இதயம் நிறைந்தவரும்… இயந்திர அரக்கனும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 16, 2026
பார்வையிட்டோர்: 1,804 
 
 

 அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம் – 3

என் ஏழாம் வகுப்பு, ஏதோ ஒரு பாட வேளை புதிய முகம், புதிரான மன நிலை, முதல் வகுப்பு, எல்லோராலும் பெரிதும் விரும்பப்படாத இலக்கண வகுப்பு.

இன்னும்  கூட  நன்றாய் நினைவில் இருக்கிறது. அது வாக்கியத்தின் பாகங்களை பிரித்து அறியும் பாடம் பற்றியது (subject and predicate).  

அதற்குப் பிறகு என் இரு விழியின் திரை தனில் எதேச்சையாக கூட  விழுந்து விடாத அவர்களை, என் இதயம் முழுதும் நிறைத்து விட, ஆண்டு ஒன்று கடந்து,  ஆண்டவன் அனுப்பி வைத்தது, 

ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’ பிரிவிற்கு, ஆ! அவங்க தானே, என கிரகித்து முடிப்பதற்குள், என் சக தோழிகள் அவங்க ரொம்ப ஸ்டிரிக்ட்- ஆம் என்ற கருத்துக் கணிப்புகளை காதுகளில் திணிக்க, அன்பிற்கான அறிகுறி வலி நிவாரண மாத்திரை எடுத்துக் கொண்டது போல் தன்னை மறைத்து திரையிட்டுக் கொண்டது. 

பின்பு ஒரு நாள், அதிகமாய் பேசாத நான் அன்று என்னவோ அவசரமாய் பேசியே ஆக வேண்டும் என்பது போல் அருகில் அமர்ந்து இருந்த என் சக தோழியிடம் பேச முதன் முதலாய் அடியைப் பெற்று என்னை அறிமுகம் செய்து கொண்டது.

முதல் பாடம் முடிந்த மறு நாள், வினாக்களுக்கு விடை அளிக்க இயலாமல் முழங்காலிட்டது என அச்சத்தில் தொடங்கியது இவ்வழகிய கதை. 

அடுத்த பாடம்  “எலிஸா டூலிட்டில்” (The flower girl became princess) ஒரு பூ விற்பவளின் கதை, அந்த பாடத்தின் பதிலுக்கான பாராட்டுடன் நான் அறியப்பட்டது. 

அதிக அச்சம் எனினும் கூட அவர்களின் பாட வேளைக்கெனவே காத்திருந்தது. “இங்கிலிஷ் டீச்சர் வர்றாங்க ” என எட்டி பார்த்து தோழி எச்சரித்தது, “இங்கிலிஷ் டீச்சர் வந்துட்டாங்க” என எட்டிப் பார்க்கச் சொல்லி என் மனம் நச்சரித்தது, 

பரிசு பட்டியலில் என் பெயர் இடம் பெற்றிருந்ததைக் கண்டு என்னை விட மகிழ்வாய் என்னிடம் சொன்ன போது எட்டிப் பார்த்தே நன்றி சொல்லும் அளவு இதயம் இசைத்தது. 

பின்பு ஒரு நாள், அவர்கள் வீட்டில் என் அருகில் அமர்ந்து இலக்கணத்தை (voice)  புரிய வைத்த போது புரிந்ததோ இல்லையோ, அக்கணம் முதல் அந்த இலக்கணம் மிகவும் பிடித்துப் போனது. 

என் பாடப் புத்தகத்தில் ஒரு கிளைக் கதையாக கொடுக்கப்பட்டு இருந்த ‘BESSY’ என்ற ஆசிரியைப் பற்றின பாடத்தின் போது அவர்கள் தன் ஆசிரியையை நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்ட போது,  அருகில் அமர்ந்து இருந்த என் தோழியிடம் ‘நானும் இங்கிலிஷ் டீச்சர் தான் ஆவேன் அப்போ என் ஸ்டுடன்ட்ஸ்டல்லாம் நானும் சொல்வேனே, என் இங்கிலிஷ் டீச்சர் னா எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்வேனே” என அவளின் காதருகே அளவு கடந்த மகிழ்ச்சியுடன் நான் பகிர்ந்து கொண்ட போது அன்பும் அளவு என்ற ஒன்றை எல்லாம் கடந்து தான் விட்டிருந்தது.

அளவு கடந்த அன்பின் விளைவாக அடுத்த ஆண்டும் அவங்க தான் வரணும் என அடம் பிடித்த மனது ஆண்டவனிடம் அடிக்கொரு முறை மன்றாடவும் ஆரம்பித்து இருந்தது.

விடுமுறைக் கால வேண்டுதல்கள் யாவும் விருப்பத்திற்கு உரிய அவர்களின் வகுப்பறை மீண்டும் வேண்டும் என்ற வரத்திற்கானதாய் இருக்க, வரமாய் கிடைத்தது அதே வகுப்பு ஆனால் அவர்கள் இன்றி. வரத்தில் நிறைவில்லை, வழங்கியவன் மீது  குறைவில்லை, இதழ்களின் பிழையால் இதயம் தவித்தது. ஓர் எழுத்துப் பிழையால் தூங்கிப் போன கும்பகர்ணன் போல், இதழ்கள் இழைத்த பிழையால் ஏங்கிப் போனது  என் இதயம்.

நெருங்கிய தோழிகள் அவர்கள் வகுப்பில், நெருங்க இயலாமல் நான் மட்டும் அடுத்த வகுப்பில், என பிரிவுக்கான பயிற்சி ஒத்திகை தொடங்கியது.

அவர்களின் வருகைக்காக வகுப்பறையின் வாசலிலேயே வரும் வரை காத்திருந்தது, வணக்கம் சொல்வதற்காய் பள்ளி வளாகத்தையே வளைய வந்தது, கடைசி இடம் பிடிக்காத போதும் கூட கண்கள் வேண்டியதால் ஜன்னலின் அருகே அமர்ந்தது, ஜன்னலின் வழியேயான தேடலின் நினைவுகள், எங்கோ நின்றும் இதயம் தொடும் அவர்கள், என்னோடு சேர்ந்து எட்டிப் பார்க்கும் என் பள்ளியின் சுவர்கள். எவ்வளவு அழகான நாட்கள், வார்த்தைகளும் அர்த்தம் இழக்கும் வசந்த நாழிகைகள்.

தேர்வறையின் கண்காணிப்பாளராக  ஆவது   அனுப்பி வை என கடவுளிடம் சண்டை போட்டது. இந்த தேர்விற்காவது அவர்கள் வருவார்களா என பதிவேட்டில் பர பரப்பாக தேடியது, என ஒரு கண்காணிப்பு கேமிரா மட்டும் என் பள்ளிக் காலத்தில் இருந்திருந்தால் கட்டாயம் அழுதிருக்கும், ஒரு காட்சிப்படமே எழுதி இருக்கும். 

அன்றொரு நாள், அவர்கள் வகுப்பில் இன்றைய சிந்தனைக்கான கரும் பலகையில்  பழமொழி ஒன்றை நான் எழுதி விட, அனுமதி இல்லாமல் எழுதியதற்காக அழைத்து தண்டிப்பார்களோ, என்ற அச்சம் மேலிட, அழிக்க வேண்டாம் நல்லா இருக்கு, இருக்கட்டும் என அவர்கள் அன்போடு சொன்னதாய் என் தோழி என்னிடம் பகிர்ந்து கொண்ட போது ”என் க்ளாஸ்க்கு வரலன்னாலும் எப்பவுமே அவங்க என் மிஸ் தான் என என் இதயம் குதித்தாடியது. 

எனக்கு பிடித்த அந்த பழமொழி, எனக்கு மிகவும் பிடித்த அவர்களுக்கு பிடித்ததால் பிடித்த பட்டியலில் பதவி உயர்வு பெற்றது. 

பயிற்சிக் காலத்தின் இடையில் ஒரு நாள், அம்மாவோடு அவர்கள் வீடு செல்ல, அவர்கள் அங்கு இல்லாமல் திரும்பி வர, அவர்களே விரும்பி வர, அரிதாரம் பூசாத அந்த அழகிய நொடிகளில், அளவைக் கடந்த மகிழ்ச்சியில், தன் அளவைக் கடந்திருந்தது இதயம். 

அளவைக் கடந்த இதயத்தை அடக்கவும் முடியாமல், அனுமதிக்கவும் முடியாமல் அமர்ந்திருக்கையில், என் அதீத அன்பிற்குரிய ஆசிரியை அம்மாவிடம் தன் ‘டிரான்ஸ்ஃபர்’ பற்றி பகிர்ந்து கொண்ட போது சற்றே அசைவற்று போனது என் இதயம். 

அவர்களுக்கு விடை கொடுத்த பின்பு  அம்மாவிடம் வினா தொடுக்க, அம்மா  அப்ப டிரான்ஸ்ஃபர் கிடைச்சிடுமாம்மா ? அவங்க ஊருக்கு போய்டுவாங்களா ? என அழவே ஆரம்பித்திருக்க, அம்மா “என் ஆக சிறந்த ஆசிரியர்” உண்மையை உரைத்ததோடு அல்லாமல் உணரவும் செய்த போதிலிருந்து, விருப்பத்திற்கு உரிய வேண்டுதல், விருப்பத்திற்கு உரியவரின் வேண்டுதலாய் மாறிப் போனது.

பயிற்சிக் காலத்தின் இறுதி நாளுக்கான தொடக்கம் போலும் அன்று. டிரான்ஸ்ஃபர்  கிடைத்த செய்தியை முன்னரே என்னிடம் சொல்லி, ”அழக்கூடாது அதான் முன்னாடியே சொல்றேன்” என உரைத்தபோது, பிரித்தறியும் பாடத்தில் ஆரம்பித்ததில் தொடங்கி பிரிவிற்கான ஆயத்தப்படுத்துதல் வரையிலான பிரியங்கள், ஏற்றுக் கொள்ள துணிந்து இருந்த போதும், ஏற்றுக் கொள்ள தொடங்காததினால், என்  இரு விழியினின்றும் எதிர்ப்பட எத்தணிக்க, எதைச் சொல்லி அதை தணிப்பது என புரியாமல் அவர்களை பின் தொடர்ந்தது, என பின்னுக்கிழுத்த நினைவுகளால் பார்த்தே ஆக வேண்டும், இன்று மட்டும் தான் பார்க்க முடியுமா?  இனி எப்போது பார்ப்போம்? என கலவையான உணர்வுகள் பின்னிக் கொள்ள தடுமாறி விழுந்தன கண்ணீர்  துளிகள்.

“விழியின் துளி வீழின் அல்லால் -மற்றாங்கே
  வலியும் மறைவதென்பது அரிது”

என்பது போல் கண்ணீர்த் துளிகளுக்கு வழி விட்டதால் கனம் சற்று குறைய, இனம் புரியாத பதற்றம், இது வரை இல்லாத நடுக்கம், இதயம் வரை செல்ல, இமைகளின் வழி மறு வெள்ளம்.

அத்தியாயம் – 4

பார்த்தே ஆக வேண்டும் மீண்டும் என்ற பரிதவிப்பில் அம்மாவோடு அவர்கள் வீடு செல்ல, ஏற்கனவே சொல்லி இருந்தேனே சற்று மாற்றம் பெற்று இருந்த ஒற்றை மாடி வீடு அங்கு தான். 

எப்போதும் போல் பயமும் தயக்கமும் வந்து பூசிக் கொள்ள, இன்னிக்கு மட்டும் தான் பாக்கலாம், நாளைக்குலாம்  பாக்க முடியாது என இரு விழியும் பேசியே கொல்ல, அன்று மட்டும் பயமும், தயக்கமும் சற்றே தோல்வியுற அங்கு சென்று இருந்தேன். 

பள பளக்கும் ஆரஞ்சு வண்ணம் அல்ல, முழுதாய் பட்டு எனவும் அல்லாத புடவை, அழகாய்த் தான் இருந்தது. பார்வை தெளிவாக இல்லை எனினும், பார்க்கத் தவறவில்லை. 

எனக்கு முன்னரே வந்து அங்கு அமர்ந்தது இருந்த என் சக தோழிகள் சாதாரணமாக பேசிக் கொண்டு இருந்ததை சகித்துக் கொள்ள முடியாமல் எப்படி இப்படி பேசிட்டு இருக்கீங்க, நாளைக்குலாம் நான் பாக்க முடியாதே! என்று என் இதயம் கத்தியதை எவரும் கவனிக்கவில்லை போலும்.

அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல்,  அம்மா நானும் வந்திடுறேன் மா என கிளம்பிய அம்மாவுடனேயே நானும் கிளம்ப ஆயத்தமாக, சிரிக்கும் புத்தர் சிலை ஒன்று தரப்பட்டது. இன்று வரை என் வீட்டில் என் பொம்மைகளுக்கு இடையே  எட்டி எட்டிப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் அவர் அன்று என்னை சிரிக்க வைப்பதில் தோற்று விட்டார். 

என் அம்மா வருங்காலம் அறிந்தவர் போலும். எவ்வளவு வருடங்கள் ஆகுமோ இனி பார்க்க, எவ்வளவு முடியுமோ அவ்வளவு பார்த்துக் கொள் என சொல்லியும் சொல்லாமலும் அங்கு விட்டுச் செல்ல பொங்கி வந்த அழுகையை அடக்க முயற்சித்து முயற்சித்து தோற்றுக் கொண்டு இருக்கையில் நடந்து சென்ற காலம் ஓடத் தொடங்கி இருந்தது.  

காலத்தின் கால்களுக்கு காப்பிடும் சக்தி மட்டும் என்னிடம் இருந்திருந்தால், சற்று நேரமாயினும் கட்டி வைத்து இருப்பேன். இல்லையே! இதய நடுக்கத்தால் இமை பிரிந்த விழி நீர் விழுந்து  விழுந்து  கைக்குட்டையை நனைத்துக் கொண்டு இருக்க, புகை வண்டி நிலையம் நோக்கி புறப்பட, புலம்பிக் கொண்டு இருந்த மனதோ, என்ன செய்வது என புரியாமல் அடங்கிப் போனது. 

ஏதேதோ ஆறுதல் எவர் எவரோ சொல்ல, என்னிலை எனக்குத் தான் தெரியும் என தன்னிலை மறந்து தவித்திருந்த இதயம், ”அப்பாவைக் கண்டதும், அப்பா வந்துட்டாங்க”   என தனக்குத் தானே ஆறுதல் கூற, அவ்ளோ தான் இனி பாக்க முடியாது, நாளைக்கு என்ன பண்ணுவ’ என மறு புறம்  அரற்ற,  காலையில் இருந்து கருத்துக் கொண்டு நின்ற என் விழி மேகங்கள் கொட்டியே தீர்த்து விட்டது. 

இனிப்பகம் அழைத்துச் சென்ற அவர்கள் என்ன வேண்டும் என கேட்க, இனிப்பா? வேண்டும் தங்கள் இருப்பு தான் வேண்டும் என்று இரு விழியும் அடம் பிடித்துக் கொண்டிருக்க அதை படம் பிடித்துக் கொண்டிருந்தது காலம்.

மணி ஏழைக் கடந்திருக்கும், நேரம் நெருங்க, நெருங்க, சுருங்கக் கூறின், சுருங்கி, விரியவும் ஒரு கால அவகாசம் உண்டு என்பதையே என் இதயம் மறந்திருக்க கூடும். 

யாருடைய ஆறுதலும் என்னை ஆற்றவில்லை, என்னையே என்னாலும் தேற்றிக் கொள்ள முடியவில்லை, உடனே மாற்றிக் கொள்ளும் வயதும் இல்லை.

இடிச் சத்தம் விண்ணில் இருந்து தானே கேட்கும். அன்று என்ன இயற்கைக்கும் குழப்பமோ, மண்ணில் இடிச் சத்தம் .. என் மனதிலும் தான் .   ‘தட’  ‘தடவென தரையே அதிர அந்த இயந்திர அரக்கன் வந்து விட்டான்.

இதயத்தின் அதீத ஓசையாலோ, இயந்திர அரக்கனின் தட…தட.. ஓசையாலோ, அங்கங்கள் எல்லாம் அதிர தொடங்க, ‘இனி பாக்க முடியாதே’ என பிதற்றிய விழிகளை, இப்பவே பார்த்துக் கொள் என நீரின் திரை அகற்ற, அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான் அதி உத்தம நண்பன். 

ஆர்ப்பரித்து கிளம்பிக் கொண்டு இருந்த அந்த அரக்கனை அடக்கும் ஆற்றல் மட்டும் என்னிடம் இருந்திருந்தால் ,எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்? இல்லையே,  ‘வரட்டுமா?  ‘பை’  சொல்லுடா, சொல்லுடா ‘என்ற அவர்களிடம் ‘வரட்டுமா என போறீங்களே ‘ என்று எனக்கு பதிலாய் உரைத்துக் கொண்டிருந்த விழிகளை துடைத்தவாறே அப்பாவின் கை பிடித்து நான் நிற்க, இரக்கம் இல்லாதவன் கிளம்பி விட்டான் இடித்துக் கொண்டே.  

‘பை’ சொல்லுடா’ என்று படியிலேயே நின்றிருந்ததைக் கண்டு ஏதோ பயம் வர அப்பாவின் துணையோடு அசைத்திருந்தேன் கைகளை பெயருக்கு.

உத்தரவு கொடுத்து விட்டதாய் எண்ணிக் கொண்டான் போலும் . கண்ணிற்கு தெரியாமல் கடத்திச் சென்று விட்டான் . 

இப்போது கூட , இதோ வந்து விட்டான் பாருங்களேன். அவர்களை கடத்திச் சென்ற இடத்திற்கு என்னையும் ஒரு முறை  கடத்திச் செல், எப்போதும் போல் எட்டிப் பார்த்து விட்டு வந்து விடுகிறேன் என்கிறேன், செவிடன் காது கொடுத்து வாங்க மறுக்கிறான். அதிக ஒலியிலேயே இருந்து பழகியதாலோ என்னவோ அன்பின் ஒலியை புரிந்து கொள்ள மறுக்கிறான். 

போதும், போதும் புறப்பட்டு விடுவோம் வாருங்கள்.  கரை மீறி விடும் போல் இருக்கிறது என் கண்ணீர் துளிகள்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *