ஒரு நாள் மட்டும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 20, 2026
பார்வையிட்டோர்: 3,120 
 
 

(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலையில் கண்விழித்ததில் இருந்து ஆச்சரியம் ஒவ்வொன்றாகத் தொடர்ந்தது கல்யாணிக்கு. மருமகள் புனிதாவின் இனிய பேச்சை முதன்முறையாக கேட்கிறாள்.

“அத்தை! தண்ணி சூடா இருக்கு. குளிச்சிட்டு வரீங்களா? இந்தாங்க புதுப்புடவை” கையிலிருந்த பார்சலை மாமியாரிடம் நீட்டினாள் புனிதா.

வழக்கமாக, சிடு சிடுப்பைக் காட்டும் புனிதாவின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.

“பொழுது விடிஞ்சி எவ்ளோ நேரந்தான் துாங்கறது? நான் என்ன கூடமாட ஒத்தா சைக்கா எழுப்பறேன். எழுந்து குளிச்சி முடிச்சா டிபன் வெப்பேன் இல்ல. இதோ பசங்க ஸ்கூல் கிளம்பியாச்சி. கூடவே உட்கார்ந்தா எல்லாருக்கும் டிபன் வெச்சி டுவேன் இல்ல. தனித்தனியாவா பந்தி விரிக்கிறது. ச்சை!”

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் அங்கலாய்க்கும் மருமகளை குறைகூறாமல் தன்னையே நொந்து கொள்வாள் கல்யாணி. பாழாய்ப்போன துாக்கம் இரவு முழுக்க வராமல் விடிந்தப் பின்தான் வந்து தொலைக்கிறது.

ஆனால் இன்று இத்துணை மென்மை யாக பேசுவதுதான் வியப்பாக இருக்கிறது கல்யாணிக்கு. அந்த வியப்பை அதிகரிக்கும் விதமாக கண்ணன் பேச்சும் கூடவே அமைந்துவிட்டது.

“அம்மா… நீ எங்கிட்ட. அடிக்கடி கேட்டுட்டே இருப்பியே? பூங்குன்றத்துக்கு எப்ப கூட்டிட்டு போகப்போறேன்னு, இன்னைக்கு நாம அங்க போகப்போறோம். அங்க யார்யார பார்க்கணும், எங்கெங்க போகணும்னு முடிவு பண்ணிக்கம்மா. இன்னிக்கு முழுக்க நாம எல்லாரும் உன்னோட கிராமத்துக்கு ஒரு விசிட் அடிக்கிறோம்” உற்சாகமாக பேசும் கண்ணனை ஆச்சரியம் மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் கல்யாணி.

பூங்குன்றம் அழைத்துச் செல்லும் ஆச்சரியத்தைவிட அவ்வளவு நீளமாக அவன் பேசியதே கல்யாணிக்கு அதிக ஆச்சரியத்தை அளித்தது. சமீபகாலமாகவே அவன் தம்மிடம் பேசுவது கூட கத்திரித்தாற்போல் உணர்ந்திருக்கிறாள்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி இன்று, யோசனை மிக வலுத்தாலும், தன் சொந்த கிராமம் செல்கிறோம் என்ற உற்சாகம் அதை மறக்கடிக்கச் செய்தது.

பூங்குன்றத்தில் காலடி வைத்ததும், கணவர் குமரவேல் நினைவு வந்து கண்களில் நீர் முட்டியது. மனிதர் உயிரோடிருந்த வரையில், திருவிழா, கல்யாணம் அது இது என்று அவ்வப்போது மனைவியை கிராமத்துக்கு அழைத்து வந்து அவளின் சந்தோஷம் கண்டு ரசிப்பார். அவரின் மறைவிற்குப் பிறகு கிட்டதட்ட 10 ஆண்டுகள் கழித்து இதோ இப்பொழுது தான் பூங்குன்றம் வருகிறாள் கல்யாணி. அன்றைய பொழுது முழுவதும் மிக மிக இனிமையாய், அளவு கடந்த. மகிழ்ச்சியாய் கழிந்தது கல்யாணிக்கு. தன் வயது மறந்தவளாக, சிறு குழந்தையின் ஆர்வத்தைப்போல் அங்குமிங்கும் சென்று, பார்ப்பவர்களையெல்லாம் அடையாளம் கண்டு பேசி மகிழ்ந்தாள் கல்யாணி.

இரவு மணி11. கம்யூட்டர் முன் அமர்ந்திருந்தான் கண்ணன். இன்றைய நிகழ்வுகளை வீடியோ எடுத்து, அதை எடிட் செய்து யூடியுப்பில் அப்லோட் செய்வதில் மும்முரமாக இருந்தான்.

“ஏங்க, எல்லாம் சரியா வந்திருக்கா?” கேட்டபடி அவன் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள் புனிதா.

“ரொம்ப அருமையா வந்திருக்கு புனிதா. நீயுந்தான் எத்தனையோ ரெசிப்பீஸ் செய்து உன் கிச்சன் சேனலுக்கு அப்லோட் செய்யற. ஆனா அதையெல்லாம் விட அம்மாவின் வீடியோ அதிக வ்யூஸும், லைக்ஸுமா சும்மா அள்ளிட்டுப் போகும் பாரு”.

“உண்மைதாங்க, நான்கூட அன்னையர் தினத்துக்கு ஏதாவது புதுவித ரெசிப்பிதான் நம்ம கிச்சன் சேனலுக்கு காட்டலாம்னு இருந்தேன். நல்லவேளை சரியான நேரத்துல ஐடியா கொடுத்தீங்க, அம்மாவை கிராமத்துக்கு கூட்டிட்டுப் போயி அவங்க உணர்வுகளை தத்ரூபமா படம் எடுத்து நம்ம சேனல்ல விட்டா அன்னையர் தினத்துக்கு மிக பொருத்தமா இருக்கும்னு சொன்னீங்க, அதை இன்னிக்கு செஞ்சும் காட்டிட்டீங்க, ரொம்ப சமத்து நீங்க” கணவனை மெச்சினாள் புனிதா.

இது ஏதும் அறியா கல்யாணி, பழைய நினைவுகளில் இன்பமாய்ச் சிக்குண்டு கண்ணயர்ந்து கிடக்கிறாள். காலையில் விரிந்த அவளது புன்னகை இன்னும் உதட்டோரம் மிச்சமிருந்தது.

– 22.9.2018, தினமலர் – பெண்கள்மலர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *