கலா சேவகி
(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

லார்டு கார்வின், தெம்ஸ் நதிக்கரையில் இருந்த தன் பங்களாவின் மேல் மாடியில் உட் கார்ந்து, மனதைச் சிந்தனைக் கடலில் மூழ்க விட்டுக்கொண்டிருந்தார். அவர் வாயிலிருந்து சுருள் சுருளாக வந்துகொண்டிருந்த புகை, அவருடைய நெஞ்சில் ஏற்பட்ட ஏக்க அலைகளைப் போல் உயரச்சென்று வான வெளியில் கலந்து மறைந்தது.
கார்வின் இந்தியாவின் மாஜி வைஸ்ராய். அவரும் அவருடைய மனைவியும் இந்தியாவிலி ருந்து லண்டனுக்கு வந்து ஒருவாரமாகிறது. தான் இளமைப் பருவத்தில் அந்தத் தெருவி லேயே பெரிய சாமர்த்தியசாலியென்று பெய ரெடுத்திருந்ததையும், அதுகாரணமாகப் பின்பு இந்தியாவுக்கு வைஸ்ராயாக நியமிக்கப்பட்ட தையும், அங்கே சுதேச மன்னர்களும் லக்ஷாதிபதி களும் தன்னிடம் காட்டிய அபார மரியாதை களையும் எண்ணி எண்ணிப் பெருமூச்சுவிட்டார்.
இந்தியாவில் அவருக்கென்று கட்டப்பட்டி ருந்த மாளிகையும், தான் அங்கே செலுத்தி வந்த அதிகார தோரணைகளும், அப்படியப்படியே அவர் மனக்கண்முன் காட்சியளித்தது. அவர் அவ்வளவு அக்கிரமங்கள் செய்திருந்தும், லண்ட னுக்குப் புறப்பட்டபோது கும்பல் கும்பலாய் துறை முகத்துக்கு வந்து வழியனுப்பிய இந்தியர் களின் மனப்பான்மையை அவரால் நன்கு அறிந்துகொள்ள முடியவில்லை.
அவர் வேலைபார்த்த ஐந்து வருஷங்களும் ஐந்து நிமிஷங்களாகப் பறந்துபோய் விட்டது போல் அவருக்குத் தோன்றியது. அதிர்ஷ்ட தேவதை இன்னும் சில காலத்துக்குத் தன்னை அந்தப் பதவியில் வைத்திராததைக் குறித்து லார்டு கார்வினுக்கு மிகுந்த வருத்தம். மறுபடி யும் அதே பதவிக்கு வரலாம் என்ற நம்பிக்கை அவருடைய வருத்தத்தை ஒருவாறு தணித்தது.
தான் ஊரில் இல்லாதபோது தன் வீட்டை யும் தாயாரையும் ஜாக்கிரதையாகக் கவனித்து வந்த மிஸ் மோரிஸின் மேல் அவருக்கு மிகுந்த பிரியம் உண்டாயிற்று. அவளுக்கு மாதாமாதம் சம்பளம் கொடுத்து வந்தபோதிலும் மேற் கொண்டு ஏதாவது ஒரு பெரிய உதவியைச் செய்ய எண்ணினார் கார்வின். ஆனால் நெற்றி வியர்வை நிலத்தில் விழ விருந்துக் கச்சேரிகள் லும், முடிசூட்டு விழாக்களிலும், அஸ்திவாரக் கல் நாட்டு விழாக்களிலும், சுற்றுப் பிரயாணங் களிலும் ஐந்து வருஷத்தைக்கழித்துப் பாடுபட்டு இந்தியாவில் சம்பாதித்த பொருளைக்கொண்டு அவளுக்கு உதவி செய்ய அவர் மனம் இடங் கொடுக்கவில்லை. தன் கைச் செலவில்லாமலே தன்னுடைய பெயரால் அவளுக்கு உபகாரம் செய்யக்கூடிய வழி ஒன்றை யோசித்துப் பார்த்தார் அவர்!
மிஸ் மோரீஸுக்கு வயது இருபதுக்கு. மேலிருக்கும். இளமையிலேயே தரித்திர தேவதை அவளைப் பிடித்துக்கொண்டதால் கலா தேவதையும் சௌந்தரிய தேவதையும் அவளிடம் கருணை காட்ட முடியாது போயிற்று. அது காரணமாகவே அவள் இதுவரை கலியாணம் ஆகாமல் கார்வின் குடும்பத்தில் வேலைக்காரியாக இருந்து வந்தாள். கைநிறையப் பணம் இருந்தால் லண்டன் நகரில் காதலன் கிடைப்பது கஷ்டமல்ல என்பது அவளுக்குத் தெரியும். எப்படியாவது பணத்தைச் சேர்த்துக் கலியாணம் செய்துகொண்டு தனியாக வாழ வேண்டுமென்று நினைத்து அதற்கு வேண்டிய முயற்சிகளை செய்து வந்தாள் மிஸ் மோரீஸ். இதுவரை சம்பளத்திலிருந்து முன்னூறு பவுன் வரை சேர்த்து வைத்திருந்தாள். குறைந்தது ஆயிரம் பவுனாவது இருந்தால்தான் அவள்மீது ஒருவனுக்குக் காதல் உண்டாகும். என்ன செய் வது? தன் எஜமானனிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்துப் பொருளுதவி கேட்க சமயம் பார்த் துக் கொண்டிருந்தாள்.
மோரீஸைப்பற்றிய யோசனையில் ஆழ்ந் திருந்தார் கார்வின். அப்போது அவள் அவர் எதிரே இருந்த கண்ணாடித் தம்ளரில் பிராந்தியை ஊற்றிக்கொண்டிருந்தாள். அவளுடைய பணி வும் கவலை நிறைந்த முகம் கார்வினுடைய உள்ளத்தில் இரக்க உணர்ச்சியைத் தூண்டி விட்டது.
“மோரீஸ், ஏன் மிகவும் கவலையோடிருக்கிறாய்?” என்று கேட்டார். அவள் சிரித்துக் காண்டே, தங்களுடைய வேலைக்காரியாக இருக்கும்போது எனக்குக் கவலையேது?” என்றாள்.
அவள் சொன்ன தாழ்மையான பதில் கார்வினுடைய உள்ளத்தை அப்படியே குளிரச் செய்து விட்டது.
“நீ சொல்லாவிட்டாலும் உன்னுடைய கவலைகளை நான் அறிந்து கொண்டேன். அவைகளை நீக்க ஒரு வழி செய்கிறேன். நான் சொல்கிறபடி செய்தால், நீ லண்டன் நகரத்திலுள்ள சீமாட்டிகளோடு சரி சமானமாக வாழவும் இஷ்டப்பட்ட கணவனை மணந்து கொள்ளவும் கூடும். என்ன சொல்கிறாய்?”
“தங்கள் உத்தரவை நான் எப்போதாவது மீறியது உண்டா? தங்கள் சித்தப்படியே செய்கிறேன்.”
“அப்படியானால் நீ இன்னும் இரண்டு வாரத்தில் இந்தியாவிற்குப் புறப்படத் தயாராக இரு. பிரயாணச் செலவிற்குமட்டும் நூறு பவுன் எடுத்துக்கொண்டு போனால் போதும். நாளை சாவகாசமாக நீ இங்கே வா. இந்தியா வில் இன்னின்ன செய்ய வேண்டும், யாரிடம் எப்படிப் பேச வேண்டுமென்பதை விபரமாகச் சொல்லி வைக்கிறேன். இரண்டு மாதத்தில் நீ அங்கிருந்து மிகுந்த செல்வத்தோடு திரும்பி விடலாம். ஒன்றும் யோசியாதே. அதிர்ஷ்ட தேவதை உன் மீது பரிபூரண கருணை காட்ட உத்தேசித்திருப்பதால்தான் எனக்கு இந்த உபாயம் தோன்றியது.”
மோரீஸ் அங்கிருந்து போய் விட்டாள். அவளுடைய மனதில் ஆனந்தம் பொங்கியது. தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைக் கற்பனை பண்ணிக் கொண்டே தன் வீடு போய்ச் சேர்ந்தாள். கார்வின் இந்தியாவிலிருந்து வந்த பிறகு அவருடைய நிலைமை எப்படி உயர்ந்துவிட்ட தென்பதைக் கண்ட அவளுக்கு அவர் சொன்னதில் நம்பிக்கை ஏற்பட்டது.
தினமும் கார்வின் பக்கத்திலேயே உட்கார்ந்து அவர் சொல்லிக்கொடுத்த பாடங்களை நன்றாகப் பாடம் செய்து கொண்டாள் மோரீஸ். அவள் இந்தியாவிற்கு புறப்படவேண்டிய தினத்திற்கு முதல்நாள், இந்தியர்களிடம் அவள் நடத்தவிருந்த நாடகத்தை ஒத்திகைபோட்டு பார்த்துக் கொண்டார் கார்வின். அதில் அவள் காட்டிய நடிப்புத் திறமையைக் கண்டு தன்னுடைய யுக்தி அப்பொழுதே பலித்துவிட்டதாக எண்ணினார் அவர். இந்தியாவிற்குப் புறப்படவிருந்த ‘ரோக்’ என்னும் கப்பலில் மிஸ் மோரீஸ் ஏறிக்கொண்டாள். அவளை வழியனுப்ப வந்த
கார்வின் “கர்த்தர் உனக்கு வெற்றியளிக்கட்டும்” என்று ஆசீர்வதித்து விட்டு நாடகத்தின் சூத்திரக் கயிற்றை இயக்குவதற்காக வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். சமுத்திரத்தில் எழுந்த ஒவ்வொரு அலைகளும் “வெற்றி வெற்றி” என்று ஒலிப்பது போல இருந்தது மோர்ஸுக்கு. “இவ்வளவிற் செல்லுங் கொல்!இவ்வளவிற்காணும் கொல்! இவ்வளவிற் காதல் இயம்பும் கொல்!” என்று, தான் இந்தியாவில் ஒவ்வொரு நாளிலும் செய்ய வேண்டிய காரியங்களுக்குக் குறிப்பெழுதிக் கொண்டிருந்தாள்.
கப்பல் பம்பாய்த் துறை முகத்தையடைந்ததும் கார்வின் சொல்லியிருந்தபடி மோரீஸை வரவேற்பதற்காக ஒரு மாபெரும் கூட்டம் வந்திருந்தது. இந்தக் கூட்டம் அவள் எதிர் பார்த்திருந்ததைவிடப் பத்துமடங்கு அதிகமா யிருந்தது. அதில் கரோடா மகாராஜாவும், அகில இந்திய கலாசேவக சங்கத்தின் தலைவரும் முக்கியமானவர்கள்.
மிஸ் மோரீஸை மகாராஜாவும், சங்கத் தலைவரும் மாலையிட்டு வரவேற்றார்கள். மகா ராஜா வேண்டிக்கொண்டபடி அவள் அவருடைய மாளிகையிலேயே தங்க நேரிட்டது.
சங்கத்தலைவர், பிரதான நகரங்களில் மிஸ் மோரீஸின் பிரசங்கங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்துகொண்டிருந் தார். இதற்கிடையில் மகாராஜாவும் மோரீஸ் அம்மையாரும் அஜந்தா குகை, அரித்வார் க்ஷேத் திரம், வங்க ஓவியச் சாலைகள் ஆகிய கலா நிலயங் களைப் பார்வையிட்டு வந்தார்கள். இடை யிடையே “ஆஹா! என்ன நேர்த்தி! இதனால் தான் ஆங்கிலேயர்கள் தங்கள் உயிரைக் கொடுத் தாவது இந்த நாட்டைக் காப்பாற்றி வருகிறார் கள் ‘ என்று சொல்வதும் டைரியில் ஏதேதோ குறிப்புகள் எழுதுவதுமாக இருந்தாள் மிஸ் மோரிஸ்.
இந்தியாவின் தலைநகரமாகிய டில்லியில் அம்மாளின் பிரசங்கம் ஒன்று நடைபெற்றது. அவள் பேச்சைக் கேட்டு அனுபவித்த சுதேச மன்னர்களும், கலா நிபுணர்களும் அப்படியப் படியே ஸ்தம்பித்து தாங்கள் இருந்த இடத்தி லேயே தூங்கிவிட்டார்கள்.
கூட்டம் முடிந்ததும் தோல்வார் மகாராஜா அம்மையாரைத் தன் ராஜயத்திலுள்ள சிற்பக் கலைகளின் மேன்மையை வந்து பார்த்து அனுப விக்கும்படி கேட்டுக்கொண்டார். அம்மையாரும் அவருடைய வேண்டுகோளை மறுக்க முடியாமல் கரோடா மகாராஜாவிடம் அனுமதி பெற்றுக் கொண்டு தோல்வாருக்குப் போய்ச்சேர்ந்தாள்.
இதற்கிடையில். அம்மையாரின் இந்திய விஜயத்தைப் பற்றிப் பத்திரிகைகளெல்லாம் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தன. ஒரு பத்திரிகை விட்டிருந்த சரட்டிலிருந்து மற்றப் பத்திரிகைகள் கயறு திரித்து அவளுடைய சரித்திர வரலாறுகளைப் பத்திபத்தியாக எழுதித் தள்ளின.
ஒருவர் அம்மையாரின் வாழ்க்கைச் சரித்திரம் எழுத, ஒரு புத்தகக் கம்பெனியை ஆரம்பித்தார். அச்சாபீஸ்களுக்கு வேலை அதிகமாயிற்று. தமிழ் நாட்டுப் பத்திரிகை ஒன்றில் பின் கண்டவாறு மிஸ் மோரிசைப்பற்றி எழுதப் பட்டிருந்தது.
“கலையிலே பிறந்து, கலையிலே தவழ்ந்து கலையிலே மூழ்கி கலையிலே வாழ்ந்து கலைக்காகவே உடல் பொருள் ஆவி மூன்றினையும் அர்ப்பணம் செய்துவிட்டு வரும் மிஸ் மோரீஸ் அம்மையார், கேவலம் நம் நாட்டு அரசமரத்துப் பிள்ளையாரை பார்த்து அப்படியே சொக்கி நின்றுவிட்டா ரென்றால் மற்றச் சிற்பங்களைப் பற்றி அவர் எப்படி அனுபவித்திருப்பாரென்பது ஊகித்தறிந்துகொள்ளக்கூடிய விஷயம்.
“கலைகளைப்பற்றிய விஷயங்களைச் சேகரிப்பதில் மட்டிலும் அம்மையார் மாதம் ஒன்றுக்கு 100,000ரூபாய் வரை செலவழித்து வருகிறாராம். இந்தியர்களிடம் கலைச்செல்வம் இருக்கிறது; ஆனால் ரஸிகத்தன்மை இல்லை என்பதற்குவேறு அத்தாட்சி வேண்டுமா? அம்மையாரின் சுற்றுப் பிரயாணத்திற்குப் பின்பாவது நமது ஜனங்கள் விழித்தெழுவார்களா? அல்லது தூங்கத்தான் போகிறார்களா? அம்மையார் எழுதப்போகும் “உலகக் கலைப்பொக்கிஷம் என்னும் நூலில் இந்தியச் சிற்பமே முதன்மை ஸ்தானம் வகிக்கும், என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை”
தோல்வார் தேசத்திலுள்ள சகல கலைகளையும் அம்மையார் பார்த்து அனுபவித்துக் குறிப்பு கள் எழுதிக்கொண்டு அங்கு இரண்டொரு நாள் தங்கியிருந்தார். பின்பு பல இடங்களுக்குச் சுற் றுப்பிரயாணம் செய்து விட்டு கரோடாவிற்கு வந்து சேர்ந்தார். அங்கே இரவும் பகலும் மகா ராஜாவுடன் இந்தியக் கலைகளைப்பற்றியே பேசித் தன் உற்சாகத்தை காட்டிக்கொண்டிருந்தார். அவ்வாறு ஒருவாரம் சென்ற பின் லண்டனி லிருந்து ஒரு அவசரத் தந்தி வந்தது. மிஸ் மோரிஸை உடனே வந்து விட்டுப்போகும்படி அதில் எழுதியிருந்தது.
கரோடா மகாராஜாவிடம், தான் எந்த விதத்திலும் இரண்டு மாதத்தில் திரும்ப வந்து சேர்வதாக வாக்களித்து விட்டுக் கப்பலேறினாள். தோல்வார் மகாராஜாவுக்கும் அவ்வாறே கடிதம் எழுதிவிட்டாள்.
மேற்கூறிய சம்பவங்கள் நடந்து ஆறுமாதங் களுக்குப் பின்பு லண்டனிலுள்ள ‘மோரீஸ் வில்லா,’ என்னும் பெரிய பங்களாவின் மேல் மாடியில் மோரீஸும் அவள் கணவன் வில்லனும் எதிரெதிரே நாற்காலிகளில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். மோரீஸ் தன் இந்தியப் பிரயாணத்தைப் பற்றி மூன்று நாட்களாகப் பேசியும் இன்னும் பேச்சு முடிய வில்லை.
“பிரயாணத்தின் முக்கியமான பாகத்தை இன்றுதான் சொல்லப்போகிறேன்” என்றாள் மோரீஸ்.
“அதென்ன? இவ்வளவு நாளாகச்சொன்னதையே திரும்பக்கேட்க வேண்டும்போல் அவ்வளவு ரசமாக இருந்ததே. இன்னும் இதைவிட முக்கியமான விஷயம் என்ன இருக்கிறது?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான் அவள் கணவன் வில்ஸன்.
“இந்த மூன்று காதல் கடிதங்களையும் படித்துப்பார். பிறகு அதன் விஷயத்தைச்சொல்கிறேன்” என்றாள். வில்ஸன் அவைகளைப்படித்து விட்டு “அடடா! காதல் கடிதங்களா! சரி சரி சீச்சீ! இந்த மூன்று பேரும் சரியான மடையர்கள் தான். விஷயத்தை விவரமாகச்சொல்” என்று இன்னொரு சிகரட்டைப்பற்ற வைத்தான்.
“இதோ இருக்கிறதே இந்தக் கடிதத்தை எழுதினவர் கரோடா மகாராஜா. சொத்து ஏராளம். இவரிடம் இரண்டொரு காதல் வார்த்தைகளைச் சொல்லிவிட்டு ‘நான் தமிழ் நாட்டு ஸ்திரீகளைப்போல் ஆபரணம் போட்டுக்கொள்ள ஆசைப்படுகிறேன்’ என்றேன். அவ்வளவுதான். இவர் தலைமுதல் கால் வரை என்னை வைரமும் தங்கமுமாக மாட்டி எனக்குப் பெரிய சுமையை உண்டு பண்ணி விட்டார். அந்த நகைகளைக் கழட்டாமலே நான் இங்கே வந்துவிட்டேன். அவர் அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட எழுத வில்லை. அவருக்கு என் காதல் வேண்டுமாம். நான் திரும்ப அங்கு வந்து சேர வேண்டுமாம். எப்படியிருக்கிறது இந்த முதல் மடையன் எண்ணம்?”
“இரண்டாவது கடிதத்தை எழுதியவர் தோல்வார் மகா ராஜாவாம். சரியான பைத்தியக் காரன். வயது எழுபதுக்குமேல் ஆகிவிட்டது. முதலில் அவர் என்மீது அவ்வளவு பிரியத்தோடு பேசவில்லை, ‘நான் இந்தியாவிலேயே, ஏன், உங்களோடேயே வசித்துக்கொண்டு இருந்து விட எண்ணுகிறேன்’ என்று நான் சொன்னது தான் தாமதம், மனுஷனுக்கு உச்சியில் ஐஸ் கட்டியால் அடித்தது போலாகிவிட்டது. ‘உங்களைக் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வது எனக்கு அதை விடப்பிரியம் தான். ஆனாலும் உங்களுக்கு இதற்கு முன்னாலேயே கலியாணம் ஆகியிருக்கலாம். தாங்கள் சம்மதித்தால் என்னையும் மணம் செய்து கொள்ளலாம்’ என்றேன். அவர் திடுக்கிட்டுத் தன் பொக்கை வாயைத் திறந்து, ‘நிஜமாகவா?’ என்றார். எனக்கு அப்பொழுது பொங்கிக்கொண்டு வந்த சிரிப்பை எவ்வளவு கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன் தெரியுமா?”
“கிழவன் நான் சொன்ன நிபந்தனைகளுக் கெல்லாம் சம்மதித்தார். லண்டனில் என்னுடைய கணவன் இருப்பதாகவும், அவனுக்கு இருபதினாயிரம் கொடுத்து விவாகரத்துச் செய்துகொண்டு அங்கே வந்து விடுவதாகவும் சொன்னேன். உடனே கிழவன் முப்பதினாயிரம் ரூபாயை என் கையில் கொடுத்து ‘இன்னும் தேவையிருந்தால் தெரிவி. அனுப்புகிறேன்’ என்றான். இந்த மடையனும் என்னை வரும்படி யாகத்தான் எழுதியிருக்கிறான்.
“தோல்வார் தேசத்து இளவரசன் தான் இந்த மூன்றாவது கடிதத்தை எழுதியிருக்கிறான். இரண்டாவது கடிதத்தை எழுதின கிழவனின் மகன் இவன். கிழவன் இல்லாத சமயங்களில் இவனுடைய காரில் ஏறிக்கொண்டு சமுத்திரக் கரையில் போய் இவனோடு பேசிக் கொண்டிருந்தேன். இவன் விஷயத்தில் நானாக ஒன்றும் சொல்லவில்லை. தானாகவே காதல் பேச்சை ஆரம்பித்து, ‘மிஸ் மோரீஸ், உன்னைத் தோல்வார் தேசத்து மஹாராணியாக்கி விடுகிறேன்’ என்று முடித்தான். அப்போது இவன் முகத்தைப் பார்க்கவேண்டுமே! ‘உங்களைவிட எனக்குதான் இந்த விஷயத்தில் அதிக அக்கரை. இருந்தாலும் லண்டனில் எனக்கு 50,000 ரூபாய் வரை கடன் இருக்கிறது. அதைத் தீர்த்துவிட்டு வந்து உங்களை மணந்துகொள்கிறேன்’ என்றேன். ‘ஏன் இதை முன்னமேயே தெரிவித்திருக்கக் கூடாதா? கடன் காரர்களுக்கு இங்கிருந்தே பணம் அனுப்பியிருக்கலாமே!’ என்றான்.
“நான் போய்த்தான் அவைகளைத் தீர்க்க வேண்டியிருக்கிறது. பல பேருக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஞாபகப்பிசகால் ஒருவருக்கு அனுப்பாமல் இருந்துவிட்டால் அவர்கள் அங்கிருந்து என்மீது வழக்கு தொடர்ந்து வந்தால் அப்புறம் உங்களுக்குத்தானே அவமானம்’ என்றேன். அன்றிரவே ஒருவருக்கும் தெரியாமல் ரூபாய் ஐம்பதினாயிரத்தையும் என் கையில் கொடுத்தனுப்பினான் இந்த மூன்றாவது மடையன்” என்றாள்.
மோரீஸ் கடிதங்களின் விபரத்தை சொல்லி முடித்ததும், “ஆமாம் இவர்களுக்கு உண்மையைத் தெரிவித்துப் பதில் எழுதிவிட்டாயா? இல்லையா?” என்றார் வில்ஸன் துரையவர்கள்.
“பதிலாவது மண்ணாங்கட்டியாவது; பதில் எழுதிவிட்டால் அவர்கள் மனம் ஒருவேளை நிம்மதியடைந்துவிடுமே! இவர்கள் சாகும்வரை என்னைப்பற்றியே எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருக்க வேண்டுமானால் நான் பதில் எழுதவே கூடாது. எனக்கு பணம் கொடுத்ததாக இவர்கள் வழக்குத் தொடரவும் முடியாது. ஆகவே திருடனைத் தேள் கொட்டியதுபோல இவர்கள் மனம் புழுங்கிச் சாகட்டும்” என்றாள் மோரீஸ். அவளுடைய கணவன் தன் மனைவியின் புத்திசாலித் தனத்தையும் லார்டு கார்வினுடைய மூளையையும் வியந்து சிரித்தான்.
அப்போது அந்த மங்கிய மாலைப்பொழுதில் வானம்பாடியொன்று மேற்குநோக்கிப் பறந்து சென்றது. அதன் பின்னால் மூன்று மைனாக்களும் அதை எட்டிப் பிடிப்பதுபோல பறந்து போய்க் கொண்டிருந்தன.
– ஆனந்த விகடன், மணிக்கொடி, வசந்தம், யுவன், சக்தி ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன.
– சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.
| சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம் தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். நன்றியுரை "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: November 1, 2025
பார்வையிட்டோர்: 17