எனக்காக?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 16, 2025
பார்வையிட்டோர்: 282 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மின்னலாய் அவன் பார்வை என்னுள் இறங்கியது. விழிச் சிறகுகள் பரிதவிக்க தண்ணீரில் மூழ்க எழுந்தாற் போல் மூச்சுத் திணறியது. 

முன்னொரு போதும் கிடைத்திராத அல்லது “முன்னெப்போதும்” இல்லாத பரவசம் அது.சிலு சிலு வென மழைத்- துளிகள் முகத்தில் படும் போது கிடைக்- குமே ஒரு சுகம். அதனை ஒத்ததாக ஆனந்தம், அற்புதம் எல்லாமே ஒன்- றாகக் கலந்து எப்படி வந்தது இந்த அரிய நிகழ்வு. 

கனவுகள் மின்னும் விழிகளில் சந்தோஷம் கொப்பளிக்கும். எதிரில் வருவோர் எல்லோரையும் விழியாலே எறிந்து கலைக்க முடியும். அந்தக்கணத்தில் அவர்களிடம் ஏற்படும் அதிர்வுகளை ரசிக்கும் பருவம் அது. கனவும் நனவும் எதுவென்று புரியாத அந்தப் பருவத்தில் தான் அந்த அனுபவம் கிடைத்தது. 

என்னுள் வியாபித்து, என்னைக் கசிய வைத்து. நெக்குறப் பண்ணிய அந்த அதி அற்புதமான மாற்றம் எவ்வாறு உருப்பெற்றது. 

வானம் கறுத்து குளிர்காற்று உருக்கொண்டு உடுக்கடித்துக் கொண்டிருந்த அந்த வேளை “ரியூசன்” முடித்து, சைக்கிளில் ஒரு வண்ணத்து இளவரசியாக மிதந்த போதுதான் சூழலின் மாற்றம் புரிந்தது. 

கூட வந்த புவனா சந்தியில் திரும்ப, என் வீடு நோக்கிய பாதையால் இறங்கிய போது எதிர்ப்புறம் பதை பதைத்தபடி ஆட்கள். கனவுகள் கலைந்து வானத்தில் இருந்து தரைக்கு விழ வேண்டிய- தாயிற்று. 

“என்ரை அம்மாளே” என்ன நடந்தது. அதிர்வுகளுடன் காதில் விழுந்த ஷெல்களின் ஓசை நடப்பதை புரிய வைத்தது. 

கால் இயலாமல் படுக்கையாக படுத்திருக்கும் அப்பா என்ன செய்வார்? அம்மா என்ன கஷ்டப்படுவாள். வீட்டில் அண்ணாவும் தம்பியும் நிற்பார்களா? 

தொடர் கணைகளாக கேள்விகள் மனதில் உருவாக பொபொல வென கண்ணீர் பெருக ஆரம்பித்தது. சைக்கிள் தள்ளாடியது. “சித்திரா” என்று காதருகே ஒரு குரல். திரும்பினால் அண்ணா. “வீட்டில் ஆர் அண்ணை? தம்பி நிற்பானே.அப்பா என்ன செய்யி- ராறோ?” 

அண்ணாவைக் கண்ட சந்தோசத்தை மீறி வீட்டு நிலைமை மனத்தை உறுத்தியது. 

“தம்பியும் இருக்க மாட்டான்” என்று அண்ணா சொல்லுவதற்கு முன்னர் “ஐயோ அண்ணை அப்பா என்ன செய்வார்” என்று நடுங்கிப் போனேன். 

“அக்கம் பக்கத்தில் இருக்கிற ஆக்கள் ஆரும் உதவி செய்வினம் சித்திரா” என்று அண்ணா சொன்னாலும், அதில் ஆற்றாமையும் கவலையும் திரண்டு வெளிப்பட்டன. 

துயரம் வெடித்துச் சிதறும் முகங்களுடன் வரும் சனங்களை விலத்திக் கொண்டு விரைய சத்தங்களின் அதிர்வுகள் மனத்தின் அதிர்வை விட மிக அதிகமாக கேட்கத் தொடங்கின. இருந்தாற் போல- 

“சித்திரா” என்றது அந்தக் குரல். இத்தனை வருடங்களாக என் காதில் புகுந்து என்னுள் நீக்க மற நிறைந்திருக்கும் அந்தக் குரல். சைக்கிள் நிற்கவில்லை. சரிந்தன அண்ணாவினதும் என்னுடைய- தும் சைக்கிள்கள். சிக்குண்டபோது கால்களில் சிராய்ப்புக் காயங்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஓடினேன். 

வீதியோரமாக மரத்தடியில் அப்பா தனித்திருக்கவில்லை. முடித்துப் போட்ட சாக்கில் கால்களை நீட்டியபடி வழக்கமான கம்பீரத்துடன், வாடிப் போன முகத்தில் வில்லங்கமாக வரவழைத்த சிரிப்புடன். 

என்ன பிள்ளை” என்ற குரலின் கனிவு என்னை நிலைகுலைய வைத்தது. 

“ஐயோ அப்பா எப்படியப்பா வந்தனியள். அம்மா எங்கை” 

“அவசரப்படாத பிள்ளை! அம்மா சுரேசோடை வாறா .ஒரு பிரச்- சினையுமில்லை. எனக்கு கொஞ்ச நேரம் ஆறுதல் தேவைப்பட்டது. அதுதான் இருந்தனான்.கனநேரம் சைக்கிளில் இருக்கேலாது” என்றார் அப்பா. 

“ஐயோ அப்பா ஆரோடை சைக்கிளில் வந்தனீங்கள்” மீண்டும் கேள்விகளால் அப்பாவைத் துளைக்க அப்பா கை காட்டினார். கைகாட்டிய திசையில் நிறுத்தி வைக்கப்பட்ட பெரிய கரியர் சைக்கிளுடன் அவன் நின்று கொண்டிருந்தான். 

இப்போது நினைத்தாலும் பசுமை மாறாத அந்தக் காட்சி இனிமை தர மறப்பதில்லை. எத்தகைய பிரச்சினைகள் இருந்தாலும் அதிகாலை வேளையில் அம்மன் கோயிலுக்குப் போனால் கிடைக்- குமே ஒரு ஆறுதல். அமைதி. அது போன்ற ஒரு சுகம் அப்போது கிடைத்தது. 

அவன் விழிகளில் கொப்பளித்த பரவசம் – பார்வையில் கூர்மை. அவன் முகத்தில் துளிர்த்த புன்னகை. உதட்டோரம் ராஜகளை கட்டியிருந்த மீசை – எதை எதைச் சொல்ல, எல்லாமே – 


அன்று தான் ஆரம்பமா? என் அம்மாளே எனக்கு என்ன நடந்தது?

சிங்களத்தின் ஆக்கிரமிப்பு உச்சமாகி சொத்திழந்து நாடோடிக் கும்பல்களாக யாழ்ப்பாணத்தை விட்டு வன்னி யாத்திரை புறப்பட்- டோம். 

தலையில் உரப் பை சுமை என்பதே தமிழரின் அடையாளம் என்- கின்ற ஒரு காலப்பகுதியில் உரப் பைகள், சூட்கேசுகள் சகிதம் நாங்களும் வன்னி நகர்ந்தோம். 

அந்தப் பயணமும் இனிமையானது தான். உடல் களைக்க மனம் களைக்க தாகமும், பசியும் இணைந்து இம்சைப்படுத்த கிளாலிக் கடற்கரையில் படகுக்காக காத்திருந்து கடலையும் வானத்தையும் மாறி மாறிப் பார்த்தோம். விம்மும் நெஞ்சுடன். மாலை கனிந்து இரவு வந்தது. கடலும் வானமும் சங்கமித்து களி நடனம் புரியும் அந்த எல்லையில் முழுப் புன்னகையாக நிலவு தோன்றியது. செங்கட்டிச் சிவப்பாக கடல் பளபளத்தது. எந்த விதமாக மனக்குறையும் இல்லாமல் அது போதையைத் தந்தது. 

தொடுவைப் படகுகளில் ஏறத் தயாரானோம், விம்மலுடன் அம்மா வெடித்து கிளர்ந்தபோது வழக்கமான இதம் கலந்த புன்னகையுடன் அப்பா, அம்மாவின் தலையைத் தடவி “அழாதை அப்பா எல்லாம் நல்ல படியாய் முடியும். நாங்கள் மாத்திரமே எங்கடை மண்ணை விட்டிட்டுப் போறம், எல்லாரும் தானே. இண்டைக்கு ஏன் போறம், இந்த மண் எங்களுக்கு நிரந்தரமாக வரவேண்டும் எண்டதுக்- காகத்தானே” 

அண்ணாவும் தம்பியும் வாடித் துவண்ட முகங்களுடன் படகேறத் தயார் செய்ய முனைந்தார்கள். 

அந்தச் சமயத்தில் தான் அவன் வந்தான். தோளில் கொழுவிய சிறிய தோற் பை, எப்போதும் போலவே மின்னும் விழிகள், கூர்மை- யான பார்வை. 

என்சோர்வும் தளர்வும் கிளாலிக் கரையோடு கரை ஒதுங்கிக் கொண்டன. உற்சாகம் திமிறும் பார்வைகளுடன் அவன் விழி- களைப் பந்தாட முனைந்தேன். 

நிலவு நனைக்கும் கடல் ஊடாக எங்கள் படகுத்தொடர் புறப்பட்டது. இஞ்சின் படகில் இருந்து ஆறாவது படகுதான் எங்களது படகு. 

படகின் அணியத்தில் அவன் அமர்ந்தான். அணியத்தின் அருகே பலகை இருக்கையில் மனம் சந்தோஷ நுரை காட்ட நான் அமர்ந்தேன். 

நிலவில் அவன் விழிகள் பளபளத்தன. அப் பளபளப்பில் நான் என்னை இழந்தேன். தீராத தண்ணீர் விடாயினால் தண்ணீர் பருகுவது போல பார்வையால் பருகத் தொடங்கினான். அவன் கூர்மையான பார்வை என்னைத் துளைக்கும் போதெல்லாம் உடலில் ஏற்பட்ட அதிர்வுகளை நான் உணர்ந்தேன். அவன் எனக்காகவே அந்தப்படகில் வருகிறான் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. 


கிளிநொச்சி திருவையாற்றில் குடியமர்ந்து இயற்கையின் வனப்- புடன் சங்கமமாகி வாழத் தொடங்க சூழல் இயைந்து வந்தது. 

அதிகாலைப் பொழுதில் காதில் இசையாய் விழும் குருவிகளின் சப்த ஜாலங்களுடன் கண் விழிக்கும் போதும் மாலை மயக்கத்தில் போதை தரும் உயர்ந்த காட்டு மரங்களின் அசைவும் மனத்தை மயக்கும். 

எல்லாவற்றையும் விட அவனது வருகை பெருமயக்கத்தை தரும். எப்போதாவது மாலை வேளைகளில் அவன் வருவான். அகமகிழ்வோடு அவனை வரவேற்கும் அப்பாவோடு அவன் ஐக்கியமானான். என்னை மட்டும் இடையிடையே விழிகளால் தரிசிப்பான். தந்தியடித்தாற் போல் தான் எப்போதாவது பேசுவான். அப்பாவைச் சாட்டி எனக்காகத்தான் அவன் வருகிறான் என்பதை நான் உணர்ந்தேன். ஒரு தடவை பேச்சோடு பேச்சாக வெளிநாட்- டில் உள்ள அண்ணா அவனை வரச்சொல்லி அழைத்ததாகவும் அதற்குத் தான் மறுத்து விட்டதையும் அப்பாவுக்குத் தான் சொன்னான். 

அவன் அதனைச் சொல்லும் போது வீட்டின் திண்ணையில் இருந்து நான் தைத்துக் கொண்டு இருந்தேன். சொல்லி முடித்தவன் சட்டென்று என்னைப் பார்த்தான். பட்டென்று தீப்பிடித்தாற் போல அவன் பார்வை என்னைப் பற்றிக் கொண்டது. 

அதீத ஆனந்தத்தால் என் மனம் நிரம்பி இரணைமடு குள வாய்க்கால் பாயும் தண்ணீர் போல் பாயத் தொடங்கியது. 

நாங்கள் இப்போது மாங்குளம் குடிவந்து விட்டோம். திருவையாற்- றில் தாராளமாகக் கிடைத்த தண்ணீர் மாங்குளத்தில் வரண்டது போலவே அவன் வருகையும் குறைந்திருந்தது. முன்பு இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை என்றால் இப்போது வாரம் ஒரு தடவை. முழுவாளியை கிணற்றுக்குள் விட்டால் காவாளி தண்ணீர் மண்- ணோடு வரும். அதனை அள்ளக்கூட கியூவில் ஆட்கள் நிற்பார்கள். 

அப்படித்தான் ஒரு நாள் அள்ளிக் கொண்டு நிமிர்ந்தேன். தண்ணீர் அள்ளக் காத்திருக்கும் கூட்டத்துடன் அவன். விழிகளில் வியப்பு மின்ன புன்னகைத்து எப்ப வந்தது? என்று பார்வையாலே கேட்க அவன் பதில் சொல்லாமலே சிரித்தான். 

அவன் குடும்பத்தவர்கள் யாழ்ப்பாணம் போகப் புறப்பட்டு விட்டார்- களாம். அவர்களை வழியனுப்ப ஓமந்தை போவதாகவும் அவன் சொன்னான். 

“அப்ப நீங்கள்” நெஞ்சைக் கிழித்த அந்தக் கேள்வி என்னுள் எழ முன்னரே அவன் பதில் சொன்னான்,தான் போகவில்லை என்று, 

அவன் எனக்காகத்தான் வீட்டார்களுடன் யாழ்ப்பாணம் போகாமல் இங்கேயே நிற்கின்றான் என என் உள் மனம் சொன்ன போது மூச்சு முட்டியது. 


புதுக் குடியிருப்பு யாழ்ப்பாணம் போல ஒரு சுவாத்தியம் என்று யாரோ சொன்னது உண்மை மாதிரித்தான் தெரிந்தது. 

எந்த வெக்கையாக இருந்தாலும் தென்னை மர நிழலில் அது பஞ்சாகிவிடும். காற்றாட தென்னை மரத்தடியில் அமர்வதும், வட்டமாக கூடியிருந்து கதைப்பதும் வழக்கமானது. 

நாங்கள் குடியிருக்க வந்த முதற்கிழமை அவன் வீட்டுக்கு வந்திருந்தான். அம்மாவின் வற்புறுத்தலுக்குப் பின் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் தென்னை மரங்களின் கீழ் உதிர்ந்தோம். 

வழக்கத்தை விட அவன் அன்று சிரித்துக் கதைத்தான். அடிக்கடி என்னை விழிகளால் துளாவி என்னைக் கிறங்கச் செய்தான். விடைபெற்றுப் போகும் போது எப்போதும் போல அல்லாமல் தனித்தனியே போட்டுவாறன்” என்று சொன்னான். அம்மா கூட “என்னடா இது புதினம்” என்று அவனிடம் கேட்க பதில் சொல்லாமல் தவித்தான். 

கடைசியாகத்தான் அவன் என்னைப் பார்த்தான். விழிகள் முன்னர் எப்போதும் இல்லாதவாறு மிகப் பிரகாசமாக இருந்தது; சற்று நேரம் அவன் உதடுகள் துடித்தன. எனினும் அவன் சொன்ன வார்த்- தைகள் “போட்டுவாறன்” என்பது தான். அதனைவிடப் புதினமாக அவன் எதையுமே சொல்லவில்லை. 


அதற்குப் பிறகு நான் அவனை எங்குமே சந்திக்கவில்லை. அப்பாவும் அவனைத் தேடிக் கொண்டிருந்தார். அம்மாவும் தான். என்னால் தான் அவனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. வேதனை தான் என்னைப் பிடித்துத் தின்கிறது. 

கண்ணாடி பார்க்காமலே என்முகம் எனக்குத்தன் கோலத்தை உணர்த்தியது. மலேரியா வராமலே நான் ஒடுங்கிப் போனேன். கூர்மையான அவன் பார்வை கிடைக்காமல் நான் சக்தி வற்றி ஒடுங்கினேன்.. 

பிறிதொரு நாள் மணலாற்றுப் பக்கம் அதிகம் ஷெல் விழுந்து கொண்டிருந்த நேரம். 

புன்னகை சிந்தும் தன் தோழர்களோடு அவன் வாகனம் ஒன்றில் போவதைக் கண்டதாக தம்பி சொன்னான். 

– வெளிச்சம், ஜுலை 1997.

– மணல்வெளி அரங்கு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மாசி 2002, தேசிய காலை இலக்கிய பேரவை, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *