உள்ளுக்குள் உணர்ந்தவன்
கதையாசிரியர்: காஞ்சனா ஜெயதிலகர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 7, 2026
பார்வையிட்டோர்: 3,233
(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘தண்டச்சோறு’ என்று இதுவரை யாரும் சொன்னதில்லை. ஆனால், சொல்லி விடுவார்களோ என்ற பயம் உண்டு. சொல் வந்தால் தாங்காது பொசுங்கிப் போவான். அதனாலேயே தர்மு ஓடி ஓடி வீட்டில் உதவினான். பிடுங்கி ஒத்தாசை செய்தான்.
அன்று பழைய பேப்பர்களை தராசில் நிறுத்து, கட்டியெடுத்துக் கிளம்பும்போது அப்பா கேட்டார்,
“அயர்ன்பாக்ஸ் எங்கே காணோம்?”
“நேத்து தர்மு உங்க சட்டை மூணைத் தேய்ச்சு அடுக்கினானே?”
“க்ரே பாண்ட் போட்டுட்டேன். நீலச் சட்டையில பட்டனைக் காணோம். வெள்ளை ஷர்ட் கசங்கலாயிருக்கு.”
“நா தச்சு தரம்ப்பா” தர்மு நூல் டப்பா தேடினான்.
“அயர்ன் எங்கே போச்சுடா?”
“பக்கத்து வீட்டு மாமி இரவல் கேட்டாங்க. ரம்யாவை இன்னைக்குப் பெண் பார்க்க வர்றாங்களாம். பட்டுச்சேலை தேய்க்கணும்ன்னு” அம்மா ஊசியில் நூலைக் கோர்த்தபடி உதடு கசங்காமல் பதில் தந்தாள்.
”நாலைஞ்சு வரன்லே இதுவரை ஒன்றும் தகையலை அந்தப் பொண்ணுக்கு…ம்?”
“பெண்ணுகளுக்கு வரன், பையன்களுக்கு வேலை, ரெண்டும் கைஅதுங்களுக்குச் சிரமமான கட்டங்க.”
“ஆனா வழி இருக்கும். நேரம் வரும்போது திறக்கும். நம்ப மனசு போல அமையும்.”
“தர்மூ…” கீழ் ஃப்ளாட் அக்கா தலை நீண்டது.
“வாங்கக்கா,”
”சார் ஆபீஸ் கிளம்பிட்டிருக்கீங்க. ஹாரி… தர்மு கொஞ்சம் அயர்ன்பாக்ஸ் தர்றியா? பாலாஜிக்கு இன்னைக்கு ஸ்கூல்ல ஏதோ விழாவாம். இப்ப வந்து சொல்றான். நேருஜி போல ஷெர்வானி செட் கொடுத்து விடக் கேட்டிருக்காங்க. அது கதர் பட்டு.. சுத்தமாக கசங்கிருக்கு.”
“மாமி வீட்டுக்குப் போயிருக்குக்கா. பத்து நிமிஷத்திலே பாலாஜி டிரஸ்ஸை அனுப்புங்க” என்றான் தர்மு-
மாமி வீட்டுக்கு ஓடிப்போய் அயர்ன் பாக்ஸையும், கூடவே அவர்களுடைய பட்டுப்புடவையையும் கேட்டு வாங்கி வந்தான்.
மேசையில் கெட்டியாக விரிப்பு பரப்பி, ப்ளக்கைச் செருகினான்.
“முதல்ல உங்க ஷர்ட்டுப்பா.-”
துணியில் வழவழவென்று ஓடி சுருக்கங்களை விழுங்கியது பெட்டி.
“ரெடிப்பா.”
“இப்படி எல்லார் வேலையையும் இழுத்துப் போட்டுக்கணுமாடா?” வெதுவெதுத்த, சட்டைக்குள் நுழைந்தபடி அப்பா முனகினார்.
“இருக்கட்டும்ப்பா. சும்மாத்தானே இருக்கேன்.” சொல்கையில் ஏனோ தொண்டை அடைத்தது.
‘சில்க்’ பகுதிக்கு ரெகுலேட்டரைத் திருகி, தெளித்து பட்டுச்சேலையைக் கவனமாகத் தேய்த்து மடித்தான்.
பழைய செய்தித்தாள் சுற்றி அலுங்காமல் மாமியிடம் தந்தான்.
“தாங்க்ஸ் தம்பி. இப்பவே வராங்க போல… காஃபிக்குக்கூட பால் இல்லை.”
மாமி எதேச்சையாகச் சொல்ல, இவன் ஓடிப்போய் அம்மாவிடமிருந்தும், மேல்வீட்டு அக்காவிடமிருந்தும் பால் பாக்கெட் வாங்கிக் கொடுத்தான்.
“பாலாஜி தேங்கா, பழம், இலை வாங்கப் போயிருக்கான். பூ சொல்லிவிட மறந்துட்டேன். இன்னும் அவனைக் காணலை.”
சைக்கிளில் கிளம்பி ஐந்தாம் நிமிடம் வாழையிலையில் சுற்றிய மல்லிகைப்பூ பந்தோடு திரும்பினாள் தர்மு.
“ரொம்ப தாங்க்ஸ்ப்பா – பெரிய ஒத்தாசை இது”
பழைய பேப்பர் கட்டோடு பஜார் போய், வீட்டிற்கான மளிகையுடன் திரும்பினான். ‘ஹிண்டு’வில் வேலைக்கு ஆட்கள் தேவை பகுதியை உறுத்து, குறித்து, அலுத்துத் தூங்கிப்போனான்.
‘சளபுள’வென்ற பேச்சில் உறக்கம் கலைந்தது. சற்று நேரம் உற்சாகக் குரல்களைக் கேட்டபடி கிடந்தான். சுகமாக இருந்தது. அடிக்கடி பொங்கிய சிரிப்பு, ஆவலைத் தூண்ட முகம் கழுவிக் கொண்டு முன்னறைக்கு வந்தான்.
“வாப்பா தம்பி… இதைப்பிடி”
இவனைப் பார்த்ததும் சின்னப் பெண் போல ‘வெடுக்’கென்று அந்த மாமி ஒரு தாம்பாளத்தை எடுத்து நீட்டினாள்.
“என்ன மாமி… எதுக்கு?” கேள்வியோடு ஏந்திக் கொண்டான். தட்டு, இனிப்பு, வெற்றிலைப் பாக்கு என்று அம்சமாய் நிறைந்திருந்தது.
“தம்பி கை ராசி ரம்யாவுக்கு நிச்சயம் பண்ணியாச்சுப்பா. நல்ல இடம். ‘உங்களாலானது செய்ங்க. போதும்’ன்னுட்டா.”
“சந்தோஷம் மாமி”
“கௌரவம் பார்க்காத புடவைத் தேய்ச்சு, பால், பூன்னு வாங்க ஓடி…” திருமணம் நிச்சயமாகிவிட்ட நிம்மதியிலோ என்னவோ மாமியின் விழியோரங்கள் நனைந்து விட்டன.
அம்மா முகமெங்கும் விரிந்த ஒரு பெருமைப் புன்னகையுடன்,
“அதுக்குத்தானே இருக்கோம். ஒருத்தருக்கொருத்தர் இதிலே என்ன?” என்றாள். மாலை ஆறுமணிக்கு அக்கா பாத்திரத்தோடு வந்தாள்.
“என்னன்னு சொல்லு?”
“வாசனை கொல்லுதே… வெங்காய பக்கோடா… என்னக்கா விசேஷம்?”
“நன்றி நவிலல். நொடியில டிரஸ்ஸைத் தேய்ச்சுத் தந்துட்டியே… ராஜிக்கு ப்ரைஸ்கூட கிடைச்சிருக்கு”
எல்லா அம்மாமாரையும் போல மகா பூரிப்புடனிருந்தாள். அவள்! தாயின் முந்தானைக்குள்ளிருந்த பொடியனை இழுத்துக் தட்டிக் கொடுத்தான் தர்மு.
”வெரிகுட் பாலா”
“பென்ஸில் பாக்ஸ்” – தயக்கத்துடன் சின்னக் கை நீண்டது.
“அடே… ஜோரான ப்ரைஸ்.”
அக்கா, குரல் தழைந்துப் பேசினாள்.
“அநியாயத்துக்கு வெட்கப்படுவாள். இப்போ ப்ரைஸ் கிடைச்சதிலே கொஞ்ச தைரியம் வந்திருக்கு. பக்கோடா எப்படியிருக்கு?”
“எப்பவும் போல ஏ-ஒன்க்கா.”
மற்றொன்றை வாயிலிட மொறுமொறுவென்று மணமாய்க் கரைந்தது. யோசிக்கும் முன் அதே வாய் பேசி விட்டது.
“இனி அயர்னிங் வேலையெல்லாம் என்கிட்டேயே தந்திடுங்கக்கா. எனக்கு டிபன் செலவு மிச்சம்.”
சிரித்தபிறகுதான் எண்ணம் மாலைச் சுடரானது!
“நிஜமாத்தான் சொல்றேன்க்கா.”
“கீழே இஸ்திரிக்காரன்கிட்ட ஓடி கணக்குப் பார்க்கறது. அல்லாட்டம்தான். அவனும் தினசரி வர்றதில்லை. ஆனா. உனக்கு வேலை கிடைச்சிருமே தர்மு?”
“கிடைக்கட்டும். அதுவரைக்கும் இது. பக்கோடாவிற்குப் பதில் பைசாவாகத் தந்திடுங்க”
“சரி. சரி.”
மேலும் கீழுமாயிருந்த மற்ற ஏழு வீடுகளிலும் போய் இதையே சொல்லி வந்தான். ஆனால், நினைத்தது போல துணி மூட்டைகள் வந்து குவியவில்லை. தெருமுனை தள்ளுவண்டி இஸ்திரிக்காரனிடம்தான் ஓடினார்கள். தாங்காமல் போய் கேட்டுவிட்டான்.
“ஏங்க்கா?”
”நிஜயாவே சொன்னியா தர்மு? உன் அப்பாம்மா என்ன சொல்லுவாங்க எங்களுக்குமே எப்படியோ இருந்தது….”
“வேலை சுத்தமாயிருக்குங்க்கா.”
“ராசியும் பிரமாதமாயிருக்கே” சிரிப்புடன் துணிகளை அள்ளித் தந்தாள்.
மறுபடி வீடு வீடாய்ப் போய் நின்றான்.
“தினம் ராத்திரி வந்து துணிகளை எடுத்துப் போறேன் சார். காலையிலே நீங்க கேட்கற நேரத்துக்குச் சரியா டெலிவரி பண்ணிடறேன்.” என்று நயந்தான்.
‘நாமாது வந்திருக்கேன்’ என்ற நாகேஷ் பாணியில் வாசல்களில் இரவு இவன் சத்தம் தவறாது கேட்டது.
தினம் வேலை வந்தது. வாக்கு காத்ததில் வேலை கூடியது. தோளும் பிடரியும் நோகத் தேய்த்தான்.
ஆனால், செய்யச் செய்ய வேலை நேர்த்தியானது. காசு வாங்கும்போது நொந்த தோள்கள் நிமிர்த்தன.
முன்பு போலவே ஓடி ஒத்தாசையாய் நின்றான். ஆனால், ‘வெட்டிப்பயல்’ என்று வைவார்களோ என்ற பதட்டத்துடன் அல்ல. பரிவுடன்… தன்னம்பிக்கையுடன்!
***
அன்று புடவை லாவகமாய் புரட்டி, மடித்து பெட்டி அழுத்திக் கொண்டிருந்தான். தேய்த்து அடுக்கிய பாண்ட் மடிப்புகள் சீரான சுத்தி வெட்டாய் நின்றன.
காபி குடித்தபடி அப்பா தன்னையே பார்ப்பதை உணர முடிந்தது. ஒரு கை நீர் அள்ளித் தெளித்தபடி நிமிர்ந்து புன்னகைத்தான்.
“என்னடா… வேலை எப்படியிருக்கு?”
“காசு வருதுப்பா. சோம்பலோட, நேரமும் போகுது… வேறென்ன?”
“காசுக்கு என்னடா பெரிய செலவு உனக்கு?” – அம்மா சீண்டினாள்.
“அப்ளிகேஷன் அனுப்ப, சினிமாக்கு, சுண்டல் வாங்க… எதுக்கும் இந்த இருபது நாளாய் உங்ககிட்ட காசு கேட்டு வரலியே… என்னப்பா?”
“வந்தாலும் தப்பில்லைடா.”
வார்த்தைகளின் பரிவில் இவனுள் பொங்கியது.
”நல்ல மனசிலே பேசறீங்கப்பா. நானும் பொறுப்புணர்ந்து நடந்துக்கணும்ல்லா”
“நடந்துக்கறடா… இதையே டெவலப் செய்து ‘ட்ரை க்ளினர்ஸ்’ இப்படி எதும் ஆரம்பிக்க ‘லோன்’ போடுவோமா?”
தோள் கொடுக்கும் தோழனாய் தகப்பன்! கட்டை விரலை உயர்த்தினான். முதுகில் தட்டிக் கொடுத்துச் சிரித்தார்.
“இந்த ஒரு மாசமாத்தான் உன் முகம் தெளிவாய் இருக்குது. வழியா இல்லை? ஜமாய்ச்சிடுவோம்.”
உலகையே ஆள வந்தவன் போல உணர்ந்தான் தர்மு. இனி வாசல்கள் தானாய்த் திறக்கும்.
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.