ஏழு கும்பகருணர்கள்




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்காலத்திலே ரோம் நகரத்தில் செங்கோல் செலுத்திய அரசர்களில் ஒருவனுக்கு டீஸியஸ் என்று பெயர். அவனுடைய அரசாட்சியின் காலத்தில் கிறித்து மதாபிமானிகள் பலர் கொலை யுண்டார்கள். அம் மதப் பற்றுடையவர்களுக் குள்ளே மேன்மக்கள் வரிசையைச் சேர்ந்த ஏழு இளைஞர்கள் எபேசு நகரத்தில் இருந்தார்கள். மதத்தின் பொருட்டுத் தங்கள் குலத்தவர்களில் பலர் கொலைசெய்யப்படுகிறதைக் கண்டு அந்த ஏழு இளைஞர்களும் பக்கத்தில் இருந்த ஒரு காட் டிற்குப்போய் அங்கிருந்த மலைக்குகை ஒன்றிற் புகுந்து ஒளிந்துகொண்டார்கள். மேற்படி அரசன் அதை அறிந்தான். அவர்கள் வெளியே வரமுடியாதபடி அந்தக் குகைவாசலை அடைத்து விடச்செய்தான்.
மேற்படி ஏழு இளைஞர்களும் குகைக்குள்ளே படுத்து மெய்ம்மறந்தவர்களாக உறங்கிக்கொண் டிருந்தார்கள். இவ்வாறு நூற்றெண்பத்தேழு ஆண்டுகள் உறங்கியபிறகு இரண்டாவது தீயோ வோஸியஸ் அரசன் செங்கோல் செலுத்திய நாளை யிலே தற்செயலாய் இயல்பாகவே விழித்து எழுந்திருந்தார்கள்.
இவ்வாறு நெடுங்காலம் உறங்கியபடியால் அவர்களுக்குப் பொறுக்கமுடியாத பசி உண்டாகி யது. குகை வாசலைத் திறந்துகொண்டு வெளியே வந்து பார்த்தார்கள். பிறகு தங்களில் ஒருவனை நகரத்திற்கு அனுப்பி உணவுப்பொருள்கள் வாங் கிக்கொண்டு வரச்சொன்னார்கள். அவன் நகரத் திற்குள் நுழைந்து தெருவழியே சென்றான். நகரம் எங்கும் இடத்துக்கிடம் சிலுவைகள் நட்டிருப் பதைக்கண்டு வியப்படைந்தான். பிறகு ஒரு ரொட்டிக்கடைக்குச் சென்றான். ரொட்டிக்கடைக் காரன் இந்த இளைஞன் அணிந்திருந்த பழைய காலத்து உடையையும் பழைய போக்கான மொழியில் அவன் பேசிய பேச்சையுங்கண்டு வியப்படைந்தான். அந்த இளைஞ னை நன்றாக உற்றுப்பார்த்தான். இளைஞன் தான் வாங்கிய ரொட்டிக்குப் பழங்காலத்து நாணயம் ஒன்றைத் தன் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தான். மேற்படி ரொட்டிக் கடைக்காரன் இளைஞனுடைய நடைஉடையையும் அவன் மொழிகளையும் பார்த்து அவனைப் பட்டிக்காட்டான் என்றும் எங்கேயோ புதையலெடுத்து இந்தப் பழைய நாணயங்களைக் கொண்டு வந்திருக்கிறான்என்றும் முடிவு செய்தான். அந்த இளைஞனை அழைத்துக் கொண்டு போய் நகரத்தலைவன் முன்பு நிறுத்தினான்.
நகரத் தலைவன் இளைஞனைப்பார்த்து, இந்தப் பழைய நாணயம் உனக்கு எங்கே அகப் பட்டது? நீ புதையல் எடுத்தாயா?” என்று உசா வினான். இளைஞன் தன் வரலாற்றையும் தன் கூட் டாளிகளைப் பற்றியும் விளக்கமாகச் சொன்னான். நகரத் தலைவன் இதனைக் கேட்டுப் பெருவியப் படைந்தான். அவனை அரசனிடத்திற்கு அழைத் துக் கொண்டு போய் நிறுத்தினான். அரசன் இளை ஞன் மூலமாக எல்லாச் செய்திகளையும் உணர்ந் தான். தன்னுடைய அமைச்சன் குரு முதலான எல்லோரையும் அழைத்துக்கொண்டு குகைக்குச் சென்றான். குகையில் மற்றைய இளைஞர்களையும் எல்லோரும் பார்த்தார்கள். நூற்றெண்பத்தேழு ஆண்டுகளாகியும் அவர்களுடைய இளமைக் குரிய உடற்கட்டுக் குன்றாதிருப்பதைப் பார்த்து எல்லோரும் வியப்படைந்தார்கள்.
அரசன் அந்த ஏழு இளைஞர்களையும் தன் னோடு நகரத்திற்கு அழைத்துக்கொண்டுவந்தான். ஊர் நடுவிலேயிருந்த பெரிய மைதானம் ஒன்றில் பொதுக்கூட்டம் ஒன்று கூடியது. நகர மக்கள் எல்லோரும் அங்கு வந்து கூடினார்கள். இளைஞர் கள் தங்களுடைய வரலாறுகளை முதலில் இருந்து முடிவுவரை விளக்கமாகச் சொன்னார்கள். பிறகு நகரமக்கள் அனைவருக்கும் வாழ்த்துரை கூறினார் கள். நின்ற இடத்திலேயே விழுந்து இறந்து போனார்கள். ஆண்டு தோறும் சூன் திங்கள் இரு பத்தேழாம் நாள் (அந்த இளைஞர்கள் இறந்த நாள்) அவர்களுடைய நினைவைக் கொண்டாடும் விழா நடந்து வருகிறது.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.