ஒரு கிளைப் பறவைகள்




(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காரியாலயத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த காசிராஜனின் விழிகள், தயார் நிலையில் இருந்த ஜாக்கி ரதை உணர்வுகளை மீறி அல்லது ஏமாற்றி, எப்படியோ ஒரு கணத்தில் அந்த நடைபாதை விளம்பரத்தை மேய்ந்து விட்டன. இது அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிதான்.
அந்தச் சிகப்பு முக்கோணத்தின் கூரிய முனைகள் என்னவாகத்தான் நெஞ்சை நெருடுகின்றன! கோணத் துக்குச் சிவப்பு வர்ணம் பூசியிருக்கிறார்கள். அளவுக்கு மீறிப் பிள்ளை குட்டிகளைப் பெற்றுக் கொண்டால் தொல்லை என்று எச்சரிக்க. ஆனால் தொல்லையும் துயரமும் அளவை மீறுபவர்களுக்கு மட்டுந்தானா? அளவையே அடைய முடியாதவர்களுக்கு?
மணவாழ்வினைப் பெற்றும், மழலை இன்பம் காணாமல் – அதாவது காண இயலாமல் – அந்த அன்புக் கனிக்காகவே வாழ்நாளெல்லாம் ஏங்கித் தனிமரமாகவே நிற்பது வேதனை அல்லவா? குடும்பப் பெண்ணொருத்தி தனால் அடையும் துயரத்தின் ஆழம், அதன் தன்மை, உரிமையுள்ளவர்களிடமிருந்து அவள் சுமக்கும் சுடு சொற்கள், ஏற்கும் அநுதாபப் பார்வைகள், பட்டங்கள் இவற்றையெல்லாம் புரிந்து கொண்டதனாலேயே-அப் படிப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனும் ஒருத்தியுமாக, அவனும் அவளும் இருப்பதனாலேயே – காசிராஜனுக்கு அந்த விளம்பரத்தின்மீது ஒருவித வெறுப்பு.
வெறுப்பு என்று சொல்வதைவிட இன்னும் உண்மையாக அல்லது பச்சையாகச் சொல்ல வேண்டுமென்றால்; அந்தச் சிகப்பு முக்கோணத்தின்மீது அவனுக்கு ஒருவிதப் பொறாமை என்றே சொல்ல வேண்டும்.
ஆம்! கவலை கொள்ளுமளவுக்குப் பெருகும் இனப் பெருக்கு தன் வரையில் தேங்கிவிட வேண்டும்? பிரச்னையாகி, நடைபாதைகளிலெல்லாம் விளம்பரமாக எச்சரிக்கி ற அளவுக்கு சுலபமாகக் கிட்டும்-அல்லது பெருகிவிட்ட ஒரு விஷயம் தங்களுக்கு மட்டும் ஏன் அரி திலும் அரிதாகி விட வேண்டும்? படைக்கத் தெரிந்தவன், அதைப் பாரபட்சமின்றிப் பகிர்ந்து கொடுக்காத குறைக்கு அல்லது குற்றத்துக்கு யாரைச் சாடுவது? இறைவனின் இந்த ஓரவஞ்சனைக்கு-மனிதர்கள் இங்கு ஒரு மூலையில் வீங்கி வெடிப்பதும், ஒரு மூலையில் ஏங்கிச் சாவதுமா? – அவன் குமுறினான்.
அன்று ஏனோ நேராக வீட்டுக்குப் போகக் காசிராஜ னுக்கு மனம் இல்லை. பெரிய தெருவிலிருந்து. மடத்துத் தெரு வழியாக வந்தவன், வலப் புறம் பச்சையப்பன் தெருவிலுள்ள தன் வீட்டுப் பக்கம் திரும்பாமல், நேராகக் காவிரியை நோக்கி நடந்தான்.
நதியில் நீர் இல்லை. அகன்ற மணற்பரப்பின்மீது, திட்டுத் திட்டாகக் குழுமியிருந்த மனிதக் கூட்டம், அவர் களைச் சுற்றிலும் பரவலாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியர் இவர்களைக் கடந்து, சற்று ஒதுங்கித் தனியானதோர் இடத்தில் சென்று உட்கார்ந்து கொண் டான் காசிராஜன்
மனைவி சாந்தா ஊரில் இல்லை. ஊருக்குச் சென்ற வளிடமிருந்து-அல்ல- ஊருக்குப் பலவந்தமாக அனுப்பப்பட்டவனிடமிருந்து – எவ்விதத் தகவலும் இல்லை. என்ன பதிலுடன், என்று இங்கு புறப்பட்டு வருகிறாளோ?
‘சரக், சரக்’ என்று ஆற்று மண்ணில் நடந்து வந்ததில், ‘ஸாக்ஸையும் தாண்டி உள்ளே புகுந்து உறுத்திக் கொண்டிருக்கும் மணலைக் களையப் பூட்ஸைக் கழற்றிக் கொண்டிருந்தவன், “ஏண்டா ராஜா, நாலு நாழியாக் கூப்பிடறேனே, காதிலே விழல்லியா?” என்ற பழக்கமான குரலைக் கேட்டுத் திரும்பினான் காசிராஜன். அங்கு யாரும் இல்லை; ஆனால்…
காலையில். பூட்ஸைக் காலில் திணித்துக் கொண்டு அலுவலகத்துக்குப் புறப்படும்போது, அம்மா அருகில் வந்து இப்படி அழைத்ததும் அதைத் தொடர்ந்து ஏற் பட்ட வாக்குவாதங்களும் அவன் நினைவில் மோதிச் சிதறின,
“ஏண்டா ராஜா, இப்படிப் பதிலே பேசமாட்டேங்கறே? அந்தப் பெண் ஊரிலேருந்து வர்றதுக்குள்ளே நாம இந்த இடத்தைப் போய்ப் பார்த்துட்டு வந்துடலா மில்லியா?”
“….”
“ரொம்ப ஏழைப்பட்ட இடமா இருந்தாலும், கொப்பும் கிளையுமா, நிறையப் பெருகி வர்ற சம்சாரியான குடும்பம். பணமும் காசும் நமக்கு எதுக்கு: கல்யாணி ரொம்ப நல்ல பொண்ணு”.
“அம்மா!”
அதட்டியபடி, காசிராஜன் தன் தாயை முறைத்தான். அந்தக் குரலின், பார்வையின் வேகத்தை ஜீரணிக்க, பதிலுக்கு இரைந்தால்தான் முடியும் போலிருந்தது.
“பின்ன நீ என்னதாண்டா நெனைச்சிண்டிருக்கே? இப்படி எதுக்குமே வாயைத் திறந்து பதில் சொல்லாமே இருந்தா எப்படி?”
“சொல்லவா? முதல்லே, இந்த எண்ணம் உனக்கே நியாயமா இருக்கா அம்மா? சாந்தா உன் வயிற்றிலே பிறந்திருந்தா இந்த முடிவை நீயே ஒப்புக் கொள்ளுவியா?” காசிராஜனின் வாயினின்றும் சொற்கள் குமுறிக் கொண்டு வந்தன. ஆனால், அதை அவன் தாய் லட்சியமே செய்யவில்லை.
“யார் வயிற்றில் பிறந்தா என்னடா? நியாயம் எல்லாருக்கும் பொதுதானே? என் ஒரே மகன். உனக்கு ஒண்ணு பிறந்து கண்ணாரப் பார்க்கணும்னு இந்தக் கிழ ஜீவன் ஆசைப்படறதிலே என்னடா தப்பு?”
“உன் ஆசையை நான் குறை சொல்லல்லே அம்மா; ஆனால் அதுக்காகச் சாந்தாவுக்குத் துரோகம் செய்ய நினைக்கறியே! அது பாவம் இல்லையா? அந்தக் காரியத்துக்கு என் மனசு இடங் கொடுக்கல்லேன்னுதான் சொல்லறேன்.”
“இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் மனசைக் கொஞ்சம் கல்லாத்தாண்டா ஆக்கிக்கணும். ஒண்ணில்லே, இரண்டில்லே, பத்து வருஷமா நானும் பொறுமையாக இருக்கல்லியா?”
“அதுக்காக?”
“என் கண்ணை மூடறதுக்குள்ளே ஒரு பேரனையோ பேத்தியையோ எடுத்துக் கொஞ்சணும்ங்கற என்னோட ஆசை உனக்கு நியாயமானதாகப் படல்லியா? பிரளயம் மாதிரி, உள்ளே அடிச்சிண்டு மோதற அந்த ஆசைக்கு அணைபோட முடியல்லே. மேலும் இவ்வளவு காலமா இல்லாமெ, இனிமேலா இவளுக்குப் பிறக்கப் போறது?”
“அதைப்பற்றி முடிவுகட்ட நாம் யாரு அம்மா? பட்டணத்திலே உங்க அப்பா அம்மாகிட்டே போய், பெரிய டாக்டராப் பார்த்து உடம்பைக் காட்டிண்டு வான்னு நீதானேம்மா அவளை ஊருக்கு அனுப்பி வைச்சே? இப்போ அந்த முடிவு தெரிஞ்சு, அவ திரும்பி வர்றதுக்குள்ளே இப்படி ஒரு கல்யாணக் காரியத்துக்கு என்னம்மா அவசரம்?”
“முடிவாவது, முதலாவது! நீ சரியான மக்குடா ராஜா. அந்த மலட்டைப் பத்தி இனிமேத்தானா முடிவு தெரிஞ்சுக்கணும்? சும்மா, இந்தக் காரணத்துக்காகத் தான், இங்கே இருக்க வேண்டாம்னு அவளை அப்படிச் சொல்லி ஊருக்கு அனுப்பி வைச்சேன்.”
“அம்மா!”
காசிராஜன் வாய்விட்டே அலறிவிட்டான். எவ்வளவு பெரிய சூழ்ச்சி! தன் மனைவியின் சம்மதத்தைப் பெறாமல் மறுமணம் செய்துகொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்ளாத தாயின் அறியாமையை எண்ணி வருந்து வதைவிட, பெண்ணுக்குப் பெண்ணே முன்னின்று இழைக்கக்கூடிய கொடுமையை எண்ணிப் பார்த்தபோது இதயமே நடுங்குவது போலிருந்தது. தன் தாயின் அவா எவ்வளவு நியாயமாக இருந்தாலும், பாவம்! சாந்தாவை விட்டு வேறொரு பெண்ணுடன் வாழ்வதா?
பதிலே பேசாமல், கையில் பையுடன் வெளியே புறப்பட்ட மகனைத் தாய் தடுத்து நிறுத்தினாள்.
“எனக்குப் பதில் சொல்லிட்டுப் போடா. நான் அவாளுக்கு வாக்குக் கொடுத்திருக்கேன்.”
“என்னாலே இப்போ ஒரு பதிலும் சொல்ல முடியா தம்மா. எல்லாம் சாந்தா. வந்தபிறகு பார்த்துக்கலாம்.”
பிள்ளையின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அம்மாவுக்குத் துக்கம் தாளவில்லை.
“லங்கிணி! சரியான சொக்குப்பொடி போட்டுத்தான் உன்னை மயக்கி வெச்சிருக்கா இல்லேன்னா, உன் நல்ல துக்குச் சொல்லற பெத்த தாயாரையே இப்படி எடுத் தெறிஞ்சு பேசுவியா? ஐயோ! எப்படி இருந்த பிள்ளை, எப்படி மாறிப் போயிட்டான்! பாவி, அவ நல்லா இருப் பாளா?” தாயின் ஓலம் அவலமாக ஒலித்தது.
“அம்மா, உன்னை இப்ப நான் என்ன சொல்லிப்பிட் டேன்? எதுக்காக இப்பிடி அவளைச் சபிக்கிறே?”
“இன்னும் நீ என்னடா சொல்லணும்? சொல்ல வேண்டியதை எல்லாந்தான் உன் மனசைத் திறந்து கொட்டிப்பிட்டியே! ஆனா, நான் சொல்லறது இப்போ ஒண்ணும் நல்லதா உனக்கு விளங்காதுடா. உடம்பிலே இளரத்தம் ஓடற வரைக்கும் புரியவும் புரியாது. நாளைக்குத் தலையைக் காலெ வலிக்கறபோது, தள்ளாத காலத்திலே தலைமாட்டிலே நம்ம பிள்ளைன்னு ஒருத்தன் இல்லையேன்னு தோணும் நம்ம குடும்பம் இப்படி நூல் அறுந்த காத்தாடியாப் போயிடுச்சேன்னு அப்போ புரியும்டா ராஜா, அப்பப் புரியும்.”
சோடா புட்டியைத் திறந்ததும், குபீரென்று வழியும் நுரையைப்போல அந்தத் தாயின் அடக்கமுடியாத துயரம்; இந்த முயற்சியுடன் எழும்பி வடிந்துவிட்டது. வழக்கத்திற்கு மாறான இச்செயலால் அவள்களைப் படைந்துவிட்டாள்.
காசிராஜனால் அதற்கு மேல் அந்த இடத்தில் நிற்க முடியவில்லை. விடுவிடென்று இறங்கி வெளியே நடந்தான்.
வழியெல்லாம் ஒரே சிந்தனை. அலுவலகத்தில் அவ னுக்கு அன்று வேலையே ஓடவில்லை. அம்மா கூறிய
வம்சாபிவிருத்தி உபதேசம், குடும்பப் பெருக்கின் அவசியம், அவன் உள்ளத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. ஆனால் பாவம்! அம்மாவையும் ஒரேயடியாகக் குறைகூற அவன் மனம் ஒப்பவில்லை.
சாந்தாவை எவ்வளவோ ஆசையோடு அவளே முயன்றுதானே அவனுக்கு மணம் முடித்து வைத்தாள்? ஆரம்பத்தில் இரண்டு மூன்று வருஷங்கள் கவலையே இல்லாமல் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் ஓடி விட்டாலும், அதன்பிறகு சட்டென்று அம்மா விழித்துக் கொள்ளத் தவறவில்லை.
மருமகளின் வளைகாப்பையும் பூச்சூட்டலையும் அம்மா எவ்வளவுக்கு எவ்வளவு ஆவலாகவும் அவசரமாக வும் எதிர்பார்த்தாளோ; அத்தனைக்கு அத்தனை அது கானல்நீரைப் போலக் கண்ணாமூச்சி காட்டி அவளை ஏமாற்றிக் கொண்டே சென்றது.
இதற்காக, அம்மாவின் சொற்படி, சாந்தா தன்னோடு சேர்ந்து சுற்றாத கோயில் உண்டா? முழுகாத புண்ணிய தீர்த்தங்கள், வேண்டாத தெய்வங்கள் உண்டா? அத்தனையும் ஏமாற்றத்தில் முடிந்த பிறகுதானே அம்மாவின் அடக்க முடியாத ஆசை இப்படி ஆத்திரமாக உருப் பெற்று விட்டது? ஒருவேளை இந்த முடிவு அம்மாவுக்கு நியாயமானதாகத் தோன்றலாம்; ஆனால் அவளைப் பொறுத்தவரையில்?
