உழைப்பால் உயர்வோம்




(2022ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முதற்காட்சி

(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. மேடையில் பாரதி நகர் & வள்ளுவர் பூங்கா என்று பின்னணியில் எழுதப்பட்டுள்ளது. பூங்காவுக்கு வெளியே கூட்டம் கூடி நிற்க, தலைப்பாகை அணிந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் வித்தை காட்டுகிறார். கீழே குந்தியவாறு அமர்ந்து வித்தை காட்டுகிறார்.)
வித்தை காட்டுபவர் : ஐயா மாரே! அம்மா மாரே! அண்ணன் மாரே! தம்பி மாரே! தங்கை மாரே! எல்லோருக்கும் வணக்கமுங்க. இந்தக் கூடைய நல்லாப் பார்த்துக்கங்க. ஒண்ணுமே இல்ல. கவிழ்த்து வைக்கறேன். பாருங்க. இப்ப கூடைய எடுக்கறேன் நான்…
(கூடையை எடுத்தவுடன் அங்கே எட்டு வயது சிறுவன் அமர்ந்திருக்கிறான்)
வித்தை காட்டுபவர் : தம்பீ…
சிறுவன் : ஐயா…
வித்தை காட்டுபவர் : நான் யாரு…
சிறுவன் : நீங்க மோத்திலால்…
வித்தை காட்டுபவர் : மோத்திலாலோட புள்ள யாரு…
சிறுவன் : ஜவஹர்லால்….
மோத்திலால் : அரே! இந்திய நாட்டுக்காக பாடுபட்ட நேரு மாமாவைப் பத்தி கேட்கல.. இந்த மோத்தி லாலோட பையன் யாரு?
சிறுவன் : கீர்த்திலால். நான்தான் அந்த கீர்த்திலால். அன்புக்குரிய அப்பா…
மோத்திலால் : சொல்லு கண்ணே என் பிரிய மகனே…
கீர்த்திலால் : சின்னப் பசங்க என்ன பண்ணனும் உழைக்கணுமா சின்ன வயசுல…
மோதிலால் : உழைக்கணும்தான். சின்னப் பசங்களுக்கு எது உழைப்பு? படிப்புதான். படிப்புக்காக மூளையைக் கசக்கி உழைக்கணும். பெரியவங்களும் சின்னப் பிள்ளைகளைப் படிக்க ஊக்கப்படுத்தணும்.
கீ.லால் : அப்படின்னா… சின்னப் பசங்கள வேலைக்கு வைச்சுக்க கூடாது இல்லையா?
மோ.லால் : கூடாது. கூடாது. கண்டிப்பா கூடாது. சட்டப்படியும் தப்பு. தர்மப்படியும் தப்பு. பசங்கள படிக்க வைக்கணும். பெண் குழந்தைகளைப் படிக்க வைக்கணும். சிறுவர்களும் சிறுமியர்களும் சோம்பேறித்தனத்தை எல்லாம் மூட்டைகட்டி வைச்சுட்டு சுறுசுறுப்பாக துடிப்பா படிக்கணும். முன்னேறணும்.
கீ.லால் : அப்ப… ஏன் என்னை வேலை வாங்கறே… உன்னை பத்தி அரசு அதிகாரி கிட்ட சொல்லிடட்டுமா?
மோ.லால் : இதோ பாருங்க ஐயா மாரே… அம்மா மாரே… சைத்தானோட பையன் பேசுற பேச்சை… உட்காரு. ராஜா. நீ வாய் பேசாதே. போய் பாடம் படி….
(மோத்திலால் கூடையைப் போட்டு பையனை மூடுகிறார்.)
ஐயாமாரே… அம்மா மாரே… அக்காமாரே. தங்கச்சி மாரே… அண்ணன்மாரே… தம்பி மாரே.. இப்ப கூடையை மறுபடியும் எடுக்கறேன் பாருங்க… ஜோரா கைதட்டுங்க.
(கரவொலி)
(கூடையை எடுக்கிறார். அங்கே அழகான பதின்பருவ மங்கை அமர்ந்திருக்கிறாள்.)
மோ.லால் : ஏ. அழகான பாப்பா நீ யாரு…
இளம்பெண் : என் பேரு ஷீலாதேவி. அம்மா பேரு சாயா தேவி. தம்பி பேரு கீர்த்திலால். அப்பா பேரு மோத்திலால்.
மோ.லால் : என் அருமை மகளே. குட்டிப் பாப்பா எழுந்திரு. வா. இந்தப் பக்கம்.
ஷீலா : வந்தேன்.
மோ.லால் : இந்த நீலச் சட்டை போட்ட அய்யா என்ன தொழில் பண்றாரு?
ஷீலா : அந்த அய்யா பேரு மாணிக்கம். நம்ம பாரதிநகர்ல சிடி கடை வைச்சிருக்காரு. பணம் படைத்தவரு அய்யா… ஆனா மனசுதான் இல்லே…
(நீலச் சட்டைக்காரர் அதிகப்பிரசங்கி என்று அடிக்க வருகிறார்.)
மோ.லால் : அய்யா கோபப்படாதீங்க. என் பொண்ணு என்னதான் சொல்ல வருதுன்னு கேட்போம். நீ சொல்லு தாயி…
ஷீலா : அய்யாமாரே. அம்மாமாரே. பெரிய மனுஷாளப் பத்தி சின்னப் பொண்ணு நான் பேசக் கூடாதுதான். நான் சொல்லப் போற விஷயமும் சின்னப் பொண்ணு பேசக் கூடாத விஷயம்தான். இருந்தாலும் பாழாப் போன இந்த மனசு கேட்கலை. அதனால சொல்றேன்.
ஐயாமாரே… மாணிக்கம் அய்யாவும் செல்வி அக்காவும் உயிருக்கு உயிரா காதலிச்சாங்க. கண்ணாலம் கட்டிக்க இருந்தாங்க. இனிமேல்…. இவங்க கல்யாணம் நடக்குமாங்கறது…
மோ.லால் : சின்னப் பொண்ணு துடுக்குத்தனமா துக்கிரித்தனமா பெரியவங்களப் பத்தி பேசக் கூடாது. வம்பு அளக்கக் கூடாது. இதெல்லாம் சொல்லி வளர்க்கலையா ஒங்க அம்மா?
ஷீலா : எங்க அம்மா சொல்லிக் கொடுத்தாங்கப்பா. மாணிக்கம் அய்யா செஞ்சது சரியில்லையே… அதான் என் மனசு கிடந்து துடிக்குது. எனக்கே இப்படின்னா… செல்வி அக்காவுக்கு இவர் செஞ்சது தெரிஞ்சா அவங்க என்ன பாடுபடுவாங்க?
மாணிக்கம் : தெருவுல வித்தை காட்டற நாய் நீ. ஊர்க்காரன் கதையை சந்திக்குக் கொண்டாரே. என்னய்யா இந்த ஊர்ல நீ வாழணுமா வேண்டாமா?
மோ.லால் : அய்யாமாரே… எசமான் மாணிக்கம் என் மேல கோபப்படறாரு. என் பொண்ணு என்னதான் சொல்ல வருதுன்னு கேட்கறதுக்கு உத்தரவு கொடுங்க ஐயாமாரே! அம்மாமாரே….
கூட்டத்திலிருந்து குரல்கள் :
சொல்லு பாப்பா. தைரியமா சொல்லு.
ஷீலா : செல்வி அக்காவோட அண்ணன் முத்து, ஸ்கூட்டர்ல போகும்போது சாலை விபத்துல அடிபட்டதால ஆஸ்பத்திரில சேர்த்து இருக்காங்க. உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்காரு. இந்த மாணிக்கம் அண்ணன் போய்ப் பார்த்திருக்காரு. பெரிய டாக்டரு இவர்கிட்ட இரத்த தானம் கொடுங்க. உங்களுக்குத் தெரிஞ்ச இன்னும் நாலு பேரையும் இரத்தம் கொடுக்கக் கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொல்லியிருக்காரு. இவர் நண்பன்னு பார்க்காம, கட்டிக்கப் போறவங்களோட அண்ணன்னு பார்க்காம நழுவி வந்துட்டாருங்க.
மோ.லால் : அய்யாமாரே… எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன். உடம்பு கெட்டியாக இருக்கறவரை இரத்ததானம் செய்ய அச்சப்படாதீங்க. புது இரத்தம் கொஞ்ச நாள்லேயே உடம்புக்குள்ள உற்பத்தி ஆயிடும். நண்பருக்கு இரத்தம் கொடுத்து அங்கேயே இருந்து கவனிச்சுக்காம இப்படி வந்துட்டீங்களே அய்யா இது தகுமா?
(கூட்டத்தில் சில குரல்கள்)
டேய்… மாணிக்கம் என்னடா இப்படி செஞ்சுட்டே. வாடா. டேய்… எல்லாரும் வாங்கடா. நம்ம முத்துவக் காப்பாத்துவோம்.
(கூட்டத்திலிருந்து இளைஞர்கள் கலைந்து செல்லுதல்)
மோ.லால் : இத்தனை பேருக்கு நெஞ்சுல ஈரம் இருக்குதுன்னு பார்க்கச் சந்தோஷமா இருக்குது. அந்தப் பெரிய மனுஷரு பொழைச்சு வரணும்னு சாமிகிட்ட நான் வேண்டிக்கறேன்.
இங்க இருக்கிற ஐயாமாரே. அம்மாமாரே. தங்கச்சி மாரே…
எங்க பொண்ணு ஷீலா மத்தவங்க சொந்தக் கதையை சந்திக்கு இழுத்துட்டதா நெனக்காதீங்க. செல்வி அக்காவோட அண்ணன் பொழச்சு வரணுமேங்கற நல்லெண்ணத்துல அப்படி பேசிச்சு.
தம்பிமாரே.. தங்கச்சிமாரே நீங்களும் பெரியவங்களான பிறகு இரத்த தானம் செய்யத் தயங்காதீங்க. ஆரோக்கிய மான உடம்பு இருக்கறவங்க கண்டிப்பா இரத்த தானம் செய்யலாம். செய்யணும்.
நண்பர்களுக்கு எப்படி உதவணும்னு திருவள்ளுவர் சொல்லி இருக்கார். அது என்ன சின்னப் பொண்ணு…
ஷீலா தேவி : உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.
நண்பர்களுக்கு எப்படி உதவி செய்யணும்னு சொல்லி இருக்காரு தெரியுமா அப்பா…
மோ.லால் : நீ சொல்லு… தாயி.
(சிறுவன் கீர்த்திலால் திடுமெனத் தோன்றி மோத்திலாலின் வேட்டியைப் பிடித்து இழுக்கிறான். விடுடா என்று கைகளால் பிடித்துக் கொள்கிறார். (கூட்டத்தினர் சிரித்தல்)
கீ.லால் : இப்படித்தாம்பா… வேட்டி அவிழும்போது கை வந்து காப்பாத்துது இல்ல…. அது மாதிரி சிநேகிதங்களுக்கு நஷ்டம் வரும்போது நாம உதவி செய்யணும்.
ஷீலா தேவி : தம்பி செயல்முறை விளக்கம் செஞ்சு காட்டிட்டாம்பா…
(கீர்த்திலாலை அடிக்கப் போகிறார் மோத்திலால். அவன் ஓடுகிறான். மோத்திலால் அவனைத் துரத்திய படியே ஓடுகிறார். கூடை மறைந்து விடுகிறது. ஷீலாவும் மறைந்து விடுகிறாள்.)
(கூட்டத்தில் பெரியவர்கள் கலைந்து செல்கின்றனர். சிறுவர்களும் சிறுமிகளும் உட்கார்ந்து கொண்டிருக் கின்றனர்.)
(மோத்திலால் மேடையின் வலப்பக்கத்திலிருந்து மேடைக்கு திரும்பி வருகிறார். அங்கே வித்தை காட்டிய இடத்தில் ஒரு நடுத்தர வயது குண்டு பெண்மணி (லம்பாடி போல் உடை அணிந்தவள்) அமர்ந்து கொண்டிருக்கிறாள். கையில் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்துக் கொண்டு அதனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். சிறுவர்களும் சிறுமிகளும் அவளையே விநோதமாக வேடிக்கை பார்க்கிறார்கள்.)
மோ.லால் : என்ன… சாயாதேவி… நான் கஷ்டப்பட்டு ஐயாமாருங்க அம்மாமாருங்க மத்தியில வித்தை காட்டிக்கிட்டு இருக்கேன். நீ உன் முகத்தை கண்ணாடில பார்த்துக்கிட்டு இருக்கே… எத்தனை தடவை பார்த்தாலும் இருக்கிற அழகுதான் தெரியும்.
சா.தேவி : சும்மா இருங்க. இது என்ன கண்ணாடி தெரியுமா…. தெரியுமா…
மோ.லால் : தெரியுமா தெரியுமான்னு ராகம் பாடாதே. என்னன்னு சொல்லு. நானும் தெரிஞ்சுக்கறேன். இங்க இருக்கிற பசங்களும் தெரிஞ்சுப்பாங்க.
சா.தேவி : இது மாயக் கண்ணாடி. இதுல பார்த்தா என்ன நடக்குதுங்கறது தெரியும். நீங்களும் நம்ம பசங்களும் என்ன செய்யறீங்கன்னு இதுலதான் பார்த்துக்கிட்டு இருந்தேன். இவ்வளவு நேரமா….
இப்ப… அடடா! பாவம்.
மோ.லால் : என்ன ஆச்சு?
சா.தேவி : நம்ம பாரதி நகர் அமுதா குடியிருப்புல தீ பிடிச்சுக்குச்சு. தீயணைப்புப் படைக்காரங்க சமயத்துல வந்துட்டாங்க. அதிக சேதம் இல்லாம போச்சு.
மோ.லால் : பொருட்சேதம் உயிர்ச்சேதம் இல்லையே… அதுபோதும். அவங்க காலதாமதம் செய்யலியே.
சா.தேவி : தகவல் கிடைச்ச உடனே அவங்க கிளம்பிட்டாங்க. ஆனா, சந்தேகத்தோட கிளம்பினாங்க.
மோ.லால் : அப்படியா? என்ன காரணம்?
சா.தேவி : மூணு நாளா தொடர்ச்சியா அந்த குடியிருப்புல தீ பிடிச்சிக்கிச்சுன்னு போன் வந்துகிட்டே இருந்துச்சாம். தீர விசாரிச்சா அதுமாதிரி இல்லைன்னு தெரிஞ்சுதாம்.
இதுமாதிரி உயிர் காக்கும் சேவை செய்யவங்களோட விளையாடறது பாவம். சட்டப்படியும் குற்றம். இப்படி செய்யலாமா…?
மோ.லால் : இப்படி செய்யலாமான்னு என்னைப் பார்த்து ஏன் கேட்கறே….
சா.தேவி : யாருன்னு நான் கண்டுபிடிக்கறேன் பாருங்க. இந்தக் கூட்டத்துலதான் இருக்கான் அந்தப் பையன்… அவன் பேரு ரமேசு. ரமேசு முன்னால வா…
(சிறுவன் கூட்டத்திலிருந்து வெளியே வருகிறான்.)
மோ.லால் : இந்த ரமேசுதான் அந்த வேலை பண்ணவரா? தம்பி… இந்த மாதிரி விபரீத விளையாட்டு விளையாடலாமா? இனிமே… இப்படி பண்ணுவீங்களா…
ரமேஷ் : நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்னு விளங்கிடுச்சு. இனிமே… இப்படி செய்ய மாட்டேன்.
(சிறுவர் சிறுமியர் கலைந்து செல்லுதல்)
மோ.லால் : அய்யாமாரே… அம்மாமாரே…
சா.தேவி : இப்ப கூவறீங்க. ஊர்ல தீ விபத்து யாரு வருவாங்க ஒங்க வித்தையப் பார்க்க… வாங்க போகலாம்… வீட்டுக்கு.
மோ.லால் : பழக்கதோஷம். வா. போகலாம்.
(மேடையின் வலப்பக்கம் நோக்கி சாயாதேவியும், மோதிலாலும் செல்கின்றனர். ‘மாயக்கண்ணாடின்னு சொன்னது டூப்புதானே’ என்று மோத்திலாலின் குரல் ஒலிக்கிறது.)
(இடப்பக்கத்திலிருந்து இரண்டு குள்ளர்கள் வருகிறார்கள். அதில் ஒருவன் குண்டாக இருக்கிறான். ஒருவன் ஒல்லியாக இருக்கிறான்.)
குண்டு குள்ளன் : டேய் வெண்டைக்காய். இரு நூறு ரூபா கொடுத்தேன். நூறு ரூபா… சினிமாக் கொட்டகையில செலவழிச்சோம். மீதி நூறு ரூபாயைக் கொடுடா.
ஒல்லி குள்ளன் : டேய் பூசணிக்காய். உன்கிட்ட இருந்தா செலவாயிடும். நானே வெச்சுக்கறேன். சரி இங்க ஏன் வந்தோம்….?
பூசணிக்காய் : பேச்சை மாத்தாதே. பணத்தைக் கொடு.
வெண்டைக்காய் : சரிப்பா ஏன் இங்கே வந்தோம். (எச்சில் துப்புகிறான்.)
பூ.கா : இப்படி பொது இடங்கள்ல எச்சில் துப்பக் கூடாது அசிங்கம் பண்ணக் கூடாதுன்னு படிச்சு படிச்சு சொல்லியிருக்காரு நம்ம குருநாதரு.. அதுவும் இந்த பூங்காகிட்ட துப்பறே.
வெ.கா : மன்னிச்சிடுடா. இனிமே பொது இடங்களில் அசிங்கம் பண்ண மாட்டேன்.
பூ.காய் : நல்லபுத்தி வந்தா சரிதான். நம்ம குருநாதரு இங்கதான் வரச் சொன்னாரு. அதுக்குள்ள எங்க போனாரு?
வெ.கா : நீ சினிமா படம் பார்த்துட்டு வர்ற வரைக்கும் குருநாதரும் ஜனங்களும் காத்துக்கிட்டு இருப்பாங்களா?
பூ.கா : டேய்… நீதானே வலுக்கட்டாயமா சினிமா பார்க்கக் கூட்டிக்கிட்டுப் போனே. இருட்டப் போவுது வா குருகுலத்துக்குப் போவோம்.
வெ.கா : குருகுலமா அது எந்த ஊருப்பா?
பூ.கா : யோவ். ஊர் இல்லய்யா. குருவோட வீட்டைத்தான் குருகுலம்னு சொல்வாங்க அந்தக் காலத்துல. குரு வீட்டுக்குப் போகலாம்ங்கறதுக்குத்தான் அப்படிச் சொன்னேன்.
வெ.கா : வயசாளிகளுக்குத் தெரிஞ்ச விஷயம் எல்லாம் என்னை மாதிரி இளைஞர்களுக்குத் தெரியாது இல்லையா?
பூ.கா : யாருக்கு வயசாயிடுச்சுன்னு சொல்றே? குருநாதர் வேளாவேளைக்கு சோறு போட்டு வளர்க்கறதுனால உனக்கு கொழுப்பு ஏறிப் போச்சு.
வெ.காய் : உனக்கு நீயே சொல்லிக்க வேண்டிய வசனம் அது. உன் பேரையும் உருவத்தையும் பார்த்தாலே தெரியுதே யாருக்கு கொழுப்புன்னு…
(வெ.காயை பூசணிக்காய் அடிக்க வர அவன் ஓடுகிறான். அவனை பூசணிக்காய் துரத்துகிறான். அப்படியே இருவரும் மேடையிலிருந்து வெளியேறுகிறார்கள்.)
(மேடையில் விளக்குகள் அணைகின்றன.) (இரண்டு ஆண் குரல்கள் ஒலிக்கின்றன.)
முதல் குரல் : வானவில் தெரிகிறது. புரிகிறதா?
இரண்டாம் குரல் : வானவில் தெரிகிறது. நான்தான்.
முதல் குரல் : நான் மணி. உங்க பேரு…
இரண்டாம் குரல் : யோவ்… நான்தான்யா ரத்தினம்… தெரியலையா?
மணி : எப்படிய்யா தெரியும் இருட்டில. இருட்டில அலையறதே நம்ம பொழப்பா போச்சு. சிகரெட் லைட்டர் இருந்தா எரியவிட்டு வெளிச்சம் காட்டு. வேறு ஏதாவது நாய் நம்மள பார்க்கப் போவுது அக்கம்பக்கம் பார்த்துப்போம்.
(இப்பொழுது மேடையில் ஒரே ஒரு விளக்கு வெளிச்சம் காண்பிக்கப்படுகிறது. ரத்தினம் சிகரெட் லைட்டரை ஏற்றுகிறான்.)
ரத்தினம் : மணி நீ சொன்ன மாதிரியே நாய்தான்யா எழுந்திருச்சு ஓடுது. நான் மிதிச்சிருந்தா அவ்வளவுதான். வேற யாரும் இங்க இல்ல. விஷயத்தைச் சொல்லுய்யா.
மணி : பக்கத்துல இருக்கிற பூந்தோட்டம் கிராமத்துக்கு ஏழுமலை சாமின்னு ஒருத்தர் வந்திருக்காராமே. சின்னப் பசங்களை வேலைக்கு அனுப்பாதீங்க. படிக்க அனுப்புங்கன்னு பிரசாரம் பண்றாறாம்.
குறைச்சலான கூலியில எங்க பாஸ் செல்லப்பாவோட ஃபேக்டரிக்கு வந்திட்டு இருக்கற சின்னப் பசங்க வராம போயிட்டா என்ன பண்றதுன்னு அவர் யோசிக்கறாரு. அந்த சாமியாரை ஒரு வழி பண்ண சொல்லி உங்க குரூப் கிட்ட சொல்லச் சொன்னாரு. நல்லா கவனிச்சிடுவாரு வழக்கம்போல.
ரத்தினம் : அந்தச் சாமியார் நல்லவருய்யா. போலி சாமியாரா இருந்தாலும் பரவாயில்ல.
மணி : சாமியார் தியானம் பண்ணிக்கிட்டு உட்கார வேண்டியதுதானே. எதுக்கு இந்த மாதிரி வேலைல இறங்கறாரு?
ரத்தினம் : குழந்தைத் தொழிலாளர்களை பயன் படுத்தறது தப்புத்தானய்யா.
மணி : எங்கேயோ மூலையில இருக்கற இந்த ஃபேக்டரில வளர்ந்த ஆளுங்கள வேலைக்கு வைக்க முடியுமா? சரி. அதெல்லாம் நாம பேசமுடியாது. நீ உங்க தலைவர்கிட்ட விஷயத்தைச் சொல்லிடு. நான் வரேன். இது பத்தி போன்ல பேச வேண்டாம்னு சொல்லிடு. வேலைய முடிங்க.
ரத்தினம் : சரி. பார்ப்போம்.
(திரை)
இரண்டாம் காட்சி
(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. மேடையில் கிராமத்து கூரை வீடு போன்ற அமைப்பு. நடுவில் வாசல் கதவு. சின்னஞ்சிறிய திண்ணை. இதுதான் மோத்திலாலின் வீடு. காலை நேரம். மேடையின் வலப்பக்திலிருந்து வந்த மாணிக்கம் வீட்டு வாசலில் வந்து நிற்கிறான். கோபாவேசமாகக் காணப்படுகிறான். கையில் உருட்டுக்கட்டை வைத்திருக்கிறான்.)
மாணிக்கம் : டேய். ஒண்டவந்தப் பிடாரி மோத்தி லால்… என்னடா நெனச்சுட்டு இருக்கே… என்னைப் பத்தி. ஜனங்க முன்னால சந்தி சிரிக்க வைக்கறே. உன்னை ஊர்ல விட்டு வைச்சது தப்பு. வெளியே வாடா நாயே.
(மேடையின் வலப்பக்கத்திலிருந்து காய்கறி சாமான்களுடன் பூசணிக்காயும், வெண்டைக்காயும் வந்து கொண்டிருக்கிறார்கள்.)
பூசணிக்காய் : டேய். என்னடா இவரு நம்ம குருநாதர் வீட்டு முன்னால கோபமா நிக்கறாரு. இப்படியே ஓடிப் போயிடலாமா?
வெண்டைக்காய் : இதுக்கெல்லாம் பயப்படலாமா? வா நாம பாட்டுக்கு வீட்டுக்கு உள்ளாற போகலாம்.
பூசணிக்காய் : உனக்கென்ன அடிதாங்குவே. இன்னும் ஏன் குருநாதர் வரமாட்டேங்கறாரு?
(மோத்திலால் அவர்கள் பின்பக்கத்திலிருந்து குரல் கொடுக்கிறார்.)
மோ.லால் : ஏண்டா இங்கேயே நின்னுட்டீங்க? (குள்ளர்கள் திரும்புகின்றனர்.)
வெ.காய் : அய்யா. அங்க பாருங்க. மாணிக்கம் அண்ணன் கோபமா நிக்கறாரு.
மோ.லால் : அதனால என்ன?
(முன்னேறி நடக்கிறார்.) இருவரும் : அய்யா போகாதீங்க.
பூ.காய் : இதுலேந்து என்ன தெரியுது?
வெ.காய் : ஊருக்கு நல்லது சொன்னா உதை விழும்னு தெரியுது.
மோ.லால் : என்ன சொன்னே…?
வெ.காய் : நல்லதுக்கு காலம் இல்லேன்னு இவன்கிட்ட சொன்னேன் அய்யா.
(மோத்திலால் மாணிக்கத்தின் அருகில் நிற்கிறார்.)
மோ.லால் : எசமான் நான் இங்கு இருக்கேன். என்ன வேணும்?
மாணிக்கம் : என்ன வேணுமா? நீதான்யா வேணும். என்ன கொழுப்பு இருந்தா என்னைப் பத்தி பேசி சந்தி சிரிக்க வைப்பே. நான் இப்ப அடிக்கற அடில இமயமலையில போய்த்தான் நீ வித்தை காட்டணும்.
(மாணிக்கம் உருட்டுக் கட்டையால் மோத்திலாலை அடிக்கிறான். தடுக்கப் போன குள்ளர்களும் அடி வாங்குகிறார்கள்.)
(சத்தம் கேட்டு நடுவில் உள்ள வாசற் கதவைத் திறந்து சாயாதேவி வெளிப்படுகிறாள். மோத்திலாலை மாணிக்கத்தின் பிடியிலிருந்து விடுவித்து திண்ணையில் உட்கார வைக்கிறாள்.)
(மாணிக்கம் குள்ளர்களையும் அடிக்க அவர்கள் திசைக்கு ஒரு பக்கமாக ஓடுகிறார்கள். சற்று நேரத்தில் வெண்டைக்காய், ஏழுமலை சாமிகளுடன் மேடையின் வலப்பக்கத்திலிருந்து வருகிறான். மாணிக்கம் மீண்டும் மோத்திலாலைத் தாக்க முற்பட, ஏழுமலை சாமிகள் குறுக்கே சென்று தடுக்கப் பாய்கிறார். மாணிக்கம் அவரையும் தாக்குகிறான்.)
(நகரமன்ற தலைவர் சோமுவை அழைத்துக் கொண்டு பூசணிக்காய் மேடையின் இடப்பக்கத்திலிருந்து வருகிறான்.)
சோமு : டேய் மாணிக்கம் நிறுத்துடா.
(சோமுவின் குரலைக் கேட்டு மாணிக்கம் உருட்டுக் கட்டையைக் கீழே போடுகிறான்.)
சோமு : என்னடா இதெல்லாம்…?
மாணிக்கம் : இந்த வித்தைகாட்டறவன் என்ன பண்ணான் தெரியுமா?
சோமு : தெரியும். நீ பண்ண தப்பை எடுத்துச் சொன்னாரு.
மாணிக்கம் : அதை சொல்றதுக்கு இவன் யாரு? இவனை இரத்தம் சிந்த வெச்சாத்தான் இரத்த தானத்தைப் பத்தி பேச மாட்டான்.
(மீண்டும் தாக்க முற்படுகிறான். சோமு அவனை மிரட்டி போ இங்கேயிருந்து என்று அனுப்பி வைக்கிறார். மாணிக்கம் வலப்பக்கம் வழியாக வேகமாக வெளியேறுகிறான்.)
சோமு : ஏன்யா… மோத்திலால். உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..?
ஏழுமலை சுவாமிகள் : என்ன சோமு நண்பரை அபாய கட்டத்துல விட்டுட்டு ஓடி வந்துட்டியேன்னு மோத்திலால் சொல்லியிருக்காரு. மோத்திலால் பொண்ணு ஷீலாதேவி பொது இடத்துல ஜனங்க முன்னால உண்மையைச் சொல்லாம இருந்திருந்தா முத்து தம்பிய காப்பாத்த இத்தனை பேர் போயிருப்பாங்களா? முத்து நல்லா இருக்கான்ங்கற செய்திதான் வந்திருக்குமா?
சோமு : அது இல்ல சாமி. மாணிக்கம் பாரதிநகர்ல பெரிய புள்ளியோட மகன். அவனைப் பகைச்சுக்கக் கூடாது இல்ல…
ஏழுமலை சுவாமிகள் : புரிஞ்சுது சோமு. ஊருக்கு நல்லது சொன்னா உதைவிழும்னு இந்த வெண்டைக்காய் அடிக்கடி சொல்வான். அதுதான் நடந்திருக்கு. சாயா தேவி, மோத்திலால் பசங்களை அழைச்சுகிட்டு வாங்க. நாம இந்த ஊரை விட்டுப் போவோம். நீங்க தங்குவதற்கு இவ்வளவு நாள் இந்தக் குடிசையைக் கொடுத்த அய்யா சோமுவுக்கு நன்றி சொல்லுங்க.
(மோத்திலாலும், சாயாதேவியும் கையெடுத்துக் கும்பிடுகின்றனர். வீட்டிற்குள் செல்கின்றனர். குள்ளர்களும் வீட்டிற்குள் செல்கின்றனர்.)
(விளக்குகள் சில நிமிடங்கள் அணைந்து எரிகின்றன.) (காட்சி மாற்றம்)
(வள்ளுவர் பூங்கா அருகில் சோமுவும், ஏழுமலை சுவாமிகளும் நிற்கின்றனர்.)
சோமு : என்ன சாமி. பக்குவமா நடந்துப்பீங்கன்னு பார்த்தா இப்படி அவசரப்பட்டுட்டீங்க. மோத்திலால் வித்தை காட்டறேன்ங்கற பேர்ல நிறைய நல்ல விஷயங் களை ஜனங்களுக்கு சொல்லிக்கிட்டு இருந்தாரு. அதனாலதான் என்னோட இடத்துல வசிக்கச் சொன்னேன்.
ஏழுமலை சுவாமிகள் : ஊருக்கு நல்லது சொல்லனும்னுதான் அவரையும், அவர் குடும்பத்தையும் பாரதி நகருக்கு நான் கூட்டிக்கிட்டு வந்தேன். உசிருக்குப் பாதுகாப்பு இல்லைன்னா என்ன பண்ண முடியும்?
சோமு : இதுவரைக்கும் அவங்ககிட்ட ஊரு ஜனங்க தப்பா பேசினதே இல்லையே. நடந்துக்கலையே.
ஏழுமலை சுவாமிகள் : இப்ப தாக்குதல் நடத்த வந்துட்டாங்களே… என்னையும் சாத்து சாத்தினாரே மாணிக்கம்.
சோமு : சரிங்க சாமி. நீங்க முடிவு எடுத்தா மாத்திக்க மாட்டீங்க. அவங்க போகட்டும். நீங்க இங்கேயே இருங்க.
ஏழுமலை சுவாமிகள் : சோமு, சாமியார் நீண்ட நாள் ஒரே இடத்துல இருக்கக் கூடாது.
சோமு : அய்யோ உங்களுக்கு எப்படி புரிய வைக்கறதுன்னு தெரியல. ஒங்க அடியார்கள்ல ஒருத்தனா கெஞ்சிக் கேட்டுக்கறேன். எங்க ஊர்ல இல்லாட்டாலும் பரவாயில்லை. எந்த ஊருக்கு வேணும்னாலும் போங்க. பூந்தோட்டம் கிராமத்துக்கு மட்டும் போகாதீங்க. அங்க உங்க உசிருக்கு ஆபத்து.
ஏழுமலை சுவாமிகள் : சாமியாருக்கு யார் பகைவர்?
சோமு : அங்க தொழிற்சாலையில சிறுவர் சிறுமியரை வேலைக்கு வெச்சுகிட்டு இருக்கற செல்லப்பாதான். பழிபாவத்திற்கு அஞ்ச மாட்டான்.
ஏழுமலை சுவாமிகள் : நீங்களா யூகத்துல சொல்றீங்களா…
சோமு : அது வந்து … எனக்கு ரகசிய தகவல் வந்ததாலதான் சொல்றேன் சாமி.
ஏழுமலை சுவாமிகள் : பூந்தோட்டம் கிராம மக்கள்கிட்ட பிள்ளைகளை படிக்க வைங்கன்னு கேட்டுக்கிட்டேன். அரசாங்கமும் அதைத்தானே சொல்றாங்க. குழந்தைத் தொழிலாளர் கூடாதுன்னு. மரணத்தை ஒரு நாள் சந்திச்சுதானே தீரணும்.
சோமு : சரி சாமி. ஜாக்கிரதையா இருந்துக்கங்க. அப்புறம் கடவுள்விட்ட வழி. அடியேனுக்கு உத்தரவு கொடுங்க.
ஏழுமலை சுவாமிகள் : கடவுள் அருள் உங்களுக்கு என்றும் உண்டு. போய் வாருங்கள்.
(மேடையின் இடப்பக்கமாக சுவாமிகள் செல்கிறார். வலப்பக்கமாக சோமு சென்று கொண்டிருக்கிறார்.)
(நாகரிக இளைஞனும் இளைஞியும் அவர் எதிரே வருகிறார்கள்.)
இளைஞன் : வணக்கம் சார்.
சோமு : வணக்கம். என்ன வேணும் யார் நீங்க?
இளைஞன் : என் பேரு சுரேஷ். இவங்க பேரு கண்மணி. சென்னையிலிருந்து வந்திருக்கோம். ஷார்ட் ஃபிலிம் குறும்படம் எடுக்க வந்திருக்கோம். குறும்படம்னா…
சோமு : தம்பி குறும்படம்னா எனக்கு தெரியும். எதைப் பத்தி குறும்படம் எடுக்கப் போறீங்க?
இளைஞி : அடிமைகள் பத்தி…
சோமு : அடிமைகள் பத்தியா என்ன சொல்றீங்க?
இளைஞன் : இல்ல. கடவுளோட அடிமைகள் கூடும் பூந்தோட்டம் கிராமக் கோயில் திருவிழாவைப் பத்தித்தான் குறும்படம் எடுக்கப் போறோம்… இதுதான் என்னோட விசிட்டிங் கார்டு. பூந்தோட்டம் கிராமத்திற்குப் போகணும்.
(சட்டைப் பையிலிருந்து தமது விசிட்டிங் கார்டைத் தருகிறார் சோமு.)
இளைஞர் : அய்யா… பாரதிநகர் நகர்மன்றத் தலைவரா நீங்க? ஒங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்.
சோமு : சந்தோஷம். ஏதாவது உதவி வேணும்னா செல்பேசில தொடர்பு கொள்ளுங்க. இங்கேயே நில்லுங்க. பூந்தோட்டத்திற்கு பேருந்து வரும்.
(சோமு செல்கிறார்.)
கண்மணி : பஸ் வரவே இல்லையே… (வேர்க் கடலையைக் கொறித்தபடியே நிற்கிறாள். கொறித்து முடித்து காகிதத்தைக் கீழே போடுகிறாள். சுரேஷ் அதனைப் பொறுக்கி எடுத்து அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வருகிறான்.)
கண்மணி : கூடையிலே போடுன்னு சொல்லியிருந்தா நான் போட்டிருப்பேன்.
சுரேஷ் : நாம் என்னென்னவோ வாய் கிழியப் பேசுவோம். ஆனா, கண்ட இடத்துல குப்பை போடறது, பொது சுவர்ல கிறுக்கறது சிட்டி லோக்கல் டிரைன்ல எதிரே காலியா இருக்கிற சீட்ல காலை நீட்டி வைக்கறது… இதெல்லாம் செய்யாம விடமாட்டோம்.
கண்மணி : சரி உன்னுடைய சமூக விமரிசனத்துக்குப் பாராட்டு.
சுரேஷ் : கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. அவர்கிட்ட ஏன் அடிமைன்னு உளறிக் கொட்டினே.
கண்மணி : வாய் தவறி வந்திடுச்சு. வறுத்தெடுக்காதே. அதோ பஸ் வருது. லக்கேஜ் எடுத்துக்கோ வா. போகலாம்.
(இருவரும் இடப்பக்கம் நோக்கிச் செல்கின்றனர்.)
(வலப்பக்கத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக இரண்டு வாலிபர்கள் மேடைக்குள் நுழைகிறார்கள்.)
(அவர்கள் இருவரும் மணியும் ரத்தினமும்) மணி : என்ன ரத்தினம் எப்படி இருக்கே?
ரத்தினம் : இந்த பஸ் ஸ்டாப்புல இப்ப கூட்டம் வந்திடும். என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு மணி.
மணி : அன்னிக்கு ராத்திரி நான் சொன்ன விஷயத்தை முடிக்கலியா… இன்னும்…
ரத்தினம் : நீங்க நினைக்கிறா மாதிரி லேசான வேலையா அது… அந்த சாமியாருக்கு மக்கள் கிட்ட நல்ல பேரு இருக்கு. எங்க தலைவர் கிட்ட நீங்க சொன்னதை சொல்லியாச்சு.
மணி : என்ன இப்படி பிடி கொடுக்காம பேசற ரத்தினம். இப்ப இன்னொரு ஜோலி வேற இருக்கே.
ரத்தினம் : அது என்ன?
மணி : ஒங்கள நம்பி வேலை கொடுக்கலாமான்னு தெரியலயே.
ரத்தினம் : அதைப் பத்தி நீ ஏன் யோசிக்கிறே. உங்க பாஸ் சொன்னதை சொல்லு. நான் எங்க தலைவர்கிட்ட சொல்றேன். தகவல் புறாதானே நாம ரெண்டு பேரும்.
மணி : சொல்றேன். பூந்தோட்டம் கிராமத்துல கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருக்காங்கன்னு சென்னையில யாரோ வதந்தி கிளப்பி விட்டுட்டாங்க. அதைப் பத்தி துப்பறிய இளவட்டப் பசங்க ரெண்டு பேரு ஆம்பிளையும் பொம்பளையுமா ஜோடியா வந்துகிட்டு இருக்காங்களாம்…
ரத்தினம் : அவங்க கதையையும் முடிக்கணுமா…
மணி : இல்லப்பா… அவங்களே கண்டுபிடிச்சு மிரட்டி துரத்தி அனுப்பினா போதும்.
(பின்னணியில் பொது ஜனங்களின் பேச்சுக் குரல்கள்)
ரத்தினம் : ஜனங்க வராங்க. நான் அந்த பஸ்ல போறேன். வரேன்பா.
மணி : நானும் வரேன்பா இரு.
(இருவரும் செல்கின்றனர்)
(திரை)
மூன்றாம் காட்சி
(மேடையில் பின்னணி திரையில் ஆலமரம். ஆல மரத்தடியின் கீழ் சிறிய மேடை போன்ற அமைப்பு. இதுதான் பூந்தோட்டம் கிராமம். மேடையின் மீது பருமனான சரீரம் கொண்ட உயரமான,நடுத்தர வயதுக்காரர் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஜிப்பாவும் பைஜாமாவும் அணிந்திருக்கிறார். மாலை நேரம்.)
(பின்னணியில் பறவைகள் ஒலி)
(மேடையின் வலப் பக்கத்திலிருந்து நீல வண்ண பனியனும் வேட்டியும் அணிந்த ஒல்லியான தேகம் கொண்ட இளைஞன் வருகிறான். அவன் பெயர் வேலு.)
வேலு : ரங்கண்ணே. வணக்கம்.
ரங்கா : வாப்பா வேலு. வணக்கம்பா.
வேலு : என்னண்ணே ஊரெல்லாம் விழாக் கோலம். ஜனங்க மத்தியில சந்தோஷம் நீங்க என்னடாடன்னா ஒதுக்கிட்டீங்க. செய்தித் தாளும் கையுமா இங்க என்ன… நாளிதழா?… இந்த குக்கிராமத்துலயும் உங்களுக்கு எப்படியோ செய்தித்தாள் கிடைச்சுடுது.
உங்களுக்குத் தோதா பட்டணத்திலிருந்து ரெண்டு பேர் வந்திருக்காங்க.
வாத்தியார் வீட்ல தங்க வெச்சிருக்கேன். இப்ப வந்திடுவாங்க. ஒங்கள பார்க்க…
ரங்கா : நான் இங்க இருப்பேன்னு எப்படி தெரியும்? வேலு : நீங்க இந்த குட்டிச்சுவர்லதான்…
ரங்கா : என்ன…
வேலு : இங்கதான் இருப்பீங்கன்னு ஒரு யூகம்தான்.
ரங்கா : யார் அவங்க?
வேலு : கிராமத் திருவிழா பத்தி படம் எடுக்க வந்திருக்காங்க.
ரங்கா : அவங்கள ஏன் என்னோட சேர்த்து விடறே…
வேலு : நீங்கதான் படிப்பாளி. உங்களுக்குத் தானே நம்ம கிராமத்தைப் பத்தி முழு விவரமும் தெரியும். சரி அதை விடுங்க. ரங்கண்ணே… எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்… கேட்கலாமா…
(தள்ளி நிற்கிறான்)
வேலு : தள்ளி நின்னுகிட்டே கேட்கறேன். உங்க பேரு ரங்காராவ்னு சொல்றாங்களே… நிஜமாவே அதான் உங்க பேரா? உங்களுக்கு ஏன் அந்த பேரு…
ரங்கா : பேரைப் பத்தி கேட்டு என் சாதியப் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு பார்க்கறே…
வேலு : அது வந்து… அதான் நெனச்சேன்.
ரங்கா : நீ கேட்கறதனாலே சொல்றேன். சாதி பத்தி இல்ல பேரைப் பத்தி. எங்க அம்மாவோட அப்பா வீட்ல நான் பொறந்தேன். பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடந்துச்சாம். ஒரு பக்கம் எங்க தாய் மாமாக்கள். இன்னொரு பக்கம் சித்தப்பாக்கள். எங்க அம்மாவும் அப்பாவும் சினிமாப் பைத்தியங்கள். அம்மா அவங்களுக்கு பிடிச்ச நடிகர் பேரை வெக்கச் சொன்னாங்க. எங்க அப்பா அவருக்கு பிடிச்ச நடிகர் பேரை வைக்க சொன்னாரு. வாக்குவாதம். அப்ப நிறுத்துங்க என்ன கூத்து இதுன்னு ஒரு குரல் கணீர்னு ஒலிச்சுதாம். திரும்பிப் பார்த்தா எங்க தாத்தா. அப்பாவோட அப்பா நிற்கறாரு. எல்லாரும் இந்த சினிமாப் பைத்தியங்களை ஒரு வாங்கு வாங்கப் போறார் கிழவர்னு நெனச்சாங்களாம். ஆனா, அவரோ எனக்குப் பிடிச்ச நடிகர் எஸ்.வி. ரங்காராவ் பேரை பேரனுக்கு வைங்க. இது உத்தரவுன்னு சொல்லிட்டு போய்ட்டாராம். எங்க தாத்தா பேரு சுந்தரம். அப்பா பேரு வரதராஜன் & முன் எழுத்தும் பொருந்திடுச்சு.
வேலு : நல்ல தாத்தா, அந்த தாத்தா இன்னும் இருக்காரா?
(ரங்கா மேலே போய்விட்டதாகக் கை காண்பிக்கிறார்.)
வேலு : இந்த விஷயத்தை ஒங்க சுயசரிதையில மறக்காம எழுதுங்க.
(சுரேஷூம் கண்மணியும் வருகிறார்கள்.)
வேலு : வாங்க. வாங்க. ரங்கண்ணே. இவங்க தான். இந்த சார் பேரு சுரேஷ§. அந்த அம்மா பேரு கண்மணி. இவரு ரங்காராவ் அண்ணே. பூந்தோட்டத்துல இருக்கிற கிசான் பெர்ட்டிலைசர் வேளாண்மை தகவல் மையத்துல பொறுப்பாளரா இருக்காரு. விவசாயம் பத்தி நல்லா தெரியும். உரம் பூச்சி மருந்து உபதேசம்… எல்லா விஷயங்களும் தெரியும்.
(சுரேஷ§ம், கண்மணியும் ரங்காவுடன் கைகுலுக்கி வணக்கம் கூறிகிறார்கள்.)
சுரேஷ் : வேலு அது என்ன உபதேசம்…?
வேலு : அதாங்க…. அவருக்கு வேளாண்மை தகவல் மையத்துல வேலை அதிகம் இல்லே….
ரங்கா : டேய்..
வேலு : இல்ல அண்ணே. இப்ப சரியா சொல்றேன். அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அக்கம்பக்கம் கிராமங்களுக்குப் போய் மரம் நடுங்கள். மழை பெறுங்கள்… மழைநீர் சேகரித்திடுங்கள்… நீர்நிலைகளைப் பாதுகாத்திடுங்கள். அசுத்தம் செய்யாதீர்கள். நீர் ஆதாரங்களில் கழிவுநீர் சேர விடாதீர்கள். குளங்களைப் பராமரியுங்கள். சாக்கடைகளில் குப்பைகளைக் கொட்டாதீர்கள். ஆலைக் கழிவுகளை நீர் ஆதாரத்தில் கலக்காதீர்கள். பொது இடங்களில் தூய்மைக்கேடு செய்யாதீர்கள். குடிநீரைக் காய்ச்சி பருகுங்கள். தெருவில் நீரைத் தேங்கவிட்டு கொசு உற்பத்தியை ஏற்படுத்தா தீர்கள். மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். இப்படி எல்லாம் வாய் வழியாக பிரசாரம் பண்ணுவாரு. பொம்மலாட்ட நாடகம் நடத்துவாரு. துண்டுப் பிரசுரம் கொடுப்பாரு. எல்லாம் கைகாசு போட்டு செய்யறாரு.
ரங்கா : என்னோட பிரசாரம் ஜனங்க மனசுல பதிஞ்சுதான்னு தெரியல. உன் மண்டையில நல்லா ஏறியிருக்கு வேலு. சந்தோஷம்.
சுரேஷ் : அப்ப நீங்க ஒரு சமூகசேவகர்ன்னு சொல்லுங்க.
கண்மணி : அடிமை பத்தி இவர்கிட்டயே கேட்டுடலாமே…
வேலு : அடிமையா…
சுரேஷ் : இல்ல… இல்ல… அடிமைப்பெண் படம் பார்த்திருக்கீங்களான்னு கேட்கறாங்க.. முந்திரிக்கொட்டை… (பின்னணியில் மாடுகளின் சத்தம்)
வேலு : நீங்க பேசிக்கிட்டு இருங்க. நான் போய் மாடுகளைக் கவனிக்கணும். ராத்திரி சாப்பாடுக்கு ஏற்பாடு செஞ்சுடறேன். வந்துடுங்க. ரங்கா அண்ணே வரேன்.
(வேலு போகிறான்)
ரங்கா : என்ன சுரேஷ் நீங்க வந்த நோக்கம் என்ன?
சுரேஷ் : சார்… இந்த ஊர்ல கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருக்கறதா எங்களுக்கு தகவல் வந்துச்சு. அதனால அதைப் பத்தி ரகசியமா தகவல் சேகரிச்சு ஒரு படம் எடுக்க வந்திருக்கோம்.
ரங்கா : இவங்கள மாதிரி ஆளை வெச்சுகிட்டு ரகசிய படப்பிடிப்பா…?
சுரேஷ் : சார். நீங்க கிராமத்துக்கு வந்து நாலைஞ்சு வருஷம் ஆச்சுன்னு சொன்னாரு வேலு. உங்களுக்கு இந்த கிராமத்தைப் பத்தி நல்லா தெரிஞ்சுருக்குமே… கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருக்காங்களா சார்…
ரங்கா : இருக்கிற ஜனங்களே வாழ்வாதாரம் தேடி நகர்ப்புறங்களுக்குப் போய்க்கிட்டு இருக்காங்க. இங்க யாரு கொத்தடிமைத் தொழிலாளர் வெச்சு வேலை வாங்கறாங்கன்னு தெரியலையே. அப்படியே இருந்தாலும் படம் பிடிச்சு என்ன பிரயோசனம்? ஏதாவது ஒரு தொலைக்காட்சில காமிச்சு பணம் பண்ணிட்டுப் போயிடுவீங்க. அவங்கள மீட்கறது யாரு?
சுரேஷ் : நாங்க தொலைக்காட்சில காமிச்சா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் இல்லையா?
ரங்கா : அரசு நடவடிக்கை எடுக்குமா?ன்னு கார்டு போட்டு முடிச்சுடுவீங்க. பூந்தோட்டம் கிராமத்துல இருக்கிற பிரச்சினை குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை. செல்லப்பான்னு ஒருத்தர் தீப்பெட்டித் தொழிற்சாலை, பீடி தொழிற்சாலை, வாகன உதிரி பாக ஆலைன்னு விதம் விதமான ஆலைகளை நடத்திக்கிட்டு வர்றாரு. அவர் பெரும்பாலும் குழந்தைத் தொழிலாளர்களைத்தான் பயன்படுத்தி வர்றாரு. அவருக்கு எதிரா போராடினவங்க எல்லாரும் ஒடுங்கி ஒதுங்கி போய்ட்டாங்க.
நீங்க கிராமத் திருவிழா படம் பிடிக்க வந்தோன்னு சொல்லித்தானே ஊருக்குள்ள நுழைஞ்சீங்க. பொய்க்கால் குதிரை, கரகாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, சந்தை, விழா கடைகள், ரங்கராட்டினம் இதெல்லாம் படம் பிடிச்சுட்டு ஊர் போய் சேருங்க. அதான் உங்களுக்கு நல்லது. நான் வர்றேன்.
(ரங்காராவ் மேடையிலிருந்து வலப்பக்கமாக வெளியேறுகிறார்.)
கண்மணி : பாரு… சைல்ட் லேபர்தான். பாண்டட் லேபர்ன்னு நமக்கு தப்பா தகவல் வந்திருக்கு
சுரேஷ் : தொழிற்சாலையில கெடுபிடி ஜாஸ்தியா இருக்கும். ஆலைக்கு போய்க்கிட்டு இருக்கற பசங்கள வேணா படம் பிடிக்கலாம்.
கண்மணி : யாருக்கும் சந்தேகம் வராம இருக்க கிராம¢திருவிழாவையும் படம் பிடிச்சிடணும். சரி டார்க் ஆகப் போவுது. வா போகலாம். (மேடையின் வலப்பக்கத்திலிருந்து இரண்டு முகமூடி அணிந்த இளைஞர்கள் வருகிறார்கள். கத்தியைக் காட்டி மிரட்டி சுரேஷை இழுத்துச் செல்கிறார்கள். மேடையின் வலப்பக்கமாக செல்கிறார்கள்.)
கண்மணி : டேய். அவரை விடுங்கடா. ஹெல்ப்.. ஹெல்ப்.
(கண்மணி அவர்களைத் தொடர்ந்து ஓடுகிறாள்.)
(சிறிது நேரத்தில் கோமாளி வேடம் அணிந்து பூசணிக்காயும், வெண்டைக்காயும் மேடைக்குள் வருகின்றனர்.)
பூசணிக்காய் : என்னப்பா இருட்டற நேரத்துல இந்த மரத்தடிக்கு கூட்டி வந்துட்டே. காத்து கருப்பு ஏதாவது அடிச்சுடப் போவுது.
வெண்டைக்காய் : நீ அதை அடிக்காம இருந்தா சரிதான்.
பூசணிக்காய் : என்ன படிச்சுட்டு இருக்கே?
வெண்டைக்காய் : நாளைக்கு கிராமத் திருவிழாவுல ‘நீரைப் பாழாக்கும் மனிதன்’ங்கற தலைப்புல ஏழுமலை சாமிகள் நிகழ்ச்சி பண்ண சொல்லியிருக்காரு. அதான் பாயிண்ட்ஸ் படிச்சுட்டு இருக்கேன்.
பூசணிக்காய் : பரவாயில்லையே உனக்கு வாசிக்கக் கூட தெரியுமா? என்ன பாயின்ட் வாசி கேட்போம்.
வெண்டைக்காய் : வாசிக்கறேன் பார்.
(வாட்டசாட்டமான கிராமத்து ஆள் ஒருவன் அருகில் வந்து நிற்கிறான். இருவரும் அவனைக் கவனிக்கவில்லை.)
சுயநலவாதியான மனிதன் இயற்கையன்னைக்கு இழைத்து வரும் இன்னல்கள் ஏராளம்.
தொழிலுக்குத் தேவையான நீரைப் பயன்படுத்தி தொழில்களின் மூலம் உண்டாக்கும் கழிவுப் பொருட் களையும், இரசாயனப் பொருட்களையும் சில சமயம் நஞ்சு மிகுந்த இரசாயனப் பொருட்களையும் தனக்கு உதவி செய்த நீர்நிலையில் செலுத்த மனிதன் தயங்குவ தில்லை. இந்த அடாத செயலினால் நீர்நிலையின் நீர் பாழாகிறது. நீர்நிலையில் வாழும் மீன்கள் மடிகின்றன. மீன்களைத் தின்று வாழும் நீர்ப்பறவைகளும் மடிகின்றன. சுயநலவாதியான மனிதன் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதே இல்லை.
பூசணிக்காய் : நல்லா உணர்ச்சி பொங்க வாசிக்கறே.
கிராமத்து ஆள் : தம்பி. மனிதன் மனிதன்னு யாரைப் பத்தி சொல்றே?
வெண்டைக்காய் : நீங்களும் கேட்டீங்களா அண்ணே. பொதுவாக மனிதர்களைப் பத்தி நம்ம எல்லாரைப் பத்தியும் சொல்றேன்… அண்ணே.
கிராமத்து ஆள் : டேய், ஆலைக்கழிவு அது இதுன்னு சொல்றே. கோமாளி கோமாளியாகத்தான் இருக்கணும். இதெல்லாம் கோவில்விழாவுல பேசினே நசுக்கிடுவேன். ஜாக்கிரதை.
(வெண்டைக்காயின் முதுகில் ஓங்கித் தட்டுகிறார்.)
பூசணிக்காய் : ஊருக்கு நல்லது சொன்னா உதை விழும்னு சொல்லுவ இல்ல. இப்ப உனக்கே விழுந்திடுச்சு.
வெண்டைக்காய் : உனக்கு குளுகுளுன்னு இருக்கா…? (மேடையில் ஒளி மங்குகிறது.)
பூசணிக்காய் : இருட்டிக்கிட்டு வருது. வா. போகலாம். பசிக்குது.
(ஹலோ.. நில்லுங்க.. நில்லுங்க… என்று கூவிக் கொண்டே கண்மணி வலப்பக்கத்திலிருந்து வருகிறாள்.)
பூசணிக்காய் : என்ன மேடம். உங்களப் பார்த்தா மெட்ராஸ்காரங்க மாதிரி தெரியுது. இங்க எங்கே வந்தீங்க?
கண்மணி : அதெல்லாம் அப்புறம் சொல்றேன். என்னுடன் ஊரிலிருந்து வந்தவரை அடிச்சுட்டாங்க. அவரைத் தூக்கிட்டுப் போகணும். வாங்க தயவு செய்து…
பூசணிக்காய் : வாங்க. டேய் வாடா.
வெண்டைக்காய் : பூந்தோட்டம் & வன்முறைத் தோட்டமா இருக்குது.
(மூவரும் மேடையின் வலப்பக்கம் செல்கின்றனர். மூர்ச்சையான சுரேஷைத் தூக்கிக் கொண்டு வருகின்றனர். மேடையின் இடப்பக்கம் வழியாக செல்கின்றனர்.)
(திரை)
நான்காம் காட்சி
(மேடையில் கிராமத்து வீடு போன்ற பின்னணி. பெரிய திண்ணை காணப்படுகிறது. இதுதான் தமிழாசிரியர் தங்கையாவின் இல்லம். காலை நேரம். திண்ணையில் சுரேஷ் படுத்திருக்கிறான். வீட்டின் முன்புறம் போடப்பட்டுள்ள நாற்காலிகளில் தமிழாசிரியர் தங்கையாவும், ஏழுமலை சுவாமிகளும் அமர்ந்திருக் கின்றனர். கண்மணி நின்று கொண்டிருக்கிறாள்.)
(மேடையின் வலப்பக்கத்திலிருந்து மருத்துவர் தாமோதரன் வருகிறார். பூசணிக்காயும் அவருடன் வருகிறான்.)
(தாமோதரன் நடுத்தர வயதுக்காரர். வெள்ளைச் சட்டை வெள்ளை கால்சராய் அணிந்திருக்கிறார். மீசை இல்லா முகம். கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் கருவி. ஆம். இவர் ஓர் ஆங்கில மருத்துவர்.)
(ஏழுமலை சுவாமிகளும், தங்கையாவும் எழுந்து நின்று வாங்க வாங்க என்று வரவேற்கின்றனர்.)
தாமோதரன் : (கலகலப்பாக பேசுகிறார்) வணக்கம் எனக்காக ஏன் எழுந்திருக்கீங்க பெரியவங்க. உட்காருங்க. என்னோட பசங்கள கவனிச்சுட்டு வர நாழி ஆயிடுச்சு. மன்னிக்கணும்.
பூசணிக்காய் : அவர் வளர்க்கற பறவைகள், நாய், முயல் மாதிரி செல்லப் பிராணிகள பசங்கன்னு சொல்றாரு டாக்டர் அய்யா.
ஏழுமலை சுவாமிகள் : பலவித உயிரினங்களும் அழிந்து வர்ற நிலையில நீங்க சில உயிரினங்களைப் போஷிக்கறீங்களே சந்தோஷம். கடவுளின் அருள் உங்களுக்கு துணை செய்யும். தம்பியக் கவனிங்க.
(தாமோதரன் சுரேஷை பரிசோதிக்கிறார். முன்னால் வந்து பேசுகிறார்.)
தாமோதரன் : ஒண்ணும் பயமில்லை. சுவாமிகள் நல்லா முதல் உதவி செஞ்சு கட்டு போட்டு இருக்கீங்க.
ஏழுமலை : எனக்குத் தெரிந்ததை செய்தேன். (தாமோதரன் மருந்து சீட்டு எழுதுகிறார்.) (பூசணிக்காயிடம் தருகிறார்.)
தாமோதரன் : இந்த மாத்திரைகள் வாங்க பாரதி நகர்தான் போகணும். ஆனா, நம்ம ரகீம் பாய் நடத்தற முதியோர் இல்லத்துல இருக்கற மருந்தகத்துல இருக்கலாம். ஏழுமலை சுவாமிகள் சொன்னார்னு சொல்லு கொடுப்பாரு.
(ஏழுமலை சுவாமிகள் பணம் தர தமது கைப்பையை எடுக்கிறார். கண்மணி அதற்குள் நான் தருகிறேன். Êசாமி என்று பூசணிக்காயிடம் பணத்தைக் கொடுக்கிறாள்.)
தாமோதரன் : இவங்க யாரு?
தங்கையா : இந்த பொண்ணு பேரு கண்மணி. இந்தத் தம்பியோட வந்துச்சு.
தாமோதரன் : சாகசப் பயணத்துக்கு வந்தவங்களா? இந்தப் பெண்ணோட ஜாடையில யாரையோ பார்த்திருக்கிறேனே…
தமிழய்யா… எனக்கு கொஞ்சம் மோர் தர்றீங்களா?
(தமிழய்யா & நடுப்பகுதியில் உள்ள வாசல் வழியாக உள்ளே செல்கிறார்.)
(தாமோதரன் & சுவாமிகளை அழைத்துக் கொண்டு மேடையின் ஓர் ஓரத்தில் நின்று யாருக்கும் கேட்காதவாறு ஏதோ பேசுகிறார்)
(தமிழய்யா மோருடன் வருகிறார். தாமோதரன், தூக்கிக் குடித்துவிட்டு குவளையை தமிழய்யாவிடம் தருகிறார்)
தாமோதரன் : அய்யா நான் கிளம்பறேன். சுவாமி நான் உத்தரவு வாங்கிக்கிறேன். (கண்மணியிடம்) ஒண்ணும் இல்லம்மா. ரெண்டு நாள்ல அவருக்கு உடம்பு சரியாயிடும்.
கண்மணி : தயக்கத்துடன் சார்… உங்க ஃபீஸ்
தாமோதரன் : உங்களால எங்க கிராமத்துக்கு பெரிய உதவி செய்ய முடியும்ன்னு நெனக்கறேன். சுவாமிகள்கிட்ட சொல்லியிருக்கேன். அவர் சொல்லுவாரு, நீங்க செய்யற அந்த பெரிய உதவிதான் எனக்கு ஃபீஸ். வரேன்.
(செல்கிறார்)
கண்மணி : (வெகுளியாக) என்ன சொல்றாருன்னே புரியலையே.
(பூசணிக்காய் மாத்திரைகளுடன் வருகிறான்)
கண்மணி : (குழந்தைபோல் ஆர்வத்துடன்) டாக்டர் வீட்ல நிறைய செல்ல விலங்குகள் இருக்காமே பார்த்துட்டு வரலாம் வரியா. சுரேஷ் நான் போய் பார்த்துட்டு வரட்டுமா? சுவாமிஜி உன்னைப் பார்த்துப்பாரு. என்ன சாமி?
பூசணிக்காய் : போகலாம் மேடம்.
ஏழுமலை சுவாமிகள் : குழந்தை நீ வாம்மா. நான் உன்னைக் கூட்டிக்கிட்டு போறேன். நீ அவருக்கு ஆகாரமும், மாத்திரையும் கொடுத்துட்டு வா. நான் காத்திருக்கேன்.
கண்மணி : ரொம்ப நன்றி சாமி.
(கண்மணி நடுவில் உள்ள வாசல் வழியாக உள்ளே செல்கிறாள்.)
பூசணிக்காய் எனக்கும் இரண்டு இட்லி தாங்க என்று கூறியபடியே அவள் பின்னால் செல்கிறான். ரெண்டு இட்லி போதுமாங்க உங்களுக்கு? என்று கண்மணியின் குரல் ஒலிக்கிறது.
(மேடையில் இப்பொழுது விளக்குகள் அணைகின்றன. சில நிமிடங்களில் விளக்குகள் மீண்டும் ஒளிர்கின்றன. அதே காட்சி அமைப்பு)
(தமிழாசிரியர் தங்கய்யா நாற்காலியில் அமர்ந்து ஏதோ புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறார். முற்பகல் வேளை.)
(குடுகுடுப்பைக்காரர் மேடையின் வலப்பக்கத்திலிருந்து வருகிறார்.)
குடுகுடுப்பைக்காரர் : நல்ல காலம். நல்ல காலம் பொறக்குது அய்யாவுக்கு நல்ல காலம் பொறக்குது. பணம் கொட்டப் போவுது.
தங்கையா : வாங்க ரங்காராவ்.
ரங்காராவ் : கச்சிதமாக மாறு வேஷம் போட்டாலும் கண்டுபிடிச்சுடறீங்களே… வணக்கம் தமிழய்யா.
தங்கையா : வணக்கம்… உங்க குரல்தான் உங்களைக் காட்டிக் கொடுக்குதே… ஆமாம். இந்த வேஷம் எதுக்கு?
ரங்காராவ் : இன்னிக்கு திருவிழாவுல சமூகக் கருத்து சொல்லத்தான் இந்த கோலம்…
தங்கையா : கருத்து சொல்றவங்களுக்கு கழுத்துல தல இருக்குமாங்கறது தெரியலையே நம்ம ஊர்ல… இந்த ஊருக்குத்தான் தனி ஆட்சியா இருக்குதே.
ரங்காராவ் : என்ன இப்படி சொல்றீங்க…. நான் பொதுப்படையான கருத்துக்களைத் தானே பிரசாரம் பண்றேன். குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையைப் பத்தி பேசறத நிறுத்திட்டேனே…
தங்கையா : நீங்க நிறுத்திட்டீங்க. சுவாமிகள் ஆரம்பிச் சுட்டாரு. துணைக்கு ரகீம் பாய், ஃபாதர் ஜேம்ஸ் இவங்க ரெண்டு பேரையும் பிரச்சாரத்துக்கு சேர்த்துக்கிட்டாரு. ஏழுமலை சுவாமிகளுக்கு ஆபத்துன்னு தகவல் வருது. சுவாமிகளை நீங்கதான் எச்சரிக்கையா இருக்கச் சொல்லணும்.
ரங்காராவ் : வலிமையான நல்லிணக்கக் கூட்டணி தான். அவங்கள லேசுல அசைக்க முடியாது அய்யா. என்ன வாசிக்கிறீங்க…?
தங்கையா : என் நண்பர் அனந்தபுரம் அரங்கன் எழுதிய ‘காலதேவனின் காசோலைகள்’ங்கற புதுக் கவிதைத் தொகுப்பு.
ரங்காராவ் : ஒரு புதுக்கவிதை வாசியுங்களேன். காதால கேட்டுக்கறேன்.
தங்கையா : சரி. ஒரு புதுக்கவிதை வாசிக்கிறேன். கேளுங்க.
கதிரவனாக மாறுவோம்-ன்னு தலைப்பு
அஸ்தனமங்கள் என்பது
என்றும் வாழவில் இல்லை.
சிலநேரம் அவசியமானால்
ஓய்வெடுப்போம்
மீண்டும் புத்துணர்வு பெற.
ஆனால், காலம் தவறாத
கடமை தவறாத
சூரியனாக மாறுவோம்.
அப்போதுதான்
ஒளிமயமான எதிர்காலம்
என்பது வார்த்தைகளிலும்
கீதங்களிலும் இல்லாமல்
வாழ்விலும் வந்து நிற்கும்.
ரங்காராவ் : நல்லா இருக்கு அய்யா. இவர் வேணும்னா கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்கன்னு சொல்றாரு.
ஹிந்தி மொழில ஒரு வழக்கு ஆராம் ஹராம் ஹே…. தங்கையா : பொருளைச் சொல்லுங்க. ஓய்வே தீமையா?
ரங்காராவ் : சரியா கணிச்சுட்டீங்களே… சுரேஷ் எப்படி இருக்காரு.
தங்கையா : உள்ளே தூங்கிகிட்டு இருக்காரு. அந்தத் தம்பி, நீங்க எச்சரிக்கை பண்ணீங்களாமே. இங்க என் வீட்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. திருவிழாவைக் கூட படம் பிடிக்கலை. அதுக்குள்ள தட்டிட்டாங்க. இவங்க வந்த நோக்கம் செல்லப்பாவுக்குத் தெரிஞ்சுருக்கு போல. ஒழுங்கு மரியாதையா ஊருக்குப் போங்கன்னு மிரட்டி கவனிச்சிருக்காங்க. அவரோட அடியாளுங்க.
சரி. வாங்க. சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.
ரங்காராவ் : பரவால்லீங்க… நான் திருவிழாவுக்குப் போகணும்.
தங்கையா : வாங்க நீங்க.
(இருவரும் நடுவில் உள்ள வாசல் வழியாக செல்கின்றனர்.)
(திரை)
ஐந்தாம் காட்சி
(பின்னணியில் பூங்கா போன்ற தோற்றம். காலை நேரம். பருமனான சரீரம் கொண்ட நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் நடைப்பயிற்சி முடித்துவிட்டு அங்கு உள்ள திண்ணையில் அமர்கிறார். இவர்தான் பேராசிரியை மீனாட்சி. மேடையின் வலப்பக்கத்திலிருந்து அம்மா என்று அழைத்தபடியே கண்மணி வருகிறாள்.)
மீனாட்சி : குட்மார்னிங் கண்மணி. என்ன அதிசயமா இருக்கு?
கண்மணி : குட்மார்னிங்மா… என்ன அதிசயம்?
மீனாட்சி : நீ இவ்வளவு சீக்கிரம் முழிச்சுகிட்டியே அதைச் சொன்னேன். சரி… என்னைத் தேடிக்கிட்டு இங்கேயே வந்துட்டே…? காபி எப்படி போடறதுன்னு கேட்க வந்தியா?
கண்மணி : அய்யே… நீ எப்பவும் பிசியாக இருக்கே.. உன்கிட்டே நான் பேசணும். அதான் வந்தேன்.
மீனாட்சி : இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு தானே இருந்தே…?
கண்மணி : அம்மா…
மீனாட்சி : சரி சரி. விஷயத்தை சொல்லு.
கண்மணி : அம்மா. அப்பாவைப் பத்தி எனக்கு முழுவிவரம் சொல்லு.
மீனாட்சி : உன்னோட ஏழு வயசுலேந்து சொல்லிக் கிட்டு இருக்கேன். இப்ப என்ன மறுபடியும் கேட்கற?
கண்மணி : மறுபடியும் ஒரு தடவை சொல்லு.
மீனாட்சி : ஒங்க அப்பா பேரு செல்லதுரை. பெரிய பிசினெஸ் மேக்னெட். உனக்கு ஆறு வயசாகும்போது மலேசியா போனவரு என்ன ஆனார்னே தெரியல. மலேசியாவுல இருந்த அவருடைய நண்பர்களுக்கு கடிதம் எழுதி கேட்டப்ப அந்த நாட்டுக்கு வரவே இல்லேன்னு எழுதிட்டாங்க. பத்திரிகையில விளம்பரம் போட்டும் அவர் வந்து சேரலை.
இதுக்கு மேல நீயும் உன்னோட நண்பர்களும் சேர்ந்து துப்பறிய முடிஞ்சா கண்டுபிடிங்க. கண்டுபிடிச்சு அந்த ஆளைக் கொண்டா.
கண்மணி : இல்லம்மா… நான் என்ன சொல்றேன்னா… (சுரேஷ் வருகிறான்)
(செல்பேசி ஒலிக்கிறது)
மீனாட்சி : (செல்பேசியில் பேசுகிறாள்) வணக்கம் சார். எங்க வீட்ல இருக்கீங்களா? இங்க பக்கத்துல இருக்கற பூங்காவுலதான் இருக்கேன். நடைப்பயிற்சி முடிச்சுட்டேன். இதோ வரேன் சார்.
(கண்மணியிடம்) பார். பட்டிமன்ற நடுவர் சோமசுந்தரம் சார் நம்ம வீட்டுக்கே வந்து இருக்காரு. காத்திருக்காரு. நான் போறேன்… நீ மெதுவா வா…
(ஓட முடியாமல் ஓட்டமும் நடையுமாக மேடையின் வலப்பக்கமாக மீனாட்சி வெளியேறுகிறாள்.)
சுரேஷ் : என்ன கண்மணி… அம்மா, உங்க அப்பாவைப் பத்தி விவரங்கள் சொன்னாங்களா…?
கண்மணி : மலேசியா போனாரு திரும்ப வரலை… இதையேதான் மறுபடியும் சொல்றாங்க.
சுரேஷ் : அதுக்குள்ள ஓடிட்டாங்க. உங்க அப்பா செல்லதுரையும் பூந்தோட்டம் தொழிலதிபர் செல்லப்பாவும் வேற வேற நபர்களாக இருந்தால்…
கண்மணி : என்ன சொல்றே?
சுரேஷ் : டாக்டர் தாமோதரன் சார் உன்னுடைய முகஜாடையை மட்டுமே ஆதாரமா வெச்சு செல்லப்பாதான் உங்க ஃபாதர்ன்னு முடிவுக்கு வந்திருக்காரு.
கண்மணி : ஆமாம்.
சுரேஷ் : செல்லப்பாவை தொலைவிலிருந்து பார்த்தப்பவும் உனக்கும் அந்த சந்தேகம் வலுத்திருக்கு.
கண்மணி : என்ன சொல்ல வரே…
சுரேஷ் : உங்க அப்பாவா இருந்தா இத்தனை வருஷமா உன்னைனயும் உங்க அம்மாவையும் வந்து பார்க்காம இருந்திருக்க மாட்டாரே?
கண்மணி : குடும்பத்தை வந்து பார்த்தா மாட்டிக்கற அளவுக்கு ஏதாவது முறைகேடுகள் நிகழ்த்தியிருக்கலாம். செல்லதுரைய காணாமல் போனவனா செஞ்சுட்டு, புது மனுஷனா பூந்தோட்டத்துல ஆலை அதிபர் ஆகி இருக்கலாம்.
சுரேஷ் : யூகத்தின் அடிப்படையில் காரியத்தில் இறங்க முடியுமா? அவங்க பெரிய இடம். இதை மறந்துட்டு வேற வேலையப் பாரு.
கண்மணி : அடி வாங்கினதால இப்படி பேசறியா?
சுரேஷ் : அதனாலதான்னு வெச்சுக்கயேன். சரி. நான் ஒண்ணு கேட்கறேன்.
தமிழகத்துல ரிமோட் வில்லேஜ்ல இப்படி ஒரு அடாவடி நடக்குதுன்னு அரசாங்க அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு போக போறீங்க.
கண்மணி : செல்லப்பாவை உள்ள வைக்கப் போறோம்.
சுரேஷ் : அதெல்லாம் சரி. அந்த ஆலைகளுக்கு சீல் வைப்பாங்க. குழந்தைங்கள நீங்க பள்ளிக்கு அனுப்புவீங்க. அவங்க அப்பா அம்மாவை நட்டாத்துல விடுவீங்களா… பிழைக்க வழி இல்லேன்னுதானே பசங்கள பெத்தவங்க வேலைக்கு அனுப்பறாங்க.
கண்மணி : பெற்றோர்களை அம்போன்னு விடறதுக் காக நாம இந்த செயல்ல இறங்கல. கார்ப்பஸ் ஃபண்ட் உருவாக்குவோம். சுயஉதவிக் குழுக்கள் உருவாக்குவோம். ஆலைக்குப் போய் வேலை செஞ்சாதான் வேலையா? ஒவ்வொரு வீடும் துடிப்பா மும்முரமா இயங்கற சிறுதொழில்கூடமாக இருக்கும். அவங்களே உற்பத்தி செஞ்சு அவங்களே விற்பாங்க.
சுரேஷ் : கேட்கறதுக்கு கனவு மாதிரி நல்லா இருக்கு. நடைமுறைப்படுத்த முடியுமா? இங்க சென்னையிலே உட்கார்ந்துக்கிட்டு? முதல்ல அவங்களுக்கு அதாவது மக்களுக்கு நம்பிக்கை உண்டாக்க முடியுமா?
கண்மணி : உண்டாக்கணும். எல்லாத்தையும் சக்சஸ் ஆக்கிக் காட்டணும். ஏழுமலை சுவாமிகள், ரகீம் பாய், ஃபாதர் ஜேம்ஸ், டாக்டர் தாமோதரன், ரங்காராவ்… இப்படி எத்தனை பேரு இந்த வயதுலயும் பொது காரியத்துக்காக போராடறாங்க. அந்த கிராமத்துல… நாம இளைஞர்கள்… ரெண்டு மாசம் நம்ம தொழிலை விட்டுட்டு பொது காரியத்துல இறங்குவோம். உன்னோட ஒத்துழைப்பு எனக்கு வேணும். எதிர்மறையா பேசாதே…
(மேடையின் இடப்பக்கத்திலிருந்து சபாஷ் என்று குரல் கொடுத்துக் கொண்டே வேட்டி சட்டை அணிந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் வருகிறார்.)
கண்மணி : வணக்கம் சார்… நீங்க…?
வந்தவர் : நான்தாம்மா… தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்புச்சோழன். நடைப்பயிற்சிக்கு வந்தேன். நீங்க பேசிக்கிட்டிருந்ததெல்லாம் கேட்டேன். சந்தோஷப் படறேன். விரிவான அறிக்கையோட தலைமைச் செயலகத்துல என்னை வந்து பாருங்க. பத்தரை மணிக்கெல்லாம் வந்துடுங்க. உடனடி நடவடிக்கை எடுத்துடலாம்.
கண்மணி / சுரேஷ் & இருவரும் : ரொம்ப நன்றிங்க அய்யா.
(அமைச்சர் செல்கிறார்)
(திரை)
ஆறாம் காட்சி
(பூந்தோட்டம் கிராமத்து ஆலமரத்தடி. மோத்திலால் வித்தை காட்டுகிறார். சுற்றிலும் கிராமத்து மக்கள்.)
மோத்திலால் : அய்யாமாரே! அம்மாமாரே! அண்ணன் மாரே! தம்பிமாரே! தங்கைமாரே! வணக்கம். தேரோட திருவிழா முடிஞ்சு போச்சு. நம்ம கிராமத்துக்கு நல்ல காலம் பொறக்கப் போகுது. தொழில் வளரப் போகுது. கிராமம் செழிக்கப் போகுது. செல்வம் பெருகப் போகுது. என்ன… நான் குடுகுடுப்பைக்காரன் மாதிரி பேசறதா நெனக்கறீங்களா…? கொஞ்சம் பொறுங்க. இந்தக் கூடையை நல்லாப் பார்த்துக்கங்க. இப்ப கவிழ்த்து வைக்கறேன். இப்ப கூடையை எடுக்கறேன். பாருங்க.
(கூடையை எடுத்தவுடன் அங்கே வெண்டைக்காய் அமர்ந்து இருக்கிறான்.) (மக்கள் சிரிக்கிறார்கள்)
மோத்திலால் : டேய்… ஒண்ண யாருடா கூப்பிட் டாங்க. (எட்டி உதைக்கிறார். அவன் ஓடுகிறான்.)
மோத்திலால் : மறுபடியும் கவிழ்த்து வைக்கிறேனுங்க. இப்ப எடுக்கறேனுங்க.
(கூடையை எடுத்ததும் அங்கே கண்மணி அமர்ந்திருக்கிறாள். எழுந்து நிற்கிறாள்.)
கண்மணி : கிராமத்து ஜனங்கள் அனைவருக்கும் வணக்கம். நான் யாருன்னு தெரிஞ்சா உங்களுக்கு கோபம் வரும். அதுக்கு முன்னாடி நான் என்ன செஞ்சேன்னு சொல்லிடறேன். செல்லப்பாவோட ஆலைகளுக்கு சீல் வெச்சாச்சு.
(கிராம மக்களின் கரவொலி)
செல்லப்பாவையும் உள்ள வைச்சாச்சு. இனிமேல்… மோத்திலால் அண்ணன் சொன்னது மாதிரி நம்ம கிராமத்துக்கு புதிய விடியல்… புதிய அத்தியாயம். புதிய தொடக்கம்.. பசங்கள படிக்க வைங்க. ஒங்க வாழவாதாரத்துக்கு உகந்த வழிவகைகள் செய்யப் பட்டிருக்கு. பெரியவங்க அமைச்சர் அன்புச்சோழன், ஏழுமலை சுவாமிகள், ரங்காராவ் சார், ரகீம் பாய், ஃபாதர் ஜேம்ஸ், டாக்டர் தாமோதரன் சார், நகராட்சி தலைவர் சோமு அண்ணன் எல்லாரும் உங்களுக்கு வழிகாட்டுவாங்க. இனி… ஒளிமயமான எதிர்காலம் அனைவருக்கும் நிச்சயம். உழைப்பால் உயர்வோம். உவகை பெறுவோம். அதற்கு இறைவன் அருள் துணை செய்யும்.
(கிராம மக்களின் கரவொலி)
மோத்திலால் : இந்த எசமானி அம்மா யாருன்னு உங்களுக்குச் சொல்லவில்லையே.. அப்பா பண்ணிய பாவங்களுக்கு பரிகாரம் செஞ்ச புண்ணியவதி கண்மணியம்மா. செல்லப்பாவோட மகள். அவங்களுக்கு உங்க பாராட்டுகளை சொல்லுங்கள்.
(அனைவரும் கைதட்டுகின்றனர். சந்தோஷம் நன்றி என்றெல்லாம் குரல்கள் ஒலிக்கின்றன. கண்மணியின் கண்கள் பனிக்கின்றன.)
(கண்மணி பேச நா எழாமல் கைகூப்புகிறாள்) (திரை)
(நிறைந்தது)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |