கல்யாணமாங் கல்யாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 16, 2025
பார்வையிட்டோர்: 2,983 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ரசம்னா அம்மா கையாலதான் வைக்கணும்” தொடர்ந்து குமார் குரலைத் தணித்து “யம்மா நீங்க பாத்திருக்கும் பொண்ணுக்கு நல்லா சமைக்கத் தெரியுமா?” என்று கேட்டான். 

“ஏன்டா. உனக்கு எப்படியாவது அவளப் பத்திப் பேச்செடுக்கணுமே அப்படித்தானே?” என்று அம்மா நகைத்தார்கள். 

“நீங்கதான் நாப்பது நாள் லெந்து காலம் முடியற மட்டும் பொண்ணைப் பார்க்கக் கூடாதுன்னிட்டீங்க. விபரமாவது சொல்லலாம்லா” மகன் சலித்துக் கொண்டான். 

“எத்தனை தடவைடா சொல்றது? பொண்ணு நல்ல அழகு. சிலோன்ல இருந்ததாலே இங்கிலீஷெல்லாம் சரளம். அது நடையுடை, மரியாதையான போக்கு – எல்லாம் பாக்க நிறைவா இருந்ததாவே அவ சித்தி கிட்ட விசாரிச்சுப் போக, ஏறக்குறைய கல்யாணம் கிட்ட வந்த மாதிரி ஆயாச்சு. இன்னும் ஈஸ்டரு பண்டிகைக்கு மூணே வாரந்தாங்க. அன்னைக்கு நீ பொண்ணை கோயில்ல பாத்துடு. பிடிச்சா முடிச்சுரலாம்” அம்மா கடகடவென்று இருபதாம் தடவையாகச் சொல்லி முடித்தார்கள். 

“எல்லாத்துலயும் கணக்கு பாக்குற அப்பா எப்படி அழகு, குணம் போதும்னு விட்டாங்க? நகை, பணம், கட்டிலு..” விரல்களைச் சுண்டி கண்களை விஷமமாய்ச் சிமிட்டினான் மகன்.

”அதான் நீ முன்னமே சொல்லிட்டியேடா. அதெல்லாம் கூடாதுன்னுட்டு அப்பாவுக்கு வருத்தந்தான். இனி சின்னவனுக்கு பாக்குற பொண்ணும் கைய வீசிக்கிட்டுத்தான் வரும்னு. பொண்ணப் பாக்காதயே பய இந்த ஆட்டம் ஆடுதாங், பாத்தாச்சுன்னா, என்ன பண்ணுவானோன்னாங்க.” 

“ஹூம் – பொண்ணப்பாத்து ஆடுதான்னு ப்ளேட்டை மாத்திடுவீங்கன்னு தான் நா முன்னமே இது பத்திக் கறாரா. சொல்லிட்டேன். வரதட்சணை தப்பும்மா” என்றான், குமார் கை கழுவியபடி. 

“அடபோடா. பெரிய மனுஷன் பேசுதான்” அம்மா முணுமுணுத்தபடி மேஜையை ஒதுங்க வைத்தார்கள். 

“பழம் இருக்காம்மா?” 

“இல்லடா, பொடி நடையா பஸ்ஸ்டாப் வரை போயி ஒரு டஜன் வாங்கிட்டு வந்திர்ரியா?” 

அவனுக்கும் காலார நடந்தால் நன்றாயிருக்கும் போலத் தோன்ற சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான். வெளியே காற்று இதமான குளிரில் வீசியது. அங்குமிங்குமாக விரையும் பேருந்துகளைப் பார்த்தபடி நடந்தவன், ஐந்து நிமிட சொகுசான நடையில் கடையை அடைந்தான். கடையில் கூட்டமில்லை. ‘அண்ணாச்சி பத்து நிமிஷமாவது இருத்திப்புடுவாரு’ என நினைத்தபடி 

“என்ன அண்ணாச்சி பச்ச பழம் நல்லதா ஒரு டஜன் வைங்க” என்றான். 

”அடடே. தம்பி வாங்க” உற்சாகமாகச் சிரித்தவர். “பச்ச பழம் பழுக்கலியே – ரஸ்தாளி கனிஞ்சிருக்கு தரவா?” கேட்டார். 

“ம்”

“அப்படியே ஆறு ப்ளம் கேக் வைக்கட்டுமா?”

“என்ன, புதுசா கேக் வியாபாரமெல்லாம்?”

”தெரிஞ்சவுக போட்டுக் குடுக்கறது. ஒரு ஒத்தாசைக்கு வித்துக் குடுக்குறதுதான். பாவம் சிலோன்ல இருந்து வந்தவுக தம்பி. அவுக மூத்த பொண்ணுக்கு கல்யாணம் தகஞ்சிருக்கு. நல்லா வாழ்ந்தவுங்க. நகை நட்டு இருந்ததைக் கொண்டு சமாளிச்சுக்குவாங்கன்னு வச்சுக்கங்க, கல்யாணச் செலவு போக, ரொக்கமா பத்தாயிரம் கேட்டிருக்காங்க புள்ள வீட்டுல.” 

“அதவிடமாட்டாங்களே நம்மூர்ல?” கசப்பாய் சிரித்தான் குமார். 

“கொஞ்சம் நகைய விக்கலாம்னா இன்னுமொரு பொண்ணு இருக்கு அவுகளுக்கு. அதாங் தங்கச்சி இப்படி கேக்கெல்லாம் போட்டு கொண்டு வாரது”. அவர் கை காட்டிய திசையில் யதார்த்தமாய் திரும்ப, இருளில் ஒரு இளம்பெண் நிற்பது தெரிந்தது. மெல்லிய உடல்வாகு. அரைத் தாவணியில் அழகாக இருந்தது. அவள் எங்கோ பார்ப்பது போன்ற பாவனையில் நின்றாள். சின்ன மோவாயில் தெரிந்த உறுதியும், அலட்சியமும் குமாருக்குப் பிடித்திருந்தது. 

“ம். ஒரு டஜன் கேக் வைங்க” பையில் காசிருந்தது.

“இன்னிக்கு டாக்டர் வீட்டுப் பாப்பாவுக்கு பெர்த் டே சாக்லேட் கேக் ஆர்டர் வாங்கிக் கொடுத்தேன். அதாங் காசு வாங்கிப் போக நிக்குது பாப்பா” 

“இந்த நேரத்துல தனியா வந்திருக்காங்க?” அவளையும் பார்க்காமல் அண்ணாச்சியிடமும் என்றில்லாமல், பொதுவாகச் சொன்னான் குமார். அவள் உடல் லேசாக விறைத்துக் கொண்டாற் போல தெரிந்தது. ‘அசட்டுக் கேள்வி’ என்பது அதன் அர்த்தமோ?’ 

“இந்தா… பஸ்ல ஏறுனா, பத்து நிமிஷம்… வீடு அருகாமைதான். நீங்களும் கேக் விஷயமா தெரிஞ்சவுங்களண்ட சொல்லி வைங்க தம்பி. துணியில் எம்பிராய்டரி வேல எல்லாம் கூட செய்வாங்க. அம்மாகிட்டயும் சொல்லி வைங்க. உபகாரமாயிருக்கும்.” என்றார், அண்ணாச்சி, அவரும் சிலோனிலிருந்து வந்தவர்தான். 

“சரி வரட்டுமா” சில்லறையுடன் பார்சலை வாங்கியவன் கிளம்பினான். 

வீடு திரும்பும்போது, அவன் காற்றையோ, விரையும் பேருந்துகளையோ ரசிக்கவில்லை. இருட்டிலிருந்து அந்தச் சிறுபெண் அவனையே நோக்கி முறைப்பது போலவும், அவள் விழிகள் அவன் முதுகை ஊடுருவி துளைப்பதும் போலவும் தோன்ற அவன் எட்டி நடந்தான். 

மனதுள் ஏதோ பிராண்டியது. 

வீட்டினுள் நுழைந்ததுமே நேரே அம்மாவிடம் போய் கேட்டான். ”ஏம்மா, நீங்க பணம் ஏதும் அவுங்க வீட்ல கேக்கலை தானே?” 

“போடா ஒன்னோட இதே தொல்லை. இன்னும் பொண்ணப் பாக்கல. ஒண்ணும் நிச்சயம் பண்ணல.. கிடந்து குதிக்கிறாள்.” 

”இல்லைன்னா இல்லைன்னு சொல்லுங்களேன்” குமார் அடிக்குரலில் உறுமினான். 

“என்னம்மா, அண்ணா உங்ககிட்ட எப்பப் பார்த்தாலும் குசுகுசுன்னு பேசுறாங்க?” தங்கை சுவாரஸ்யத்துடன் மூக்கை நீட்ட – பேச்சு திசை மாறியது. 

அரைமணி கழித்து அவன் அம்மா படுக்கை விர்க்கையில் மறுபடி கிசுகிசுத்தாள். 

”பொண்ணு பேரு என்னம்மா?” 

“அப்பா சொல்ல வேண்டானுட்டாங்கன்னு சொன்னேனே.”

”எனக்குத் தெரியணும்.” 

“என்ன விசாரணையா? அதுக்கெல்லாம் அவசியமில்லை. நல்ல பொண்ணு தான்,” 

“விசாரணை உங்களைப்பத்திதான். எங்கே ரொக்கம் கேட்டிருவீங்களோன்னு பயமாயிருக்கு.” 

அம்மாவின் நிஜ முறைப்பில் அடங்கி விட்டான். நாட்கள் போகப்போக குமாருக்கு பயங்கள், சுவலைகள் குறைந்து உற்சாகம் பெருகிக் கொண்டிருந்தது. அண்ணாச்சி கடைக்குப் போக நேரும் போதெல்லாம் ப்ளம் கேக் வாங்கிக் கொண்டான். ருசி பிரமாதமாயிருக்க, ஆபீஸ் பிரிவுபசார விழாவிற்கு நூறு கேக் ஆர்டர் பண்ணி வாங்கிக் கொடுத்தான். ஆனால் அப்பெண்ணை அவன் பிறகு பார்க்கவே நேரவில்லை. ஆனாலும் அவ்விள முகம் அவன் மனதில் பதிந்து போனது. 

என்றைக்குமில்லாமல் ஈஸ்டர் பண்டிகைக்கு தனக்கு நல்லதாக இரண்டு செட் துணி எடுத்துக் கொண்டவன், தம்பி, தங்கைக்கும் துணி வாங்கித் தர. 

“அப்பா வாங்குறத விடமாடர்னா, நல்லாயிருக்குண்ணா” என உற்சாகமாய்ப் பெற்றுக் கொண்டார்கள். 

ஈஸ்டர் ஞாயிறன்று அதிகாலையில் கோவிலுள் நுழைகையில் படபடப்பாய் உணர்ந்தான் குமார். மல்லிகைச் சரங்களும் லில்லி ரோஜாக்களுமாக கோயில் பார்க்க ரம்மியமாக இருந்தது. 

இதமான மணம் எங்கும் பரவியிருந்தது. தனக்காகவே, தான் தன் வருங்கால துணைவியை முதன் முதலாகப் பார்க்கப் போவது குறித்தே அத்தனை அலங்காரமும் செய்யப்பட்டது போல தோன்றியது. புதுத்துணி அணிந்த உற்சாகமும் சேர, மின்விசிறியின் அடியில் வாகான இடமாய்ப் பார்த்து அமர்ந்தான்.. லோஷனும் பவுடருமாய் பூசியது வியர்வையில் கலையம் கூடாதே! கோயிலில் இரண்டாம் மணி அடிக்கையில் தங்கை ரூபி மெல்ல அருகில் வந்து, 

“இப்ப உள்ளே நுழையறாங்களே. அவங்களைப் பாத்துக்குவீங்களாம். அந்த மஞ்சச் சேலை கட்டுன அக்கான்னு அம்மா சொல்லச் சொன்னாங்க” என்றபடி அம்மாவிடம் நழுவினாள். 

அவன் நிதானமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும் மனம் எகிறியது. மூச்சு விடுவது சிரமமாய்த் தெரிந்தது. முடிந்த வரை அருகிலிருந்த அப்பாவும். தம்பியும் அறியாவண்ணம் ஓரக்கண்ணால், நுழைந்தவர்களை நோட்டமிட்டான் குமார். ‘பளீர்’ மஞ்சள் சேலை வாகாய் சுண்ணில் சிக்கியதும் கைக்குட்டையால் முகத்தைத் துடைப்பது போன்ற பாவனையில் சற்றுத் துணிவாய் அவள் முகத்தைப் பார்த்தான். பக்கவாட்டில் தெரிந்த முகம் அழகாகவே இருந்தது. ஒரு கனிவான புன்னகை உதடுகளில் இருக்க, அந்த அமைதியான முகம் அவனைப் பரவசப்படுத்தியது. திருப்தியுடன் அருகிலிருந்த தம்பியைப் பார்த்து புன்னகைத்தான். இம்மாதிரி சந்தர்ப்பங்களில் அப்பாவைப் பார்த்து புன்னகைக்கும் வகையில் அவர்கள் வளர்ச்சுப்படாததால் தலையைக் குனிந்து கொண்டான். 

பாடலின்போது அனைவரும் எழுந்து நிற்க, குமாரின் பார்வை மறுபடி பெண்கள் பக்கம் தாவி, துணுக்குற்றது. மஞ்சள் நிற சேலையின் அருகே நீலநிற தாவணியில் கிசுகிசுத்து சிரித்தபடி நின்றது… அந்த கேக் விற்கும் பெண்! ஒருமுறைதான் பார்த்திருந்தானானாலும், அந்த அழகிய முகமும், கண்களும் எளிதில் மறக்கக் கூடியவை அல்லவே! தலையில் யாரோ அடிப்பது போலிருந்தது! இப்போது அவன் படபடப்பு வேறுவிதமாக மாற, வியர்க்க ஆரம்பித்தான். ‘அப்போ, இவங்ககிட்ட பத்தாயிரம் கேட்டது நாமதானா?’ அவன் அவஸ்தைப் பட்டான். பிறகு அவன் அக்கம் பக்கம் திரும்பவில்லை. 


வீட்டினுள் நுழைந்ததுமே அம்மா கேட்டார்கள். “ஏண்டா சீக்கிரமே வீட்டுக்கு வந்திட்ட கோயில்ல ஆராதனை முடிஞ்சதும் நாங்க பெண் வீட்டாரோட பேசிக்கிட்டிருந்தோம். அவங்க வீட்டிலயும் உன்னைப் பாக்க ஆசைப்பட்டாங்க.” 

இத்தனை நாட்களாய் தரையில் கால் பாவாமல் திரிந்த மகன் இறுகிப் போய் நின்றது உறுத்தியது. 

“எண்டா மூஞ்சி கண்டியிருக்கு? பொண்ணைப் பிடிக்கலையா?” 

தங்கைக்கு அன்றுதான் விஷயமே தெரிய வந்திருந்ததில் அவளுக்குத் தலைகால் புரியவில்லை. “ரொம்ப ஸ்வீட் அந்தக்கா… அதெப்படி அண்ணாவுக்கு பிடிக்காமலிருக்கும்?” என்று கூவினாள். 

“பிடிக்கலை.” குமார் அழுந்தமாகச் சொன்னான். 

“அண்ணா, ஒனக்கு இதுக்குமேல் எங்கயும் கிடைக்காது”. தம்பி நையாண்டியாய்ச் சொன்னான். அவனுக்கும் பெண்ணைப் பிடித்திருந்தது போலும்! 

“நா சொன்னது பொண்ணையில்ல. நாம பத்தாவிரம் அவங்ககிட்ட கேட்டது பிடிக்கலைன்னேன்.” 

அதுவரை அனைத்தும் கேட்டவாறு உள்ளிருந்த அப்பா வெளியே வந்தார். அவர் வியாபாரி. பேச்சு அளவாகத்தான் இருக்கும். எந்தப் பிரச்னையிலும் முக்கிய கட்டங்களில் மட்டுமே பிரத்தியட்சமாவார் 

“இப்ப என்னல சொல்ற?” அமுக்கமாய்க் கேட்டார். 

“நா இவ்வளவு சொன்ன பிறகும் நீங்க காக கேட்டிருக்கறது தப்புப்பா” 

“ஒனக்கு யாருவ சொன்னா?”

“தெரிய வராமயா போயிரும்?” 

“அவுக வீட்ல அதுக்குள்ளாற வத்தி வைக்கிற வேலையெல்லாம் ஆரம்பிச்சாச்சா?’ 

குற்றம் செய்தவர் பிறரை குற்றவாளியாக்க முயன்றார்.

“தா கேக் வாங்கி வருவேனே, அது அந்தப் பொண்னோட தங்கச்சிதான். அண்ணாச்சி கடையில வித்திட்டிருந்தது, அவருதான் விவரமெல்லாம் சொன்னாரு.” 

“யாரு அந்த சிலோன் பயலா?” 

“ம்… அவருக்கு இதொண்ணுந் தெரியாது. இன்னிக்கு கோயில்ல அந்தப் பொண்ணைப் பார்க்கவும் விஷயம் புரிஞ்சுது. ஏம்மா அந்த நீலத் தாவணி தங்கைதானே?” 

அப்பா ஒரு நிமிஷம் மௌளமானார். எல்லோருக்கும் மூச்சு விடுவதற்குக்கூட யோசனையாயிருந்தது- 

“சரி – வாங்குனேன். செலவெல்லாமிருக்குல்ல. நமக்கு. அத்தைமாருக்கு புடவையெல்லாம் எடுக்கணுமில்ல” 

“சரி- அவுங்க வீட்டாருக்கு துணிமணியெல்லாம்? நம்ப செலவா?” அதே தொனியில் கேட்டான் குமார். 

“இந்த நக்கலெல்லாம் வேணாம்ல” அப்பாவின் காதுகள் சிவந்தன. 

“பின்ன? கல்யாணச் செலவு. விருந்தெல்லாம் பொண்ணு வீட்டச் சேந்ததுன்னீங்க. நமக்கு ட்ரெஸ் கூட நாம எடுத்துக்கக் கூடாதாப்பா? 15 பவுன் நகை போடறதாப் பேச்சு. நாம் ஒரு மூணு பவுன்லே தாலி செஞ்சு போடக்கூடாது? நமக்கும் நிறைவா இருக்கும். அவுங்களுக்கும் திருப்தியாப் போவுமில்ல?” 

“பய புரட்சி பேசுதாங்” 

“நியாயம் தாம் பேகறேன். புரட்சியா தெரியுதாக்கும்? நானும் என் உறவுக்காரங்களும் பொண்ணு வீட்டுக் காசுல ட்ரெஸ் தச்சு போட்டுக்கிட்டு, அவுங்க செஞ்ச தாலிய வாங்கிக் கட்றது… ப்ளீஸ்… அசிங்கமாயிருக்குப்பா.” 

“நாளைக்கு ஒந் தங்கச்சிய எவண்டா வந்து தாலியும், புடவையும் குடுத்து கட்டிக்கப் போறான்? நகை, கட்டிலு, பீரோ, ரொக்கம் எல்லாஞ் சேந்து செலவு எழுபதுக்கும் மேல எகிறும். ஏன்? ஒரு பெரிய தோட்டை எட்டிரும். ஏதோ பயலூவ கல்யாணத்தையாகிலும் செலவில்லாம செய்யலாம். பாத்தா…” அப்பாவுக்கு கோபத்தில் வழக்கத்துக்கு மாறாக நீளமாக பேசியதில் மூச்சிரைத்தது 

தன் செயல்களின் நியாயங்களை எடுத்துரைக்க வேண்டிய சூழ்நிலை இதுவரை அவருக்கு நேரவில்லை. இன்று ‘பொடிப் பய’ கேள்வி கேட்கத் தான் பதிலளிக்க நேர்ந்தது அவருக்கு எரிச்சலாயிருந்தது. 

“உக்காருங்கப்பா.” 

“தண்ணி கொண்டாம்மா” மகளிடம் கேட்டார். 

தண்ணீர் அருந்தி அமர்ந்தவரிடம் மகன் தொடர்ந்தான். “தங்கச்சி கல்யாணத்துக்கு இன்னும் ஏழு எட்டு வருசம் இருக்குப்பா.” 

“நிலமை மாறுதுல்லா” 

“இப்ப அதத்தான் மாத்தலாம்ணு சொல்றேன். நாம இன்னிக்கு அனுசரணையா நடந்தா நாளைக்கு…” 

”ஒன்னை மாதிரி ஒரு இளிச்சவாயன் ஒத்தங்கச்சிக்கும் கிடைப்பான்ற? ஒலகத்தப்பத்தி ஒனக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான்ல” 

“அப்பா, நம்ப வீட்டை ஒட்டின சந்துல, நான் ராத்திரி ரண்டாம் ஆட்டம் முடிஞ்சு நுழைஞ்சா இருட்டு ஆளை அமுக்கும். அடுத்த அடி எடுத்து வைக்கத் தோணாது. நடக்க, நடக்க காலு வைக்கற இடம் வாகாத் தெரியும்பா, ஏதோ போதுமான வெளிச்சம் கிடைச்சிடும். இன்னிக்கு என்னை மாதிரி ரண்பேருன்னா, இன்னும் எட்டு வருஷம் போனாபத்து பேருப்பா. இப்படி இவங்களை நோகடிச்சி, நாம வாங்கி செலவழிக்கத்தான் கல்யாணம்னா எனக்கு அது வேணாம்பா. அவுங்க வீட்டாரை இத்தனை வேதனைப்படுத்திட்டு அவளோட வாழற தைரியம் எனக்குக் கிடையாது.” 

தந்தைக்கும் அது எங்கோ குத்தியது. அவரது முப்பது வருட தாம்பத்தியத்தில் முக்கால்வாசி சண்டைகள், அவர் மனைவி அவர் எதிர்பார்த்ததைக் கொண்டு வராததாலும் அதனால் அவர் அவள் வீட்டாரைக் கசக்கிப் பிழிந்து சீர் பிடுங்கியதாலும்தான். 

மனைவி, மூன்று பிள்ளைகள் பெற்று, குடும்பத்தில் காலூன்றிய பின் ஆசைதீர அவர் வீட்டாரை மென்று துப்பினாள். 

“இரட்ட வடச் செயினு வேணும்னு என்னா நிலையா சிரிச்சாக, நின்னாங்க ஒங்கக்கா? எங்க அம்மா கண்ணீரு விட வயிறு எரிஞ்சது மறக்குமா? அதாங் அவுக பெத்தது ரண்டும் ஒண்ணுக்காவாம போயிருச்சு” 

”எங் கலியாணப் புடவையப் பாத்துட்டு ஒங்கம்மா ‘இம்புட்டோண்டு சரிகை’ன்னு உதட்ட பிதுக்குனது இன்னிக்கும் நினைப்பிருக்கு. இத்தனை வருசத்துல எனக்கு ஒரு நாலு புடவ வாங்கிக் குடுத்திருப்பாங்களா? பாயும் நோயுமா விழுந்து உருண்டு போய் சேந்தாச்சு… போ” கொக்கரித்தாள். 

”ஒங்கப்பா, ‘எம்மூத்த மருமக அம்பது பவுன் நகையோட வந்தவன்று இளயவ என்னை மட்டந்தட்டுவாரே. அக்கா, அவர ‘மாமான்னு கூப்பிட்டு நா ஒரு தடவ கேட்டதில்ல. கண்ணு போயி துழாவி திரிஞ்சப்ப, நானில்லாட்டி கிழவரு நாயிபட்ட பாடுதான் பட்டிருப்பாரு” 

சமயம் பார்த்து வார்த்தைக் சுத்திகளைச் செருகி, தான் 30 வருடங்களுக்கு முன் பட்ட காயங்களை ஆற்றிக் கொள்வாள். ஒருவேளை நான்கு பையன்களுக்கும் பிடுங்கி பிடுங்கித் தான் பெற்றோரும் நிம்மதியில்லாது போய் சேர்ந்தார்களோ? அவருக்கு பயமாய் இருந்தது. அவர் பேரக்குழந்தைகள் அமோகமாய் வரணும். மருமகள்கள் வாய் நிறைய ‘மாமா’ என்று தன்னை அழைக்க வேணும். அன்பும், சிரிப்புமாய் குடும்பம் ஒன்றாய்… சந்தோஷமாய்… 

தம்பி மெல்ல பேசினான். 

“அண்ணஞ் சொல்றது சரிதாம்பா. அவுங்க கேக் வித்து, துணி தச்சு சேத்த பணத்தை நாம செலவழிச்சிட்டு, பிறகு அவுங்க முகத்தில முழிக்கிறது கஷ்டம். அண்ணி இதே வீட்டுல இருக்க, தினம் அவுங்கள பார்க்க கூசிடும்ப்பா” 

தனக்கில்லாத கூச்சம் பையன்களுக்கு இருப்பது அவருக்குப் பெருமையாய் இருந்தது. திருமண சமயத்தில் விதைத்த சீர் எனும் விதை காலமெல்லாம் விஷவிருட்சமாய் பரவிப் படர்ந்து, உறவுகள் உறுத்தலாகிப் போகலாம். விதை முக்கியம் என்பது அவருக்குப் புரிந்தது. 

முகம், இளக… 

“அண்ணியாங்… பயலுவ ஒரேடியாக் குதிக்காங்கடி. நீ என்ன சொல்ற?” புன்னகையோடு மனைவியைப் பார்த்தார். 

ஆச்சரியமாய் நிமிர்ந்த அம்மாவின் முகத்தை மெல்ல மகிழ்ச்சி நிறைத்தது. 

“எங், ஒங்க வாயால சொல்லக் கூடாதாக்குங்? இப்படி பந்தா வேணும்போது என் ஞாபகம் வந்திடும்.” 

குமாரின் பக்கமாய்த் திரும்பியவன், 

“சரிப்பா, காசு எதும் எதிர்பார்க்காம இதே பொண்ண – பேரு க்ருபா முடிச்சுடலாம்.” 

கணவனை, ‘சரியா’ என்பது போல பார்த்தார்கள் அம்மா.

“நாகாசு கொஞ்சம் சேத்து வச்சிருக்கேம்பா..- முணு பவுன்லே தாலிக் கொடி..” தயக்கமாய் இழுத்தான் குமார். 

“அண்ணிக்கு ஸ்கூல்ல பார்ட் டைம் வேல கெடைச்சிருக்காம். அவுக அம்மா சொன்னாங்க. வீட்டுத் துணி தைப்பாங்க. தெரிஞ்சவுங்க வீடுகளுக்கு கேக், பலகாரம் போட்டுக் குடுக்கலாம். மாசத்துக்கு ஆயிரத்துக்கு மேல வரும்பா” தம்பி துடியாய் நின்றான். அண்ணனும், தம்பியும் ஒருவரையொருவர் சிநேகமாய் கண்களால் தொட்டுப் புன்னகைத்தார்கள். 

“பணங்காசு ஓரளவுக்குப் பாத்தாச்சு. நாசூக்கு, நாகரீகம் தெரிஞ்ச பொண்ணு வேணும்னு யோசிச்சதே நீங்கதானே” என்று அம்மாவும் சேர்ந்து கொண்டார்கள். 

“செய்யுப்பா, நீயும் ஆரம்பத்துல இருந்து அதைத்தாங் சொல்லிட்டு திரிஞ்ச, நிறைவாச் செய்யி. சந்தோஷமா வாழ்ந்தாச் சரி.” 

அவர் குரலில் நெகிழ்வும் முகத்தில் பெருமையும் தெரிந்தன. 

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *