ஓடும் செருப்பு




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு செருப்புக் கடையில் அழகான இரண்டு செருப்புகள், கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. கண்ணன் அவைகளைப் பார்த்தான்.
“எவ்வளவு அழகாய் இருக்கின்றன. கண்களைப் பறிக்கின்றன,” என்று பெருமூச்சு விட்டான்.
“உனக்கு வேண்டுமா?” என்று ஒருகுரல் கேட் டது. கண்ணன் திரும்பிப் பார்த்தான். வாசற்படியில் ஒரு கிழவன் நின்று கொண்டிருந்தான். அவனுக்குக் கூன் வளைந்திருந்தது.
“என்னிடம் பணம் இல்லை. எங்கள் வீட்டு ஆட்டுக்குட்டியை விற்றபிறகுதான் பணம் கொடுக்க முடியும்,” என்று கண்ணன் சொன்னான்.
“ஆட்டுக்குட்டியை எனக்குக் கொடு. அந்தச் செருப்புக்களை உனக்குக் கொடுக்கிறேன்,” என்று கிழவன் சொன்னான்.
கண்ணனிடம் ஆட்டுக்குட்டியைத் தவிர, வேறு ஒன்றும் கிடையாது. “அதைக் கொடுத்துச் செருப்பை மட்டும் வாங்கினால், வீட்டுக்கு வேண்டிய பொருள்களை எப்படி வாங்குவது? அம்மா என்ன சொல்வார்களோ?” என்று எண்ணினான்.
அவன் ஒரு முடிவு செய்வதற்குள் செருப்புகள் அவன் கைக்கு வந்து விட்டன. கிழவன் ஆட்டுக் குட்டியுடன் மறைந்து விட்டான்.
கண்ணனுக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை. “நான் விழித்துக் கொண்டுதான் இருக்கிறேனா?” என்று தனக்கு தானே பேசிக்கொண்டான். எப்படியும் கடையில் இருந்த செருப்பு கைக்கு வந்து விட்டது. “கிழவன் ஏதோ மந்திரம் போட்டிருக்கிறான்,” என்று நினைத்தான். வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தான்.
“ஆட்டுக்குட்டி என்ன விலைக்குப் போயிற்று?” என்று அம்மா கேட்டார்கள்.
நடந்தவைகளைச் சொன்னான். அம்மா அடிப்பார்கள் என்று நினைத்தான். ஆனால், அம்மா கண்ணீர் விட்டு அழுதார்கள்.
“இப்படிச் செய்யலாமா; நமக்குச் சாப்பாட்டிற்குக் கூட ஒன்றும் இல்லையே?” என்று தேம்பி அழுதார்கள்.
கண்ணனுக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது. பாவம் என்ன செய்வான்? தப்பு அவனுடையதுதான். ஆனால், எப்படியோ நடந்துவிட்டது.
அப்பொழுது ஓர் அற்புதம் நடந்தது. அவன் கையிலிருந்த செருப்பு கீழே குதித்தது. அவன் காலில் போய் மாட்டிக்கொண்டது. கண்ணை மூடித்திறப் பதற்குள் அவனைத் தூக்கிக்கொண்டு வெளியே பறந்து சென்றது. காடுமேடு எல்லாம் கடந்து சென்றது.
“இதுவும் மந்திரம்தான் போலிருக்கிறது,” என்று நினைத்தான்.
ஒரு மலையின் அடிவாரத்திற்குப் போய்ச் சேர்ந்தான். மலையில் ஒரு குகை இருந்தது. அங்கே வனதேவதைகள் ஏராளமாய் இருந்தன. எல்லோரும் குள்ளர்கள். கண்ணனைக் கண்டதும் எல்லோரும் ஓடி வந்தார்கள்.
அவனை உள்ளே அழைத்துச் சென்றார்கள். எங்கே பார்த்தாலும் பொன்னும், வெள்ளியும், பணமும், காசும், துணிகளும், நகைகளும் நிறைந்து கிடந்தன. கண்ணன் அவைகளைப்போல் எப்பொழு தும், எங்கும் கண்டதே இல்லை.
“உனக்கு வேண்டிய மட்டும் எடுத்துக்கொள்,” என்று தேவதைகள் கூறின.
கண்ணன் ஒரு சாக்குப் பை நிறைய எடுத்துக் கொண்டான். செருப்புகள் கண்ணனைத் தூக்கிக் கொண்டு, வந்த வழியே பறந்து சென்றன.
வீட்டிற்கு வந்ததும் கண்ணன் சாக்குமூட்டையை அவிழ்த்துக் கீழே கொட்டினான்.
“அம்மா வந்து பாருங்கள்,” என்று கூப்பிட்டான்.
கண்ணன் பணக்காரன் ஆனான். அம்மாவுக்கு வேண்டியதெல்லாம் வாங்கிக்கொடுத்தான். பறக்கும் செருப்புக்களைக் கண்ணாடிப் பெட்டியில் போட்டு அடைத்து வைத்தான். “ஒருவேளை பறந்து ஓடி விடடால் என்ன செய்வது, என்று அவைகளைப் பத்திரப்படுத்தி வைத்தான். அவன் வீட்டின் வழியே போனால், இப்பொழுதுகூட அந்த அற்புதச் செருப்புக்களைக் காணலாம்.
– கழகக் கதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: ஜனவரி 1951, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.