கொடுத்ததெல்லாம் கொடுத்தான்..!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 389
(பழைய கதை புதிய பாடல்)

அந்த நாட்டின் அரசனாம்
அன்பு மிக்க ஒருவனாம்.,
சொந்தப் பிள்ளை பிறந்தநாள்
விருந்தளிக்க விரும்பினான்.
“நாட்டிலுள்ளோர் யாவரும்
நாளை காலை வாருங்கள்!
வாட்டும் பசிக் கொடுமையை
உண்டு களித்துச் செல்லுங்கள்!
அன்னம் உண்டு அவையிலே!
அதனையடுத்துப் பரிசுண்டு!”
என்று சொல்லி மக்களை
முரசறைந்து அழைத்தனன்.
அதனைக் கேட்ட இருவராம்
அங்ககீனம் உள்ளவர்
ஒருவர் பார்வை அற்றவர்
இன்னொருவர் முடவராம்.
இருவருமே வறியவர்
எதுவும் இல்லை உண்டிட.,
அரசர் அளிக்கும் விருந்தினில்
அன்னம் உண்ண ஆசையாம்!.
‘இறைவன் நம்மை இப்படி
இரக்கமின்றிப் படைத்ததால்
இன்னல் பட்டு நோகிறோம்
எதுவுமின்றிச் சாகிறோம்!’.
என்ன செய்வதென்றவர்
எண்ணி நின்ற வேளையில்
கண்ணிழந்த மனிதரும்
கால்களற்ற மனிதரைத்
தோளில் தூக்கி நடந்திட
முடவர் வழியைக் காட்டிட
முயன்று சென்று அரண்மனை
முந்திச் சென்று நின்றனர்.
கண்ட மன்னன் மகிழ்ந்தனன்
காட்சி கண்டு நெகிழ்ந்தனன்.
‘உண்டு போக உங்களில்
ஒருவர் தனித்து வரவில்லை..!’
‘இருக்கும் உணவை இருவரும்
பகிர்ந்து உண்ண விரும்பினீர்;
சிறந்த அன்புப் பண்பில்நீர்
சிகரம் தொட்டு நிற்கீர்!’
‘ஒருவருக்கு ஒருவராய்
உதவுகின்ற பணிபில்நீர்
சிறந்தவர்கள் ஆனதால்,
சிறப்புப் பரிசு உமக்கென
நாட்டில் ஒரு பகுதியை
நற்பரிசாய்த் தந்துமே’
வாட்டும் வறுமைக் கொடுமயை
போக்கினானாம் மன்னவன்!.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
