ஒரு புதிய உயிர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 26, 2024
பார்வையிட்டோர்: 2,534 
 
 

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெட்டி இழுத்த தேயிலை வாது கையில் இருக்கவே கீழே பார்த் தான், மூக்கையா.

வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. தலையை நிமிர்த்தி சூரிய னைப் பார்த்தான். ஒரு வினாடி வானவில்லாய் வர்ணம் காட்டிய சூரிய கதிர்களிடமிருந்து பார்வையை ஒதுக்கிக் கொண்டான்.

மணி பதினொன்றுக்கு கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம்.

ஏறுவெயில்..! வெட்டுவது கவ்வாத்து… வியர்த்துக் கொட்டியது. கறுந்தேகத்தின் வியர்வை பிசுக்கில் பட்டுத் தெரிப்பது போலவே வலதுகை பிடித்திருந்த கத்தியின் கூர்மையிலும் பட்டு தெரிக்கிறது சூரியக்கதிர். இரண்டுமே இரும்புதான்.

முட்டையுடன் ஊரும் சிற்றெறும்பு கூட்டம்போல் தண்ணீர்ப் பையுடன் ஏறிக் கொண்டிருந்தனர் சிறுவர்கள்.

மூக்கையாவின் மூத்தவன் சிங்காரமும் அவர்களுடன் ஏறிக்கொண் டிருப்பான் …. போத்தலில் தேத்தண்ணீருடன்.

தேனீர் தேவையில்லை. வெறும் பச்சைத் தண்ணீர் கிடைத்தாலே போதும். அந்த நேரத்துக்கு சுவர்க்கம் போலிருக்கும்.

மலைமேல் நிற்பதால் சூரியனுக்கு அருகில் வந்துவிட்டதைப் போல் சுட்டுப் பொசுக்குகிறது வெயில்.

நாவின் வரட்சியும், வேலையின் களைப்பும் அவனை மாறி மாறி சோர்வடையச் செய்தாலும், “சிங்காரம் தண்ணீருடன் வருவான்” என்னும் நினைவின் துணிவில் இன்னும் நாலு மரம் வெட்டி விட்டான்.

“இன்னுமா ஏறி வார்றான்…” என்னும் சந்தேகத்துடன் மீண்டும் ஒரு முறை கீழே பார்த்தான்.

மலைக்கு தண்ணீர் கொண்டு வந்த பையன்கள் திரும்பிப் போய்க் கொண்டிருந்தனர். ஒரு சிலர் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

“என்ன ஆச்சு இவனுக்கு…!” என்னும் நினைவுடன் கவ்வாத்துக் கத்தியை கக்கத்துள் இடுக்கிக் கொண்டவன் தலைத் துணியை உதறி கழுத்து…. நெஞ்சு… முகம்… முதுகு…. என்று அழுத்தித் துடைத்த வண்ணம் வெட்டுப்படாத தேயிலையை இழுத்து நெறித்துக் கொண்டு மேலே ஏறினான்.

ஆறேழு தேயிலை ஏறினால் மேலே றோட்டு! றோட்டு வளைவில் ஊற்றுக்கான்.

இது அவனுக்கும் தெரியும். தண்ணீர் குடிப்பவர்களைப் பார்த் ததும் இவனுடைய தாகம் இவனை தள்ளிக் கொண்டு போகிறது.

பாதையில் சிறிது நடக்கும்போதே சொர்ரென்று’ ஊற்றும் தண்ணீ ரின் ஓசை குளிர்ச்சியுடன் ஓடி வந்து காதில் பாய்கிறது.

வாங்கியில் குத்தி வைத்திருந்த இரண்டு பெரிய தேயிலை இலை! இலைநுனியில் சர்ரென்று’ ஊற்றிய நீர் பளிங்கு போல் மின்னியது நாலு கை நிரப்பிக் குடித்தவன். இரண்டு கை நிரப்பி தோளுக்கு மேலாக முதுகில் விசிறிக் கொண்டான் … பிறகும் குடித்தான்.

நீரொழுகும் முகத்துடன் நிரையில் வந்து நின்றவனுக்கு புதிதாக ஒரு தெம்பு வந்திருந்தது.

மட மட’வென்று வெட்டத் தொடங்கினாலும் “சிங்காரம் ஏன் தண்ணி கொண்டாறலை” என்ற நினைவு மறுபடியும் எழுந்து கொண்டே இருந்தது.

***

ஆளுயரம் வளர்ந்து அழகாக வெட்டப்பட்டு வேலியாய் நிற்கும் சப்பாத்துச் செடிகள் தேயிலை மலையையும் ஆஸ்பத்திரியையும் பிரித்து வைத்துக் கொண்டாலும், மருத்துவசாலைக்கேயுரிய அந்த மணம் பலதரப்பட்ட மருந்துகளின் அந்தக் கலவை நெடி ஆஸ்பத்திரியை சுற்றியுள்ள தேயிலை நுனிகளில் இழைவதை தடுத்துக் கொள்ள முடியவில்லை .

எட்ட நடக்கும்போதே ஆஸ்பத்திரி கிட்ட இருக்கிறது என்பதை அந்த மணம் காட்டி விடுகிறது.

கத்திரிக்கு அகப்படாத ஒரு சில மொட்டுக்கள் சிவப்பாய் பூத்துச் சிரிக்கின்றன… வேலியில்.

வந்து போகும் நோயாளிகளைத் தவிர்த்து ஒரு அறுபதுக்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கி இருக்க வசதி பெற்றது அந்த ஆஸ்ப த்திரி. எத்தனையோ வைத்தியர்கள் வந்து போய்விட்டனர். சிங்களவர்… தமிழ்… முஸ்லீம்… என்று.

ஐந்து பேர் தங்கியிருந்து மருத்துவம் பெறப் போதுமானதாக, ஒரு சிறு மருத்துவமனையாக இருந்தது. இன்று இத்தனை பெரியதாக ஆகியுள்ளமைக்கு இங்கு பணியாற்றிய ஒவ்வொருவருமே காரண மாகின்றனர்.

“கல்வி கொடுத்தோன், கண் கொடுத்தோன்” என்பது போல் இது உயிர் கொடுக்கும் பணி.

இப்போது இருப்பவர் ஒரு யாழ்ப்பாணத்தவர். வேலி இடுக்கால் பார்க்கும்போது தனது சின்னஞ்சிறிய அறையில் அமர்ந்து நோயா ளிகளை பரிசோதித்துக் கொண்டிருக்கின்றாரே அவர் தான் பெரிய டொக்டர்.

ஆஸ்பத்திரி பெரிதென்றாலும் அவருடைய அறை சிறியது தான்.

அவருடைய அறை இன்னும் பெரியதாக அமைந்துவிட்டால் தங்கி மருத்துவம் பெறவேண்டிய ஒரு நோயாளியை குறைத்துக் கொள்ள வேண்டிய சங்கடம் ஏற்படும் என்பதை அவர் அறிவார்.

பிரசவத்துக்காகப் பத்துப்பேரை தங்க வைக்குமளவிற்கு அறைக ளையும், பிரசவ அறையின் தரைக்கு ‘மார்பல்’ போட்டுக் கொண்ட பெருமையும் இவருடைய சேவையுள் அடங்குகின்றன.

காசு கொடுப்பது தோட்டம் தான் என்றாலும் எதற்குக் கேட்க வேண்டும் என்பது தானே நிர்வாகத்தின் விவஸ்த்தை.

ஆஸ்பத்திரியின் பின்புறத்தே ஒரு இருபது முப்பது யார் தொலைவில் நின்ற பலாமரம் இப்போது ஆஸ்பத்திரி பின் சுவரின் அருகே நிற்கிறது.

பலாமரத்தின் அடியில் பெரிது பெரியதாய் மூன்று அடுப்புக் கல்லும் கற்களின் மேல் ஓர் கரி பிடித்த அரை ‘ட்றம்’மும் இருக்கின்றன.

பாவம் இந்தப் பலாமரம்… முன்பெல்லாம், “தேயிலையை நிழ லாக்குகிறது… பழுத்த இலைகள் விழுந்து விழுந்து கொழுந்து அமுங்கி விடுகின்றது…” என்று காரணம் கூறி தேயிலைகளுக்கு மேலாக விரிந்து நின்ற கிளைகளை பால் வடிய பால் வடிய வெட்டி மொட்டை யாக்கிவிடுவார்கள்.

ஆஸ்பத்திரிக் கூரைக்கு மேலாக விரியும் கிளைகள் ‘சர் சர்’ என்று இலைகளும் கொப்புகளுமாக கூரைத் தகரத்தை வருட படர்ந்திருந்தன.

ஆஸ்பத்திரிக் கட்டிடம் விரிய விரிய கூரைக்கு மேல் லாவகமாக ஆடி அசைந்த கிளைகளுக்கும் ஆபத்து வந்தது.

மரத்திலிருந்து கிளை பிரியும் இடத்தில் வைத்து ஒட்ட வெட்டிவிட்டார்கள்.

கிளை பரப்பி நின்ற பலா மரத்தை மொட்டைப் பலா மரமாக்கிவிட்டான் மனிதன்.

அடி மரமும் இப்போது சூடுபட்டு சூடுபட்டு பொந்தாகி விட்டது. கூரையிலிருந்து குதித்து வரும் அணில்கள் இந்தப் பொந்துக்குள் புகுந்து தேயிலைக்குள் ஓடி மறைகின்றன.

பலா மரப் பொந்துக்குள் கையை விட்டு மரத்தைக் கெட்டியாகப் பிடித்து ஒரு உந்து உந்தி தாவி ஏறினான்`ஜினதாச’.

ஆசுபத்திரிக்கு மருந்து வாங்க வருவதற்கு இது வழி இல்லை என்றாலும் இந்தப் பக்கமிருந்து வருகின்றவர்கள் இப்படித்தான் ஏறிக் குதிப்பதுண்டு. பெரியவர் கண்டுவிட்டால் சள்’ளென்று விழுவதுடன் மருந்து தர மறுத்து விரட்டியும் விடுவதுண்டு.

பன்சலயிலிருந்து வந்த ஜினதாச அய்யாவுக்குத் தெரியாமல் குனிந்து வந்து ஆட்களுடன் நின்று விட்டான். பிறகு முண்டியடித்து முன்னேறி அய்யாவின் முன் நின்று கையிலிருந்த கடிதத்தை நீட்டினான்.

“எப்படி ஜினதாச… தங்குவதற்குத் தயாராக வந்ததா…” என்றபடி கடிதத்தைப் பிரித்துப் படிக்கின்றார்.

நேற்று அவன் வயிற்றுவலி என்று வந்திருந்தபோது சோதித்துப் பார்த்தவர் “ஆஸ்பத்திரியில் தங்கியிருக்க வேண்டும். வலியை நிப்பாட்ட இப்ப மாத்திரை ரெண்டு தர்றேன்…. உன்னை சோதித்துப் பார்க்க வேண்டும்… நீ போய் தங்குவதற்கு தயாராய் வா…” என்று கூறி அனுப்பினார். அவன் இப்போது வந்து இந்தக் கடிதத்தை நீட்டுகிறான்.

பன்சலையிலிருந்து பௌத்த குருவானவர் கொடுத்தனுப்பிய கடிதம் அது.

….ஜினதாசவைத் தவிர வேறு யாராலும் அந்தப் பசுவில் பால் கறக்க இயலாதாம். ஆகவே காலை மாலை பால் கறக்க அவன் இருந்ததாக வேண்டும்… என்பதே கடிதம்.

டக்டரய்யாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. “பசு மாட்டிடம் பால் கறப்பதும் கறக்காமல் விடுவதும் எனக்குத் தேவையில்லை. வியாதி யஸ்த்தனின் வியாதியைக் கண்டுபிடித்துக் குணமாக்குவதே ஒரு வைத்தியனின் வேலை. இஷ்டமென்றால் இரு இல்லாவிட்டால் போ…”

என்று கூறிவிட்டு எழுந்துவிட்டார். முன்னே நின்றுகொண் டிருந் தவர்கள் ஒதுங்கி வழி விட வாங்குகளில் குந்தியிருந்தவர்கள் எழுந்து வணக்கம் கூற அய்யா வாட்டுகளைப் பார்க்க நடந்துவிட்டார்.

பிரசவத்துக்காக வந்திருப்பவர்களைப் பார்க்கும் நேரம் இது. கதவைத் திறந்து மூடிவிட்டு உள்ளே நுழைந்தார்.

சுற்றியுள்ள சேலையையும் மேவி, நெஞ்சுவரை நிறைந்து விட்ட வயிற்றுடன் முக்கி முனகி எழுந்திருக்க முயன்றவளை… “ம்ம்…. எழும்ப வேண்டாம்…. அப்படியே இரு….” என்று கையமர்த்தியவர் –

“என்ன பேரு?” என்றார்.

“மூக்காயிங்க…”

“இப்ப எப்படி இருக்கு… மயக்கம் வருதா……?”

“இல்லீங்க…… நேத்து சின்னய்யா ஏதோ ஒரு புது மருந்து குடுத் தாரு… அதுலேயிருந்து மசக்கை இல்லீங்க… ஆனால் நிக்க முடியலே… கால்ல வெட வெடன்னு வருது…” இந்தக் கொஞ்சம் பேசியதற்கே பெரிதாக மூச்சு விட்டாள்.

“புருசன் பேரு என்ன சொன்னே ……”

“மூக்கையாங்க…”

“அய்யா மூக்கையா…. அம்மா மூக்காயி… ரொம்பப் பொருத்தமா இருக்கு அது தான் வருசா வருசம் வந்துறே…”

மூக்காயி சிரிக்க முயன்று முடியாமல் வயிற்றைப் பிடித்துக் கொள்ளுகின்றாள், முனகலுடன்.

“சிரிக்கையில் வயிறு வலிக்குதா….?”

“ஆமாங்க அய்யா… இனி சிரிப்பு காட்டாதீங்க…”

“அதைப் பரிசோதிக்கத்தான் அப்படிச் சொன்னேன். உன்னைக் கேலி செய்ய இல்லே…” என்றவர் அவளுடைய இமையைப் பிரித்து விழிகளையும் நாவையும் பார்த்துவிட்டு…

“எத்தனையாவது?” என்றார்.

“நாலுங்க…”

“வைத்தியர் கிட்ட பொய்சொல்லக்கூடாது. இது எத்தனையாவது…?”

“ஆண் ரெண்டு பொண் ரெண்டுங்க…”

“ஆக மொத்தம் நாலுங்கிறே… நான் லயத்துல இருக்கிறதைப் பத்தி கேக்கலே… வயத்தில இருக்கிறதைக் கேட்டேன்.”

“இது அஞ்சாவதுங்க. மத்த நாலும் சின்னஞ் சிறுசுக… அதான்…”

அவள் முடிக்குமுன் அய்யா வெடுக்கென்று கூறினார்…”உனக்கு வேண்ணா வீட்டுல இருக்கிற புள்ளைகளைப்பத்திய நெனைவு இருக்கலாம். என்னோட கவலை எல்லாம் உன் வயத்துல இருக்கிற புள்ளை யைப் பத்தித்தான்…”

“அய்யா கிட்ட ஒரு உதவி கேக்கணும்க…”

“கேளு…”

“நானு வீட்டுக்குப் போகணும்க…சாமி, தொரை தான் மனசு வைக்கணும்…சுடு தண்ணி காய வச்சி குளிக்கணுங்க…”

“ஓஹோ … பழைய பல்லவி தானே…உனக்கு குளிக்கணும். அதுவும் சுடுதண்ணி வச்சுக் குளிக்கணும்…அதுக்கு நான் ஏற்பாடு செய்யிறேன். இங்கேயே பின்னுக்குக் குளிக்கலாம். நிக்க முடியலே நடக்க முடியலேங்குறது…” என்றபடி அடுத்த கட்டிலைப் பார்க்கப் போய்விட்டார் அய்யா.

***

“சிங்காரம்… ஏய் சிங்காரம்…” என்று கூப்பிட்டபடியே லயத்தை அடைந்தான் மூக்கையா. அலுத்துக் களைத்து வந்தவனுக்கு வீடு வெறிச் சோடிக் கிடந்ததில் ஆத்திரம் வேறு.

கவ்வாத்து கத்தியையும் குட்டிச் சாக்கையும் அரைச் சுவற்றில வைத்து விட்டு இஸ்தோப்பில் நின்று கண்களால் பிள்ளைகளைத் தேடினான்.

லயத்துத் தொங்கலில் கொஞ்சம் சிறிசுகள் நொண்டிக் கோடு ஆடிக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் இவனுடைய சின்னது களும் இருக்கலாம் என்ற எண்ணத்தில் மறுபடியும் கூப்பிடப் போன வன், கோடி பக்கமிருந்து ஓடி வந்த சிங்காரத்தைக் கண்டதும்

“எங்கேடா கோடிப் பக்கமிருந்து ஒடியாரே” என்று கோபமாகக் கேட்டான்.

களைத்திருந்த நேரத்தில் மலைக்கு தண்ணீர் கொண்டுவராத கோபம். மூக்காயி இன்றைக்கும் வரவில்லை என்னும் ஏமாற்றம் எல்லாமாகச் சேர்ந்து அவனைச் சீண்டி விட்டன.

“கோழிக் குடாப்பை மூடப் போனேம்பா…. கூப்பிட்டியோ….” என்ற வாறு அவனிடம் வந்து நின்று கைகளைப் பிசைந்தான் சிங்காரம்.

“கூப்பிடலே வௌக்குமாத்தக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுன மாதிரி பேர் வச்சிருக்காள்ல ஒங்க ஆயா…. அதை வாய் நெறைய சொல்லி மகிழ்ந்துகிட்டேன்…. ஏண்டா மலைக்குத் தண்ணி கொண்டாறலை….”

விருட்டென்று அவனைக் கடந்து உள்ளே ஓடிய சிங்காரம் “இந்தா பாருப்பா… தேத்தண்ணியைப் போத்தல்லே ஊத்தி குட்டிச் சாக்குல எல்லாம் போட்டு வச்சிருக்கேன்….ஆனா..ஆனா…”

பதறிப் போனான் மூக்கையா . “ஆனா என்னடா…என்ன நடந்துச்சு…எங்கே ஒங்கக்கா எங்கே… சந்திரபோசு…..” என்று அவசரமாகக் கேட்டான்.

“தண்ணியெல்லாம் ரெடி பண்ணிகிட்டு தம்பி வரக்காட்டியும் இருந்தேம்பா….பள்ளிக்கொடத்துல இருந்து வரயில் சந்திரபோசு கால்ல போத்தல் ஓடு வெட்டி… ஓழுகிற ரத்தத்தோட ஒடியாந்தான்…”

“அடப்பாவி அவனுக்கென்ன கண்ணு பொட்டையா இல்லே பொரடில இருக்கா… பார்த்து வரக்கூடாது… இப்ப எங்கடா…”

“நான் சீலைத் துணியால் சுத்திப் பார்த்தேன் நிக்கலே ரத்தம்…பக்கத்து வீட்டு மாமா ஓடியாந்து பாத்துட்டு அடப்பாவி இப்படிப் பொளந்திருக்கு இதுக்கு நீ கட்டுப் போடுறியோன்னு அவனைத் தூக்கிக்கிட்டு ஆசுப்பத்திக்கு போயிறிச்சி. ஆசுப்திரிலேருந்து வந்ததும் ஒனக்கு தண்ணி கொண்டாறுவோம்னு இருந்தேன்…இன்னும் காணலை…”

பன்னிரண்டு வயதுகூட நிறையாத சிறுவன் சிங்காரம் பரிதாபமாக நின்றான். அவன் கண்களில் ஒரு பயம்…அப்பாவிடம் இருந்து எதையோ மறைக்கும் பயம் படர்ந்திருந்தது.

“இந்த அடுப்பு மொடையெல்லாம் கூட்டிப்போடு… ஒரே சாம் பலா கெடக்கு…என்ன இது இப்படி அடுப்பெல்லாம் தண்ணி ஊத்திக் கெடக்கு…” என்றபடி தொட்டிலைத் திருப்பி விட்டான். இவ்வளவு நேரமாக ஈரத்தில் கிடந்தது தொட்டில் திரும்பியதால் வில்லாய் வளைந்து சிலிர்த்தது.

தொட்டிலுக்கு வெளியே நீண்ட கால்களை உள்ளே தள்ளி துணியை இழுத்துவிட்டவன் “ஆட்டிவிடு” என்று கூறிவிட்டு வெளியே வந்தான். மனைவி இல்லாத வீடு இப்படித்தான் அலங்கோலமாய் இருக்கும்.

கை கால் அலம்பிக் கொண்டு அவன் வருவதற்குள் சிங்காரம் சாப்பாட்டை எடுத்து வைத்தான் . “நீங்கள்ளாம் சாப்பிட்டாச்சா…”

சாப்பிடத் தொடங்கும் முன் கேட்டுக் கொண்டான் மூக்கையா.

ஆம் என்பதற்கடையாளமாகத் தலையை ஆட்டினான் மகன் அத்துடன் “சந்திரபோசு இன்னும் சாப்பிடலையப்பா” என்றும் கூறி வைத்தான்.

அவனால் சாப்பிட முடியவில்லை. இருந்தாலும் பசித்த வயிறு, களைத்த உடல்….சாப்பிடத் தூண்டியது. “நான் போயி பேரு போட்டுட்டு அப்படியே ஆயாவைப் பாத்துட்டுத்தான் வருவேன்… தம்பி வந்ததும் சாப்பாடு கொடுத்து படுக்கவை.. உங்கக்கா, தங்கச்சிக்கு விஸ்கோத்து எதும் ஊட்டுச்சா…எங்கேடா அந்தச் சனியன் கூப்பிடு அதை” என்று கத்தினான்.

“ஊட்டிச்சுப்பா. ஊட்டிப் படுக்கப் போட்டுட்டுத்தான் வெளையாடப் போச்சு…எத்து மாங்கொட்டைப் பாயுதுப்பா…இப்போதிக்கு வராது…இன்னும் மூணு நாலுகோடு இருக்காம்” என்று அப்பாவிடமிருந்து எதையோ மறைக்கும் பயத்துடன் கூறினான் மகன்.

“சரி சரி வெளையாடட்டும் இதுக்குள்ளே வந்து நொளைஞ்சி கிட்டுத்தான் என்னத்தைப் பண்ண” என்றவாறு சாப்பிடத் தொடங்கினான்.

மூக்கையா ஆஸ்பத்திரியை அடைந்தபோது பெரியவர் பிரசவ வார்ட்டின் உள்ளே இருந்து வெளியே வந்தார்.

இந்த நேரத்தில் அவன் அவரை அங்கு எதிர்பாக்கவில்லை. “யாரு…மூக்காயி புருசனா? சம்சாரத்தைப் பார்க்க வந்தியா…சரிசரி பாத்துட்டுப்போ…” அய்யா வெளியே நடக்க அவன் உள்ளே நுழைந்தான்.

முனகியபடி கட்டிலில் படுத்திருந்த மூக்காயி கணவனைக் கண்ட தும் எழுந்து அமர்ந்தாள். “என்ன புள்ளே என்ன பண்ணுது…. இன்னிக்கும் கெளம்பலியா…”

“அய்யா போயிட்டாரா…?” ரகசியமாகக் கேட்டாள்.

“போயிட்டாரு… என்ன சொல்றாரு…”

“லயத்துக்கு அனுப்ப மாட்டேங்குறாரு…”

“அவரு பாட்டுக்கு ஒன்னை ஆசுபத்திரிலே உக்கார்த்தி வச்சிக்கிறுவாரு…அவருக்கென்ன…எனக்குல்ல தெரியும் நான் படுற பாடு…”

“ஏன் எனக்குத் தெரியாதா வேலைக்கும் போய்க்கிட்டு அந்த நாலோடையும் நீ கயிஷ்டப்படுவேன்னு….அதுக்காகத்தானே எப்புடி யாச்சும் கேட்டுக்கிட்டு வந்துடலாம்னு நெனைக்கிறேன். லயத்துக்குப் போயி சுடுதண்ணி வச்சிக் குளிக்கணுமுங்கன்னு கொட கேட்டுப் பாத்தேன். இங்கேயே வச்சித் தர்றேன்ங்குறாரு…”

“அதெல்லாம் நமக்குத் தெரியாது. நீ சொகுசா இங்கேயே குந்திக்கிரு… புதுசா வர்ற இதைப் பெத்துக்கிட்டு நீ அங்கே வர்றதுக்குள்ளே அங்கே இருக்குற நாலுல ரெண்டொன்னு போயிறும்….”

“அப்படி எல்லாம் சொல்லாதே…” அவள் உடலில் ஒரு புதுப் பலம். எப்படித்தான் வந்ததோ தெரியாது விருட்டென்று எழுந்து அவன் வாயைப் பொத்தினாள்…அவன் தொடர்ந்தான்.

“ராசாமணி.., ஓம் மக.., அடுப்புலேருந்து கேத்தலைத் தூக்கு றேன்னு கொதிக்கிற தண்ணியை காலுல ஊத்திக்கிட்டிருக்கு…… காலெல்லாம் கொப்பளிச்சுப்போயி… இந்தச் சிங்காரம் பய என்ன டான்னா அதுக்கு வாழைப் பட்டையை புளிஞ்சி தேய்ச்சி கோழிக் குடாப்புக்கு பின்னால குந்த வச்சிட்டு எத்து மாங்கொட்டை வெளியாடுதுப்பான்னு என்கிட்டயே சமாளிக்கிறான். சந்திரபோசு..! கால்ல போத்தலோடால பொளந்துகிட்டு…”

“அய்யோ… போதும்…வேற ஒன்னும் சொல்லாதே… நானு ஐயாகிட்ட கெஞ்சிக் கௌரி கெளம்பிடுறேன்…. நீ போயி அய்யா கிட்ட சொல்லு. இப்ப ஆபீசுலதான் இருப்பாரு…” என்றபடி தன்னுடைய உடுப்பு இத்தியாதிகளை சேகரிக்கத் தொடங்கினாள்.

மூக்கையா மெதுவாக டாக்டரய்யாவின் ஆபீஸ் அறையை நோக்கி நடக்கிறான்.

நோயாளியைப் பார்க்க வந்தவர்கள் ஆஸ்பத்திரி வராந்தையில் நடந்து கொண்டிருக்கின்றனர். இரண்டொருவர் மாத்திரமே டாக்டரய்யாவின் அறையில் நிற்கின்றனர்.

மூக்கையாவும் வந்து அய்யா முன் நின்றான். “செலாங்கையா”

“யாரு மூக்கையாவா… என்ன வேணும்…” எழுதிக் கொண்டிருந்த பேனையை புத்தகத்தின் மேல் வைத்துவிட்டு கதிரையில் சாய்ந்து அமர்ந்தபடி சாவகாசமாகக் கேட்டார் அய்யா.

மொட்டைப் பலா மரத்தின் பக்கமிருந்து தோட்டத்து லொறியின் ராட்சச முனகல் சப்தம் கேட்டது.

“கொஞ்சம் நின்னுக்கிறு மூக்கையா” என்று எழுந்தவர் அறையின் வாசலில் நின்று “வாட்லி…” என்று பலமாகக் கூப்பிட்டார்.

மருந்தறைக்குள் கைவேலையாக இருந்த பையன் ஓடி வந்து அய்யா முன் நிற்க “ஆறாவது கட்டில் நாகம்மாவை றெடி பண்ணு… பெரியாஸ்பத்திரிக்கு அனுப்ப…. லொறி வந்தாச்சு…. நீயும் லொறிலே போகணும்…” என்றவர் திரும்பி வந்து அமர்ந்தபடி “இப்பச் சொல்லு மூக்கையா…” என்றார்.

“சம்சாரத்தைக் கூட்டிக்கிட்டுப் போகணும்க… வீட்டுல சின்னஞ் சிறுகளை வச்சிகிட்டு ஒரே கரைச்சல். அய்யாவுக்கே தெரியும்! பகல் சந்திரபோசு காலைப் பொளந்துகிட்டு வந்திருந்தான் மருந்துகட்ட…”

“அதுக்காக..? இதெல்லாம் நீ சமாளிச்சுக்கிறணும். என்னாலே ஒன்னும் செய்யேலாது. வாயும் வயிறுமா இருக்கிறவளை தாயும் பிள்ளையுமா ஒங்கிட்ட சேர்க்கிறது என்வேலை. அதுக்கு ஏதாவது எடைஞ்சல் வர்றதை நான் அனுமதிக்க ஏலாது…”

கல்லைப் போன்ற முகத்திலிருந்து திடமான வார்த்தைகள் வெளி வந்தன.

“இந்தப் புள்ளையப் பெத்துகிட்டு இவ வரக் காட்டியும் அங்க இருக்கிறதுல ஒன்னு ரெண்டுக்கு என்னமாச்சும் ஆயிடுங்க. அதுதான் பயப்படுறேன்..”

கன்னத்தை உப்பி முகத்தைப் பலூன் மாதிரி வைத்துக் கொண்டிருந்த டாக்டரய்யா டக்கென்று கேட்டார். “நீ கூட்டிக்கிட்டுப் போறதுனால தாய்க்கே என்னமாச்சும் ஆயிட்டா…இப்பவே மூக்காயிக்கு உடல் ரொம்ப பாதிப்படைஞ்சு இருக்கு…ரெத்தசோகை வேறெ…”

“கடைசிக் கொழந்தை தொட்டில கெடக்குங்க….அதைப் பாத்துக் திறதுக்கே ஒரு ஆளு தனியா வேணும்… நான் வேலைக்குப் போகனும்… இல்லாட்டி பேர் இல்லே…”

தன்னுடைய கடைசி அஸ்திரத்தைப் பாவிக்கிறான் மூக்கையா. அய்யா மேசையில் இருந்த நீண்ட குச்சியை கையில் எடுத்து, கதிரையின் பின்னால் கவற்றில் தொங்கும் படத்தை குச்சியால் எட்டித் தொட்டு “இது என்ன தெரியுமா உனக்கு….” என்று கேட்கின்றார்.

சுவரில் தொங்கும் படம் ஒரு கர்பிணிப் பெண்ணின் வயிற்றின் உள்பாகம்.

ஒரு புதிய உயிர் எப்படி உண்டாகிறது என்பதை விளக்கும் படம். இடைவெளி இன்றி குழந்தை பெறுவதால் தாயக்கும் சேய்க்கும் உண்டாகும் பாதிப்புக்கள் பற்றிய குறிப்புகள் சிவப்பில் தடித்த எழுத்தில் இருந்தன.

“இரு பிள்ளைகளுக்கான கால இடைவெளி குறைந்த அளவு ஐந்து வருடங்கள் இருப்பது சிறப்பு” என்னும் வரிகளில் அய்யா நீட்டிய குச்சியின் நுனி நிற்கின்றது.

“இதெல்லாம் பத்தி நாங்க சொல்லிக்குடுக்கையில் ஒருத்தரும் கவனிக்கிறது இல்லே…” என்று இன்னும் ஏதேதோ கூறிக் கொண்டி ருந்தார் அய்யா.

இதொன்றும் மூக்கையாவின் செவியில் நுழைவதாக இல்லை. மனைவியை எப்படியாவது கூட்டிப் போய்விட வேண்டும் என்பது மட்டுமே மனதில் இருந்தது.

அய்யா தொடர்ந்தார். “இதோ பாரு, ஒன் சம்சாரத்தையும் நாகம்மாளோட சேர்த்தே பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பத்தான் நெனைச்சிருந்தேன். பெறகுதான் இன்னொரு கெழமை இங்கேயே வச்சி சோதிக்கலாம்னு முடிவு செய்திருக்கேன். நீ என்னடான்னா…?”

“இது என்னங்கய்யா மொதப் பிரசவமா? இல்லே புதுப் பிரசவமா….அவளும் நாலைப்பெத்திருக்காள்ல…அந்த நாலும் சின்னஞ் சிறிசு அதனால் தான்…”

“இந்தா பாரு மூக்கையா மடத்தனமா பேசாதே! பத்தைப் பெத்தவ பதினொன்னாவதைப் பாதையிலயா பெப்பா! அதையும் ஆஸ்பத்திரியிலதான் பெக்கணும். பிரசவம்ங்கிறது ஒரு ஜீவ மரணப் போராட்டம்… உனக்கெல்லாம் அதை வெளங்கப்படுத்த என்னால முடியாது”

அய்யாவின் குரலில் எரிச்சல் தெரிந்தது.

“ஐயா கொஞ்சம் கருணை வைக்கணும் வீட்டுல பிரச்சினை கூடங்க… அதால சமாளிக்க ஏலாதுங்க…”

குறுக்கே புகுந்தவள் மூக்காயி. “ஓஹோ…அய்யாவூட்டு தாளத்துக்கு அம்மா ஒத்தூதுறீங்களோ…சரி, சரியாரையும் கட்டாயப் படுத்தி வாட்டுல நிப்பாட்டிக்கிற என்னால் ஏலாது. இவ்வளவும் சொன்னேன். பிறகு உங்க இஸ்டம்….” என்று கூறியவர் ஒரு நீளமான ரெஜிஸ்டரை இழுத்தெடுத்தார்.

“பேஸண்ட் ரெடி சர்” என்று வாட்லி வந்து நின்றான்.

“இந்தா மூக்கையா இந்த எடத்துல கையெழுத்துப் போடணும்…நீயும் போடணும்….” என்று மூக்காயை ஏறிட்டுப் பார்த்தவர்.

“இந்தா மூக்கையா…, கடைசியா சொல்றேன்….வயித்திலே இருக்கிறதும் லயத்திலே இருக்கிறதும் ஒண்ணில்லே. அதை யாரு வேணு மின்னுாலும் பார்த்துக்கிறலாம்…இதைப் பார்க்கிறது அப்படியில்லே….” என்றவர் திடுக்கிட்டு எழுந்தார்.

பேய் பிடித்தவன் போல் அலங்கோலமாக ஓடி வந்த ஓட்டு லயத்து மாரிமுத்து அவர் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவர் காலடியில் விழுந்து கதறினான்.

ஒரு மாசத்துக்கு முன் இதே போல் அய்யாவிடம் சண்டை பிடித்தது மட்டுமல்லாமல், “நீ ஏன் என் பொண்டாட்டியை வீட்டுக்கு அனுப்ப மாட்டேங்கிறது எனக்குத் தெரியும்….” என்று போதையுடன் கத்திவிட்டுப் போனவன் இந்த மாரிமுத்து.

“அய்யா என்னை மன்னிச்சிருங்க. என் பெஞ்சாதியைக் காப்பாத்துங்க….ஏவூட்டு சின்னஞ்சிறுசுகளை அனாதையாக் கிட்டுப் போயிறுவா போல இருக்குதுங்க….” என்று மன்றாடினான் மாரி.

கைவாளியில் தண்ணீர் தூக்கி வந்தவள் கால் தடுமாறி விழுந்திருக்கிறாள். வயிற்றில் அடிப்பட்டுவிட்டது. பிரசவத்துக்கு இந்தா அந்தா என்றிருந்தவள். பிறகு கேட்பானேன். பேச்சு மூச்சு இல்லை வயிறு தனியாகக் கிடப்பதுபோல் சுருண்டு கிடந்திருக்காள். நெஞ்சு ஏறி இறங்குவதில் இருந்துதான் இன்னும் உயிர் இருக்கிறதை உணர முடிந் திருக்கிறது கருவிழிகள் மேலிமைக்குள் செருகி செருகி வருகின்றன. கூடி இருந்தவர்களும், சின்னஞ் சிறுசுகளும் குய்யோ முறையோ என்று கதற இவன் பதறிப்போய் ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்து அய்யா காலடியில் சரணடைந்துவிட்டான்.

“நான் என்னமாச்சும் தவறு செஞ்சிருந்தா அய்யா பெரிய மனசோட என்னை மன்னிசிடுங்க. இப்ப உங்களைத்தான் கடவுளா நெனச்சி ஓடி வந்திருக்கேன் என் புள்ளைகுட்டிகளை அனாதை ஆக்கிடாதிங்க…”

நெருப்பில் நிற்பவன் போல் துடித்துக் கொண்டிருந்தான் அவன். ஓடும் ஒவ்வொரு வினாடியும் அவனை விழுங்கி விழுங்கி வெளி விட்டன.

“பேஷண்ட் ரெடி சர்” என்று வந்து நின்ற வாட்லியை பார்த்து அய்யா சொன்னார் “நாகம்மா அப்படியே இருக்கட்டும் ரெடியாக்கி வை…”

லொறி டிரைவர் வந்து எட்டிப் பார்த்துத் தன்னை ஆஜர்படுத்திக் கொண்டான்.

“இதோ பாரு நீங்க ரெண்டு பேரும் இந்த ரெஜிஸ்டர்லே கை எழுத்துப் போட்டுட்டுப் போகலாம்…..பெறகு ஓடிவந்து சாமி கடவு ளேன்னு காலைப் புடிச்சாலும் பாரம் எடுக்கமாட்டேன். வாட்லி சின்னவரை வரச்சொல்லி கை எழுத்தை வாங்கச் சொல்லு” என்றவர் மாரிமுத்துவை ஏறிட்டு நோக்கினார்.

அடாவடிக்காரன்கூட ஆபத்து என்றதும் பரிதாபத்துக்குரியவனாகி விடுவதை உணர்ந்தார்.

மாரிமுத்து தலைகவிழ்ந்து நின்றான். “சரி… சரி… போய் லொறில ஏறு. நான் வந்து பாக்குறேன்…” என்று அவர் சொன்னதும் சிலிர்த்துப் போனான். இவ்வளவு நேரம் சமாளித்துவிட்ட கண்கள் பொல பொல வென்று கொட்டத் தொடங்கின தடுமாறிப் போனவன் கண்ணீர் தெரியாமல் மறைத்தபடி தழு தழுத்த குரலில் “அய்யா நல்லாருக்கணும்” என்றபடி நடந்தான்.

தான் அன்றைக்கு அய்யாவை அவமரியாதையாகப் பேசியதற்காக அவர் இன்று தன்னை ஆஸ்பத்திரியில் இருந்து விரட்டுவார் என்ற பயத்துடன்தான் வந்தான்.

டக்டரய்யா லொறியை நோக்கி நடந்தார்.

மூக்கையா மனைவியைப் பார்த்தான் ..! முட்டிக் கொண்டிருக்கும் அவள் வயிற்றைப் பார்த்தான்.! லொறியில் ஏறி உட்காரும் அய்யாவை பார்த்தான்.

நிற்க சங்கடப்பட்ட அவள் வாங்கில் உட்கார்ந்துவிட்டாள்.

மொட்டைப் பலாவைத் தாண்டி தேயிலைக்குள் ஓடி மறைந்தது தோட்டத்து லொறி.

ஜன்னல் வழியே சீறிக்கொண்டு வந்த காற்று அய்யாவின் மேசை மேல் விரிந்து கிடந்த ரெஜிஸ்டர் தாளுடன் படபடத்து மறைந்தது. புத்தகத்தை மூடி வைத்த வாட்லி , மூக்கையாவைப் பார்த்தான். பிறகு வெளியே வந்தான்.

“சின்ன டக்டரய்யாவை வரச் சொல்றேன்” என்றது பார்வை. “அதற்காகத்தான் போகிறேன்” என்றது நடை.

“சின்னவரை வரச் சொல்லாதேப்பா பெரியய்யா வரக் காட்டியும் நாங்க இருக்கோம்” என்றவன் மனைவியின் அருகே வாங்கில் உட்கார்ந்து கொண்டான்.

தூரத்தே மலைகளுக்கடியில் விழுவதும் சற்று மேலெழு வதுமாக ஜாலம் காட்டிக் கொண்டிருந்தான் கதிரவன்.

அந்த ஜாலம்…அந்த ரம்யம்…வார்த்தைகளுள் கட்டுப்படாத அதன் கம்பீரம்…! அந்தியில் விழுந்தாலும் அடுத்த நாள் அதே தேஜசுடன்….அதே ரம்யத்துடன்…அதே கம்பீரத்துடன்…ஒரு புதிய உயிராய் எழலாம் என்பதை அடையாளமாக்கிக் கொண்டிருந்தது…!

– சௌமியம் இதழ் 1984.

– தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2014, பாக்யா பதிப்பகம், ஹட்டன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *