அவள் தந்த பாடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 6, 2025
பார்வையிட்டோர்: 4,127 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடலலையை அடிவானம் முத்தமிட்டுக் கொண்டிருக்க அவற்றுக்கிடையே தானும் சேர்ந்து கொள்ள விரைந்துகொண்டிருந்தான் வெய்யோன். 

பொன்னொளி படர்ந்த அம்மாலைப் பொழுதில் வண்ணப் பூச்சிகள் போல் கம்பி வண்டிகள் (கேபிள் கார்) “செந்தோசா” தீவுக்குப் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தன. 

வெள்ளை, பச்சை, நீலம், சிவப்பு, மஞ்சள் எனப் பல நிறங்களிலான அவ்வண்டிகளில் சிறுவர்களும் பெரியவர்களும் வெளி நாட்டுப் பயணிகளும் சிங்கப்பூரின் கடற்பகுதிக் காட்சியின் மாட்சியைக் கண்ணாரக் கண்டவாறு மகிழ்ச்சியோடு சென்றுகொண்டிருந்தனர். 

ஒரு மஞ்சள் நிற வண்டியில் பள்ளிச் சீருடை அணிந்திருந்த சில மாணவர்கள் இருந்தனர். 

அவர்களில் ஒரு தமிழ் மாணவன் “ஆஃ செங் இங்கே பார் எவ்வளவு கப்பல்கள்!” என்று தன்னருகில் நின்றுகொண்டிருந்த ஒரு சீன மாணவனிடம் கூறுகிறான். 

“பாத்திமா இதோ பார் அடேயப்பா எவ்வளவு பெரிய நெய்த்தாங்கிக் கப்பல்” என்று வியந்து மேற்கு நோக்கிச் சுட்டிக் காட்டினாள் ஒரு சீன மாணவி. 

“ஆமாம், அது குவைத் நாட்டிலிருந்து தூய்மை செய்யப் படாத கல்நெய் (பெட்ரோல்) மூலப் பொருளை நம் நாட்டிற்கு ஏற்றிவரும் “சப்பான்” நாட்டுக் கப்பல்” என, மறுமொழி உரைக்கிறாள் அம் மலாய் மாணவி. 

“சார்டின் ஃச் டெப்”பை விட்டொரு சிவப்பு நிற வண்டி புறப்பட்டு நூறு மாத்திரி (மீட்டர்)த் தொலைவில் சென்று கொண்டிருந்தது. எதிரே அண்மைத் தொலைவில் வெள்ளை நிற வண்டியொன்று திரும்பிக்கொண்டிருந்தது. அவ்விரு வண்டிகளின் நிறங்கள் சிங்கப்பூரின் தேசியக் கொடியை நினைவூட்டின. 

சிவப்பு வண்டியில் மூவர் இருந்தனர். ஒருவர் தமிழர், மற்ற இருவர் வெளிநாட்டினராகத் தெரிந்தனர். அந்தப் பயணிகள் இருவரும் “ஃபேரர்” குன்றையும் வானளாவிய கட்டடங்களையும் படமெடுத்துக் கொண்டிருந்தனர். 

அந்நேரம் வெள்ளை வண்டி சிவப்பு வண்டி யைக் கடந்து கொண்டிருந்தது. அந்த வண்டியில் இடப்புறம் ஒரு பெண் கைக்குழந்தையொன்றை நெஞ்சோடு அணைத்தவாறு வலப்புறம் ஓர் ஆடவர். அவர் அப் பெண்ணின் கணவராகத்தான் இருக்க வேண்டும். இடப்புறம் பாவாடை சட்டையணிந்து ஏழெட்டு அகவை மதிக்கத்தக்கச் சிறுமி. 

“நாட்டுக்கு வேண்டியது நலமான அளவான சிறு குடும்பமே” என்ற அன்றைய குடும்பக் கட்டுப்பாட்டு முழக்கத்திற்கு ஒப்ப விளங்கினர் அவர்கள். 

அப்பொழுதெல்லாம் இரண்டுக்கு மேல் பிள்ளைகள் பெற்றால் தண்டம் செலுத்தினால்தான் பிள்ளையின் பிறப்புச் சான்றிதழைப் பெறமுடியும். 

சிவப்பு வண்டியில் சென்றுகொண்டிருந்த தமிழன் ஏறத்தாழ முப்பது அகவையைத் தாண்டியவன். அவன், அந்த வெள்ளை வண்டியில் போய்க்கொண்டிருந்த தமிழப் பெண்ணைப் பார்த்ததும் அவனது கண்கள் அகல விரிந்தன. 

புருவங்கள் நெளிந்தன. எதையோ நினைவுக்குக் காண்டுவர முயற்சி செய்யும் பாவனையில் ஆட்காட்டி விரலை நெற்றியின் கடைப்புறத்தில் வைத்து சிந்திக்கின்றான். 

“ஆம், அவள்தான் அவளேதான்” நினைவி லிருந்தது வந்து விட்டது போலும்; அவனது வாய் முணுமுணுக்கிறது. உதடு விரியாத நகைப்பு அவன் முகத்தில். கம்பி வண்டியின் ஓட்டம் போல் கடந்த காலத்தை நோக்கி ஓடத் தொடங்கியதுஅவனது நினைவு. 


ஓலைக் கீற்று வேயப்பெற்ற குடிசை வீடு அது. நாற்புறமும் கற்சுவருக்குப் பகரமாக மரப்பலகைகள் தைக்கப்பட்ட மறைப்பு. வீடு சிறியதென்றாலும் இரண்டு குடும்பங்கள் வாழ்வதற்கு ஏற்றதாய்த் தடுக்கப் பெற்றிருந்தது. 

அப்பர் சாங்கிச் சாலையில் அமைந்திருந்த சோமப்பா தோட்டத்தி (எஸ்டேட்)ல் தான் இருந்தது, அவ்வீடு. 

சோமப்பா தோட்டத்தில் நிறைய தமிழர்கள் வாழ்ந்திருந் தனர். அவர்களில் பலர் ஆடுமாடுகள் வளர்த்துப் பால் வாணிகம் நடத்தினர். 

ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள், ரம்புத்தான் மரங்கள், மாமரங்கள் எனப் பல்வேறு மரஞ்செடி கொடிகளும் பச்சைப் பசுமையாகத் திகழும் சோமப்பா தோட்டம், ஐம்பதுக்கும் மேற்பட்ட தகர மற்றும் ஓட்டு வீடுகளும் நிறைந்திருக்க அவற்றின் நடுவிலே சில ஓலைக் குடிசைகள். 

அவற்றில் இதுவும் ஒன்று. அந்த வீட்டின் ஒரு பகுதியில் நலவியல் (சுகாதாரம்) அமைச்சில் கொசு மாய்ப்பு மருந்தடிக்கும் வேலை செய்துவந்த பூஞ்சோழன் குடியிருந்தான். மறுபகுதியில் வாழ்ந்து வந்த குடும்பத்தைச் சார்ந்தவள்தான் அந்தப் பெண். 

“செந்தாமரை” 

ஆம், அதுதான் அவள் பெயர். அந்தப் பெயருக்கேற்றவாறே சிவந்தமேனி கொண்டவள் அவள். அவளது கரிய அடர்த்தியான நெளி நெளி யான கூந்தல் பிட்டத்திற்குக் கீழும் நீண்டிருக்கும். 

வேப்பிலை போன்ற அகண்ட கூர்மையான கண்கள். கருப்பு நிறப் பொத்தானைப் போல் வட்ட விழிகள். இருகை வளைவுக்குள் அடங்கிவிடும் கச்சிதமான சிற்றிடை இவ்வாறு அவளுடைய உடலழகை வண்ணனை (வர்ணனை) செய்யலாம். 

பூஞ்சோழன் பத்து வயதில் சிங்கப்பூர் வந்தவன். அவன் தந்தை படிப்பெதற்கென்று கடப்பிதழ் (பாஸ்போர்ட்) எடுத்து அவனை இங்கு வரவழைத்திருந்தார். 

ஆனால், வந்த ஒரு வாரத் திற்குள் ஒரு சைவ உணவகத்தில் மேசை துடைக்க மாதம் பதினைந்து வெள்ளி சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தப் பட்டான். அந்நாளில் அந்தச் சம்பளம் மிகப் பெரியது. 

அவன் பெரியவனானதும் தன் தந்தை வேலை பார்த்த கொசு அழிப்புக்கு மருந்துத் தூவும் பணியில் சேர்ந்தான். 

பூஞ்சோழன் திருமண வயதடைந்தபோது அவனைத் தமிழ்நாட்டுக்கு அழைத்துச் சென்று மணம் முடிக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தார் தந்தை. அவன் சிங்கப்பூரிலே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகக் கூறினான். 

அதற்கு அவன்றன் தந்தை “அட முட்டாப் பய புள்ளையே இந்த ஊர்ல உள்ளதுங்க என்ன சாதி குலமுன்னு தெரியாததுங்க. அதோடே நம்ம சாதியிலே, உறவிலே மணம் முடிக்காட்டி உறவு விட்டுப்போயிடும்” என்று கூறி மறுத்து விட்டார். 

தமிழவேள் கோ.சா. அவர்கள் ஐந்தடியிலே அமர்ந்து கொண்டு வருவோர் போவோரைக் குடியுரிமை எடுக்கச் சொல்லியதை அவன் சிறுவயதில் கண்டிருந்தான். 

தானும் ஒரு சிங்கப்பூர்க் குடிமகனாக ஆகவேண்டுமென மனத்தில் சூளுரைக் கொண்டிருந்தான். 

தந்தையின் பேச்சைத் தட்ட முடியாதவனாக அந்தப் பழங்குப்பையின் மொழிக்குப் பணிந்து விட்டான். 

தமிழ்நாட்டுக்குச் சென்று பதினாறும் நிறையாத பருவமங்கையான தன் அக்காள் மகளை மணமுடித்து அவளோடு இரண்டு திங்கள்கூட வாழ விடுப்பு இல்லாமல் கப்பலேறி வந்து விட்டான், பிரிவுச் சுமை தாங்கிய உள்ளத்தோடும். உறவுச் சுமை தாங்கிய உடலோடு அவள் அங்கிருந்தாள். 

நோன்புப் பெருநாள் நெருங்கிக்கொண்டிருந்த நேரம். தொடர்ந்து சீனப் புத்தாண்டும் வந்துகொண்டிருந்தது. 

கார் சூழ்ந்த கனமழைக்குச் சொல்லவா வேண்டும்? ஏழெட்டு நாள்கள் இடை விடாது சோவென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. 

வெளியே எங்கும் செல்ல முடியாமல் வீட்டுக் குள்ளேயே அடைபட்டுக் கிடந்தான். 

மழை மென்மையாகத் தூறிக்கொண்டிருந்தது. நள்ளிரவு நேர மிருக்கும். பூஞ்சோழனுக்குத் தூக்கம் வரவில்லை. குளிர் வேறு அவனை வாட்டியது. 

“இல்லாள் அருகிலிருந்தால் எவ்வளவு இதமாக இருக்கும்?” 

மனம் பேசியது. நினைவோட்டத்தில் மனைவியின் உருவம் நிழலாடியது. 

“சே… என்ன வாழ்க்கை?” 

முனகலைத் தொடர்ந்ததொரு பெருமூச்சு. புரண்டு புரண்டுப் படுக்கிறான். உள்ளத்தில் பலவித எண்ணங்கள் கடலலைகள் போல் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்து கொண்டிருந்தன. 

உடலில் ஒருவிதக் கொதிப்பு ஏறுகிறது. உணர்ச்சி மேலிட்டவனாய் எழுந்து அமர்கிறான். “கெக் கெக்” என்று இருமல் ஒலி. அது அவனது இருமலல்ல, அடுத்த வீட்டிலிருந்து வந்தது. 

ஆம், செந்தாமரையின் இருமல்தான் அது. 

சிறிது நேரம் அமைதி. பூஞ்சோழன் படுக் கையை விட்டுக் கீழிறங்குகிறான். பக்கத்திலே கிடந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அதன்மேல் ஏறி, பலகைத் தடுப்புக்கு மேலே அடைக்கப் பட்டிருந்த கம்பித் தட்டின் இடுக்கு வழியாக அடுத்த வீட்டை எட்டிப் பார்க்கிறான். 

மண்ணெய்ச் சிமிழ் விளக்கொன்று மங்கலாய் எரிந்து கொண்டிருக்கிறது. 

அந்த ஒளியில் செந்தாமரை படுத்திருப்பது தெரிகிறது. அவள் உள் பாவாடையும் மேற்சட்டை யும் அணிந்த நிலையில் படுத்திருக்கிறாள். 

பாவாடை சற்று மேலேறியவாறு விலகிக் கிடக்கிறது. அவளுடைய இரு கால்களும் முட்டு வரை தெரிகிறது. 

“குபுகுபு”வென வெளிவரும் கொதிகலன் ஆவியின் நிலைக்குத் தள்ளப்பட்டான் அவன். செந்தாமரையும் முழுத் தூக்கத்தில் இருப்பவள் போல் தெரியவில்லை. அவளும் நினைவில் கண்ணை மூடியவாறு தான் படுத்திருந்தாள். 

“செந்தா” நாத்தடுமாற சொல் அடிவயிற்றிலிருந்து வருகின்றது. 

“செந்தா” மீண்டும் அதே தோரணையில் அழைக்கின்றான். 

செந்தாமரையின் வேல் விழிகள் மெல்லத் திறக்கின்றன. சுற்றும் முற்றும் பார்க்கின்றாள். 

“இதோ இங்கே பார்” எப்படியோ துணிந்து கூறிவிட்டான். மேலே நோக்குகின்றாள் செந்தாமரை. 

பாம்பைக் கண்டவள் போல் பதறிச் சட்டென்று கட்டிலை விட்டு எழுந்து நிற்கின்றாள். 

அருகில் கிடந்த போர்வையை வாரியெடுத்து அவளது பொன்மேனியைப் பொத்திக்கொள்கிறாள். நாணத்தால் கூனிக் குறுகியவளாய்ப் படுக்கையில் அமர்கின்றாள். 

ஐந்து நிமயம் (நிமிஷம்) கடந்திருக்கும். மெதுவாகத் தலையை நிமிர்த்தி மேலே நோட்டமிடுகிறாள். அவன் அங்கு இல்லை. 

அவன் அப்பொழுதே பயத்தால் கம்பளிப் போர்வையால் பொத்திக்கொண்டு படுத்து விட்டான். செந்தாமரையும் மண்ணெய் விளக்கை அணைத்துவிட்டு படுக்கிறாள் விழித்தபடி. 


மறுநாள்… 

வேலைக்குச் செல்வதற்காகப் புறப்பட்டுத் தனது மிதிவண்டியைத் தள்ளப்போன பூஞ்சோழனைக் “கொஞ்சம் நில்லுங்க” என்ற செந்தாமரையின் குரல் தடுத்து நிறுத்துகிறது. 

திரும்பிப் பார்க்கிறான். வெட்கத்தால் அவனுடைய தலை கவிழ்கிறது. என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்தால் அவனுடல் ஆட்டம் கொள்கிறது. 

“நேற்றைக்கு நீங்க இப்படி…?” செந்தாமரை சொல்லி முடிக்க வில்லை. 

“மன்னிச்சிடுங்க. ஏதோ ஓர் உணர்ச்சியிலே அறிவிழந்து தப்புப் பண்ணிட்டேன்” என்கிறான். 

“ஓ… உணர்ச்சி ஏற்பட்டா அக்கா, தங்கச்சி, அயலான் பெண்டாட்டி என்று தெரியாமல் அறிவு கெட்டா போய்விடும்? 

“நேற்றிரவு நான் கூச்சலிட்டிருந்தால் உங்களுடைய மானம் என்ன ஆகியிருக்கும்?” செந்தாமரையின் குரல் வலித் தொலிக்கத் தொடங்கியது. 

“இதோ பாருங்க இது என்ன தெரியுமா?” தனது கழுத்தில் அழகு செய்துகொண்டிருந்த மஞ்சள் கயிற்றைக் காட்டுகிறாள். அதனை ஏறிட்டுப் பார்க்கும் துணிவற்றவனாய் பூஞ்சோழனின் தலை கவிழ்ந்தே தரை நோக்கியே கிடந்தது. 

“நான் திருமணமானவள் என்பதைத் தெரிந்திருந்தும் உங்களுக்கு இப்படிப்பட்ட துணிவு எப்படி ஏற்படலாம்? ஏதோ உணர்ச்சின்னு சொன்னிங்களே, ஒரு சின்னப் பெண்ணை திருமணம் செஞ்சு, அவ வயத்துல ஒரு குஞ்சையும் கொடுத்துட்டு, மூவாயிரம் கல் (மைல் களுக்கப்பாலே விட்டுட்டு வந்து, மூனாண்டா இங்கேயே கிடக்கிறீங்களே அவளுக்கு உணர்ச்சி இருக்காதா? அவளும் உங்களைப் போல அடுத்த ஆளைப்பார்க்க மாட்டாளா? ஒன்னு அங்கேயே இருக்கணும், இல்லாட்டி இங்கேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கணும். 

“அப்படிச் செய்யாமே உங்களைப் போன்ற சிலருக்கு ஏனிந்த இரண்டும் கெட்டான் பிழைப்பு?” அப்பாடியோ!

சீனத்து ஊசிப் பட்டாசைப் போல் சில நிமயத்தில் செந்தாமரை பட்பட்பட் டென்று வெடித்துச் சிதறினாள் சொற்களை. 

கார முள்ளைக் காதிலே செருகிக் கள்ளிப் பாலைக் குவளையில் தந்ததுபோல் இருந்தது அவனுக்கு. 

செந்தாமரை திருமணமானவள். அதுவும் திருமணம் நடந்து ஏழெட்டு மாதங்கள்தாம் ஆகியிருந்தன. அவளுடைய கணவன் இரவுப் பணிக்குச் செல்பவன். இவையாவும் பூஞ்சோழனுக் குத் தெரியும். ஆனாலும் நினைப்பும் நிலையும் அவனைத் தவறு செய்யத் தூண்டிவிட்டது. 

ஆற்றிலொரு காலும் சேற்றிலொரு காலுமாக வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பூஞ்சோழனுக்கு அவள் தந்த பாடம் குதிரைக் காலில் அறைந்த லாடம்.

– மண்மணச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2014, பாத்தேறல் இளமாறன் வெளியீடு, சிங்கப்பூர்.

பாத்தேறல் இளமாறன் (தமிழ் தெரிந்த சமையற்காரர்)  தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள நாட்டுச் சாலையில் 2-1-1945ல் பிறந்த பாத்தேறல் இளமாறனின் இயற்பெயர் மெ. ஆண்டியப்பன். 12'ம் வயதில் சிங்கப்பூருக்கு வந்த இவருக்குச் சமையல் கை வந்த கலை. ஆர்ச்சர்ட் சாலையிலுள்ள X ஆன் சிட்டி கடைத் தொகுதி திறக்கப்பட்டபோது அதில் சாப்பாட்டுக் கடை நடத்த உரிமை பெற்ற ஒரே தமிழர் இவர். மணமான இவர் தம் குழந்தைகளுக்கு கண்ணகி, தமிழ்க் கோதை,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *