காரணம் அவனும் மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 30, 2025
பார்வையிட்டோர்: 2,330 
 
 

பாய் அந்த டீ கடையை மிக சுத்தமாக வைத்திருப்பார். பெரும்பாலான பெரிசுகள்; காலை நடை பயணம் முடித்து அவர் டீ கடைக்கு வந்து பெஞ்சில் அமர்ந்து நாளிதழ் படித்து அதிலுள்ள செய்திகளை சகநண்பர்களோடு பேசி சிரித்து மகிழ்ந்து, அதன்பின்தான் விட்டிற்கேப் போவார்கள்.

அனைவருக்கும் அவர் மிக நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். காசு கொடுத்தாலும் நாளைக்குத் தருகிறேன் என்று வாய்தா வாங்கினாலும் பொறுத்துக் கொள்வார். காலை சுமார் 9 மணிக்கே கடையை சாத்தி வீட்டிற்குச் சென்று விடுவார்.

ஒருமுறை பக்கத்து ஊரைச் சேர்ந்த முனுசாமி அவரது கடைக்கு வந்து டீ குடிக்க ஆரம்பித்தார். பாயின் அணுகுமுறை, பழகும் விதம் அனைத்தும் முனுசாமிக்கு மிகவும் பிடித்திருந்தது. பேச்சு வாக்கில் முனுசாமி ஒரு வங்கி ஏடிஎம்ல் இரவுக் காவலராகப் புணிபுரிவதாகவும், அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருப்பதாகவும், அவர்கள் பள்ளிக்குச் செல்வதாகவும், மனைவி சுகவீனமாக வீட்டில் இருப்பதாகவும் தெரிய வந்தது.

தினமும் வர ஆரம்பித்த முனுசாமி பாயக்கு நெருங்கிய நண்பராகி கடையில் அவரால் முடிந்த உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார். பாயும் அவரிடம் பணம் ஏதும் வாங்காமல் காலை சிற்றுண்டியும் டீயும் கொடுத்து வந்தார். இப்படியே ஒரு மாதம் கடந்தது.

திடீரென்று முனுசாமி கடைக்கு வருவது நின்று போனது. பாய்க்கு முனுசாமி பற்றிய எந்தவித செய்தியும் தெரியவில்லை. வருகின்ற வாடிக்கையாளர்களிடமும் கேட்டுப் பார்த்தார். ஆனால் அவர்களுக்கும் முனுசாமிப் பற்றி தெரியவில்லை. அதுவே மிகுந்த கவலை அளித்தது.

ஒருநாள் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்க பக்கத்து ஊருக்குச் சென்றார். அப்போதுதான் முனுசாமி அந்த ஊர் என்பதும் முருகன் கோவில் பக்கத்தில்தான் தன் வீடு இருக்கிறது என்று முனுசாமி சொன்னதும் நினைவிற்கு வந்தது. அந்த நேரத்தில் வந்த தபால்காரரிடம் முனுசாமி பற்றி கேட்டபோது அவர் கூறியது பாய்க்கு மிகுந்த வேதனை அளித்தது.

முனுசாமி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரவு காவல் வேலைக்கு வங்கி ஏடிஎம்ற்குச் சென்ற போது நடுராத்திரியில் வந்த கொள்ளையர்கள் அவரை அடித்துப் போட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றதும், அதன் பிறகு அதிகாலை ஏடிஎம்க்கு வந்தவர்கள் வங்கிக்கும் போலீசுக்கும் செய்தி சொன்னதும், பிறகு ஆம்புலன்ஸ் வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனதும் கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தார்.

உடனே தபால்காரர் மூலம் முனுசாமியின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறி கையிலிருந்த பணத்தையும் கொடுத்து மிகுந்த வேதனையோடு திரும்பினார்.

முனுசாமி பழகிய நாட்களை நினைத்து “சே என்ன வாழ்க்கை இது. நேற்றிருந்தவர் இன்று இல்லையே” வேதனைப்பட்டார். அதோடு கூட, தான் கிறிஸ்தவப் பெண்னைக் காதல் திருமணம் செய்து கொண்டதால், சொத்து எதுவும் இன்றி, விரட்டி அடிக்கப்பட்டதையும், முனுசாமி தன்னிடம் சொல்லி ஆறுதல் தேடிக்கொண்டதையும் நினைவு கூர்ந்தார்.

அடுத்த நாள் பாயின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. காலை 9 மணிக்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் கடையை நடத்தாத பாய், மதியம் 3 மணிவரை கடையைத் திறந்து வைத்திருந்தார். வழக்கம்போல 9 மணிவரை காலை சிற்றுண்டி டீ, காபி போடுவதைத் தொடர்ந்த பின்னர் மதியம் சூடான பிரியாணி சமைத்து விற்க ஆரம்பித்தார். அவரது இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு வியப்பாயிருந்தது. அதோடு கூட முனுசாமி இப்போ தெல்லாம் வருவதில்லை என்பதையும் வாடிக்கையாளர்களுக்குத் தெரிய வந்தது.

ஒருநாள் முனுசாமி பற்றி அவரிடமே கேட்டனர். அப்போது பாய் முனுசாமி பற்றிய விஷயங்களை அவர்களுக்குத் தெரிவித்தார். டீ வியாபார வசூலைத் தான் வைத்துக் கொள்வதாகவும், பிரியாணி மூலம் வரும் வருமானத்தை முனுசாமியின் மனைவி உடல் நலத்திற்காகவும் அவரது பிள்ளைகளின் படிப்பு செலவிற்காகவும் கொடுக்கப் போவதாகவும் கூறினார்.

முனுசாமி பற்றிய சேதி கேட்டு அனைவரும் வருத்தப்பட்டனர். அவரவர் தங்களால் ஆன பண உதவி செய்தனர். சமூக நலத்துறையிலிருந்து ஓய்வு பெற்ற சகாயம், அரசாங்க மான்யத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கிக் கொடுக்க முன்வந்தார். அதற்காகும் முன்பணம் மற்றும் அரசு மான்யம் பெற வழிவகைகளைச் செய்வதாகவும் அதனால் முனுசாமியின் குடும்பத்தினருக்கு அவர்களின் அன்றாட வாழ்வதாரத்திற்கு வழி வகுப்பதாகவும் சுறினார்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. அனைவரும் சேர்ந்து குடும்பத்தினருடன் முனுசாமி வீட்டிற்குச் சென்றனர். குடும்பத் தலைவிகள் முனுசாமியின் பிள்ளைகளைக் குளிப்பாட்டி தாங்கள் எடுத்து வந்திருந்த புத்தாடைகளை அணிவித்து அழகு பார்த்து பிள்ளைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டனர்.

இதையெல்லாம் பார்த்த முனுசாமி மனைவியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஜாதி, மதம் மாறித் திருமணம் செய்ததால் எங்களைச் சொந்த பந்தங்கள், அனைவரும் ஒதுக்கி வைத்ததால் மனமுடைந்து தான் நோய்வாய்ப் பட்டதாகவும், நான் வணங்கும் கடவுள் என்னைக் கைவிடாமல் இன்று இத்தனை சொந்தங்களை எனக்குக் கொடுத்திருக்கின்றார் என்றும் கண்ணீர் மல்க அவர்கள் முன் மண்டியிட்டுத் தன் நன்றியினைத் தெரிவித்தாள்.

மும்மதத்தினரும் இணைந்ததால் அப்போது பக்கத்திலிருந்த தேவாலயத்திலிருந்து ஒலித்த ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வொரு மனிதனும் சகோதரன் என்ற பாடல் மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *