கடற் பறவையை கௌரவித்தல்





பழங்கால சீனாவின் கிராமப்புறப் பகுதியில் ஒரு கடற்பறவை தென்பட்டது. அது பெரிதாகவும், மிக அழகாகவும் இருந்தது. புராணங்களில் வரும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல அது இருப்பதாக மக்கள் பேசிக்கொண்டனர்.
இந்தச் செய்தி காட்டுத் தீ போலப் பரவி, அரசரை அடைந்தது. அவர் அந்த அரிய பறவையைத் தனதாக்கிக்கொள்ள ஆசைப்பட்டார். சேனையை அனுப்பி, அந்தப் பறவையை உயிருடனும், காயப்படுத்தாமலும் பிடித்து வர ஆணையிடப்பட்டது.
வீரர்கள் சென்று கடும் முயற்சி செய்து, பறவையை உயிரோடும் காயப்படுத்தாமலும் பிடித்து வந்தனர்.

அரசர் அந்தப் பறவைக்கு ராஜ உபசாரம் செய்து கௌரவப்படுத்த விரும்பினார். அதற்காக, நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கக் கூண்டு செய்து, அதில் அந்தப் பறவையை அடைத்தார். அரசவை இசைக் கலைஞர்களைக் கொண்டு, சிறந்த இசையை இசைக்கச் செய்தார். ஆனால், அந்தப் பறவையோ, வாத்தியக் கருவிகளின் சப்தங்கள் கேட்டு அஞ்சி நடுங்கியது. அரசர், தனக்கு விருப்பமான, உயரிய அறுசுவை உணவுகளை, அரசவை சமையற்காரர்களிடம் சமைக்கச் செய்து, அந்தப் பறவைக்கு ராஜ விருந்தாகக் கொடுத்தார். அதில் எதையும் அது உண்ணவில்லை.
தொடர்ந்து மூன்று நாட்கள் இப்படியே கழிந்தன. கடற்பறவை பட்டினியால் வாடி இறந்து விட்டது.
சீன மெய்ஞானமான தாவோயிஸத்தின் ஒரு கதை இது.
மக்களில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான், தனது விருப்பங்களை, ஆசைகளை, மற்றவர்கள் மீது திணிக்கிறார்கள். குறிப்பாக, நெருங்கிய மற்றும் குடும்ப உறவுகளில் இது அதிகமாக நிகழ்கிறது. ஒருவர் எதை விரும்புகிறாரோ, அவருக்கு எது வழக்கமோ, எது தேவையோ அதை அவருக்குக் கொடுப்பதே முறையானது; சரியானது. அதற்கு மாறாக, நமக்கு விருப்பமான ஒன்றை மற்றவர் மீது திணிப்பது என்பது முறையற்றது; தவறானது; அராஜகமானது. மேலும், அது அவரது உடலுக்கு, மனதிற்கு, உயிருக்கு தீங்கு விளைவிப்பதாகவும் ஆகிவிடக் கூடும்.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |