கணக்குப் புத்தகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 26, 2025
பார்வையிட்டோர்: 1,223 
 
 

முந்திரித் தோப்பின் நீண்ட நிழல்கள் முற்றத்தில் சரிந்து கிடந்தன. வெயிலின் கடைசித் துளிகள் திண்ணை ஓரத்தைத் தொட்டு வழிந்தன.

மோகனாம்பாள் தன் மடியில் கிடந்த மஞ்சள் மங்கிய கணக்குப் புத்தகத்தின் ஓரங்களை விரல்களால் வருடினாள். தாள்களின் விளிம்புகள், காகிதமென்று சொல்ல முடியாத அளவுக்கு, உலர்ந்த இலைகளைப் போல மடிந்திருந்தன. ஒரு சிறிய துகள் உதிர்ந்து மடியில் விழுந்தது. அவள் சட்டென அதை அமுக்கினாள. நடுக்கம் குறையாத விரல்களால் அதை எடுத்துப் பக்கங்களுக்கு நடுவே கவனமாக ஒளித்து வைத்தாள்.

“வாம்மா, சாந்தி…

வாங்க மாப்பிள்ளை…

உட்காருங்க.”

சாந்தி உள்ளே வந்தாள். அவளது பார்வை திண்ணையைத் தாண்டி ஒரு கணம் முற்றம் வரை ஓடியது.

ரமேஷ் அவளுக்குப் பின்னால் வந்து ஒரு தூணோரம் நின்றான். அவன் கையில் இருந்த கார் சாவி சிறு வட்டங்களாகச் சுழன்று கொண்டிருந்தது. அவன் கண்கள் திண்ணைச் சுவரில் காலமாற்றத்தால் சிமெண்ட் உதிர்ந்து, செங்கற்கள் வெளியே தெரிந்த அந்தச் சிதிலமடைந்த பகுதியிலேயே நிலைகுத்தி நின்றன.

“அத்தை…

சுவர்ல காரையெல்லாம் பெயர்ந்து ரொம்ப மோசமா இருக்கு.

அப்படியே விட்டா…”

சாந்தி அவனைத் திரும்பிப் பார்த்தாள். ரமேஷ் சட்டென கையை சுவரிலிருந்து எடுத்துக் கொண்டு, சாவியை அடக்கமாகச் சட்டைப் பைக்குள் வைத்தான்.

அந்தச் சுவரைப் போலவே, சாந்திக்கும் அந்த வீட்டுக்கும் இடையிலான பிணைப்பும் மெல்ல மெல்ல உதிர்ந்து கொண்டிருப்பதை அவளது மௌனம் சொல்லாமல் சொன்னது.

மோகனாம்பாள் கணக்குப் புத்தகத்தைப் புரட்டினாள்.

“உங்க அப்பா காலத்துல இருந்து இந்த நோட்டுத்தான் இந்த வீட்டோட ஆதாரம், சாந்தி.

ஒரு நயா பைசா செலவுன்னாலும் இதுல ஏத்திட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.”

சாந்தி நிமிர்ந்தாள்.

“அப்பா எப்போவுமே அப்படித்தான். என் காலேஜ் பீஸ் எழுதற பக்கத்துல பேனாவை ரொம்ப அழுத்தி எழுதிருப்பாரு…

அந்த எழுத்து அப்படியே பின்னால இருக்குற தாள்லயும் ஆழமா பதிஞ்சிருக்கும்.”

மோகனாம்பாள் கண்களை புத்தகத்திலிருந்து எடுக்கவில்லை.

அந்த எழுத்தின் அழுத்தம், ஒரு காலத்தில் அவளுக்கும் பழகியதுதான்.

“அது அவரோட பழக்கம் சாந்தி…

அவர் எப்பவும் சொல்லுவாரு…

எதுக்கு செலவு பண்ணினாலும் அது வீட்டுக்குப் பிரயோஜனமா இருக்கணும்னு…”

புத்தகம் அவள் விரல்களுக்குள் சற்றே அதிகமாக மடிந்தது.

ரமேஷ் மெல்லத் தொண்டையைச் சரி செய்தான்.

“பழைய கதையை விடுங்க, அத்தை. இப்போ என்ன செய்யணும்னு சொல்லுங்க.

மோகனுக்குத் தயக்கமா இருந்தா சொல்லுங்க; கடன் விஷயத்தை நாங்க…”

ரமேஷ் இழுத்தான்.

சாந்தியின் பார்வை அவன் மேல் நிலைக்க, அவன் சொல்ல வந்த வார்த்தையை விழுங்கிக் கொண்டான். சட்டெனத் தன் காலணிகளின் முனையைப் பார்த்தபடி, தூணோடு இன்னும் ஒட்டி நின்று கொண்டான்.

மோகனாம்பாள் அவனை இடைமறித்தாள்.

“நீங்களா?!

இருக்கட்டும், மாப்பிள்ளை…

அதை மோகனே பார்த்துப்பான்.

இந்த வீடு, இந்தத் தோப்பு… எல்லாம் அவனுக்கு சேர வேண்டியதுதானே!”

அப்போது மோகன் உள்ளே வந்தான்.

“பேங்க்ல பேசிட்டேன், அம்மா,

“கையெழுத்து இல்லாம எதுவும் நகராதுன்னு சொல்றாங்க.” என்றான்.

அவன் மேஜை ஓரத்தில் இருந்த அப்பாவின் கைத்தடியை எடுத்தான். தேய்ந்த பிடியை ஒரு கணம் மட்டும் மௌனமாக வருடினான். பின், எதுவும் சொல்லாமல் சுவரோரம் சாய்த்தான்.

அந்த ஒலி, ஒரு முடிவின் ஆரம்பம் போல வீட்டுக்குள் விழுந்தது.

அவன் கைபேசி ஒலித்தது; அவன் எடுக்கவில்லை. நகங்கள் மேஜை விளிம்பை மெதுவாகச் சுரண்டின.

மோகனாம்பாள் ஒரு வெற்றுப் பக்கத்தைத் திருப்பி, புத்தகத்தை அவன் பக்கம் நகர்த்தினாள். அவன் தோள்கள் சுருங்கின.

பின் புத்தகம் சாந்தியின் பக்கம் நகர்ந்தது.

பத்திரமும் பேனாவும் அதன் அருகே வைக்கப்பட்டன.

“மோகன்தானே இனிமேல இதையெல்லாம் சமாளிக்கணும், சாந்தி?.

அதுக்குத்தான்…

நீ் ஒரு கையெழுத்து போட்டுட்டா…”

வாக்கியம் முடிவடையவில்லை.

“இத்தனை வருஷம் நாங்க உனக்கு செஞ்சதெல்லாம் அர்த்தமில்லாம போயிடக் கூடாது இல்ல?”

அவள் விரல்கள் சேலையின் ஓரத்தைப் பலமாகப் பற்றிக்கொண்டன.

சாந்தியின் பார்வை புத்தகத்தில் நிலைத்தது.

எண்கள் ஒழுங்காக இருந்தன.

அவற்றின் நடுவே —

அவளது பெயர்.

சிறியதாய்.

அந்நியமாய்.

“அப்போ… மோகனுக்கு செஞ்சது?” என்று அவள் கேட்டாள்.

மோகனாம்பாள் ஒரு கணம் திணறினாள். பின் எதார்த்தமான குரலில் சொன்னாள்,

“அவன் ஆம்பளப்பிள்ளை. அவன்தான்…”

சாந்தி மோகனைப் பார்த்தாள். அவன் பார்வை மேஜை விளிம்பை விட்டு நகரவில்லை.

சாந்தி பத்திரத்தை ஓரமாகத் தள்ளி, கணக்குப் புத்தகத்தை தன் பக்கம் இழுத்தாள். மோகனாம்பாளின் கண்கள் சுருங்கின.

மோகனின் பெயருக்குக் கீழான வெற்றுப் பக்கத்தில் பேனாவை வைத்தாள்.

ஒரே சுழற்சியில் —

தாளைச் சற்றே கிழிக்கும் அளவுக்கு

ஒரு பெரிய வட்டம்.

“என்னடி பண்ற?” மோகனாம்பாளின் குரல் உடைந்தது.

மோகன் மெதுவாகத் தலை நிமிர்ந்தான்.

அம்மாவின் முகத்தைச் சந்திக்க முடியாமல் கண்களை விலக்கினான்.

சாந்தி அடுத்த பக்கத்தைப் புரட்டினாள்.

தன் பெயருக்குக் கீழே இருந்த தொகைகளின் மீது ஒரு நீண்ட கோடு.

அதற்குக் கீழே —

மற்றொரு வட்டம்.

பேனா மேஜை ஓரத்தில் உருண்டு நின்றது.

மோகன் கைத்தடியைப் பற்றினான். பிடி நரம்புகள் புடைத்தன. பின் மிக நிதானமாக அதை மீண்டும் சுவரோரம் சாய்த்தான். அந்த ஒலி, இந்த வீட்டின் நூறு வருட மௌனத்தை ஒரே கோட்டில் வெட்டியது.

சாந்தி எழுந்து வாசலை நோக்கி நடந்தாள். ரமேஷ் எதுவும் சொல்லாமல் முந்திரித் தோப்புகளைப் பார்த்தவாறே அவள் பின்னால் சென்றான். வாசலில் இறங்கும்போது வீட்டின் பின்சுவரில் இருந்த பிளவு தெளிவாகத் தெரிந்தது.

“அதை சரி பண்ணலாம்னு நினைச்சேன்…” என்றான்.

சாந்தி காரின் கதவைத் திறந்தபடியே சொன்னாள்,

“வேண்டாம் ரமேஷ். அது அப்படியே இருக்கட்டும்.”

கார் நகர்ந்தது.

சாந்தி பின்சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

ஜன்னல் வழியே…

அந்த வீடும், முந்திரித் தோப்பின் மரங்களும் மெல்ல மெல்ல பின்னோக்கி சென்று கொண்டிருந்தன.

சிறிது நேரம் கழித்து, அவள் கைப்பையில் இருந்த அலைபேசி மெதுவாக அதிர்ந்தது.

திரையைப் பார்த்தாள்.

ஒரு கணம் — அவள் முகம் இறுக்கமடைந்தது.

பின் — உதடுகளின் ஓரத்தில் மெல்லிய ஒரு புன்னகை.

“என்ன?” என்று ரமேஷ் கேட்டான்.

“என் முதல்மாச சம்பளம்,” என்றாள்.

அந்த வார்த்தை அவளுக்கே அந்நியமாய் கேட்டது.

சிறிது இடைவெளிக்குப் பின் – மிக மெதுவாகச் சொன்னாள்,

“அப்பா எழுதாத ஒரே கணக்கு இது.

இது யாருக்கும் வரவுமில்லை…

யாருக்கும் செலவுமில்லை.

என்னோட கணக்கு.

அவ்வளவுதான்!”

ரமேஷ் அவளைப் பார்த்தான்.

அவன் புன்னகையில் ஆச்சரியம் இல்லை.

ஒரு அமைதியான ஒப்புதல் மட்டும்.

கார் சாலையில் இன்னும் வேகமெடுத்தது.

கண்ணாடி வழியே பார்த்தபோது,

திண்ணையில் அமர்ந்திருந்த மோகனாம்பாளின் மடியில் அந்த கணக்குப் புத்தகம் இருந்தது.

பக்கங்களில் இருந்த எண்கள் அப்படியேதான் இருந்தன;

எதுவும் மாறவே இல்லை.

மாறியது —

ஒரு பெயர்.

அந்த இரண்டு வட்டங்கள் கணக்கை முடிக்கவில்லை.

அவை,

இனி அந்தப் பெயரை வைத்து கணக்கு போட முடியாது என்று மட்டும் சொன்னன.

காற்றில் பக்கங்கள் அசைந்தன.

பின் —

எந்த அவசரமும் இல்லாமல்,

ஒரு தீர்ப்பைப் போல அமைதியாயின.

சு.அப்துல் கரீம் சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *