ஒரு பூவும் கருவண்டும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 2, 2024
பார்வையிட்டோர்: 4,866 
 
 

(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காட்டில் செடி ஒன்று இருந்தது. அதில் சிறிதும் பெரிதுமாக நிறையப் பூக்கள் இருந்தன. கருவண்டு ஒன்று தேனுக்காக அந்தச் செடியைச் சுற்றிவந்தது. அப்போது, பூ ஒன்று மிகுந்த வாட்டத்துடன் இருப்பதைப் பார்த்ததும், “நீ ஏன் வாட்டமா இருக்கே?” என்று கேட்டது.

அதற்கு அந்தப் பூ, “பூக்களின் தோற்றம் வளர்ச்சியில் ஏழு நிலைகள் உண்டு. அதை நீ தெரிஞ்சுக்கிட்டா என் வாட்டத்துக்கான காரணத்தைப் புரிஞ்சுக்க முடியும்!” என்றது.

“பூக்களின் வளர்ச்சில் ஏழு நிலைகளா? சொல்லு… சொல்லு” என ஆர்வமானது வண்டு.

“ஒரு பூ முதன்முதலா செடியில் உருவாகும்போது ‘அரும்பு’ எனச் சொல்வாங்க. அப்படி நான் உருவானபோது, ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சு. தாய்ச்செடி என்கிட்ட ரொம்ப வாஞ்சையா இருந்துச்சு. என் சகோதரிகள், பிரியமா நடந்துக்கிட்டாங்க. மழை, வெயில், காற்று, பனியினால் எனக்குக் கெடுதல் வந்துடக் கூடாதுனு, இலைகளால் மூடிப் பாதுகாக்கப்பட்டேன். அரும்புதான் என் மழலைப் பருவம். மிகவும் இனிமையான பருவம்!” என்றது பூ.

“ஆஹா அருமை. பூக்களின் கேட்டது இரண்டாம் நிலை?” கருவண்டு.

“பூக்களின் இரண்டாம் நிலை ‘மொட்டு’. இந்த நிலையில் பூவின் இதழ்கள் வளர ஆரம்பிச்சாலும், குவிஞ்ச நிலையில்தான் இருக்கும். என் உடலில் வெளிர்நீல வரிகள் உருவாவதைக் கவனிச்சேன். என் சகோதரிகள், அடர்த்தியான நீலவண்ணத்தில் ரொம்ப அழகா இருந்தாங்க. பெரிய பூவாக வளரும்போது எனக்கும் அந்த நிறம் கிடைக்கும்னு தாய்ச்செடி சொல்லுச்சு. அப்போ,சிறிசும் பெருசுமா நிறைய மொட்டுகள் இருந்தோம். நாங்க எல்லாரும் கூடிப் பேசுவோம். எங்க எல்லாருக்கும் பல கனவுகள் இருந்துச்சு. ‘மொட்டு’ எனது உற்சாகமான சிறார் பருவம்!” என்றது பூ.

“உன் கதையைக் கேட்கவே சுவராஸ்யமா இருக்கு. உன் அடுத்த நிலை என்ன?” என ரீங்காரமிட்டது கருவண்டு.

“பூக்களின் மூன்றாம் நிலை ‘முகில்’. ஒரு மொட்டின் இதழ்கள் முதன்முதலா அவிழ்ந்து விடுபடுவதைத்தான் முகிழ் அல்லது முகிழ்த்தல் எனச் சொல்வாங்க. இந்த நிலையில் எனக்குத் தாய்ச் செடியின் பராமரிப்பு அதிகம் தேவைப்படலை. நான் தன்னம்பிக்கையோடு இருந்தேன். நெக்டார் எனப்படும் தேன், என்னிடம் உருவாக ஆரம்பிச்சது. முகிழ்ப் பருவத்தை இளமையின் ஆரம்பநிலைனு சொல்லலாம்!” என்றது பூ.

வண்டு வியப்புடன் பார்க்க, பூ தொடர்ந்து பேசியது. “பூக்களின் நான்காம் நிலை ‘மலர்’. இந்த நிலையில் எனது இதழ்கள் மேலும் பெருசா வளர்ந்துச்சு. என் நிறம், அடர்த்தியான நீலத்துக்கு மாறி, பார்க்கிறவங்க மனசைக் கவர்ந்தது. தினமும் காலையில் சூரிய உதயத்தின்போது மலர்வேன். அந்திசாயும் வேளையில் இதழ்கள் குவிவேன். உன்னை மாதிரி வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் தேனுக்காக வரும். மலர் ஒரு பூவின் துடிப்பான இளமைப் பருவம்!”

குறுக்கிட்ட வண்டு, “மொட்டுகளா இருந்தப்போ பலருக்கும் பல கனவுகள் இருந்ததா சொன்னியே, அது என்ன?” எனக் கேட்டது.

“வளர்ந்த மொட்டுகளைத் தங்கள் தேவைக்காக மனுஷங்க கொய்து எடுத்துட்டுப் போவாங்க சில மொட்டுகளுக்குத் தாங்கள் அழகான மாலையாகத் தொடுக்கப்படனும்னு ஆசை இருந்துச்சு. சிவ மொட்டுகள் இறைவனுக்கு அர்ச்சனை செய்யப்படும். பாதமலரா இருக்கணும்னு ஆசைப்பட்டாங்க!”

“ஓகோ… நினைச்சது நடந்துச்சா?”

“எண்ணம்தானே வாழ்க்கை. எல்லா மொட்டுகளுக்கும் அவங்க நினைச்சதே நடந்துச்சு. பூக்களின் ஐந்தாம் நிலை ‘அலர்’ ஒரு பூ எப்போதும் மலர்ந்த நிலையிலேயே இருப்பது அலர்!” என்றது பூ.

“ஒரு சந்தேகம்… அவருக்கும் மலருக்கும். என்ன வித்தியாசம்?” எனக் கேட்டது கருவண்டு.

“அலர்ந்த நிலையில் ஒரு பூ தன் இதழ்கள் குவிந்து விரியும் தன்மையை இழந்துரும். மலர் இளமைப் பருவம்னா, அவர் முதுமையின் ஆரம்பம்னு சொல்லலாம். அலர்ந்த நிலையில் ஒரு பூவுக்குப் பனிக்காற்று, வெயில், மழையிலிருந்து பாதுகாப்பு கிடைக்காது. இதனால், பூ வாடத் தொடங்கும். மகரந்தத்தாள் காய ஆரம்பிக்கும். ஓர் அலர்ந்த பூ வாடும் நிலைதான் ஆறாம் நிலை!” என்றது பூ.

“புரியுது புரியுது! அப்போ, ஏழாம் நிலை என்ன?”

“பூக்களின் ஏழாம் நிலை, ‘செம்மல்’. வாடிய பூ வதங்கும் நிலை. பூக்களின் இதழ்கள் சுருங்கும். மகரந்தத்தாளும் முழுசா வாடிரும். இப்போ, நான் வதங்கியிருக்கேள். இது எனது ஏழாம் அதாவது கடைசி நிலை. இப்போ. இந்தச் செடியில் பெயரளவுக்குத்தான் ஒட்டிக்கிட்டுருக்கேன். ஒரு சின்னக் காற்று அடிச்சாலும் உதிர்ந்திருவேன். நீ என் பக்கத்துல வத்து உன் இறக்கைகளைப் படபடத்துவிட்டுப் போ!” என்றது பூ.

பூ கேட்டுக்கொண்டபடி கருவண்டு செடியின் அருகில் வந்து படபடத்தது. அதன் அதிர்வில் பூ காம்பிலிருந்து உதிர்ந்து ஓசையின்றித் தரையில் வீழ்ந்தது. விழுந்த பூவின் அருகே வண்டு சென்றது, “மொட்டா இருந்தப்போ, நீ என்ன ஆசைப்பட்டே?” எனக் கேட்டது வண்டு.

“என் ஏழு நிலைகளையும் தாய்ச் செடியிலேயே கழிக்கணும். அதன் காலடியில் விழுந்து சருகாக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் நினைச்சதே நடந்தது” சிரித்தபடி சொன்னது பூ.

“ஆனால், யாருக்கும் பயனில்லாமல் போய்ட்டோமோ என்ற வருத்தம் இல்லியா?” எனக் கேட்டது கருவண்டு.

“யார் சொன்னது பயனில்லாமல் போளதாக? உன்னைப்போலப் பலருக்கும் பசியாற்றினேன். பார்க்க இது முடிவு மாதிரி தெரிஞ்சாலும், முடிவு கிடையாது. இது புதிதான ஒன்றின் ஆரம்பம். என் தாய்ச் செடிக்கே நான் உரமாகிறேன். என்னை இத்தனை தூரம் வளர்த்த மண்ணுக்கு நன்றி சொல்றேன்” – இதுதான் அந்தப் பூ கடைசியாகப் பேசிய வார்த்தைகள்.

கருவண்டு அமைதியாகத் தலைவணங்கி, அந்தப் பூவைச் சுற்றி வந்தது. பிறகு. ரீங்காரமிட்டபடி பறந்துசென்றது.

– 31.03.2018, சுட்டிவிகடன்.

மா.பிரபாகரன் எனது பெயர் மா.பிரபாகரன். மதுரையில் வசித்து வருகிறேன் சித்த மருத்துவத்தில் பி.எஸ்.எம்.எஸ் இளங்கலைப் பட்டம் பெற்றவன்@ அரசு மருத்துவர். கடந்த ஆறு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராகப் பணியாற்றி ஜீலை - 2024 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். பெரியவர்களுக்கான எனது படைப்புகள் தினமணிகதிரில் பல வெளிவந்துள்ளன. சிறுவர்களுக்கான எனது முதல் படைப்பு சிறுவர்மணியில் 2006 ஆம் ஆண்டு வெளியானது. எனது சிறுவர் சிறுகதைகள் குழந்தை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *