ஏனோ! அம்மா என் கவிதைகளை இரசிப்பதேயில்லை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 91 
 
 

வேலை முடிந்து வீடுதிரும்பிய கதிரவனை வழியனுப்ப மனமின்றி விழி நீர் சொரிந்தன நான்கு மணி மேகம். புழுக்கத்தை அதிகரித்தாலும் புழுதியில் பட்ட ஒரு துளி, புது வாசத்தோடு புத்துணர்வையும் தர, எழுத்துக்களை காதலிப்பவன் எவராகிலும் எழுதுகோலெடுக்காமல் இருந்திருக்கமாட்டார். எழுத்துக்களை காதலிப்பதில் மிக இளையவள் எனினும் கூட, எனக்குள்ளேயும் சில எண்ணச் சிதறல்கள். எனக்கென வாய்த்த எண்ணச்சிதறல்களும், எழுது கோலுடனும், எதையோ எழுத முற்பட, காற்றில் மிதந்து வந்த காப்பியின் மணம் நாசி துளைத்தது.

“ஆ அம்மா வந்தாச்சா ”

விளம்பரக் காட்சி ஒன்று மின்னிப்போக, ஆம் அம்மாதான்! ஆறிப்போயிடும் குடிச்சிட்டு எழுது என்ற அக்கறையான வார்த்தை “சர்க்கரையிட்ட காபியினும் சற்று அதிகமாய் இனிக்கிறதே” என கவிதையே எழுத தோன்ற, ஆவி பறக்கும் காப்பி, ஆவலை அதிகப்படுத்த, என்னை விட வேகமாய் பறந்தன, என் கையிலிருந்த ஏடுகள்.

‘அச்சச்சோ’ பறக்குதே என அம்மா அத்தனையும் எடுத்துக் கொண்டே, நான் அடுக்கி வைக்கிறேன் நீ குடி என அத்தனையும் வாசித்துப் பார்த்தாள். அழகா எழுதியிருக்கியே, என் தங்கமே! அத்தனை வரியும் அற்புதமென ஆசையாய் அவள் கொஞ்ச, குளிர்ந்து போனது என் ஆவி மட்டுமல்ல, ஆவி பறந்த காப்பியும் தான். ஆறிப்போச்சா? குடு சுடவைச்சுத்தர்றேன், என அடுக்களை சென்றவளை ஆசையோடு நான் பார்க்க, அவள் அடுக்கி வைத்த அத்தனை ஏடுகளும்

“இதைவிடவா சிறந்ததொரு கவிதையை எழுதிவிடபோகிறாய்?”

என்பது போல் ஏளனமாய் சிரிக்க, காதிதப் பிணைப்பி கொண்டு அதன் காதை திருகி, அம்மா மீதே பார்வையை செலுத்தினேன்.

“பாரதி உன்சாயலை பாட்டாக மாற்றுவான் தேவதை நீதானென வாயார போற்றுவான்…”

என மீண்டும், மீண்டும் ஒலித்தது. எங்கிருந்தோ ஒரு குரல்,

“எவ்ளோ நேரம் அலாரம் அடிக்குது எழுந்திருக்குறியா இல்லையா? என்று அதட்ட, அச்சோ கனவா! என்ற அசட்டுச்சிரிப்புடன் கண் விழித்தேன். கனவு மறைந்து கவலை பிறந்தது, “ஏனோ அம்மா என் கவிதைகளை இரசிப்பதேயில்லை”. அட! ஒரு கவிதைக்கான தலைப்பு கிடைத்து விட்டது; என அம்மாவை கிண்டல் செய்து கொண்டே, எதை எதையோ எழுதத் துடித்துக் கொண்டிருந்த, என் அன்புத்தோழியின் வாய்பூட்டுச் சட்டத்தைத் தளர்த்தினேன்.

விடுதலைக் கிடைத்த களிப்பில் காகிதத்தை ஆசையாய் முத்தமிட்டாள். அழகாய்த்தான் இருந்தது கையெழுத்து ஆனாலும், “ஏனோ என் அம்மா இரசிப்பதேயில்லை”. ‘ சொல்லி முடிப்பதற்குள் பல குரல்கள் என்னுள் பரவ “ அழகா இருக்கு, கையெழுத்து எப்டி இப்டி நல்லா இருக்குமா…” எதையோ உணர்ந்தவளாய் இதயம் சிரிக்க, இமைக்கதவுகள் தாழிட்டு, இருவிழியும் தன் கால்களை பின்னுக்கு இழுக்க கால இயந்திரம் பின் சென்றது…

சிலேட்டை பிடித்துக் கொண்டு சிறுமியாய் நான், ‘அம்மா நல்லா இருக்கா’? இன்னும் கூட நல்லா எழுதலாம் என்கிறாள் அம்மா. கால இயந்திரம் சற்று பின் சுழல, கையில் நோட்டுப்புத்தகத்தோடு நான் ‘அம்மா இப்ப என்கிறேன்’? பரவால்ல என்கிறாள் அம்மா. போம்மா என் பள்ளிக்கூடத்துல டீச்சர்ஸ்லாம் அழகா இருக்கு என்று சொல்றாங்க, நீ தான் மா இப்டி சொல்ற என்கிறேன். இன்னும் இயந்திரம் முன்செல்கிறது,

மங்கையாய் நான் ‘அம்மா இப்போ’ என்கிறேன்? இதவிட அழகா எழுதலாம் என்கிறாள். போம்மா; நீ எப்பயுமே இப்படித்தான். எல்லாரும் அழகா இருக்குனு பாராட்டுறாங்க என்றாலும் அதே சிரிப்புதான். சிரித்துக் கொண்டே விழிகளைத் திறக்க கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தாயிற்று,

இன்று வரை வினாவிலும் மாற்றமில்லை! விடையிலும் மாற்றமில்லை!. என் கையெழுத்தில் தொடங்கி, கவிதை வரை அம்மா இரசிப்பதைக் காட்டியிருந்தால், அது பிறரால் இரசிக்கப்பட்டிருக்காது. இன்று என் கையெழுத்திற்காய் ஒலித்த குரல், கவிதைக்கும் ஒலிக்கும் காலம் வரும். அது வரை என் வினாவிலும் எந்த மாற்றமுமில்லை.. .ஆனாலும்… “அம்மா என் அழகு கண்ணம்மா!“ இவள் போலே இவளைப் போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை! மறுஜென்மம் வந்தால்கூட நான்தான் இவளின் பிள்ளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *