இறைவன் சாட்சி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 11, 2025
பார்வையிட்டோர்: 163 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரயில் சினேகிதங்கள் எல்லாம் உயிர் சினேகிதங்கள் ஆகிவிடுவதில்லை… ஆயின்; இரயில் சினேகிதமே உயிர் சினேகிதம் என்றாகி விடுவதும் உண்டு…!

வழித்துணைகள் எல்லாம் வாழ்க்கைத் துணைகள் ஆவதில்லை… ஆயின்; வழித்துணையே வாழ்க்கைத் துணையாகி விடுகின்ற விசித்திரத்தையும் இந்த உலகம் அவ்வப்பது சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

ஆதவன், ஆசிரியர் ஆதிமூலம் அவர்களுக்கு ஒரு இரயில் சினேகிதம் போல் வழித்துணை போல் வந்தமைந்த ஓர் உயிர் நண்பன்….!

ஆசிரியர் ஆதிமூலம் அவர்கள் செம்பவாங் தமிழர் சங்கத் தமிழப் பள்ளிக்குப் பள்ளி முதல்வராய்ப் பதவிப் பொறுப்பெற்று, ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதாம் ஆண்டில் அந்த வட்டாரத்தில் குடிபெயர்ந்து வந்திருந்ததொரு காலக் கட்டம்…. ‘ஒப்பாசாரத்துக்காக அவ்வப்போது ஒரு சில மணித்துளிகள் பேசியிருந்து பிரிந்து செல்கின்ற, “பொழுது போக்கு; நண்பர்கள் ஓரிருவர் மட்டுமே பெற்றிருந்த நேரம்..! அன்பு மனத்துள் ஆழப்பதிந்து, விழுது விட்டுப் படர்ந்து தழைக்கின்றார் உயிர் சினேகிதம் ஏற்படக் கூடாதா…? என்று, ஆசிரியர் ஆதிமூலம் ஏங்கிக் கொண்டிருந்தார்.

எதிர்பார்ப்பு நிலையில் ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகள் எழுந்தோடி விட்டன. ஒருநாள் மாலை நேரம்; காப்பிக் கூடையில் அமர்ந்திருந்தார். அப்போது ‘சீனியர் கேம்ப்பிரிட்ஜ்’ தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் நான்கைந்து உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வந்து எதிரே உள்ள மேசையில் அமர்ந்து, தேனீர் அருந்திக் கொண்டு, தமிழ் இலக்கியப் பாடலொன்றுக்குக் கருத்துரைகளை விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அதை வேறொரு மாதிரியில் சொன்னால், மனப்பாடம் செய்யும் அமைப்பில் தேர்வுக்கு அசை போட்டுக் கொணடருந்தார்கள். ஆசிரியர் ஆதிமூலம் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார். பாடற் பொருளைத் தவறாகப் பொருள் கொண்டு பயில்வது போல் அவருக்குத் தோன்றியது. ஆசிரியர், சற்றுத் துணிச்சலாக இடைமறித்து அவர்களின் உரையாடலில் வலிந்து பங்கேற்று, அந்தப் பாடலுக்குரிய சரியான பொருளுரையை வழங்கினார். இலக்கிய சர்ச்சை ஏற்பட்டது; ஆசிரியரின் விளக்கத்தை அந்த மாணவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

அந்த மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் ஆதிமூலம் அவர்களை இலக்கியம் கற்பித்துத் தர வேண்டிக் கொண்டனர். அவர்கள் தம் விழைவுக்கிணங்கக் கற்பித்து வந்ததனால்; அவர்களும் ஏன்: ஆசிரியரும் கூட எதிர்பார்க்காத அளவில் அவர்கள் அனைவரும் ‘டிஸ்டிங்சன்” அமைப்பில் வெற்றி பெற்றார்கள்.

உலர்ந்த உதடுகளின் வழி நன்றி சொல்லிச் சென்ற மாணவர்களுள்; உள்ளத்தின் அடித்தளத்தில் ஊறிச் சுரக்கின்ற நன்றியுணர்வின் அடிப்படை ஈரம் காயாமல் அமைந்த நன்றியுள்ள மாணவனாக – நண்பனாக – நல்ல ஒரு தம்பியாக ஒளிர்ந்து மிளிர்ந்தான் ஆதவன்…! ஆசிரியர் ஆதி மூலனாரின் ஏக்கம் தணிந்தது.

ஆதிமூலம், ஆதவன் ஒரு பெரிய ஒற்றுமையாய் அமைந்ததொரு கூறு: பிறப்பால் இருவரும் ஒற்றைக்கொருவராய் அமைந்ததே….! ஆம்; ஆதிமூலம் அவர்தம் குடும்பத்தில் ஒரே பிள்ளை; அதுபோல் ஆதவனும் அவன் தன் குடும்பத்தில் ஒரே பிள்ளை….! சகோதர பாசத்திற்குத் துடித்த அந்த இருவர் அண்ணன் தம்பி என்று ஆகிவிட்டனர். சகோதரத்துவம் என்பது தேடிப் பெறுவதல்ல; அது தெய்வீகத்தால் அமையும் ஒரு வரப்பிரசாதம் என்பதற்கு இவர்கள் ஒரு சாட்சியாக விளங்கினார்கள். ஆசிரியரின் மனைவியும் மூன்று சகோதரிகளும் அக்காள் ஆனவர்; தனக்கொரு அண்ணன் அல்லது தம்பி இல்லாத அரைகுறை மனத்தோடு இருந்தவர்….!

ஆதவனும் அவன் தாயாரும் அதே தெருவில் சுமார் இருநூறு மீட்டர் தொலைவு இடைவெளியில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். ஆசிரியரின் வீட்டில் ஆதவனின் நடமாட்டம் “ஆதவனின்” இயக்கம் போல்…! அவனுடைய தாயாரும அன்றாடம் வந்து செல்வார்கள். உயிர் நட்பும் குடும்ப உறவும் ஒருமித்துக் கலந்தன.

ஆதவனின் தந்தை அருளானந்தர் ஒருசில ஆண்டுகளுக்கு முன்னம் சாலை விபத்தொன்றில் அகால மரணமுற்ற விட்டார். அருளானநந்தர் இருந்த காலந்தொட்டு இன்றைய நாள் வரை வேலைக்குப் போயறியாத மரகதம் அம்மாள் ஆதவனின் தாயார். அருளானந்தரின் இறப்புக்குக் காரணமாய் அமைந்த சாலை விபத்துக்குரிய இழப்பீட்டுத் தொகை அவர் பணி புரிந்து வந்த “நேவல் பேஸ்” என்னும் ஆங்கில ஏகாதிபத்திய நாவாய்த்தளக் கப்பற் பட்டறைக் கம்பெனி அருளிய ஓய்வூதியத் தொகை, அருளானந்தரின் மத்திய சேம நிதித் தொகை ஆகியவற்றை ஒருங்கிணைத்து வங்கியல் போட்டு வைத்துக் கொண்டு, விரலுக்குத் தக்கதொரு வீக்கமா, எளிமையும் இனிமையும் ததும்ப வாழ்க்கைக் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தனர்.

ஆதவன் பிறந்த ஒரு சில ஆண்டுகளில் அவனுடைய தந்தையார் அகால மரணமுற்று அமரராகி விட்டார். அந்த அடி நாளிலிருந்து, ஆதவனின் தாயார் மரகதம் அம்மாள்; தன் இளமைக் கொலுவிருப்புகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, கோபுரக் கலசம் போல் உயர்ந்து நின்று, தன் மகனின் நல்வாழ்வு ஒன்றையே தன்னுடைய இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வந்தவர்…!

ஆதவன் புத்திசாலி… அம்மாவின் அபிலாசைகளைப் புரிந்து கொண்டு, சீனியர் கேம்பிரிட்ஜ் அளவின் தன் படிப்பை அமைதிப் படுத்திக்கொண்டு, வேலை செய்வதற்கு ஆயத்தமானான்.

ஆங்கில ஏகாதிபத்திய நாவாய்த்தளப் பட்டறையில் ?நேவல் பேஸில்? பணி புரிந்து வந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கே முதலிடம் என்னும் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், “அப்ரண்டீஸ்” என்னும் பட்டறைப் பயிற்சித் தொழிலாளராக “வெல்டிங்” பகுதியில் வேலைக்குச் சேர்ந்து தன்னுடைய சுறுசுறுப்பாலும், படிப்பறிவாலும்; வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற முனைப்பினாலும் அயராது பாடுபட்டு “சார்ஜ்மேன்” என்ற நிலைக்கு உயர்ந்து சிறந்தான் ஆதவன்…!

சிங்கப்பூர் அரசியலில் ஒரு திருப்பம்….! ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்தெட்டம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நாள், ஆங்கிலப் பேரரசுடனான உடன்படிக்கையின் மூலம் “நேவல்பேஸை” மீட்டு, “செம்பவாங் ஷிப்யார்ட்” என்று பெயர் மாற்றம், நிர்வாக மாற்றம் செய்து, சிங்கப்பூர் அரசு தன்னாட்சிக்குக் கொண்டு வந்து செயல் பெறத் தொடங்கிய ஒருக் காலக் கட்டம்.

சிங்கப்பூரில் மற்றும் இரண்டு கப்பற் பட்டறைகள்…! கெப்பல், ஜூரோங் கப்பற் பட்டறைகள் முன்னிலும் விரிவுப்படுத்தப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருந்தன. “ஜ?ரோங் ஷிப்யார்ட்” தொழில் நுணுக்கர்கள் தேவை என்று விளம்பரம் விடுத்திருந்தது. ஆதவன் ஆசிரியர் ஆதிமூலம் அவர்களிடம் கலந்தாலோசித்தான். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” என்னும் அமுத வாக்கைத் திருவாய் மலர்ந்தருளினார் ஆசிரியர். அண்ணன் காட்டிய வழியம்மா…!” என்று, வானொலியில் தேனொலியாய்ப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஆதவன் ஜுரோங் கப்பற்பட்டறையில் “போர்மேன்” பதவி பெற்றுத் திகழ்ந்தான். பதவி உயர்வும், சம்பள உயர்வும், வாழ்க்கையின் உயர்வுக்கு வழி வகுத்தன…! மரகதம் அம்மாள் ஆசிரியர்க்கு நன்றி கூறிக் கரம் கூப்பினார்கள்.

ஆதவன் ஆங் மோ கியோ பகுதியில் அடுக்குமாடி வீடு ஒன்றினை வாங்கிக் கொண்டு குடி பெயர்ந்தான். புதுமனை புகுவிழாவன்று ஆசிரியர் ஆதிமூலம் குடும்பத்தோடு வந்திருந்து ஆசீர்வதித்தார். இடங்கள் மாறும் வாய்ப்புகள் ஏற்படலாம்; இதயங்களும் அப்படியா; என்ன? ஆத்மார்த்த உறவுகளுக்கு ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு கூட ஓர் இடைவெளி ஆகிவிடுவதில்லை.

காலச் சுழற்சியில் கணக்கற்ற மாற்றங்கள் ஏற்படுவது இயற்கைதானே…! படிக்க வைப்பதென்றால் ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்புவதுதான் என்றொரு மனோநிலைக்குப் பெற்றோர்கள் வந்து விட்டனர். மொழிவரிப் பள்ளிகள் படிப்படியாக அடைபட்டுக் கொண்டு வந்தன. அத்தகைய பாதிப்புக்கான பள்ளிகளில் ஆசிரியர் ஆதிமூலனார் பணிபுரிந்து வந்த பள்ளியும் ஒன்று.

தென்கிழக்காசியாவிலேயே ஒரே ஒரு தமிழ் உயர்நிலைப் பள்ளி என்ற பெருமைக்கும், சிறப்புக்கும் உரிய அமைப்பில் மேக்ஸ்வல் சாலையில் ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளில் தோன்றி எடுப்போடு திகழ்ந்த உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார் ஆசிரியர் ஆதிமூலம்…!

இப்போதெல்லாம் ஆசிரியர் அவர்களும், அவர்தம் அன்புத்தம்பி ஆதவனும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பிற்பகல் இரண்டு மணியளவில் சந்தித்துக் கொள்வார்கள். ஏறத்தாழ இரவு எட்டு மணி வரை பேசியிருந்து பிரிந்து செல்வார்கள். இன்றியமையாத, தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தாலன்றி இவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளலும் “எலிசபெத் வாக்”கில் சந்தித்துப் பேசி மகிழ்வார்கள்.

சிங்கப்பூர் ஆற்றில் பெரிய பெரிய மின்சாரத் தோழிகள் ஊர்ந்து கரையோரத்தில் சரக்குகளை ஏற்றிக் கொண்டும் இறக்கிக் கொண்டும் இருக்கின்ற காட்சி: தேசிய சின்னமாகிய பெரியதொரு சிங்க மீன் வாயிலிருந்து வண்ண விளக்குகளினுடே தண்ணீர் பீறிட்டெழுந்து வந்து விழுகின்ற நீரருவிக் காட்சி, விக்டோரியா நினைவு மண்டபம், எதிரே ‘ஆஜானுபாகுவாய்” எழுந்து நிற்கும் நவீன சிங்கப்பூரின் புத்துலகச் சிற்பி. சர் ஸ்டாம் போர்ட் இராபிள்ஸ் சிலை ஆகியன ; வாரந்தோறும் சந்திக்கும் அவர்களுக்கு வழக்கமாகி விட்ட ஒரு கசப்பாகத் தோன்றாமல் பார்க்குந்தோறும் பார்க்குந்தோறும் பார்வைக்கு இன்பம் பயப்பனவாய்ப் பனித்துக் கொண்டிருந்தன. எழில் குலுங்கும் இயற்கைச் செறிவுகள் கசப்பதில்லை.

அன்று சனிக்கிழமை…! ஆதிமூலமும் ஆதவனும் சந்தித்து அளவளாவிக் கொள்ளும் நாள்…! ஆதவன் வருவதற்குள சில அவசரக் கடிதங்களைத் தபாலில் சேர்த்து விட்டு வந்து விடலாம் என்று, அதோ… சிங்கப்பூர் “ஜெனரல் போஸ்ட் ஆபீஸ்” சென்று கொண்டிருக்கிறார் ஆசிரியர்.

பழமையின் அடிச்சுவடே தெரியாமல் நாளொரு வண்ணமும் பொழுதொரு வடிவமுமாய்ப் புதுமையின் எழிற்கோலம் பூண்டு கொண்டிருக்கும் சிங்கைத் திருநாட்டில் பழமையின் சின்னங்களாய் இன்றளவும் பரிணமித்துக் கொண்டிருககும் சிலவற்றுள் ஒன்றான அந்தப் பெரிய தலைமை அஞ்சலகக் கட்டிடத்திலிருந்து வந்து கொண்டிருக்கும்போது, ஆதவன் ஒரு “ஜோடி”யோடு வந்து ஆசிரிய அண்ணனை எதிர் கொண்டான்.

“இந்தப் பூனையும் பால் குடிக்குமா?” என்று எண்ணிக் கொண்ட வண்ணம் ஆசிரியரும் எதிர்கொண்டு வரவேற்று மகிழ்ந்தார். ஆதவன் தலையைச் சொரிந்து கொண்டே அந்தப் பெண்ணை அறிமுகப்படுத்தினான். பனிவெல்லும் பார்வையுடன் நனி மகிழ் “நனை”யீந்த வண்ணம் அணிமலர்க் கரங்கள் குவித்து வணங்கினாள்.

கற்பகம்… ஆம்; அதுதான் அவள் பெயர். “அழகின் பிறப்பிடம்” என்று ஒரு சொற்றொடரால் அவளை வர்ணித்து விட முடியாது. ஆண்டவனின் படைப்பு இரகசியத்தை ஆராய்ந்து பார்த்துச் சொன்னால் ஒருவகை, “மினுமினுக்கும்” கருமை நிறக் கட்டழகுத் தோற்றம்…! “செம்மை’ அவள் நிறத்தில் இல்லை; அது; பண்பில் இருந்தது. செம்மையும் செழுமையும் இருக்கும் போது “சிவப்பு” ஒரு பொருட்டா?

உரைவீச்சுப் புதுக் கவிதையாகக் காட்சியளிக்காமல், இலக்கண வழுவில்லாத ஒரு சிறந்த மரபுக் கவிதையாகக் கற்பகம் ஆசிரியர் தம் உள்ளத்தில் உயர்ந்து நின்றாள். ஆதவன் ஆசிரியரிடம் அனுமதி கேட்டுக் கொண்டு, அவனை வழியனுப்பி வட்டு வந்தான். வழக்கம் போல் அவர்களின் பொழுது போக்கு இனிது அரங்கேறிக் கொண்டிருந்தது.

அங்கீகாரம் பெறுவதற்குத்தானே இந்த அறிமுகப்படலம்..! அது புரியாதவரா ஆசிரியர்…? அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை….! ஆதவன் செம்பவாங் வட்டாரத்திலிருந்து குடி பெயர்ந்து சென்ற, அந்தப் புதுமனை புகுவிழாவுக்குப் பின் இன்று தான் முதன் முதலாகத் தன் மனைவியுடன் ஆசிரியர் ஆதிமூலம் ஆதவனின் வீட்டுக்குச் சென்றிருந்தார். மரகதம் அம்மாளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி..!

காப்பி, பலகார விருந்தோம்பலுக்குப் பின், ஆசிரியர் நாசுக்காக ஆரம்பித்து வைத்தார். அவர் மனைவி அதற்குத் தூபம் போட்டு முடித்து வைத்தார். எல்லாம் ஒரு “செட் அப்” தானே…!

ஆசைப்பட்டுட்டான்; செய்து வச்சிடுவோம்; இது மார்கழி, பீடை மாசம் ஒரு மாசம் பொறுத்துக்கச் சொல்லு; ‘தை பொறந்தா வழி பொறுக்குமுன்னு” சொல்லுவாங்க பெரியவங்க; பொங்கலுக்கு அப்புறம் மங்கள காரியம் பேசுவோம்…! என்று கூறி, மரகதம் அம்மாள் தனது ஆட்சேபனை இல்லாமையைத் தெரிவித்து விட்டார்கள்.

ஆசிரியர் புறப்படத் தயாரான போது, மரகதம் அம்மாள் ஆத்திரப்பட்டார்கள். “ஆடிக்கோ அமாவாசைக்கோன்னு அத்தி பூத்தாப்ல வந்திருக்கீங்க; ஆக்கி அரிச்சி சாப்பிட்டுட்டுப் போனா ஆகாதாப்பா….! உங்கம்மாவா இருந்தா இப்படித்தான் சுடு தண்ணிய கால்ல ஊத்திக்கிட்டு வந்து போவீங்களா….?” என்று கோபித்துக் கொள்ளவே, மறுப்பேதும் தெரிவிக்காமல் ஆசிரியரின் மனைவி அடுக்களைக்குள் நுழைந்து விட்டார்.

அதற்குப் பிறகு ஆசிரியருடன் பேசிக் கொண்டிருந்த மரகதம் அம்மாளின் பேச்சில் தனக்கு வரப்போகும் மருமகளின் பூர்வாங்கம் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆதங்கம் வெளிப்பட்டது. ஆதவனிடமிருந்து பெற்ற அந்தத் தகவல்களை அடியொற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்பா – அம்மா இருவருமே அண்மைக் காலத்தில் அமரத்துவம் அடைந்து விட்டார்கள். சிக்லாப் பகுதியில் கிராமப்புற அமைப்பிலான சொந்த வீடொன்று இருக்கிறது. இளம்பெண் தனித்திருக்கக் கூடாது என்ற நோக்கில், அந்த வீட்டை விட்டு விட்டு, ஒற்றைக்கொரு உடன் பிறந்தநாள் அக்காளின் வீட்டில் அடைக்கலமாக இருந்து கொண்டிருப்பவள்…! சீனியர் கேம்பரிட்ஜ் வரை படித்து முடித்துவிட்டு கடந்த மூன்றாண்டு காலமாக, சிங்கப்பூர் ‘பிறப்பு இறப்புப்” பதிவகத்தில் பணிபுரிந்து வருபவள்…! எவருடைய எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் தன் கையூன்றிக் கரணம் போட்டு வாழக் கற்றுக் கொண்டவள். எளிமையும் இனிமையும் ததும்ப வாழ்ந்து வருபவள்…!

ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தெட்டாம் ஆண்டு ஜனவரி மாதம் முப்பதாம் நாள் ஆதவன் கற்பகம் திருமணம் ஆடம்பர ஆரவாரம் ஏதுமின்றி ஆலயத் திருமூலத்தில் அமைதியாக நடந்தேறியது. பகட்டு, படாடோபம், எளிமை, இனிமை என்பனவற்றுக்கெல்லாம் மனம் தானே மூல காரணம்….!

காலச் சக்கரத்தின் சுழற்சி மிக விரைவாக இருக்கின்றது. ஆ ஆண்டு தொடங்கிய சுறுசுறுப்பும் அதற்கிடையில் ஒன்பது மாதங்கள் ஓடி விட ஓட்டமும் ஒரு மின்னல் வேகம் போல் எண்ணிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அன்று சனிக்கிழமை; செப்டம்பர் மாதம் முப்பதாம் நாள் அவர்கள் சந்திப்பில் தொடர்பற்ற இந்த ஒரு விஷயமும் வந்து விழுந்து தெறித்தது. “நேற்று வெள்ளிக்கிழமை; கற்பகம் வீடு மெழுகி விளக்கு வைக்கவில்லை என்று தெரிந்தவுடன், “தலை முழுகிட்டாடான்னு” அம்மா சலித்துக் கொண்டார்கள் என்ற கூறிவிட்டு, ஆதவன் ஒரு சில நிமிடங்கள் மௌனமாக இருந்த போது ஆசிரியரும் அந்த அமைதியில் இரண்டறக் கலந்து விட்டார்.

ஆதவன் பேச்சைத் திசை திருப்பினான். “அண்ணியையும் அழைத்துக்கொண்டு அவசியம் தீபாவளிக்கு வந்துவிட வேண்டும்” என்று கூறினான். தீபாவளிக்குரிய அழைப்பாக மட்டும் இல்லாமல் மௌனக் களைப்புக்குரிய திசை திருப்பும் உத்தியாகவும் ஆசிரியருக்குத் தோன்றியது. வெகுவாக மனத்துள் ரசித்து வரவேற்றுக் கொண்டதுடன், “நாங்கள் இல்லாமலா உனக்குத் தலைத்தீபாவளி…? நீ அழைத்துத்தான் நாங்கள் வரவேண்டுமா?” என்று ஒரு போடு போட்டு வைத்து மிகவும் உற்சாகமாக அவனது அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

அதற்குப் பிறகும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த போது “பெரியவர்களின் ஆதங்கம் அப்படியெல்லாம் இருக்கும், அதைப் பெரிதுபடுத்திக் கொண்டு நீ மனம் குழம்பிக் கொண்டிருக்காதே” என்று ஆசிரியர் தன் அருமைத் தம்பி ஆதவனுக்கு அறிவுறுத்தினார்; அதன் பின் பிரியா விடை பெற்றுப் பிரிந்து சென்றனர்.

அடுத்த வாரம் சனிக்கிழமை; அக்டோபர் மாதம் ஏழாம் நாள்….! ஆதவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘அம்மாவின் ஏற்பாட்டில் ஆர்ச்சார்ட் ரோடு சிவன் கோவிலில் ஏதோ நவக்கிரஹ பூசைக்குப் போயாக வேண்டும் என்ற நிலையிருப்பதால் மன்னித்துக் கொள்ளுங்கள்; நாம் சந்திக்க இயலாது” என்று கூறி வருந்தியபோது, ஆசிரியர்; தனக்கும் ஏதோ அவசர வேலையிருப்பதாகச் சொல்லி, அறிவு நுட்பத்தோடு ஆறுதல் கூறினார்.

அக்டோபர் மாதம் முப்பதாம் நாள் தீபாவளி…! தலைத் தீபாவளி மாமியார் வீட்டில் தான் நடைபெற வேண்டும். ஆதவனுக்கு அந்த வாய்ப்பு இல்லாததால் மருமகளுக்கு எந்தவித மனக் குறைவும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்து மரகதம் அம்மாள் தலைத் தீபாவளி ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார்கள். தீபாவளிக்கு அப்புறமாவது கண்ணன் அருள்வான் என்றொரு ஆத்மார்த்தகரமான நம்பிக்கை அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.

ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தெட்டாம் ஆண்டு அக்டோபர் மாதம் பன்னிரண்டாம் நாள்…! சிங்கப்பூரின் வரலாறு காணாத தீ விபத்து..! ஜுரோங் கப்பற்பட்டறையில் “ஸ்பைரோவ்ஸ்” என்ற கிரேக்க எண்ணெய்க் கப்பல் வெடி விபத்துக்குட்பட்டதால், எழுபத்பத்து நான்கு பேர் அடையாளம் தெரியாத நிலையில் கருகி உயிரிழந்தனர்; முப்பத்து மூன்று பேர் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிங்கப்பூர் “ஜெனரல் ஆஸ்பிட்டல்” அமளி துமளிப் பட்டுக் கொண்டிருந்தது. கொழுந்து விட்டெரிந்த நெருப்புக்குப் பலியானோரில் ஆதவனும் ஒருவன்….!

சிங்கப்பூரையே கதி கலங்க வைத்த இந்தக் கோரத் தீ விபத்திற்குப் பலியானோர்… பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள் தாரத்தை இழந்தோர், தன் மாங்கல்யத்தை இழந்தோர், உடன்பிறந்தோரை இழந்தவர்கள் ஆகிய ஆகிய பல்வேறு தரத்தினர்…!

அரசியல், தொழிற்சங்க, சமுதாய, சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட சிங்கப்பூர் மக்களனைவரும் கண்ணீர் வடித்து, அனுதாபங்களைப் புலப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆறாத்துயரின் அவலக் காட்சியே…!

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முப்பத்து மூன்று பேரைக் காப்பாற்றுவதற்கு “இரத்த தானம்” கேட்டு, எழுப்பப்பட்ட அரசியலாரின் வேண்டுகோளைக் கேட்டு எழுந்து வந்து இரத்த தானப் படையினர் ஆயிரக் கணக்கானோரில் ஆசிரியரும் இருந்தார்.

ஆதவனுக்கு ஈமக் கிரியைகளை ஆசிரியரே முன்னின்று செய்தார். கற்பகத்தை மணக்கோலம் பூனச் செய்து, பிணக் காடியை வலம்வரச் செய்து, சூட்டப்பட்டிருந்த பூக்களையும் மாலையையும் பிய்த்து எறிந்து நெற்றிக் குங்குமத்தை அழித்து, வெள்ளைச் சேலையைப் போர்த்தி வண்ணப் புடவையைக் களைந்து விதவையாக்கிக் கொண்டிருந்த அவலக் காட்சி காணச் சகிக்கவோ….?

“நாளைக்குங்க…” என்று சொன்னேனே, இந்தப் பாவி… அந்த “நாளைக்கு” என்பது இனிமேல் எனக்கு வராதுங்க… அந்த “நாளை” என்பது இனிமேல் எனக்கு எப்போதும் இல்லீங்க… இது சத்தியம் சத்தியம். உங்க மேல ஆணயாச் சொல்றேங்க….” இவ்வாறு கற்பகம் கத்திக் கதறிக் கொண்டிருந்தாள்.

அன்பு மகனை இழந்த மரகதம் அம்மா, காதலித்துக் கைபிடித்த கணவனை இழந்த கற்பகம்… இருவரும் கல்லாய்ச் சமைந்திருந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் மனோபலம் இல்லாமல் ஆசிரியரும் அதிர்ந்து போயிருந்த நிலையில் அமர்ந்திருந்தார். ஆதவனின் புகைப்படத்துக்கு முன்னால் அம்மன் விளக்கு சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

தேசிய தொழிற்சங்கம் முன்னின்று வசூல் செய்தது. இல்லையெனாது ஈந்து இதயமார்ந்த இரங்கலைப் புலப்படுத்திக் கொண்டிருந்த சிங்கப்பூர் மக்களின் ஈகைத் திறத்தால் பல இலட்சம் வெள்ளிகள் குவிந்தன. பெரும் தீ விழுங்கி ஏப்பமிட்ட பேராபத்துக்குப் பலியானோர்க்கு நிதியுதவி வழங்கப்பட்டது. மனிதாபிமானம உலகின்கண் என்றும் உண்டு என்பதற்கு இஃதோர் சாட்சியமா…?

இரண்டு மாதங்கள் எப்படியோ இரிந்தோடி விட்டன. எழில் “அஸ்திகள்” புண்ணிய கடலில் கரைந்து கொண்டிருக்கின்ற ஒரு காலக் கட்டம்…! மரகதம் அம்மாளின் தொலைபேசித் தொடர்பு வழி அவசர அழைப்பைப் பற்றி, மனம் குழம்பிய நிலையில் ஆசிரியர் மதியப் பள்ளி நேரம் முடிந்து, இரவு ஏழு மணியளவில் ஆதவனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

கற்பகம் இன்னும் வீடு வந்து சேரவில்லை. வாகனப் போக்குவரத்து நெரிசல் ஆகியிருக்கக்கூடும். மரகதம் அம்மாள் வரவேற்று தேனீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். மரகதம் அம்மாள் திடீரென்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில், “இந்த அநியாயத்தை நான் எப்படிச் சொல்வேன்? அவனைத் ‘தலைமுழுகிட்டு இவ, தலை முழுகாம” வந்து நிக்கிறாப்பா…” என்று புலம்பினார்கள். இதைக் கேட்ட நடுக்கத்தில் ஆசிரியர்; தன் கையிலிருக்கும் தேனீர் கண்ணாடி டம்ளர் எந்த நேரத்திலும் கை நழுவிக் கீழே விழுந்து உடைந்து சிதறலாம் போல் இருந்தது. ஆசிரியர் மிகுந்த சிரமத்துடன் நிதானத்தை வரவழைத்துக் கொண்டார்.

அப்போது வீட்டிற்குள் நுழைந்து வந்த கற்பகம் விழிகளாலும், தலையசைப்பாலும் “வாங்க” என்பது போல் வரவேற்று விட்டு, உயிர்பற்றதொரு நிலையில் உள்ளே சென்று மறைந்தாள். இப்போதைக்கு அவள் வெளியே வராமல் இருப்பது நல்லது என்று ஆசிரியர் தன் மனத்துக்குள் எண்ணிக் கொண்டார்.

“படிதாண்டாப் பத்தினியின் பதிவிரதாத் தன்மையைப் பார்த்தியா?” என்று மரகதம் அம்மாள் சொன்ன அந்தச் சொற்கள்; வெறுப்பின் உச்சத்தில் வெடித்து வந்த வினாக் கணைகளாய் தொடுத்து நின்றன. இதயத்தைக் குத்திக் கிழிக்கும் ஆற்றல் மிகுந்த அந்தச் சொல் தொடர்களை ஆசிரியரால் ஜீரணிக்க முடியவில்லை. அவசரப்படாமல் ஆராய்ந்து பார்ப்போம் என்று அப்போதைக்கு சொல்லிக் கொண்டு ஆசிரியர் நாசூக்காக விடைபெற்றுக் கொண்டார்.

ஆசிரியர்; பிரச்சினைக்குத் தீர்வு காணக் கற்பகத்தை தனிமையில் சந்தித்துப் பேசினார். மரகதம் அம்மாள் மனத்துள் விளைந்திருந்த சந்தேகத்தைத் தெளிவாகக் கூறினார்.

ஆதவனும் ஆசிரியரும் ஆகக் கடைசியாகச் சந்தித்த, செப்டம்பர் மாதம் முப்பதாம் நாள் சனிக்கிழமையன்று, ஆதவன் தன் தாயாரின் “முணுமுணுப்பு” பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தானே… அந்த அடிப்படையில் அமைந்த தன் சந்தேகத்தை மிகுந்த தயக்கத்துடன் ஒவ்வொரு சொற்களையும் “எண்ணி எண்ணி”க் கொண்டு இடையே எச்சிலையும் விழுங்கிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆசிரியரின் சந்தேகத்தை எதிர்கொண்ட கற்பகம் சற்றும் தாமதியாமல் நாணாமல் “வீட்டில் அத்தகைய ‘முணுமுணுப்பு” நிகழ்ந்ததும், உண்மைதான்; நான் இப்போது ஆகியிருப்பதும் உண்மைதான்” என்று சொல்லிவிட்டு, “விளைச்சலுக்குத் தான் பல நாட்கள் காத்திருக்க வேண்டும்; விதைப்பதற்கு ஒரு நாள் போதும்” என்று சொல்லி விம்மிச் சோர்ந்தாள். கற்பகத்தின் அறிவுபூர்வமான அந்தப் பதில் ஆசிரியரை வியப்பில் ஆழ்த்தியது.

அக்டோபர் மாதம் ஆறாம் தேதி வெள்ளிக்கிழமையன்று; வீடு மெழுகி விளக்கேற்றியிருக்கலாம் தானே…? ஆதவன் இறந்தது அக்டோபர் மாதம் பன்னிரண்டாம் தேதி; இதற்கிடையில் இருந்த அந்த ஐந்து இரவுகளில் அவர்களுக்குள் “அணுக்கம்” இருந்திருக்கலாம் அல்லவா? அந்த நெருக்கத்தினால் ஆகியிருக்கலாம் அல்லவா?

கற்பகம் உசுப்பி விட்ட சிந்தனை ஆசிரியரின் உள்ளத்தால் தீவிரப்பட்டுக் கொண்டிருந்தது. கற்பகம் கைத்துவாலையால் கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். ஆசிரியர் சற்றும் எதிர்பாராத நிலையில் இப்போது கற்பகம் பேசத் தொடங்கினாள்.

“ஆமாங்க…அக்டோபர் மாதம் பதினொன்றாம் தேதி இரவு மட்டும்தான் எங்களுக்குள் “நெருக்கம்” இல்லை. அன்று அவர் என்னை அணுகி வந்த போது, அலுவலகத்தில் மிகுந்த வேலையின் காரணமாக நான் உடலும் உள்ளமும் சோர்ந்திருந்த நிலையில் இருந்ததால் நாசுக்காக ஒதுங்கிக் கொண்டேன். ஊடலாகக் கூடப் பிணக்கு இல்லாத நிலையில் அவர் விலகிச் சென்றார்; அவ்வளவு பெரிய, உயர்ந்த மனம் அவருக்கு…! காலையில் வழக்கம்போல் உபசரித்து வேலைக்கனுப்பும் போது, ‘நாளைக்குங்கன்னு’ சொன்னதுக்கு ராத்திரி கோவிச்சிக்கிட்டீங்களா…?” என்று கேட்டேன்; அதற்கவர், “பைத்தியம்… பைத்தியம்… அன்றாடம் சாப்பிட்டா அல்வாவும் கசக்கும்; ம்.. எப்படி என் தத்துவம்…?’ என்று வேடிக்கையாகப் பேசியிருந்து, சிரித்த முகத்தோடுதான் புறப்பட்டுச் சென்றார். “நாளைக்குங்க- என்று சொன்னேனே பாவி…. அந்த நாளைக்கு என்பது இனிமேல் என் வாழ்க்கையில் எப்போதும் வரப்போவதில்லை; இது சத்தியம்… இந்தச் சத்தியத்தை நான் அவர் மீது ஆணையிட்டுச் செய்திருக்கிறேன். என்னுடைய தூய்மைக்கு இதை விட வேறு விளக்கம் சொல்ல எனக்குத் தோணலிங்க….!” என்று விம்மலோடும் விக்கலோடும் சொல்லி முடித்தாள்.

கற்பகத்தின் மனச் சுமையை ஆசிரியர் தோள் மாற்றிக் கொண்டாரா…? கற்பகம் கடிகாரத்தைப் பார்த்தாள். இருவரும் கரம் கூப்பிக் கொண்டனர். கண்ணீர் முத்துகள் சரம் சரமாக உதிர்ந்தன.

பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமா? மரகதம் அம்மாளுடன் பேசும் போது கற்பகம் இல்லாமல் இருப்பது தான் நல்லது. ஆசிரியருக்குப் பிற்பகல் நேரப் பள்ளியாக இருந்ததும் ஒரு வாய்ப்பு….! காலையில் சென்றால் கற்பகம் இருக்க மாட்டாள் அல்லவா…?

எப்படி பேச்சைத் தொடங்குவது என்று ஆசிரியர் ஊசலாடிக் கொண்டிருந்தார். “உலை வாயை மூடலாம்; ஊர் வாயை மூட முடியுமா? பெரிய கல்லாத் தூக்கி தலையில போட்டுட்டா புண்ணியவதி….!” என்று மரகதம் அம்மாள் பேச்சைத் தொடங்கி வைத்து விட்டார்கள. “ஊர் என்னங்க ஊரு? இருக்கிறத இல்லேம்பாங்க…! இல்லாதத இருக்குதும்பாங்க… ‘நாலு பேரு சேர்ந்து காட்டுக் கத்தலா கத்திட்டா அதெல்லாம் நியாயமாகிடுமாங்க…?’ என்று, சமுதாயத்தைச் சாடுபவர் போலத் தொடங்கி, பின் சற்றே சாவதானமாக – சாதுரியமாக சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி முடித்தார் ஆசிரியர். இடைமறித்துப் பேசாமல் இருந்ததால் ஆசிரியருக்கு நம்பிக்கை பிறந்தது.

“ஒன்பது மாசமா விதைக்காம இருந்திட்டு, ஒரு வாரத்துக்குள்ள விதைச்சிட்டுப் போயிட்டானா…? கேழ்வரகுல நெய் வடியுதுன்னா கேட்பாருக்குப் புத்தி இருக்காதா….?” இது மரகதம் அம்மாள். ஆசிரியரின் நம்பிக்கை சுக்கு நூறாகிக் கொண்டிருந்தது.

எப்போதும் எதிர்பாராதது தான் அதிகமாக நடக்குமோ…? மரகதம் அம்மாளின் எதிர்க் கேள்விகள் ஆசிரியர் எதிர்பார்க்காதவை…! அதைக் கூட இரண்டாம் பட்சமாக எடுத்துக் கொள்ளலாம். எந்த தர்ம சங்கடம் ஏற்படக்கூடாது என்று காலை நேரம் பார்த்து வந்தாரோ அந்த அது இப்போது நடை பயின்றது.

ஆம்? கற்பகம் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தாள். கோயிலுக்குப் போய் விட்டு வந்திருக்க வேண்டும். கையில் ஆராதனைப் பொருட்கள் இருந்தன. ஆசிரியரின் காலை நேர வருகையைப் புரிந்துகொண்டு, “வாங்க” என்று மட்டும் வரவேற்று விட்டு அடியெடுத்து வைத்தாள்.

இன்னிக்கு துர்க்கா தேவி அம்மனுக்குப் பெரும் பூசை… அந்தப் பூசைக்கு ஒருத்தனுக்கு “முந்தானி” விரிச்சவங்க தான் போகனும்… இந்த அம்மாளும் போயிட்டு வராங்க…” என்று மரகதம் அம்மாள் வயதானவர்களுக்கே உரிய அமைப்பில் நீட்டி முழக்கி விட்டு, தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்கள்.

‘ஆமாங்க… நான் என் வீட்டுக்காரங்களுக்குத் துரோகம் தான் செஞ்சிட்டேன்; அதை ஒத்துக்கிறேன்; போதும்களா?” என்று பதட்டம், படபடப்பு எதுவும் இல்லாமல், இதயத்தின் உணர்வுகளையெல்லாம் இறுக்கிப் படித்துக் கொண்டு எந்தவொரு உணர்ச்சியுமே இல்லாத ஒரு “ஜடமாக” நின்று கொண்டு சொன்னாள். தன்னுடைய தன்னுடைய தூய்மைக்குச் “சாட்சியமில்லை” என்ற நெஞ்சக் கொந்தளிப்பில் தான் இப்படிச் சொல்லுகின்றாள் என்பது ஆசிரியருக்குப் புரிகிறது. அந்த அம்மாளுக்குப் புரிய வேண்டுமே….! கற்பகத்தின் தாய்மையைப் புலப்படுத்தும் ஆதாரமாக எந்த சந்தர்ப்பச் சாட்சியங்களைக் கொண்டு வந்து நிறுத்த முடியும்? கற்பகத்துக்காக ஆசிரியரின் உள்ளம் கரைந்து நெக்குருகியது.

கற்பகம் ஆசிரியரின் விழியசைவைப் புரிந்து கொண்டு உள்ளே சென்று மறைந்தாள். அப்போது, அந்த அம்மாள் தனிவான குரலில், “அவன் யாருன்னு தெரிஞ்சா அவன் கூடவே அனுப்பி வச்சிடலாம்…” என்று சொன்னார்கள்.

இந்த அமைதியைப் பயன்படுத்திக் கொண்டு ஆசிரியர்: ஆதவனின் இழப்பையும் அவர்களுக்கு ஒரு பற்றுக்கோடு இல்லாமையையும் விளக்கிக் கூறி, கற்பகத்தின் தூய்மைக்குக் கடவுளே சாட்சியமாக இருக்கட்டும். கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு அமைதியாக இருந்து விடுமாறு அறிவுரை கூறினார். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமாமே…? மரகதம் அம்மாளின் கல்மனம் கரைந்து உருகியது.

கற்பகம் அடுக்களையிலிருந்து கூடத்துக்கு வந்து, இதற்கு முன் எதுவுமே நடக்காதது போல் – “அன்னியோண்ணியக் குறைவும்” இல்லாதது போல்; “அத்தே… போய் முகம் கழுவி, சாப்பிட்டு விட்டு எங்கூட வாங்க… முக்கியமான விஷயம்…?” என்று அன்போடு அவசரப்படுத்தினான். மரகதம் அம்மாளும் மகுடி ஓசைக்குக் கட்டுப்பட்டாற் போல எழுந்து சென்றார்கள். கற்பகம் காசோலை இணைந்த கடிதம் ஒன்றை ஆசிரியரிடம் காட்டி, துணைக்கு வந்துதவுமாறு வேண்டிக் கொண்டாள்.

கற்பகத்தின் அவசரத் தயாரிப்பு; கோதுமை தோசை, மல்லித் துவையல்: காப்பி…! மூவரும் ஒன்றாக அமர்ந்து பசியாறினார்கள். மாமியும் மருமகளும் தயாராகி விட்டார்கள்.

ஆதவனின் அந்தப் பெரிய புகைப் படத்துக்கு முன்னால் நின்று கற்பகம் கை தொழுதாள். டேக்சி விரைந்து கொண்டிருந்தது. முதலில் மத்திய சேம நிதி அலுவலகம்…! அடுத்து, அஞ்சலகச் சேமிப்பு வங்கித் தலைமையகம்…! அலுவலக இயக்கங்களின் நடைமுறைகள் தெரிந்திருந்ததனால் கற்பகம் இயந்திர மயமாக இயங்கிக் கொண்டிருந்தாள். ஆசிரியர் ஓர் ஆண் துணை என்ற அளவில் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.

ஆங் மோ கியோ வீடமைப்புப் பேட்டையில் ஆதவன் வீடு வாங்கியிருந்த கணக்கு நீங்கலாக, எஞ்சியிருந்தது இருபத்தையாயிரம் வெள்ளி..! இழப்பீட்டுத் தொகையாகக் கிடைத்திருந்தது முப்பத்தையாயிரம் வெள்ளி….! அந்த அறுபதினாயிரம் வெள்ளியையும் மரகதம் அம்மாளின் பெயருக்குத் தனிக் கணக்கு திறந்து, அஞ்சலகச் சேமிப்பு வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் அடையாளக் கார்டையும் பக்தி சிரத்தையோடு, அன்பொழுகச் சிரித்துக் கொண்டே கற்பகம் தன் மாமியாரிடம் கொடுத்தாள். வெம்மையின் விளைவால் வியர்த்துக் கொட்டியதைத் தன் கைத் துவாலையால் ஒற்றிக் கொண்டிருந்தாள் கற்பகம்; மனப் புழக்கத்தின் பிரதிபலிப்பைத் தன் முந்தாணைத் தலைப்பால் மரகதம் அம்மாள் அழுந்தத் துடைத்துக் கொண்டார்கள்.

அவர்கள் இருவரையும் ஆசிரியர் ஒரு நோக்கில் உற்றுப் பார்த்தார். கற்பகத்தின் சாயல் அவர் தம் கண்மணிப் படலங்களில் விரிந்த போது, உரைவீச்சுப் புதுக்கவிதையாக இல்லாமல், இலக்கண வழுவே இல்லாத மரபுக் கவிதையாக ஆசிரியரின் உள்ளத்தில் மலர்ந்து கொண்டிருந்த கற்பகம்; இப்போது மனத்தைக் கவரும் காப்பியமாகவே உயர்த்து நின்று ஒளிர்ந்து பிரகாசித்தாள்.

ஏறக்குறைய ஏழு மாதங்களுக்குப் பிறகு கற்பகம் ஓர் ஆண் மகவுக்குத் தாயானாள். மறு பிறவியில் நம்பிக்கை இருக்குமானால், ஆதவன் பிறப்பெடுத்து வந்து விட்டான் என்று துணிந்து கூறலாம்; அத்தகையதொரு அழித்தெழுதா வார்ப்பு… மரகதம் அம்மாள் “சூரிய மூர்த்தி” என்று பிள்ளைக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

ஐயிரண்டு திங்கள் அங்கமெல்லாம் நொந்து அன்னையானாள் கற்பகம்; அது மட்டும்தான் அவள் கண்ட சுகம், பெருமிதம்…! அல்லும் பகலும் அறுபது நாழிகையும் சூரிய மூர்த்தி மரகதம் அம்மாளின் மடியிலும் நெஞ்சிலும் தான் இருந்தான். “அத்தை சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு ஆத்ம திருப்திங்க…!” என்று, கற்பகம் ஆசிரியரிடம் அவ்வப்போது ஆதங்கத்தோடு சொல்லிக் கொள்வாள்.

ஒரு பெரிய வீட்டில் பல குடும்பங்கள் வாடகைக்குக் குடியிருப்பார்கள். ஒரு குடும்பத்தார்க்குப் பிறக்கும் குழந்தையை, மற்ற அக்கம் பக்கத்துக் குடும்பங்கள், தங்களின் சொந்தக் குழந்தை போல் பராமரித்துப் பாசமும் நேசமும் கொள்வதுண்டு. மரகதம் அம்மாள் சூரியமூர்த்தியிடம் காட்டும் பரிவும், பாசமும் பராமரிப்பும் கூட அத்தகையது தானா? புரியாதா புதிர்…!

கற்பகம் தன் மாமியாரிடம் எந்த அளவுக்கு அன்பும் ஆதரவும் பவித்திரமும் பக்தி சிரத்தையும் காட்டிப் பழகினாலும் கூட மரகதம் அம்மாளின் நெஞ்சில் தைத்து. விட்டிருக்கும் அந்த நெருஞ்சி முள்ளை நீக்குவதென்பது இன்றுவரை இயலாத ஒன்றாகவே இருந்து வருகின்றது..!

எத்தனை பெரிய விசுவாசத்துக்குரியவரானும் அந்த ஒருவரைப் பற்றித் தப்பானதோர் எண்ணம் ஏற்பட்டு விட்டால், அதை மறக்கவோ மன்னிக்கவோ முடியாமல், இதயத்தில் அடித்தளத்தில் அழுந்தப் புதைந்து விடுவது என்பது, வயதானவர்களுக்கே உரிய ஒரு மனித பலஹீனமாக இருக்கக் கூடுமோ? மாமிக்கும் மருமகளுக்கும் ஓர் இணைப்புப் பாலமாக சூரிய மூர்த்தி இலங்கிக் கொண்டிருந்தாள்.

மரகதம் அம்மாளின் மனத்தில் தைத்து விட்டிருக்கும் அந்த “நெருஞ்சி முள்” நீங்குவது எப்போது? கற்பகத்தின் கற்புத் தூய்மை நிலை பெறுவது தான் எப்போது? இறைவனே சாட்சியென்றால் அவன் எழுத்தருள்வது எப்போது?

– மனங்கமழும் பூக்கள், முதல் பதிப்பு: நவம்பர் 1997, மலர்மாமணி பதிப்பகம், சென்னை.

மு.தங்கராசன்2 மு.தங்கராசன் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திலுள்ள தளுகை பாதர்பேட்டை என்ற ஊரில் 1934ல் பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தனது தாயை இழந்தவர், தந்தையோடு மலாயாவுக்கு வந்தார். ஜோஹூர் மாநிலத்திலுள்ள ‘நியூஸ்கூடாய்’ தோட்டத் தமிழ்ப் பள்ளியியில் ஆசிரியராக இருந்த தனது தந்தையிடம் தமிழ்க் கல்வியைக் கற்றார். 1955ல் ஆசிரியர் பட்டயம் பெற்ற இவர் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1955ல் தமிழ்முரசில் பிரசுரமான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *