ஆண்பிரிய வாழாது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 6, 2025
பார்வையிட்டோர்: 46 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டு வாசலை நெருங்கி வந்து நின்றது வண்டியின் சதங்கை யோசை அலங்கானூர் பண்ணையார் அம்பலவாணன் வண்டியி னின்று இறங்கினார். வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டி ருந்த வேலைக்காரி ராஜாமணி தலை நிமிர்ந்தாள் பண்ணையாள ரைக் கண்டதும் சோர்வுற்றிருந்த அவள் முகத்தில் தென்பு தெளிந்தது. 

”வாங்க,வாங்க, உங்களுக்குக்காகத்தான் புலம்பிக்கிட்டே இருக்கு.” 

ஆசை நம்பிக்கையுடன் புரளும் குரலில் அவரை வரவேற்று அழைத்துக்கொண்டு உள்ளே செல்லலானாள். ராஜாமணி அம்பலத்தின் மனம் எண்ணவலை இழைக்க அவர் உரையா விரை வுடன் உள்ளே சென்று குமுதம் படுத்திருக்கும் அறையை அடைந்தார். 

காய்ந்த சருகாய்க் கிடந்தாள் குமுதம் கட்டிலிலே. 

சாளர வழியூடே நுழையும் மாலை மஞ்சள் வெயில், பாதையில் காற்றோடு கலந்து பரவித் திரியும் தூசி மண்டலத்தின் மூலம் தன் ஒளிக்கும் உருவம் ஏற்று தூசிகளின் உருவுக்கும் ஒளி யூட்டி தரையில் வழிந்து குழம்பியது. 

‘ஒளி யார் ? எது தூசி ?’ 

அந்தக் காட்சி கிளம்பிய நினைவை அம்பலத்தால் சீரணிக்க முடியவில்லை. அருகே மருந்து புட்டிகள் அடுக்கிக் கிடந்தன- குமுதத்தின் வாழ்வு நோயிடம் பெற்று வரும் தோல்வியின் அறிகுறிபோல், நெஞ்சத்தை நீர்த்திருக்கும் நினைவுகளில் நெருப் பைக் கொட்டியது அந்தத் தோற்றம். 

வாழ்வின் பாழ்முடிவாய்ப் படுத்திருந்த அவள்முன் தாழ்வின் கீழ்நிலையாய் அமர்ந்து அநுதாபத்துடன் நோக்கினார் அம்பல வாணன். 

“குமுதா!” 

அந்தச் சொல்லிற்கா அமுதத்துளி போன்ற அவ்வளவு சக்தி ! 

விழி இதழ்கள் வெளி விரிந்து மொழி பேசும் அக் கண்ணின் மணிகள் இத்தனை நாட்களுக்குப்பின் இன்று சுடர்ந்தன. குமுத மலர் முகை அவிழ்க்கும் கோலத்தோடு குமுதா தன் வாய் திறந்து கூப்பிட்டாள். 

“அத்தான்!” 

முத்தான அழைப்பைத் தொடர்ந்து கருத்திலே ஊறிக் கண்கள் வழியே விழுந்தன இரு நீர்முத்துக்கள். தலை தலையணை யில்புதைந்தது. உடல் நடுங்க உணர்ச்சிகள் விசும்பலாய்க் கிளம்பின. 

“அழாதே, குமுதம் ” 

ஆனால், அழுது பழுதைத் திருத்த முடியாவிட்டாலும் அழாமல் எப்படி இருப்பது? 

“ஊ…ம் ” அம்பலவாணனது அகச் சிறையின்று நினைவுப் புள் ‘சிவிக்’ கென்று கிளம்பி, மறைந்த வாழ்க்கையின் பாதை யோடு பறந்து செல்லத் தொடங்கியது. 


ஆறு ஆண்டுகட்குமுன்,… அன்றொரு நாள் 

கூடல் மதுரையின் ஆடும் தெய்வத்து அருட் சபை முன் குமுதம் கலை அரங்கேறிக் கன்னி நடனம் புரிந்த நன்னாள். 

அன்று குமுதா இளமையின் அழகொளிர, கலையின் மெருக விழ ஆடினாள். பண்ணார் மொழி பேசும் பாவங்களை பின்னேர் எழில்கொண்ட மேனியொளி வெளியிட, கண்டத்தில் ஊறிவரும் கனிச்சாறு சுவைக்குரல் இசையார்ப்ப, எழில் விழி சுழன்று உள்ளத்தை அள்ள ஆடினாள், குமுதம். 

அரங்கிலாடிய அந்தக் கன்னியிடம் அவையிலிருந்த அம்பலத் தின் உள்ளம் அதுபோதுதான் கொள்ளைபோனது. நாட்டியம் முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது குமுதத்தின் இதயக் கூண் டில் அம்பலத்தின் மனக்கிளி சிறைபட்டுக் கிடந்தது. 


பிறந்த அறிமுகம் வளர்ந்த உறவில் கலந்த உணர்வாகி ஒட்டிய இரு உள்ளங்களாகி விட்டன.றம் 

குமுதா குலத்தால் தாசியானால் என்ன? குணத்தால் உயர்ந்து குப்பையில் பூத்த குருக்கத்தி அல்லவா ? அம்பலத்தின் அன்பிலே மூழ்கித் திளைத்து, மண்ணை விண்ணாக்கி மகிழ்ந்தது அவள் மனம். 

ஆனால் கனவும், நனவும் கொற்கையும் செயலும், ஆசையும் பேறும் கூடாத தத்துவங்களா? மதி கட்டிய மணல் வீட்டை விதி சீறிச் சிதைக்கும் விளையாட்டா வாழ்க்கை? 

காலக் கடும் புயல் குமுதத்தின் கோல வாழ்வை ஒரு நாள் குலைத்து விட்டது. 

அவள் அம்பலவாணனின் கருத்துக் கிசைந்த காதலிதான். உள்ளத்தைக் கவர்ந்த கிள்ளைதான். அவர் குலப் பெருமையை நீத்து அன்பிற்காக உறவு பூண்ட குமுதம்தான். ஆனால், அவர் அன்று கண்ட காட்சி? கூடத்து ஊஞ்சலில் அந்நிய இளைஞன், அவர் அறியாத ஒருவனுடன் அவள் அருகிலமர்ந்து பேசியவாறே சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்த எதிர்பாராத விபரீதம்! 

மனது மருகி விட்டது. நெஞ்சம் நீர்த்துப் போனது. 

வானில் பறந்திடும் காற்றாடியின் நூல், வெள்ளத்தில் நீந்தும் நீர்க்கோளத்தின் மேலுறை—இவற்றைப் போன்றதே காதல் வாழ்விலே கனிந்திடும் நம்பிக்கையென்ற மென்மையான உணர்வும். சந்தேகம் என்ற அழிவு நினைவு அங்கே முளைத்து விட்டால் அன்புக்கு மரணம் தான். 

“மண்பரியை நம்பித் தண்ணீரில் இறங்குகிறாய். மாணிக் கத்தை வேண்டி மண் புற்றைக் கிளறுகிறாய் என்று பெற்றோரும் பெரியோரும் அன்று கூறிய போதனைகள் இயல்பான உண்மை தானா?” 

குலப்பற்று குமுதத்தின் உறவை ஒப்பாமல் கூறிய ஊர்ப் பேச்சு அந்த விகாரமான நிலையில் மின்வெட்டுப்போல் எண்ண வெளியைக் கீறி அமிழ்ந்தது. எனவே, அவளைப் பார்க்க வ வந்த அம்பலம் அங்கே கண்ட காட்சியிலும், அக்காட்சிக்கு சாட்சி சொல்லிக் கருத்தைச் சிதைத்த நினைவிலும் மயங்கி உள்ளே நுழையாமல் தீர்மானிக்கக் கூடாத ஒன்றைத் தீர விசாரியாமல் முடிவு செய்து வெகு வேகமாகத் திரும்பினார். அவரது ஆவேச வெறிக்கு அடியில் துடிப்பு துணைக் குறியிட்டது. 

வாயிலில் ஆள் அரவம் கேட்டுக் குமுதம் திரும்பிப் பார்த்து நடப்பதைக் கண்டு துணுக்குற்று விரைவாக வெளியே வந்தாள். அதற்குள் அம்பலம் வண்டிக்குள் ஏறிவிடவே, வண்டியும் பரபரப் பாகக் கிளம்பிவிட்டது- நின்றிருந்த இடத்தில் ஒரே புழுதிப் படலத்தை எழுப்பிக்கொண்டே! 

அவளுக்குப் புரிந்துவிட்டது. 


“அத்தான் ! ” 

நினைவுப் பாதையிலே பறந்துகொண்டிருந்த அம்பலத்தின் மனப்புள் திரும்பிக் கூடடைந்தது. 

“குமுதா!” 

“அன்று நீங்கள்…” 

“மறந்து விடம்மா”
 
“மறந்துதானே விடவேண்டும்; ஆகட்டும். இன்னும் கொஞ்சநேரம். பிறகு எனக்கு எல்லாமே மறந்துவிடும்!” 

அவளது இதழோரத்தில் ஒரு வரட்டுச் சிரிப்புப் பிறந்து மறைந்தது. 

“குமுதா…” 

அம்பலம் அதைப் பொறுக்க சக்தி இல்லாமல் அரற்றினார். 

“அன்று… அவர் என் அண்ணா, அத்தான்” 

”என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லையே குமுதம்.” 

“ஆனால் அன்று எல்லாமே புரிந்து போய்விட்ட மாதிரி முடிவு பண்ணிவிட்டீர்கள், அப்படித்தானே. இருந்தாலும் புரியப்படுத்த வேண்டியதைத் தெரியப்படுத்தாமல் இந்தப் பாழும் மூச்சு நின்றுவிடமாட்டேன் என்று…” 

“கு…மு…தம்!”

அம்பலவாணன் அதிர்ச்சியினால் செயலற்றுச் சமைந்து போய்விட்டார். வெறியினால் ஏற்பட்ட பலத்தில் குமுதம் குமையக் குமையப் பேசினாள். 

“அம்மாவின் அபிமான புருஷனான என் தந்தை ஏகாம்பரத் திற்குத் தன் உரிய மனைவி மூலம் பிறந்த பிள்ளை மணவாளன் தான் அவன்; என்னுடன் பிறவாக் குறையை நிறைவு செய்து வரும் அவனை நீங்கள் அறியாத காரணத்தால் தவறாக எண்ணிக் கொண்டு…… பிறந்த குலமும் போதாத காலமும் எனக்குத் துரோகம் செய்துவிட்டது”. 

“நீ உடனே சொல்லி அனுப்பி இருக்கலாமே, குமுதம்” 

“அதைச் செய்ய விரும்பாமல்தான் நான் என்னை இந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டேன். திரிந்து போன உறுதியின் விளைவாகப் பிரிந்துபோன உறவைச் சேர்க்க முயலுவது பைத்தியக்காரத்தனமல்லவா? சாதியால் மலைமடு நிலையில் இருந்த நாம் நீதியால் ஒன்றுபட்டோம் என நினைந்து மகிழ்ந்து வந்தேன். கொள்கையில் வாழ விரும்பி இயல்பை ஏற்க மறுத் தேன். இறுதியில்…” 

“ஐயோ, குமுதா! இது என்ன சோதனை?” 

“ஆத்ம சோதனை, அத்தான். உங்களைப் போன்றவர்களை என் போன்றவர்கள் இனம் கண்டுகொள்ள வாழ்வு எனக்கு ஏற்படுத்தித் தந்த ஆராய்ச்சி ” 

“இல்லை, இது நீ என் அறியாமைக்கு இட்ட தண்டனை, குமுதம்.”

“தண்டனையா? ஆராயாமல் ஐயம் கொண்டது, ஆத்திரத் தில் அறிவை மறந்தது, காரியத்தை கருத்து மிஞ்சிவிட்டது. கண்மூடித்தனமாக நம்பியிருந்தவளை உதறிவிட்டுப் புதியவள் ஒருத்தியைப் புணர்ந்து கொண்டது யார் யாருக்களித்த தண்டனை?” 

அம்பலம் தாங்கமுயாமல் தத்தளித்துப் போனார். குமுதம் பொங்கப் பொங்கப் புலம்பினாள். நீர் கக்கி நின்ற அவள் நயனங்கள் சற்று அயர்ந்து மூடி இளைப்பாறின. மூச்சு மேல் கீழாக ஊசலாடியது. பிறகு, சிறிது நேர்த்திற்குள்ளாகவே தன் களைப்பை அடக்கிக்கொண்டு உணர்ச்சிகள் துடிக்கப் பேச லானாள். 

“ உருகி, உலர்ந்து, உடைந்து போகப் போகும் இந்த அந்திமப்போதில் உங்கள் ஒருவருக்கு மட்டுமே என் நெஞ்சறிய உரிமையாக இருந்தேன் என்ற நினைவுடன் போகிறேன். இதை நீங்களும் புரிந்து கொள்ளவேண்டுமென்றுதான் உங்களை என் னுயிர் பிரிந்து விடுமுன் பார்க்கவேண்டுமென்று…” 

“போதும் குமுதம், போதும், போதும்! ” 

அம்பலத்தின் கேவல் அந்த அவல நிலையை அகழ்ந்து காட்டியது. அவரது கரங்கள் அவளைத் தீண்டத் துடித்து நீண்டு நெருங்கின— அந்த ஸ்பரிசத்தின் மூலம் தன் பிழைக்கே கழுவாய்த்தேட விரும்புவதுபோல. 

ஆனால்….

குமுதம் தன் சக்தியையெல்லாம் திரட்டிக்கொண்டு முள்ளை அவளது கண்களிலே மிதித்ததுபோல் துள்ளி விலகினாள். சிவந்து சிதறும் சினம், நாசிகளில் வெளிறி உதரும் வெறுப்பு, உதட்டிலே கருத்து வழிந்திடும் கடுமை. 

மிதிபட்ட நாகம்போல் சீறித் தன் உள்ளத்தையே கக்கி விட்டாள் குமுதம். 

என்னைத் தொடாதீர்கள். என் தூய்மையில் உங்கள் மாசை அப்பிக் களங்கப்படுத்தி விடாதீர்கள். நெறி பிறழாது நின்ற ஒருவரின் பாதை திறம்பாத காதலியாக இருந்தேன் என்ற நிம்மதியில் போய்விடுகிறேன். இருவரைத் தொட்டவரை ஏற்க மாட்டேன். 

இது அவள் உள்ளம் மட்டும்தானா? “கற்பு நிலையென்று சொல்லவந்தார். இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப் போம்” என்று மனிதத்துவம் நிரம்பிய புதுமையின் குரல் அல்லவா. 

குமுதம் என்ற அந்தச் சிறுபறவை தன் ஆண்மை நிறைந்த ஜோடியைப் பிரிந்த வேதனையில் துடித்து வீழ்ந்து விட்டது. 

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *