கரையெல்லாம் செண்பகப்பூ






(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6
அத்தியாயம் – 3

சப்தம் மாடியிலிருந்துதான் வந்தது. நாற்காலி நகர்த்துவது போன்ற சப்தம். விளக்கைப் போட்டுக் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். ஒன்று பதினைந்து.
எழுந்துபோய்ப் பார்க்கத் தைரியம் வரவில்லை. சற்று நேரம் உத்தரத்தைப் பார்த்துக் கொண்டு காத்திருந்தான். தேக்கு மர ரீப்பர்கள் காவி வர்ண பெயிண்ட் அடித்து வரிவரி நிழல்கள் அமைக்க, சிலந்தி வலைப் போர்வை போர்த்தித் தொங்கிய சரவிளக்கில் பல்ப் இல்லை. மருத முத்துவின் ஒற்றை விளக்கு மட்டும் மெதுவாக ஆடிக் | கொண்டிருந்தது. ஜன்னலுக்கு வெளியே கிருஷ்ண பட்சத்துச் சோகை நிலா சோலைகளை அனாவசிய ரகசியங்களுக்கு உள்ளாக்கியிருந்தது. இருள் திட்டுகளில் சர்ரியலிஸம் தெரிந்தது.
கல்யாணராமன் இனி தூங்க முடியாமல் காஸெட்டுடன் இணைந்திருந்த ரேடியோவைத் தட்டி முள்ளைத் திருப்பினான். முப்பத்தொரு மீட்டரில் ஸ்டேஷன்கள் கொப்பளித்தன. மேற்கு ஜெர்மனியின் குரல் ஒண்ட வந்த யுகோஸ்லாவியர்களையும் துருக்கியர்களையும் பற்றிச் சலித்துக் கொண்டது. பி.பி.ஸி. இன்றைய உலகம் என்றது. சீனா ஓல சங்கீதம் பாடியது. மாஸ்கோ எங்கள் நாட்டில் எல்லோரும் சுபிட்சம் என்றது. இரவில்தான் எத்தனை குரல்கள்! நிசாசரர்கள்! அவர்களில் ஒரு குரல் மாடியிலா? வெறும் குரலா! வெறும் சப்தமா? ரேடியோவைத் தணித்தான். அந்த சப்தம் இப்போது திசைமாறி யிருந்தது. மாடிப்படியருகில் கேட்டது. திடுக்கிட்டான். மரப் படிகளில் இறங்கி வரும் சப்தம் கேட்டது. நிதானமான, பதட்டமில்லாத இறக்கம். படிகளின் பழைய ஆணிகளும் ஜாயிண்ட்களும் முனகுவது கூடக் கேட்டது. அப்படியே உறைந்து போனான். அறைக்கதவு தாளிட்டுத் தான் இருக்கிறது. இருந்தும் ஓர் உதை உதைத்தால் திறந்து விடும்.
காலடி ஓசை இப்போது அருகில் கேட்டது. மெதுவாக மெதுவாக என்ன நோக்கி வருகிறான். நிச்சயம் இங்கேதான் வருகிறான். அதோ, அறைவாசற் கதவுவரை வந்து விட்டான். நிற்கிறான்.
மௌனம், விஸ்தாரமான மௌனம். கல்யாணராமனின் உடல் முழுவதும் எச்சரிக்கை சுரப்பிகள் பாய்ந்து மயிர்க்கால்கள் நின்று கொண்ட மௌனம்.
சட்டென்று ரேடியோவைப் பெரிது படுத்தினான். கதவு தட்டும் ஓசையை அவன் கேட்க விரும்பவில்லை. திடும் திடும் என்று ‘பாப்’ சங்கீதம் அதிர்ந்தது. கல்யாண ராமனின் உதடுகள் சமஸ்கிருதத்தில் துடித்தன.
“அமுர்த்திரனகோ அசிந்த்யோ
பயக்ருத் பயநாசனஹ”
அச்சம் உண்டாக்குபவனும் அச்சத்தை அகற்றுபவனு அவனே அவனே அவனே!
கொஞ்சம் தெம்பு வந்து ரேடியோவை நிறுத்தினான். மௌனம் ஒரு நிமிஷம். பத்து நிமிஷம். அரை மணி. ம்ஹும்… அவ்வளவுதான். எதுவும் கேட்கவில்லை.
முதலில் ஒரு டார்ச் வாங்க வேண்டும். தற்காப்புக்கு ஏதாவது ஓர் ஆயுதம் வாங்க வேண்டும். நாளை தங்கராசுவைக் கேட்க வேண்டும். ஒரு வேளை மாடியில் வேறு யாராவது தங்குகிறார்களோ, என்னவோ? தங்கராசு சொல்ல மறந்திருக் கிறான். அப்படித்தான் இருக்கும். நாளை கேட்டு விடலாம். நாளைக்கு… நாளைக்கு இப்போது தூங்கிவிடலாம்.
காஸெட்டில் மெலிதான வயலின் சங்கீதம் அமைத்துக் கொண்டான். விளக்கணைத்துக் கண்ணை மூடிக்கொண்டான். அவன் தங்கையின் முகம் தெரிந்தது.
‘ஓப்பன் ஹார்ட் ஸர்ஜரிக்கு வெல்லூர்தான் நல்லது. ஆனா பதினஞ்சாயிரம் ஆகும். அங்கேயும் செய்றாங்க. எது எப்படியோ க்விக்கா டிஸைட் பண்ணிடுங்க!’
அவன் டிஸைட் பண்ணுவதற்குள் கடவுள் டிஸைட் பண்ணிவிட்டார். “அண்ணா! எனக்கு அந்த நீல ஸாரி வாங்கி வரியா?” அதற்குள் அதற்குள்…
மான்சீனியின் வயலின்கள் அவனை ஆக்கிரமித்துக் கொண்டன.
நகரத்தில் கேட்டே அறியாத பட்சிகள் எல்லாம் “கல்யாண ராமன்” “கல்யாணராமன்!” என்று அவனை எழுப்பின. எழுந்தான். வேறுவிதமாக இருந்தது காலை. ரகசியங்கள் எல்லாம், பயங்கள் எல்லாம் இளஞ் சூரியனிடம் அடிபட்டுப் போய்விட்டன. ஜன்னல் வழியாக அந்தக் தங்கத் திகிரி உஷ்ணமில்லாமல் அவன் மேல் மஞ்சளடித்தது.
வெளியே வந்தான். தூரத்தில் அந்தப் பம்ப் செட் தெரிந்தது. ஒரு ஜெர்ரிகானையும் சோப்பு, பற்பசையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். சோலைக்குள் நடந்தான். உலர்ந்த இலைகளை அவன் காலடிகள் ‘சரக் சரக்’ என்று ஆதரவாக மிதித்தன. உற்சாகம் திரும்பி விட்டது.
செங்கல் கட்டடத்தின் மேல் தகரக்கூரை அமைத்து, அது காற்றில் பறக்காமல் இருக்கக் கருங்கல் வைத்து, அதனுள் பம்ப் உறுமிக் கொண்டிருக்க, வெளியே வயலில் நீர் தடிமனா கப் பாய்ந்து கொண்டிருக்க- அங்கே உட்கார்ந்து அதன் ஆவேசப் பிரவாகத்தில் குளித்தான்.
“டிட்டிட் டீரராரலாப லூபா என்று சாகித்திய மில்லாமல் பாடினான். சிரிப்புச் சப்தம் கேட்டது. திடுக்கிட்டுத் திரும் பினான். சோப்பு நழுவியது.
வெள்ளியும், இன்னொரு பெண்ணும் நின்று கொண்டிருந் தார்கள். தோளில் துணிகள்.
“என்ன”
“இங்கே வந்திங்களா குளிக்கிறதுக்கு?” உடன் வந்திருந்த பெண் எங்கோ பார்த்துச் சிரித்தாள்.
“ஏன்?”
“இது பொம்பிளையாளுங்க குளிக்கிறது!”
“ஸாரி!” என்று எழுந்து உடனே உட்கார்ந்தான். வெறும் அண்டர்வேர்.
மறுபடி சிரித்து அவர்கள் திரும்பிக் கொண்டார்கள்.
“கொஞ்சம் ஒதுங்கிக்குங்க. நான் போயிடறேன்.”
“அந்தால தெரியுது பாருங்க பாம்புக் குளா. அங்கே போவலாம் நீங்க.”
அவசரமாக கட்டை பாண்ட் அணிந்து கொண்டு தலையில் இன்னும் நீர் சொட்டச் சொட்டக் கிளம்பினான்.
அவர்களைக் கடக்கும்போது அந்தப் பெண் ‘கிச்’ என்று நெருப்புக்குச்சி கிழிப்பதுபோல் சிரித்தது எரிச்சலாக வந்தது. “த! சும்மாரு!” என்றாள் வெள்ளி. அவளும் சிரித்துக் கொண்டிருந்தாள்.
சற்று தூரம் நடந்ததும்தான் சோப்பை மறந்து விட்டது ஞாபகம் வந்தது. திரும்பினான். ஒரு கணம் வெள்ளி மார்பில் துணியில்லாமல் நின்றது தெரிந்தது. மறுபடி பார்க்கத் தைரிய மில்லாமல் திரும்பி விருட்டென்று கிளம்பினான்.
ஜமீன் வீட்டுக்குத் திரும்பியபோது தங்கராசுவும் வயசான ஓர் அம்மாவும் காத்திருந்தார்கள்.
“குளிச்சிங்களா? காப்பி பலகாரத்துக்கு என்ன செய்யப் போறீக? பால் கொண்டு வந்திருக்கன்.’
“இது யாரு தங்கராசு?”
“இதான் பெரியாத்தா…”
சுருக்குப் பையிலிருந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த பெரியாத்தா அவனைப் பார்த்துச் சற்று சிரித்தாள். அள்ளிச் செருகிய முடி. அலையும் கண்கள். நெற்றியில் கோடுகள். அறுபது வயதிருக்கலாம். ஒன்று இரண்டு பற்கள் தான் காவி நிறத்தில் ஓட்டிக் கொண்டிருந்தன. ஏறக்குறைய பொக்கைச் சிரிப்பிலும் தீர்க்கமான மூக்கிலும் வசீகரம் நிச்சயம் இருந்தது.
“உக்காருங்க, வரேன்.”
“நான் கிளம்பறேங்க பெரியாத்தா! அய்யா பட்டணத்தில் இருந்து வந்திருக்காரு. அவரு என்ன கேக்குறாருன்னு காதில் வாங்கிக்க. கொஞ்சம் சத்தம் போட்டுப் பேசணுங்க. ஒரு காது டப்பாசு”
அவள் மென்று கொண்டே தலையாட்டினாள்.
“தங்கராசு! ஒரு விஷயம். இந்த வீட்டில் வேறு யாராவது தங்கறாங்களா?”
“இல்லியே, எங்க?’
“ராத்திரி யாரோ நடமாடற மாதிரி சப்தம் கேட்டுது.”
“எங்கே?”
“மாடில.”
“சலங்கை சப்தமா?”
“இல்லை. ஆள் நடக்கிற மாதிரி கேட்டது. மணி ஒண்ணு இருக்கும்.”
“பயந்துக்கினிங்களா?”
“இல்லை, ஒரு மாதிரி… தனியா இருக்கிறதில…”
தங்கராசு யோசித்தான்.
“யாரு…? ஒருவேளை அறுப்பறுக்கப் போய் வார பயலுவ தண்ணியடிச்சிட்டு உள்ளார வந்துட்டானுகளோ என்னவோ. பேச்சுக் குரல் கேட்டுதுங்களா?”
“இல்லை.”
“எதுக்கும் ஒண்ணும் செய்யுங்க. தோட்டத்துக்கு வெளில் கதவு இருக்குது பாருங்க; அதைச் சாத்தி வெச்சுட்டுத் தூங்குங்க. காலைல வர்றபோது திறந்து கிடந்தது. பார்த்தேன். எதுக்கும் ரவைக்கு மருதமுத்துவ வந்து படுக்கச் சொல்லுறேன்.”
“சரி!”
தங்கராசு வீட்டைச் சுற்றி ஒரு தடவை நோட்டம் விட்டு, “யாராயிருக்கும்?” என்று முனகிக் கொண்டே கிளம்பினான்; “ஏய் கிளம், அதுக்குள்ள தொடங்கிட்டியா?”
பெரியாத்தா மடி நிறைய கொய்யாக் காய்கள், முருங்கைக் கீரை, மாங்காய் என்று சேகரித்து வைத்திருந்தாள்.
“வீணாத்தானே போவுது!”
“பறிக்காதே. எல்லாம் என் பொறுப்பு. கீளே போடு! கிளத்தைக் கொஞ்சம் நோட்டம் பார்த்துக்கங்க. தோட்டத்தையே சூறையாடிப்புடும். சில்லறை கில்லறை கண்ல காண்ற மாதிரி வெக்காதீங்க, திருடு!”
“அய்யா!” என்றாள் பெரியாத்தா. தங்கராசு போனதும் கல்யாணராமனைப் பார்த்துச் சிரித்தாள்.
“இரும்படிச்ச மாதிரி இருக்கிகளே, ராசா மவனே?” என்றாள்.
“இங்கேயே இரு, வரேன்” என்றான்.
“காப்பித் தண்ணி இருக்குங்களா?”
“நானே சாப்பிடலை இன்னும்.” -உள்ளே சென்றான். தங்கராசு கொண்டு வந்திருந்த பால் சூடாக இருந்தது. அதில் சர்க்கரையையும் ப்ரூவையும் போட்டுக் கலக்கி மடக் கென்று விழுங்கினான். திடமான பால் கொஞ்சம் வயிற்றைப் புரட்டியது. சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். வெளியே வந்தான். பெரியாத்தா தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்தாள். தரையில் அவள் சேகரித்த காய் வகைகள் இறைந்திருந்தன.
“வீணாப் போவுது, அணில் தின்னுது. எடுத்துக் கிட்டா என்னவாம்!…நீங்க வம்முசங்களா?”
“என்னது?!”
“சமீன் வம்முசங்களா?”
“இல்லை. பாட்டுக் கேக்க வந்தேன்.”
“அ?”
“பாட்டு! நாட்டுப் பாட்டு.”
“நாட்டுப் பாட்டு! பாட்டு!” என்று இரைந்தான்.
“எனக்கு எல்லாம் தெரியும்! கிளம்ங்கிறான்! எனக்கு என்னா வயசு? பங்குனில பொறந்தனுங்க!”
“என்ன வயது உனக்கு?”
“நாப்பதுங்க.”
“சரிதான்! சினிமால இருக்க வேண்டியவ நீ; உனக்கு என்ன பாட்டு தெரியும்?”
“எல்லாங்க! ஒப்பாரி, கோடங்கி, கலகம்… காசு தருவீகன்னு வெள்ளி சொல்லிச்சு!”
“தரேன்.”
“ஒத்த ரூவா கொடுத்திங்கன்னா மல்லிக் காப்பியும் ஆளாக்கு அரிசியும் கொஞ்சம் பொயலையும் வாங்கலாம். மவன். இருக்கான். காசே குடுக்கமாட்டான். அந்தச் சிறுக்கி தண்ணீகூட ஊத்த மாட்டாங்கறா. நல்ல சீலை உடுத்தி நாளாச்சுங்க. பாருங்க, எல்லாங் கிளிசல்.”
“ஏய்! ஏய்! அழாதே.”
“போய்ட்டாருங்க. மூணு வருஷம் ஆச்சு. வயல்ல இருந்து வந்தாரு. வெளிக்கிருக்கறன்னாரு. திடீர்னு விளுந்தாருங்க. கண்ணு தொறக்கலை. பெரியாசுபத்திரியில முதுவுல ஊசி குத்தினாங்க. இந்தா பெரிய ஊசி. அந்தச் சிறுக்கி முழுவாம இருந்தாளுங்க.பேரப்புள்ளயப் பாத்துட்டுப் போயிருக்கக் கூடாதா? கண்ணு தொறக்கலை. உன்னாட்டம் வாட்ட சாட்டமா இருப்பாரு. எனக்காருமில்ல. தாய் வீடா? புகுந்த வீடா?
“தங்க ரயிலேறி நான்
தாய்வீடு போவையில
எனக்கு தங்க நிழலில்லை
தாய்வீடு சொந்தமில்லே!”
கல்யாணராமன் அந்தப்பாட்டில் திகைத்தான். “ஏய், இரு! இரு!” என்றான். உள்ளே போய் டேப் ரிக்கார்டரை எடுத்து வந்தான். “மறுபடி சொல்லு.”
அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு, “காசு குடுப்பீகளா?” என்றாள். கல்யாணராமன் அவளுக்கு ஐந்து ரூபாய் தந்தான். “சில்லறை இல்லிங்களே?”
“எல்லாத்தையும் வெச்சுக்க.”
அவள் துக்கமெல்லாம் சட்டென்று கோடை மழை போல விலக, மூக்கை உறிஞ்சி, “இதென்ன மணக்குது இங்கே!” என்றாள். கல்யாணராமன் சட்டையில் இருந்த பெர்ஃயூம் மணத்தைச் சொல்கிறாள். “மாசிப் பச்சை மணக்குது உங்க மேல!” என்றாள்.
“சென்ட்டு! அதிருக்கட்டும். நீ அந்தப் பாட்டைப் பாடு மறுபடியும்!”
“இதென்னங்க…?”
“டேப் ரிக்கார்டர்”
“அ!” என்றாள் மந்தமாக.
“காட்றேன் நீ சொல்லு!”
“அன்னா தெரியுதில்ல
அண்ணாச்சி மண்டபங்கள்
மண்டபத்துக் கீழே நான்
மயிலாள் சிறையிருந்தேன்
மயிலினும் பாராமே என்னை
அம்பு கொண்டு எய்தாக!”
“ப்யூட்டிஃபுல் ஓல்ட் கர்ல்! ஐ லவ் யூ!” என்றான்.
“சீதை பிறந்தவிடம்
சிறுமதுரை அடிவாரம்
சீதைவிடும் கண்ணீரு
சின்னமடி நிறைந்து
திருப்பாற் கடல் நிறைந்து-”
கிராமத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் அந்தக் கவிதை வரிகள் எங்கே பிறந்தன; எங்கே மலர்ந்து, எப்படியெல்லாம் பரவின? கல்யாணராமன் ஒரு நிமிஷம் கடவுளுக்கு அருகில் சென்றான்.
பெரியாத்தாளின் வரிகளை டேப் ரிக்கார்டர் ஆர்வத்துடன் சுழன்று சுழன்று பதித்துக் கொண்டது.
“என்ன ஸாமி! டவுனுக்கு வரீகளா?” ஜன்னலுக்கு வெளியே பார்த்தான் மருதமுத்து.
சுதந்திரமாக உள்ளே நுழைந்து அவன் ஷேவிங் சோப்பை எடுத்துப் பார்த்தான். ஆஃப்டர் ஷேவ் லோஷனைத் திறந்து உதறிப் பார்த்தான்.
“டவுனுக்கு எப்படிப் போவே?”
“டிராக்டரிலதான். நல்லாருக்கும் சவாரி. கொஞ்சம் புளுதி படும். கண்ணாடி மாட்டிக்கங்க. கறுப்பு கால்சராய் இருந்தா மாட்டிக்கங்க. பொம்பளையாளுங்க குளிக்கிற பம்புக்குப் போய்ட்டிங்களாமே! வெள்ளி சொல்லிச்சு!”
“சொல்லிட்டாளா?”
“ராத்திரி படுக்க வரனுங்க. பயந்துக்கினிங்களாமே! தங்கராசு சொன்னாரு.”
“பயம்னு இல்லே!”
“டவுன் ஆளுங்க பயந்தவங்க. அந்தப் புளியா மரத்திலே காட்டேறி இருக்குங்க. வெள்ளி பாத்திருக்குது. ஒரு நா ரவைக்கு வந்து பந்தம் புடிச்சுத் தேடினங்க. ‘HUHஹின்னு சிரிச்சுக்கிட்டு ஓடறண்டா ஓடறண்டான்னுச்சு. தகிரியம் வேணுங்க. கைல பாருங்க தாயத்து. முத்தம்மா கோயில் பூசாரி கொடுத்தாரு. உள்ளுக்குள்ள பொம்பளை முடியைப் பொசுக்கி பஸ்பம் வெச்சிருக்கு. பயந்து போயிட்டிகளா? டவுசர்லாம் ஈரமா இருக்குது!”
“இல்லே! அந்தக் கான் ஒழுகறது” என்றான் எரிச்சலுடன்.
“அதான் பார்த்தன். வாங்க!”
டிராக்டரின் பக்கவாட்டில் எலும்பு குலுங்க, கன்ணத்தின் சதைகள் எல்லாம் வைப்ரேஷனில் துடிக்க, குதித்துக் குதித்து ஒரு பிரயாணம். மரத்தடியில் குழந்தைகள் தூளிகளில் தூங்கின. பெண்களின் பின் பக்கக் குன்றுகள் வயல் பச்சையில் தெரிந்தன.
வெள்ளி டிராக்டரை நிறுத்தினாள்.
“எனக்கு எதுனாச்சும் வாங்கி வரியா?” என்றாள்.
“ம்ம்… பஞ்சு முட்டாய் வாங்கி யாரேன்!”
“அய்ய!”
அவளைக் கன்னத்தில் கிள்ளினான் மருதமுத்து. “சாமந்தி கிட்ட காத்திரு. அய்யாவெ விட்டுட்டு வடக்கே போவம்” என்றான். வெட்கப்பட்டாள். “நா வர மாட்டேன்” என்றாள். “இந்தா! வர்ற நீ!” என்றான். “தை மாசம் களிச்சு!” என்றாள். “டெண்டுக்குப் போயிரலாம் புள்ள” என்றான். “துவரங்கா தின்னு!” என்றாள்.
“என்ன மருதமுத்து, நாழி ஆகுமா?”
“இதா கிளம்பிட்டனுங்க! வரம்புள்ள!”
‘ஏன்! ஏன்? எதற்காக இவ்வளவு பொறாமை எனக்கு? என் காதல் அந்த நாட்டுப் பாடல்களிடம் அல்லவா?’
வெள்ளி மிக ஆர்வத்துடன் மருதமுத்துவைப் பார்த்துக் கொண்டு நிற்க, டிராக்டரின் புழுதிப்படலம் அவளை மறைத்ததைப் பார்த்துக் கொண்டே இருந்தான் கல்யாண ராமன்.
புழுதி நிறைந்த டவுன். புவனேஸ்வரி சினிமாக்கொட்டகை. ‘அண்ணா ஒலி ஒளி’ என்று லவுட்ஸ்பீக்கர் கடை, சைக்கிள் கடை, வெல்ல மண்டி, மிளகாய்க் குப்பல்கள், சீட்டித்துணிகள், வசந்தா லாட்ஜ், டவுன் பஸ் ஸ்டாண்டு சுவரெல்லாம் படை மருந்து விளம்பரம்.
சிறியதாக ஒரு கெரொஸின் ஸ்டவ் வாங்கிக் கொண்டான். ஒரு டார்ச் விளக்கு… சோப்பு வாங்கும்போது வெள்ளியின் ஞாபகம் வந்தது. அவற்றை யானைத் தந்தத்திற்கு ஒப்பிட்ட அருணகிரிநாதரின் அனுபவம் சட்டென்று புரிந்தது. ஒரு பிளாஸ்டிக் முத்துமாலை வாங்கி, “இதை வெள்ளிக்குக் கொடு” என்றான் மருதமுத்துவிடம்.
“அட!” என்றான். “பொட்டுச் சீலை எடுக்கலாம்னு தான் பார்த்தனுங்க. இதுகூட நல்லாத்தான் இருக்கும்! இதைப் பார்த்தா நிச்சயம் என்னோட டெண்டுக்கு வந்துரும்!” என்று கண் சிமிட்டினான். மறுபடி பொறாமையின் கத்திக்குத்து.
டவுனிலிருந்து திரும்பிச் செல்லும் போது திருநிலம் ஸ்டேஷன். அருகில் அந்தப் பெண்ணைப் பார்த்தான்.
அத்தியாயம் – 4
அந்தப் பெண் தூரத்திலிருந்து டிராக்டரை நோக்கி ஓடி வந்து நாகரிகப் பாணியில் கட்டை விரலை உயர்த்தி லிஃப்ட் கேட்டாள். “மருதமுத்து! கொஞ்சம் நில்லு!” என்றாள். டிராக் டரின் இயந்திர சப்தத்தில் அவள் சொன்னது அடிபட்டுப் போய்விட்டது. டிராக்டர் மூலை திரும்பி விட்டது. அவள் இடுப்பில் கைவைத்துக் கொண்டு, “பாதகா!” என்று நிற்பது தெரிந்தது. அப்புறம் அவள் தெரியவில்லை. அந்தப் பெண்ணை மறுபடி பார்க்கப் போகிறோம் என்பது கல்யாணராமனுக்கு அப்போது தெரியவில்லை. “யார் அவள்?” என்கிற கேள்வி சற்று நேரம் மனசில் இருந்து விலகியது.
சூரியன் மேற்கே மஞ்சளாக அட்டகாசம் செய்து கொண் டிருக்க, அவர்கள் மேம்பட்டிக்குத் திரும்பினார்கள். வயலில் வேலை செய்த அழுக்குடனும் அலுப்புடனும் வெள்ளி ஓடிவந்து வழி மறித்தாள்.
“எனக்கு என்னா வாங்கியாந்த?”
“த பாரு முத்துமாலை, அய்யாதான் பாத்தெடுத்தாரு.”
“நீயா வாங்கியாரலியா?”
“எனக்கெங்கே பொளுது? வாங்கிக்க.”
வெள்ளியின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. “இந்தா நீயே கழுத்துல மாட்டிக்க” என்று அந்த மாலையை அவன் மேல் எறிந்தாள்.
“அட! இவ்வளவு கோபமா?”
“பின்ன என்னவாம்? ஆசையா வாங்கியான்னு சொல்லி அனுப்பிச்சா, அய்யாவை வாங்கச் சொல்லியிருக்கியே, நல்லாயிருப்பிய உன்னை பாம்பு புடுங்க.”
“வேத்து மனுசன்!”
டிராக்டருடன் நடந்துகொண்டே பேசினாள். “நான் மட்டும் சந்தைக்குப் போனபோது லேஞ்சுக் கரை வேட்டி வாங்கி யாரலை உனக்கு? சிகரெட்டுக்கு ‘டிக்கு டிக்கு’ங்குமே அது வாங்கியாரலை? பொளுது இல்லியா உனக்கு? ஏன்யா, டவுனுப் பொம்பளை எவளாச்சியும் பாத்து இளிச்சியா?”
மருதமுத்து ரசித்துச் சிரித்தான்.
“கட்டிக்கிறது முந்தியே இந்தா விடு விடுது பாத்திங்களா? அன்னிக்கு அந்த சமூக சேவகி பொம்பளைகிட்ட பேசிக்கிட் டிருந்தேன். பொறாமைல செத்தே போயிருச்சி! லே வெள்ளி! அட! கோவமா? உனக்கு எதுக்கு புள்ள மாலை? ஒரு தபா சிரிச்சாப் போதுமில்ல?”
“அடப் போய்யா” என்றாள்.
கல்யாணராமனுக்கு இன்னும் அந்த “வேத்துமனுசன்” ஞாபகம் இருந்தது. அடிக்கடி அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவர்கள் கண்கள் சந்திப்பிலும் சாடைகளிலும் ‘எப்போது சங்கமம், எப்போது சங்கமம்’ என்கிற வேட்கையைத் தான் பார்த்தான். மருதமுத்துவை வெறுக்க முற்பட்டான்.
“வாய்யா சும்மா வம்பு பேசிண்டு! எனக்கு வேலை இருக்கு.”
ஜமீன் வீட்டுக்கு வந்ததும் முன் தோட்டத்தில் பல சிறுவர்கள் அட்டகாசம் செய்து கொண்டிருந்தார்கள்.
வெள்ளி கிளம்பினாள். மருதமுத்து, “எலே, வெட்டிப் பயல்களே” என்று சிறுவர்களை விரட்டினான்.
“டிராக்டர்க்காரன் டோய்!”
“டிராக்டர்க்காரன் டோய்!”
“போங்கடா அமாசில பொறந்த பயலுவலா, விட்டேன்னா உங்க பல்லெல்லாம் எகிறிக்கும். போங்கடா!”
“இருங்க!” என்றான் கல்யாணராமன். அவர்களை நிறுத்தி உள்ளே சென்று ஆளுக்கொரு சாக்லேட் கொண்டு வந்து கொடுத்தான். பற்ற வைத்த பெட்ரோல் போல அவர்களிடம் உற்சாகம் பரவியது.
“நாளைக்கு வாங்க எல்லாரும்! பாட்டு சொல்லித் தரேன்.”
அவர்கள் இரைச்சலுடன் ஓடினார்கள். மருதமுத்து “மாடு மேய்க்கிற பயலுவ, பாடத் தெரியாதுங்க” என்றான்.
“பாட வைக்கிறேன் பாரேன். இவுங்க எல்லார்கிட்டயும் அடித்தளத்திலே பாட்டு இருக்குது. ஏன்? வெள்ளி கூட நல்லாப் பாடுது.”
“பாத்தியா புள்ள! அய்யா சொல்லிட்டாரு!”
“அத நீதான் சொல்லேன்!”
“ராத்திரி படுக்க வரனுங்க. வெள்ளி! அய்யா ராத்திரி பயந்துக்கினாரு, துணைக்குக் கூட்டிருக்காரு. நீயும் வரியா?”
“அ! ஆளைப் பாரு!”
மருதமுத்துவைப் படுக்க வர வேண்டாம் என்று சொல்லத் தான் நினைத்தான். சொல்லவில்லை. வெள்ளியுடன் தனியாகப் பேச நினைத்தான். எப்படி என்று தெரியவில்லை. மருதமுத்துவும் வெள்ளியும் திரும்பிச் செல்ல, அவன் அவளைச் சீண்டுவதும் அவள் ஒதுங்கிச் செல்வதும் மறுபடி கிட்ட வருவதும் தெரிந்தது. அவர்கள் மறைந்ததும் சிரிப்புச் சப்தம் கேட்டது. ‘எங்கேயோ தொட்டிருக்கிறான். சே! என்ன அப்ஸெஷன் எனக்கு, மற மறத்துப்போ!’
தன் அறைக்கு வந்தான். வாங்கி வந்த சாமான்களையும் சாதனங்களையும் நிதானமான அடுக்கினான். காஸெட்டைத் தட்டினான். “சீதை பிறந்த இடம்” என்றாள் பெரியாத்தா. அவளை நிறுத்தி வெள்ளியின் குரலைத் தேடினான். ‘மஞ்சக் கிழங்கு தாரேன்’ என்று மருதமுத்துதான் அகப்பட்டான். நிறுத்தினான்.
மாலை வெளிச்சம் மிச்சமிருந்தது. மாடிக்குப் போய் பார்த்தால் என்ன? மெதுவாக மாடி ஏறிச் சென்றான். பெரிய ஹால் போலிருந்தது. ஜன்னல் வழியாகத் தெரிந்தது. ஹாலின் வாசல் பூட்டியிருந்தது. கதவைத் தொட்டான். இடைவெளி தெரிந்தது. பூட்டை உற்றுப் பார்த்தான். நாதாங்கிக்கு அருகில் இருந்த ஸ்க்ரு ஆணிகள் தொத்திக் கொண்டிருந்தன. அதட்டினால் கூடத் திறந்து கொண்டு விடும். யாரோ திறந்து பார்த்திருக்கிறார்கள். திறந்தும் இருக்கிறார்கள். பையில் இருந்த பால் பாயிண்ட் பேனாவினால் நெம்பிப்பார்த்தான். தயாராகத் திறந்து கொண்டது; வினோதம்.
ஹாலுக்குள்ள நுழைந்தான். முகத்தை ஒட்டடை தொட்டது. தேக்கு மர உத்தரங்கள். வருஷக்கணக்கில் சேர்ந்திருந்த தூசி, துணி போட்டு மூடப்பட்ட நாற்காலிகள், மேசைகள், சோபாக்கள், ஒரு ஆர்மலு கடிகாரம், ஏறக்குறைய ஆறடி உயர போட்டோ. அதில் தலைப்பாகை வைத்துக் கொண்டு நெற்றியில் பொட்டிட்டு மீசை வத்து லாங்கோட் அணிந்து, அதன் பட்டனிலிருந்து ஒரு வெள்ளிச் சங்கிலி பைக்குள் சென்று மறைய, பக்கத்தில் உயரமான ஏதோ ஒன்றின் மேல் நான்கைந்து சிவப்புப் புத்தக அடுக்கின் மேல் கை வைத்துக் கொண்டு நின்ற ஆஜானுபாகு. அவருக்குப் பின் இயற்கைக் காட்சி.
இதுதான் ஜமீன்தாரா?
அருகே மற்றொரு போட்டோ அந்தப் பெண் கழுத்தில்- காதில் மூக்கில் எத்தனை நகைகள்! புஜங்களில்- இடுப்பில்! வைரம் பதிந்த நகைகள். புஸு புஸு என்று ரவிக்கை. பயப் பார்வை பார்த்துக் கொண்டு நின்றாள் அந்தப் பெண். மனைவியாக இருக்க வேண்டும்.
ரவிவர்மாவின் சித்திரங்கள். கிராமபோன், வேலைப்பாடுகள் நிறைந்த தேக்கு அலமாரிகள். ரசம் போன நிலைக் கண்ணாடிகள்.
இது என்ன! ஒரு அலமாரி திறந்திருக்கிறதே! அந்த அலமாரிக்குள் இருந்த பழைய புத்தகங்களிலிருந்து எலிப் புழுக்கை நாற்றமடித்தது. தொட்டால் பொடிப் பொடியாகி விடக்கூடிய நிலையில் பற்பல காகிதங்கள். ஆனால் இவை யெல்லாம் சமீபத்தில் கலைந்திருக்கின்றனவா? தூசிப் படலத்தின் மேல் விரல் அடையாளங்கள் தெரிந்தன. ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் புரட்ட, ஏறக்குறைய மஞ்சளாகி விட்ட தாள்களில் கட்டைப் பேனாவினால் கரியமசியில் எழுதப்பட்ட சாய்ந்த சாய்ந்த எழுத்துக்கள்; “17- 2-6 “பட்டா” “தர்க்காஸ்” “மைனர் ஸூட்” என்று பிடிபடாத வாசகங்களே. மற்றொரு பக்கத்தில் “ரத்னாவதிக்கு நாதாங்கி, கொலுசு, நாற்பது பவுன் வெள்ளி சில்லறை…”
“ஹாய்!” என்று சப்தம் கேட்டுத் தூக்கிவாரிப் போட்டது. திரும்பினான்.
அந்தப் பெண் நிலைப்படியில் நின்று கொண்டிருந்தாள். வெலவெலப்பில் கைப்புத்தகம் கீழே விழுந்து, அதனுள் அடக்கம் செய்திருந்த 1936-ஆம் வருஷப் பூவொன்று பட்டை யாகச் சிதறியது.
அந்தப் பெண் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு ஸ்வாதீனமாக நடந்து வந்தாள். டவுனிலிருந்து திரும்பும் போது திருப்பத்தில் பார்த்த அதே பெண்தான். இவள் இங்கே எப்படி? அதிநகரச் சரக்கு. ஆண்கள் சட்டையும் வெளிர் நீல ஜீன்சும் அணிந்திருந்தாள். புருவங்கள் மெலிதான கோடுகள். சிறிய மார்பு, தலைமயிர் நிறைய ஷாம்பு பார்த்திருந்தது. மூக்கும் சிறிய உதடுகளும் வருகிற வழியில் எங்கேயோ பார்த்த புஷ்பங்களில் சிலவற்றை ஞாபகப்படுத்தின.
“நீங்க… நீங்க.”
“என் பேர் சினேகலதா… நீங்க?”
“கல்யாணராமன், ப்ளீஸ்ட் டு மீட் யூ…”
“ஸ்நேக்னு என்னை என் பிரதர்ஸ் எல்லாம் கூப்பிடு வாங்க, காலேஜ்ல லதா… என்ன குடைஞ்சுக்கிட்டு இருக்கீங்க?”
“இல்லை. வந்து… வந்து…”
தங்கராசு தெரிந்தான்.
“இப்ப கொஞ்சம் சங்கடமாப் போச்சுது. அம்மா வந்திருக்காங்க.”
“அம்மா யாருன்னு முதல்ல அவருக்கு சொல்லிடுங்க, தங்கராசு” என்றாள், கருஞ் சிவப்பில் வர்ணம் அடித்த பகங்களை ஆராய்ந்து கொண்டு.
“அம்மா, வம்முசங்க. சின்ன ஜமீன்தாருடைய கட்சி மகளுங்க… அப்படித்தானுங்களே?”
“ஆமாம். ஹாய் கிராண்ட் ஃபாதர்” என்று அந்த போட் டோவை நிமிர்ந்து கூப்பிட்டாள். மகாராஜஸ்ரீ துரைராஜா அவர்கள் கவனிக்கவில்லை.
“அப்படியா? ஐம் ஸோ கிளாட்” என்றான் கல்யாணராமன்.
“ஆமா! டிராக்டர்ல நீங்கதானே படபடன்னு போய்க் கிட்டிருந்தீங்க? ஒரு லிஃப்டு கேட்டா, நிறுத்தக் கூடாதா? நடந்து நடந்து தொடையெல்லாம் அரைஞ்சு போச்சு. வாஸலின் தடவணும்!”
“ஸாரி, நீங்க இங்க வரப்போறீங்கன்னு தெரியலை.”
“வந்தாச்சு. தங்கப் போறேன். இது என் வீடு!”
“ஓ!”
“நீங்க எதுக்கு வந்திருக்கீங்க? ஏதோ நாட்டுப் பாட்டுன்னு தங்கராசு சொன்னாரு.”
“ஆமாங்க. அதில ரிஸர்ச் பண்றேன்.”
“கம் ஆன்! இந்த ‘ஆமாங்க’ பிஸினஸ் எல்லாம் வேண்டாம். ஆமா! பூட்டியிருக்கிற அலமாரியைத் திறந்து குடையறதுதான்…” குடைவது போல் பாவனை செய்து, “ரிஸர்ச்சா?” என்றாள்.
“ச்சேச்சே! வித்தியாசமான நினைச்சுக்காதீங்க! பொழுது போகலை…”
“ஹால் பூட்டிக் கிடந்துதே?” என்றான் தங்கராசு.
“தொட்டேன். திறந்துண்டுடுத்து.”
“திறந்துண்டுடுத்து! நீங்க பிராமினா?”
“ஆமாம்.”
“நான் ராஜ வம்சம். ராஜா வம்சம், ஓ வாட் எ ஹோல்! இங்கே எப்படி நான் இறங்கப் போறேன். ஜீ… ஸஸ்!”
“அதான் நானும் யோசிச்சுக்கிட்டிருக்கன். அய்யா ரூம்பில மட்டும்தான் லைட்டு இருக்குது.”
“தங்கராசு! நாங்க ஒருத்தரும் இந்தப் பக்கம் வர்ற தில்லைன்னு நீங்க வழிப்போக்கர்களுக்கெல்லாம் வீட்டைத் திறந்து விடறீங்க, இல்லே! இது என்ன சத்திரமா?”
“அம்மா, அப்டிச் சொல்லாதிங்க, நீங்க வரப் போறது எனக்குத் தெரியவே தெரியாது. ஒரு காயிதம் உண்டா?”
“ஐம் ஸாரி!”
“கொஞ்சம் அவகாசம் கொடுத்திங்கன்னா, இந்த வழிப் போக்கனை உடனே காலி பண்ணிடறேன்.”
“கோவிச்சுக்காதீங்க, அய்யரே!” என்று கொஞ்சலாகப் பேசினாள் அந்த லதா.
“மன்னிச்சுக்கங்க. இவங்க திடீர்னு வந்துட்டாக… சின்ன புள்ளைல பார்த்தது. அப்படியே அம்மா மூக்கு இருக்குது பாருங்க! என்று தங்கராசு அந்த ஜிலுஜிலு நகைப் பெண்ணின் படத்தைப் பார்த்தான். அந்தப் பெண் தன் முன்னோரைப் பார்த்தாள். இவுங்கதானா! ஏதோ பசுபலேட்டி கண்ணாம்பா மாதிரின்னா இருக்காங்க! இது யாரு தங்கராசு? என் பாட்டியா?”
“உங்க அப்பாவைப் பெத்தவருங்க!”
“வாட் ஸ்பார்க்ளர்ஸ் ஐஸே. ஒரு டன் நகை இருக்கும் போல இருக்குதில்ல, கல்யாணராமன்?”
“இவ்வளவு நகை போட்டுக்கிட்டு எப்படி நடந்தாங்கன்னு ஆச்சரியமா இருக்குது.
“தங்கராசு, இவர் தங்கி இருக்கிற அறைக்கு எதிர்த்தாப்பில எனக்கு அரேஞ்ச் பண்ணிடு; என்ன? எனக்கும் துணையா இருக்கட்டும்.”
“துணையா! அவரே பயந்துக்கிட்டிருக்காரு! ராத்திரிலே சத்தம் கேக்குதாம்!”
“அப்ப நான் அவருக்குத் துணையா இருக்கேன். என்ன ஸார் கல்யாணராமன். கல்யாணம் ஆய்டுத்தா?”
“இல்லே.”
“டோண்ட் ட்ரை எனி ட்ரிக்ஸ் ஆன் மி. ஓ.கே.?”
“ஓகே!” என்று சிரித்தான்.
“இங்கிலிசில பேசிக்கிறாப்பல” என்று அசட்டுச் சிரிப்புச் சிரித்தான் தங்கராசு. அவன் லதாவைப் பார்த்த பார்வை சரியாக இல்லை. ஒரு கணம் அவன் கண்கள் மார்பில் திறந்திருந்த பட்டனின் மையப் பிரதேசத்தை தடவின.
இறங்கி வந்தார்கள். “ஒரு வாரம் இருக்கலாம்னு நினைக்கிறேன். வெகேஷனுக்கு எங்கே போறதுன்னு யோசிச்சுக் கிட்டிருந்தேன். அம்மா சொன்னாங்க, போய் நம்ம ஜமீன் வீட்டை ஒரு நடை பார்த்துட்டு வந்துறேன்னு. ஓடியாந்துட் டேன். உங்க பாஷைல ஓடி வந்துட்டேன்!”
“தனியா வந்துட்டிக!”
“நான் தனியா லண்டன் போகப் போறேன் தங்கம். மேம்பட்டி என்ன?”
அறைவாசலில் சூட்கேஸ் வைத்திருந்தது.
“மிஸ்டர் கல்யாணராமன்! பயப்படாதீங்க! உங்களை விரட்டமாட்டேன்; போய் ரிஸர்ச் பண்ணுங்க!”
“கேலி பண்றீங்க!” என்றான்.
“சேச்சே! நாட்டுப் பாடல் ரொம்ப முக்கியம்! தங்கராசு, வாங்க, ஊரைச் சுத்திப் பாத்துடலாம். அந்த ரூமுக்கும் லைட்டுப் போடச் சொல்லிடுங்க. மருதமுத்துவோ யாரோ சொன்னிங்களே. அப்புறம் நாடாக் கட்டில் அல்லது கயத்துக்… ஆமா… பாத்ரூம் இருக்குதா?”
“ஹிஹி, இல்லிங்க!”
“அய்யோ…! நான் பாத்ரூம் வந்துதுன்னா என்ன செய்யறது? வயல்ல ஒதுங்கணுமா? மை காட்!”
“அந்தால ஒரு தனி அறை இருக்குதுங்க. அதுல ஒரு பய்ட்டு தண்ணி கொண்டாந்து வெச்சுக்குறாப்பல. அப்பறம் குளிங்க. கக்கூஸு ஒண்ணு சமீன்காலத்தில் இருந்துதுங்க. ஆளுங்கள கூட்டு மராமத்து பண்ணிக்கிடலாம்.”
தங்கராசுவுடன் நடந்து சென்ற அந்த வினோத சினேகலதா ஏறக்குறைய பையன்போலத்தான் இருந்தாள். இடுப்புத்தான் காட்டிக் கொடுத்தது. திடீர் என்று ஒரு எம்பி எம்பி கொய்யாக் காய்கள் இரண்டைப் பறித்து ஒன்றைக் கடித்து ஒன்றை, “கல்யாணராமன்! காட்ச்!’ என்று அவன்பால் விட்டெறிந்தாள். பிரமித்து நின்ற கல்யாணராமனின் மார்பில் வேகமாக வந்து மோதியது காய்.
அவள் சிரிப்பு மெலிய இருட்டில் எதிரொலித்தது.
மெலிய இருட்டு கரிய இருட்டாக மாறும் வரை நின்றான். உள்ளே சென்று விளக்கைப் போட்டு ஸ்டவ் பற்ற வைத்து நீரைச் சூடாக்கினான்; அரிசி வைத்தான். பெரியாத்தாவின் பாடல்களைத் திருப்பிப் போட்டு எழுதிக் கொண்டான். ஓரத்தில் ஒரு காலி கெரோஸின் டின் இருந்தது. அதில் ஒரு குச்சி பொருத்திச் சணற் கயிற்றை வைத்து ஒரு ட்பிள் பேஸ் வாத்தியம் செய்யலாம். அந்தச் சிறுவர்களில் ஒருவனுக் குக் கற்றுக் கொடுக்கலாம். வெள்ளியிடம் காட்டலாம்.
வெள்ளி அலட்சியமாக எறிந்த பிளாஸ்டிக் மாலையும் அந்த ‘வேத்து மனுசனும் உறுத்தியது. கித்தாரை எடுத்து வைத்துக் கொண்டு, விரல்களால் நெருடினான். இடக் கை விரல்கள் பழகின சதுரங்களில் அழுத்த ஹோஸேஃபெலிஸி யானோவின் மாலவீனா வாசித்தான். அந்த மெக்ஸிகன் மெட்டில் கொஞ்சம் வெள்ளியைத் தொட்டுப் பார்த்தான்.
“தட் தட் தட்” என்று கைதட்டும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தான். சினேகலதா.
“ப்யூட்டிஃபுல்! நல்லா வாசிக்கிறீங்க, அய்யரே!” உள்ளே வந்து சுதந்திரமாக அவன் எதிரே தரையில் உட்கார்ந்தாள். அவனை நேராகப் பார்த்தாள்.
“உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்.”
“என்ன?”
“நாட்டுப் பாடலாம்! யார்கிட்ட கதை விடறீங்க? நீங்க உண்மையா எதுக்கு இங்க வந்திருக்கீங்க, சொல்லிடுங்க!”
– தொடரும்…
– கரையெல்லாம் செண்பகப்பூ, எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது.