இதயம் நிறைந்தவரும்… இயந்திர அரக்கனும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 20, 2026
பார்வையிட்டோர்: 932 
 
 

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் – 7

கால தாமதமாய் வகுப்பிற்கு வருவதை விரும்பாத அவர்களும் காலம் தாழ்ந்து வகுப்பறைக்கு வந்ததே இல்லை.” First impression is the best impression” என்று நிறைய பேர் சொல்வாங்க, நினைப்பாங்க, அது போல என் மிஸ் முதல் அறிமுகத்திலேயே என்னைப்    பற்றிய முழுமையான முடிவை எடுத்திருந்தால் நானும் ‘நல்ல’ என்ற அடைமொழியோடு அறிந்திருக்கப்பட மாட்டேன். ‘நல்ல’ என்ற அடைமொழி கொண்டவர்களிடம் உள்ள ‘அல்ல’ குணங்களை கண்டிக்க மறந்ததும் இல்லை. ‘அல்ல’ அதிகமாக  இருப்பவர்களிடம் உள்ள ‘நல்ல’வற்றை பாராட்ட தவறியதும் இல்லை.

எப்படி நடத்த வேண்டும் என்பதை விட எப்படி நடக்க வேண்டும் என அதிகமாய் கற்றுக் கொண்டேன்.  வேலையின் களைப்பிலும் மனிதருக்கே உண்டான சலிப்பிலும் தடுமாறும் நேரமெல்லாம் விழித்துக் கொள்கிறேன் நேரம் தவறாமல் வரும் அவர்கள் நினைவுகளால்…

இது போன்ற பல தவறாமல் கவனித்த தருணங்களால் தான் பிடித்ததா? என்றால் அப்படியெல்லாம் கூறி முடித்து விட முடியாது என்பேன் நான்….

ஒரு முறையேனும் பார்க்கணும், அருகில் நின்று ஒரே ஒரு புகைப்படம், “ அழகான பரிசொன்று வாங்கணுமே, அன்போடு அதை நானும் கொடுக்கணுமே, விடை பெறும் நேரத்தில் விழியோரம் வழிந்தோடும் கண்ணீரை மறைத்துக் கொண்டு, இதழ் சிரிப்போடு வழியனுப்பனுமே” என்று அனிச்சையாக மனம் ஆசைகளை அடுக்கடுக்காய் அடுக்கிக் கொண்டே போக, என் இதழ் உரைக்காத, இரு விழி உலராத என் ஆசைகளை எல்லாம் நான் பேசாமலேயே அறிந்த என் ஆசைத் தோழி, பேனா என்னும் என் அன்புத் தோழி எதை எதையோ சொல்லத் துடித்து அவளது வாய்ப்பூட்டுச் சட்டத்தை தளர்த்தச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தாள்.   அனுமதி பெற்ற ஆனந்தத்தில்,

“வருடங்கள் ஓடி விட….
உருவங்கள் மாறி விட…
தினம் வரும் கனவுகளில்
உம்மைக் காண்பேனே…
இரு விழி நீர் சுரக்க…
இதயமும் தான் பறக்க…
இமைத்திட நான் மறந்து
என்று காண்பேனோ?
இலக்கணம் மீறிடுமோ?
இதயமும் அன்று…
இலக்கியம் பேசிடுதோ?
இரு விழி என்று…
அந்த வானம் கவிதை
சொல்லும்…
அழகான நாளும் என்று?
அந்த நாளை எண்ணிக் கொண்டு
எந்தன் நாட்கள் நகர்ந்து செல்லும்…
உம்மை காண வேண்டும் என்றே…
உறங்கும் முன் கண்கள் கேட்க…
கனவென்னை ஒரு போதும்
ஏய்ப்பதில்லையே..
கடல் அலை போலே கண்கள்..
கரைகளை மீறுது இன்று.
கனவுகள் நனவாக வாய்ப்பே இல்லையா?
தொடர்வண்டி போலே உந்தன் நினைவுகள்,,,
தொடருது என்னை….
தொலைவு என்ற போதும்
அன்பு குறைவது இல்லையே…
முன் ஜென்ம கணக்குகள் எல்லாம்
முடிந்து போனதுவா??
இன்னொரு கணக்கு தொடங்க
இறையை வேண்டவா?
இந்த முன்னர் ஜென்ம கணக்கு..
இன்னும் தொடர வேண்டும் எனக்கு..
மனம் இறையை வேண்டும் இதற்கு..
அதில் மாற்றம் இல்லை
அதற்கு..”

எனப் பாடி காகிதத்தை கொஞ்சியே முடித்து இருந்தாள். 

ஆம், அப்படியான ஒரு அழகான நேரத்திற்காய் ஆண்டவனிடம் தினமும் வேண்டுகிறேன் நான். ஏன் ஏன் இவ்வளவு பிரியம் என்கிறீர்களா? எல்லோரும் வினவியும் விடை அறியாத வினா அது. விடை அறியாத வினாக்கள் என்றுமே சற்று ஸ்வாரஸ்யமானவை தான். விடை அறியப்படாமலே இருந்து விட்டுத் தான் போகட்டுமே.

அளவையா கேட்கிறீர்கள்? அளவு ‘இவ்ளோ’ அப்படி என்று சொல்ல முடியாத அளவு, அளந்து பார்க்க நினைத்தால் அள்ள முடியாத அளவு ‘அவ்வளவு பிடிக்கும்’ இல்லை இல்லை அதற்கு மேலும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

பதினைந்து வருடத்திற்கு முன் தன்னிடம் படித்த மாணவனை பார்த்ததாய், நல்ல தெளிவான கையெழுத்திற்காக அவர்கள் தந்த பேனாவை இன்றும் பத்திரமாய் வைத்திருப்பதை காட்டியதாய் என்னிடம் மிகுந்த மகிழ்வோடு பகிர்ந்து கொண்ட போது, சற்று மகிழ்ந்த போதிலும் நானும் தான் பத்திரமாய் வைத்திருக்கிறேன் நிமிட நிமிடமாய் தங்கள் நினைவுகளை, ஆனால் பார்க்கத் தான் முடியவில்லை, என்று தோன்றிய அந்த உணர்விற்கு பெயரிடப்படவில்லை இன்னும்.

உங்க மிஸ் உங்க மிஸ் என்று சொல்வதை கேட்கும் பொழுதெல்லாம் ஆமா என் மிஸ் என் மிஸ் என்று மனது மகிழும் உணர்விற்கு பெயரே இல்லை என்றும். வார்த்தைகளுக்குள் எல்லாம் அடக்கி வைக்கவே முடிவதில்லை அதை.

என்னை ‘என் ஸ்டூடன்ட்’ என்று அவர்கள், அவர்களது 

இன்றைய மாணவர்களிடம் அறிமுகப்படுத்தியதாய், சொன்ன போது, இறக்கை தமக்கு இல்லை என்பதை என் இதயம் சற்று மறந்து தான் போயிருந்தது.

கைப்பேசிக்கு கட்டாயம் நன்றி சொல்லியே ஆக வேண்டும் காணொலியிலேனும் காண வைத்த கருணைக்காக. முதல் முறை என் கவி ஏந்திச் சென்ற காட்சி ஒன்றை அனுப்பி விட்டு காணப்பட்டதா? காணப்பட்டதா? என கண் இமைக்கும் நேரமெல்லாம் தேடிய கதை அதற்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

தொடர் வண்டியை காணும் போதோ, தொடர் வண்டி நிலையத்தைக் கடக்கும் போதோ தொட்டுச் செல்லாமல் இருந்ததில்லை அவர்களின் நினைவுகள்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? இப்பொழுதெல்லாம் அந்த இயந்திர அரக்கனையும் நான் நேசிக்க ஆரம்பித்து விட்டேன். அடிக்கடி வந்து நினைவுகளையாவது தந்து செல்வதால்.

சரி நான் விடைபெறுகிறேன் கலங்கிய கண்களோடும், என்றென்றும் கலையாத நினைவுகளோடும். 

“பை” ‘பை’ சொல்லுங்க.

இந்த இனியவளையும், இதயம் நிறைந்தவரையும் பிடித்திருந்தால், அந்த இயந்திர அரக்கனிடமும், இறைவனிடமும் கண்டிப்பாய் சொல்லுங்கள் நான் காத்திருப்பதை.

சொல்லுவீங்க தானே..?

என்றென்றும் அன்போடு தொடரும் இந்த அழகிய கதை,  அந்த அரக்கன், அன்பு கொண்ட நண்பனாய் ஆன பின்  “இதயம் நிறைந்தவரும்.. இயந்திர நண்பனும்” என்று பதவி மாற்றம் பெற்று தொடரும்…

“விரைவில்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *