உலகப்போர்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2026
பார்வையிட்டோர்: 133

நிரஞ்சன் தனது நிம்மதியை தொலைத்து பல நாட்களாகி விட்டன. இரவில் உறக்கமின்றி தவித்தார். எதிர்காலத்தைப்பற்றி எக்குத்தப்பாக சிந்தனை வந்து போவதால் யாருடனும் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை.
முக்கியமாக தொழிலை நினைத்து கவலை அதிகமானது.
தொழில் லாபம் தரவில்லையா? திருமணமாகவில்லையா? குழந்தைகள் பிறக்கவில்லையா? கார் வாங்க முடியவில்லையா? குடியிருக்க சொந்த வீடு இல்லையா? சொத்துக்கள் ஏதும் இல்லையா? கடன் தொல்லையா? குழந்தைகள் பேச்சைக்கேட்பதில்லையா? கணவன் மனைவிக்குள் சண்டையா? உடலில் தீராத நோயா? இதில் எந்தக்கேள்விக்கும் ஆம் எனும் பதில் இல்லை.
ஒரேயொரு வீடியோ…. உடலுக்குள் பூகம்பமே வந்து விட்டது. நண்பர்களை போனில் அழைத்து சரக்கு போட வேண்டும் என சொன்ன போது அனைவரும் அரண்டு, மிரண்டு போயினர்.
“நீ தான் பேசறியா நிரஞ்சன்? பார்ட்டில எங்களுக்கு தண்ணி வாங்கி கொடுத்துட்டு நீ வெறும் தண்ணியத்தானே குடிச்சு பழக்கம். திடீர்னு இப்ப என்ன ஆச்சு? எதுக்காக தேம்பி அழறே? துக்கத்துக்கும், தூக்கத்துக்கும் அடிக்கிறதில்ல டிரிங்க்ஸ். அது ஒரு விதமான பழக்கம்” நண்பன் பரிதி சொல்லியும் சமாதானமாகவில்லை.
“என்னங்க ஆச்சு உங்களுக்கு? பைத்தியகாரர் மாதிரி நடந்துக்கறீங்க. என்ன இல்லை? சின்ன வயசுல ஒரு வேலை சாப்பாட்டுக்கே வழியில்லாம இருந்த நீங்க இன்னைக்கு…. ஊர்லயே நீங்கதான் வசதியானவரா இருக்கறீங்க. வயசும் அறுபதாகப்போகுது. இளமையா வேற இருக்கறீங்க. சொல்லப்போனா நாந்தான் கவலைப்படோணும். என்னைப்பாருங்க எப்படி கெழடு தட்டிக்கெடக்கிறேன்னு. நேத்தைக்கு என்னோட தங்கச்சி என்ன சொல்லீட்டு போனா தெரியுங்களா…?” மனைவி மகிழி சொன்னதைக்கேட்டவர் சகஜ நிலைக்கு வந்தவாறு “என்ன சொன்னா….?” எனக்கேட்டார்.
“அறுபதாங்கல்யாணத்த உன்னோட வேண்டாம். புதுசா ஒரு பொண்ணோட நடத்திடலாம் போல. மச்சான் இன்னும் முறுக்கமா இருக்கறாருன்னு சொன்னா…”
“பைத்தியகாரி. உன்ற தலைல நீயே மண்ண அள்ளி போட்டுக்குவியா? அவளுக்குத்தான் புத்தி அப்புடி போகுதுன்னா உக்கெங்க போச்சு. எங்கிட்ட இந்த மாதிரி இனி மேல் பேசிடாதே. அவனவனுக்கு ஆயிரத்தெட்டு கவலை. இவளுக்கு வேற…” சலித்துக்கொண்டார்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த மனைவியின் தங்கை பரிமளா “மச்சா நீங்க பேசினத கேட்டிட்டே தான் வாரேன். நீங்க சின்ன வயசுல கஷ்டப்பட்டீங்க. அப்புறம் முயற்ச்சி பண்ணி முன்னேறிட்டீங்க. இப்ப உங்க கிட்ட கோடிக்கணக்குல பணம் இருக்கு.பல கோடிக்கு சொத்து இருக்கு. அப்ப காசில்லாம பசில தூங்கினீங்க. இப்ப காசிருந்தும் பசிக்கலேங்கறீங்க. அப்ப ஒன்னும் இல்லேன்னு கவலை. இப்ப இருக்கறது போயிருமோன்னு கவலை. இத பாருங்க கவலைப்படறதுக்கு நெறைய இருக்கு. அதுக்காக கவலைப்பட்டிட்டே இருந்தீங்கன்னா வாழறதுல எந்த அர்த்தமும் இல்லை” என்றவள் கோவிலிலிருந்து வாங்கி வந்த திருநீறை நிரஞ்சனினின் நெற்றியில் உரிமையோடு வைத்து விட்டாள்.
“அக்கா நாஞ்சொன்னதா உங்க கிட்ட சொன்னதும் கோபப்பட்டீங்க. ஆனா என்னோட புருசன் கிட்ட அதையே சொன்னேன்னு வச்சுக்கோங்க. அப்படித்தாம் பாரு கட்டிக்கிறேம்பாரு. வாயில சொன்னா நடந்திடப்போறதில்லை. எதையும் ஜாலியா எடுத்துக்கனம். நான் மொதல்ல உங்களை மாதிரி ஒரு புருசன் வேணும்னு நெனைச்சிருக்கேன். ஆனா இப்ப அந்த யோசனை எனக்கில்லை. சாதாரண வேலைக்கு போனாலும், வாரம் ஒரு தடவை தண்ணியடிச்சாலும் தானும், தன்னை சுத்திலும் இருக்கறவங்களும் சந்தோசமா இருக்கற மாதிரி நடந்துக்கிறவருதான் புருசனா வரோணும்னு எந்தப்பொண்ணும் நெனைப்பாள். உலகப்போர் வரப்போகுதுன்னு ஒரு செய்திய வீடியோவுல பார்ததும் நீங்களும் சந்தோசமில்லாம, யாரையும் சந்தோசப்படாம செய்யறீங்களே….? வந்தா வரட்டும். தொழில் போனா போகட்டும். சந்தோசமா வாழ உங்களை மாதிரி தொழிலதிபரா இருக்கனம்னு அவசியமில்லை. நமக்காகத்தான் தொழில், தொழிலுக்காக நாம இல்லை. வீட்லயாவது தொழில மறங்க…” மைத்துனி பேசப்பேச மனம் மாறிய நிரஞ்சன் “சரி… இப்ப நீ என்னக்கட்டிக்கிறியா…?” என்று கேட்டதும் அந்த இடமே கலகலப்பானது.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
