இரண்டு குயில்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 5, 2025
பார்வையிட்டோர்: 107 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மகிழ மரத்திலிருந்து வாசனை வெகு சுகமாக வீசியது. குயில் சொல்லிற்று: ‘உலகம் ஒரு இன்பப் பூஞ் சோலை!’ 

மாமரத்திலே தளிர் கோதிக் கொண்டிருந்த இணைக் குயில் நிமிர்ந்து பார்த்தது! 


“நமது தினசரி வாழ்க்கையில் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். எத்தனையோ பேருடன் பழகுகிறோம். இவர்கள் எல்லாரிலும் அதிக சந்தோஷமானவன் யார்?” 

அகளங்கனுடைய அரச சபையிலே சற்று நேரம் மௌனம் நிலவியது. அரசனுடைய அந்தக் கேள்வி எல்லாரையும் கடும் யோசனையில் ஆழ்த்தியிருக்க வேண்டும். 

”நிகும்பா, உனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே; இந்தப் பரந்த தேசத்திலே நம் எல்லோரினும் ஒப்பற்ற இன்பசீலன், யார் சொல்?” 

நிகும்பன் எழுந்து நின்றான். ஆனால் பதில் பேச வில்லை. பதிலும் தெரியவில்லை. 

“நீலனுக்குக் கட்டாயம் தெரிந்திருக்குமே, ஏன், நீயும் பேசாதிருக்கிறாய்?” 

நீலன் நின்றான். ஆனால் பதில் பேசவில்லை. பதிலும் தெரியவில்லை. 

ஜீவகன், வீரநேயன், குணசீலன், சேனாநாயகன், வேள்வி கர்த்தன் – ஒவ்வொருவராகக் கேட்டான். 

எல்லாரும் எழுந்து நின்றார்கள். ஆனால் ஒருவரும் பதில் பேசவில்லை. ஒருவருக்கும் பதிலும் தெரியவில்லை. 

மணிமுத்துப் புலவர் – அவருங்கூட எழுந்து நின்றார். அவருக்குங்கூடப் பதில் தெரியவில்லை. 

“மனித சமூகத்திலே மற்ற எல்லாரையும்விட அதிக இன்பம் கொண்டவன் யார்? அந்த ஒப்பற்ற இன்பசீலன் எங்கிருக்கிறான்?” 

வினாவுக்கு விடையில்லாமல் சபை கலைந்தது. 


“நமது தினசரி வாழ்க்கையில் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம்; எத்தனையோ பேருடன் பழகுகிறோம். இவர்கள் எல்லாரிலும் அதிக துக்கமுள்ளவன் யார்?” 

அகளங்கனுடைய சபையிலே சற்று நேரம் மெளனம் நிலவியது. 

அரசனுடைய அந்தக் கேள்வி எல்லாரையும் கடும் யோசனையில் ஆழ்த்தியிருக்க வேண்டும். 

“நிகும்பா, உனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே. இந்தப் பரந்த தேசத்திலே நம் எல்லோரிலும் அதிக துக்கம் உள்ளவன் யார், சொல்.” 

நிகும்பன் எழுந்து நின்றான். ஆனால் பதில் பேச. வில்லை. பதிலும் தெரியவில்லை. 

“நீலனுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே-ஏன் நீயும்…”

நீலன் எழுந்து நின்றான். ஆனால் பதில் பேசவில்லை. பதிலும் தெரியவில்லை. 

ஜீவகன், வீரநேயன், குணசீலன், சேனாநாயகன், வேள்விகர்த்தன் – எல்லாரும்-எல்லாரும் எழுந்து நின் றார்கள். ஆனால் ஒருவரும் பதில் பேசவில்லை. ஒருவருக் கும் பதில் தெரியவில்லை. 

மணிமுத்துப் புலவர் – அவருங்கூட எழுந்து நின்றார். அவரும் பதில் பேசவில்லை. அவருக்குங்கூடப் பதில் தெரியவில்லை. 

“மனித சமூகத்தில் மற்ற எல்லாரிலும் அதிகத் துன்பம் கொண்ட மனிதன் யார்? அவன் எங்கிருக் கிறான்?” 

வினாவுக்கு விடையில்லாமல், சபை கலைந்தது. 


நிகும்பன் புறப்பட்டான். 

”உலகத்தில் துன்பமே யில்லாதவனும் மற்ற எல்லா ரிலும் அதிக இன்பம் உடையவனுமான மனிதன் யார்? அவன் எங்கிருக்கிறான்?” 

நிகும்பன் புறப்பட்டான், அந்த ஒப்பற்ற இன்ப சீலனைக் காணவேண்டும் என்று. 


நீலன் புறப்பட்டான். 

“மனித சமூகத்திலே இன்பமே இல்லாதவனும் அதிகத் துன்பம் உடையவனும் ஆன மனிதன் யார்? அவன் எங்கிருக்கிறான்?” 

நீலன் புறப்பட்டான், அந்தப் துன்ப மயமான துர்ப்பாக்கியசாலியைக் காணவேண்டும் என்று. 


நிகும்பன் தேடினான். 

நாகஸ்வரத்தின் இன்னொலி எங்கு கேட்கிறதோ தெய்விக வீணையின் அரும் பண்ணொலி எங்கிருந்து வரு கிறதோ, அபூர்வமான தீங்குரலிலே ரஞ்சகமான பாட் டொலி எங்கு இழைகிறதோ அங்கெல்லாம் சென்று தேடினான். “மனித சமூகத்தில் ஒப்பற்ற அந்த இன்பசீலன் யார்? அவன் எங்கிருக்கிறான்?” 

கல்யாண வீடுகள், காதலர் விடுதிகள் இனிய சோலைகள், இன்ப நிலவு; நதியின் கரை, கடல் மணற் பரப்பு; வீசும் தென்றல், வீங்கும் இளவேனில். “அந்த ஒப்பற்ற இன்பசீலன் யார்? அவன் எங்கிருக்கிறான்?” 

விழாக்கள், கொண்டாட்டங்கள், நாடகசாலைகள், மது அங்காடிகள், அரசரின் அந்தப்புரங்கள், கணிகையர் மாடங்கள். “அவன் யார்? அந்த இன்பசீலன் எங்கிருக்கிறான்?’” 

நீலன் தேடினான். 


உற்றார் உறவினரின் உள்ளத்தையெல்லாம் ஒன்று சேர்த்துக் கூட்டி, சங்கிலே வைத்து ஊதி ஊதிக் குமை கிறானே, அந்த ஏக்கச் சங்கொலி எங்கிருந்து வருகிறதோ, உயிரை வார்த்தையிலே கரைத்துக் கரைத்து நலியவிடும் ஒப்பாரி எங்கு ஒலிக்கிறதோ, அடைத்துக் கிடந்த உள்ளத்திலிருந்து இறந்த காலத்து நினைவை யெல்லாம் ஏக்கத்தோடு திறந்துவிடும் பெருமூச்சு எங்கிருந்து கிளம்புகிறதோ-அங்கெல்லாம் சென்று தேடினான் நீலன். “உலகத்தில் மற்ற எல்லாரையும்விட அதிகத் துன்பம் கொண்ட மனிதன் யார்? அவன் எங்கிருக்கிறான்?” 

பொறிக்கும் வெயில்; கனல் விடும் பாலைவனம்; திக்குத் திசையற்ற கருங்காடு; கொடும்புலியோடு கடும் சிங்கம் சுற்றித் திரியும் மலைப் பிராந்தியம்- எல்லாம் தேடினான், “அந்த துர்ப்பாக்கியசாலி எங்கிருக்கிறான்?” என்று. 

கொலைக்களம், போர்க்களம், சுடுகாடு, இடுகாடு, தூக்குமேடை, சிறைச்சாலை-“அந்த துர்ப்பாக்கியசாலி எங்கே?” 

உயிரைக் கையிலே தாங்கிக்கொண்டு, நின்று நின்று மறுகுகிறானே, குற்றவாளி, அந்தக் கைதிக் கூண்டிலே தேடினான். உண்மையைச் சொல்லவில்லை என்று, சத்தி யத்தின் பெயரால் சித்திரவதை செய்தார்களே காவல் நிலையம் – அங்கே தேடினான், அந்த துர்ப்பாக்கிய சாலியை. இன்னும் ஜீவாந்திர சிக்ஷை ‘அருளு’கிற தீவுகள் உண்டே, அங்குகூடச் சென்று தேடினான் நீலன். 

“மற்ற எல்லாரையும்விட அதிகத் துக்கம் கொண்ட துர்ப்பாக்கியசாலி எங்கிருக்கிறான்?” 


வசந்த காலம் பூநகை சூடிப் புன்னகையாட நடின மிட்டது. முது வேனில் தழைத்த மரங்களைப் படவைத்துச் சென்றது. கார் வந்தது. தூய்மையான நீலவானத்திலே கார் மேகங்கள் கவிந்து மழையைக் கொட்டின. பட்டமரம் துளிர்த்தது. கார்த்திகை பூமியிலே எறிந்து விடுவதாக முரசடித்தது. தை வந்தது; சூரியனின் புரவி, வானப்பாதையிலே வட்டமிட்டுத் திரும்பியது. மாசி வந்து பனி நீர் சிதறியது. பங்குனி வந்தது. புல் நுனியைக் கண் துடைத்தது. சூரியன் உதித்தான். உலகம் புன்னகை புரிந்தது. 

சக்கரம் ஒரு முறை சுழன்றுவிட்டது.

‘வேனில்’-இளவேனில் வந்தது. 

புஷ்பங்கள் மலர்ந்து, சோலையின் வாசனை உயிரைக் கவ்வி இழுத்தது. 

வீணையின் மாடகத்தை முறுக்கி விட்டுக்கொண்டு மலயமாருதத்தைத் தொடர்ந்தான் அகளங்கன். வேனிற் காலத்தின் சொகுசு அவனுடைய விரல்களிலே பின்னி விளையாடியது. நினைத்தறியாத கமகங்கள் எல்லாம் அனாயாசமாகப் பேசின. 

“உலகந்தான் என்ன இன்பகரமானது!” 

“வசந்தம் எவ்வளவு சுகமானது!” 

“வீணை தான் எத்துணை ரம்யமானது!” 

மாறி மாறி அகளங்கனும் சாரநாயகியும் வியந்து கொண்டே போனார்கள். 


வானத்தை மேகங்கள் மூடிக்கொண்டு அடை மழை பொழிந்தது. மின்னல்கள் கண்ணைப் பறித்தன. இரவும் பகலும் அந்தகாரம் நிறைந்து கொண்டு விண்ணையும் மண்ணையும் பிரளயாகாரமாகச் செய்தது. 

அகளங்கனுடைய வீணையிலே வராளி, சோக ரசத்தின் எல்லையைத் தொட்டு நின்று பேசியது. 

கார் காலம் சென்றது. முன்பனி, பின்பனி, மீண்டும் வசந்தம். 

அகளங்கனுடைய வீணையில் அதிசயமான கமகங்கள் உதிர்ந்தன. 

”யாரங்கே?” 

அணிமாடத்தில் தொங்கிக் கொண்டிருந்த சல்லாத் திரையை யாரோ நகர்த்தினார்கள். 

“யாரங்கே?” 

“நான்தான்.'” 

வீணையைக் கீழே வைத்து விட்டு எழுந்தான் அகளங்கன். 

”யார்? நிகும்பன் அல்லவா?” 

ஆம். நிகும்பன்தான். பாவம், அலைந்து திரிந்து உடம்பு துரும்பாகிவிட்டது. ஆனால், அவனுடைய கண்களில் என்ன, அசாதாரணமான ஒரு தீக்ஷண்யம்! 

“அகளங்க சக்கரவர்த்தி, முதலில் என்னைப் பாராட்டுங்கள்.” 

“உன்னை எப்பொழுது பாராட்டப் போகிறோம் என்றல்லவா காத்துக் கொண்டிருக்கிறேன்.- நிகும்பா, யார் சொல், இந்த உலகத்தில் நாம் பொறாமைப்பட வேண்டிய இன்பசீலன் யார்? அவன் எங்கிருக்கிறான்?” 

“சக்கரவர்த்தி! கோமுகி நதி தீரத்தில் வசந்த காலத்து எழில் பிரவாகத்தின் அமைதியிலே சுரந்து கொண்டிருந்தது. ஒளி மயமான நீலவானத்தையும், செல்லும் நீரின் பரப்பையும் நோக்கியவாறு நின்று கொண்டிருந்தான் ஒருவன். அவனை அணுகி நோக்கினேன். 

“என்ன ஆச்சர்யம்! அந்த அபூர்வனிடத்திலே இன் பத்தின் கோடி எல்லையைக் கண்டேன். அவன் கையிலே தொங்கிக் கொண்டிருந்த கூண்டிலிருந்து குயில் கூவிற்று. அந்தக் குரலிலே இந்தப் பரந்த உலகிலுள்ள அத்தனை இதயங்களின் இன்பமும் ஒன்று சேர்ந்து ஒலித்தது.” 


மழை, இடி, மின்னல், காரிருள். வையத்தையும் ஆகாசத்தையும், ஒன்று சேர்த்து நீர்ப்படலம் போர்த்து நின்றது. 

அகளங்கனுடைய வீணையிலே வராளி சோக : சத்தை வார்த்து வடித்தது. 

“யாரங்கே?” 

அணிமாடத்தின் சல்லாத் திரையை யாரோ நகர்த்தினார்கள். 

“யாரது?” 

“நான்தான்.” 

வீணையைக் கீழே வைத்துவிட்டு எழுந்தான் அகளங்கன். 

“யாரது—நீலன் அல்லவா?” 

ஆம் நீலன் தான். பாவம் அலைந்து திரிந்து உடம்பு துரும்பாய்விட்டது. 

“சக்கரவர்த்தி என்னைப் பாராட்டுங்கள்!” 

“நீலா, உன்னை எப்பொழுது பாராட்டப் போகிறோம் என்றல்லவா தவித்துக் கொண்டிருக்கிறேன். யார், கொல்; மனித சமூகத்தில் மற்ற எல்லாரையும்விட அதிகத் துன்பம் கொண்டவன் யார்? அந்த துர்ப்பாக்கிய சாலி எங்கிருக்கிறான்?” 

“சக்கரவர்த்தி, கோமுகி நதி தீரத்தில் கார் காலத் தின் ஆவேசம் பிரவாகத்திலே பொங்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. இருள் மயமான கருவானத்தையும் அதை முட்டி மோதுவதற்காக அலறிக்கொண்டு செல்லும் நீரின் பரப்பையும் நோக்கியவாறு நின்று கொண்டிருந் என்ன தான்ஒருவன். அவனை அணுகி நோக்கினேன். பரிதாபம்! துன்பத்தினுடைய கோடி எல்லையை அவ னிடத்தில் கண்டேன். அவன் கையிலே தொங்கிக்கொண் டிருந்த கூண்டிலிருந்து ஒரு குயில் கூவிற்று. அந்தக் குரலிலே இந்தப் பரந்த உலகத்திலுள்ள அத்தனை இதயங்களின் துன்பமும் ஒன்று சேர்ந்து ஒலித்தது!’ 

நிகும்பன், நீலன்-இருவரும் ஒரே மனிதனைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறார்களா? அகளங்கனுக்குத் தலை சுழன்றது! 


மகிழ மரத்திலிருந்து வாசனை வெகுசுகமாக வந்தது. குயில் சொல்லிற்று, ‘உலகம் ஒரு இன்பப் பூஞ்சோலை.’ 

மா மரத்திலே தளிர் கோதிக் கொண்டிருந்த குயில் நிமிர்ந்து பார்த்துவிட்டுக் கேள்விக் குறியைப் போல ஒரு வளைவு வளைந்து நின்றது! 

– இந்த தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளும் கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், வசந்தம் முதலான பத்திரிகைகளில் வெளியானவை.

-மஞ்சள் ரோஜா முதலிய கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1954, பாரி நிலையம், சென்னை.

மீ.ப.சோமு மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *