என்ன மா தவமோ?
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 15, 2026
பார்வையிட்டோர்: 98
(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இலங்கை யாழ்ப்பாணம், தமிழுக்குச் செய்த சேவை மிகப்பெரிது. யாழ் மக்களிடையே இப்பொழுதும் செந்தமிழ் பேச்சுமொழியாய் விளங்குவதைக் காணலாம். யாழ்ப்பாணத்திலிருந்து பிறந்ததுதான் ‘இயேசு நேசிக்கிறார்’ என்ற இனிய பாடல். மிகப்பிரபலமான கிறிஸ்தவக்கீதம்…
யாழ் மக்கள் வீரத்திலும், தீரத்திலும் சிறந்து விளங்குவதை சமீப காலங்களில் கண்கூடாகக் காண்கிறோம். உடல் வீரத்தில் மட்டுமல்ல, தமிழ் இசை வீச்சிலும் வல்லவர்கள் என்பது வரலாறு. யாழ்ப்பாணம் என்ற ஊர்ப்பெயரே அதற்குச் சான்று.
யாழ்ப்பாணத்தில் ‘பிரெக்கன் ரிஜ்’ ஒரு முரடன்; ஆனால் நியாயவாதி. சமூகம் நன்றாயிருக்க வேண்டும் என்று விழையும் ஒரு சண்டியன். பொது நோக்கிற்காக எதையும் செய்வான். சுயநலம் என்பது சிறிதும் இல்லாதவன், கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் மனித நேயம் உண்டு.
சமூக துரோகி ஒருவனை பிரெக்கன் ஆத்திரத்தில் கொலை செய்து விட்டான். சிறையில் அடை பட்டான்.
அவன் விசாரணைக் கைதியாயிருந்த நாளில் சிறைக்கைதி களிடையே இறை ஊழியம் செய்யும் ஒரு சகோதரரால் பிடிக்கப்பட்டான். பைபிள் படிக்க ஆரம்பித்தான். தீவிராமாகப் படித்து முடித்தான். ஆழமான சத்தியங்களையும் எளிதில் ஜீரணிக்கலானான்.
‘ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் இறைஅரசில் பிரவேசிக்க மாட்டான்’ என்ற யோவான் மூன்றாம் அதிகாரம் மூன்றாம் வசனத்தைப் பலமுறை படித்துத் தியானிக்கலானான்.
சமூக உணர்வோடு தெய்வ பயமும் வேண்டும் என்று கண்டு கொண்டான். ‘பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்.; அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்’ என்ற நீதிமொழிகளின் கூற்று அவனைப் பலமாக எச்சரித்தது.
மறுபிறப்புடன் புதிய அனுபவத்திற்குள் வந்தான். தன் வக்கீல் மூலம் ‘நிரபராதி’ என்று பொய்யாக வாதிட்டு வந்த அவன் வக்கீலை விலக்கி விட்டு தன் தவறுகள் அனைத்தையும் எழுதி அறிக்கை செய்தான்.
பிரெக்கனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவன் புதுவாழ்வு பெற்ற பிறகு சிறைச்சாலை துதிதோத்திரக் கூடமாயிற்று. ஆடுவதும், பாடுவதும் குதிப்பதுமாக இருந்தான். இரவு முழுவதும் கடவுளோடு உறவாடினான்.
தூக்குதண்டனைக்கு முந்திய நாள் முழுவதும் பாடிக்கொண்டும் எழுதிக்கொண்டுமிருந்தான். தூக்கில் தொங்குவதற்கு சிலமணித்துளிகளுக்கு முன்னால் ஓர் அழகானபாடல் எழுதினான். இனிய இராகம் அமைத்துப் பாடினான்.
தண்டனையை நிறைவேற்றுமுன் ‘உன் கடைசி ஆசை என்ன?‘ என்று வழக்கப்படி சிறை அதிகாரிகளால் கேட்கப்பட்டது. ‘தூக்குக்கயிற்றைத் தொட்டவாறு நான் எழுதிய பாடலைப் பாட வேண்டும்’ என்று கேட்டு அனுமதி பெற்றான்.
“இயேசு நேசிக்கிறார். இயேசு நேசிக்கிறார் இயேசு என்னையும் நேசிக்க யான் செய்ததென்னமா தவமோ” என்ற பாடல் இனிய தொனியில் தூக்குக் கொட்டடியில் ரீங்காரித்தது.
‘ஆசை இயேசுவென்னை…’ என்ற வரிகளை மகிழ்ச்சியோடு பாடி ஆராவாரித்தான். ‘ஆவலாய்ப் பறப்பேன்’ என்னும் வரிகளைப் பாடும் போது மரணத்திற்குப் பின்புள்ள பரலோக வாழ்வை எண்ணி குதூகலத்துடன் குயில் போலக் கூவினான். “ஈசன் இயேசு எனைத்தான் நேசித்தார் என்ற இணையில் கீதஞ் செய்வேன்” என்ற கடைசி வரிகள் சிறை முழுவதுமாக எதிரொலித்தது. இன்று நாடெங்கும் இப்பாடல் ஒலிக்கிறது. மீட்கப்பட்ட பாவிகளின் இதயத்தில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
நீதிமானோ தன் மரணத்தில் நம்பிக்கையுள்ளவன். நீதி. 14:32.
இயேசு நேசிக்கிறார் என்ற 217ஆம் கீர்த்தனைப்பாட்டு பிறந்த கதை.
– ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
