இரு கடிதங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2025
பார்வையிட்டோர்: 216 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிகளோட்டி விளையாடி வருவோம்’ 

என்ற பாட்டைக் குரலெடுத்துக் கம்பீரமாகப் பாடினாள் வஸுமதி| தோணி மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. பாட்டுக்கு ஏற்றாற் போலவோ என்னவோ முழு நிலவு. சந்திரனுடைய வட்ட வடிவமான உருவம் அந்த ஏரியின் நீரில் குலுங்கி அசையும்போது, கருநீல ஏரியின் மற்றொரு சந்திரன் தான் உதித்து விட்டானோ என்று எண்ணும்படி இருந்தது வஸுமதியின் அந்தப் பாட்டு, நிசப்தமாக இருந்த அந்தப் பகுதியில் கம்பீரமாக எதிரொலித்துக் கண்ணுக்கெட்டிய தொலைவில் தெரிந்த கரை மீது மோதி கரையின் ஓரம் நின்று கொண்டிருக்கும் பச்சை மரங்களின் மீது மோதிப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. 

“வஸு! நீ பாடும் பாட்டில் இரண்டைத் தவிர மீதியெல்லாம் சரி என்றான் கல்யாணராமன். அவன் கைகள் துடுப்பைத் துழாவித் கொண்டிருந்தன. அந்த ஏரிக்கு வந்து, படகோட்டி இன்பப்பொழுது போக்க வேண்டும் என இருவருமிட்ட திட்டம் அன்று நிறைவேறியதிலே நிறைந்தது மனது. 

“என்ன இரண்டு சரியில்லையாம்?” என்றாள் வஸுமதி. அவள் கடைக்கண் அவன் பக்கம் திரும்பியது. ஆவல் நிறைந்த அவள் உள்ளத்தின் சாயை அந்தச் சிவப்புக் கன்னங்களிலே பிரதிபலித்தது, 

‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்பதை ‘திம்னாநாலா ஏரியில் மிசை நிலவினிலே’ என்றும் ‘சேர நன்னாட்டிளம் பெண்களுடனே! என்பதற்கு ‘வஸுமதி அழகு நல்லாளுடனே’ எனவும் மாற்றி அமைத்துப் பாடினால்…” என்றான் மிருதுவான குரலில் கல்யாணராமன். 

வஸுமதி ‘கலீர்’ என்று சிரித்துவிட்டாள். சிரிப்புக்கு எதிரொலியாக அவளது வளையல்கள் குலுங்கின. மறுபடியும் ஒருமுறை அவள் கல்யாணராமனைத் திரும்பிப் பார்த்தாள். 

கல்யாணராமனும், வஸுமதியும்திம்னாநாலா ஏரிக்குப் போக வேண்டும் என்று விரும்பிய உடனேயே… இராமசாமி, ‘அவர்கள் விரும்பிய இடத் நிற்கு அழைத்துச் செல்’ என்று டிரைவருக்கு உத்தரவிட்டு விட்டார். 

ஜாம்ஷெட்பூரிலிருந்து எட்டு மைல் தொலைவிலிருந்தது அந்த ஏரி. வளைந்து வளைந்துச் செல்லும் சாலையின் வழியாகக் கார் செல்லும் போது இயற்கைக் காட்சியைக் கல்யாணராமன் ரசிக்க, வஸுமதியின் இளம் உள்ளம் என்னென்னவோ இன்பக் கனவுகள் கண்டன. மலையின் மீது செல்லும் சாலையில் கார் திரும்புவதால் அவன் ஸ்பரிசம் சிறிது அவள் மீது படும்போது உண்டாகும் அந்தக் ‘கிளுகிளுப்பு’ இன்பக் கனவுக்குச் சுருதி சேர்ப்பது போலிருந்தது. 

கல்யாணராமன், தமிழ்நாட்டிலிருந்து வேலை கிடைக்காமல் வடக்கே சென்ற வாலிபர்களில் ஒருவன். சென்னைக்கு ஆயிரம் மைல்களுக்கப் பாலுள்ள ஜாம்ஷெட்பூரில் தொழிற்சாலையில் வேலை ஒன்றுக்கு வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்தவுடன், அவனும் விண்ணப்பம் போட்டு வைத்தான். நேர்காணல் ஒன்றுக்கும் அழைப்பு வந்தது. 

“எப்படியோ அம்மா! நம்ம காசு என்று நாலு சம்பாதிச்சாத்தான் கௌரவமாக வாழலாம்… உன் கடைசிக் காலத்தில் அதைக் கூட நான் செய்யவில்லையென்றால், என்னைப் படிக்க வைக்க நீ பட்ட துன்பத் நுக்குப் பிரதிபயனாக நான் என்ன மாற்றுத் தொண்டு செய்ததாகும்? என் பள்ளிச்சம்பளத்துக்கு நீ பலர் வீட்டுப் படிக்கட்டுகளை மிதித்து ஏறியிறங்கிப் பட்ட இடருக்கு இது கூடச் செய்யாவிடில், மகன் செய்ய வேண்டிய கடமையனின்று தவறினேன் என்று உலகம் பழிக்காதா?” என்று உணர்ச்சி யுடன் பேசிவிட்டு நன்னிலம் கிராமத்தை விட்டுப் புறப்பட்டான். 

எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும், மகன் தூர தேசத்துக்குப் போயாவது சம்பாதித்தாக வேண்டுமோ என்றுதான் அந்தப் பெற்ற மனத்தில் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. ‘அவர் இருந்திருந்தால், இப்படியா நேரும்? என் ஒரே செல்வ மகனைச் சென்னையில் மேலே படிக்க வைத்திருக்க மாட்டாரா?’ என்று அவள் எண்ணும்போது, ஏக்கத்தால் குழி விழுந்த அவள் கண்களிலிருந்து நீர்த் துளிகள் தளும்பி, வற்றியொட்டிப் போயிருக்கும் கன்னத்திலே வடியும். 


ஒரே ஒரு காலியான இடத்துக்கு நாற்பது பேருக்கு மேல் நேர் காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அவரவர்களுக்குப் பெரும் சிபாரிசு. திக்குத் தெரியாத காட்டில் அகப்பட்டதைப் போல் திருதிருவென விழிக்கும்படியான இடத்தில் கல்யாணராமனுக்கு, அவனுடைய நெஞ்சுத் துணிவுதான் துணை; சிபாரிசு. 

வாரி விடப்பட்ட அழகான தலையையும், பரந்த விசாலமான நெற்றி யையும் அந்த நெற்றியில் சுருண்டு விழும் சிறு தலைக்கேசத்தையும் அமைதியான முகத்தையும் ‘ஆபீஸர்’ இராமசாமி கவனித்தார். சட்டென்று அவருக்கு என்ன தோன்றியதோ என்னவோ, அவருடைய உள்ளத்திலே கல்யாணராமனின் உருவம் பதிந்து விட்டது. நாற்பது பேரில் கல்யாணராமனை மட்டும் தேர்ந்தெடுத்தது எல்லாருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. ‘இவன் அதிகத் திறமை வாய்ந்தவனாக இருக்க வேண்டும்’ என்று சிலர் பேசிக் கொண்டனர். இன்னும் சிலர், ‘அவர் ஊர்க்காரன் போலிருக்கிறது’ என்று காதில் படாமல் வம்பளத்தனர். 

எப்படியோ கல்யாணராமனுக்கே, தான் தேர்ந்தெடுக்கப்பட்டது வியப்பாகவும், நடக்க முடியாதது நடந்து விட்டதாகவுமிருந்தது. அன்றைக்கு அவர் ஆசீர்வாதத்தால் தான் எல்லாம் நடக்கிற என்றும், ஆறு மாதத்தில் ‘நிரந்தரம்’ ஆகிவிடும் என்றும், பிறகு தாயை இங்கேயே வரவழைத்துக் கொள்வதாயும் அமைதி நிறைந்த ஜாம்ஷெட்பூரில் அவர்கள் கொடுக்கும் ‘குவார்டர்ஸ்’ஸில் ஜம்மென்கு குடித்தனம் நடத்தலாமென்றும், தன்கஷ்டம் விடிந்தது என்றும் உருக்கமாகக் கடிதம் எழுதினான். அந்தக் கடிதம் அவன் தாயாரின் உள்ளத்து மகிழ்ச்சியைக் கொழுந்து விட்டு நெஞ்சு வரை எழச் செய்தது. 

‘கண்ட இடத்தில் சாப்பிடாதே… வேளா வேளைக்குக் குளிச்சுச் சாப்பிடு… நான் வரும் வரை உடம்பைப் பார்த்துக்கோ’ என்று எதிர் வீட்டுப் பெண்ணை விட்டுக் கடிதம் எழுதச் சொல்லி, மூன்று முறை அதைப் படிக்கச் சொல்லிக் கேட்டு, தபாலில் சேர்ப்பாள். 

கல்யாணராமனிடம் இராமசாமிக்கு தனிவித அன்பு ஏற்பட்டது. ஆயிரம் ரூபாய் வாங்கும் ஆபீஸராயினும் அவருக்கு எளிய இதயம் இருந்ததால், சுலபமாகக் கவர்ச்சி நிறைந்த அந்த இளம் முகத்திலே லயித்துப் போனார். பிரியமாக வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிடுவார். பெரும் ஆபீஸரின் தயவு கிடைப்பதென்றால்… 

“கல்யாணம்! இன்று நான் வர நாழியாகும். நீயே இந்தப் ‘பைலை’ வீட்டிலே போய் வைத்துவிட்டுப் போ. போகும்போது வஸுமதியிடம் இந்தப் பத்திரிகையைக் கொடு… காரிலேயே போ” என்பார் சில நாள். கல்யாணராமன் தட்ட மாட்டான். இந்த மாதிரியான வாய்ப்பு கிடைக்க வேண்டுமே! 

“நீ மட்டும் தனியாகவா இருக்கிறாய், வஸு? இந்த இடத்தில் எப்படிப் பொழுது போகிறது?” என்று அவன் தான் பேச்சைத் தொடங்கினான். பதிலை அறிய ஆவலில்லாமல், அவன் கண்கள் அந்த அறையில் சுற்று முற்றும் சுழன்றன. மணியால் போடப்பட்ட படம், நிலால் போடப்பட்ட படம். இவை ஒவ்வொன்றின் அடியிலும் ‘வஸுமதி’ என்று எழுதப்பட்டிருப்பதை ஒருமுறைக்கு இருமுறை படித்தான். 

முதல் சந்திப்பிலேயே வஸுவின் உள்ளம் சட்டென்று திடுக்குற்று, தோ மாறுதலைத் தனக்குள்ளே உண்டாக்கிக் கொண்டது. பதினேழு வருஷ காலமாக அவள் உள்ளத்திலே ஓடிவந்த அதே ரத்தத்தில் இன்று ஸ்தோ புதிய ஜீவன் ஏற்பட்டுவிட்டது போல் தோன்றியது. 

கல்யாணராமனுக்கு ஆபீஸ் நேரம்போக, இராமசாமியின் வீட்டுக்குச் சென்று பேசிக் கொண்டிருப்பதுதான் வேலை. பாரதியாரின்கவிதையில் இருந்து ஏதாவது அழகாகப் பாடி விளக்குவான். இயற்கையாக அமைந்த இனிமையான குரலில் பாரதியாரின் பாடலைப் பாடும்போது, இரண்டு உள்ளங்களிலும் விதவிதமான உணர்ச்சிகள் தோன்றும். இசை இன்பத்திலே ஆழ்ந்து, கல்யாணராமனின்திறமையிலும், அவன் மீதுள்ள அன்பிலும் இராமசாமி தனக்குள்ள நம்பிக்கையை மேலும் அதிகம் வளர்த்துக் கொள்வார். பாரதியின் பாட்டிலுள்ள இன்பத்தை விட, அவன்பாடும்போது அவன் உருவத்தில் தன் மனத்தைப் பறிக் கொடுத்து, அதை அடியமைப்பாகக் கொண்டு இன்பக் கோட்டை கட்டி, அதனால் உண்டாகும் இன்பத்தைப் பெரிதும் ரசிப்பாள் வஸுமதி. 

கல்யாணராமனுடைய உள்ளத்திலே நிமிஷத்துக்கு நிமிஷம் ஆவல் பொங்கும். தன் மீது மேலதிகாரிக்கு ஏற்பட்டுவிட்ட பிரியத்தையும், பேரபிமானத்தையும் அதனால் தன் வேலை உயர்வு பெற்று, தான் நன்றாக வாழப் போவதற்கு இது அஸ்திவாரம் என்பதைப் பற்றியும் நினைப்பான். ‘இவர்தான் வாழ்வின் தந்தை’ என்ற எண்ணம் தோன்றும். அவனுடல் புல்லரிக்கும். 

வஸுமதியும் கல்யாணராமனும் பழகுவதை அவர் தடை செய்ய வில்லை. அவருடைய அந்தரங்கமான விருப்பமும் அதுவே. தன் செல்வ மகளுக்கு ஒரு குறைவும் வராதவாறு இதுவரை கண்ணும் சுருத்துமாக இருந்த அவர் திட்டம் தீமையைத் தேடுமா? 

அலுவலகத்திலேயே எல்லாருக்கும் பொறாமைதான்; மேலிடத்து அபிமானம் பெற்று விட்டான் இவன் என்னும் வயிற்றெரிச்சல் உள்ளவர்களுக்கு, திம்னாநாலா ஏரிக்கு இருவரும் செல்ல இராமசாமியே கார் அளித்தார் என்பது தெரிய வந்தால்… 

“வஸு… நாளை கல்யாணமாகி நீ கணவருடன் வரும்போது, இதை விடப் பூரண நிலவை இன்னும் நன்றாக அனுபவிப்பாய்” என்றான் ஈல்யாண ராமன். அவன் என்ன நினைத்துக் கூறினானோ? 

வஸுமதிக்கு இந்த வார்த்தை வேதனை கலந்த இன்பமாகப்பட்டது. ‘நாளை கல்யாணமாகி நீ கணவருடன் வரும்போது என்கிறாரே… இது என்ன வார்த்தை? இவருடனே இதே நிலையில் வரப் போகத் திட்டமிடும் எனக்கு…’ என்றெண்ணும்போது, சிறு வியர்வைத் துளிகள் அரும்பின, மெல்லத் துடைத்துக் கொண்டாள். 

“வஸு! என்ன மௌனம்? இதோ பார்! நடு ஏரிக்கு வந்து விட்டோம்; மலையின் உச்சியில் தெரியும் அந்த மாளிகைக்கு அடிக்கப்பட்டிருக்கும் கோபி நிற வர்ணத்தின் மீது வெள்ளி நிறப் பூர்ணிமையின் ஒளிக்கதிர்கள் விழுந்து…” என்று கல்யாணம் அவள் முகத்தை, படகு புறப்பட்ட கரைப்பக்கம் திருப்பினான். அவனது ஸ்பரிசம் அவள் உடலில்பட்ட அந்த முதல் முறையில், அவள் உடல் குலுங்கியது; அவளையறியாவது ஒரு படபடப்பு உண்டாகியது. ‘குப்’பென்று இன்னும் வியர்த்தது. 

மெல்ல கல்யாணத்தின் கரங்களைத் தொட்டாள். துடுப்பைத் தள்ளிக் கொண்டிருக்கும் அந்த உடலில் ஏற்கெனவே வியர்த்து இருந்தது. இவள் தீண்டல் அவனுக்கு ஒரு மாறுதலையும் உண்டாக்கவில்லை. ஆழமான அந்த ஏரியும் பரந்த அந்த நீலவானும், ஜ்வலிக்கும் நட்சத்திரம் புடை சூழ்ந்த சந்திரனும், குன்றும் குன்றின் மீது நின்ற ‘எல்லோ ஹவுஸ்’ பங்களாவும் அவன் மனத்திரையில் புகுந்து அவனை இயற்கைத் தேவி யின் இன்பப் படைப்பின் வியப்பில் மூழ்கடித்துக் கொண்டிருந்தன. 

வஸுமதி அன்று ஒன்றும் பேசவில்லை. எவ்வளவோ பேச நினைத்தாள். ஒரு வார்த்தையும் நெஞ்சுக்குழிக்கு மேல் வரவில்லை. 


இந்த நிலையில் திடீரென ஒருநாள் தந்தி ஒன்று வந்தது. கல்யாண ராமனின் தாயார் மூன்று நாள்களாக படுத்த படுக்கையாய் இருப்பதாகவும், சுயநினைவே இல்லையென்றும் தெரிந்தது. 

ஏனோ இராமசாமிக்குத் தன் சொந்தச் செய்தி போல் வருத்த உண்டாகியது. அவனை ஊருக்கு வழியனுப்ப ரயில் நிலையத்திற்கு அவர் வந்திருந்தார். வஸுமதியும் வந்திருந்தாள். அவள் கண்களிலே நீர் தளும்பிக் கீழே குதிக்கத் தயாராக நின்றது. 

“வரேன் வஸு! ஒரு வாரம்தான்… மறந்து விடாதே” என்றான் கல்யாணம். 

“ஸார்! மன்னிச்சுக்குங்கோ… ஆபீஸிலே இவ்வளவு வேலையையும் விட்டு உங்கள் கௌரவத்தையும் பார்க்காமல், என்னை ரயிலேற்ற வரும் அளவுக்கு நான் என்ன அவ்வளவு தொண்டா செய்திருக்கிறேன்! இதற்கு நன்றியை, எந்தப் பிரதி உபகாரம் மூலம் எப்படித் தெரிவித்துக் கொள்வேன்?’ என்றான் கல்யாணம் நெஞ்சு தழுதழுக்க. 

வண்டி புறப்பட முதல் மணி அடித்தாகிவிட்டது. “நன்றி தெரிவிக்க நாள் நெருங்கி விட்டது, கல்யாணம்! ஊர் போய் அம்மா உடம்பைப் பார்த்துவிட்டு, சட்டுபுட்டென்று அம்மாவையும் அழைத்து வந்து விடு… உன் பிரதி உபகாரம் எல்லாம் இருக்கிறது” என்றார் சற்றே புன்சிரிப்புடன். அவர் முகம் மலர்ந்திருந்தது. இதைக் கூறி விட்டு வஸுவை அவர் நோக்கினார். அவள் உதடுகளில் நாணங்கலந்த புன்சிரிப்புத் தோன்றியது. அதை பிரதிபலிக்கும் கண்களுடன்கல்யாண ராமனை நோக்கினாள். மறு மணியும் ஒலிக்கவே வண்டி நகர்ந்தது. 


நன்னிலம் கிராமத்து வீட்டுத் திண்ணையில் அமைதியாக ஆலோசனையில்அமர்ந்திருந்தான்கல்யாணம். ‘தபால்… கல்யாணராமன்’ என்று தபால்காரன் ஒரு கவரைக் கொடுத்துச் சென்றான். சற்றுக் கனமான அந்தக் கடிதத்தை ஆவலுடன் பிரித்தான். நிம்மதியற்று, கவலையும் வருத்தமும் நிரம்பியிருந்த அவனுக்கு அந்தக் கவரைப் பார்க்கும்போது ஏதோ பாதிப் பளு நீங்கியது போலிருந்தது- 

முத்து முத்தாக எழுதியிருந்தது. ‘அவள்’ எழுத்துதான். கவரின் மேலே ‘ஸ்ரீ கல்யாணராமன் அவர்களுக்கு’ என்ற வரிகளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். ‘பாவம், நல்ல பெண்!’ என்று தான் அவன் உதடுகள் முணுமுணுத்தன. உறையைக் கிழித்து முதலில் அவன் கடிதத்தைப் படித்தான். அவனுடைய முக பாவத்திலிருந்து… அப்படி யென்ன அந்தக் கடிதத்தில் பிடித்தமில்லாதது எழுதப்பட்டிருக்கும்? 

அடுத்த கடிதம் இராமசாமியே எழுதியிருந்தார். ஆவலுடன் படிக்கத் தொடங்கினான். 

ஜாம்ஷெட்பூர், 20.1.1945 

சிரஞ்சீவி கல்யாணராமனுக்கு… அநேக ஆசீர்வாதம். நீ ஊர் போய் உடன் கடிதம் போடுவாயென எதிர்பார்த்தேன். அல்லது மறுவாரம் தாயாருடன் வந்து சேர்வாய் என எதிர்பார்த்தேன். நீ பெற்றுச் சென்ற பதினைந்து நாள் லீவு கழிந்து மேற்கொண்டு பத்து நாள்களாகி விட்டன. நீ இல்லாதது இங்கு ‘வெறிச்’ என்றிருக்கிறது. 

நீ உடனே வந்து விடுவாய் என்ற நம்பிக்கையில் தானிருக்கிறேன். முதல்நாள் ‘இன்டர்வியூ’வின் போதே உன்மீது தனிப் பாசம் எனக்கு ஏற்பட்டு விட்டது. உன்னை என் ஒரே மகள் வஸுமதிக்குக் கல்யாணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்று அன்றே திட்டமிட்டேன். என் உயர்ந்த அந்தஸ்துக்கும் உன் எளிய வாழ்வுக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு களை என் உள்ளம் சிறிது கூடப் பார்க்கவில்லை. தாய்க்கு ஒரே மகனான உன்னை, என் ஒரே மகளுக்கு விவாகம் செய்வித்து என்னுடனே இருக்கச் செய்யத் திட்டமிட்டேன். தன் பத்தாவது வயதிலேயே தன் தாயை அவளுக்குத் தாயாகவும் நானிருந்து வளர்த்தேன். வஸுமதியை என் கண்ணெதிரிலேயே அவள் தன் வாழ்க்கையை நடத்த விட வேண்டும் என்ற பேரவா உன்னைக் கண்டவுடன் வலுத்தது. உறுதியும் படுத்திக் கொண்டேன். 

வஸுமதியின் மனத்தையும் அறிந்து இருவரையும் பழக விட்டேன். ஊருக்குப் போய் நீ தாயாருடன் வந்தவுடன் இங்கேயே கல்யாணம் நடத்த நாள் பார்க்கும் அளவுக்கு எண்ணக் காற்றாடியை உயரப் பறக்க விட்டேன். ஆனால், போய்ச் சேர்ந்து ஒரு கடிதம் கூடப் போடவில்லை. உன் நினைவாகவே இருக்கிறாள் வஸுமதி. என் மாப்பிள்ளையாகி, உயர்ந்த வேலை ஒன்றில் உன்னை உயர்த்திக் காணத் திட்டமிட்ட எனக்கு, போய்ச் சேர்ந்து ஒரு கடிதம் கூடப் போடாதது சற்று ஏமாற்றமாயிருக்கிறது. 

தாய்க்கு உடம்பு எப்படி உள்ளது? உடன் தாயாரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு வருவாய் என்று நம்புகிறேன். செலவுக்கு இத்துடன் நூறு ரூபாய்க்கு ‘செக்’ இணைத்துள்ளேன். உன்வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும்… 

உன் பிரியமுள்ள
இராமசாமி. 

கடிதம் கல்யாணராமனின் கையினின்று நழுவித் திண்ணை முகப்பில் விழுந்தது. மெல்ல லேசாக வீசிய காற்று அதைப் புரட்ட முற்பட்டது. அவன் கண்கள் ஏதோ நடவாதது நடந்ததைக் காட்டுவது போன்று உற்று நோக்கின. எண்ண விசிறி விர்ரென்று சுழன்றது. அதன் வேக அளவு தெரியவில்லை. எத்தனை நேரம் அப்படியிருந்தானோ? 

”கல்யாணம்! என்னடா அப்படியே அசந்து உட்கார்ந்துட்டே! கடிதம் ஏதோ பறந்து போச்சு பாரு!” என்றாள் அந்தப் பக்கம் வந்த அவன் தமக்கை. 

‘விர்’ரென்று உள்ளே எழுந்து போனான் கல்யாணராமன். மறுகணம் காகிதம், பேனாவுடன் எழுதத் தொடங்கினான். கொட்டும் அருவியைப் போல் துள்ளித் துள்ளி எழுத்துகள் வந்தன. என்ன எப்படி எழுதி யிருப்பான்? 

நன்னிலம், 24.1.1945 

அன்புள்ள, மரியாதைக்குரிய ஸார் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் எண்ணம்… இந்த ஏழையை எண்ணிக் கட்டியிருந்த கோட்டை… இந்தப் பேதையை நினைத்துக் கண்டிருந்த கனவு, நிறை வேறாதபடி செய்துவிட்ட என்னை மன்னித்து விடுங்கள். 

நான் திரும்பவும் அங்கு வர வேண்டாம் என்ற எண்ணத்துடன் இங்கு வரவில்லை. சிறிது நேரம் முன்வரை அந்த எண்ணமில்லை. களங்க மில்லாது வஸுமதியுடன் பழக, தங்கள் அன்பு கலந்த இன்சொல் கேட்க, கண்ணும் கருத்துமாய் அலுவலகத்தில் வேலை செய்ய மீண்டும் புறப்பட்டு வரவே எண்ணியிருந்தேன். 

என் உயிருக்குயிரான தாய், நான் வந்த மூன்றாம் நாள் இறந்தாள் என்ற துயரத்தை எண்ணி மனம் வெம்பிப் போயிருந்தாலும், தாய் இறந்த மறுவாரம் என் ஒரே சகோதரியின் கணவர் காலமான செய்தி பேரிடியாக என்னை இறக்கி அமிழ்ந்துவிட்ட போதிலும், துன்பக் கடலின் பேரொலியை மறக்க, அங்கே வஸுமதியின் இனிய இசையைக் கேட்க வரத்தான் எண்ணியிருந்தேன். 

ஆனால், உங்கள் கடிதம்… உங்கள் கடிதத்துடன் இணைந்திருந்த வஸுமதியின் கடிதம்… என் எண்ணத்தை மாற்றி விட்டன. என் நெஞ்சு என்றுமே எண்ணியிராததை… கனவிலும் கருதியிராததைப்படித்தபோது, அதை அறியாமல் பழகியதை நினைக்கும்போது, தவறாக என்னை வைத்துப் பலப்பல எண்ணும்படி நான் நடந்து கொண்டதை எண்ணும் போது, என்னையே நான் குறைக் கூறிக் கொண்டு அதுபோல் நேரும்படி செய்ததற்கு மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 

உங்களைத் தந்தையாகக் கருதினேன். ஆயிரம் மைலுக்காப்பாலிருந்து வறுமை மாற்ற வந்த என்னைத் தேர்ந்தெடுத்து, உங்கள் அபிமானக் கையை நீட்டி அரவணைத்து, வீட்டிலே என்னை நீங்கள் சுதந்தரமாகப் பழக விட்டதை எண்ணி, கண்கண்ட தந்தை எனவே மதித்தேன். ஓர் அதிகாரியின் பெரும் தயவு கிடைத்து விட்டது என்று பெரு மகிழ்ச்சியடைந்தேன். 

வஸுமதியுடன் களங்கமில்லாமல் பழகினேன். தங்களைத் தந்தையாகக் கருதி, அவளை என் தங்கையாகக் கருதிப் பழகினேன். சொந்தத் தங்கை உடன்பிறப்பாக இல்லாவிடினும், அபூர்வமாகக் கிடைத்ததை எண்ணிச் சகோதர பாசத்தைக் காட்டினேன். 

திம்னாநாலா ஏரியில் தோணி விடும்போது என் மனம் என்ன கோட்டை கட்டியது தெரியுமா? இந்த வருஷம் வஸு என்னுடன் தோணியில் வர அவளைச் சுமக்கும் இத்தோணிக்குத் துடுப்புப் போடுகிறேன்; அடுத்த ஆண்டு அவளை அணைத்து நிற்கும் கணவரையும் அமர்த்தித் துடுப்புப் போட்டு ஏரியில் இன்பமாகச் செல்லுவேன் என எண்ணினேன்; கனவு கண்டேன். அவளைத் தொட்ட ஒவ்வொரு சமயமும் ஸ்பரிசத்தில் சகோதரத் தன்மையிருந்தது; அதை அவள் கூட அறியவில்லை; அவள் அறிந்திருந்தாள் என மிகவும் பேதைமையாக நம்பினேன். 

அம்மாவையும் பார்த்து விட்டு, இங்குக் கல்யாணம் நிச்சயமானால் கல்யாணத்தையும் முடித்துக் கொண்டு தாய் மனைவி சகிதம் ஜாம்ஷெட்பூரவந்து உங்களுக்குத் தொண்டு செய்ய, ரயிலேறும் போது நீங்கள் காட்டிய அன்புக்கு அழியாத நன்றி செலுத்தத் திட்டமிட்டிருந் தேன் . ஆனால், தங்கை போல் கருதிய வஸுவை நான் மணப்பது என்பது பற்றிய தங் கள் கடிதம்… அதற்காகத் தாங்கள் காட்டி வந்த அன்பைப் பற்றிய தங்கள் கடிதம் என்னைத் திடுக்குறச் செய்து விட்டது. 

நான் திடமாக முடிவு செய்து விட்டேன். கணவனையிழந்து வறுமை யால் வாடும் அக்காவை விட்டு அங்கு வர மாட்டேன். கல்யாணத்துக்குத் தயாராக நிற்கும் அவள் பெண்ணை நான் மணக்காமல், வேறு வரனுக்குக் கொடுக்கப் பணமில்லாமல் திண்டாட விட்டு விட்டு வேறு பெண்ணை மணக்க நான் ஒப்ப மாட்டேன். 

எனக்கு அங்கு ஐநூறு ரூபாய் வருமானம் வேண்டாம். மீண்டும் அங்கு வந்து தங்களை ஏமாற்றிய உள்ளத்திற்கு முன்பாகத் தலை நிமிர்ந்து நடமாட என்னால் முடியாது. 

தயவுசெய்து மன்னித்து விடுங்கள் அப்பா! உள்ளூர் கூட்டுறவு பாங்கிலேயே இருபது ரூபாய் வேலை கிடைக்கும். அது போதும்; என் அக்காபெண்ணை மணந்து நிம்மதியாக வாழ்க்கை நடத்த அது போதும். ஆனால், நான் ஒரு நன்றி கெட்டவன்; நம்பியவரை ஏமாற்றியவன் நான்; என்ன செய்வேன்? தங்கையாகப் பழகியவளை மணப்பதா? தங்களது நம்பிக்கையும், அன்பும் நிறைந்த உள்ளம் வாடத் தங்கள் முன் நடமாடுவதா? மன்னித்து விடும்படி மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் அப்பா! 

அதனால்… இதோ என் ராஜினாமா. ஏற்றுக் கொள்ளுங்கள். 

தங்கள் ஆசியை என்றும் விரும்பும்,
கல்யாணராமன். 

– 1949

– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.

விக்கிரமன் கலைமாமணி விக்கிரமன் (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார். ஆக்கங்கள் உதயசந்திரன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *