்.
“ஆர் முதலியாரே தந்தவர்?”
“சீ…… அவருக்குத் தெரியாது நான் தான் போட்டுக் கொண்டு வந்தனான்”
“நீ…… ஆர்?”
“நான் வேலைக்காரன்”
குமாரசாமி கண்வெட்டாது அவனையே பார்க்கிறான். அந்த ஒரு சில நிமிட நேரத்தில் வாயால் கூறி முடிக்க முடியாத வார்த் தைகளை கண்ணால் கூறி விட்டான். வேலைக்காரன். குமாரசாமியின் முதுகைத் தட்டி உற்சாகம் கொடுக்கிறான். வேலைக்காரன் குமாரசாமியை புரிந்து கொண்ட உணர்வு அவனது முகத்தில் நிழலாடுகின்றது.
குமாரசாமியின் பார்வையில் கனிவு இளையோட உதடுகள் பிரிந்தும் பிரியாத நிலையில் வெறும் மொட்டான சிரிப்பொன்றை சிரிக்கிறான். பதிலுக்கு வேலைக்காரனும் சிரிக்கிறான். மலர்ந்த சிரிப்பு! தன்னால் முடிந்ததைச் செய்து விட்டோமே என்ற நிறைவு! “இஞ்சை எதுக்கும் யோசிக்காதை… ஏதாலும் வேணுமெண்டால் பிறகு சொல்லு… நான் போறன்” – திரும்பி நாலோ ஐந்தடி எடுத்து வைத்தவன் ஏதோ எண்ணத்தில் திரும்பி வருகிறான்.
“அண்ணை வெட்கப்படாதை நானும் உன்ரை ஆள்தான்”
சர்வ சாதாரணமாக கூறிவிட்டு ஓடுகிறான்.
சின்னம்மா குமாரசாமி எல்லோரும் அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். பிறந்த இடம், அறிமுகம் என்ற செல்வாக்கில் சின்னம்மாவின் குடும்பம் நகர்ந்து கொண்டிருந்தது.
‘சன்லைற்’ பெட்டியால் ஆக்கப்பட்ட ஒரு குடிசை. இது தான் அவர்கள் உறைவிடம். கிட்டத்தட்ட பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு இலங்கையில் இனக்கலவரம் தலை தூக்கி நின் றது. இந்தச் சூழ்நிலையில் அனுராதபுரத்திலிருந்த சின்னம்மாவின் இரு பிள்ளைகளும் குடிசையும் தீக்கிரையாகிவிட தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கால் போன போக்கில் நடந்து பருத்தித் துறைக்கு வந்து விட்டனர். அங்கிருந்து வரும் போது சின்னம்மாவும் அவள் கணவன் சுக்கிரியும், சுக்கிரியின் சகோதரன் குமாரசாமியுமே வந்து சேர்ந்தனர்.
அநாதைகளாக வந்து சேர்ந்த சின்னம்மாவின் குடும் பத்துக்கு நிரந்தர அனாதைகளாக வாழ்ந்துவரும் சேரி மக்கள் புகலிடம் கொடுத்தனர்.
இங்கு ஒரு ‘சன்லைற்’ பெட்டிக்குடிசை! ஒரு வேளைச் சாப்பாட்டு வாழ்க்கை திறம்பட நடந்து கொண்டிருந்தது.
ஆறு மாதங்களுக்கு முன் பருத்தித்துறை பட்டினசபைத் தேர்தல் பெரும் புயலாய் வந்து வென்றவர் போக தோற்றவர் தனது ஆத்திரத்தை எல்லாம் சேரிமக்கள் மீது சுமத்தி அவர்களை சேரியிலிருந்து வெளியேற்றி விட்டார்.
சின்னம்மா புருஷனையும் பறி கொடுத்து வயிற்றுப் பிள்ளையோடு குமாரசாமியையும் கூட்டிக் கொண்டு புறப்பட்டாள். இந்த நாலு மாதகாலமும் எப்படியோ ‘மாக்கற்றை’ வலம் வந்து தீர்த்து விட்டனர்.
இப்போது முழு ஆதாரமும் குமாரசாமிதான்.
“ஐயோ… அம்மா… டேய்” சின்னம்மாவின் அவலக்குரல்.
“என்ன?”
“வாடா… வா” குமாரசாமிக்கும் தனக்குமிடையிலுள்ள உறவை மறந்து விட்டாள்!
“….”
“டேய்…. வாடா”
குமாரசாமியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிய முதலி யாரின் வீட்டை நோக்கி நடக்கிறான். முதலியாரின் மனைவியிடம் உதவி கோரி போகிறான்.
“என்னண்ணை” – வாசலில் நின்ற வேலைக்காரன் கேட்கிறான்.
“அதுகின்ரை வேதனையை பார்க்கேலாதாம்…. நான் எப்பிடி…. அதுதான் முதலியாற்றை மனைவி…”
“நீ…. என்னண்ணை கதைக்கிறாய்?… நீயும் நானும் வாழ்ற உலகம் வேறை… அவங்கள் வாழும் உலகம் வேறு….
“நீ வாழும் உலகத்தில் யாராவது இருந்தால் பார்…. எங்கடை உலகத்துக்கு அவை வராயினம்…..!”
“நான் எப்பிடித் தம்பி”
“நீ என்னண்ணை புரியாத ஆளாக இருக்கிறாய். எங்கடை பிறப்பிலை என்னண்ணை கிடக்கு…. அதிலையும் பெண்ணாய் பிறந்தால்… அண்ணை சின்னம்மாவைப் பற்றி யோசிக்க நீயாவது இருக்கிறாய்… என்னைப் பாரண்ணை என்ரை கை ஓஞ்சு போனால்… எனக்கார் இருக்கினம்!….. நான் ஒண்டு சொல்றன் “உயிர் இருக்கிற வரையிலை வாழ்க்கை தான்? இதுதான் என்ரை கொள்கை… சும்மா போ…”
குமாரசாமி இரண்டுங் கெட்ட நிலையில் நிற்கிறான்.
“என்னண்ணை யோசிக்கிறியா?… அண்ணை மனச்சாட்சி யோடை வாழ பணக்காரராலேதான் முடியும். அவங்கள் அதை மறந் திடுகிறாங்கள்… எங்களைப் போல ஆக்கள் கடைசி நேரத்திலும் மனச்சாட்சியைப் பற்றி யோசிக்கிறாக்கள். ஆனால் அவர்களால் மனச்சாட்சியோடு வாழ முடிவதில்லை…. எங்களைப் போல ஆக்கள் மனச்சாட்சிக்குப் பயந்து வாழ முடியாதண்ணை…..”
“டேய்….. குமாரசாமி” – சின்னம்மா குரல் கொடுக்கிறாள்.
கடலில் தத்தளித்தவன் கரை சேர்ந்தது போன்ற பிரமையில் உடலெல்லாம் வியர்த்துக் கிழிந்த நைலோன் சேட் உடலோடு ஒட்டிப்போய் கிடக்கிறது. ஈரமாகிவிட்ட சேட்டைக் கழட்டி தோளில் போட்டுக் கொண்டு சின்னம்மா படுத்திருந்த அறையை நோக்கி நடக்கிறான்.
அவனது பாதங்கள் இப்போது பூமியில் தெளிவாகப் பதிகின்றன.
குமாரசாமி மானவெட்கங்களை மறந்தவனாய் – சின்னம்மா கிடந்த அறைக்குள் நுழைகிறான்.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்தின் பின் சின்னம்மாவின் தொடர்ச்சியான அவலக் குரல் தணிந்து – வெறும் முனகல் ஒலிக்கு நடுவே இடையிடையே பூமியைத் தழுவிய புத்தம்புது அரும்பின் அழுகைக்குரல் – பத்துமாத இருள் வாழ்வில் வளர்ந்து பூரணத்துவம் பெற்ற சிசுவின் முதற் குரல்…
ஆண் குழந்தை
தனது நைலோன் சேட்டில் குழந்தையை வளர்த்தி இரு கைகளாலும் ஏந்தியபடி வெளி வருகிறான் குமாரசாமி ‘பிறந்த வடு’ மாறாத குழந்தை நைலோன் சேட்டுக்குள் புதைந்து கிடக்கின்றது.
மறு நாட்காலை வேலைக்காரனின் உதவியோடு அறையைச் சுத்திகரித்து விட்டு புறப்பட ஆயத்தமாகிறான்.
“குமாரசாமி புறப்பட்டாச்சா?”
“ஓமய்யா”
“என்ன குழந்தை நோஞ்சானாய் கிடக்கு ஏதாவது பாற்பேணி வாங்கிப் பருக்கு”
“தினசரி பத்து பேற்றை கையைப் புடிச்சு சாத்திரம் சொன் னால் தான் எங்களுக்கே ஒரு வேளைச் சாப்பாடு…. இதுக்கு விதி இருந்தால் வளரட்டும். இதின்ரை விதியை எங்களாலை மாத்த முடியுமா?….. மாப்பேணி வாங்கிற நிலையிலை நானிருந்தால் வெக்கத்தையும். மனச்சாட்சியையும் விட்டு சின்னம்மாவிற்கு நான் ‘மருத்துவிச்சியாய்” நிண்டிருப்பனா?’ – குமாரசாமி சின்னம் மாவைப் பார்க்கிறான். நிமிர்ந்த தலை குனியாமல் அவனையே பார்க்கிறாள். அவளது பார்வையில் கருணையின் ஒளி மின்னி மறைகிறது.
“பச்சை உடம்புக்காரி நடக்க முடியுமா?”- முதலியாரின் மனைவி தன் அனுபவத்தை கட்டவிழ்க்கிறார்.
“நடக்க வேண்டிய நிர்ப்பந்தம்… நடந்துதான் தீர வேண்டும்” “இந்தப் பச்சைக் குழந்தையை வைச்சுக்கொண்டு எனி எங்கை தங்குவியள்?”
“நாங்களே பிறந்தது தெரு ஓரத்திலை தான்… எப்பிடியோ வளந்திட்டம் – எங்களை மாதிரி இதுவும் வளராமலா போகும்”
“புள்ளையின்ரை நாள் நட்சத்திரத்தைப் பாத்தியா, என்ன சொல்லுது?” நக்கலாகக் கேட்கிறார் முதலியார்.
“இந்தக் குழந்தையின்ரை தாயின் உயிரையே நான் கையிலேந்திக் கொண்டு திரியும் போது குழந்தையின் தலை யெழுத்தை பாக்க வேண்டிய அவசியமில்லை.”
“சரி வாறம்”
“வாருங்கோ”
“என்னண்ணை கவலைப்படுகிறாய்… வாழையடி வாழை யாய் ஒரு வட்டத்துக்கை நிண்டு கண்கட்டி விளையாட்டு நடத்திறம் – உன்னைப் பற்றி எனக்குத் தெரியுமண்ணை… எத்தனை குழந்தைகளையும் சீரோடு வளர்க்கக்கூடியவர்கள் இருக்கிற இந்த நாட்டிலை ஒரே ஒரு பிள்ளையின் உயிரைக் காப்பாற்ற முடியாத ஆக்களும் இருக்கினம்…”
“கனகதை ஏனண்ணை. சின்னம்மா நேற்று வீதி ஓரத்திலை புள்ளைப் பெத்து தாயும் புள்ளையும் வெறும் மணற் பரப்பிலை கிடந்து பலருக்கு பார்வைப் பொருளாய் இருந்திருந்தால் கூட ஆச்சரியமில்லை…. ஏன் தெரியுமா?….. இன்றைய சமூக அமைப்பு இதுதான் அண்ணை!” சர்வ சாதாரணமாக வேலைக்காரன் கூறுகிறான்.
“என்ன தம்பி புதுமையாய் கதைக்கிறாய்?”
“இதொண்டும் புதுமை இல்லையண்ணை… போகப்போக உனக்கு விளங்கும்”
“சரி வாறம்”
குமாரசாமி விடைபெற்றுக் கொண்டு புறப்படுகிறான்
அவன் மௌனமாக நடந்து கொண்டிருக்கிறான்.
அவனுக்கு இந்த அனுபவம் புதுமை!
சின்னம்மா அவனைப் பின் தொடருகிறாள் –
அவளது முகத்தில் மாற்றமில்லை! அவளுக்கு இது பழமை!
அனுபவங்கள் சாவதில்லை!
– ஈழநாடு, 30.09.1973.
– கே.ஆர்.டேவிட் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2019, பூபாளம், யாழ்ப்பாணம்.
![]() |
கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
என்னுயிர் நின்னதன்றோ!
அனந்த் ரவி
October 21, 2026
விளக்கேற்ற வந்தவள்
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
October 21, 2026
தெய்வசிகாமணி
மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
October 21, 2026
