கனவுகள் பூக்கும் பெருவனம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: July 27, 2025
பார்வையிட்டோர்: 4,120 
 
 

மனிதக் கனவுகளைப் பூக்களாக மலர்த்தும் அற்புத வனத்துக்குள் அவள் ஆவலோடு பிரவேசித்தாள். அவள் இதுவரை பார்த்திராத புல் – பூடுகள், எதார்த்தத்தில் எங்குமே இருக்க முடியாத செடி – கொடிகள், நம்பவியலாத அளவு ப்ரம்மாண்டமான மரங்கள் ஆகியவை இருந்தன. வரலாற்றுக்கு முந்தைய வன விலங்குகள், புராணப் பிராணிகள், கற்பனைக்கும் எட்டாத புழு – பூச்சி இனங்கள் தென்பட்டன. வினோதமான வடிவங்கள் கொண்ட பறவைகள் விந்தையான இசை ஒலிகளை எழுப்பின. மூலிகைகளின் வாசனையோடு இதமான தென்றல் தவழ்ந்துகொண்டிருந்தது. இலைகளும் கிளைகளும் ஒயிலாக அசைந்தன. கொடிகள் ஒத்திசைவான நாட்டிய அசைவுகளைச் செய்தன.

வனம் தனது கனவுகளை மலர்த்துவதற்காகக் காத்திருப்பதை அவள் உணர்ந்து கொண்டாள்.

அவளுக்குள் சிந்தனாபூர்வமான எண்ணங்கள், ஒடுக்கப்பட்ட ஆசைகள், தணிக்கை செய்யப்பட்ட கனவுகள் ஏராளமாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தாள். அவை யாவும் உடனுக்குடன் அங்குள்ள செடிகள், கொடிகள், மரங்களில் பூக்களாயின. நூற்றுக் கணக்கான வண்ணங்கள், ஈர்ப்பான வண்ணச் சேர்க்கைகள், புதுமையான வடிவங்கள், மூன்று மில்லி மீட்டர் முதல் இரண்டே கால் மீட்டர் வரையிலான அளவுகள், நுட்பமான வரைகலைகள், மெல்லியது முதல் காட்டமானது வரையிலான நறுமணங்கள் கொண்ட பூக்கள்.

அந்த அதிசயங்களால் பிரமித்து மெய்மறந்தாள். பூக்களாக மாறிய தனது கனவுகளின் வசீகரத்தைக் கண்டு அவளின் இமைகள் மூட மறந்தன. மாறாக, அகல விரிந்தன.

அதன் பின் தனது ரகசியக் கனவுகளை மெதுவாக வெளிக் கொணர்ந்தாள். அவை அவளின் வெளிப்படையான கனவுகளின் மலர்களைக் காட்டிலும் ப்ரகாசமான வண்ணங்கள், கவர்ச்சியான வடிவங்கள், மயக்கும் நறுமணம் கொண்டிருந்தன. தேன் உண்ணிகளான பட்டாம்பூச்சிகள், தேனீக்கள், பிற பூச்சிகள் மற்றும் வண்டு இனங்கள், தேன்சிட்டுகள் ஆகியவை அந்த மலர்களால் கவரப்பட்டு அவற்றை நாடி வந்து தேன் அருந்தி இன்புற்றன. அதைக் கண்டு அவள் மிகுந்த மகிழ்ச்சியும், திருப்தியும் கொண்டாள்.

தேன் உண்ணிகள் போதையில் மயங்கிக் கிறங்கும்போது, அவளின் ரகசியக் கனவுப் பூக்கள் தம் இதழ்களை மூடிக்கொண்டன. ஆபத்தை உணர்ந்து அந்த உயிரினங்கள் கீச்சிட்டுத் தப்ப முயன்றன. ஆனால் முடியவில்லை. ரகசியக் கனவுகளின் மலர்கள், தம் இதழ்களை இறுக்கி, தம்முள் சிக்கிக்கொண்ட அந்த உயிரினங்களைக் கசக்கின. அவற்றின் சாறை விழுங்கிக்கொண்டு சக்கைகளை வெளியே துப்பின.

அவள் அரண்டாள். பயத்தில் அலறியடித்து ஓட முற்பட்டாள். தன்னால்தானே அந்த அப்பாவி உயிரினங்கள் கொடூரமாக பலியாகின என்ற குற்ற உணர்வு மேலிட்டது. இனி உள்ள மிச்ச உயிரினங்களையாவது காக்க வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்புணர்வும் ஏற்பட்டது. அதற்கு என்ன செய்வது? அவற்றை எப்படிக் காப்பது? தெரியாமல் குழம்பித் தவித்தபடி வனத்தில் அலைமோதினாள்.

உயிர் தின்னிக் கனவுப் பூக்கள் வளர்ந்து பெரிதாக விரிந்துகொண்டேயிருந்தன. அவற்றின் அல்லிவட்டங்கள் நீண்டு, அவளையும் பிடித்து இழுத்து சுற்றி வளைக்கத் தொடங்கின.

– நடுகல் இணைய இதழ், மார்ச் 2025.

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *