ஒரு விழியில் ஒன்பது பார்வைகள்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 1, 2026
பார்வையிட்டோர்: 3,623
கூட்டத்திலோ, வழியிலோ பொதுவாக நாம் பார்க்கும் போது நம் முன் இருப்பவர்களை நாம் பார்ப்பது போல் தெரிந்தாலும், நம் பார்வை நம்முன் இருப்பவர்களை பார்க்காமல் தூரத்தில் இருக்கும் ஒருவரையோ, ஒரு காட்சியையோ பார்த்திருக்கலாம். அதனால் நம் முன் இருப்பவர்கள் நம் கவனத்தில் வர இயலாது போகும்.‘பார்த்தும் பேசாம போறானே. ரொம்ப கௌரவம் வந்துருச்சு போல’ என்றோ, ‘நம்மையே வச்ச கண்ணு மாறாம பார்க்கிறான் பாரு… ரொம்ப கெட்டவனா இருப்பான் போல’ என்றோ பிறர் நம்மை நினைப்பது எவ்வாறு தவறோ, அவ்வாறே அவர்களை நாமும் நினைப்பதாகும்.
சில சமயம் மேற்கண்டவை நிஜமாவதும் உண்டு. எது எப்படி என்பதை ஆராய்ந்தறிவதே சாணக்யம். இதைத்தான் ‘கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்றனர் நமது முன்னோர்.
“டீ…. அந்தாளப்பாரு. அரக்கெழவன் வயசு இருக்கும் போலிருக்கு. அழகா இருக்கற என்னை அப்படியோ முழுசா முழுங்கிப்போடற மாதர பார்க்கிறான்” சொன்ன தியாவைப்பார்த்து, “இருக்காதடி. அவரு எங்க தெருவுக்கு அடுத்த தெருதான். ரொம்ப நல்லவரு. அவரு வேற எங்காச்சும் பார்க்கிறது உன்னப்பார்க்கிற மாதர தெரியும்” என்று சொன்னாள் சிநேகிதி மகி.
“இல்லடி… கண்ணை சிமிட்டி, சிமிட்டி பார்க்கிறார்” என்றாள்.
“அவரோட இயல்பே அதுதான். ஒரு நாள் இப்படித்தான் அவரு என்னை பார்த்த மாதிரி தெருவுல வந்த போது நான் சிரிச்சதுக்கு அவரரு கண்டுக்கல. ‘என்ன அங்கிள் பார்த்துட்டு பார்க்காத மாதிரியே போறீங்க?’ ன்னு கேட்டதுக்கு’ பார்த்திருந்தா தலையாட்டாம போவேனா? நான் பார்த்த மாதிரி உனக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா என்னோட கவனம் வேற பக்கம் இருந்திருக்கும்’னு சொன்ன போதுதான் நான் அதுவரைக்கும் இப்படி பல பேரை தப்பாப்புரிஞ்சது தப்புன்னு நெனைச்சேன்” என மகி கூறியபோது ‘இல்லடி அவரு என்னையே தான் பார்த்தாரு’ என மீண்டும் உறுதியாகக்கூறினாள்.
அடுத்த நாள் தியாவைப்பார்த்ததாக சொன்ன பார்வை நபரான ரகு “என்ன மகி. நேத்தைக்கு உன்னையும், உன்னோட சிநேகிதியையும் பார்த்து கோயில்ல கையை ஆட்டிக்காட்டினேனே… நீ பார்த்தும் பார்க்காத மாதிரியே இருந்துட்டே… ஏதாச்சும் என் மேல கோபமா?” என கேட்ட போது ஆடிப்போய் விட்டாள்.
‘இவருக்காகத்தானே தியாவிடம் அவ்வளவு பேசினோம். நம் யோசனையை இவரு தவிடு பொடி ஆக்கி விட்டாரே…. இது அவளுக்குத் தெரிந்தால் வேண்டுமென்றே அவரது பெயர் கெடாமலிருக்க நாம் பேசியதாக நினைப்பாளே…. அதனால் பிரண்ட்ஸ்சிப் பாதிக்குமே….’ என நினைத்து கவலை கொண்டாள்.
“இல்லைங்க அங்கிள். நான் உங்களை பார்த்ததா ஞாபகத்துக்கு வரலே. நான் உங்களை பார்க்கிற மாதிரி இருந்தாலும் என்னோட கவனம் வேற எங்காவது இருந்திருக்கும்” ஏற்கனவே ரகு தன்னிடம் சொன்னதை அவரிடம் சொல்லி சமாளித்தாள்.
“இல்லியே… நீ அந்தப்பொண்ணு கிட்ட என்னைப்பார்த்து எதையோ சொல்லிட்டிருந்தையே….” இதைக் கேட்டதும் அதிர்ந்தாள் மகி.
“அந்தப்பொண்ணு தேவதை மாதிரி ரொம்ப அழகா வேற இருந்தா. அதனால தான் ரொம்ப நேரம் அந்தப்பொண்ணையே பார்த்துட்டிருந்தேன்” என ரகு சொன்னதும் மகள் வயதுள்ள மகிக்கு தூக்கி வாரிப்போட்டது.
“அங்கிள்….?” மூச்சே நின்றவளைப்போல அதிர்ச்சி மேலோங்க பேசினாள் என்பதை விட கத்தினாள்.
“இல்ல மகி. என்னோட பையன் வருணுக்கு பொண்ணு பார்த்திட்டிருக்கேன். வசதிய விட அழகான பொண்ணத்தான் தேடறோம். அதுதான் இந்தப்பொண்ணு என்னோட பையனுக்கு பொருத்தமான ஜோடியா இருப்பாள்னு நெனைச்சு அப்படிப்பார்த்தேன்” என ரகு கூறிய பின் ‘அப்பாடா’ என மூச்சை இயல்பாக விட்டாள் மகி.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
