ஒளிரும் பிறை
கதையாசிரியர்: மா.வீ.தியாகராசன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 24, 2026
பார்வையிட்டோர்: 1,782
(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆர்ச்சட் சாலை நடைபாதை சென்டர்பாய்ண்ட் அருகில் உள்ள போக்குவரத்து நெரிசல் மிக்க நடைபாதை! வயதான பெரியவர் சீனர். நீண்ட நாட்கள் அவர் புக்கீட் தீமா வட்டாரத்தில் ஏழாங்கல்லில் அமைந்துள்ள ஒரு கம்பத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ்க் குடும்பங்களோடு இணைந்து வாழ்ந்தவர். ஆதலால் அவருக்குத் தமிழ் ஓரளவு சரளமாகப் பேசத் தெரிந்திருந்தது. இப்போது அவருக்கு வயது சுமார் எழுபது இருக்கும். தளர்ந்த நடையை உடையவர் மங்கிப்போன, தெளி வில்லாத பார்வையை உடையவர். நடைத் துணைக்கா ஊன்றுகோல் ஒன்றை வலது கையிலே வைத்திருந்தார்.
அந்தச் சாலையைக் கடந்து எதிர்ப்புறம் உள்ள நடை பாதைக்குச் செல்ல முயன்றுகொண்டிருந்தார். நடைபாதையிலிருந்து கால்களைச் சாலையிலே எடுத்து வைப்பார். பலவிதமான வண்டிகள் சீறிக்கொண்டு வரும். உடனே அஞ்சியபடி நடைபாதையில் ஏறிக் கொள்வார். மீண்டும் கடப்பதற்கு முயன்று சாலையில் இறங்குவார். பாய்ந்து வரும் வண்டிகளைப் பார்த்துப் பயந்து மீண்டும் நடைபாதையில் ஏறி நின்று கொள்வார். அப்பொழுது ஓர் இளைஞன்.
“ஏய்! பெரிசு! ஒன்னு இறங்கி வேகமா போ! இல்லாட்டி மேலேயே நின்னுக்க! ஏன் இப்படி ஏறி இறங்கி விளையாடுற? ஏன் எங்களுக்கு இடைஞ்சல் தர்ர? வழிய விடு!” என்று கோபமாகக் கூறினான்.
“என்னப்பா பண்றது. வயசு ஆயிடுச்சு! தைரியம் வரமாட்டேங்குது!” பெரியவர் பணிவோடு சொன்னார்.
“வயசு ஆயிடுச்சில்ல! வீட்டிலேயே கிடக்க வேண்டியதுதானே!” இளைஞனின் ஏளனப் பேச்சு!
“இருக்க முடியலயே தம்பி! ஏன் பேரனைப் பார்த்துப் பத்து நாள் ஆச்சு! கண்ணுக்குள்ளேயே இருக்கான்! பாத்திட்டு வரலாமுன்னு தானப்பா போறேன்” என்று பெரியவர் பதில் கூறினார்.
”ஆமா! நீ போய்ப் பாக்காட்டி அவன் கெட்டுப் போவானோ? உன்ன மாதிரி கிழம்கட்டைகள் நிறையப் பேரு, அவங்கத்தான் எல்லாரையும் தாங்குற மாதிரி நினைக்கிறாங்க! சரி! சரி! ஒதுங்கி நில்லு! நான் அவசரமா போறேன்!” என்று ஏளனமாய்ப் பேசிவிட்டு, அவர் மீது மோதி உரசிக்கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களைவிட விரைவாகச் சென்றான். பெரியவர் தனக்குள் பேசினார்:
“கடவுளே! அவனையும் படைச்சு இவனையும் படைச்சிருக்கிறயே! அவன் எங்கே? இவங்க எங்கே? அவன் தான் மனுசன்!”
இன்னோர் இளைஞன்,
“ஏய்! கிழடு! கம்ப நல்லா பிடி! ஆளுங்க வர்ரது போறது தெரியல? எல்லாரையும் இடிக்குதே!” என்று சாடினான்.
“தம்பி! சங்கடப்படாதப்பா! எனக்கு வயசு ஆயிருச்சு! கண்பார்வையும் மங்கிடுச்சு! அதுதான் சரியா வழி தெரிய மாட்டேங்குது! வருத்தப்படாதய்யா!” என்று கெஞ்சுவதுபோல், செல்வந்தன் ஒருவனிடத்தில் வறியவன் ஒருவன் பணிந்து பேசுவது போல் கூறினார்.
“பார்வை தான் மங்கிப் போச்சில்ல! பேசாம ஒரு இடத்திலே இருக்க வேண்டியதுதானே! வெளியே வேற அலையனுமா?'” அதட்டலாகப் பணிவன்பின்றிப் பேசினான் அந்த இளைஞன்.
“இல்லப்பா தம்பி! என் மூனாவது பொண்ணு இப்ப ஏழு மாசம்….! அவ போனா விஸ்தா எம்.ஆர்.டி. ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கிற காமன்வெல்த் சாலையில் குடியிருக்கிறார்! போய்ப் பார்த்துட்டு வரலாமுன்னு தானப்பா போறேன்!”
“ஆமாமா! நீ போய்த்தான் பிரசவம் பாக்கப் போறே! உசுர வாங்காதே! வழிய விடு!” என்று மனத்தில் சிறிதும் இரக்கமின்றி ஒதுக்கிவிட்டுச் சென்றான்.
“கடவுளே! அவனையும் படைச்சு இவனையும் படைச்சிருக்கிறயே! அவன் எங்கே? இவங்க எங்கே? அவன் தான் மனுசன்!” என்று பெரியவர் தனக்குள்ளே நொந்து கொண்டார்.
இருபது வயது மதிக்கத்தக்க ஓர் இந்தியப் பெண் பெரியவர் பக்கத்தில் வந்து நின்றாள். பெரியவர் நடை பாதையிலிருந்து இறங்கினார். சற்றுத் தடுமாறினார். லேசாகி
அப்பெண்ணின் மீது மோதிவிட்டார். அவ்வளவுதான்…! பூகம்பமாய் அவள் குமுறினாள்.
”யோவ்! நீ என்ன பெரிய மனுசனா? பொம்பள நிக்கிறது தெரியல? வயசுக்குத் தகுந்தபடி நடந்துக்க! இந்த வயசுலயும் பொம்பளைக மேலே மோதனுமா? ஸ்டுப்பிட் மேன்” என்று பொரிந்து தள்ளினாள்.
“அம்மாடி! நீ என் பேத்தி மாதிரி இருக்கே! உன் வயசுல எனக்கு ஏழு பேத்திக இருக்காங்க! அப்படி யெல்லாம் பேசாதம்மா! தப்பு! எனக்கு வயசாயிடுச்சு காலெல்லாம் நடங்குது! கொஞ்சம் தடுமாறிட்டேம்மா! பொறுத்துக்கம்மா! இப்படியெல்லாம் பேசக் கூடாதம்மா!” என்று நடுங்கும் குரலில் பெரியவர் கூறினார். அதற்கு அந்தப் பெண்
”ஓகோ! ரோசம் பொத்துக்கிட்டு வருதோ! மோதுனதும் பத்தாம ரோசம் வேற வருதோ! நடக்க முடியலே…! தடுமாறுதுயில்லே…! பின்னே ஏன் நீங்க எல்லாம் வெளியே வரணும்? ஒரு மூலையப் பாத்து முடங்கிக் கிடக்க வேண்டியதுதானே தள்ளு! தள்ளு!” என்று பெண்மைக்கே உரிய இரக்கப் பண்பு சிறிதும் இல்லாமல் சீறிக் கொண்டே நடைபாதையில் தள்ளிவிட்டுச் சென்றாள்.
பெரியவர் “கடவுளே! அவனையும் படைச்சு இவனையும் படைச்சிருக்கிறயே! அவன் எங்கே? இவள் எங்கே? அவன் தான் மனுசன்!” என்று பெரியவர் தனக்குள்ளே நொந்து கொண்டார். அந்த ‘அவனை’ நினைத்துப் பார்த்தார்.
பத்து நாட்களுக்கு முன்பு!
இந்தப் பெரியவர் இதே நடைபாதையில் இதே சாலையைக் கடக்க முயன்று, தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது! பத்து வயதுச் சிறுவன் ஒருவன், அவர் அருகே வந்து நின்றான்.
பெரியவர் தடுமாறுவதையும், உடல் நடுங்குவதையும், கண்பார்வை மங்கியிருப்பதையும் உணர்ந்து அறிந்து கொண்ட அவன்,
“என்ன தாத்தா? எங்கே போகனும்? வாங்க என் கூடவே வாங்க! நான் சாலையைக் கடந்து அந்தப் பக்கத்துக்கு உங்களைக் கூட்டிக்கிட்டுப் போய்விடுறேன். வண்டியிலே ஏறிப் போகனும்னாலும் வண்டியேத்தி விடுறேன்! பயப்படாம வாங்க! என் கையைப் பிடிச்சுக்குங்க!” என்று, பாலகனாயிருந்தாலும் பண்பிலே முதிர்ந்தவனாய்ப் பரிவோடும் பாசத்தோடும் தன் நடக்கையை நீட்டினான்.
பெரியவரும் நடுங்கிக் கொண்டிருக்கும் தன் வலது கையால் அவனுடைய இடக் கையைப் பற்றினார். பற்றியதும்…
“என்னப்பா கையில இரத்தம் வடியுற மாதிரி இருக்கு? என்ன ஆச்சு?”
“ஒன்னுமில்ல தாத்தா! வழயில ஒரு நாய்! ஓடிவந்து கையைக் கடிச்சிருச்சு. வேற ஒன்னமில்ல! வாங்க போகலாம்!” என்றான் நிதானமாக.
”ஐயய்யோ! வேண்டாமப்பா! நீ வேகமா போ! நாய்க்கடி மோசமானது! உடனே மருத்துவர் கிட்ட போயி ஊசி போட்டுக்க! நான் மெதுவாக வர்ரேன். போய்யா! வேகமா போ!’ என்று பாசத்தோடு விரைவுப்படுத்தினார்.
:அதெல்லாம் ஒன்னும் ஆகாது தாத்தா! நான் உங்கள வண்டி எத்தி விட்டுட்டுப் போறேன்!” என்று வலுக் கட்டாயமாகப் பெரியவர் கையைப் பற்றிக் கொண்டு, கசியும் இரத்தத்தையும் பொருட்படுத்தாமல், மெதுவாக அவரை அழைத்துச் சென்றான் – பெரியவர் மெதுவாக நத்தைபோல் நகர்ந்தார். – அவனும் அவரைப் போலவே நகர்ந்தான். எதிர்ப் பக்கத்துக்கு இருவரும் சென்றனர்.
“ஐயா! கண்ணு! போதுமய்யா! இனி நான் போய்க்கிறேன். நீ சீக்கிரமா மருத்துவர்கிட்ட போய்யா” என்று கனிவோடு கூறினார்.
“பரவாயில்ல தாத்தா! நான் உங்கள வண்டி ஏத்தி விட்டுட்டுப் போறேன்’ என்று கூறிப் பேருந்து வண்டி நிற்கும் இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றான்.
பத்து நிமிடங்கள் நகர்ந்தன. 106-ஆம் எண் கொண்ட பேருந்து வண்டி ஒன்று வந்து நின்றது. பெரியவரைப் பக்குவமாய் ஏற்றினான். பச்சைக் குழந்தை ஒன்றைத் தாய் ஒருத்தி பக்குவமாய்த் தொட்டியில் இடுவதுபோல் ஏற்றினான்.
“தாத்தா! போயிட்டு வாங்க! இறங்குறப்ப பாத்து இறங்குங்க!’ என்று சொல்லி அனுப்பினான். பெரியவர் அந்த ‘அவனை’ நினைத்தார். நெக்குருகினார். நெஞ்சு நெகிழ்ந்தார்.
இராமபக்தர்கள், “ஸ்ரீ இராம ஜெயம்! ஸ்ரீ இராம ஜெயம்!” என்று உச்சரிப்பதைப்போல் “அவன் தான் மனுசன்!” “அவன் தான் மனுசன்!” என்ற தம் மனதுக்குள் ஒலித்துக் கொண்டே நின்றார்.
(2000-ஆம் ஆண்டு)
– விண்ணில் ஒரு மணல் வீடு (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: பிப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.
| கதைகள் மா.வீ.தியாகராசன் ஆசிரியரின் பிற நூல்கள் கதைத் தொகுதிகள் மரபுத்தொடர்க் கதைகள் (1990) ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு (1995) மனதில் உறுதி வேண்டும் (1995) தியாகப் பிறவி (1995) கட்டுரைத் தொகுதிகள் ஊன்றுகோல் (1989) கட்டுரை மலர்கள் (1990) என்னுரை - விண்ணில் ஒரு மணல் வீடு - பிப்ரவரி 2011 சிறுகதை எழுதுவது என்பது ஒரு கலை. அத்தகைய கலையை ஆர்வத்தோடு படைப்பவனும் படிப்பவனும் கலைஞன். இத்தகைய சிறுகதைகளை…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நீ இல்லாத உலகத்திலே….!
வளர்கவி
October 21, 2026
அஞ்சல் நிலைய அதிகாரி
பூ.சோமசுந்தரம்
October 21, 2026
பிழி திறன்
உரு.வளவன்
October 21, 2026