கரையெல்லாம் செண்பகப்பூ
கதையாசிரியர்: சுஜாதா
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு:
த்ரில்லர்
கதைப்பதிவு: November 6, 2025
பார்வையிட்டோர்: 188
(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 15-16 | அத்தியாயம் 17-18 | அத்தியாயம் 19-21
அத்தியாயம் – 17

ஓடிப்போன சிறுவனை வெறித்துப் பார்த்துத் திரும்பினான் கல்யாணராமன்.
வெள்ளி, “பாவிப்புள்ளே… உடனே போயி ஊரெல்லாஞ் சொல்லிப் போடுவான். என்ன செய்வன்?” என்று பதைத்தாள்.
கல்யாணராமன், “வெள்ளி, நீ போய் மறுபடி அங்கே தான் ஒளிஞ்சுக்கணும். போய்டு. நான் சமாளிச்சுக்கறேன்” என்றான்.
“அவுங்க திரும்ப ரூம்புக்குள்ளாற வந்து பார்த்தாங்கன்னா?”
“பாத்தா மாட்டிக்க” என்றான் எரிச்சலுடன்.
அவள் பயந்து போய், “நான் ஓடிப் போயிரட்டா?” என்றாள்.
“உளராதே…! ஓடி எங்கே போவே? கிளம்பின உடனே மாட்டிப்பே. சீக்கிரம் அங்க போய்ப் பதுங்கு!”
தயங்கினாள். “மாட்டிக்குவன்னு பயமா இருக்குதுங்க!”
திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றவளைப் பார்த்ததும் கல்யாணராமனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“வெள்ளி! கிட்டக்க வா!” என்றான்.
உடனே வந்தாள். அவள் நகங்களைப்பார்த்தான்.
“என் கைல உன் நகத்தால கீறிடு. பார்க்கலாம். நீ என்கிட்டருந்து திமிறிண்டு தப்பிச்சுண்டு போயிட்டாப்பல அவுங்க வந்தா நம்ப வைக்கணும்… வா, கீறு!”
வெள்ளி தயங்கி, “இல்லிங்க, மாட்டங்க!” என்றாள். பின் வாங்கினாள். மற்றொரு யோசனை உதித்தது. அவளைத் திடீரென்று பற்றியிழுத்து அணைத்துக் கொண்டான்.
“விடுங்க” என்று வெறித்தனமாகத் திமிறினாள். விடாமல் மூச்சு முட்டினாள். அவள் திமிற கை நகங்களால் அவன் மேல் கீறி விட்டாள். உடனே விட்டுவிட்டு, “அதான் எனக்கு வேணும். இது போதும். நீ போய் அந்த ரூம்ல பதுங்கிக்க. நான் மத்ததைப் பார்த்துக்கறேன்,” என்று கீறின இடத்தைப் பார்த்துக் கொண்டான்.
வெள்ளி திகைத்து, கல்யாணராமனை நன்றியுடன் பார்த்து, “அய்யா, உங்களுக்கு…” என்று ஆரம்பிக்க “அதுக்கெல்லாம் நேரமில்லே. ஓடு… ஓடு!” என்றான். அவள் உள்ளே சென்று மறைந்தாள். சற்று நேரம் மெளனமாக நின்றான். கையில் நிஜ எதிர்ப்புடன் கீறிவிட்டாள். மெள்ள அந்த இடம் உயிர் பெற்று ரத்தக் கோடாகிக் கொண்டிருந்தது. ஆட்கள் வரும் சத்தம் கேட்டது. அரிக்கேன் விளக்கு, தீப்பந்தம், ஒன்றிரண்டு டார்ச்சு விளக்குகள். மருதமுத்து முதலில் வர, உடனே வெள்ளியின் தம்பிப் பயல், தங்கராசு, பெரியசாமி எல்லோரும் வர, சற்றுப் பின் இன்ஸ்பெக்டரின் குரல்கூட தாழ்வாரத்தில் கேட்டது.
“எங்க அவ?” என்றான் மருதமுத்து நுழைந்ததும்.
“யாரு?”
“வெள்ளி!”
“ஓடிப் போய்ட்டா.” என்று தன் புண்ணைப் பார்த்துக் கொண்டே சொன்னான். “சரியான விலாங்குய்யா, அந்தப் பொண்ணு! என்ன திமிறல்! காட்டுப் பூனை மாதிரிக் கீறிட்டு…!”
“ஓடிட்டாளா! எந்தப் பக்கம்? எங்க போனா?”
“நேரா கிராமப் பக்கம்தான் ஓடிப் போனதாப் பட்டது. எவ்வளவோ பேச்சுக் கொடுத்து நிறுத்தப் பார்த்தேன். இந்தப் பையன் முந்திரிக் கொட்டை மாதிரி, ‘எக்கா’ங்கவுமே உடனே உஷாராயிட்டா. புடிக்கப் பார்த்தேன். பிறாண்டிட்டு ஓடிப் போயிட்டா!”
“வுட்டுட்டிங்களா?”
“எப்படிப் புடிச்சு வெச்சிருக்க முடியும். சொல்லு மருதமுத்து?”
“நல்ல காரியம் செஞ்சிங்கய்யா! அந்த மூதேவி கொலைக்குத்தம் செஞ்சவள்னு உங்களுக்குத் தெரியாதாய்யா? ஒரு பொம்பளையாளு – அவளைப் புடிச்ச வெச்சுக்கத் துப்பில்லிங்களா? செவுட்டில ஒரு அறை! பொடனியில் ஒரு வெட்டு! என்ன ஆம்பிளை நீங்க?”
“மருதமுத்து! என்ன பேச்சு வளருது?”
மருதமுத்து ஏமாற்றத்துடன், “சட்! வாங்கடா போவலாம். கிட்டத்தான் இருக்கணும். தங்கராசு, நீ காவாப் பக்கம் போ. பெரியசாமி, நீ ஊர்ப் பக்கம் பாத்துரு… நான் ஒத்தையடிப் பாதையில தோப்புப் பக்கம் போறேன்”.
இன்ஸ்பெக்டர் உள்ளே வந்தார். “என்னய்யா?” என்றார்.
“ஆளை வுட்டாச்சுங்க!”
“என்னது?”
“ஆமாங்க! ஏன்யா, ஒண்ணும் அறியா பொண்ணைக் கொலை செஞ்சுக் கல்லெடுத்து தலையை ஓடெச்சுப் போட்ட கிராதகப் பொண்ணை…அவளைப் போய் வுட்டுட்டிங்களேய்யா?”
“எனக்கென்ன தெரியும்? அவமேல சந்தேகம் இருக்கறதாத் தானே இதுவரை போச்சு!” இன்ஸ்பெக்டர் தன்னை விசேஷமாகக் கவனிப்பதைக் கல்யாணராமன் கவனித்து, அவர் பார்வையைத் தவிர்த்தான். ‘சீக்கிரம் போய்ப் பாருங்கள்! இப்பத்தான் ஓடித்து. நானே கிளம்பலாம்னு இருந்தேன். இந்த இருட்டில பாதை தெரிஞ்சவங்க…”
“கொஞ்சம் இருங்க” என்றார் இன்ஸ்பெக்டர். “லே! இந்தால வாலே! உம் பேரென்ன?”
“ராசவேலும்” என்றான் வெள்ளியின் தம்பி.
“ராசவேலு! நீ வர்றப்போ என்னதாண்டா பார்த்தே? உங்கக்காவை எங்க வெச்சுப் பார்த்தே?”
“அய்யா கூட பேசிக்கிட்டிருந்தாப்பல!”
“சண்டை போட்டாப்பலியா?”
“ச்” என்று தலையாட்டினான்.
“பின்னே?”
“ரூம்புக்குள்ளாற இருந்து அக்கா வருது பார்த்தன். அய்யாகூடப் பேசிக்கிட்டிருந்திச்சு!”
“அய்யா புடிச்சு இழுத்து அடிச்சு ஏதாவது செஞ்சாரா?”
“ச்! அய்யா நல்லவுரு. அக்காவை என்ன ஏதுன்னு விசாரிச்சு ரண்டு பேரும் நல்லாதான் பேசிக்கிட்டிருந்தாக!”
இன்ஸ்பெக்டர் கல்யாணராமனைப்பார்த்து, “என்ன மிஸ்டர் கல்யாணராமன்!” என்றார், அதட்டலுடன். அதற்குள் மருதமுத்து தன்னிச்சையாக அவனிடம், “அப்படியா சேதி!” என்று கையைப் பிடித்தான். “பேசிக் கிட்டுத்தான் இருந்திகளா! எங்கெய்யா அவ?”
“இத பார்! நான் பொய் சொல்லலை. கையில கீறிட்டு அவ ஓடிப் போனது நிஜம்! கையைப் பாருய்யா ரத்தம்!”
“ரெண்டு பேரும் ஒடந்தைங்க!”
“என்ன உளர்றே?”
“இந்தாளே அவளை ஒளிச்சு வெச்சிருக்காருன்னு தெரியுது. ஏன்யா! ரெண்டுபேரும் சேர்ந்து சினேகம்மாவைக் கொன்னுட்டு… திருதிருன்னு முளிக்கிறான் பாரு… பாப்பாரப் பய!”
“போடுறா ஒண்ணு புட்டத்தில!”
“ஏய் இருங்கடா!”
அவர்கள் மெதுவாக அவனை அணுகுவது கண்டு கல்யாணராமனின் உடலில் கண்டபடி எச்சரிக்கைகள் சுரந்து மயிர்க் கால்கள் சிலிர்த்து உடல் நடுங்கி… “அய்யோ” மருதமுத்துவின் முதல் அடி அவன் இடுப்பில் பட்டு உலக அளவுக்கு வலிப் பந்தாக விரிந்தது… ‘கக்’ என்று இருமினான்.
“மருதமுத்து, இரு இரு! இன்ஸ்பெக்டர்!” அவன் மேல் பற்பல கைகள் பாய்ந்தன. “என்ன இது, பார்த்துக் கிட்டே இருக்கீங்க…”
“டேய்! கொஞ்சம் இருங்கடா! பெரியசாமி! அந்த ரூமுக்குள்ளே சரியாப் பார்த்துட்டு வா! ஒளிச்சு வெச்சிருந்தா அந்த ரூமுக்குள்ளதான் இருக்கணும். இத பாருங்க, மிஸ்டர் கல்யாணராமன்! நீங்க எங்கிட்ட ஏதாவது மறைக்கிறதா மட்டும் தெரிஞ்சா, இவுங்க அடிக்கிற அடிக்கு நான் பொறுப்பாக மாட்டேன்! ஏய்! கொஞ்சம் இருங்கடா. வீடு முச்சூடும் தேடிப் பார்த்துறலாம்! இருங்கடா, கொஞ்சம் பொறுங்க! பெரியசாமி, மருதமுத்து… உள்ள போய்ப் பார்த்துட்டு வாங்க…”
பீரோ நகர்த்தப்பட்டது. பெரியசாமி, மருதமுத்து, தங்கராசு, வெள்ளியின் தம்பி, இன்னும் சிலர்-எல்லோரும் வெள்ளி ஒளிந்திருந்த அறைக்குள் தடதடவென்று நுழைய, கல்யாணராமன் “நோ! நோ!” என்று திகிலில் கத்தினான். “அங்கே யாருமில்லே! சொன்னாக் கேளுங்கோ!” அவன் கண்கள் இருண்டன. ‘வெள்ளியை அழைத்து வந்து நிறுத்தி அந்த மூர்க்கர்கள் அவர்களுக்குத் தற்போது இருக்கும் மடத்தனமான கோபத்தில்- என்ன செய்யப் போகிறார்களோ? இன்ஸ்பெக்டர் பார்த்துக் கொண்டா நிற்பார்? ம்ஹூம்! ஆனால் அவர் பார்க்காதது போல் வெளியில் போய் நின்று கொள்ள, இவர்கள் பேருக்குப் பேர் வெள்ளியை… ஓ ! வேண்டாம்! வெள்ளி! ஸாரி! உன்னைக் காப்பாற்ற நினைத்து அந்த அறைக்குள் சிறைப்படுத்தி மாட்டிக் கொள்ள சௌகரியம் செய்து விட்டேன்.’
மருதமுத்து வெளியே வந்தான். அவன் பின் பெரிய சாமி. அவன் பின் மற்றவர்கள்… அதன்பின்… வெள்ளி வரவில்லை.
“என்னய்யா?”
“இல்லிங்க!” என்றான் மருதமுத்து குனிந்த தலையுடன்.
“இல்லியா! சரியா தேடிட்டிங்களா?” என்றார் இன்ஸ்பெக்டர்.
“சல்லடை போட்டுத் தேடியாச்சு! காங்கல!”
கல்யாணராமனுக்குள் காரணம் இன்னும் புரியாத உற்சாகம் பீறிட, வலியைக் கூட மறந்து, “நான் சொன்னனா, இல்லியா? என்னைப் போய் சொன்னிங்களே! இப்ப என்ன? தேடுய்யா! வீடு பூராவும் தேடிக்கோ! தேடுறா! என்னைப் போய் அனாவசியமா அடிக்கிறீங்களே? வஸ்தாத்! ஓராளை எட்டுப் பேரு அடிச்சிங்களே!”
“ஏய்?”
“மத்த இடங்களையும் எதுக்கும் பார்த்துடு பெரிய சாமி!”
“நான் சொன்னனா இல்லியா? நம்பிக்கை இல்லியா? இத்தனை நேரம் அவ நாலு மைல் ஓடி போயிருப்பா! என்னவேகம்! என்ன வெறி!” ‘ஜாக்கிரதை! குரலில் அதிக உற்சாகம் கூடாது. எங்கே போனாள்? அறைக்குள் தானே சென்றாள்?’
“வாய்யா, வீடு மூச்சூடும் பார்த்துறலாம்.”
அவர்கள் வீட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும் தேடினார்கள்.
“நீங்க உக்காந்துக்குங்க, கல்யாணராமன். கொஞ்சம் அடிப்பட்டிருக்கிங்க. முரட்டுப் பயலுவ! அப்படித்தான் திடீர்னு கண்ட்ரோல்ல வராம ஏதாவது செஞ்சுடுவாங்க!”
“என்ன இருந்தாலும் நீங்க பார்த்துக்கிட்டு இருந்தது எனக்கு ஆச்சரியமா இருந்தது, இன்ஸ்பெக்டர்.”
“பார்த்துட்டு இருந்தேனா? விலக்கி விட்டதுனால நீங்க பொழைச்சிங்க! உங்களைப் காப்பாத்தினதே நான்தான்! தெரியுமா?”
“ரொம்ப தாங்க்ஸ்!” என்றான் நன்றி கலக்காமல்.
‘சொல்லுங்க, எப்படி உங்ககிட்ட வந்தா அந்தப் பொண்ணு?”
“என்னைத் தேடிண்டு வரலை. என்னவோ அவளாத்தான் வந்தா…”
“கொலை பண்ணது பத்தி ஏதாவது சொல்லிச்சா?”
ஒன்றை மறைத்தாகிவிட்டது. மற்றொன்றையும் மறைத்து விடலாம். “இல்லை; ஒண்ணும் சொல்லலை.”
“ஏன் ஒளிஞ்சிருந்ததாம்? ஏன் தலைமறைவாம்?”
“ஏன்னு சொல்லலியே!”
“பின்ன என்னதான் சொல்லிச்சு?”
“அய்யா! அய்யா! என்னைக் காப்பாத்துங்கய்யா! அவ்வளவு தான்!”
“நீங்க என்ன செஞ்சிங்க?”
“நான் பேச்சுக் கொடுக்கறேன். பிரமை பிடிச்சாப்பல இருந்தா. நீங்க யாராவது வர வரைக்கும் பேச்சுக் கொடுக்கலாம்னுட்டு… அவளோட அன்பா ஆதரவாப் பேசினேன்.”
“எங்கேருந்து வந்தா?”
“அந்தப் பையன் சொன்னது நிஜம்தான். அந்த ரூம்லதான் ஒளிஞ்சிண்டிருந்தா. அந்தப் பையனைப் பார்த்ததும் ‘நான் போறங்க! போறங்க’ன்னு ஆரம்பிச்சுட்டா. ‘இரு வெள்ளி, அவன் ஒருத்தர்கிட்டேயும் சொல்லமாட்டா’ன்னு சொல்லிப் பார்த்தேன். அவ கிளம்பிட்டா. அவளைப் பிடிச்சேன். நகத்தாலே கிறிட்டா.”
தோட்டத்தில், தோப்பில் எல்லாம் அவர்கள் வெள்ளியைத் தேடும் சந்தடி கேட்டது. மாடியில், ஹாலில் எங்கும் தேடுகிறார்கள். எங்கே அவள்? அவனுள் சந்தோஷ உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் துவங்கியது. ‘எப்படி மாயமாய் மறைந்தாள்? எங்கே மறைந்தாள்?’ அந்த அறை என்ன அவளைச் சாப்பிட்டு விட்டதா? அவர்கள் எல்லோரும். போனபின் பார்க்க வேண்டும்.
“அவ மறுபடி வந்தா…”
“இனிமே வரமாட்டாள்னு நினைக்கிறேன்…” என்றான் கல்யாணராமன்.
“எங்கே ஓடிற முடியும்? விடியறதுக்குள்ளாற புடிச்சுடலாம். கொஞ்சம் பதுங்கியிருந்துட்டு அப்பன் வூட்டுக்குத் தான் வரும். அங்கே காத்திருந்தா கோளிக் குஞ்சை அமுக்கறாப்பில அமுக்கிடலாம்… காலையில பார்க்கலாங்க!”
தேடித் தேடி அலுத்து அவர்கள் ஊரை நோக்கிச் சென்றார்கள். கை விளக்குகள் இருட்டில் கரைந்துவிட்டன. சேதப்பட்ட நிலா, மரத்தின் மேல் தெரிந்தது. கல்யாண ராமன் பயப்படமாட்டான். உள் பக்கம் தாளிட்டுக் கொண்டான். சினேகலதாவின் அறைப் பக்கத்து ஜன்னலை மூடிவிட்டான். மனத்தில் இருந்த அந்த ஜன்னலை மூடமுடியவில்லை. அந்தக் கதவினூடே சினேகலதாவின் சிரிப்பு அடிக்கடி தெரிந்தது.
‘ஏன் இன்னும் இங்கேயே இருக்கேன்ங்கிறீங்களா? போறேன் போறேன். இன்னும் கொஞ்ச நாள்!’
‘நல்லா கை தட்டுவன் அய்யரே! கடாட்சம் இருக்கணும்!’
சினேகலதாவின் நினைவுகள் துரத்த, டேப்ரிக்கார்டரைத் தட்டினான்.
“மல்லிகைப்பூ மெத்தையிலே
மாதங்கூடத் தூங்கலையே!”
தடக்கென்று சப்தம் கேட்டுத் திடுக்கிட்டான். “வெள்ளி!” என்றான். பதில் கிடையாது. மெல்ல எழுந்தான். டார்ச் வெளிச்சத்துடன் அந்த அறைக்குள் மறுபடி சென்றான். ‘அவள் எப்படி வெளியே தப்பித்திருக்க முடியும்?’ ‘வெள்ளி வெள்ளி!’
உள்ளே இருக்கும் பீரோவின் பின்னால்தான் ஒளிந்திருந்தாள். இப்போது இல்லை. மெதுவாக டார்ச்சை அங்கும் இங்கும் உலவ விட்டான். ஜன்னல் ஓரத்தில் தூசியில் அவள் காலடிச் சுவடு தெரிந்தது. இங்கே கால் வைத்து, பீரோவின் மேல் கால் வைத்து… அதன் மேல் எப்படி ஒளிந்து கொள்ள முடியும்? இடம் போதாதே… இல்லை. வெண்டிலேட்டர் தெரிந்தது. அதன் தாழ்ப்பாள் திறந்திருப்பது தெரிந்தது. ஒரு ஆள் சற்று சிரமத்துடன் நுழைந்துவிடக் கூடிய வெண்டிலேட்டர். அது இருப்பது தன் அறையிலிருந்து வந்த வெளிச்சத்தில் கூடச் சற்று தெரிந்தது. கல்யாணராமனுக்குப் புரிந்து விட்டது. அங்கே நடந்த வாக்குவாதத்தைக் கவனித்திருக்கிறாள். அவர்கள் அறைக்குள் வந்து தேடக்கூடும் என்று பயந்து அவசர வழி தேடியிருக்கிறாள். மேலே அந்தக் குறுகிய வெண்டிலேட்டர் தெரிந்திருக்கிறது.
வெளியே எங்கே போயிருப்பாள்? மாடியில் எல்லாம் துப்புரவாகத் தேடினார்களே? எங்கிருந்து அவளுக்கு அந்த அமானுஷ்ய சக்தி வந்தது? அமானுஷ்ய சக்தி! முதலில் கொல்வதற்கு! அப்புறம் தப்பிப்பதற்கு!
தப்பித்துச் சென்றுவிட்டாள். அவள் தன் அப்பன் வீட்டுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும். சென்றால் நிச்சயம் மாட்டிக் கொண்டு விடுவாள். அங்கே அவர்கள் காத்திருப்பார்கள். பின் எங்கே? எங்கே போக முடியும்! ஊரே அவளைத் துரத்துகிறது. எத்தனை நாள் மறைத்து பதுங்கி வாழ முடியும்? எவ்வளவு தூரம் போக முடியும்? எங்கே போக முடியும்? அதுவும் தனியாக…
வெண்டிலேட்டர் கொடுத்த தற்காலிக விடுதலை எத்தனை நாட்கள், எத்தனை மணி நேரங்கள் தாங்கும்?
தூங்குவதற்குப் பயந்தான். விளக்கணைக்கப் பயந்தான். பேசாமல் கிராமத்தைச் சேர்ந்தவர்களுடன் புறப்பட்டுச் சென்றிருக்கலாம். தங்கராசுவின் வீட்டிலேயோ மருதமுத்துவின் வீட்டிலேயோ படுத்திருக்கலாம். இன்றிரவு தனியாக இருக்கக் கூடாது… என்ன பைத்தியக்காரத் தனமான செயல்! பேசாமல்… பேசாமல் எழுந்து கிராமத்துக்குப் போய் விடலாம்.
தனியாகவா? இல்லை, இல்லை! நான் வெளியே செல்ல மாட்டேன்… அங்கே சினேகலதா… இருக்கிறாள். பெரிய தாத்தாவின் நடுங்கும் குரல் மெலிதாகக் கேட்டுக் கொண்டே இருந்தது.
“கப்பல் வரும் என்று
கடற்கரையே காத்திருந்தேன்
கப்பல் கவுந்தவுடன் எனக்கு
கடற்கரையும் ஆசையில்லை
தோணி வருதுன்னு
துறைமுகமே காத்திருந்தேன்
தோணி கவுந்தவுடன்
துறைமுகமும் ஆசையில்லை”
அந்தத் தோணி அசைந்து வந்தது. வட்ட நிலாப் பின்னணி யில், வெள்ளி ஜரிகை ஜலத்தில், ஒரே ஒரு சிவப்பு விளக்கை ஆட்டிக் கொண்டு கரிய நிறத் தோணி! மிகக் கறுப்பு! இருட்டு! சாவைப் போல இருட்டு!
“கடாட்சம் வேணும் அய்யரே!”
சினேகலதா உட்கார்ந்திருக்க, பழையனூர் நீலி போல வெள்ளி மிகப் பெரிய கல்லெடுத்து மெதுவாக அவளை அணுகி ஸ்லோமேஷன் திரைப்படம் போல் அதை உயர்த்தி தலைமேல் குறி பார்த்து வருகிறாள்… வருகிறாள். பழையனூர் வெள்ளி… வேண்டாம். போடாதே! கால் விறைத்து, கை விறைத்து, கண் விறைத்துச் சாவாரும்…!
‘சல் சல் சலக் சலக் சல்…’ இது என்ன சப்தம்? ஓ இது நிஜம்! ஓ மை காட்! இது நிஜம்!… என் மனப் பிரமை இல்லை. யாரோ ஒரு பெண் நடந்து வருகிறாள். பெண்தான்! மெதுவாக மெதுவாக! எங்கிருந்து வருகிறாள்? அந்த அறையிலிருந்துதான்! இல்லை. வெளியே! சினேகலதாவின் அறை. இல்லை. அங்கே! இங்கே! என்னை நோக்கித்தான் வருகிறாள்! வருகிறது மெதுவாக! எனக்காகத்தான் வருகிறாள்!
“முன்னெடுத்த பழியதற்காய்
முன்னூறு பழியுங் கொண்டு…”
ஐயோ! யார்? யார்…? கல்யாணராமன் ஆயுதம் தேட நினைத்து, எழுந்திருக்க நினைத்து, எதுவும் சாத்தியமில்லாமல் ஸ்தம்பித்து, அப்படியே அந்தச் சலங்கை ஒலி வரும் திசை நோக்கி அதன் வக்கிரமான வசீகரத்தில் கட்டுண்டு பார்த்து நிற்க… யாரது?
அவள் தெரிந்தாள்.
நகைகளை அணிந்து கொண்டு…
ரத்னாவதி!
அத்தியாயம் – 18
தூக்கமில்லாத இரவின் பிரமையில் ஒரு கணம் அவள் ரத்னாவதி போலத்தான் தோன்றினாள். நனைந்த உடல். நெற்றியில் புறப்பட்டு முத்தாக உதிரும் நீர்த் துளிகள். அவள் அணிந்திருந்த நகைகள். நெற்றியில் சுட்டி நாகப்பூ, வகிட்டை மறைத்துக் கொண்டு, கழுத்தில் சிவப்புக் கல் பதித்த பதக்கம். புஜத்தில் தொத்திக் கொண்டிருந்த வங்கி.
“வெள்ளி! என்ன இதெல்லாம்!” என்றான்.
பிரமை கலைந்து வெள்ளியை அடையாளம் கண்டு கொள்ள ஒரு நிமிஷமாயிற்று.
“நவைங்க! யம்மாடி! எத்தனை நவைங்க! எனக்குக் கிடைச்சது! இன்னமும் இருக்குதுங்க! சூரியப்பூ, சந்திரப்பூ, அட்டியை, ஓலை, மூக்குத்தி, நாகொத்து, மாட்டலு, மோதரம், பில்லை, குஞ்சலம், நெளி, நத்து..”
“ஏய், ஸ்டாப் இட்!”
வெள்ளி கிறுக்குப் பிடித்தவள் போல் தன் மேலிருந்த நகைகளை எடுத்துப் போட்டு ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
“எனக்குக் கெடச்சதுங்க!”
“எங்கே போயிருந்தே நீ? எங்கே ஒளிஞ்சிண்டிருந்தே?”
“தோட்டத்துல கெணத்துக்குள்ளாற பதுங்கியிருந்தனுங்க! யம்மாடி! எத்தனை நவைங்க!
“எங்கே?”
“அங்கதானுங்க… பெரைக்குள்ளாற பொட்டியிருக்குது. தவரப்பொட்டி… கெணறு அவலமா இருக்குதா? சுவத்தில நீட்ட நீட்டமா கல்லுப் பதிச்சு எறங்கறதுக்கு வாகா இருக் குதுங்க. ராத்திரி அவுங்கள்ளாம் என்னைய ரூம்புக்குள்ளாற தேடிக்கிட்டு வந்து தீட்டிக்கிளிச்சிப் போட்டுடுவாங்கன்னு தெரிஞ்சு போச்சு. ரூம்புக்குள்ளாற இருந்தா ஆபத்துன்னு பீரோ மேலே ஏறி சன்னல் வளியா மாடிக்கு வந்து அங்கிருந்து எறங்கி தோட்டத்துப் பக்கம் கெணத்தில எறங்கினனுங்க. இவங்க ராந்தலும் கரண்டு விளக்குமா தேடிக்கிட்டு வராக. பேசாம கீளெ எறங்கி தண்ணிக்குள்ளாற முங்கிட்டன். அவுங்க போனதும் வெளியே வரேன். கிணத்தில உள் சுவரில் ஒரு ஆள் உக்கார்ற மாதிரி பெரிசா பெரை இருக்குதுங்க. எனக்கா மூச்சு வாங்குது. கொஞ்ச நேரம் அங்கு குந்திக்கினேன். கையில என்னமோ தெம்படுது. கீறுது, பொட்டிங்க… தவரப் பொட்டி. திறந்து பார்த்தன். கெளக்கு வெளுத்திருச்சு. இருந்தும் கொஞ்சம் தான் வெளிச்சம். பாத்தா டாலடிக்குதுங்க! யம்மாடி! நவையான நவைங்க?”
கல்யாணராமன் அவள் அணிந்திருந்த நகைகளைப் பார்த்தான். உடனே அவற்றை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. ரத்னாவதியின் பிரபல நகைகள்! கிணற்றின் புரையில் எப்படி வந்தது…?
“எல்லாம் எனக்குத் தாங்க! நாந்தான கண்டெடுத்தனுங்க!”
“நகையை மாட்டிண்டு டிரஸ் பண்ணிண்டு தூக்கில தொங்கு! ஆளைப் பாரு. இப்ப நகையா முக்கியம்? இத பார், முதல்ல உடம்பைத் துடைச்சுக்க. இந்தா துண்டு!” அதற்கு முன்னால் உடம்பை மறைக்க வேண்டும். நனைந்திருந்த அவள் மார்பு பூராத் தெரிந்தது.
என்ன அர்த்தம் இதற்கு? ‘பளிச் பளிச்’ சென்று கல்யாணராமனின் நினைவில் சில பிம்பங்கள் தோன்றின. மருதமுத்து இரவு தாம்புக்கயிறு கொண்டு வந்தது எதற்காக? மருதமுத்து! மருதமுத்துவைக் கேட்க வேண்டும். சினேகலதா அவனைப் பயன்படுத்தி அந்த நகைகளைத் தேடியிருக்கிறாளா?