ஐந்தரை மணிக்கு மேலிருக்கும், எண்ணெய் இல்லாத விளக்கு மாதிரி, பகற்பொழுது விடுவிடுவென்று தேய்ந்து கொண்டே வந்து எங்கும் இருள் பரவத் தொடங்கி விட்டது சுற்று முற்றும் சூழ்ந்திருந்த கூட்டமோ அரவமோ சிறிதும் இல்லை. கொய்யாப் பழம்போல், கரையில் முனிசிபல் விளக்குகள் கம்பத்தில் மினுக்கிக் கொண்டிருந்தன. வழியெல்லாம், வளர்ந்து கொண்டே போவது போலிருந்தது.
வீட்டுக்குள் அடி எடுத்து வைத்த காசிராஜனை உள்ளே ஒலித்துக் கொண்டிருந்த விசும்பலும், அம்மாவின் அதட்டல் குரலும் அங்கேயே தடுத்து நிறுத்தி விட்டன.
‘இவள் எப்போது வந்தாள்?’ காசிராஜனுக்குத் ‘திக்’ கென்றது.
சாந்தாவின் விசும்பலை லட்சியம் பண்ணாமல் அம்மா கடுமையான குரலில் கேட்டுக் கொண்டிருந்தாள்: “அப்படி இருக்கிறபோது, இங்கே ஏண்டி புறப்பட்டு வந்தே? வைத்தியம் பார்த்துண்டு உங்கம்மா வீட்டிலேயே இருந்து தொலைக்க வேண்டியதுதானே?”
சாந்தா இதற்கும் பதில் ஏதும் கூறவில்லை. அவளு டைய பதிலை அம்மா எதிர்பார்க்கமில்லை போலும்! “டாக்டர் உடம்பைப் பார்த்துட்டுக் கடைசியா என்ன தாண்டி சொன்னார்? குழந்தை பிறக்குமா, இல்லே எப்போதுமே பிறக்காதா?”
இந்தக் கேள்விக்கும் சாந்தாவிடமிருந்து அழுகையே பதிலாக இருக்கவே, முடிவு தெரிந்து போன அம்மாவின் ஆத்திரம் எல்லை மீறியது.
“கேட்டால் பதில் சொல்லித் தொலையேன்! அழுகை என்ன வேண்டிக் கிடக்கு அழுகை? போயும் போயும் உன்னைத்தேடி, ராஜா மாதிரி என் பிள்ளைக்குக் கட்டி வெச்சேன் பாரு; என் தலையெழுத்தைச் சொல்ல ணும்” என்று தலையில் ‘மடார் மடார்’ என்று அடித்துக் கொள்ளவும். காசிராஜன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது,
அவன் வந்தவுடன், வீடு சகஜ நிலையில் இருப்பது போல், பொய்யான தோற்றத்தில் காட்சியளித்துக் கொண்டிருந்தது. காசிராஜன் எதையும் அறிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.
அன்றிரவு, பிள்ளைக்குச் சாதம் போட அம்மா சாந்தாவை அநுமதிக்கவில்லை. சாப்பாடு போடும் போது சாந்தா கூறியது முழுவதையும் அம்மா கூறி, ‘‘அவளுக்குக் குழந்தையே பிறக்காதாம்டா. டாக்டரே சொல்லிவிட்டார். இனிமேலாவது நாம் அந்தக் கல்யாணி யைப்பற்றி யோசிக்கலாமாடா ராஜா?” என்று பரிவோடு கேட்டாள்.
“அது நிச்சயம் நடவாதம்மா.” காசிராஜன் ஒரே வார்த்தையில் கூறிவிட்டுப் பாதிச் சாப்பாட்டிலேயே எழுந்து கைகழுவச் சென்றுவிட்டான். அம்மா அவனை ஆச்சரியத்திடனும் அதிர்ச்சியுடனும் பார்த்துக்கொண் டிருந்தாள். அதை லட்சியம் செய்யாதவன் போல் அவன் தன் அறைக்குச் சென்று விட்டான்.
சாந்தாவின் வைத்தியப் பரிசோதனை சாதகமாக இல்லை என்பதை, அவன் வீட்டுக்குள் நுழைந்தபோது
கேட்க நேர்ந்த சம்பாஷணையிலிருந்தே புரிந்துகொண் டான். மனைவியைப் பற்றி இரக்கமும், அதே சமயத்தில் ஒருவித ஆத்மத் திருப்தியும் மன அமைதியும் அப்போது அவன் உள்ளத்தில் நிலவியிருந்தன.
அம்மா சாந்தாவைச் சாப்பிடக் கூப்பிட்டாள். சாந்தா தனக்குப் பசியில்லை என்று கூறிவிட்டாள். அதன் பிறகு அம்மா அவளை வருந்தி அழைக்கவோ வற்புறுத்தவோ இல்லை. அடுக்களைக் காரியங்களை முடித்துக்கொண்டு மாடிக்குப் படுக்கச் சென்று விட்டாள்.
காசிராஜன் மனம் அமைதியிழந்து தவித்துக்கொண்டிருந்தது. சாந்தாவைத் தன் அறைக்கு அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினான்.
“உன்னை ரொம்பப் புத்திசாலி என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இதற்காகவா நீ இப்படி வருந்துவது? எப்படி இருந்தாலும் எனக்கு நீதான், உனக்கு நான்தான். உன்னிடம் எனக்குள்ள அன்பை யாராலும் எந்தக் காரணங்களினாலும் குறைத்துவிடவோ மாற்றிவிடவோ முடியாது. என்மீது உனக்கு நம்பிக்கை இல்லையா சாந்தா?” அவன் மிகவும் உருக்கமாகக் கூறினான்.
ஆனால் அவள் மனம் அவன் கூறிய சமாதானங் களையும் மீறித் துயருறுவதைக் காணக் காசிராஜனுக்குத் தாளவில்லை. பெற்ற தாயிடம் கூடக் கூறத் துணிவில்லாத அதை-கொண்ட மனைவியிடமே கூறவேண்டிய நிலை எவ்வளவு துர்பாக்கியமானது?-
“சாந்தா, நான் இப்போது கூறப்போகும் செய்தியைக் கேட்டால், உனக்கு மட்டும் ஏதோ கொடுமை நிகழ்ந்து விட்டதாக எண்ணி இப்படி நீ வருந்தமாட்டாய். நீ ஊருக்குப் போனதும் நானும் இங்கே என் உடம்பைக் காட்டினேன். என்னைப் பரிசோதித்த டாக்டர் உன்னைப் போலவே எனக்கும் குழந்தை பெறும் சக்தி இல்லை என்று கூறி எழுதிக் கொடுத்துவிட்டார். அப்போது அதைக் கேட்டதும் நான் துடித்த துடிப்பு!
“ஆனால் அந்தத் துடிப்பையும் மீறி, என் உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில் வக்கிரமான மகிழ்ச்சி ஊற்றெடுத் தது, ஒருவேளை ஊரிலிருந்து வருகிற நீயும் என்னைப் போலவே விபரீத முடிவுடன் வந்துவிட்டால், அப்போது அதற்காக உன்னை அம்மா. கொடுமைப்படுத்தாமல் தடுக்கவாவது தெய்வம் எனக்கு உதவியதே. நாம் இருவரும் ஒருகிளைப் பறவைகள் என்ற உண்மையைக் கூறிவிட்டால். பிறகு என்னை விட்டு உன்னை மட்டும் அம்மாவால் கோபிக்கவோ வெறுக்கவோ முடியாது அல்லவா?” என்ற மகிழ்ச்சிதான் அது. வா, சாந்தா, மேஜையில் வைத்திருக்கும் என் ரிசல்ட்டைக் காட்டுகிறேன்” என்று காசிராஜன் அவளது கரத்தைப் பற்றி இழுத்தபோது—
“மேஜையில் இருக்கும் உங்களது மெடிகல் ரிபோர்ட்டை நான் ஊரிலிருந்து வந்ததும் எதேச்சையாக பார்த்துவிட்டேன் தக்க சமயத்தில் அதை எனக்குக் காட்டிய கடவுளுக்கு நான் எவ்வளவு நன்றி செலுத்தி னாலும் தகும். அதைப் பார்த்து உங்கள் விஷயத்தைத் தெரிந்து கொண்டதனால்தானே, நான் என்னைப் பற்றின உண்மையை அம்மாவிடம் சொல்லாமல் மறைத்து விட்டேன்?’ என்று சாந்தா கூறிக்கொண்டு வந்த போதே, “என்ன; உன்னைப் பற்றின உண்மையா?’ என்று காசிராஜன் திடுக்கிட்டுப்போய் அலறினான்.
அவனுடைய அந்த அதிர்ச்சி தணியுமுன் சாந்தா பெட்டியிலிருந்த தன் மெடிகல் ரிபோர்ட்டைக் கொண்டு வந்து கணவனிடம் நீட்டினாள்.
‘சாந்தாவின் உடலில் எவ்விதக் கோளாறும் இல்லை’ என்று பிரபல லேடி டாக்டர் ஒருவர் எழுதிக் கையெழுத்திட்டு, அந்த டாக்டர் பணிபுரியும் அரசாங்க ஆஸ்பத்திரியின் முத்திரையும் அதில் குத்தியிருந்தது.
காசிராஜனுக்குக் கண்ணையே மறைப்பது போலிருந்தது வாய் பேசும் சக்தியை இழந்துவிட்டது. பலதரப் பட்ட எண்ணங்களினாலும், உணர்ச்சிகளின் தாக்குதல் களினாலும் குழம்பிப் போயிருந்த கணவன் முன் சாந்தா தன் வலக்கரத்தை நீட்டியபடி மிகவும் நிதானமாகக் கூறினாள்.
“என்னுடைய இந்த ரிஸல்டைப் பற்றி எனக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. அது அவைக்கு உதவாத மகிழ்ச்சி. அதனால் எவ்விதப் பயனும் இல்லை. ஆனால் உங்களைப் பற்றின இந்த உண்மையை நீங்கள் எந்தச் ந்தர்ப்பத்திலும் அம்மாவிடம் சொல்லமாட்டேன் என்று நீங்கள் எனக்குச் சத்தியம் செய்துதர வேண்டும். என்மீது உங்களுக்கு இருக்கும் அன்பு காரணமாக உங்களிடம் இந்த உதவியை யாசிக்கிறேன்.”
“என்ன சத்தியமா?” காசிராஜனது நாக்குக் குழறியது.
“ஆமாம், நம்முடைய இந்த விஷயம் எந்தக் காலத், திலும் அம்மாவின் செவிக்கு எட்டவே கூடாது.
“நிச்சயம் முடியாது. அப்படி ஒரு பொய்யான சத்தியத்துக்கு நான் உடன்படவே மாட்டேன். என் பொருட்டு நீ வாங்குகிற ஏச்சையும் பேச்சையும் பார்த்துக் கொண்டிருக்க என்னால் ஆகாது. என் குறையையும் உன் குறையின்மையையும் அம்மாவுக்குத் தெரியப்படுத்தினால் தான் என் மனதுக்கு ஆறுதல் கிட்டும். அப்போதுதான் சாந்தா, என் அம்மா உன்னை இந்த வீட்டில் அமைதி யோடு இருக்க விடுவாள்” என்று காசிராஜன் பேசிக் கொண்டிருந்த போதே சாந்தா அவன் பாதங்களைப் பற்றிக்கொண்டு கதறியே விட்டாள்,
“தயவு செய்து எனக்கு நன்மை செய்வதாக எண்ணிக் கொண்டு அந்தக் காரியத்தை மட்டும் செய்துவிடாதீர்கள்• அம்மாவிடம் பேச்சு வாங்குவது என்பது ஆதியிலிருந்தே எனக்குப் பழக்கமான ஒன்று. என்னை ‘மலடு’ என்று அம்மாவோ அல்லது ஊரே பழித்தாலும் எனக்கு இனி வருத்தம் ஏற்படாது. முன்னைவிடத் தெம்பாக, ஆத்மத் திருப்தியோடு அந்தப் பழிச்சொல்லை என்னால் தாங்கிக் கொள்ள முடியும்.
முடியும். ஆனால் அதே சமயம், உங்களைப் பற்றி அப்படி யாராவது பேசினால், இல்லை-அந்த எண்ணத்தோடு பார்த்தால்கூட அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.
“அது மட்டும் அல்ல, உங்களைப்பற்றின இந்த உண்மை தெரிந்தால், அந்த அதிர்ச்சியே போதும், அது அம்மாவுக்கு எமனாகவே முடியும். ஆனால்-என்றைக்கா வது ஒருநாள் தன் பிள்ளையின் மனம் மாறும்.இன்று இந்த கல்யாணி இல்லாவிட்டாலும், சில காலம் கழித்தேனும், வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்ள சம்மதிப்பான்; தனக்கு அவள் மூலம் ஒரு பேரனோ பேத்தியோ பிறக்கும் என்ற நம்பிக்கையைக்கூட நீங்கள் வேரோடு அழித்து விடாதீர்கள். தயவு செய்து உங்களிடம் நான் வேண்டிக் கொள்வதெல்லாம் அது ஒன்றுதான்” என்று அளவுக்கு மீறி உணர்ச்சி வசப்பட்டுப் பேசியதில் அவள் குரல் கரகரத்தது.
காசிராஜன் அதிர்ந்தே போனான். சாந்தாவின் பேச்சில், இந்த மண்ணின் மாண்பைக் கண்டான். அவனது இதயத்தினின்றும் பிரவாகமாகப் பெருக்கத் தோடும் உணர்ச்சிகளுக்கு அவனால் உருவம் கொடுத்து விமரிசிக்க முடியவில்லை. “சாந்தா, நீ எனக்கு மனைவி சாந்தா மட்டுமல்ல” என்ற வார்த்தைகளை முடிக்கு. முன்பு அவன் விழிகள் கலங்கிவிட்டது. ஆனால் அந்த வார்த்தைகளை மேலே பேச விடாமல், அவள் அவனது வாயைப் பொத்தினாள்.
“நானும் உங்களை என் கணவராக மட்டும் காண வில்லை” என்று கூறியபடி ஒரு தாய்க்கு உரிய பாசத் துடன் அவள் அவன் தலையை வருடிக்கொண்டிருந்த போது, ஒரு பச்சிளங் குழந்தையைப் போல காசிராஜன் அவள் மார்பில் முகத்தைப் பதித்துக்கொண்டிருந்தான்
விழிகளை மஸ்லின் துணியால் மறைப்பதுபோல், கண்ணீர் பார்வைக்குத் திரைபோட்டுத் தடுத்துக்கொண் டிருந்தது. விடிவிளக்கின் அந்த மங்கிய நீல ஒளியில் முழுமதியைப் போலப் பிரகாசித்துக்கொண்டிருந்த சாந்தாவின் முகம், அதில்படிந்திருக்கும் அன்பு, பாசம்- மகத்தான தியாகத்தின் ஒளி- அவன் கண்களைக் கூசச் செய்தன.
– கலைமகள்.
– மலருக்கு மது ஊட்டிய வண்டு, முதற் பதிப்பு: டிசம்பர் 1992, காயத்திரி பப்ளிகேஷன், சென்னை.