கொடுத்து வைக்காதவன்
கதையாசிரியர்: தேவன் யாழ்ப்பாணம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 17, 2025
பார்வையிட்டோர்: 538
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவளுடைய அந்த வெண்மை யான நீண்ட கழுத்து இன்றும் எனக்கு ஞாபகமிருக்கிறது. அதை வெட்டி, ஒரு அசைப்பு அசைத்தாளானால் சபை முழுவதும் திக்குமுக்காடும். ஆனால் இன்று பளிங்குச் சிலையினுடை யதைப்போல் அசைவு, உயிரோட்டம் எதுவுமின்றி நிலையாக நின்றது. உணவை உட்கொண்டால் கண்ணாடிக் கூடாகக் தெரிவதுபோல் அக் கழுத்தினுள் தெரியும். அதை அழகு என்று சொல்லவா? அழகுதான், கவர்ச்சிதான், சீ! நானும் ஒரு மனிதனா? என் நண்பனின் மனைவியினுடைய கழுத்தைப்பற்றி இவ்வளவு சொல்கிறேனே! அதுவும் அவனுடைய சா வீட்டில் அவளைக் கண்ட கோலத்தில் வர்ணிக்கிறேன் என்றால் மன்னிக்கமுடியாத குற்றம்தான். ஆனால் என் கண்களை என்ன செய்ய?
ஆடாமல் அசையாமல் ஒரு தூணில் சாய்ந்தவாறு வடிந்து கொண்டிருந்த ஒரு துளிக் கண்ணீரைத் துடைக்காமல் நடப்பதெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு அவள் நின்றாள். ஒருவேளை துடைத்துவிட்டால் புதிய துளியொன்று வராமலே விட்டுவிடுமோ என்ற அச்சம் காரணமாயிருக்கலாம். முதல்நாள் பூசிய முகப்பூச்சில் வாய்க்கால் கரைத்து வந்த அந்தத் துளியும் கன்னத்து மேட்டில் நின்று தோள்மீது குதிக்கவா வேண்டாமா? என்று தயங்குவது போல் நின்றுவிட்டது. உதட்டுச் சாயம் தன் சிவப்புத் தன்மையை இழந்து, வெளிறி, வெடித்து அலங்கோலமாயிருந்தது. “ஐயோ” என்று அலறிஅழுது துயர்தீர்க்க பாழாய்ப் போன பணமும் அந்தஸ்தும் விடுவதில்லையே!
அவளைத் தொட்டுத் தாலிகட்டிய அவன் “பாங்க்”கில் உயர்பதவி வகித்தவன். மாதம் இரண்டாயிரம் ரூபாவுக்குமேல் சம்பளம் வாங்கியவன். அவன் என்று சொல்ல எனக்கு மாதம் கேவலம் நூற்றியெண்பது ரூபா… பஞ்சப்படி சகலதும் உட்பட… உழைப்பவனாகிய எனக்கு என்ன உரிமையிருக்கிறது? பாடசாலையில் சிறுவயதில் ஒன்றாகப் படித்த உறவு, உரிமை அவ்வளவுதான். நாலு பெரிய மனிதர்கள் நிற்கிற இடத்தில் நான் அவனைத் தெரிந்துகொண்டவனாக காட்டிக்கொள்வதே யில்லை. தனிமையில் சந்திக்கும்போது நெருங்கிப் பழகு வோம். “நீ… நீங்கள்…” என்று நான் திணறும்போது அவன் தனக்குள்ளேயே சிரித்துக்கொள்வதை என்னால் உணர முடிந்தது.
பின்னேயென்ன? நெடுக ஒட்டியே இருந்தோமா? இறுதி யாக… அவனுடைய கல்யாணத்துக்குப் பிறகு… அதுவும் இந்த நான்கு வருடங்களாகத்தானே பழைய உறவை நெருக்கமாகப் பிணைத்துக்கொண்டோம். அவனுக்குக் கல்யாணமாகி… ஐயோ பாவம்! அவனுடைய தாம்பத்ய வாழ்வு ஐந்துவருடம்வரை தானே நீடித்தது. அவள் பாவம் என்று இரக்கப்படவேண்டுமென எனக்குத் தோன்றவில்லை. அவனைத்தான் நினைத்துக் கலங்கு கிறேன். நாற்பத்தியேழு வயதைத் தொட்டுவிட்ட அவன் சாவது அல்லது இருபத்தியாறு வயதிலேயே விதவையாகிவிட்ட அவளா பரிதாபத்துக்குரியவர்கள்? ஆம், வாழ்க்கையின் பெரும் பாகத்தை பிரமச்சாரியாகவே கழித்துவிட்டு திடீரென தன்னிலும் பார்க்க பாதிவயதேயான ஒரு பெண்ணைத்தான் அவன் கட்டிக் கொண்டான். என்னைப்போல யாராவது அப்படிச் செய்திருந் தால் ஊர் நாக்கெல்லாம் உளறித் தீர்த்திருக்கும். ஆனால் அவன்…
ஒருவரோடும் சோலி சுரட்டுக்குப் போகாமல், தானும் தன்பாடுமென, பெண்கள் சகவாசமின்றி, ஒழுக்கமாய் வாழ்ந் தவன். வசதிகள் நிறைய இருந்தும் வழுக்கிவிடாமல் இருந்தவன். அந்த மதிப்பு ஒருபக்கம். அவனுடைய இரண்டா யிரம் ரூபா சம்பளம் மறுபக்கம். யார் துணிந்து பேசுவார்கள்.?
அவள் ஒரு நடனமங்கை.
எப்பொழுதோ நடந்த ஒரு நடன நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றவன்… ஏதோ நிதிக்காக அவன்மீது கட்டியடிக்கப்பட்ட சீட்டை உபயோகித்து விட்டு… காரை எடுத்துக்கொண்டு புறப் பட்டவன் பக்கத்தில் நின்ற கார் “மக்கர்” பண்ணுவதை அவதானித்து “ஏன்? எங்கே போக வேண்டும்? யார்?” என்று கேட்டுவிட்டான். அன்று அவன் காரிலேறி வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண் அவன் இதயத்திலேறி வீட்டுப் படியும் ஏறிவிட் டாள். “மேக்.அப்”புடன் வந்து காரில் ஒலித்த சலங்கை, உடல் முழுவதும் வியாபித்து காரையும் நிறைத்த சுகந்த வாசனை, ஒவ்வொரு ஒளிக்கம்பத்தையும் தாண்டிச் செல்லும்போது பள பளத்த அவள் பல்வரிசை… எல்லாம்… மறுநாள் காரைத் திறந்த போது “குப் “பென அடித்த மல்லிகை, முல்லை வாசனை…
அவள் இன்று அழுதுகொண்டு நிற்கிறாள். அவன் பிண மாய்க் கிடக்கிறான். ஏன்? “இப்படித்தான். ஹார்ட்…” என்றார் ஒருவர். “இந்த வயதில்தான் கவனமாயிருக்க வேண்டும். ஸ்ட்ரோக்…” என்றார் இன்னொருவர். “கொறோ நறி துறொம் போலிஸ்” என்றார் வேறொருவர். மனிதன் மாண்டுவிட்டான். அதற்கு ஒரு காரணமா? பெயரா? வைத்திய நிபுணர்கள் மண்டையைப்போட்டு உடைத்து, உடலைப் பிளந்து, கீறிக்கிழித் துப் பார்த்துவிட்டு சொல்வதுதான் காரணமா?
கல்யாணமாவதற்கு முன்னால் காரில் வீட்டிற்குவரு வான். காவல்காரன் கதவைத் திறந்துவிடுவான். “பைல்”களைத் தூக்கிக்கொண்டுவந்து வேலையாள் உள்ளே வைப்பான். சமையல்காரன் காப்பியைக் கொண்டுவந்து மேசைமீது வைப்பான். இரவு சாப்பாட்டு நேரமானதும் மேசைக்கு எல்லாம் தயாராய் வந்துவிடும். தானே விருப்பமானதைப் போட்டுச் சாப் பிடுவான். என்றாவது பெண்ணொருத்தி இதையெல்லாம் பார்த் துச் செய்தால்…” என்று நினைத்திருப்பானோ, யாருக்குத் தெரியும்? கல்யாணமான பிறகு நிலைமை மாறவில்லை. எல்லாம் அப்படியே தான் நடந்து வந்தது.
அவனுடைய தாகம் அவளுக்குத் தெரியவில்லை. ஆரம் பத்தில் இருவரும் ஒன்றாகவே சாப்பிட உட்கார்ந்தார்கள். அவரவர் பரிமாறிக் கொண்டார்கள். “உங்களுக்கு இது பிடிக்குமே, கொஞ்சம் போடட்டுமா?” என்று அவள் ஒரு நாளும் கேட்டதில்லை. அவளுக்கு சமைக்கத்தான் தெரியாதென்றாலும் மேசையிலிருப்பதை பரிமாறக்கூடத் தெரியவில்லை. புதிதில் ஞாயிற்றுக்கிழமைகளை அவளுக்கென ஒதுக்கி வைத்து, காரில் ஊர்சுற்றியதும் உண்மைதான். அதுவும் வெகுநாள் நீடிக்க வில்லை. சங்கம், கிளப், கூட்டம், நடனம், ஒத்திகை, பயிற்சி… இப்படி அவள் பொழுது போயிற்று. அவன் “பாங்க்” கிலிருந்து திரும்பியதும் அம்மா வீட்டிலே தானா, வெளியே போய் விட்டாளா, என்பது தெரியாமலே மணித்தியாலங்கள் ஊர்ந்து விடும். கடைசியில் படுக்கையிலாவது இரவில் ஒன்றாகப்படுத்து எழுந்தார்கள் என்பதில்லாமலாகிவிட்டது. சிலசமயம் அவன் “பைல்”களுடன் மல்லாடி விட்டு படுக்கப்போகும் போது அவள் உறக்கத்தில் மூழ்கியிருப்பாள். அலுப்பாயிருக்கிறதே, இன்று வேளைக்குப் படும்போமே, என்று நினைக்கிற நாட்களில் அவள் எங்காவது வெளியே போயிருப்பாள். எங்கேயோ விடுதிச் சாலையில் இருவர் வாழ்வது போல ஆகிவிட்டது அவர்கள் வாழ்வு. கடைசியில் மனைவி எப்போது முழுகினாள் என்பது கூடத் தெரியாமல் வாழ்ந்த அதிசய மனிதன் அவன்.
அப்படியானால் ஏதாவது பூச்சி, புழு? அதுதானே வேடிக்கை. கல்யாணமான சில நாட்களுக்கெல்லாம் அவள் முழுகாமலிருந்தாள். அப்புறம் மூன்று மாதத்தில் “அபோர்சன்” ஆகிவிட்டது. கொஞ்சநாள் நலுங்காமல் அசையாமல் படுக்கை, சிசுருஷை அப்புறம்தான் இப்படி திசை திரும்பியதோ? இன்று அவள் வாரிசு இல்லாமலே இறந்துவிட்டான். சாகும்போது, ஒரு வேளை அதை நினைத்துப் பார்த்தானோ? கொள்ளிவைக்க வாவது சீ! அப்படியெல்லாம் கவலைப்படுகிறவனல்ல அவன். கவலைப்பட்டானோ, இல்லையோ, வெளியில் காட்டிக்கொண்ட தில்லை. ஆனால்…? ஆமாம், ஒருநாள் என்னிடம் உனக்கு எத்தனை குழந்தைகள்? என்று கேட்டான். கல்யாணமாகி எட்டு வருடத்தில் ஆறு பிள்ளைகளைப் பெற்ற என் வீரப் பிரதாபத் தைச் சொன்னதும் “நீ குடுத்துவைச்சவன்” என்றான். அவனிட மிருந்து “குடுத்து வைச்சவன்” என்று சொல்லக்கேட்டது ஓரிரு தடவைகளில் மட்டுமல்ல.
அவனுடைய வாழ்க்கையில் எத்தனையோ விருந்துகள், கொண்டாட்டங்கள் வந்துபோயின. முன்னைப் போல் தனியனா கவே கலந்து கொண்டவன். அவளுடைய நடன நிகழ்ச்சிகள் எத்தனையோ நடைபெற்றன. அவன் அவற்றையெல்லாம் பார்த் தான் என்று சொல்லமுடியாது. இந்த நாட்களில் என்னால் அவனுடைய போக்கில் ஒரு புதுமையைக் காணமுடிந்தது. ரோட்டில், கடற்கரையில் இளம் தம்பதிகள் கைகோத்துச் செல் வதைக் கண்டால் கண் கொட்டாமல் பார்க்க ஆரம்பித்து விட்டான். தெருவில் போகும் பெண் குழந்தைகளையும் கூர்ந்து அவதானிக்கத் தொடங்கினான். தீய எண்ணம் அவன் மனதைத் தொட நியாயமில்லை. யார் வாழ்வை மண்ணாக்க வளரு கிறாளோ என்று மனதுக்குள்ளேயே நினைத்துக்கொள்வான் போலிருக்கிறது. பெண் வர்க்கத்தின் மீதே அவநம்பிக்கையும் வெறுப்பும் அவனுக்குப் பிறந்துகொண்டிருந்ததோ?
வெகுநாட்களுக்குப் பிறகு அவன் வீட்டுக்குப் போன போது அவன் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி வருவதைக் கண்டேன். காசு நிறைய உள்ளவன் குடிகட்டுமே, குடி கெட்டு விடுமா என்று சும்மா இருக்கவும் முடியவில்லை. நண்பன் என்று உறவு கொண்டாடுகிறேன். கண்டித்து ஒருவார்த்தை சொல்லவும் முடியவில்லை. எல்லாம் மேல்நாட்டு குடிவகை. விலையுயர்ந்த சரக்கு, உயிரையா கொண்டுபோய்விடும்? வழியற்றவர்கள் கண் டதைக் குடித்துப் பாழாக்கிறார்கள். அவன்…? இக்கால நாகரீக மாகவும் கூட்டத்தில் அதுவும் அவன் அந்தஸ்துடையவர்கள் மத்தியில்… குடிக்கத்தெரியாதவன் மிருகமாகவும் கருதப்படுவ துண்டல்லவோ!
மாலையில் வீட்டுக்கு வந்தால் அவனைச்சுற்றி சில சஞ் சிகைகள், நிர்வாணமாக வாழ்கிறார்களாமே எங்கோ, அவர் களைப்பற்றிய படங்கள், செய்திகள் நிறைந்தவை. படிக்கி றானோ, படம் பார்க்கிறானோ, அவற்றுள் சில அவனுக்கே புரியாத பிரஞ்சுமொழியில் வெளியானவை. இவையெல்லாம் அவன் கோணலான வழியில் போகவிரும்பாமல் மன இச்சை களுக்கு விடுதலையளிக்க கண்ட மார்க்கங்கள் போலும்.
“பாங்க்”கில் கடன்வாங்கும் விஷயமாக ஒரேயொரு தடவை அவனிடத்துள்ள என் உரிமையை என் சுயநலத்துக் காகப் பயன்படுத்தினேன். அப்போது என் மனைவியும் கூடவே வந்திருந்தாள். எனக்குப் பின்னாலேயே அவள் நாணிக்கொண்டு நின்றதும், உலகத்தைத் தாங்குகிறவள் தானே என்ற நினைப்பில் இடையிடையே என் காதில் அவள் ஊதிய ரகசியச் சடங்குகளும், வெளியே அவன் கேட்டதற்கெல்லாம் “அவர் சொன்னால் சரிதான்” என்று போட்ட பத்தினிவேஷமும் அவனை உள்ளே என்ன செய்ததோ? மழுப்பலாகச் சிரித்தான். “குடுத்து வைச்சவன்” என்று முணுமுணுக்கிறான் போலிருந்தது. நாங்கள் அவனைப்பார்க்கச் சென்றபோது அவள் வீட்டில் தானிருந்தாள். வெளியே வரவுமில்லை. என் மனைவியைப் பார்க்கவுமில்லை. எனக்கு அதெல்லாம் பொருட்டாகப் படவில்லை. ஆனால் அவனுடைய நெஞ்சை அந்த அலட்சியம் உறுத்தியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
ஒரேயொரு தடவை அவன் வீட்டுக்கு நான் சென்றபோது அவளைக் கண்டேன். அதுவும் அரை நிர்வாணக் கோலத்தில். எங்கோ வெளியேபோக உடையணிந்து கொண்டிருந்த பாதியில் குறுக்கே வந்துவிட்டாள். கொஞ்சமாவது கூச்சப்பட வேண்டுமே, கிடையாது. நான் மிகவும் கீழாக மதிக்கப்பட்டவன். எனக்கு முன்னால் அப்படித் தோன்றுவது அவளுக்கு வெட்க மாயிருந்திருக்காது. தனக்கு சமதையான யாருக்காவது முன்னால் அப்படி வந்திருப்பாளா என்பது சந்தேகம். சமுதாயத் தின் கீழ்ப்படியிலிருப்பவர்கள் ஒருபோதும் அரை நிர்வாணக் கோலத்தைப் பொருட்படுத்துவதில்லை. பொதுக் கிணற்றில் குளிப்பவர்கள்தானே! உயர் படியில் இருப்பவர்களும் கூடிக் குடித்துக் கும்மாளமடிக்கும் வேளையில் நெகிழும் ஆடைகளைச் சரி பார்ப்பதில்லையே. மேல்படியும் கீழ்ப் படியும் சந்திக்கிற இடத்திலும் இந்த நாண உணர்ச்சி சில வரையறை களைத் தளர்த்திவிடுகிறது. குழந்தைக்குப் பாலூட்டும் தாயை தெருவோரத்தில் பார்த்ததில்லையா? மற்றது இதோ அவள் என் முன்…. வேலைக்காரர்முன்… ஆனால் இந்த நடுத்தரவகுப்புத் தான் எல்லாவற்றுக்கும் வேலிபோட்டுக்கொண்டு அவஸ்தைப் படுகிறது.
மாசு மறுவற்ற தேகம். ஓரிடத்தில் ஏதாவது பிசகு, லயக் குறைவு தென்பட வேண்டுமே அவளை… அல்ல, அவளழகை குறைசொல்ல இடமேயில்லை. அவன் ஏன் அப்படிப் போகிறான்?
எத்தனையோ தடவை அவன் வீட்டுக்கு வந்துபோயிருக் கிறேன். அவன் என் வீட்டிற்கு வந்ததில்லை. வரவில்லையே என்று நான் ஏங்கியதுமில்லை. அதெல்லாம் நன்றாயிருந்திருக் காது. ஆனால் சாகப்போவதை முன்கூட்டியே தெரிந்து தானே, என்னவோ சில தினங்களுக்கு முன்பு ஒருநாள் அவனுடைய பெரிய கார் என் குச்சு ஒழுங்கை வழியே வந்துவிட்டது. என் வாசலில் நின்றும்விட்டது. நான் தடுமாறி என் மனைவியிடம் காப்பி போடச்சொல்லுமுன் எனக்கு ஒன்றும் வேண்டாம். சும்மா பார்த்து விட்டுப்போக வந்தேன்” என்று என்னை மீட்டான்.
என் கடைக்குட்டியை தூக்கி வைத்துக்கொண்டு வாரியா கடைத் தெருப்பக்கம் போய்விட்டு வருவோம் என்றான். “சரி மாமா” என்று தலையை அசைத்தாள் அவள். மாப்பிள்ளைகள் தான் பணக்கார மாமனார் வேட்டையாடுவார்கள் என்பதில்லை. என் கடைக்குட்டியும் முன்பின் காணாத அவனிடம் “மாமா” என்று ஒட்டிக்கொண்ட மர்மம்? கிடக்கிறது… திரும்பி வரும் போது கைநிறையச் சட்டைகள் படப் புத்தகங்கள், பொம்மை கள்! அதில் ஒரு பொம்மை “பற்றறி”யில் வேலை செய்வது. “சுவிட்சை”த் தட்டிவிட்டால் ஆடும்பொம்மை. என் குழந்தையுடன் இருந்து கொஞ்சநேரம் விளையாடிக்கொண்டிருந்தான். “நீயும் இந்தப் பொம்மைமாதிரி டான்ஸ் ஆடுவியோ? உனக்கு அதெல் லாம் வேண்டாம்” என்றான். பின்பு போய் விட்டான்.
இப்போது இந்த உலகத்தையே விட்டுப் போய்விட்டான். “பிரேதத்தைப் பெட்டியில் வைத்து மூடப் போகிறார்கள். உலக ஒப்பனைக்காகப் போலும் தன் கழுத்திலிருந்த தாலியை அவனுடைய மார்பில் கழற்றிவைத்துவிட்டு அவளும் இரண்டு துளி கண்ணீரைச் சுண்டிவிட்டாள். பிரேத ஊர்வலம் புறப்படுகிறது.
வாசலில் நின்று திரும்பிப் பார்க்கிறேன். இந்த பங்களா, கார் அவனுடைய பென்ஷன், காப்புறுதிப்பணம், அவனுடைய சொத்து… எல்லாம்… அவள் கொடுத்துவைத்தவள்தான், தலை முறை தலைமுறையாக நிம்மதியாக காலந்தள்ளப்போதும்… கொடுத்து வைத்தவள்!
ஆனால்… அவன்…?
– ஜனவரி 1964, கலைச்செல்வி.
– தேவன் யாழ்ப்பாணம் சிறுகதைகள், முதல் பதிப்பு: மே 2004, யாழ் இலக்கியவட்டம், யாழ்பாணம்.