வெள்ளி அந்த நகைகளை அழகு பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏய், வெள்ளி! உன் உயிரே போற தருணத்தில நகைதான் முக்கியமாப் படறதா உனக்கு? ஊர் பூரா உன்னைத் தேடறாங்க தெரியுமா? நகையை மாட்டிக்கிட்டு என்ன செய்யப் போற?”
“அவுங்களுக்கெல்லாம் ஆளுக்கு ஒரு நவை கொடுத்துறலாங்க! என்னை வுட்டுறச் சொல்லி போடலாம்.”
“உளறாதே!”
அவள் முகத்தில் கலவரம் ஏற்பட, “அதானுங்களே! நான் ஒரு பைத்தியம்! இப்ப நவையா முக்கியம்? இந்த மனுசன் ராத்திரி பேசினதைக் கேட்டிங்கல்ல? ஈவிரக்கமிருந்து பேசுறவு களாக் காங்கலியே! இன்னும் அவளையே நினைச்சுக்கிட்டிருக்காரே?” என்றாள்.
“சினேகலதாவை நீ கொன்னதில் அவனுக்கு அவ்வளவு ஆத்திரம், கோபம். இப்ப நேராப் பார்த்தான்னா மருதமுத்து உன்னைத் தீர்த்துக் கட்டிடுவான்.”
“ஆமாங்க! கொஞ்ச நாளாவும் அந்தாளு மனசு மாற!”
“அதுக்குள்ள உன்னை அழைச்சுண்டு போயிடுவாங்க. இத பார் வெள்ளி. ஏன் கொன்னே? ஒரு சின்ன விஷயத்துக்காக ஒரு உயிரைக் கொல்றது எப்படி நியாயம் சொல்லு?”
“நான் கொல்றதா இல்லிங்க. ஆத்திரத்தில் கல்லத் தூக்கிப் போட்டனா. அம்மன் சக்தியில…!”
“ஐயோ, ஐயோ! இந்த அம்மனைக் கொஞ்ச நாழி மறந்திருக்கலாமே! அந்தக் கல்லு எங்கே?”
“அங்கேதான் கிடக்கும். தேடினா கிடைக்குங்க.”
“பாறாங்கல்லா?”
“ஆமாங்க!”
“மண்டையில போட்டியா?”
“இல்லிங்க, மண்டையில பட்டிருக்காது.”
‘ஐயோ’ன்னு சத்தம் வந்ததா?”
“இல்லிங்க, வந்திருக்காது, வலிச்சிருக்காதுங்க.”
“வலிச்சிருக்காதா! என்ன பேத்தறே?”
“சின்னக் கல்லுதாங்களே?”
“என்னது?”
“இந்தா பெரிய கல்லு வலிக்குங்களா?” வெள்ளி தன் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே ஒரு இஞ்ச் பரிமாணமுள்ள மானசிகக் கல் ஒன்றைக் காட்டினாள்.
“வெள்ளி என்ன சொல்றே நீ? இத்துனூண்டுக் கல்லைத்தான் நீ போட்டியா?”
வெள்ளி சீரியஸாக, “ஆமாங்க! போட்டனுங்க.” என்றாள்.
“அந்தக் கல்லுப் பட்டு சினேகலதா செத்துப் போய்ட்டாளா?”
“ஆமாங்க! பூசாரி சொன்னதும் அதாங்க! அப்படியே ஆய்டுச்சு!”
“அட முண்டம்! உனக்குப் புத்தி கிடையாதா? புளியங் கொட்டை சைஸில ஒரு கல்லெடுத்து ஒரு ஆள்மேல் போட்டா அந்தாளு செத்துப் போயிடுவானா? இது கூடத் தெரியாதா உனக்கு?”
“கல்லுப் பட்டு செத்துப் போயிட்டாங்கன்னு நான் சொல்லலிங்க! அந்தக் கல்லுக்குள்ளாற இருந்த மந்திர மகிமையில! நான் பலி கொடுத்த கோளி, நான் வெச்ச ஏவல் – எல்லாம் சேர்த்துகினு அவளை ரத்தம் கக்க வெச்சுக் கொன்னு போட்டிருச்சுங்க… உங்களுக்குத் தெரியாதுங்க – சாலாச்சி மவுமை”.
கல்யாணராமன் தலையில் அடித்துக் கொண்டான். “மை காட்! இப்படியுமா ஜனங்கள்! ஏய் பைத்தியம்! பைத்தியம்! பைத்தியம்! இதுக்கலாமா நீ பயந்து பயந்து ஒளிஞ்சு…!” – கல்யாணராமன் சிரிக்க ஆரம்பித்தான் நிதானமாக.
“ஏங்க?”
“வெள்ளி! நிஜமாவே நீ அப்படி நம்பறியா? இல்லை பாசாங்கு பண்றியா? மூடநம்பிக்கை இருக்கலாம். ஆனா அதுக்கு ஒரு எல்லை வேண்டாம்? பகுத்தறிவுங்கறது லவலேசம் கூடக் கிடையாது? ஓ! ப்ளடி… ஹெல்!”
“ஏங்க!”
“இத பார்! சினேகலதாவை வேற யாரோ கொன்னு போட்டிருக்காங்க! நீ இல்லை; உங்க அம்மன் இல்லை!”
“இல்லிங்க!”
“இத பார்! ம்ம்மடத்தனமா, அறிவு கெட்டத்தனமா பாமரத்தனமா பேசாதே! கொன்னது நீ இல்லை! நீ எங்கேயும் ஓட வேண்டாம், ஒளிய வேண்டாம். நிச்சயம் நீ எறிஞ்ச புளியங் கொட்டையால அவ சாகலை!” – சிரித்தான்.
“பூசாரி…”
“பூசாரி புருடாவுட்டிருக்கான்! அதை நீ வேதவாக்கா நம்பி அன்னி ராத்திரி இங்க வந்து அவளைத் திட்டிட்டு கல்லெடுத்துப் போட்டுட்டு சூனியப் பொம்மையை வெச்சுட்டு விபூதி இறைச்சுட்டுப் போயிட்ட, அவ்வளவுதானே!”
“அதாங்க!”
“நீ திட்டினதுக்கு அந்தம்மா பதில் சொன்னாளா? ஞாபகப் படுத்திப் பாரு.”
“ம்… இல்லிங்க!”
“ஒரு வார்த்தை சொன்னாளா?”
“இல்லிங்க.”
“எங்க இருந்தா அவ?”
“ரூம்பு வாசல்ல வெச்சுப் பார்த்தனுங்க. குந்திக்கினு இருந்தாப்பல”.
“சரிதான். இப்பப் புரியறது. நீ வந்தப்ப – ஏய் பைத்தியம். கவனமாக் கேளு. நீ வந்தப்ப அந்த சினேகலதா ஏற்கெனவே செத்துக் கிடந்திருக்கா! அது தெரியாம அவ மேல நீ வெத்துக்கு கல்லைத் தூக்கிப் போட்டுட்டு, திட்டிட்டு வந்திருக்கே. காலைல அவ இறந்து போன செய்தி கேட்டதும் – நீ போட்ட கல்லு, நீ செஞ்ச பூஜை, கோழி வெட்டு, விபூதி, துணி பொம்மை இன்னும் என்ன? இதெல்லாம் சேர்ந்துதான் அவளைக் கொன்னுடுத்துன்னு பயந்து தலைமறைவாய்ட்டே… அதானே?”
“அதானுங்க! ஐயா, சிரிக்காதிங்க.”
“சிரிக்காம என்ன பண்றது? இப்படி ஒரு ஜடமா இருக்கியே!”
“எளுத்தறியாச் சென்மங்க…! அப்ப நான் கொல்லலிங்களா?”
“நீ இல்லை! நீ எதுக்கு போலீசுக்குப் பயப்படணும்? எவருக்கும் பயப்பட வேண்டாம். மறையவும் வேண்டாம்; ஒரு எழவும் வேண்டாம்.”
“அப்ப யாரு அந்தப் பொண்ணு சினேகலதாவைக் கொன்னுருப்பா? மருதமுத்துப்பயலே தீர்த்திருப்பானா?”
வெள்ளியை மறுபடி பார்த்தான். அவள் அந்த நகைகளைக் கழற்றிக் கொண்டிருந்தாள்.
“எனக்கு வேண்டாங்க!”
நகைகள்! அந்த நகைகள்தான் சினேகலதாவின் மரணத்திற்கு ஆதார காரணம்… அந்த நகைகளுக்குத்தான் வந்திருக்கிறாள்.
“வெள்ளி, எனக்கு அந்த நகைங்க எங்க இருக்குன்னு காட்டுவியா?”
“காட்டறங்க! வெளிய வந்தா…”
“ஒருத்தரும் உன்னைப் பிடிச்சுக்க மாட்டாங்க! என் கூட வா. அவங்கள்ளாம் வர்றதுக்குள்ள அந்த இடத்தைப் பார்த்துடணும்.”
அவர்கள் வெளியே வரும்போது சூரியன் முழுவதும் எழுந்து விட்டான். பறவைகள் மற்றொரு காலைக்குத் தயார்படுத்த, தத்தம் குரல்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தன. துல்லியமான மேகமற்ற வானம், அசையாத மரங்கள்.
வெள்ளியும் கல்யாணராமனும் அறையை விட்டு வெளியே வர, சினேகலதா அறை சாத்தியிருந்ததைக் கவனித்தான். வாசலில் ரத்தக்கறை இன்னும் உறைந்து காய்ந்து தெரிந்தது. அறை வாசலில்தான் கொலையுண்டிருக்கிறாள். கிணற்றுக்கு உடலை இழுத்துச் செல்ல எத்தனிக்கையில் கல்யாணராமன் சென்றிருக்க வேண்டும். தான் சென்றபோது யாரோ ஓடிப் போகும் சப்தம் கேட்டது ஞாபகம் வந்தது. அன்றிரவு நடந்தது கொஞ்சம் திரை விலக ஆரம்பித்திருக்கிறது. சினேகலதா முதலில் செல்கிறாள். அப்புறம் மருதமுத்து. சினேகலதாவும் மருதமுத்துவும் அறைக்குள் இருக்கிறார்கள். வெள்ளி தொடர்ந்து வந்து அதைப் பார்க்கிறாள். மிகவும் வேதனைப் பட்டு வீட்டுக்குச் செல்கிறாள். மருதமுத்துவை சினேகலதா அனுமதித்திருக்கிறாள். அந்த சல்லாபம் மருதமுத்து அவளுக்கு உதவி செய்ததற்குக் கொடுத்த பரிசா? என்ன உதவி? நகைகள், அந்தத் தாம்புக் கயிறு?
மருதமுத்து, சினேகலதாவை விட்டுச் சென்றானா? சென்றதும் வந்தது யார்…?
அந்தக் கிணறு அமங்கலமாகத்தான் இருந்தது. இறங்குவதற்கு வாகாக ஸ்பைரல் போலப் படிகள் பதிக்கப்பட்டிருந்தன. கீழே ஜலம் பச்சை நிறமாக இருந்தது. எட்டிப் பார்த்ததில் வெள்ளியும், கல்யாணராமனும் தெரிந்தார்கள். “அதோ பாருங்க… பத்தாவது படிக்குப் பக்கத்தில ஓட்டை மாதிரி தெரியுதே. அங்கதான் இருக்குதுங்க – அத்தனை நவைங்களும்.”
வெள்ளி சரசரவென்று இறங்கினாள். அந்தப் படியிலிருந்து கூப்பிட்டாள்; “வாங்க! வந்து பாருங்க” ‘க்ள்க்’ கென்று தண்ணீரில் சப்தம் கேட்டது.
கல்யாணராமன் தயங்கித் தயங்கி இறங்கினான். “வெள்ளி, உனக்கு நீஞ்சத் தெரியுமா?”
“தெரியுங்க, உங்களுக்கு?”
“பட்டணத்தில் காலேஜில நீஞ்சியிருக்கேன். ஆனா கிணத்தில் இறங்கினதில்லை.”
“பயப்படாதிங்க. ஒரு ஆள் ஒண்ணரை ஆள் ஆளம்தான் இருக்கும்!”
“போறாதா?”
காரை உதிர்ந்தது. ஒரு தவளை டைவ் அடித்தது.
புரையில் அந்தப் பெட்டி இருந்தது. அதன் நாதாங்கியின் பித்தளை பச்சையாக இருந்தது. பெட்டி முழுவதுமே படிந்திருந்த பச்சைப் படலம் ரொம்ப நாளாக அந்தப் பெட்டி தண்ணீருக்கு அடியில் கிடந்திருக்க வேண்டும் என்று காட்டியது. அதைத் திறந்தான்.
ரத்னாவதியின் நகைகள் அத்தனையும் இருந்தன. இத்தனை நாள் சிதிலமாகக் கிடந்தும், நீரின் ஆழத்தில் கிடந்தும் அந்த நகைகளின் ஆரம்பப் பளபளப்பு மங்கித் தான் இருந்தது. இருந்தும் தங்கம், வைரம், பச்சை, நீலம், பவழம் என்று வகை வகையாகக் கற்கள் பதித்த எத்தனை நகைகள்! கல்யாண ராமனுக்கே ஒரு க்ஷணம் அவை அத்தனையும் கவர்ந்து செல்ல ஆசை ஏற்பட்டது.
‘இல்லை, இல்லை. இந்த நகைகள் தலைமுறைகளைக் கடந்து மரணத்தைப் பரப்பும் நகைகள்… வேண்டாம்…’ கீழே வெள்ளியைப் பார்த்து ஸ்தம்பித்தான்.
“வா, வெள்ளி! என் கையைப் புடிச்சுக்க! நீ எடுத்த நகைகள் எல்லாத்தையும் திருப்பி அந்தப் பெட்டியிலேயே வெச்சுடு. இது இருக்கற இடம் வேற ஒருத்தருக்கும் தெரிய வேண்டாம்…”
கல்யாணராமனின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தாள், வெள்ளி. தான் எடுத்து அணிந்து கொண்டிருந்த நகைகளையெல்லாம் கழற்றி, பழையபடி அந்தப் பெட்டிக்குள்ளேயே வைத்தாள்.
“வா, மேலே!”
அவள் கையைப் பிடிக்கும் போது அவள் மார்பில் வேண்டுமென்றே பட்டான். ‘ஏறக்குறைய என் ஆதிக்கத்தில் இருப்பவளை நான் எதுவும் செய்ய முடியும்! இதோ நகைச் செல்வம், இதோ, ஒருபெண்! பேசாமல் இரவோடு, இரவாக…’
‘ம்ஹும்! சினேகலதாவைக் கொன்றது யார் என்பது தெரியாதவரை கிராமத்தை விட்டுப் போகக் கூடாது’ என்று மற்றொரு கல்யாணராமன் நினைத்தான்.
கிணற்றைவிட்டு வெளிப்பட்ட கல்யாணராமன் சுற்றும் முற்றும் பார்த்தான். அட!
கிணற்றின் கரையில் ஒரு செண்பக மரம்! ரத்னாவதியின் நோட்டுப் புத்தகத்தின் அந்தப் பக்கத்தின் மத்தியில் செத்துப் போயிருந்த செண்பகப்பூ.
“இது என்ன பூ – சொல்ல முடியுமா உங்களால?”
‘செண்பகப்பூ அடையாளம் வெச்சிருக்கேன்’ என்ற ரத்னாவதி யின் வார்த்தைகளை அருகில் படிக்க முடிந்தது ஞாபகம் வந்தது. என்ன அடையாளம்? நகைகளுக்கு அடையாளமா?
“தீர்மானம் பண்ணிப்புட்டன்! என் நகைங்களை யாருக்கும் தரமாட்டேன். ஒருத்தருக்கும் அது நிச்சயம் போகக் கூடாது. அதுக்கு ஒரு வழி செஞ்சிருக்கேன். எல்லா நகைகளையும்…”
‘எல்லா நகைகளையும் என்ன செய்தாள் ரத்னாவதி? ஒரு பெட்டிக்குள் போட்டுக் கிணற்றில் எறிந்துவிட்டாயா? சந்ததிகளுக்கு அடையாளம் காட்ட ஒரு செண்பகப்பூவை வைத்தாயா?
செண்பக மரம். மரத்தடியில் கிணறு. கிணற்றில் நகைககள்…
இதை சினேகலதா அறிந்து கொண்டிருக்க வேண்டும். அறிந்து, மருதமுத்துவின் உதவியுடன்… தாம்புக்கயிறு! ஆம்! அதற்குத்தான். நகைப் பெட்டியைக் கிணற்றிலிருந்து முதல் நாள் இரவே எடுத்து அந்தப் புரையில் தற்காலிகமாகப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். பிற்பாடு அவற்றை எடுத்துக் கொள்ளும் உத்தேசத்துடன், மருதமுத்துவும் சினேகலதாவும் சண்டை வந்து மருதமுத்து அந்த நகைகளுக்கு ஆசைப்பட்டு… அவனே அவளைக் கொன்று விட்டானா…?
வெள்ளியின் அவசரக் குரல் கேட்டது.
“ஐயா, வாங்க போயிரலாம்.”
“ஏன் வெள்ளி?
“அங்க பாருங்க! கிராமமே நம்மை நோக்கி வருது!” கல்யாணராமன் பார்த்தான்.
கம்பு கழிகளைச் சுழற்றிக் கொண்டு முப்பது பேர் வர, மருதமுத்து தலைவனாக அரிவாள் தாங்கி வர, இன்ஸ்பெக்டர், பெரியசாமி, அய்யாத்துரை, தங்கராசு… எல்லோரும் மிகுந்த விரோதத்துடன் அணுகுவது தெரிந்தது.
“ஐயா, நான் போய்ப் பதுங்கிக்கிறேன்.” என்றாள் வெள்ளி அச்சத்துடன்.
“வேண்டாம் வெள்ளி. நீ இனிமே பயப்பட வேண்டிய தில்லை. நான் சமாளிக்கிறேன்!”
– தொடரும்…
– கரையெல்லாம் செண்பகப்பூ, எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது.