கரையெல்லாம் செண்பகப்பூ
கதையாசிரியர்: சுஜாதா
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு:
த்ரில்லர்
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 713
(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10
அத்தியாயம் – 7

சினேகலதா வீறிட்ட சப்தம் கேட்டதும் அவள் அறைக்கு விரைந்தான். உள்ளே பயந்து சினேகலதா, “அங்கே! அங்கே!” என்று காட்டினாள்.
ஒரு மர பீரோ.
“யாரோ ஒரு ஆள்! கறுப்பா! ஹாரிபிள் ஃபேஸ்!” என்றாள். கல்யாணராமன் கலவரமாக அந்த பீரோவின் அருகில் சென்று தரையில் காலால் தட்டி ஓசைப்படுத்தி, “ஏய்! யாரு? யாரு? வெளியில் வா” என்றான்.
சினேகலதா மறுபடி அலறி ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டாள். அவள் உஷ்ணம் அவனைத் தழுவியது.
“இங்கே! இங்கே!” என்று மற்றொரு மூலையைக் காட்டினாள். அவன் திடுக்கிட்டுத் திரும்ப, சினேகலதா வசீகரமாகச் சிரித்தாள். “சும்மா விளையாட்டுக்கு” என்றாள்.
கல்யாணராமன் அவளிடமிருந்து தன்னை விடுவித்து கொண்டான். வெட்கப்பட்டான். சொல்லப்போனா ஒரு பெண் அவன் மேல் அவ்வாறு பட்ட முதல் தடவை அது.
“இனிமே இந்த மாதிரி விளையாடாதீங்க. அப்புறம் நிஜமாவே ஏதாவது ஆபத்துன்னா வரமாட்டேன்.”
“டேக் இட் ஈஸி யா” என்று மறுபடி சிரித்தாள், “கல்யாணராமன்! நீங்க என்னை ஏமாத்திட்டீங்க? பிரயோசனம் இல்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிட்டு ‘சடால்’னு அப்படியே என்னைப் பிடிச்சு ஒரு கட்டாக்கட்டி உதட்டில் ஒரு…”
குறுக்கிட்டு, “நான் அப்படிப்பட்ட ஆளில்லை!’ என்றான்.
“இதுவே வெள்ளியா இருந்தா?” என்று அவனைக் கேட்டுக் கண்ணிமைத்தாள்.
“டோன்ட் பி ஸில்லி!” – இவளை எந்த வகையில் சேர்ப்பது? குழந்தைத்தனமா? பொறாமையா? இல்லை, கேலி செய்கிறாளா?
“கம் ஆன் ராமன்! உங்க கண்ணிலேயே தெரியறதே! வெள்ளியைக் கண்டா அப்படியே ஸாஸர் மாதிரி விரியறதே. உடான்ஸ் விடாம சொல்லுங்க. உங்களுக்கு வெள்ளி மேல ஒரு ‘க்ரஷ்’ தானே?”
“என்னைப் பத்தித் தெரியாம பேசறிங்க. என் ஆசை நாட்டுப் பாடல்கள் மேலதான்.”
“இப்படித்தான் நாட்டுப் பாடல்னு ஆரம்பிச்சு நாட்டுப் பாடல் பாடற ஸ்வீட் கர்ள்ஸ் வரை போய்டும்! ஜாக்கிரதையா இருங்க. மருதமுத்துவோட பாடியைப் பார்த்தீங்க இல்லே?”
“குழந்தைத்தனமா ஏதாவது சொல்லாதீங்க!” என்று கோபத்துடன் விருட்டென்று கிளம்பிவிட்டான். அவன் தன் அந்தரங்கத்தில் போற்றிப் பாதுகாத்து வந்த குற்ற இச்சையைத் தொட்டு விட்டாள். ஜாக்கிரதையா இருக்க வேண்டும். மருதமுத்துவிடம் இவள் எதாவது தத்துப் பித்தென்று உளறி விட்டால்… ஒரு கணம் மருதமுத்துவுடன் வயற்காட்டில் சண்டை போட்டான் கல்யாண ராமன்.
மெதுவாக நடந்தான் கிராமத்தை நோக்கி. சிறுவர்கள் அவனைக் கண்டதும், ‘சாக்லேட்டு துரை’ என்று ஆரவாரித்தார்கள். சின்னக் கருப்பாயி தன் இடுப்பில் இருந்த குழந்தையின் கையைப் பிடித்து நீட்டினாள். அது ரிஃப்ளெக்ஸ் சக்தியில் ‘தா’ என்றது. பைசா கொடுக்கலாமா என்று யோசித்தான். மொய்த்துவிடுவார்கள். எல்லோரையும் விரட்டினான். ஆரவாரமாக ஓடி எட்டிப் பார்த்தார்கள்.
கோயில் வாசற்படியில் மரத்தடி நிழலில் பயாஸ் கோப்பு படுத்திருந்தான். அண்ணாந்து, மல்லாந்து குறட்டை விட்டுக் கொண்டிருந்த அவன் சம்பாத்திய சாதனம் துணி மூடப்பட்டு அருகில் காத்திருந்தது. கோயிலுக்குள் ஒழுங்கில்லாத நான்கு பாறைக் கம்பங்களின் மேல் அஸ்பெஸ்டாஸ் தளம் வேயப்பட்டிருந்தது. ஒரே ஒரு குழல் விளக்கில் ‘பொன்னம்மாள் உபயம்’ என்று எழுதப்பட்டிருந்தது. சின்ன அறையில் சுவரோடு சுவராக அம்மன் ரோஜா நிறத்தில் சீலையும், ஜரிகையும், அகலமான கண்களும் செயற்கை நகைகளுமாக நின்று கொண்டிருந்தாள். பொம்மைத் தொட்டில்கள் மேலே தொங்கின. சின்னச் சின்ன நூல்கள் சின்னச் சின்ன விருப்பங்களை அம்மன்மேல் சார்த்தியிருந்தன. பூசாரியின் வீடு ஒதுங்கி இருந்தது. மனைவி தன் சமீபத்தியக் குழந்தைக்கு முலை கொடுத்துக் கொண்டிருந்தாள். மற்ற குழந்தைகளும் கோழிகளும் வெயிலில் அலைந்தன.
சுற்றி வந்தான். முள் பாதை. ஒரு கிணறு பாழ் பட்டுக் கிடந்தது. அதனுள் பச்சைப்பரப்பில் அனேக ஜீவராசிகள் எண்ணெய் ஏட்டில் மிதந்தன.
ஒரு கல்மேடை.
“தை மாசம் நிச்சயம் ஆயிரும்மா! அம்மனுக்கு ஒரு சிலை வாங்கியாந்துரு! மாசப் பொறப்புக்கு ஆத்தில முளுவிட்டு விடியற்காலை ஈரமா வா! கோளி கொண்டாந்துரு!”
“ஆவட்டும் பூசாரி!”
வெள்ளி குந்தி உட்கார்ந்திருக்க, பூசாரி அவளுக்குக் கொடுத்த குங்குமத்தைப் பக்தியுடன் நெற்றியில் இட்டுக் கொண்டாள்.
“தாயத்து தரன், கட்டிக்க! ஒரு ரூபா எடு!”
வெள்ளி தன் சீலைத் தலைப்பில் எட்டு முடிச்சவிழ்த்து நோட்டை எடுத்துக் கொடுத்தாள். கல்யாணராமன் வருவதைப் பார்த்து எழுந்து நின்றாள்.
“இவருதானா?” என்றான் பூசாரி. தன்னைப் பற்றி வெள்ளி பேசியிருக்கிறாள். மௌனமாக இருந்தாள். “கும்பிடறேனுங்க” என்றான் பூசாரி.
“என்ன, வெள்ளி குறி கேக்கறாப்பலயா?”
அவள் வெட்கப்பட்டாள்.
“பூசாரி! உங்களுக்குப் பாட்டு ஏதாவது தெரியுமா?”
“பாட்டெல்லாம் சாமி வர்றபோது” ஏறக்குறைய குடுமி வைத்திருந்தான். “பாடுவங்க… அதும் நான் பாடறதில்லே…” கோடாலி மீசை. கையில் காப்பு விரல்களில் உலோக மோதிரங்கள். ‘சாமிதாங்க எம் மூலமா பாடுது’ என்று சிரித்தான். இரண்டு பற்கள் வரிசை தவறியிருந்தன.
“அடுத்த தடவை சாமி வரபோது எனக்குத் தகவல் சொல்லி அனுப்பறீங்களா?”
“அது எப்படிங்க முடியும்?” என்றான் சட்டையணியாத மார்பைத் தேய்த்துக் கொண்டே. ப்ரா போடலாம்.
“காசு தரேன் பூசாரி…”
“சொல்லி அனுப்பறங்க!” என்றான்.
வெள்ளி பேசாமல் நடந்து, பூசாரியின் மனைவியுடன் பேசினாள்.
“ஊரே கொல்லுனு பேசிக்குதே! ஆம்பளைச் சட்டையைப் போட்டுக்கிட்டு அந்த ஆட்டம் ஆடுதாமே?”
“ஆமாங்க தங்கம்மா! சக்களத்தி மாதிரிவந்து சேர்ந்திருக்கா!”
“எதுக்கும் நீங்க பொளுது சாய ஒருக்கா வந்து போயிருங்க… திருடு சேக்க ஒரு ஆள் வருது”.
“இவரு யாரு?” என்று சன்னக் குரல்.
“இவருகூட அங்கதான் தங்கியிருக்காரு… பட்டணத்துக் காரரு… பாட்டுக் கேக்க வந்திருக்காரு.”
“மருதமுத்துப் பய என்ன செய்யுறான்?”
“சாணி மிதிச்சுட்டாளாம்… அலம்புங்கறாரு! இங்கிலீசு கத்துக்கப் போறாராம். நல்லால்லை தங்கம்மா. நான் போய்ட்டு அப்பால வர்றேன்… வரேன் பூசாரி.”
வெள்ளி மௌனமாக நடந்துசெல்ல, கல்யாணராமன் சற்று தூரத்தில் நடந்தான். வாசலில் மணி அவளுக்காகக் காத்திருந்து வாலாட்டி அவளுடன் நடந்தது. தூரத்தில் அடர்த்தியான தோப்பு தெரிந்தது.
“வா, வெள்ளி, தனியாப் போய்டலாம்! தோப்பில யாரு மில்லே…”
“வரேங்க! நிச்சயம் வரேங்க! போயிறலாங்க!”
சைக்கிள் மணி அவன் எண்ணங்களைக் கலைத்தது. ஒதுங்கினான். மருதமுத்து சைக்கிள் மிதிக்க பின்னால் உற்சாகமா ஊஞ்சலில் போல் உட்கார்ந்து கொண்டு சினேகலதா.
“அய்யா, குட்மார்னிங்! குட்நைட்டு! வெள்ளி, டவனுக்குப் போறன். லைன் கரையோட அம்மாவைக் கூட்டிப்போறேன், பொஸ்தவம் வாங்கப் போறேன்”.
“ஹாய் கல்யாணராம்! ஹாய் வெள்ளி! டாட்டா!” சைக்கிள் நெளிந்து நெளிந்து அந்தத் தோப்பை நோக்கிச் செல்ல, சினேகலதா சிரிப்போடு அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே தூரத்தில் மறைந்தாள்.
வெள்ளி ஸ்தம்பித்து நின்றாள்.
“அந்த ஆளுக்கு என்னாயிருச்சு?” என்றாள் தனக்குள்.
“எஜமானியம்மாவைப் பார்த்து கொஞ்சம் சந்தோஷத்தில இருக்கான். அவ்வளவுதான் வெள்ளி!”
“இல்லிங்க, நேத்தைல இருந்தே ஒரு மாதிரி ஆய்ட்டாரு. வார்த்தைக்கு வார்த்தை ‘சினேகம்மா சினேகம்மா’ங்கார். நடவுக்கு ஆளுங்களை வயக்காட்டில வரச் சொல்லிப்புட்டு சைக்கிளைப் போட்டுகிட்டு விரைசாப் போறாரே!”
“வந்துடுவான்!”
“எங்கப்பாரு பாத்தா என்ன நெனப்பாரு? அந்தப் பொம்பளையும் இங்கிதம் தெரிஞ்சதாத் தெரியலை. தத்!”
“வெள்ளி! பெரியாத்தாவைக் கொஞ்சம் கூட்டி வரியா?”
“எப்ப ஊருக்குப் போவுதாம்? ஏதாவது சொல்லிச்சுங்களா?”
“யாரு?”
“அதான்- ஆம்பளைப் பாப்பாத்தி.”
“ஒரு வாரமோ என்னமோ தங்கறாப்பல…”
“அடக் கடவுளே!” என்று தன் கழுத்திலிருந்த மாலையைக் கடித்தாள். கண்களில் மனச்சலனம் தெரிந்தது. நெற்றியில் அந்தத் தை மாச நம்பிக்கையின் குங்குமக் கீற்று. கல்யாணராமன் பார்க்கிறான் என்கிற உள்ளுணர்வு தன் மார்புப் புடவையைச் சரிசெய்து கொள்ளச் செய்தது.
“வர்றனுங்க” என்று நடந்தாள்.
“பெரியாத்தாவைக் கூட்டி வரியா?”
“அனுப்பறனுங்க.”
“வெள்ளி! நீ வந்தா உனக்கு நான் இங்கிலீஷ் கத்துத் தரேன்.” என்று சொல்லிவிட்டான்.
நின்றாள். திரும்பி அவனைப் பார்த்து, “அதெல்லாம் எனக்கு வராதுங்க! எளுத்தறியாச் சென்மம். சிலேட்டுப் புடிச்சதில்ல. இஸ்கோலுப் பக்கம் போனதில்ல. நெனவு தெரிஞ்சதிலிருந்து இந்தாளுதாங்க படிப்பு. மெறிச்சிக் கிட்டு ஓ… டு றாரே!”
அவள் தனக்குள் பேசிக் கொண்டு நடந்து சென்றாள்.
கல்யாணராமன் திரும்பி வீட்டுக்குச் சென்றான். பெரியாத்தா சொல்லாமலேயே வந்து காத்திருந்தாள். அவனைப் பார்த்ததும் வெற்றிலைக் காவியுடன் சிரித்தாள். “ராசா மவன் கொடுத்த காசில பேத்திக்கு அரநானு… இந்தச் சிறுக்கி மறுபடியும் முளுவாம இருக்கா. அவளுக்கு முட்டாயி எல்லாம் வாங்கிப் போட்டனுங்க. தீர்ந்து போச்சு” என்று கை விரித்தாள்.
“இரு இரு! வரேன்!”
கல்யாணராமன் சிகரெட் பெட்டியைத் தேடினான். அவனது அறையில் இல்லை. சினேகலதாவின் அறைக்குச் சென்றிருந்த போது விழுந்திருக்கலாம். அவள் அறை பூட்டியிருந்தது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். “இது என்ன?”
மாடியில் இருந்த ஜமீன் மனைவி ரத்னாவதியின் போட்டோ சினேகலதாவின் அறைக்கு வந்து தரையில் சாத்தியிருந்தது. அருகே பழைய புத்தகங்கள் பல.
“என்ன பெரியாத்தா… சௌக்கியமா?”
“இருக்கங்க உங்க புண்ணியத்தில.”
“பெரியாத்தா, ரத்னாவதி அம்மாவைத் தெரியுமா உனக்கு?”
“நல்லாத் தெரியும். ஏங்க?”
“இல்லை! சும்மாக் கேட்டேன்.”
“அவங்க இந்த ஊட்லதான் இருக்காங்க”
“என்னது?”
“எறந்து போனதும் இங்கதான் சுத்துது அந்தம்மா! புளிய மரத்தில், எம் மவன் ஒருக்கா பார்த்துட்டு டாயரில வெளிக்கிருந்துட்டான், சின்னப் புள்ளைல!”
“சரிதான்!” சிரித்தான்.
“சிரிக்கிறிக! பட்டணத்துக்காரங்களுக்கு நம்பிக்கையில்ல”
“எப்ப எறந்து போனாங்க?”
“அப்பசி மாசம. பத்து நாப்பது வருசம் இருக்குமுங்க!”
“ஏன் இறந்து போய்ட்டாங்க? காச்சலா?”
“காச்சலா?” அவள் ஒரு பாட்டம் வெற்றிலை போட்டுக் கொண்டு நிதானமாகப் பேசினாள். “மாண்டுக்கிட்டுப் போயிட்டாக.”
“மாண்டுக்கிட்டுன்னா?”
“கவுத்தில தொங்கி! நான் பாத்தன். அப்ப எனக்கு என்னா வயசிருக்கும்? பதினெட்டோ பதினேளோ? தலையெல்லாம் விரிச்சுப் போட்டு குங்குமத்தை அளிச்சுப் போட்டு நகை யெல்லாம் உரிச்சுப் போட்டு- இந்தா பெரிய தாம்புக்கவுறு உத்தரத்தில் ஊஞ்சப் போடுற கொக்கில மாட்டியிருக்குது, ஆளுயரத் தொங்குதுங்க. ஆனா முவத்துல ஒரு சாந்தம். பெரியவரு தோட்டத்தில் உலாத்துறாரு. அண்டை அசலெல்லாம் கூடிப்போயி… போலீசு வந்து பொணத்தை எடுக்க திருநிலத்திலேருந்து பொட்டி வண்டி வந்து கேக்காதீங்க…
“மாமரத்துக் கீழே நின்னு
மங்க குறை சொல்லி அழுதா
மாமரத்து மேலிருக்கும்
மயிலும் இரை உண்ணாது”
“அவங்க ஏன் அப்படி செத்தாங்க?”
“சந்தோசமில்லிங்க! பெரியவரு கூத்தடிச்சாரு. தொரை சாணிங்கள வெச்சிக்கிட்டு… பச்சையிலயும் சேப்புலயும் குடியாக் குடிக்க, கொஞ்சம் எடுப்பா ஒரு பொம்புளை இருந்தா தோட்டத்துக்கு அனுப்பிரனும்… என்னையே ஒரு மாதிரி ஒரு தடவ பார்த்துட்டு, ‘நெல்லுக்குத்த வந்தியான்னு கையைப் புடிச்சாரு. ஒலக்கையைப் போட்டுட்டு ஓடியாந் துட்டேன். பாக்கற பார்வையே சரியில்லை! தாவம் தாவம் சதா தாவம். அந்தம்மா என்னதான் செய்யும். நவை நவையா மாட்டிக்கிட்டு, சாரட்டு வண்டில போயி என்ன பிரயோசனம்? சந்தோசமில்ல! படிப்பில்லே.ஊட்ல பாவாடைக்காரிங்களை வெச்சு படி/இங்கிலீசுல பேசக் கத்துக்க! குடி! குடின்னு சொல்லி… அது பாவம்… வாயில்லாப் பூச்சி! அம்மந் திரு விளாக் கரவம், பல்லாங்குளி, தாயக்கட்டை… இதெல்லாம்தான் அதுக்கு இஷ்டம். அதைப்போயி படிக்க வெச்சு குதிரைச் சவுக்கால கூட அடிப்பாராம்!”
பெரியாத்தாவின் எளிய வார்த்தைகளில் கல்யாணராமன் முன் அந்தக் காட்சி விரிந்தது.
ஷாண்டலியர் தொங்கும் ஹால், ஓரத்தில் நாய்க் குட்டி, கிராமபோனிலிருந்து வால்ட்ஸ் சங்கீதம் கண்ணாடிக் கோப்பைகளின் கிளிங் கிளிங், நடுநாயகமாக துரை ராஜ ராஜா, ‘மே இட் ப்ளீஸ் யுவர் எக்ஸலன்ஸி. கீழே விரித்த ரத்த நிற கார்ப்பெட், ‘விஷ் விஷ்’ என்று அன்னப் பறவைகள் போல் சஞ்சரிக்கும் நடனமாதுகள். வட நாட்டிலிருந்து வந்து கஜல் பாடிய ஸல்லாத் திரைப் பெண்கள். மது… ரத்னாவதி தனி அறையில் ‘ஸி – ஏ- ட்டி- கேட். எம் ஏ ட்டி- மேட், மேரி ஹாட் எ லிட்டில் லாம்ப்’ என்று படித்துக் கொண்டிருக்க, ஜன்னல் வழியே சிரிப்பு சப்தமும் சிணுங்கல்களும் நடன இசையும் கலந்து கேட்க, கலங்கிய சிவந்த கண்களுடன் மல் ஜிப்பா அணிந்து, தலை கலைந்து சுருட்டும் சாராயமும் கலந்து நெடி அடிக்க, ஜமீந்தார் உள்ளே வந்து கையில் சுற்றி வைத்திருக்கும் சவுக்கை நிதானமாகச் சுற்றி வைத்திருக்கிறார்.
“அடிக்காதீங்க… அடிக்காதீங்க! கத்துக்கறேன்! பாடறேன்…! பேசறேன்…! “
“நவைனா அந்தம்மாளுக்குக் கொள்ளை ஆசை! கடைசியா. அத்தனையும் உதறிப் போட்டுச் செத்தா! இப்பக்கூட கண்ணி லேயே நிக்குதுங்க. பொம்ம மாதிரி இருக்கும். புசு புசுன்னு கன்னமெல்லாம் உப்பி, காலணா அவலத்தில் குங்குமம் இட்டு, நிதம் அம்மன் கோயிலுக்கு சாரட்டு வண்டில விளக் கேத்தப் போவுங்க. என்னைப் பார்த்தா நின்னு சாரிச்சுட்டுத்தான் போவுங்க. ‘நல்லா இருக்கியா? நல்லா இருக்கியா?’ கூட்டிக் கூட்டிப் பணங்கொடுக்குங்க.”
கல்யாணராமன் ஜன்னல் வழியாக ரத்னாவதியை மறுபடி பார்த்தான். அந்தக் கண்களில் பயம்; உடம்பெல்லாம் நகை, யாரோ மாட்டி விட்டு அதட்டி நிற்க வைத்தது போல.
“அய்யா! சில்லறையா ஒரு ரூவா இருக்குங்களா…? கொஞ்சம் பொயலையும் ஆளாக்கு அரிசியும்…’
“மல்லிக் காப்பியும் வாங்கணும்னு-அதானே? பாட்டுக் கேக்கலிங்களா?”
“இல்லை, பெரியாத்தா! நான் மூடுல இல்லே.”
“அ?”
“ஹே! அந்தம்மாளுக்கு எத்தனை பசங்க?”
“நீயாவது என்னைக் கண் கலங்காம வெச்சுக்கிறயாடான்னு ரெண்டு வயசுப் புள்ளைகிட்ட சொல்லிச் சொல்லி அளும்”
“அவங்க அப்பா அம்மாவெல்லாம் எப்படி?”
“அதுவும் ஒரு சீரளிஞ்ச குடும்பங்க. இவரு எட்டடின்னா அவரு பதினாறடி பாஞ்சாரு! பம்பாயில போய் சினிமாப் படம் எடுத்து ஒளிச்சாரு. ரத்னாவதி அம்மா இந்த வீட்டை விட்டு வெளியூர் போனதில்லிங்க. அதான் இறந்த பிற்பாடும் இங்கேயே சுத்துதுங்க. காத்தடிச்சு அப்பசி மாசம் மழை பேஞ்சு ஓஞ்சதும் தவறாம வருதுங்க!”
“நீ பார்த்திருக்கியா?”
“எம் மவன் பார்த்திருக்கான்! நீர்க்கட்டிப் பயலுவ பார்த்திருக்காங்க!”
“அதெல்லாம் புரளி!”
“அந்தப்புளியா மரத்தைப் பாருங்க.. அதன் நிளலைப் பாருங்க… ஒரு புல்பூண்டு இருக்குதா? அதே, பாக்கி மரத்து நிளலில் பாருங்க! சாசிருந்தா அந்த மரத்துக்குக் கீள ஒண்ணு மொளைக்காது.”
“எல்லாப் புளிய மரங்களுமே அப்படிதான். அதன் அமிலக் காற்றின் விளைவு அது என்று அரைச் செவிட்டுக் கிழவிக்கு எப்படி உரைப்பது?
“சரி! போய்ட்டு வா பெரியாத்தா!”
“ராவில தனியா வெளில நடக்காதீங்க.’
“சரி” என்று சிரித்தான்.
கொஞ்சமாகச் சமைத்துக் கொண்டான். சாப்பிட்டான். பிற்பகல் கொஞ்சம் தூங்கினான். அந்தப் பிள்ளைகளுக்கு சாக்லேட் கொடுத்து ஒன்றுபடுத்தி ஒரு பாட்டுப் பாடக் கற்றுக் கொடுத்தான்.
இருட்டற வேளை, இன்னும் சினேகலதா திரும்பி வரவில்லை. வெள்ளி மட்டும் தனியாக வந்தாள்.
அத்தியாயம் – 8
வெள்ளியுடன் ஒரு சிறுவனும் விசுவாசம் மாறாத மணியும்கூட வந்திருந்தனர். ஒரு வேப்பங்குச்சியை வீசிக் கொண்டே வாசலில் நின்றாள்.
“அவுங்க இன்னும் வரலிங்களா?” என்று, சட்டை அணிந்து கொண்டு வெளியில் வந்த கல்யாணராமனைக் கேட்டாள்.
“இன்னும் வரலியா?”
“பொளுது சாயப் போவுது. காலைல போனவரு வயக் காட்டில் ஆளுங்க காத்துக் கிடந்துட்டு கரும்பு வெட்ட மேலாபுரம் போயிட்டாக…” – அவனை நோரகப் பார்க்காமல் பேசினாள். குரலில் கவலை தொனித்தது. அவள் அங்க அசைவுகளில் இருந்த இயற்கையான வசீகரம் கல்யாணராமனின் கவனத்தைக் கலைத்தது. அவள் பேச்சில் அதிகம் பற்றில்லை.
“வந்துருவாங்க” என்றான்.
“நா முளுக்க அங்கென்ன சோலி?”
“தெரியலையே!
“அந்தப் பொம்பளை சரியில்லிங்க!”
“ஆட்டைக் காணம்க்கா, தேடிப் புடிச்சாரவா?”
“இர்றா! பொளுதிருக்கத் தங்கவே மாட்டாருங்க. எப்பவும் இருட்டறதுக்குள்ள வந்துருவாரு. ராத் தங்கிடுவாரோ? பாவனையா அளைச்சுக்கிட்டுப் போயிருக்காளே, அந்தப் பொம்பள!”
“அக்…கா; சாக்கலட்டுத் தருவாருன்னியே?”
“சினிமா கினிமா பார்த்துட்டு வாராங்களோ என்னவோ” என்றான்.
வெள்ளி கோபம் கொண்டு முன்னிலையில் பேசத் தொடங்கி விட்டாள்; “சினிமாப் போயிருவியாய்யா? வுட்டுட்டுப் போயிருவியா என்னை? பூ நாகம் தீண்டாது உன்னை?”
“யாரைச் சொல்றே வெள்ளி?”
“அந்தாளைத்தானுங்க! சரியாத்தானுங்க இருந்தாரு. போன வருசம் ஒரு தடவை மல்லு வேட்டிக்காரங்க ரெண்டு பேரு பின்னே போயி அவுங்க எங்கேயோ கூட்டிக்கிட்டுப் போயி பயந்துக்கினு ஓடியாந்துட்டாருங்க. அந்த சூள்ச்சியெல்லாம் இவருக்குத் தெரியாதுங்க”.
“ஏன் கவலைப்படறே? வந்துடுவாங்க!”
“அக்கோவ் அக்கோவ்! சாக்கலட்டு”
இந்தக் குரங்குக்கு ஒரு சாக்கலட்டுக் கொடுங்க. புடுங்குதான்.”
“உன் பேர் என்ன?”
“ராசாவேலு.”
“இந்தா எட்டணா! ஓடிப்போய் உங்கக்காவுக்கும் உனக்கும் மிட்டாய் வாங்கிண்டு வா பார்க்கலாம்.”
அவன் மானசீக டிராக்டரைக் கிளப்பி கியர் போட்டு ‘டுர்ர்’ என்று புறப்பட்டு, ‘குச்சிக் குச்சி ராக்கம்மா! கூசாள ராக்கம்மா!’ என்று கூவிக் கொண்டு ஓடினான்.
இருள் படிந்து கொண்டிருக்க, ‘உக்காரு வெள்ளி’ என்றான். வேப்பங்குச்சியைக் கடித்துக் கொண்டு வழியை நோக்கிக் கொண்டே உட்கார்ந்தாள். நின்ற வாகிலிருந்து அவள் மேல் சோகை மஞ்சள் சூரிய கிரகணங்கள் படிய செதுக்கி வைத்தது போல் இருந்தாள். அவள் மார்பின் பிரிவு தெரிந்தது. அந்த மணிமாலை அங்கே ஒளிந்து கொண்டிருந்தது. கல்யாணராமன் ஜூரம் போல் உணர்ந்தான்.
அப்படியே அவளைக் கட்டிப் பிடித்து வீழ்த்தி அவள் உடையைக் கலைத்தான், மனசில்.
“வெள்ளி! உன் கையைக் காட்டு! எனக்கு ரேகை பார்க்கத் தெரியும்!”
அவள் அங்கிருந்தே தயக்க அசுவாரஸ்யத்துடன் கை நீட்டினாள். அவள் விரல்களைப் பற்றத் தைரியம் வரவில்லை. சற்று அருகில் சென்று கையைக் கவனித்தான். தன் சுட்டு விரலை ரேகை மேல் ஓட்டினான். அவள் இயல்பாகப் பின் வாங்கி வேப்பங்குச்சியைக் கொடுத்து, “இதால பாருங்க” என்றாள்.
“இங்கே சரியாத் தெரியலை. உள்ளே வாயேன்” என்று விளக்கப் போட்டான். தயக்கத்துடன் உள்ளே வந்தாள். அவள் சுற்றியிருந்த புடவை இடுப்பில் படிந்திருந்ததைக் கவனித்தான். “உட்காரு” என்றான். தரையில் உட்கார்ந்தாள்.
“உன் மனசில நினைக்கிறது நடக்கணும் இல்லியா?”
“ஆமாங்க.”
“மனசிலே என்ன நினைக்கிறே?”
“இவரு மாறாம விசுவாசமா இருக்கணுங்க! எனக்கு மனசு கிடந்து பதைக்குது.”
“அவ்வளவுதானே? சொல்லு! ஓம் நமச்சிவாய!”
“ஓம் நமச்சிவாய!”
“ஓம்! ஓம்! கண்ணை மூடிக்க! அப்பத்தான் மந்திரத்துக்கு நல்ல பலன்…”
மூடிக்கொண்டாள். அருகில் சென்றான். அவள் முகத்தின் மிக அருகே சென்றான். வேப்பெண்ணெய் வாசனை, மண் வாசனை, ஈரமான நெல் வயல் வாசனை, அழகின் வாசணை, ஸன்ன விரல் நுனிகளால் மார்புப் புடவை நுனியைப் பற்றினான். இருதயம். தொண்டைக்கு வந்து விட்டது. மெதுவாக அவளைத் தன் கையால் சுற்றி வளைத்தான். மூச்சுப் பட்டுத் துணுக்குற்றுக் கண்திறந்து உடனே அவனைத் தள்ளினாள். அவள் கை அகப்பட்டது.
“விட்டுருங்க! விட்டுருங்க!” கண்ணாடி வளையல் ஒடிந்தது. அவளைப் பற்றியிழுத்தான். அசுர பலத்தில் உதறிக் கொண்டு, தன் சீலையால் வாயைப் பொத்திக் கொண்டு, “சே! நீங்க படிச்சவங்க! பட்டணத்துக்காரரு! பெரியவங்க! நல்லால்ல! அவருக்குச் தெரிஞ்சா அருவாளைத் தூக்கிடுவாரு” என்றாள்.
கல்யாணராமன், ‘ஸாரி’ என்று முணுமுணுத்தான். உடலில் நடுக்கம் இருந்தது.
“டுர்ர்ர்” என்று ராசவேலுவின் டிராக்டர் சப்தமும் ‘குச்சி குச்சி ராக்கம்மா’வும் கேட்டது.
“இந்தாக்கா முட்டாயி!”
அந்த இனிப்பை நிராகரித்து, பொட்டலத்தைப் பெட்டி மேல் வைத்தாள். “போய் வாரனுங்க. அவரு இங்க வந்தா வெள்ளி வந்து காத்திருந்ததாகச் சொல்ல வாண்டாங்க!”
என்னக்காது? எனக்கு முட்டாயி?”
“வாடா குரங்கு! வேற வாங்கித்தாரேன். நான் ஒரு பைத்தியம்! கருக்கல்ல வெளியில் வந்தம்பாரு? செவ்வாக்கிழமை நகம் வெட்டினேம்பாரு! தரித்திரம்!”
கல்யாணராமன் பெருமூச்சுடன், ஏன் சற்று விடுதலை உணர்ச்சியுடன், அவள் சென்ற வழியைப் பார்த்துக் கொண்டு நின்றான். இவர்களுடன் நான் எப்படி கம்யூனிகேட் பண்ண முடியும்? மருதமுத்துவை நினைத்து ஏங்குகிறவளைத் துணிச்சலாகக் கையைப் பிடித்து விட்டேனே? என்ன ஒரு அசட்டுக் காரியம்? இந்த விபரீத ஏக்கம் ஆரம்பத்திலிருந்தே தப்பு. மருதமுத்துவிடம் சொல்லி விடுவாளோ பயமாக இருந்தது. ‘வெகுளிப் பெண். விஷயத்தைப் போட்டு உடைத்து விடுவாள். இல்லை சொல்ல மாட்டாள். இந்தத் தடவை சொல்ல மாட்டாள்’ “இன்னு ஒருக்கா இந்த மாதிரி செய்யாதிங்க…”
லுங்கிக்கு மாறிக் கொண்டு படுக்கையில் வந்து படுத்தான். ஒரு விதமான ‘வால்டர் மிட்டி’த்தனத்தில் வெள்ளியைத் தீ விபத்திலிருந்து காப்பாற்றினான். வெள்ளத்தில் நீந்தி அந்த ராசவேலுவைக் கரை சேர்த்துப் பிழிந்தெடுத்தான். வெள்ளியைத் துரத்தின காட்டுப் பன்றியை ரத்தக்குத்தாகத் குத்தினான். மருதமுத்து? பேச்சே இல்லாமல் மரத்தின் மேல் தொத்திக் கொண்டிருந்தான்.
ம்ஹும்!
சைக்கிள் மணிச் சப்தம் கேட்டு இருட்டில் அந்த உருவங்கள் தோன்றி அருகே வரவர சினேகலா, மருதமுத்து. முன்னவள், சைக்கிளின் முன்பக்கம் கிராஸ் பாரில் உட்காரந்திருந்தாள்.
“ஹாய் ராம்!”
மருதமுத்து அவனுக்கு மிக அருகில் அவளைக் கொண்டு வந்து நிறுத்தி, கத்தி செருகினாற்போல பிரேக் போட்டு நிறுத்தினான்.
“ஓ! வாட் எ லவ்லி ரைட்!” என்றாள்.
“ஏன் இத்தனை நேரம்?”
“சினிமா போயிருந்தோம்! அது என்ன சினிமா மருதமுத்து?” அவள் தலை கலைந்திருந்தது.
“செகன் மோகினி.”
“செக்ஸ், பக்தி – நல்ல காம்பினேஷன். மருதமுத்து எனக்கு உபசாரம் பண்ணினான் பாருங்க – அடாடா டாடா.”
மருதமுத்து “வெள்ளி வந்திருந்ததுங்களா?” என்றான் குரலில் குற்றத்துடன்.
கல்யாணராமன் பொய் சொல்ல முடியாமல், “ஆமாம்! உனக்காக இத்தனை நேரம் காத்திருந்தா?” என்றான்.
“நீங்க அவளைப் பார்த்துக்கிட்டே இருந்தீங்களா?”
“வெள்ளிக்கு வேறு சோலி கிடையாது. ஒரு மணிக்கு ஒரு தபா என்னைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்.”
“சரியாப் பார்த்துக்க மருதமுத்து. மத்தப் பேர் அவளைக் கொத்திக்கிட்டுப் போயிருவாங்க.”
கல்யாணராமன் அவளை முறைத்தான்.
அவள் சிரித்து, “திஸ் ஃபெலோ மஸ்ட் பி சூட் இன் பெட்” என்றாள். அதிர்ச்சியுடன் அவளை நோக்கினான்.
மருதமுத்து, “என்னவோ இங்கிலீசு! சினேகம்மா ஒரு நா நானும் அர்த்தம் புரிஞ்சுக்கிட்டு, ‘திஸ் ஃபெலோ விஷ்பிஷ விஷ்’னு பேசத்தான் போறேன்!”
அவள் கை தட்டி ரசித்துச் சிரிக்க, மருதமுத்து இரண்டு நிமிஷம் தொடர்ந்து அம்மாதிரி செயற்கை இங்கிலீஷ் பேசிக் காட்டினான். கண்களில் நீர் வரச் சிரித்தாள். தன் கைப்பையிலிருந்து ஒரு சிறிய பாட்டிலை எடுத்து அதன் ஏரோஸால் ஸ்ப்ரேயை அழுத்தி அவன் மேல் பர்ஃப்யூம் அடித்தாள். சின்னதாக ஒரு வாசனை மேகம் மருதமுத்துவைச் சூழ்ந்து கொள்ள, மருதமுத்து ஜெகன் மோகினி போல் நாட்டியமாடவே ஆரம்பித்துவிட்டான். அவள் கை கொட்டிச் சிரிக்க கல்யாணராமன் மௌனமாக அவளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
“போய் வாரனுங்க. ரவைக்குப் படுக்க வந்துடறேன்”. சைக்கிள் ஸீட்டைப் பிடித்துக் கொண்டு ஓரக்கண்ணால் சினேகலதாவைப் பார்த்துக் கொண்டு ஸ்டைலாக ஏறி, “டிங்க டிங்” பண்ணிக்கொண்டே சென்றான்.
“நீங்க அவனோட விளையாடறீங்க! அவனை முட்டாள் அடிக்கிறீங்க!”
“ஏன் பொறாமையா?”
“சேச்சே! டோண்ட் இமேஜின் திங்ஸ்! அதிருக்கட்டும்! ரத்னாவதி அம்மாவோட போட்டோவை உங்க ரூம்ல பார்த்தேனே! ஹால்லே இருந்து ஏன் கழட்டிட்டீங்க?”
அவள் சற்றுத் துணுக்குற்றுச் சமாளித்து, “ஊருக்கு எடுத்துட்டுப் போகலாம்னுட்டு. மருதமுத்துவை வெச்சுக்கிட்டு ஹாலைத் துப்புரவா ஒழிக்கப் போறேன். பழைய காகிதங்களைக் கிழிச்சுப் போட்டுட்டு… இந்தாங்க! உங்களுக்குப் பசிக்குமேன்னு ஃப்ரூட் ப்ரெட் வாங்கிண்டு வந்தேன்.”
“தாங்க்ஸ்”
“வெறும் தாங்ஸ் மட்டும்தானா?”
“அதுக்கு மேலே வேணும்னா கித்தார்ல ஒரு பாட்டு வாசிச்சுக் காட்டறேன்!”
“அவ்வளவுதானா! ரொம்ப மோசம்!” என்று தன் அறைக்குச் சென்று சற்று நேரத்தில் “கல்யாணராமன்! ஒரு ஸேப்ட்டி பின் இருக்குமா?” என்று திரும்பி வந்தாள்.
அவளை வெறித்துப் பார்த்தான். “இத பாருங்க! நிச்சயம் உங்ககிட்ட நிறைய சட்டை, பட்டனோட இருக்கு. இந்த சர்ட்டுதான் ஆப்ட்டுதா?”
“யூ டோண்ட் லைக் மி ராமன்!”
“என்னையும் மருதமுத்து மாதிரி பைத்தியமா அடிக்கணும்னு பாக்கறீங்களா? அந்த பெர்ஃப்யூம் மணத்தோட அவன் வெள்ளிக்கிட்ட போகப் போறான்.”
சிரித்தாள். “எதற்குத்தான் சிரிப்பது என்ற விவஸ்தையே கிடையாதா இவளுக்கு?”
“அவளை என்ன பண்ணிங்க?”
“எவளை?”
“வெள்ளியை! மெள்ளே உள்ளே அழைச்சுக்கிட்டு, வாவா வித்தை காட்டறேன்… பாட்டு வாசிக்கிறேன்னு… இருட்டிலே கூட்டிட்டுப் போயி…”
“சட்!” கோபத்தில் அவள் மேல் புத்தகத்தை எறிந்தான். அவள் அதைப் பிடித்துத் தலைப்பைப் படித்தாள். “லீலா திலகம்”, பிரித்து முதல் பக்கத்தைப் படித்தாள்.
“பாலோடு துல்ய ருசி மௌலியில் உனக்கும்
பாலேந்தும் மந்த ம்ருதுலஸ்மித வெண்ணிலவு”
“சட்” என்று அதே வேகத்தில் புத்தகத்தைத் திருப்பி எறிந்தாள். “எங்கிட்ட ஒரு புத்தகம் இருக்கு தரவா?”
“ப்ளேபாய்?”
“இல்லை. ப்ளே கர்ள்! குட்நைட் தம்புரா?” உதட்டைப் பிதுக்கினாள், “ம்ஹும், தாக்கத் போறாது அய்யரே! அஞ்சால் அலுப்பு லேகியம் சாப்பிடு!”
– தொடரும்…
– கரையெல்லாம் செண்பகப்பூ, எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது.