கந்தையரின் கடைசி வித்து!
கதையாசிரியர்: மா.சித்திவினாயகம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 14, 2026
பார்வையிட்டோர்: 99

“பூமி தன் குடிகளின்கீழ் தீட்டுப்பட்டிருக்கிறது. அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாற்றி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள். இதினிமித்தம் சாபம் பூமியைப் பட்சித்தது…” (ஏசாயா 24: 5-6)
வன்னி மண்ணின் களித்தரை வெடிச்சு, அகன்ற வாய்களைத் திறந்து ஆகாயத்தைப் பார்த்துக் கதறிக் கொண்டிருந்தது கிளிநொச்சிக் கல்மடு , தன் காய்ந்துபோன நெல் வயலின் வரப்பில் அமர்ந்திருந்தான் கந்தையா. போரின் வடுக்கள் நிறைந்த அவனது கால்கள், இப்போது வறட்சியின் வெடிப்புகளோடு போட்டி போட்டன. கிணற்றின் அடிமட்டத்துச் சேற்றைக்கூடச் சூரியன் உறிஞ்சிக் குடித்திருந்தது. ஆகாயத்தில் ஒரு துளி மேகம் கூடக் கிடையாது; நீல நிற வானம் ஒரு எரியும் தகரக் கூரையைப் போல பூமிக்கு மேல் கவிழ்ந்திருந்தது. காய்ந்த கதிர்களைத் தடவிப் பார்த்த கந்தையாவின் கண்கள் பனித்தன.
“முன்னே போர் வந்து அழிச்சுது, இப்ப சாமி வந்து எரிக்கிறதோ?” அவனது பெருமூச்சு காய்ந்த காற்றில் கரைந்தது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் உழுவதும், விதைப்பதும், கஞ்சிக்கலயம் நிறைவது மட்டும்தான்.
கந்தையாவின் குடிசைக்குள், பேட்டரி தீர்ந்துபோகும் நிலையில் ஒரு பழைய ரேடியோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. நவீன தொழிற் நுட்பங்கள் உலகைத் தலைகீழாக்கிய போதும் பழமையோடு வாழத் துடிப்பவர் கந்தையா.
உலகக் காலநிலை மாநாடு பற்றிய செய்திகள் செய்தியாக ஒலித்தன. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கப் பெருநிறுவனங்களும் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் புகையைக் கக்கி, காபனை உமிழ்ந்து பூமியைக் கொதிக்க வைக்கும் செய்தியை அந்த வானொலி வாசித்தது. பன்னாட்டு முதலாளிகளின் குளிர்சாதன அறைகளின் சுகபோகத்திற்காக, எல் நினோ என்ற சாபவடிவில் வன்னி மண்ணின் விவசாயி பசியால் சாக வேண்டியிருந்தது. அந்த வானொலிச் செய்தி கந்தையாவிற்குப் புரியாத லண்டன் மாநாடுகளைப் பற்றிக் பேசியது, ஆனால் அதன் சாம்பல் தன் வயலில் விழுவதை அவன் கண்கூடாகக் கண்டான். முதலாளித்துவத்தின் லாப வெறி, உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஓர் ஏழை விவசாயியின் கஞ்சிக் கலயத்தை உடைத்துக் கொண்டிருந்தது.
மாலையில் ஊர்க் கடைத் திண்ணையில் சிலர் கூடியிருந்தனர். ரேடியோவில் மீண்டும் அந்த வார்த்தை ஒலித்தது: “எல் நினோ (El Niño) தாக்கத்தால் இந்த ஆண்டு பருவமழை முற்றிலும் பொய்க்கும், அடுத்து லா நினோவும் (La Niña) தலைகீழ் மாற்றங்களை உருவாக்கும். ஓசோன் ஓட்டையும் விரிவடைகிறது.”
அங்கிருந்த ஒரு பட்டதாரி இளைஞன் சொன்னான், “பெரியவரே, எல் நினோ எண்டா எஸ்பானிய மொழியில ‘குழந்தை இயேசு’ என்று அர்த்தமாம். பேரு நாட்டுக் கடற்கரையில கிறிஸ்துமஸ் நேரத்துலயே கடல் கடுஞ் சூடாகுறதால அங்குள்ளோர் அப்படிப் பேர் வைச்சாங்களாம்.”
கந்தையா திடுக்கிட்டு எழுந்து நின்றான். “என்னடா எல் நினோ, லா நினோ எண்டு புதுசு புதுசாச் சொல்றாய்? ஓசோன்ல ஓட்டையாம்! எனக்கு அதெல்லாம் தெரியாது தம்பி. ஆனா ஒண்டு தெரியுது. மனுஷன் அணு குண்டுகளைப் போட்டும், நாடுகளுக்குள்ள போர் செய்தும் பூமியைக் கொளுத்துறானே, அதோட விளைவுதான் இந்த அநியாய வெயில் எண்டு எங்களுக்கும் தெரிந்தது அந்த அப்பாவிச் சாமிக்குத் தெரியாதா? மனிதன் செய்யுற பாவத்துக்கெல்லாம் சாமி மேல பழி போடுற இந்தச் சிறுமைக்கு அளவே இல்லையா? கடவுள் தந்த உலகத்தை அழிக்கிறது மனிதனோட ‘சுயநலம் ‘
இதுக்குக் கூட இவங்கள் கடவுள் பெயரைத்தான் வைப்பாங்களோ ? கண்ணிரண்டும் குருடானவனுக்கு நல்ல கண்ணுப்பிள்ளையென்றும், கறுப்புநிற ஆட்டிற்கும் வெள்ளாடு என்று பெயர் வைக்கிற கண்கெட்ட உலகமிது..கந்தையருக்கு கோபம் கோபமாக வந்தது.
அவனது மாசற்ற வெகுளித்தனத்தின் உண்மை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிற , உலகின் அதிமேதாவிகளின் தந்திரங்களை விடவும் தீர்க்கமாக உண்மை.
நாட்கள் நகர நகர, வறட்சி வன்னியை வளைத்துப் பிடித்தது. கருகிய நெல் தாள்கள் காற்றில் கறுகறவெனச் சத்தமிட்டன. கந்தையாவின் வீட்டில் கஞ்சிப் பானை கவிழ்ந்து கிடந்தது. கடன் கொடுத்த முதலாளி வாசலில் வந்து சத்தமிட்டுவிட்டுப் போனான். போருக்குப் பின் எஞ்சிய ஒரே நல்வாழ்வான இந்த விவசாயத்தை, மனிதன் உருவாக்கிய ‘செயற்கை’ வறட்சியும், நச்சுக் கந்தகப் புகையும் முற்றிலும் உறிஞ்சிவிட்டது.
மனிதனின் பேராசையால் பூமியின் ‘நித்திய உடன்படிக்கை’ முறிந்துபோனதன் விளைவை, பசி வயிற்றோடு அழும் கந்தையாவின் பிள்ளைகள் இன்று அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இயற்கை அன்னை தன் மார்பில் பால் வற்றி, வறண்டுபோன தாயைப் போலக் காட்சியளித்தாள். ஊர் திரண்டு தப்பித்து அகதியாகி திசையறியாது ஒடிக் கொண்டிருந்தது. இனி இவர்களிற்கேது புகலிடமும், அடையாளமும்…
சாதி, இனம், மொழி என்று தங்களுக்குள் பிரிந்து நின்று தம்மைத்தாமே கொன்று மாளும் மனிதச் சடலங்கள் நாம் , நாங்கள் வாழும் இயற்கையையே ஒட்டுமொத்தமாக அழித்துக் கொண்டிருக்கிறோம், அதன் மூலம் நாமே அழியப் போகிறோம் என்ற குறைஞ்சபட்ச அறிவைக் கூட ஏன் இன்னும் அறியாதிருக்கின்றார்கள் என்று கந்தையாவின் ஏழை நெஞ்சம் குமுறலோடு யோசித்தது.
உண்மையில் இவர்கள் அறியாதிருக்கின்றார்களா ? அறிந்தும் நடித்துக் கொண்டிருக்கின்றார்களா?
அதே கிராமத்து நகரப் பகுதியில், அந்த வறட்சிக்கு நடுவிலும் ஒரு பிரம்மாண்டமான புத்தகத் திருவிழா நடந்து கொண்டிருந்தது. வண்ண வண்ண விளக்குகளும், சொகுசு வாகனங்களும், பளபளக்கும் ஆடை அணிந்த மனிதர்களும் அங்கே கூடித் திருவிழாக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். மேடைகளில் மனித நேயம் பேசப்பட்டது. கந்தையா தன் காய்ந்த வயலைத் தாண்டி, அந்தப் பக்கமாக நடந்து வந்தபோது அந்தப் புத்தகக் கடைகளைப் பார்த்தான். அவனுக்குக் கோபமும் அழுகையும் ஒருசேர முட்டிக்கொண்டு வந்தது. “இவ்வளவு புத்தகங்களை அடுக்கி வச்சுத் திருவிழா கொண்டாடுறீங்களே… புத்தகங்களை வாங்கி அடுக்கி வைக்க மட்டும்தான் தெரியுமா, அதை எடுத்துப் படிக்க வேண்டாமா? படிச்சிருந்தா இந்த பூமி தாயை இப்படிப் பாழ்படுத்தத் தோன்றுமா? சக மனிதனின் பசியைக் கண்டும், காடுகள் அழிவதைக் கண்டும் உங்க அறிவு இன்னும் மரத்துப் போய் கிடக்கிறதே!” என்று அவன் மனம் உரக்கக் கூவியது. மாக்சிம் கார்க்கியின் கதைகளில் வரும் ஒடுக்கப்பட்ட மனிதனின் வர்க்கக் கோபத்தைப் போல, கந்தையாவின் ஏழ்மை அந்த ஆடம்பர நாகரிகத்தைப் பார்த்துச் சீறியது.
அந்த அந்திப் பொழுதில், கருகிப்போன தன் வயலின் நடுவே கந்தையா மண்டியிட்டு அமர்ந்தான். காய்ந்த களிமண்ணைத் தன் கைகளில் அள்ளினான். தூசியாக உதிர்ந்தது அந்த மண். அவன் வானத்தை நோக்கிப் பார்த்துக் கூறினான்: “ஆண்டவரே… நீர் எங்களை அழிக்க எல் நினோவாக வரவில்லை. மனிதனின் பேராசைதான் குழந்தை இயேசுவின் பெயரைத் தாங்கி வந்து எங்களை எரிக்கிறது. இவன் தன் பிழையை உணரும் நாள் எந்நாளோ?”
கந்தையா தன்னிடம் எஞ்சிக்கிடந்த ஒரு கைப்பிடியளவு விதைநெல்லை அந்த வெடித்த மண்ணுக்குள் மெதுவாக விதைத்து மூடினான்
அது அவனிடம் எஞ்சியிருந்த கடைசி சொட்டு நம்பிக்கை. வாரி இறைக்க அவனிடம் நெல் மணிகள் இல்லை, அந்த கொஞ்ச விதைதான் அவனது இறுதி வாழ்வின் நம்பிக்கை.
அந்த விதைகள் மண்ணுக்குள் இறங்கிய கணத்தில், கந்தையாவின் விரல்கள் அந்த மண்ணின் கடுஞ் சூட்டை உணர்ந்தன. அந்த வெடித்த தரை, பன்னாட்டு முதலாளித்துவத்தின் பேராசையால் கிழிக்கப்பட்ட பூமியின் நெஞ்சுக்கூடு போலக் கிடந்தது. லண்டனிலும் நியூயார்க்கிலும் சொகுசு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு, உலகின் வெப்பநிலையைக் கூட்டிக் குறைக்கும் வர்த்தகப் புள்ளிகளுக்குத் தெரியாது—வன்னியின் ஒரு மூலையில் ஒரு கிழவன் தன் வாழ்வின் கடைசி நம்பிக்கையை மண்ணில் புதைத்துவிட்டு, இந்த முழு முதலாளித்துவ உலகையே தன் மௌனத்தால் கேள்விக்குள்ளாக்குகிறான் என்று!
நீயே புகையைக் கக்குவாய், ஓசோனில் ஓட்டை போடுவாய், ஆயுதங்களை விற்றுப் மானிடத்தை நிர்மூலஞ் செய்வாய்… ஆனாலும் நான் விதைத்துக் கொண்டே இருப்பேன். என் விதை உன் ஆயுத லாப வெறியை விடவும், உன் அணு குண்டுகளை விடவும் வலிமையானது. நான் விதைக்காவிட்டால் உன் உயிரும் இங்கில்லை. என்று அந்த மண்ணின் சாட்சியாக அவன் நெஞ்சம் சீறியது.
மனிதச் சடலங்கள் சாதிக்காகவும் மொழிக்காகவும் வெட்டிக்கொண்டு சாகட்டும்; முதலாளிகள் புத்தகங்களை விற்றுத் திருவிழா நடத்தட்டும். ஆனால், பூமித்தாயின் நரம்புகளில் இன்னும் ஈரம் வற்றிவிடவில்லை என்பதை இந்த விதை நெற்கள் முளைத்து நிரூபிக்கும். கந்தையா தன் காய்ந்த கரங்களால் அந்த மண்ணை மூடிவிட்டு, நிமிர்ந்து அமர்ந்தான். அவனது கண்கள் வானத்தை நோக்கவில்லை; மாறாக, தான் விதைத்த அந்த மண்ணின் ஆழத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகத்திலிருந்தும் தேகமிருந்தும் வியர்வைத்துளிகள் அந்த விதைகள் மேல் விழுந்து மறைந்தன. மழை வராமல் போகலாம், ஆனால் தன் கைகளில் எஞ்சிய கடைசி நம்பிக்கையை மண்ணுக்குள் தந்துவிட்ட நிம்மதியோடும், காலத்தை வெல்லும் ஒரு தீர்க்கதரிசியின் வீரியத்தோடும் கந்தையா அங்கே காத்துக்கிடந்தான்.
தொடர்புள்ள சிறுகதைகள்
கைவிட்ட கடவுள்
எஸ்.பவிஷ்
June 14, 2026
என்ன நியாயம்?
ஜெயந்தி சங்கர்
June 14, 2026
வேரூன்றிய வைராக்கியம்
இரா.கலைச்செல்வி
June 14, 2026