கானல் பார்வைகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 30, 2025
பார்வையிட்டோர்: 3,109 
 
 

விடியும் வரை உறக்கம் தொலைத்து திரும்பத்திரும்ப உண்மை நிலையை எடுத்துச்செல்லியும் புரிந்து கொள்ளாத மனைவி மாயாவை நினைத்து வாழ்வின் எதிர்காலம் பற்றிய பயம் அதிகரித்தது மதனுக்கு.

எப்பொழுதும் சந்தேகம், எதிலும் சந்தேகம், எவருடனும் சந்தேகம் என அவள் மனம் முழுதும் சந்தேகமே நிரம்பியிருந்தது.

“சொல்லறத நம்பு மாயா. அவங்களுக்கு என்னோட அம்மாவோட வயசு. அப்படி எதுவும் நடக்குமா….?”

“அப்ப…. என்னோட வயசா இருந்திருந்தா அப்படி எதுவும் நடந்திருக்குமா….? அப்ப உங்க மனசுக்குள்ள அப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு தானே அர்த்தம்….?”

“ஐயையோ…. எதுக்கு மாயா இப்படி சைக்கோ மாதிரி பேசறே…? இப்படியெல்லாமா கற்பனையா நெனைச்சு சந்தேகப்படுவாங்க…‌?” கவலை மனதை அழுத்த, கண்களில் கண்ணீர் ததும்பக்கேட்டான்.

“தப்பக்கண்டு புடிச்சுக்கேட்டா நான் சைக்கோவா….? இனிமே உங்க கூட என்னால வாழவே முடியாது. இப்பவே குழந்தைகளை கூப்பிட்டுட்டு என்னோட அம்மா வீட்டுக்கு போயிடறேன்….”

“மாயா …. என்னைப்புரிஞ்சுக்கோ. உனக்காகத்தானே கல்யாணம் ஆயி ஒரு மாசம் கூட முடியாம என்னோட அப்பா, அம்மாவை விட்டிட்டு உன் கூட தனிக்குடித்தனம் வந்தேன். வந்ததிலிருந்து பத்து வருசமா நானே உன்னையும், நம்ம ரெண்டு குழந்தைங்களையும் நல்லா கவனிச்சிட்டேன். அப்ப இருந்தத விட இப்ப சேர்ந்திருக்கிற கம்பெனில லட்சங்கள்ல வருமானம் வருது. சொந்த வீடு இருக்குது. கார் இருக்குது. கடன் கூட இல்லை. நேத்து கூட நீ கேட்ட உடனே ஒரு லட்சம் ஜீபே பண்ணினேனா இல்லியா….?”

“பணம் இருந்தா போதுமா? வசதி இருந்தா போதுமா?”

“அப்புறம் என்ன தான் வேணும்? அதையாவது சொல்லித்தொலையே….” ஆத்திரத்தில் சற்று கோபமாகப்பேசினான்.

“பாத்தீங்களா… உங்க வாயிலிருந்தே வந்திருச்சு. சொல்லுன்னு சென்னா பரவாயில்லை. சொல்லித்தொலைன்னு செல்லிட்டீங்க. தொலைஞ்சிடறேன். இப்பவே தொலைஞ்சிடறேன். எங்கியோ தொலைஞ்சிடறேன். உங்களுக்கு இடைஞ்சல்னா இந்த உலகத்த விட்டே தொலைஞ்சிடறேன். அந்தக்கெழட்டோட ஸ்டார் ஹோட்டல்ல ரூம் பேட்டுத்தங்குறதுக்கு பதிலா ஹோட்டல் மாதிரியே நீங்க கட்டி வெச்சிருக்கிற இந்த பங்களாவுலயே கூட்டீட்டு வந்து வெச்சுக்கங்க….” சொல்லி விட்டு அழ ஆரம்பித்தாள் மாயா.

“மாயா…. மறுபடியும் சொல்லறேன், அவங்க எனக்கு அம்மா மாதிரி. அவங்க கம்பெனியோட எம்.டி.,நான் ஜி.எம். பிசினஸ் விசயமா அவங்களோட நான் ஒரே கார்ல பயணம் பண்ணித்தான் ஆகனம். வெளியூர்ல தங்க வேண்டியதா இருந்துச்சுன்னா ஒரே ஹோட்டல்ல தங்கித்தான் ஆகனம். ஒரே ஹோட்டலே தவிர ஒரே ரூம்லயா தங்கினேன்? நீயே யோசிக்காமப்பேசி என்னோட பேரைக்கெடுத்திருவே போலிருக்கே….?”

“உங்க பேரை நான் தான் கெடுக்கறேனா….? ஏற்கனவே கெட்டுப்போனதாலதான் பதற்றமா இருக்கேன்.”

“என்னது என்னோட பேரு ஏற்கனவே கெட்டுப்பேச்சா…‌? உனக்கு யாரு சொன்னாங்க…? என்னன்னு சொன்னாங்க? எப்ப சொன்னாங்க?” பதறியபடி மனைவியிடம் கேட்டான் மதன்.

“அசிஸ்டென்ட் மேனேஜர் சுதாகர் தான் எனக்கு போன் போட்டு சொன்னார். ஆபீஸ்ல எல்லாரும் பேசிக்கிறதா சொன்னார். நானாக பேசினா மேனனேஜர் பதவிய பிடிக்க கத கட்டி விட்டுட்டான்னு சந்தேகப்படுவாரு. நான் வேணும்னாலும் என்னோட வேலைய ரிசைன் பண்ணிடறேன்னு சொன்னார்” மனைவி சொல்லக்கேட்ட மதன் அதிர்ச்சியால் தலையில் கை வைத்து ஷோபாவில் அமர்ந்து கொண்டதோடு உறுதியாக ஒரு முடிவை எடுத்தான்.

“மதன் உங்களுக்கென்ன பைத்தியம் கியித்தியம் புடிச்சிருச்சா என்ன? நஷ்டத்துல கம்பெனி ஓடினதால கஷ்டத்துல கவலைப்பட்டிட்டு சூசைடு பண்ணற நிலைமைல இருந்த என்னை காப்பாத்தினதே நீங்க தான். உங்களுக்கு முப்பத்தஞ்சு வயசு. எனக்கு ஐம்பத்தஞ்சு வயசு. உங்களை என்னோட கம்பெனி மேனேஜரா பார்க்கல. ஒரு மகனா பார்க்கிறேன். என்னோட வயித்துல பொறந்தத நம்பி கம்பெனிய ஒப்படைச்சு ஒரே வருசத்துல பெரிய நஷ்டத்துல கொண்டு வந்து விட்டிருச்சு. அந்த சனியன வெளியே வெச்சுட்டு உங்களை உள்ள கொண்டு வந்ததும், கூட மகாலட்சுமியையும் நீங்களே கூட்டிகிட்டு வந்த மாதிரி ஒரே வருசத்துல ஓஹோன்னு உயர்ந்துட்டேன். வெளியில இருந்துட்டு என்ற வயித்துல பொறந்த சனியன் தான் தன்னோட தலைல தானே மண்ணை வாரிப்போட்டிருக்குது. எனக்கு அவன் தான் ஒரே வாரிசு. நாஞ்செத்துட்டா அவனுக்குத்தான் என்னோட சொத்து போய் சேரப்போகுது. அந்த புத்தி கூட இல்லாம நல்ல மேனேஜரை நாசமாக்கப்பார்க்கிறான். அவனுக்கு சாதகமா, அவம்பேச்சக்கேட்கிற அசிஸ்டென்ட் மேனேஜர் சுதாகர் தான் இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம். அவனை முதல்ல வேலைல இருந்து தூக்கனம்” கோபத்தின் உச்சத்தில் தன் மகன் தருணையும், அசிஸ்டென்ட் மேனேஜரையும் திட்டினாள் சிங்கை நிறுவனத்தின் முதலாளி தேசமங்கை.

தேச மங்கைக்கு ரகுவுடன் திருமணமாகி வேலையின்றி இருந்த போது தனது கல்லூரி தோழி கனகாவுடன் அவளது தொழிலில் பங்குதாரராக சேரும் வாய்ப்பு ஏற்பட்டது. தனது நகைகளை விற்று பங்குதாரராக சேர்ந்து கொண்டாள்.

வேலைக்கு போனால் சம்பளம் கிடைக்கும் அளவுக்கு லாபம் வந்ததால் தொடர்ந்து நிறுவனத்தை நடத்தியபோது கனகா உடல் நலக்குறைவால் இறந்து விட, தானே முழுமையாக கணவன் சென்றுகொண்டிருந்த வேலையை விட வைத்து, கனகாவின் வாரிசுகளுக்கு பணத்தைக்கொடுத்து விட்டு தனி நிறுவனமாக்கி, தனது நிறுவனத்திலேயே கணவனையும் பங்குதாரராகச்சேர்த்துக்கொண்டு நிறுவனத்தை நடத்தியதால், லட்சங்களில் பரிவர்த்தனை இருந்த நிலை மாறி படிப்படியாக கோடிகளைத்தொட்டது.

விபத்தொன்றில் கணவன் இறந்து விட, மனம் தளராமல் வெளிநாட்டில் படிப்பு முடித்து வந்த மகன் தருணிடம் நிறுவனத்தை ஒப்படைத்த ஒரு வருடத்தில் நிறுவனம் சரிவை நோக்கிச்சென்றதைக்கண்டு வேதனையடைந்த தேசமங்கை, தனது நண்பரின் ஆலோசனையுடன் வேறு நிறுவனத்தில், குறைந்த சம்பளத்தில் வேலையிலிருந்த மதனை மேனேஜராக அமர்த்தியதால் தாயாருக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்தது.

தன்னை கம்பெனியிலிருந்து அனுப்பிவிட்டு மதனை வேலைக்கு வைத்துக்கொண்ட தாயை பழிவாங்க மதனையும் தாயையும் தொடர்பு படுத்தி அவதூறு பரப்ப அசிஸ்டென்ட் மேனேஜர் சுதாகரை தன்னிடம் நிறுவனம் வந்தால் மேனேஜராக்குவதாக ஆசைகாட்டி அவர் மூலம் கம்பெனி முழுவதும் தெரியப்படுத்தி அசிங்கப்படுத்தினான் தருண்.

வேலை, சம்பளம் என்பதை விட மனைவி குழந்தைகள் தான் தனக்கு முக்கியம் எனக்கருதிய மதன் வேலையை விட முடிவு செய்து தனது ராஜினாமா கடிதத்தை முதலாளி மேஜையில் வைத்த பின்பு, தேசமங்கை எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் தனது முடிவை மாற்றிக்கொள்ளாமல் இருந்ததால் முதலாளி ஏற்றுக்கொள்ள நேர்ந்தது.

தேசமங்கைக்கு தன் மேல் பெரிய இடி விழுந்தது போல் இருந்தது.

“ஏங்க குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணம்னு நாலு நாளா சொல்லறேன். கல்லாட்டா காதுல வாங்கிக்க மாட்டேங்கறீங்க. ஆறு மாசமா வேற வேலைக்கும் முயற்ச்சி பண்ண மாட்டீங்கறீங்க. என்னோட தங்கச்சி பையனுக்கு இந்த ஸ்கூல்ல சீட் கெடைக்காம கண்ணீர் விடறா தெரியுமா? வேற ஸ்கூலுக்கு மாத்தினா நம்ம குழந்தைங்க எதிர்காலம் வீணாப்போயிருங்க. ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க…” கெஞ்சியபடி கணவனிடம் பேசினாள் மாயா. 

மனைவியின் கேள்விகளுக்கு பதில் எதுவும் பேசாமல் சமையலறையிலிருந்த பாத்திரங்களைக்கழுவுவது, குழந்தைகளில் ஆடைகளைத்துவைப்பது, வீடு கூட்டிப்பெருக்குவது என மனைவியின் வேலைகளை செய்து கொண்டிருந்தான் மதன்

பல நாட்கள் கெஞ்சியும் முடியாததால் நகைகளை அடகு வைத்து வாங்கிய பணமும் செலவாகி விட்டதால் அன்றாட செலவுகளுக்கே திண்டாடினாள். கணவனும் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் மன நோயாளி போல் வீட்டிலேயே அடைந்து கிடக்க, வேறு வழியின்றி வேலைக்கு செல்வதென முடிவெடுத்து உள்ளூரில் ஒரு நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க குறைந்த சம்பளத்தில் வேலை கிடைத்தது.

வேலைக்குச்சென்ற பின் சில மாதங்களிலேயே சம்பள உயர்வு மாயாவை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது. அதே சமயம் மற்ற அலுவலக ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் கிடைக்காததோடு, மாதமாதம் கொடுக்க வேண்டிய சம்பளமே பாக்கி வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வைத்தது.

ஒருநாள் அலுவலக விசயமாக வெளியில் முதலாளியுடன் பயணம் செய்யவேண்டிய நிலை வந்த போது மறுத்தாள். ‘அலுவலக நேரம் முடிவதற்குள் வந்து விடலாம்’ என சொன்னதை நம்பி காரில் ஏற, கார் கெஸ்ட் ஹவுஸ் பக்கம் திரும்பியது. மனபயத்துடன் இறங்கினாள். 

“இங்கே எதுக்கு?” என கேட்க, ” “நம்ம கம்பெனியோட பர்சனல் ஃபைல் பார்க்க வேண்டி இருக்கு. உன்னத்தவிர வேற யாரு மேலயும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆபீஸ்ல பார்த்தா மத்தவங்க கவனிச்சிடுவாங்க. அதான்….” என்றவர் நேராக தனது பெட்ரூமுக்கு அழைத்துச்சென்ற போது தயங்கி வெளியே நின்று கொண்டாள்.

“ஏன் தயங்கறே….?”

“இங்கேயே….. ஹால்லயே உட்கார்ந்து பார்க்கிறேன். ஃபைல் கொடுக்கச்சொல்லுங்க….” பயத்தின் உச்சத்தில் அச்சத்தோடு பேசினாள்.

“பெட்ரூம்தான் எனக்கு செண்டிமெண்டா ராசியா இருக்கும். உள்ளே வா.‌…” என முதலாளி உறுதியாகக்கூறினார். 

“எனக்கு இப்ப தலை வலிக்குது. என்னைக்கொண்டு போய் ஆபீஸ்ல விடுங்க” கண்களில் கண்ணீர் மல்க வீட்டு வேலையாட்கள் முன்பு மாயா கேட்ட போது வேறு வழியின்றி ஏமாற்றம் முகத்தில் தென்பட விருப்பமின்றி அனுப்பி வைத்தார். 

மாயா சென்ற பின் தான் நினைத்தது நிறைவேறாததை நினைத்து கண்ணீர் வடித்தார் திருமணம் செய்து கொள்ளாத அறுபதைக்கடந்த முதலாளி ஆறுமுகம். முதலாளியின் நிலைகண்டு அங்கிருந்தவர்களும் கண்ணீர் வடித்தனர்.

வேலைக்கு சென்ற மனைவி கண்ணீருடன் வீட்டிற்கு வந்ததும் ஓடிச்சென்று படுக்கையில் படுத்து அழுததைக்கண்ட மதன் எதுவும் பேசாமல் தன் வேலைகளைச்செய்தான்.

இரவு முழுவதும் தூங்காமலேயே இருந்தாள். மதன் எப்போதையும் விட நன்றாகவே தூங்கினான். 

காலையில் எழுந்தவள் ஷோபாவில் அமர்ந்திருந்த கணவன் மடியில் முகம் புதைத்து அழுதாள். அவள் பேசியதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தான். இப்போதும் பதில் பேசவில்லை. அப்போது ஒரு கார் வீட்டின் முன் வந்து நின்றது. அதிலிருந்து வந்த நபரைக்கண்டு உறைந்தே போனாள் மாயா. 

மதன் எழுந்து சென்று இன்முகத்துடன் வரவேற்றான். உள்ளே வந்தவர் ஹாலில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். மாயாவின் குழந்தைகளை பக்கத்தில் அழைத்து தலை மீது கைவைத்து ஆசீர்வதித்தார்.

“மாயா இப்படி வந்து உட்கார்” என வந்திருக்கும் தனது கம்பெனி முதலாளி சொன்ன பின்னும் நின்று கொண்டே இருந்தாள். 

“பெத்த அப்பா சொன்னாலும் கேட்க மாட்டியா?” என மதன் சொன்னதைக்கேட்டு அதிர்ந்து, குழப்பத்தில் ஆழ்ந்தவள் பக்கத்திலிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“என்னை மன்னிச்சிடு மாயா. நான் தான் உன்னோட ஒரிஜினல் அப்பா. உன்னோட அம்மாவும் நானும் காலேஜ்ல ஒன்னா படிக்கும் போது காதலிச்சு பெத்தவங்களை எதிர்த்து ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டோம். கல்யாணமாகி ரெண்டே மாசத்துல வேற ஒரு பொண்ணோட சந்தேகப்பட்டு என்னை விட்டிட்டு பிறந்த வீட்டுக்கு போனவ, அவளோட மாமாவ ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிகிட்டா. அப்ப ஒரு மாச கருவோட இருந்திருக்கா. அவ மாமனுக்கு குழந்தை கிடைக்காதுன்னு டாக்டர் சொன்னதால கருவக்கலைக்காம விட்டுட்டா…” என கண்ணீர் மல்க சொன்னதைக்கேட்டு தலை சுற்றியது மாயாவுக்கு.

“நீ பிறந்ததுக்கப்புறம் நானும் இந்த ரகசியத்த வெளில சொல்லலை. சொல்லலைன்னாலும் உன்னை எப்படியாவது தூரத்துல இருந்து கவனிச்சிட்டு தான் இருந்தேன். உன்னோட நினைவால நான் கல்யாணமே பண்ணிக்கல. நீ மதன சந்தேகப்பட்டு அவரு நல்ல வேலைய விட வெச்சுட்டே. உண்மைல சொல்லப்போனா இவரோட முதலாளி கம்பெனிக்கு மதனுக்காகத்தான் நான் நிறைய ஆர்டர் கொடுத்தேன். நல்லா டெவலப் ஆச்சு. உன்னோட சந்தேகத்தால மொத்தமா எல்லாம் வீணாப்போச்சு” மூச்சிரைத்ததால் பேச்சை நிறுத்தியவர், மாயாவிடம் தண்ணீர் கேட்டு வாங்கி குடித்து விட்டு மறுபடியும் பேசினார்.

“எனக்கு உடல் நிலை அடிக்கடி பாதிக்கிறதால என்னோட கம்பெனிய உன்னோட பேருக்கு மாத்திடறதுக்காகப்பேசவும், நான் உன்னோட அப்பாங்கிற உண்மையைச்சொல்லவும்தான் உன்னை என்னோட ரூமுக்கு கூப்பிட்டேன். அப்ப தான் உன்னோட அம்மாவோட சந்தேக புத்திய உன் கிட்ட நான் முழுசாப்பார்த்தேன். இந்தா உன்னோட பேர்ல என்னோட கம்பெனிய மாத்தின கிரையப்பத்திரம்” என கொடுத்த போது, வாங்கிக்கொண்டவள், தந்தைக்குப் பக்கத்தில் வந்து பயமின்றி நெருக்கமாக மகிழ்ச்சி மனதில் பொங்க பூரிப்புடன் அமர்ந்து கொண்டாள்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *