கண் சிமிட்டும் வானவில்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 3, 2026
பார்வையிட்டோர்: 111 
 
 

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம் 7 – அமைச்சரின் கோபம்?

அமைச்சர் மணிமாறனின் உதவியாளன் தலையை சொறிந்து கொண்டு நின்ற போது முதலில் அமைச்சருக்கு புரியவில்லை.

“அய்யா.அந்த நீலாங்கரை பங்களா வாங்குற செய்தியை எத்தனை முறை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறது என்று தான் புரியவில்லை”? என்றான் உதவியாளன் முத்து.

“ஆங்… முத்துராமன் எதையும் ஆதாயமில்லாமல் தேட மாட்டான்” என்ற அமைச்சர் ” நீ ஒண்ணு பண்ணு. அந்த பிரபுவிற்கு ஒரு போன் போடு. அவர் தான் கொரோனா மருந்துச் செடியை கொண்டு வர்றேன்”, என்றார்.

“ஆஆமா . நீ ஒரு உதவியாளன். இதை ஏன் முந்தா நாளே எங்கிட்டே சொல்லலை…” என்றார் கோபத்தோடு.

“முந்தா நாள் என்ன… நேற்றும் தான் ஞாபகப்படுத்தினேன். உங்களுக்கு அந்த இன்பா ஞாபகத்திலே எல்லாமே இரண்டாம் பச்சமா போயிடுது”

“ஓ.. அந்த இன்பவல்லிக்கு ஒரு போனப் போடு”

“அய்யா மொதல்ல இந்த கொரோனா மருந்து கம்பெனிக்காரன் கூப்பிடுறான். அவனுக்கு பதில் சொல்லுங்க.” என்று அலைபேசியை நீட்டினான்.

“ஏண்டா. இதெல்லாம் நீ பேசி தீர்க்க வேண்டியது தானே? சரி…சரி… கொண்டா.. ” அலைபேசியை வாங்கி, ” யாரு? தாமோவா… சொல்லு” என்றார்

” நான் அட்வான்ஸ் ஒரு கோடி கொடுத்து ஆறு மாசமாச்சு அது ஞாபகம் இருக்கா?” என்றது எதிர் முனை

“தாமோ… ஏன் வீணாகக் கோப்படுகிறாய். நீ குடுத்த பணம் கூட அப்படியே தானிருக்கிறது.பிரபு நல்ல செய்தியாய் வைத்திருப்பார் கேட்டுச் சொல்லட்டுமா?” சிரித்தார் அமைச்சர்.

“சும்மா சிரிக்காதேய்யா அசிங்கமா இருக்கு. இந்த வாரத்துக்குள்ளே செடி வரல்லேண்ணா பணம் திருப்பி வரணும் புரிந்ததா?”

“அட. போப்பா.. எப்பவும் விளையாடிகிட்டே இருக்கே.. இந்த அமைச்சர் மணிமாறன்கிட்டே ஒரு வேலைய ஒப்படைச்சா எப்பவாவது முடியாமல் இருந்திருக்கிறதா?” என்று சொல்லி விட்டு “ஏய் முத்து. அந்த பிரபுவக்கூப்பிடு” என்றார்.

பிரபு எதிர் முனையில் வந்ததும் ” சாரி. சார். அமைச்சர் மணிமாறனின் உதவி பேசறேன். ” என்று சொல்லி விட்டு அமைச்சரின் கையில் போனைக் கொடுத்தான்.

“என்ன பிரபு… நேரடியாவே விசயத்துக்கு வாறேன். ஆமா கை நீட்டி பத்து லட்சம் வாங்கிட்டுப் போனியே.. கொரோனா மருந்துச் செடி கிடைச்சா… என்ன தான் சொல்லப் போற…”

அமைச்சர் மணிமாறனின் முகம் கொஞ்சம் சிவக்க ஆரம்பித்தது.

“சார். இன்னும் ரெண்டு நாளையிலே நல்ல செய்தியோட வர்றேன் சார்”

“இந்த சார் மோருக்கெல்லாம் ஒரு குறைச்சலுமில்லே.. நீ என்ன செய்வியோ தெரியாது. எனக்கு அந்த மருந்து செடி வேணும் புரியுதா?” என்றார்.

“சார். ஒரு சின்ன பிரச்சினையாகி விட்டது. தேடினவனுவ இப்போ மருத்துவ மனையிலே இருக்கானுவ… இன்னும் எப்படியும் ஒரு வாரத்துக்குள்ளே வந்துருவானுவ.. நான் நேரடியாக செடியக் கொண்டு தந்து விடுகிறேன் சார்”

“சரி. சீக்கிரம் எதையாவது செய்து அந்தச் செடியக் கொண்டாந்துரு. இங்க அந்த மருந்து கம்பெனிக்காரனுவ.. என்னைப் போட்டுத் தொளைச்சி எடுத்துக்கிட்டுருக்கானுக..”

“சரி சார். ஏறக்குறைய கண்டு பிடிச்சாச்சு. எப்படியும் இரண்டு வாரத்துக்குள்ளே உங்க காலடியிலே கொண்டு வைக்கிறேன் சார்”

“அந்த பசங்களுக்கு எதுவும் சந்தேகம் வரலியே?”

“என்ன சார். நாம அப்படி நடந்துக்குவோமா என்ன… நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க.. நேற்றே முடிஞ்சிடுமுண்ணு தான் இருந்தேன். ஒரு சின்ன ஆக்ஸிடெண்டாகிட்டுது..”

“என்னய்யா. ஏதாவது அடி கிடி பட்டியா?” என்றார் அமைச்சர் மணிமாறன்.

“அதெல்லாம் ஒன்னுமில்லே சார். வெண்ணெய் திரண்டு வரும்போது தாளி ஒடஞ்ச கத மாதிரி ஒரு சின்ன பிரச்சினையாகி விட்டது. “

“யோவ். பிரபு கொஞ்சம் கவனமா இருந்து செயல்படுங்க. அந்த மருந்துக் கம்பெனி காரங்கிட்ட இன்னும் மீதி பணம் வாங்க வேண்டியதிருக்கு. எல்லாம் நீ செய்யறத பொறுத்து தானிருக்கு”

“கவலைப் படாதீங்க சார். சீக்கிரம் நல்ல செய்தியோட நேரிலேயே வர்றேன்” என்றார் எதிர் முனை பிரபு.

“சரி. என்ன செய்திண்ணாலும் உடனே கூப்பிடுங்க” என்று அலைபேசியை உதவியாளனிடம் நீட்டினார்.

“இந்த பிரபுவை நம்பலாமில்லையா?” என்றான் உதவி முத்து

“சே. நல்ல மனுசன்.சொன்னா செய்யக் கூடியவர்” என்றார் அமைச்சர் மணிமாறன்.

அத்தியாயம் 8 – கண்ணன் வேலையை கவனிங்க…

கண்ணன் அலுவலகத்திற்கு வந்த போது எதிரே பறந்து வந்த புறாவைப்பார்த்து, ‘நரேன் சார் இங்கிருந்தால் இந்தப்புறாவை இரசித்துக் கொண்டிருப்பார்’ என்று நினைத்துக் கொண்டே உள்ளே வந்தான்.

“வாங்க புதுமாப்பிள்ளை. வாழ்த்துக்கள்” என்றார் பிரபு.

சிரித்துக்கொண்டே நின்ற கண்ணனைப் பார்த்து, “கண்ணன் இப்படி கோட்டை விட்டு விட்டீர்களே…” வருத்தமாக கை நீட்டினார்.

“மன்னிச்சிக்குங்க சார். நானும் அவர்கள் அங்கே இங்கே சுற்றி விட்டு வீடு திரும்பி விடுவார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்படி யானை அது இதுண்ணு… சாரி சார். சரி.. இனி என்ன பண்ணணும்ணு சொல்லுங்க சார். விட்டதை பிடிச்சிரலாம்”

கொஞ்சம் உச்சுக்கொட்டிக்கொண்டு சொன்னான்.

“சரி. நடந்ததை சொல்லுங்கள். என்ன செய்யலாம்ணு யோசிக்கலாம்” என்றார் பிரபு.

“கண்ணன் அவர்கள் கிளம்பியதிலிருந்து, பாம்பு வந்ததை, அவன் அடித்து விரட்டி, அருகில் இருந்த செடியில் அவர்கள் அந்த மருந்து செடியிருப்பதாக ஏமாந்து…” என்றவாறு வரிசையாகச் சொன்னான்.

“கண்ணன் நான் அங்கே போய்ப்பார்த்தால் ஏதாவது வாய்ப்பு இருக்குமா?” என்று கேட்டார். பிரபு

“எனக்கு சரியாகச் சொல்லத்தெரியல சார். ஆனா நீங்க போய் அங்கே என்னப் பார்க்கப் போறீங்கண்ணு தெரியல. மற்றபடி உங்க விருப்பம்”

“அங்கே என்னடாண்ணா அந்த மந்திரி கத்துறாரு. நாம என்ன கையிலே வச்சிட்டு கொடுக்காத மாதிரி என்னவெல்லாமோ பெனாத்துறாரு. அவரும் பாவம்.. எல்லாரும் கை நீட்டி பணம் வாங்கியாச்சு…இவனுக எப்படியாவது அந்த கற்பகச் செடியை கொண்டு வந்துருவானுவ. நாம எப்படியும் லவட்டிட்டு போயிடலாமுண்ணு நெனச்சா….”

“சார். இனி என்ன பண்ணலாமுண்ணு பாருங்க..” என்றான் கண்ணன்.

“அதுவும் சரி தான். ம்ம்ம்ம்… கண்ணன் ஒண்ணு பண்ணுங்க. நீங்க ஆஸ்பத்திரிக்குப் போய் அந்த நரேனுக்கும், வசந்துக்கும் என்னாச்சுண்ணு பாருங்க. நான் அவனுக கம்ப்யூட்டரிலே என்னத தேடினாவன்னுப் பார்க்கிறேன்.”

“சார்… எங்கே அட்மிட்டாயிருக்காங்க தெரியுமா?”

“ஆங்… நம்ம ஆத்தங்கரை பக்கத்திலே ஏதோ சிஸ்டர்ஸ் நடத்துற ஆஸ்பத்திரி தான்… ஆங்… புனித அன்னம்மாள் ஆஸ்பத்திரி தான். ஏதோ வசந்த் தான் போன் பண்ணினான். நீங்க ஆஸ்பத்திரிக்குப் போய் அவனுகளுக்கு என்னாச்சுண்ணு பார்த்து எனக்குச்சொல்லுங்க..”

“சரி சார்…” என்றான் கண்ணன்.

கண்ணன் புனித அன்னம்மாள் மருத்துவமனைக்கு வந்த போது அங்கே ஒரே கூட்டமாக இருந்தது.

அவன் எட்டிப்பார்த்தான். யாரோ அடி பட்டு படுக்கையில் தூக்கிக் கொண்டு ஓட பின்னாலே ஒரு பெண் அழுது கொண்டே ஓடினாள்.

அவன் அந்தக்கூட்டத்தை தாண்டி, வரவேற்பறைக்கு வந்து நரேன், வசந்த் என்று அங்கே இருந்த வெண்ணாடை நர்ஸிடம் கேட்டான்.

“ஓ! யானை கிட்டே அடி பட்டவங்களா? முதல் மாடியிலே இருபதாம் அறையில் ஒருத்தரும்… ம்ம்ம்… இன்னொருத்தர் ஐ.சி.யூ விலே இருக்கிறார்.” என்றாள் அந்த நர்ஸ்.

“அடி பலமா பட்டிருக்குமோ சிஸ்டர்?” என்று கேட்டான் கண்ணன்.

“ம்.. சரியா தெரியல… நீங்க எதுக்கும் மேலே போய்ப்பாருங்க” என்றாள் டாக்டர் வருவதைப் பார்த்து எழுந்து நின்று உடையை திருத்திக்கொண்டு.

கண்ணன் மாடிப்படி ஏறி முதல் மாடிக்கு வந்தான்.

யாரிடம் கேட்கலாம் என்று திரும்பிய போது வசந்த் கையில் கட்டுப்போட்டவாறு அங்கே தென்பட்டான்.

“ஹலோ வசந்த். ” என்று கண்ணன் கத்த எல்லோரும் அவனைத்திரும்ப்பார்க்க, வசந்தும் திரும்பி, ” ஏய். கண்ணன் இங்கே எங்கே?” என்று கேட்டான்.

“உங்களைத்தான் பார்க்க வந்தேன். நரேன் சார் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டான்.

“கொஞ்சம் பலமான அடிதான். இன்னும் நினைவு வரவில்லை.

எங்களுக்கு கொஞ்சம் காபி வாங்கி வருகிறீர்களா?” என்றான் வசந்த்.

“நான் ஒரு எட்டு நரேன் சாரைப் பாத்துட்டு போய் என்ன வேணும்ணாலும் வாங்கி வருகிறேனே..” என்றான்.

“சரி. சத்தம் போடாதீங்க”. என்று அந்த ஐ.சி.யூ விலே படுத்திருந்த நரேனைக்காட்டினான்.

நரேனுக்கு உடம்பு முழுவதும் கட்டுப்போட்டிருந்தது. ஒரு பக்கம் சலைன் ஏறிக்கொண்டிருக்க… இன்னோர் கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது.

– தொடரும்…

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *