கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2025
பார்வையிட்டோர்: 1,714 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘டங்… டங்… டங்…”

பாக்குரலின் ஒலிதான் இது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு எல்லாம் அளவாகச் சேர்த்து இடித்துக் கொண்டிருந்தாள் வள்ளியம்மை.

வெற்றிலைப் பாக்கு இடிக்கும்போது அவள் காது களில் அணிந்திருந்த பெரிய சிவப்புக்கல் பதித்த தோடு கள் முன்னும் பின்னுமாக ஆடின. வெள்ளிக் கம்பிபோல் இருந்த தலைமுடி சிலிர்த்து காற்றில் நடனம் ஆடியது. நெற்றிக்கு மேல் உள்ள தலைமுடி சுருக்கம் விழுந்த நெற் றியில் கால்பகுதியை மறைத்தது போதாதென்று இடது கண்ணையும் மறைத்தது. மிதுக்க வற்றல்போல் இருந்த கன்னங்களில் புன்னகை தவழ அதைக் கையால் ஒதுக்கி விட்டுக்கொண்டு வெற்றிலையை இடித்தாள்.

“பெரியம்மா! என்ன வெற்றிலைப் பாக்கு இடிக்கிறீங்களா? இதைவிட்டுத் தொலைங்கனா கேட்கமாட்டேங்கி றீங்களே” என்று சொல்லியபடி அல்லி அங்கு வந்தாள். அல்லி வள்ளியம்மையின் தங்கை மகள்.

“எப்படிடீ கண்ணு முடியும்! நீ நாலு எழுத்துப் படிச்சிருக்கே! திருக்குறள், தேவாரம் என்று சொல்லுறே. வள்ளுவர் கூறிய கற்பைப்பற்றி சொல்லுறே. வாசுகியைப் பத்தியும், கண்ணகியைப் பத்தியும் கதை கதையா என்னிடம் சொல்லுறே. உனக்கு வெற்றிலைப் பாக்குப்போடுறதெல்லாம் கெடுதலாத்தெரியுது எனக்கு என்னமோ வெற்றிலை இல்லாமே இருக்கவே முடியலே. ம்… என்ன செய்யுறது”

“சரி சரி அதுகிடக்கட்டும் பெரியம்மா நான் உங்கக் கிட்டே ரொம்ப நாளா ஒண்ணு கேட்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். அம்மாவிடம் கேட்டேன் அவங்க உங்கக்கிட்டேயே கேட்டுத் தெரிஞ்சுக்கிறச் சொல்லிட்டாங்க” என்று மெல்லப் பீடிகைபோட்டாள்!

“என்னடி சும்மா சொல்லு” பாக்குரலில் இருந்த வெற்றிலையைச் சுட்டுவிரலால் வழித்து எடுத்து வாயில் போட்டுக் குதப்பினாள்.

“பெரியம்மா உங்களுக்கு இப்பக் குறைந்தது ஐம்பது வயதாகிலும் இருக்கும்ல”

“ஆமா அதுக்கென்ன?”

“அதுக்கொன்றுமில்லை. இவ்வளவு நாளும் திருமணமே செய்துக்கிறாமல் அவ்வையாரைப்போல் என்றென்றும் கன்னியாகக் காலந்தள்ளிக்கிட்டு இருக்கிறீங்களே ஏம்மா?”

“ம்… என் தங்கச்சிகூட – அதுதான் உன்னைப் பெத் தவ – என்னைத் திருமணஞ் செஞ்சுக்கிறச் சொல்லி ஒற் றைக்காலில் நின்றா. எனக்கென்னவோ திருமணம் என் றால்…” கண்களில் நீர் அரும்பியது. சொல்லமுடியாமல் திணறினாள்.

“ஏம்மா கண் கலங்கிறீங்க?”

வள்ளியம்மை! கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “எனக்கு அன்று நடந்த அந்த நிகழ்ச்சியை நினைத்தாலே அழுகை பொங்கிக்கொண்டு வருது. நான் கொஞ்சம் மன அமைதியோடு இருக்கிறதுக்குக் காரணமே நீங்க தான்.உன்னையும், உன்கூடப் பிறந்தவங்களையும் நான் என் வயிற்றில் பிறந்த பிள்ளைகளாகவே நினைத்துக்கிட் டிருக்கிறேன் ” கண்ணீர் பெருக்கெடுக்க அல்லியை மார் போடு அணைத்துக்கொண்டாள்.

“ஏம்பெரியம்மா! திருமணஞ் செய்துக்கிறாததுக்குக் காரணம் சொல்லாமல் அழுறீங்க?” என்று பாசம் சொற் களில் படரக்கேட்டாள்.

“அதுக்குக் காரணம் இருக்கு, காரணம் இல்லாமல் கண் கலங்குவேனா”.

“என்ன பெரியம்மா எனக்கிட்டே சொல்ல மாட்டீங்களா?”

“உனக்கிட்டே சொல்லாமே வேற யாருக்கிட் டேம்மா சொல்லச் சொல்லுறே. சொல்றேன் கேளு. எனக்கு வயசு பதினேழு பதினெட்டு இருக்கும, நான் பூப்பெய்தி வீட்டில்தான் இருந்தேன். என் தகப்பனார் கப்பலடிக்குப் போய்விட்டார். என் தாய் சந்தைக்குப் போய்விட்டார். தங்கச்சி-அதுதான் உன் தாய்-பள்ளிக் கூடத்திற்குப் போயிட்டாள். நான் மட்டுந்தான் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது கதவு தட்டும் ஒலி கேட்டது. நான் என் தாய் என நினைத்துக் கதவைத் திறந்தேன். என் எதிரில் வயிரம் பாய்ந்த கட்டையைப் போல் ஒருவர் நின்றார். நான் அவரைப் பார்த்தேன். அவரும் எ ன் னை விழுங்கி விடுவதைப்போல் பார்த்த படி…” கண்களில் நீர் மல்கியது.

“என்ன பெரியம்மா நடந்தது. ஆளில்லாத சமயத் தில் உங்களைக் கையைப்பிடித்து இழுத்தானா. அயோக்கியன் இப்படிப்பட்டவன்களுக்குச் சரியான பாடம் படித்துக் கொடுக்கவேண்டும்.

“ஊகூம் அப்படியெல்லாம் சொல்லாதே. நீ நினைப் பதைப்போல் ஒன்றும் நடந்துவிடவில்லை. அவர் என்னை விழுங்கிவிடுவதுபோல் பார்த்தபடி சிரித்தார். அந்தச் சிரித்த முகம் என் உள்ளத்தில் அப்பொழுதே ஆழப் பதிந்துவிட்டது. அவர் வேறு யாருமில்லை; என் சொந்த அத்தை மகன் தான். கப்பலடியிலிருந்து என் தகப்பனார் தான் அழைத்துவந்திருந்தார். என் தகப்பனாரும் அவரும் ஊரில் சேர்ந்து நின்று பிடித் த படத்திலிருந்ததைப் போலவே அப்போதும் இருந்தார் அவர்; நான் ஒரு நொடியில் என் தகப்பனார் அவர் அருகில் நிற்பதைக்கூட மறந்துவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளேன். அவர் பேரு வள்ளி- தெய்வானைக்கு நடுவில் நிற்கிறாரே அவர் பேருதான்.

அன்றுமுதல் எங்களுக்குள் காதல் அரும்பி மொட்டு விட்டு மலர்ந்து முல்லைமணம் பரப்பியது. இருவரும் ஒரு வரையொருவர் உயிருக்கு உயிராக நினைத்திருந்தோம். ஒரு நாளைக்கு ஒரு தடவையாகிலும் அவருடைய சிரிச்ச முகத்தையும், கள்ளங்கபடம் இன்றி வெள்ளை உள்ளத் தோடு பேசும் பேச்சையும் கேட்காவிட்டால் எனக்கு ஒன்றுமே ஓடாது; வீட்டு வேலை ஒன்றும் ஒழியாது. கறி யில் சில சமயம் உப்பைக்கூட அள்ளிப்போட்டது உண்டு. எப்போதும் அவரை நினைத்துக்கொண்டிருந்தேன். உறங் கும்போதுகூட கனவு என்ற பெயரில் அவரும் நானும் பேசிக்கொண்டுதான் இருப்போம். அப்படி உயிருக்கு உயிராக இருந்தோம். சக்தி இன்றி சிவமும், சிவம் இன்றி சக்தியும் இயங்காது என்று சொல்லுவியே அப்படித்தான் இருந்தோம். அவ்வளவு ஒற்றுமை. சுருக்கமாகச்சொன்னா உடல்தான் இரண்டே தவிர உள்ளம் ஒன்றுதான். எங்களைப் பிரிக்க; இருந்தாற்போல் சண்டை வந்து விட்டது…” வள்ளியம்மைக் கண்களில் நீர் துளிர்த்தது.

அல்லி இடைமறித்து, “ஏம்பெரியம்மா இவ்வளவு ஒற்றுமையாக இருந்த உங்களுக்குள் ஏம்மா சண்டை வந்துச்சு?” என்று கேட்டாள்.

“நாங்களா சண்டை போட்டுக்கொண்டோம்! அது தான் இல்லை. எங்களுக்குள் சண்டையே வந்ததில்லை. அவருதான் சிலசமயம் என்னமோ ஊடலாம்ல அந்த ஊடலைச்செய்வார். பொய்ச்சண்டை போட்டுவிட்டுஊட லுக்குப் பின் கூடல் என்று என்னைக் கட்டிப்பிடிப்பார். அப்படிப்பட்ட நாங்களா சண்டைபோட்டுக் கொள் வோம். சண்டை வந்தது சப்பான்காரனுக்கும் வெள்ளைக் காரனுக்குந்தான். சப்பான்காரன் பறவக் கப்பலில் பறந்துவந்து குண்டுபோட்டான். எந்தப்பக்கம் திரும்பி னாலும் குண்டு, தீ, அலறல், கூக்குரல், ஏங்கேக்கிறே! அதை நினைத்தாலே குலையே நடுங்குது. அந்தச் சண்டை யில்தான்…” ஆற்றாமையால் அழுதாள் வள்ளியம்மை.

“பிறகு என்னம்மா நடந்தது?” அல்லி தழுதழுத்த குரலில் பதற்றத்துடன் கேட்டாள்.

“அந்தச் சண்டையில் ..” அவளால் சொல்ல முடிய வில்லை. நா தழுதழுத்தது. குதப்பி வைத்திருந்த வெற் றிலை எச்சில் அவளையறியாமலே இரவிக்கை அணியாத அவள் நெஞ்சில் விழுந்தது.

“அழாதீங்கம்மா… எல்லாம் விதியின் விளையாட்டு. உங்கள்மேல் உயிரையே வைத்திருந்த அவர் இந்தப் பாழாய்ப்போன சண்டையில் சாகவேண்டும் என்று இருந்திருக்கிறது” என்றாள் அல்லி.

வள்ளியம்மை தன் முன்றானையால் வெற்றிலை எச்சி லையும், கண்ணீரையும் துடைத்துக்கொண்டு, “நீ ஒரு பக்கம்டி! அவர் சாகவில்லை அந்தச் சண்டையில் என் தந்தை இறந்துவிட்டார்” என்று உணர்ச்சிவசத்தில் சொல்லிவிட்டு ‘கோ’என்று அழுதாள்.

அழுகை அடங்க சிறிது நேரம் சென்றது. மீண்டும் தொடர்ந்தாள்; “சண்டை கொஞ்ச நாளில் முடிந்துவிட் டது. அதன்பிறகு சப்பான்காரன் ஊரை ஆண்டான். அப்போது நேதாசி படைக்கு ஆள் சேர்த்தாங்க. அதில் என் அத்தானும் சேர்ந்துவிட்டார். வெள்ளைக்காரனை இந்தியாவிலிருந்து விரட்டவேண்டும் என்ற ஆர்வத்தில் பெண்கள்கூட படையில் சேர்ந்தாங்க. நானும் பெண்கள் பிரிவில் சேரப்போனேன். அதற்கு அவர், “படையில் சேரவேண்டாம். நீ இங்கே இருந்து வயதான உன் அம் மாவையும், பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு இரு” என்று சொல்லித் தடுத்துவிட்டார். அவர் சொல்லைத் தட்டலாமா? அவர் சொல்வதை தேவ வாக்காக நினைத் துக்கொண்டு நான் வீட்டில் இருந்துவிட்டேன்.

நே(த்)தாசிப் படை சண்டைக்குச் சென்றது ஏதோ பருமாப் பக்கமாம். அந்தப்படையில் சென்றவர்தான்…அதற்குப் பிறகு ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவரிட மிருந்து ஒரு கடிதங்கூட வரலே. மறுபடியும் சிங்கப்பூரில் சண்டை நடந்தது. எங்குப் பார்த்தாலும் குண்டுதான். நாங்கள் பயந்துபோய் பழைய இடத்தைவிட்டு இங்கு வரப்புறப்பட்டோம் அப்போதும் எங்கள் வீட்டிற்குப் பக்கத்துவீட்டில் உள்ள பாவாயி வீட்டுக்காரவங்களும் எங்கள்கூட சேர்ந்து வந்தாங்க. நாங்கள் இங்கு வந்து விட்டோம். நாங்கள் இங்கு வந்த மறுநாளே நாங்கள் இருந்த அந்தப் பழைய வீட்டில் குண்டு விழுந்தது. நாங் கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டாலும் என்னைப் பொறுத்தவரையில் நான் என்றோ செத்துவிட்டேன். அவர் வருவார் வருவார் என்று அல்லும் பகலும் நினைத்து நினைத்து நடைப்பிணமாக காலத்தைக் கழித்துவிட்டேன்.

சண்டை முடிந்தது. வெள்ளைக்காரன் மீ ண்டும் வந்துவிட்டான். நேதாசிப் படையில் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் திரும்பி வந்துவிட்டதாக கேள்விப்பட் டேன். ஆனால் அவர் வரவில்லை. ‘நான் திரும்பி வந்து விடுவேன் வந்ததும் நம் திருமணம் என்று சொல்லிவிட்டு சென்றவர் திரும்பி வரவில்லை! இந்தச் சண்டையில் நீ செத்துவிட்டாலும் நான் வந்து உன் சடலத்திற்குத் தாலிகட்டிய பிறகுதான் தூக்கிப் போடுவேன். பயப் படாமலும் கவலைப்படாமலும் இரு. நான் எங்கிருந்தா லும் நீ என்னுள் இருந்துகொண்டே இருப்பாய்’ என்று சொல்லிவிட்டுச் சென்றவர் திரும்பி வரவில்லை. என்னை விட்டு ஒரு நிமிடங்கூடப் பிரிய மனம் இல்லாத என்னத் தான் அன்று பிரிந்தவர்தான். இன்னும் வரவில்லை. அவர் வாங்கிக்கொடுத்துப் பூச்சூடிய இந்தக் கொண் டையில் மறுபடியும் பூச்சூட அவர் வரவில்லை. முடியும் தும்பைப்பூப்போல் நரைத்துவிட்டது. இன்னும் வரவில் லையே அல்லி. சுமங்கலியாகச் சாக ஆசைப்பட்ட என் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிற்றை எடுத்து மூன்று முடிச்சு போட அவர் இன்னும் வரவில்லையே அல்லி; இன்னும் வரவில்லையே அல்லி…” அழுகை குமுறிக்கொண்டு வந் தது சிறுபிள்ளையைப்போல் அழுதாள்.

அல்லிக்கும் அழுகை வந்துவிட்டது. இவ்வளவு அன் பாக இருந்திருக்கின்றனரே. இவர்களுக்கு இப்படியொரு சோதனையா ஏற்படவேண்டும் என்று எண்ணினாள். தன் மனத்தைத் தேற்றிக்கொண்டு தன் பெரியம்மாளுக்கும் ஆறுதல் கூறினாள்.

வள்ளியம்மை மனம் சற்று ஆறுதல் அடைந்தது. “ஏம்பெரியம்மா இதற்குத்தான் திருமணமே வேண்டாம் என்று இருந்திட்டீங்களா?” என்று கேட்டாள்!

“ஆமா. நீர் இல்லாமல் மீன் வாழமுடியாது அதைப் போல் என்னுள்ளத்தில் குடிகொண்டுவிட்ட என் அத் தான் இல்லாமல் எனக்குத் திருமணமும் நடக்கமுடியாது என்று இருந்துவிட்டேன். அல்லி! உனக்குக் கருத்துத் தெரிஞ்சதிலிருந்து நான் பூச்சூடி இருக்கிறேனா? இல்லை, அவர் பூச்சூடிய இந்தக் கொண்டையில் அவர் மீண்டும் சூடாதவரையில் நானாகக்கூட சூடிக்கொள்வதில்லை என்று உறுதிபூண்டுவிட்டேன். அதுமட்டுமில்லை அல்லி! கோழிக்கறி சாப்பிடுவது இல்லையே ஏன் தெரியுமா? அவ ருக்குக் கோழிக்கறி என்றால் உயிர். நல்லா விரும்பிச் சாப் பிடுவார் அவர் சாப்பிட்டாலே நான் சாப்பிட்டதைப் போல இருக்கும். அவர் சாப்பிடுவதைப் பார்க்காமல் நான் சாப்பிட்டால் என் மனம் எப்படி இருக்கும்…? அதனால்தான் நான் அதை வெறுத்துவிட்டேன்.

அல்லி, தன் அல்லி விழிகளால் வள்ளியம்மையைக் கூர்ந்து நோக்கினாள். “மறுமணம்; அதுஇது என்று இருக் கும் இந்தக் காலத்தில் கற்பொழுக்கம் தவறாமல் இருந் திருக்கிறாங்களே. திருக்குறளும், சிலப்பதிகாரமும் கூறும் கற்பொழுக்கத்தைப் படித்தறியாத பெரியம்மா கற்பிற் குப் புதிய இலக்கணமே வகுத்து விட்டாங்களே. காதல் என்றால் இதுதான் காதல். இதுதான் தெய்வீகக் காதல்” என்று அவள் வாய் முணுமுணுத்தது.

வள்ளியம்மை சில சமயம் தன்னந்தனியாக இருந்து கண்ணீர் சிந்துவதற்கும் காரணம் இதுதான் என்று புரிந்துகொண்டாள். அவளுக்கு வள்ளியம்மையின் மன உறுதியை நி னைத்துப் பார்க்கும்போது வியப்பாகவே இருந்தது. தன் அத்தானின் இன்பமே தன் இன்பம் என்று. பூச்சூடுவது, சாப்பிடுவது, படம் பார்ப்பது போன்ற சிறுசிறு புலனங்களைக்கூட ஒதுக்கிவிட்டது அவ ளுக்கு மேலும் வியப்பாக இருந்தது.

“ஏம்பெரியம்மா! பெரியப்பா உயிரோடு இருந்தால் இவ்வளவு நாளாக வராமலா இருப்பார்?” என்று கேட்டாள்.

“உயிரோடு இருக்கிறார் என்றுதான் என் உள்மனத் தில் படுது. ஒண்ணுமட்டும் திண்ணமாக நடக்கும். நான் சுமங்கலியாகத்தான் சாவேன். அவர் அன்று சொன்னது போல் நான் செத்தாலும் அவர்தான் என்னைத் தூக்கிப் போடுவார். அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைக்கத்தான் போகிறது” என்றாள் வள்ளியம்மை.

அல்லிக்குச் சிரிப்பு வந்தது. நம்பிக்கை இருக்க வேண்டியதுதான் ஆனால் இவ்வளவு தூரத்திற்கு இருக் கக்கூடாது என்று எண்ணினாள். “உங்களை நினைத்தால் எனக்கு நேதாசி கதைதான் நினைவுக்கு வருகிறது. சிலர் இறந்துவிட்டதாகவும், சிலர் உயிரோடு இருப்பதாகவும் சொல்லுகிறாங்களே! அதைப்போல் நீங்களும் உங்க அத்தை மகனை உயிரோடு இருப்பதாக நினைத்துக் கொண்டு…” அல்லி முடிப்பதற்குள் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் வள்ளியம்மை.

அல்லி கன்னத்தைத் தடவிவிட்டுக் கொண்டாள். “பெரியம்மா நான் சொன்னது தப்புத்தாம்மா…” என்று அழாக்குறையாகச் சொன்னாள்!

வள்ளியம்மைக்கு மனம் இளகியது! என்றுமில்லா மல் அன்று அடித்துவிட்டதற்காக வருந்தினாள். அல்லி யைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள். அழுகை யோடு அழுகையாக, “அல்லி நீ என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லு நான் பொறுத்துக்கொள்கி றேன். ஆனால் என் தெய்வத்தை, பண்பின் பாசறையை

மட்டும் ஒன்றுமே சொல்லாதேம்மா, என் மனந்தாங்காது” என்றாள்.

“சரி பெரியம்மா“

வள்ளியம்மை அல்லியின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரைத் துடைத்தாள். அல்லி தன் பெரியம்மாள் கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.

அப்போது பக்கத்து வீட்டுப் பாவாயி அங்கு வந் தாள். அவளும் வள்ளியம்மையும் சிறுபிள்ளையில் இருந்து பழகியவர்கள். ஒத்த அகவையினரும்கூட வரும்போதே ”வள்ளியம்மை என்னடி செய்யுறே” என்று குரல் கொடுத்தாள்.

வள்ளியம்மை பாக்குரலில் மீண்டும் வெற்றிலைப் பாக்கு வைத்து இடித்தபடி, “தெரியலையாடி? அதுசரி நீ எப்ப மலாக்காவிலிருந்து வந்தே”

“இப்பத்தான் வருறேன். அடேயப்பா எம்புட்டுத் தூரம்டி இருக்கு”

“என்ன சேதி உனக்குப் பெண்ணைப் பிடிச்சிருக்கா?”

“பொண்ணுக்கென்னடி தங்கச் சிலையாட்டம் இருக்கா. அவள் வீட்டுக்கு வந்தாலே அந்தக் கலைமவ வந்ததுபோலத்தாண்டி. என் பேரனுக்கும் அவளப் பிடிச்சிருச்சு. பரிசத்தையும் போட்டுட்டோம். இனி திருமணந்தான் பாக்கி. அப்புறம்தான் பாசுப்போட்டு எடுக்கனும். அதிருக்கட்டும் உனக்குச் சேதி தெரியுமாடி. உனக்கொரு நல்ல சேதி கொண்டு வந்திருக்கேண்டி!”

“அப்படி என்னடி நல்ல சேதி?”

“நீ உண்மையிலேயே ரெண்டாவது காரைக்கால் அம்மையாருதாண்டி. இல்லேனா இப்படி மனஉறுதி யோட இருப்பியா. நான் நினைச்சதுகூட தப்பாப் போச்சுடி!”

“என்னடி சொல்லுறே சுருக்கா விளங்கும்படியாச் சொல்லுடி!”

“இன்னுமா தெரியலே. உன் அத்தமகனைப் பார்த்தேண்டி. பார்த்ததும் புரிஞ்சுக்கிட்டேண்டி. அவரு இப்போ முந்தியப்போல காளையாட்டம் இல்லேடி மிதுக்கவத்தலைப்போல இருக்காருடி. அவரும் பரிசத்துக்கு வந்திருந்தாருடி”

வள்ளியம்மைக்குப் புத்துணர்வு ஏற்பட்டது. இளமை முறுக்கேறியவளைப் போல் கண்களில் இன்பக் கண்ணீர் ததும்ப. “அப்படியா” என்றாள். அவள் குரலும் வெங்கலத்தை நினைவுகூர்ந்தது.

“ஆமாடி. அவருக்கும் உன்னைப்போல பல்லில்லேடி”

“அது கிடக்கட்டும்டி சண்டை முடிஞ்சதும் எங்கே போயிருந்தாராம்?”

“என்னடி உனக்கும் பல்லில்லேனு எனக்கிட்டேயே காட்டுறியே. வாயைப்பாரு வாயை… சண்டை முடிஞ்சு சிங்கப்பூருக்கு வந்து பார்த்திருக்கிறாரு. நாம் இங்கே குடிவந்த பிறகு குண்டுல பாதிக்கப்பட்டிருச்சுல அந்தப் பழைய வீட்டை பார்த்துட்டு அந்த மனிதன் அழுதிருக் கிறாரு. நாமெல்லாம் செத்தே போயிட்டோங்கிற முடி வுக்கு வந்துட்டாராம். இருந்தாலும் அவர் மனம் கேட்கவில்லையாம். தேடிப் பார்த்திருக்காரு. ஒரு தக வலும் கிடைக்காமல் போகவே இங்கிருந்தால் கவலை கூடிக்கிட்டே இருக்கும் என்று நினைச்சு மலாக்காவிலுள்ள தன் தம்பி வீட்டுக்குப் போயிட்டாராம். இன்னும் திரு மணங்கூடச் செய்யாமல்தாண்டி இருக்கிறாரு!’

அல்லி இருவரையும் மாறிமாறிப் பார்த்துக்கொண் டிருந்தாள்.

“அப்படியா நான் அவரை இப்போவே பார்க்க ணும்டி” வள்ளியம்மை கண்களில் நீர்மணிகள் திரண்டு அவை கன்னங்களில் உருண்டு அவள் நெஞ்சில் விழுந்து குளிர்ந்தன.

“கொஞ்சம் பொறுமையா இரு. இவ்வளவு நாள் பொறுத்திருந்தவளுக்கு இன்னும் ஒரு வாரம் பொறுத்திருக்க முடியாதா? பாசுப்போட்டு எடுத்துக்கிட்டு பொண்னோட அப்பாவும் அவரும் வருவாங்க. அப்ப உன் கிழ அத்தானின் ஆணழகைப் பார்க்கலாம் என்று சிரித்தபடி கிண்டல் செய்தாள்.

“நீ மட்டும் என்னடி குமரியா. அவர் எனக்கு எப்போதும் குமரன்தாண்டி” என்றாள் வள்ளி சிரித்தபடி.

வள்ளியம்மை தன் வாழ்நாளிலேயே அடையாத இன்பம் அடைந்தாள். இப்போதே வந்துவிடக்கூடாதா என்று எண்ணினாள். பாக்குரலில் இருந்த வெற்றிலை – பாக்கை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு “அல்லி கேட்டியா. நீயுந்தாண்டி பாவாயி… நான் சொன்னது சரியா இருக்குதா? எல்லாரும் என்னைப் பைத்தியகாரி என்றீங்களே ! எனக்குத் தெரியும் அவரை என்ன நினைச் சுக்கிட்டீங்க என் தெய்வம் தெய்வமேதான். ஊக்கும்…’ என்று வள்ளியம்மை மகிழ்ச்சியோடு சொன்னாள். பிறகு என்ன நினைத்தாளோ.

“ஆமாம் இவ்வளவு நாளும் திருமணம் பண்ணிக் கொள்ளாமலா இருக்கிறாரு? அவருக்கென்ன ஆம்பளை தானே…” என்று வள்ளியம்மை அவருக்காக இரக்கந் தொனிக்கச் சொன்னாள்.

“ம்… ஆம்பளைனா அவர்தாண்டி ஆம்பளை. இவ் வளவு நாளா! திருமணம் செஞ்சுக்கிறாமலே உனக்காக பிரமச்சாரியா இருந்திருக்கிறாரே இப்படி யாராலடி முடியும் ? மனைவி இறந்த மறுமாதமே மறுமணம் செய் கிறவங்க இருக்கிற காலத்திலேயும் உன் அத்தமகனைப் போல ஒருத்தர் இருக்கிறாருனா அவர் உத்தமர் தாண்டி” என்றாள் பாவாயி.

“ஆமா பெரியம்மா. பெரியப்பாவைப் போல யாருமே இருக்க மாட்டாங்க. ஒருத்திக்கும் ஒருவனுக் கும் ஒருமுறைதான் காதல் பிறக்கும். அந்தக் காதல் தூய்மையானது. தெய்வீகமானது என்று கருதுகிற வங்க கொஞ்சப்பேருதான் பெரியம்மா” என்றாள் அல்லி.

வள்ளியம்மையின் காதில் அவர்கள் தன் காதலன் முருகையாவைப்பற்றி புகழ்ந்து சொல்லியது தேனாகப் பாய்ந்தது. அந்த இன்பப் போதையில் தன்னையே மறந்துவிட்டாள்.

நாட்கள் நகர்ந்தன.

வள்ளியம்மை வழக்கம்போல் பாக்குரலும் கையுமாக இருந்தாள்.

“வள்ளி” அன்பு குழைந்த குரல்.

இப்படி அழைப்பவர் அவர் ஒருவரேதான் என்று எண்ணியபடி வள்ளியம்மை திரும்பிப் பார்த்தாள். அந்தக் குரல் வள்ளியம்மையின் காதுகளில் விழுந்து நெஞ்சமெல்லாம் குளிர்ந்து நின்றது.

முருகையா வேட்டி கட்டியிருந்தார். தோளில் துண்டுமட்டும் கிடந்தது. அவரை வள்ளியம்மை இன் பக்கண்ணீர் ததும்பப் பார்த்தாள்; கூர்ந்து பார்த்தாள். அவள் உதடுகள் படபடத்தன. முருகப்பெருமானின் திருவுருவத்தை நேரில் கண்ட முருக அன்பரைப் போல் உள்ளம் நெகிழ்ந்து சிரித்தாள். அந்தச் சிரிப்பு மறு நொடியே மாறியது. முருகையாவின் தலைமுதல் பாதம் வரை தன் பார்வையைச் செலுத்தினாள். நரைத்த தலை, குழிவிழுந்த கன்னங்கள், இடுக்கு விழுந்த கண்கள், ஒட்டி யுலர்ந்த வயிறு, எலும்பை மூடியுள்ள தோல்! இத்தனை யும்தாம் அவர் முகமாற்றத்திற்குக் காரணம்!

எழுந்தாள். முருகையாவின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். இன்பக் கண்ணீர் அவர் பாதங்களில் உள்ள சூட்டைத் தணித்தது. முருகையாவின் உள்ள மும் குளிர்ந்தது. குனிந்து வள்ளியம்மையை வாரியணைத் துக்கொண்டார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந் திருந்த இருவரும் ஒருவரையொருவர் அன்பொழுகத் தழுவிக்கொண்டனர். இத்தனையும் ஒரு நிமையத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி.

அல்லி பார்த்தாள். அவள்தாய் பார்த்தாள், பிள்ளை கள் பார்த்தனர். அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அனை வருமே பார்த்தனர். எங்குமே நடக்காத அந்தக் காட்சி அவர்களுக்கும் பேரின்பத்தை நல்கியது.

சற்று நேரம் கழித்து வள்ளியம்மையும் முருகையா வும் பிடியைத் தளர்த்திக்கொண்டனர். இன்பக் கண்ணீர் இருவர் பிடரிகளையும் நனைத்துவிட்டிருந்தது.

“நான் நினைத்தபடியே நீங்க வந்துட்டீங்க!இனி நான் செத்தாலும் சுவர்க்கத்தை அடைந்துவிடுவேன்” என்று வள்ளியம்மை உணர்ச்சிமேலிடச் சொன்னாள்.

“அதற்கென்ன” என்று சொல்லிவிட்டு முருகையா சிரித்தார்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர்; சிரித்த னர்; ஏதேதோ பேசினர். ஒரு மணி நேரம் அவர்கட்கு ஒரு நிமிடமாகத் தெரிந்தது. அவர்கள் கணக்குப்படி பார்த்தால் இரண்டு நிமிடம் விரைந்துவிட்டது.

வள்ளியம்மை அல்லியின் பக்கம் திரும்பினாள்.

“அல்லி இங்கே வா”

அல்லி அருகில் வந்து “என்ன பெரியம்மா” என்று கேட்டாள்.

“கொல்லைக்குப் போய் மல்லிகைப்பூ கை நிறையப் பறிச்சுக்கிட்டு வா” என்றாள். அல்லி விரைந்து இரண் டடிதான் எடுத்து வைத்திருப்பாள். மீண்டும் கூப்பிட்டு, “அல்லி வரும்போது அடுப்படிக்குச் சென்று மஞ்சள், கொஞ்சம் நூல் எடுத்துக்கிட்டு வா. ம்… அதோட குங்கு மம், ஒரு அகல் விளக்கும் எடுத்துக்கிட்டு வா” என்றாள். வள்ளியம்மை சொல்லியது அல்லிக்குப் புரிந்துவிட்டது. அவள் தன் பெரியம்மாள் சொல்லியதை மின்னல் வேகத்தில் முடித்து விட்டாள்.

அகல் விளக்கு ஏற்றிவைக்கப்பட்டது.

குங்குமத்தை எடுத்து முருகையாவிடம் கொடுத்து தன் நெற்றியில் வைக்கச் சொன்னாள் வள்ளியம்மை. முருகையா அப்படியே செய்தார். பிறகு மல்லிகைப் பூவைக் கொடுத்து தன் தலையில் சூடச்சொன்னாள். முரு கையா அவள் தலையில் சூட்டினார். அதன் பிறகு மஞ்சள் துண்டைக் கட்டிய மஞ்சள் கயிற்றை எடுத்துத் தன் கண் களில் ஒற்றிக்கொண்டுவிட்டு முருகையாவிடம் கொடுத் துத் தன் கழுத்தில் கட்டச் சொன்னாள். முருகையா கைகள் நடுநடுங்க அதையும் அவள் கழுத்தில் கட்டினார். அவர் அடைந்த அளவற்ற மகிழ்ச்சியை அவர் கண்கள் நீர்மணிகள் மூலம் வெளிப்படுத்தின. அவளும் பேருவகை அடைந்தாள். கழுத்தில் கட்டிய தாலியைக் கண்களில் ஒற்றிக்கொண்டுவிட்டு முருகையா கால்களில் விழுந்து வணங்கினாள் வள்ளியம்மை! அக்காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது!

முருகையாவின் கால்களில் விழுந்து வணங்கியவள் நெடுநேரம் எழுந்திருக்கவில்லை.

முருகையா – “எழுந்திரு” என்றார்.

அதற்கும் அவள் எழுந்திருக்கவில்லை. குனிந்து அவளைத் தூக்கி நிறுத்த முயன்றார். மரத்தைத் தூக்கு வதுபோன்ற உணர்வு அவருக்கு. தன் மடியில் அவளைக் கிடத்தியபடி, “போய்விட்டாயா வள்ளி… வள்ளீ…! என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாயா வள்ளி! தாலி என்ற பெயரில் உனக்குச் சுருக்குக்…” அதற்குமேல் அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை. நெஞ்சில் சுருக் கென்ற வலி ஏற்பட்டது. அழுத கண்ணீரோடு நெஞ்சை அழுத்திப் பிடித்தபடி வள்ளியம்மையைக் கட்டிப்பிடித்தவாறு தரையில் படுத்துவிட்டார். படுத்தவர் மீண்டும் எழுந்திருக்கவே இல்லை!

– குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

Elangkannan 1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய  தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர்     (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *