கதையாசிரியர்:
தின/வார இதழ்: செம்மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2025
பார்வையிட்டோர்: 90 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடை திறந்து கொஞ்ச நேரம் தான் வியாபாரம் நடந்தது. வழக்கத்துக்கு மாறாக, கடையை சாத்திவிட்டு வீட்டுக்கு வந்தான் காமராஜ். வந்தவுடன், 

“இந்து, வென்னி போடு” என்று மனைவியைத் துரிதப்படுத்தினான். வியாபாரம் நடக்க வேண்டிய நேரத்தில் வீடு வந்து வென்னீர் கேட்கிற கணவனை வியப்போடு பார்த்தாள். அதிசயிப்பில் விழிகள் மலர்ந்து விரிந்தன. 

“என்ன இது, இந்நேரம்?” 

“ஒரு கல்யாணத்துக்குப் போகணும்” சட்டையைக் கழற்றி, ஹாங்கரில் மாட்டினான். வேஷ்டியை உருவி எறிந்துவிட்டு, டிராயர் மேல் ஒரு துண்டைச் சுற்றிக் கொண்டான். 

“கடை?” 

“சாத்திட்டு வந்துட்டேன்.”

“ஏவாரம் என்னாவுறது?” 

“ஒரு பொழுது ஏவாரமில்லேன்னா… ஒன்னும் குடி முழுகிப் போகாது.” 

பேச்சு பேச்சோடு, அடுப்பில் வென்னீர்ப்பானையைத் தூக்கி வைத்தாள். மினுக்கி முடித்திருந்த எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்து, ஸ்டாண்டில் அடுக்கினாள். நடையில் ஒட்டுவதற்காகக் குவிக்கப்பட்டிருந்த கட்டுகளையும், பேப்பர்களையும் ஒதுக்கி வைத்தாள். ஓய்ந்த வேளையில் தீப்பெட்டி ஒட்டுவாள். 

“ரொம்ப முக்கியமான கல்யாணமா?” 

“ஆமாம்.” 

இந்துவுக்கு அவனைப் பார்க்கப் பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது. என்ன தலை போகிற காரியமாயிருந்தாலும், கடையைச் சாத்தவே மாட்டான். “கடைக்காரன் கால் மொளைச்சு அலைஞ்சா, கடை சிறகு முளைச்சு ஓடிப் போயிடும்” என்று கிழவரைப் போல சொலவடை சொல்லுவான். 

போன மாசம்கூட சித்தப்பா மகன் கல்யாணம் வந்தது. கடையை அடைக்கவும்மில்லை, போகவுமில்லை. இவள்கூட சொன்னாள்: 

“நல்லது பொல்லதுன்னா… நாளைப் பின்னே நாலு சொந்தம் வேண்டாம்? ஒதுங்கிக்கிட்டே போனா… உறவுவிட்டுப் போகுமே.” 

“ஆமா… மகா உறவு… மண்ணாங்கட்டி உறவு” என்று அலட் சியமாகச் சொல்லி தள்ளிவிட்டு, கடைக்குப் போய்விட்டான். 

அப்பேர்ப்பட்டவன்… இந்நேரம் கடையை அடைத்து கல்யாணத்துக்கு என்றால்… 

அவ்வளவு சொந்தமா, நெருக்கமான பந்தமா? அப்படியாரு, நமக்குத் தெரியாம… 

காமராஜ் பேசிக்கொண்டே அங்குமிங்குமாய் அலைந்து வேலை செய்யும் இந்துவைப் பார்த்தான். காலையில் மஞ்சள் தேய்த்துக் குளித்திருக்கிறாள். முகத்தில் அதன் பசுந்திட்டுகள். பளிச்சிடுகிற முகம்… மை தடவாமலேயே கருப்பாக இருந்த கண்கள்… சீரமைந்த உதடுகள்… உதடுகளுக்கு மேல் வியர்வைப் பொடி மணிகள்… 

ரவிக்கைக்குக் கீழ் இடுப்பில் வியர்வை மினுமினுப்பு, கல்யாணம் முடிந்த இந்த ஆறு மாதத்தில்… இந்து தனக்கு அறிமுகம் செய்து வைத்த புதிய அனுபவங்கள் புதிய உலகம், புதிய வாழ்க்கை எல்லாமே புதுமைதான். அவனுக்குள் ஒரு பரவச உணர்வும், பெருமிதமும் ததும்பி வழிந்தது. 

“முழிச்சுக்கிட்டே ஒறங்குதிகளா? சொன்னது காதுலேவுழலே?” சிரிப்பும் பளீரிட்ட வெண்மைப் பளபளப்பும், காமராஜை பிரக்ஞைக்குக் கொண்டு வந்தது. அசடு வழிய சிரித்தான். 

“என்ன, என்ன சொன்னே? அவசரமாகக் கேட்டான். 

“ரொம்ப நெருக்கமான சொந்தக்காரங்க கல்யாணமான்னு மூணு தடவை கேட்டேன்.” 

“நெசமான சொந்தக்காரங்க கல்யாணம்.” 

அவனது பதிலில் ஒரு புதிரும் கேள்வியும் பதுங்கியிருப்பதை உணர்ந்து, இந்து பிரமிப்புடன் நிமிர்ந்தாள். அவன் அர்த்த பாவத்துடன் அழுத்தமாகச் சிரித்தான். சட்டென்று அந்தச் சிரிப்பு மறைந்து, ஏதோ கசப்பான நினைவில் ஆழ்ந்து போனவனைப் போல, அமைதியாகிப் போனான். 

“நெசமான சொந்தமா… அப்படீன்னா… பொய்ச் சொந்தம்னு ஒண்ணு இருக்கா?” 

“பின்னே, இல்லியா?” என்றவன் மறுபடியும் ஏதோ நினைவில் ஆழ்ந்து போய்விட்டான். கண்கள் விட்டத்தில் நங்கூரமிட்டிருந்தன. 

கடந்தகால வாழ்வின் ஒரு கசப்பான பகுதியைச் சொல்லப் போகிறான். அதற்கான வார்த்தைகளை யோசிக்கிறான் என்பதைப் புரிந்து, இந்துவும் காத்திருந்தாள். இது போல, இந்த ஆறு மாசத்தில் கசப்பான – இனிப்பான – பகுதிகளை அடிக்கடி சொல்லியிருக்கிறான். இதோ இப்போதும் ஒரு அனுபவத்தைக் கூறப்போகிறான். 

இந்து அதற்குத் தயாராகிக் கொண்டே, வென்னீராகி விட்டதா என்று தொட்டுப் பார்த்துக்கொண்டாள். 

…சென்னையில் 15 வயதுவரை கடையில் சம்பளத்துக்கு இருந்துவிட்டு, மிச்சமாக ஒரே சொந்தமாயிருந்த அம்மா சாவுக்கு கிராமத்துக்கு வந்தான் காமராஜ். 

மொட்டைத் தலையுடன் கொஞ்சநாள் கிராமத்தை நோக்கின்றி சுற்றிவந்தான். அப்போதுதான். 

சிவகாசியிலிருந்து சாமி கும்பிட ராஜசேகர் வந்திருந்தார். காமராஜைப் பார்த்தார். விசாரித்தார். 

“அடடே… நீ எனக்கு ரொம்பச் சொந்தக்காரனாச்சே. உங்க அம்மா எனக்கு சித்தப்பா மகள். அக்கா வேணும். ரொம்ப நாளா உறவுவிட்டுப் போச்சு” என்று உறவைக் காட்டி, உண்மையுடன் வருத்தப்பட்டார். சிவகாசியில் பிரஸ் வைத்திருக்கிறாராம். நல்ல முன்னேற்றமாம். நல்ல பசையாம். 

தாயையிழந்தபின் சூழ்ந்த அனாதை மைச்சூட்டைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த இளம் மனசு துவண்டு கிடக்கையில், இந்த புதிய உறவு பெருத்த நம்பிக்கையை உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

தன் உறவுக்காரர் சிவகாசியில் பேரும் புகழுமாக, பணமும் செழுமையுமாக இருக்கிறார் என்பதே அவனுக்குப் பெருமையாக இருந்தது. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டான். 

அவருடனேயே திரிந்தான். சாமி கும்பிட்டு விட்டுத் திரும்பும்போது, “ஊருக்கு வாரீயா?” என்று கேட்டார். 

காமராஜ் பதில் சொல்லத் தோன்றாமல் யோசித்தான். 

“பிரஸ்லே வேலை பழகு… பழகுன பிறகு நல்ல வேலை போட்டுத்தாரேன். நானே கல்யாணமும் முடிச்சு வைச்சு உன்னை உயர்ந்த நிலைமைக்குக் கொண்ணாந்திடுறேன்… வாரீயா…?” 

இந்த வார்த்தைகள் ஒரு தேவமந்திரமாய் செயல்பட்டு அவனை உசுப்பிவிட்டது. பற்றிக்கொண்ட ஒரே பற்றுக்கோலான இவரையும் இழந்துவிடக் கூடாதே என்கிற பதைப்பும், அவரது வார்த்தைகளும் இவனை இளக்கி பதமாக்கி இயங்க வைத்தது. 

“சரி மாமா… ” என்றான். 

சிவகாசி வந்து சேர்ந்தான். ஒரு வருஷமா, ரெண்டு வருஷமா – பத்து வருஷங்கள்! அச்சாபீஸிலும், வீட்டிலும் மாறி மாறி பேத மின்றி உழைத்தான். ஓடி ஓடிப் பாடுபட்டான். உஸ்ஸுன்னு உட்காராமல், என்ன சம்பளம், ஏது சம்பளம் என்று கேட்காமல் மாடாய், மெஷினாய் உழைத்தான். விசுவாசமான நாயாக ஓடி ஓடி அலைந்தான். 

காலால் உதைக்கும் பிரஸாக இருந்து, எந்திரஅச்சகமாக வளர்ந்து, இன்று நகரத்தில் பிரபலமான வண்ண அச்சகமாகி விட்டது. 

ஒருநாள் – 

பிரஸுக்குள் டைப்ஸ் ஸ்டாண்ட் முன் நின்று, அச்சுக் கோர்த்துக் கொண்டிருந்தான். ஒரு மாநாட்டுச் சிறப்பு மலர் வேலை. காமராஜ், ஸ்டாண்டில் ஒரு காலும், கீழே ஒரு காலும் ஊன்றிய வண்ணம், பார்வை இடது கையிலுள்ள பத்திரிகையில் நிலைத்திருக்க. வலதுகை ஒவ்வொரு டைப்பாக பொறுக்கி அடுக்கியது. அவன் கையும், மனதும் சுவிட்சு போட்டு முடுக்கிக விடப்பட்டதைப் போல துரித கதியில் இயங்கிக் கொண்டிருந்தன. 

“மேனேஜர் கூப்பிடுறாருப்பா…” 

காமராஜ் திரும்பிப் பார்த்தான். 

“சரி, இதோ வாரேன்” என்றவன், கையிலுள்ள மேட்டரைப் பார்த்தான். முடியும் தறுவாயிலிருந்தது. மூன்றே வரிதான். அத்துடன் அப்பக்கம் முடிகிறது. மூன்று வரிதானே. முடித்து வைத்துவிட்டால், மேனேஜரி டமிருந்து திரும்பியவுடன் நூலைப் போட்டுக்கட்டி, அச்சுக்குக் கொடுத்துவிடலாம். 

மேலும் அவசரமானான். கை.எந்திரகதியில்,மனசு காற்று வேகத்தில் செயல்பட்டு, அந்த மூன்று வரிகளை முடித்துவிட்டு அழுக்குத் துணியால் கைமசியைத் துடைத்த வண்ணம் மேனேஜர் முன் நிற்கும்போது – 

பத்து நிமிடம் ஓடியிருந்தது.

மேனேஜரின் கறுத்த முகம் கடுகடுத்து இறுகிப்போய், மேலும் கறுத்திருந்தது. கோபம், அந்தச் சிறிய கண்களில் எரிந்தது. 

கொஞ்ச நாளாக இப்படித்தான். இரண்டு மாதத்துக்கு முன்பு, மேனேஜர் செய்த ஒரு பில், மோசடியை மாமா முன்னால் அம்பலமாக்கியதிலிருந்து, இதே கடுகடுப்புத்தான். பார்த்தாலும் ஆங்கார இரைச்சல்தான். 

“கூப்டீகளாமே.” 

“கூப்ட்டா… உடனே வரமாட்டீயோ…? நெஞ்சுலே திமிர் ஜாஸ்தியோ?” 

கடைசி வார்த்தைகள் அவனுள் நெருப்புச் சாட்டைகளாய் விழுந்தன. சுரீரென வலித்தது. ஆயினும், மனசைக் கடிந்து அடக்கிக் கொண்டான். மௌனத்திற்குள் கனன்றான். 

“ஏன், இவ்வளவு நேரம்?” 

“கொஞ்சம் வேலையிருந்துச்சு…” 

“கூப்பிட்டா, உடனே வர்ரதைவிட… வேலையென்ன, வேலை பெரிய கலெக்டர் வேலையா?” 

“மரியாதை குடுத்தாத்தான் மரியாதை வரும் சார்… எதுக்கு இப்படிப் பேசுறீக?” 

“நா பேசுனதுதான் குத்தமாப் போச்சோ? வேலை ஒழுங்காச் செய்ய வேண்டாம்? கூப்ட்டா வரவேண்டாம்? திங்கிற சோத்துக்கு முழுசா வேலை செய்ய வேண்டாம்? தின்னு போட்டு நிமித்திக்கிட்டு திரிஞ்சா எப்படி? சோத்தைத் திங்கிறீகளா, வேறெ என்னத்தையும் திங்கிறீகளா?” 

“நீங்க என்னத்தை திங்குறீகளோ… அதைத்தானே நாங்களும் திங்குறோம். ஆனா, நாங்க தின்னதுக்கு விசுவாசமாக இருப்போம். தில்லுமுல்லு பண்ணமாட்டோம்.” 

மேனேஜருக்கு சுருக்கென்று தைத்துவிட்டது. வார்த்தைகள் தடித்து… உணர்ச்சிகள் குழம்பிச் சீறி, சூழலே பயங்கரமாகிவிட… பிறத்தியார் தலையீட்டில் விவகாரம் சூடு தணிந்தது. 

மறுநாள்- 

ராஜசேகர் வீட்டுக்குள் காமராஜ் நுழைந்தான். அவன் மனசுக்குள் நேற்றைய நிகழ்ச்சி கொதித்துக் கொண்டிருந்தது. 

வரச்சொல்லியிருக்கிற மாமா, விசாரிக்கப் போகிறார்… மேனேஜரைப் பற்றி சொல்லப் போகிறோம்… ஆயிரம் தானிருந்தாலும் உறவைவிட்டுக் கொடுத்திடுவாரா? எனக்கு வந்த அவமானம், அவருக்கும் தானே! கட்டாயமாக மேனேஜர்ப் பயலை கணக்குப் பார்த்து கண்டு கழிச்சிடுவாரு. குறைந்த பட்சமா… திட்டவாவது செய்வாரு… 

காமராஜ் மனசுக்குள் நம்பிக்கை வலுப்பட்டிருந்தது. அந்தப் பாதுகாப்பு உணர்வுடன் உள்ளே நுழைந்தான். 

சோபாவில் உட்கார்ந்து காலைப் பேப்பரில் மூழ்கியிருந்த ராஜ சேகர், இவன் காலடியோசையில் நிமிர்ந்தார். பார்வையில் உஷ்ணமிருந்தது. 

இவன் மனசுக்குள் அதிர்ந்து, கலங்கி… 

“என்ன மாமா…” 

“மாமா, மயிரு… ”வார்த்தைகள் அனல் துண்டுகளாகச் சிதறியது. காமராஜ் வெலவெலத்துப் போனான். 

“நாளையிலேயிருந்து நீ வேலைக்கு வர வேண்டாம். போகலாம்.” 

“மாமா… நா ஒண்ணும்… மாமா… என் மேலே… தப்பு..” ஜீரணித்துக் கொள்ள முடியாத அதிர்ச்சி, அவனை திகைக்கச் செய்து, உளறச் செய்தது. 

“பேச்சு வேண்டாம்… போயிடு… என் கண்ணுலே முழிக்காதே. ஆமாம், சொல்லிப்போட்டேன்…” 

கொஞ்சநேரம் தேங்கினான். உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. மனசுக்குள் நிலைகுலைந்து போய்த்தவித்தான். மேலும் ஏதேதோ சமாதானம் சொல்ல முயன்றான். ஊஹூம், பலனளிக்கவில்லை. 

உள்ளுக்குள் உடைந்து, சுக்கல் சுக்கலாகிப் போன காமராஜ் நோக்கின்றி அலைந்தான். ஒரு வாரம் சிறகு கட்டிப் பறந்து விட்டது. 

நினைக்க நினைக்க அவனுள் துக்கம் பொங்கியது. 

பத்து வருஷமா உழைச்சேனே… மாமா, மாமான்னு எம்புட்டு உறுத்தோட, விசுவாசத்தோட வேலை செஞ்சேன்… கடைசியிலே, மூஞ்சியிலே கரியைப் பூசிட்டாரே… 

நொந்துபோன மனசில் நினைவு ஈக்கள் மொய்த்துப் பிடுங்கின. சம்பளத்தையாவது வாங்கலாம் என்று வீட்டுக்குப் போனால், ஆபீஸில் இருக்கார் என்று சொல்ல, ஆபீஸுக்குப் போனால், பாம்பே போயிருக்கார் என்று சொல்ல… மேலும் ஒரு வாரம் பசியும், பட்டினியுமாய் நகர – 

ஒரு நாள் – 

வீட்டில் ராஜசேகரைப் பார்த்துக்கொண்டான். அவன் ஆசை ஆசையாக தூக்கிவளர்த்த பிள்ளைகள் சூழ்ந்து நிற்க, அத்தை அத்தை என்று ஓடி ஓடி பணிவிடைகள் செய்தானே, அந்த அத்தையும் இருக்க… ராஜசேகர் முன்னிலையில் நின்றான். 

யாரும் ஏனென்றுகூட கேட்காமல், இவன் மனசை நொறுக்கிக்கொண்டு நேரம் ஊர்ந்தது. 

“மாமா…” 

ராஜசேகர் நிமிர்ந்தார்… வெற்றுப் பார்வை. 

“பத்து வருசமா உழைச்சிருக்கேனே… எனக்குக் கணக்குப் பாத்து, குடுக்குறதை குடுத்துடுங்க…” 

“என்னலே கணக்கு? அனாதைப் பயலா திரிஞ்சவனை, இம்புட்டு உயரத்துக்கு சோத்தைப் போட்டு வளர்த்து விட்டிருக்கே அதுக்கா, கணக்கு? அஞ்சும் பத்துமா ஓயாமெ செலவுக்கு தூக்கித் தூக்கிக் கொடுத்தேனே அதுக்கா கணக்கு? கணக்குப் பாத்தா… நீ தான் தரவேண்டியிருக்கும்… போடா.” 

இவன் முகத்தில் ஓங்கி அறை விழுந்ததைப் போலிருந்தது. மனசு விதிர் விதிர்த்துப் போய்விட்டது. வஞ்சிக்கப்படுகிறோம் என்ற உணர்வே அவனுள் ஆவேசத்தைக் கிளப்பியது. மனசை அடக்கிக் கொண்டான். 

கெஞ்சிப் பார்த்தான். “நா எங்கே போவேன், எனக்கு இருக்கிற ஒரே உறவு நீங்கதானே…” என்றெல்லாம் கதறிப் பார்த்தான். 

“கையிலே துட்டு இருந்தா ஆயிரம் உறவு வரும்டா… ஒன்னை மாதிரி மரியாதை கெட்ட பயலுக்குச் சோறு போட்டதே பாவம்.” 

இந்த அவமதிப்பு அவனை சுரீரெனச் சுட்டது. அவனது தன்மான உணர்வு விழித்துக்கொண்டது. வெகுண்டான் :

“மாமா… ஏங் கணக்கை தீர்க்கப்போறீகளா, இல்லியா?” ராஜசேகர் விருட்டென்று எழுந்தார். 

“என்னாலே, பூச்சாண்டி காட்டுறே? மிரட்டிப் பாக்குறீயா? தொலைச்சுப் போடுவேன், தொலைச்சு. போடா நாயே… வெளியே.” 

இவனுக்கு உடம்பெல்லாம் எரிந்தது. பாய்ந்து மல்லுக்கட்டி விடலாமா என்று மனசு துடித்தது. பிரயத்தனப்பட்டு தன்னைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டான். 

தன்னந்தனியன்… அவரோ பணக்காரர்… பணத்தாலேயே தொலைச்சுப் போடுவார்… 

ஆயினும், இந்த அநியாயம் அவனுள் எரிந்து கொண்டிருந்த நெருப்பை உக்ரப்படுத்தியது. ஆவேசமாக வெளியேறினான். 

எங்கே போவது? யாரிடம் உதவி கேட்பது? யார் செய்வார்? மாமாவே இப்படிப் பண்ணற போது, மத்தவன் எப்படி உதவி செய்வான்? மாமா… மாமா… பாவி. 

குருட்டுக் கோபத்தில் தவித்தான். என்ன செய்றது? அப்போதுதான், சக தொழிலாளி யோசனை சொன்னான்: “சங்கத்துக்குப் போ.” 

போனான். அங்கே தலைவரைப் பார்த்தவுடன் அதிர்ந்தான். மாமா பேச்சைக்கேட்டு, இவரை திட்டியிருக்கிறேன். வாய்க்கு வராத வார்த்தைகளால் அர்ச்சித்திருக்கிறேன்… 

மனசுக்குள் வெட்கிப் போய் குறுகினான். என்ன என்று அன்புடன் விசாரித்தார்… 

உள்ளங்கைக்குள் அடக்கிவிடலாம். அவ்வளவு ஒல்லி. கத்தி முகம். முன்னால் இரண்டு பற்கள் மட்டும் நீட்டிக்கொண்டு, கறைபடிந்து முகத்தை மேலும் விகாரமாக்கியது. கண்கள் மட் டும் ஒரு அழகாய் ஜொலித்தது. 

காமராஜ் மனசின் அழுக்குகளை – வேதனைகளை யெல்லாம் கொட்டினான். பொறுமையாகக் கேட்ட அவர், 

“மாசா மாசம் உங்ககிட்டே கையெழுத்து வாங்கியிருக்காங்களா?” என்றார். 

“ஆமாம்… கேப்பாங்க. போடுவேன்.” 

தன் உதவியாளரைப் பார்த்து… “தோழர், இவருக்கு ஒரு கேஸை எழுதுங்க” என்றவர் இவனைப் பார்த்து “சங்கத்தில் மெம்பராகிக்கோங்க” என்றார். தலையை ஆட்டினான். 

கொஞ்சநேரம் நகர்ந்தது. இவன் அலுவலகத்தை பார்வையால் சுற்றினான். சுவர் முழுவதும் தலைவர்கள் படங்கள். பீரோவில் நிறைய கேஸ்கட்டுகள். பலகையில் கட்டுக்கட்டாக புத்தகங்கள்… மேஜையில் பல்வேறு துண்டுப் பிரசுரங்கள்… மூலையில் கொடியுடன் கூடிய கம்புகள்…

தலைவரின் சப்தம் கேட்டது. 

“இதுலே ஒரு பேப்பர் லேபர் கோர்ட்டுக்குப் போகும். ஒன்று ராஜசேகருக்குப் போகும். ரெண்டொரு நாள்லே பேச்சு வார்த்தைக்குக் கூப்பிடுவாங்க. பேசுவோம்… அவர் உங்களை நல்லா சுரண்டியிருக்காரு… மோசடியும் செய்திருக்காரு… பரவாலே பாக்கலாம். சம்பளமும், கிராஜூட்டியும், நஷ்டஈடும் வாங்கிடலாம். கையெழுத்துப் போடுங்க…’ 

போட்டான். 

பேச்சு வார்த்தையில் பிடிவாதம் பண்ணின ராஜ சேகர் போராட்டத்தைச் சந்திக்க வேண்டிவரும் என்ற தலைவரின் எச்சரிப்பையும் அலட்சியப்படுத்திய அவர், அச்சகத் தொழிலாளிகளும் சங்க அறைகூவலுக்கு இணங்கி போராட்டத்தில் ஈடுபட்டுவிடுவார்கள் என்றளவுக்கு நிலைமை வளர்ந்த பிறகுதான் பணிந்தார். 

சங்கம், கணிசமான தொகையைப் பெற்றுக் கொடுத்தது. கடை வைத்தான். மறுவருஷம் கல்யாணம் முடித்து, இதோ… அனாதை என்ற உணர்விலிருந்து விடுபட்டு, ஒரு வாழ்வை அமைத்துக்கொண்டான். 

குளித்து முடித்து துவட்டிக்கொண்டே இந்துவிடம் சொன்னான்: “இதுதான் நெசமான சொந்தம், இந்து! மாமா, மச்சான், மத்ததெல்லாத்தையும்விட எனக்கு இந்த உறவுதான் உசத்தி… இதைவிட ஏவாரமா பெரிசு? கடையே இந்த உறவாலே வந்ததுதானே…” 

இந்து அவனைப் பார்த்தாள். பார்வையில் கருணையும் பரிவும் கனிந்திருந்தன. பாவம், இந்த மனுஷர் எம்புட்டுக் கஷ்டப்பட்டிருக்கார்…! 

காமராஜ் பரபரத்துக் கொண்டிருந்தான். சரிசரி… அந்தப் பேக்கை எடு என்றவன், அவசர அவசரமாக செருப்பை மாட்டிக் கொண்டான். 

– ஜூன் 1982, செம்மலர்.

– என் கனா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 1999, வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *