உலகை வென்றவன் உணர்ந்த செய்தி..!

(கதைப்பாடல்)
உலகை வென்ற மன்னனாம்
உயர்ந்த அலெக்ஸாந்தராம்
கிழக்கில் கடைசி நாடென
கருதியதோ இந்தியா!
இந்தியாவை வென்றிடின்
உலகை வென்றதாய்விடும்
எண்று எண்ணிப் படையுடன்
இந்த நாடு வந்தனன்!.
அன்று ஒரு காட்டிலே
அகண்ட மரத்து அடியிலே
நீண்ட தாடி மீசையோடு
இருந்த துறவி கண்டனன்.
கண்கள் ரெண்டை மூடியே
கடுந்தவத்திருந்தனர்
கண்ட அந்தத் துறவியைக்
கிட்டி நின்றான் அவனுமே!
‘உலகை வென்ற மன்னன்நான்
உன்னைக் காண வந்துள்ளேன்!
கண்ணைத் திறந்து பார்!’ எனக்
கடுமையாகக் கூறினான்.
திறக்கவில்லை கண்களை!
துறவி நிஷ்டை கலையலை
உரக்க மன்னன் பலமுறை
ஓங்கிச் சொன்ன போதிலும்,
ஆழ்ந்திருந்தார் துறவியும்
ஆழ்மனதை அடக்கியே!
அலெக்ஸாந்தர் வெகுண்டுதன்
வாளெடுத்துத் துறவியின்
கழுத்தில் அழுத்தி வைத்து’நீ
என்னடிமைத் துறவியே!, நான்
எழுந்து வாநீ! என்றவன்
கண்கள் திறந்து மென்மையாய்..
‘என்ன சொன்னாய் மன்னனே?!
என்ன நானுன் அடிமையா?!
என்னடிமை அடிமைநீயடா!
என்று துறவி சொன்னதும்…
அதிர்ந்த அலெக்ஸாந்தரும்..
என்ன? நானுன் அடிமையா?
என்ன நீரும் சொல்கிறீர்?!
என்று கேட்டு வியந்திட…
‘ஆமாம் அலெக்ஸாந்தரே!
அடியேன் கோபம் வென்றவன்
‘கோபம் எனக்கு அடிமையாம்!
நீயோ கோபம் கொண்டவன்
கோபத்திற்கே அடிமையாம்
கோபம் எனக்கடிமைநீ
கோபம் தனக்கு அடிமையெனில்
அடிமைக்கு அடிமை அல்லவோ?
உணர்வை வென்ற என்னைநீ
உலகில் வெல்லல் கூடுமோ
என்றுணர்த்த அவனுமே
துறவி தன்னைப் பணிந்தனன்.
ஞானமற்ற மன்னனாய்
ஞாலம் வெல்ல வந்தவன்
ஞானம் பெற்று ஞானியாய்
நாடு திரும்பிச் சென்றனன்!.
உலகை வென்று போய்விடும்
உணர்விலிங்கு வந்தவன்
எடுத்துப் போக எதுவுமே
இல்லை யென்பதுணர்ந்தனன்!
அந்த ஞானம் தந்தது
அன்னை இந்த பூமியே
இந்த எண்ணம் இதயத்தில்
இறுத்தி வைத்தல் நல்லது!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 90
