அவனும் சில வருடங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 10 
 
 

(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம் – 4

“சினிமா என்ற மகத்தான சாதனம் இன்று லாபம் தேடும் ஒரு மலிவான வியாபாரமாகிவிட்டது மல்லாமல், மனிதர்களின் மனத்தைக் குழப்பும் ஒரு பயங்கர கருவியாகவும் மாறியுள்ளது…. உதார ணமாக அமெரிக்க சினிமாக்களைப் பார். அந்தக் காலத்து ‘வெஸ்ரேன்’ படங்கள் அமெரிக்க ஆதிமக்களாகிய சிவப்பு இந்தியரை, நாகரீகமான அமெரிக்கர்களின் எதிரிகளாகப் பிரதிபலித்தது. இப்போது பார்த்தால் ‘ரம்போ’ போன்ற படங்கள் தனிமனித வீரத்தை அதாவது அமெரிக்கரின் மன உணர்வை – உலகத்தின் போலிஸார் தாங்கள்தான் என்ற தத்துவத்தை நிலைநாட்டத் தூண்டுகிறது….”

மிஸ்ரர் ஜான் பேர்ன்ஸ்ரைன் தனது விரிவுரையில் சொன்னது ராகவனின் நினைவில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது. 

அன்று பின்னேரம் இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வெல்கம் பார்ட்டிக்குப் போனபோது புவனாவிடம் இது பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்திருந்தான். 

பார்ட்டிக்குப் பலர் தங்கள் கேர்ள் பிரண்ட்ஸ், பாய் பிரண்ட்சைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். அன்ரோனியோவுடன் வந்திருந்த பெண் எல்லோரையும் கவர்ந்தாள். 

சங்கு போன்ற கழுத்து, தாளம் போடும் ஒய்யார நடை, அள்ளி வைத்த முல்லைச் செண்டான முகம், கண்களென வளையவரும் இரு வண்டுகள் “இவள் எனது கேர்ள் பிரண்ட் ஜுலியட்” அன்ரோனியோ பெருமையுடன் சொன்னான்.

டெவீனா பிலிப்புடன் வந்திருந்தாள். அலான் பார்டோவும், ஜேன்டார்வினும் மிகவும் உக்கிரமான தர்க்கத்தில் ஈடுபட்டது போற் தெரிந்தாலும் அவர்கள் கண்கள் ஒருத்தரில் ஒருத்தர் எவ்வளவு நெருக்கமாய்ப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டியது. 

“எந்த நேரம் பார்த்தாலும் இன்பம் அனுபவிப்பதைப் பற்றிப் பிதற்றுவாயே எங்கே உனது கேர்ள் பிரண்ட்” மைக்கலைச் சீண்டினான் ராகவன். 

“ஒன்று இருந்தாலல்லவா பெருமையுடன் கொண்டு வரலாம். இருப்பவர்களை எல்லாம் கொண்டு வந்தால் ஒரு புட்போல் ரீம் மாதிரி வந்து விடும்” மைக்கல் வழக்கம் போல் ஓ வென்று சத்தம் போட்டுச் சிரித்தான். கண்கள் சிவந்திருந்தன. கஞ்சாப் புகை முகத்தை மறைத்திருந்தது. வாழ்க்கையை ஒரு விளையாட்டு மைதானமாகப் பார்ப்பதை ராகவன் விசித்திரமாகப் பார்த்தான். 

தன்னை ஹொமோ செக்சுவல் என்று அறிமுகம் செய்து கொண்ட ஸ்ரீவன் தனியாக வந்திருந்தான். முகம் சோர்வாக இருந்தது. 

“என்ன சுகமில்லையா” ராகவன் பரிவுடன் கேட்டான். ஸ்ரீவன் ராகவனை ஒரு நிமிடம் ஆழமாகப் பார்த்தான், பின்னர் “அப்படி ஒன்றும் சீரியஸாக இல்லை…என்யோய் த பார்ட்டி ராகவன்” என்றான். 

புவனா தன் போய் பிரண்ட் றிச்சார்ட் என்பவனுடன் வந்திருந்தாள். றிச்சார்ட் மிகவும் சினேகிதமாகப் பழகிக் கொண்டான். 

“தலைக் கனம் பிடித்த பிலிப்புக்கும் றிச்சார்ட்டுக்கும் எவ்வளள வித்தியாசம்” மைக்கல் முணு முணுத்தான். 

‘றிச்சார்ட்டின் குணம் பிலிப்பின் குணம் மாதிரி இருந் தால் புவனாவின் காதலனாக இருக்க முடியுமா’ ராகவன் பீர் கானை உடைத்தபடி கேட்டான். 

”உம்…டெவீனாவைப் பார்த்தால் எவ்வளவு நல்ல பெண்ணாக இருக்கிறாள்…… அவள் பிலிப்புடன் நெருங்கிப் பழகிறாளே” 

மைக்கல் எரிச்சலுடன் சொன்னான். அதே நேரம் ஸ்ரீவன் இருமலுடன் சங்கடப் பட்டதால் ராகவன் ஸ்ரீவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். 

செப்ரம்பர் மாதக் குளிர் ஈட்டிபோல் தோலைத் துளைத் தது. வெளியில் புகை பிடிப்போர் இருந்தாலும் ஸ்ரீவனால் வெளியில் இருப்பது பிடித்தது. 

“நானும் ஒரு காலத்தில் புகை பிடிப்பவனாகத் தான் இருந்தேன்…இப்போது எனது வாழ்க்கையே மாறி விட்டது” பெருமூச்சுடன் சொன்னான் ஸ்ரீவன். 

புவனா இவனைத் தேடிக்கொண்டு வருவது தெரிந்தது. புவனா நீண்ட கறுப்பும் கவுனும் ஒரு மெல்லிய தங்கச் சங்கிலியும் போட்டிருந்தாள். மிக மிக எளிமையான உடுப்பில் மிக மிகக் கவர்ச்சியாய்த் தெரிந்தாள். 

அவள் இவர்களிடம் வந்ததும் “ஸ்ரீவன், புவனாவைக் காதலியாக அடைவதற்கு றிச்சார்ட் கொடுத்து வைத்திருக்கி றான் இல்லையா” 

ராகவன் சொன்னது புவனாவுக்குக் கேட்டிருக்க வேண்டும். 

‘ஏய் என்ன புலம்புகிறாய்’ புவனா பொய்க் கோபத்துடன் ராகவனின் மூக்கில் குத்தினாள். 

“என்னவென்று இலங்கைத் தமிழரின் பார்வையில் படாமல் இந்த ஆங்கிலேயனின் உறவில் அகப்பட்டுக் கொண்டாய்.” 

ராகவன் புவனாவின் நீண்ட தலைமயிரை விளையாட்டாக இழுத்தான். 

“என்ன நீ பெருமூச்சு விடுவதைப் பார்த்தால் நீயே றிச்சார்ட்டில் பொறாமைப் படுகிறாய் போலிருக்கிறது” ஸ்ரீவன் தனது இருமலையும் மறந்து சிரித்தான். 

ராகவன் வெட்கத்துடன் தன் பார்வையைத் தெருவிற் பாயவிட்டான். 

“எப்படி லெக்ஸர்ஸ்” 

புவனா தனது ஆரேன்ஞ் ஜுசுடன் உட்கார்ந்தாள்.

ஜான் வேர்ன்ஸ்ரைன் சினிமா பற்றியும் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் பற்றியும் சொன்ன விடயங்களைச் சொன்னான். 

“ஏன் மூன்றாம்தர இந்தியச் சினிமா பற்றி நீ ஒன்றும் சொல்லவில்லையா” புவனா வெடித்தாள். 

”மனித நேயத்திற்கும் புறம்பான தத்துவக் கருத்துக்கள், மனித முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடும் இதிகாசங்கள், இதில் அடிப்படையிற் தானே இந்தியச் சினிமா இருக்கிறது”. 

தூரத்தில் தெருவில் பாய்ந்தோடும் கார்களின் இரைச்சலில் புவனா சொல்வது அரையும் குறையுமாகக் கேட்டது. 

“உலகத்திலேயே நிறையப் படங்கள் தயாரிக்கும் நாடு இந்தியா, உலகத்திலுள்ள சமயங்களில் மிகவும் கூடுதலான எண்ணிக்கை கொண்ட கடவுளைக் கொண்டது இந்து சமயம். பெண்களை இரண்டாம்தரப் பிரசையாகக் கூட நடத்தாமல் கொடுமை செய்கிறது இந்தியக் கலாச்சாரம். இவற்றின் பிரதிபலிப்புத்தான் தானே இந்திய சினிமாக்கள்.” 

புவனாவின் ஆத்திரம் ஏன் தன்னில் பாய்கிறது என்று புரியாமல் விழித்தான் ராகவன். 

“இந்தியச் சினிமாவைப் பிடிக்காவிட்டால் எனக்கு ஏன் திட்டுகிறாய், நானா படம் எடுக்கப் பணம் கொடுக்கிறேன்.” 

ராகவன் குழப்பத்துடன் கேட்டான். 

“உன்னைப் போல இளைஞர்கள் சினிமாவை நாடுவது ஏதோ ஒரு கற்பனையிற்தானே? நாளுக்கு மூன்று படம் எடுக்கும் இந்தியாவில் முழுக்க முழுக்கப் பெண்கள் கவர்ச்சிக் கன்னிகளாக, போதைப் பொருட்களாக, புசிக்கப்படும் தசைப் பிண்டங்களாகத்தானே படைக்கப்படுகிறார்கள். அதைத் தாண்டி எத்தனை முற்போக்கான படம் வருகிறது.” 

ராகவன் மறுமொழி சொல்ல முதல் ஜேன் வந்து சேர்ந்தாள்.  

“பார்த்தாயா ஜேன், இந்தியக் குப்பைச் சினிமாவுக்கு என்னைப் போன்றோர்தான் காரணம் என்று புவனா பொரிந்து தள்ளுகிறாள்.” ராகவன் பாதி கோலமாகவும் பாதி குழப்பமாகவும் தனது சக மாணவியான ஜேனிடம் முறையிட்டான். 

“ஓகோ, பெண்களைக் கவர்ச்சிப் பொருட்களாக வைத்து இந்தியாவில் மட்டும் படம் எடுக்கிறார்களா? உலகத்தில் பரவலாக நடக்கும் விடயம் தானே. பெண்களுக்குச் சம நிலை தேவை என்பதைப் பெண்களே உணராத சமுதாயத்தில் நடக்கும் பொதுவான நிகழ்ச்சியிது.” ஜேன் சொல்லி முடிக்க முதல் ராகவன் இடைமறித்தான். 

“அப்படி என்றால் மேற்குநாடுகளில் பொருளாதார சுதந்திரம் ஓரளவுக்குப் பெண்ணுக்குக் கிடைத்திருக்கும் நாடுகளில் எல்லாமே முற்போக்கான படங்கள்தான் உருவாகின்றதா.” 

“நான் அப்படிச் சொல்லவில்லை. தங்கள் சுயமைக்குப் போராட வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள பெண்களுக்குப் பொருளாதாரம் மட்டுமல்ல அவர்களைச் சுற்றியுள்ள கலாச்சாரமும் தடையாயிருக்கின்றது.” 

புவனா ஆமாம் என்பதுபோல் தலையாட்டினாள். பார்ட்டி நடந்த மண்டபத்தில் நடனம் ஆடுவோரின் ஆரவாரம் ஜன்னலால் கேட்டது. குளிர் கூடிக் கொண்டு வந்ததால் ஸ்டீவனின் இருமல் தொடங்கியது. 

“ஸ்ரீவன் நீ வீட்டுக்குப் போவது நல்லது என்று நினைக்கிறேன்” ஜேன் ஆதரவுடன் சொன்னாள். 

“வேண்டாம், இது எங்கள் புது வாழ்க்கையின் ஆரம்பம். என்னை நோயாளியாக நினைத்துக் கொள்ளாமல் என்னை ஒரு சக மாணவனாக நினைத்துக் கொண்டு இந்த இனிமையான ஒரு மாலை நேரத்தை என்ஜோய் பண்ண விரும்புகிறேன்.” 

ஸ்ரீவன் மேற்படி சொல்லி முடிக்க முதல் இன்னொரு தரம் இருமத் தொடங்கி விட்டான். ஜேன் ராகவனைப் பார்த்தான். ஸ்ரீவனை துரிதப்படுத்த விரும்பமில்லை என்பது அவன் பார்வையிற் தெரிந்தது. 

அந்த நேரம் டெவீனா வெளியே வந்தாள். “இந்த மண்டபத்தில் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் எனக்குத் தலை வெடித்து விடும்” 

டெவீனா வானத்தைப் பார்த்து நீண்ட மூச்செடுத்துக் கொண்டு சொன்னாள். 

“ஏன் உனக்கு சத்தமான மியுசிக் பிடிக்காதா, அல்லது டிஸ்கோ லைட்டிங் பிடிக்காதா அல்லது…” 

ஜேன் கேள்வியை முடிக்க முதல் டெவீனா இடைமறித்தாள். 

“எங்கள் வெல்கம் பார்ட்டியில் இதெல்லாம் இருக்கும் என்று தெரியும். ஆனாலும் எனக்கு மிகவும் சகிக்க முடியாத விடயம் சிகரட் புகை. கண் எரிகிறது. தலை சுற்றுகிறது. சில மனிதர்கள் மிகவும் சுய நலமானவர்கள், மற்றவர்களுக்குத் தர்ம சங்கடமான விடயங்களைத் தயக்கமின்றிச் செய்கிறார்கள். அதை ஒரு சோசியல் முற்போக்கு என்றும் நினைக்கிறார்கள்.” 

அவள் வெடித்த விதத்திலிருந்து தெரிந்தது டெவீனாவுக்குப் புகை பிடிப்பது பிடிக்காதென்பது ஸ்ரீவன் சிரித்துக் கொண்டான். “டெவீனா புகை பிடிப்பது பிழை என்று சாப்பாடு போடும் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொள். அந்தப் புகை மண்டலத்துள் இருந்து இருமித் தொலைக்காமற் தானே இந்தக் குளிரில் வந்து மாரடிக்கிறேன்.” 

”நோ நோ, நீ கட்டாயம் இந்தக் குளிரில் கஷ்டப் படக் கூடாது. கொஞ்சம் பொறு, நான் எனது காரைக் கொண்டு வருகிறேன். நானே உன்னை வீட்டுக்குக் கொண்டு செல்கிறேன்.” 

ஜேன், ராகவன், ஸ்ரீவன் மூவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். 

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்” டெவீனாவின் முகத்தில் குழப்பம். மங்கலான வெளிச்சத்தில் அவளின் அந்தக் குழந்தைத்தனமான குழப்பத்தை ராகவனால் ரசிக்க முடியவில்லை. 

அளவிட முடியாத ஒரு அப்பாவிக் குழந்தைத்தனம் அவளோடு இணைந்திருப்பது புரிந்தது. 

“நாங்கள் ஒவ்வொருத்தரும் ஸ்ரீவனுக்கு நீ சொன்னதைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இது எங்கள் வெல்கம் பார்ட்டி. தான் கட்டாயம் கடைசி நிமிடம் வரையும் இருக்கப் போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான்.” 

ஜேன் அநுதாபத்துடன் சொன்னாள். 

“ஸ்ரீவன் முட்டாள்தனமாகக் கதைக்காதே. நீ இருமுவதை குணப்படுத்தா விட்டால் மூன்று வருடப் பட்டப் படிப்பு முடிய விட்டே மரணயாத்திரைக்குத் தயாராகி விடுவாய். வெளிக்கிடு நான் கார் கொண்டு வருகிறேன்” டெவீனா ஆர்டர் போட்டாள் 

அத்தியாயம் – 5

“லண்டனைப் பார் இரவின் அமைதியில் எத்தனை ரம்பியமாக இருக்கிறது. இந்த வார்டர்லூ பாலத்தின் இந்த ரம்பியமான அழகைப் பகலில் ரசிக்க முடியுமா” 

ஸ்ரீவனை அழைத்துக் கொண்டு போய் கெனிங்டன் என்ற இடத்தில் சேர்த்து விட்டு ராகவனும் டெவீனாவும் வந்து கொண்டிருந்தார்கள். 

நேரம் இரவு பத்து மணியாகிக் கொண்டிருந்தது. 

“ஸ்ருடன்ஸ் பார்ட்டி முடிந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா” டெவீனா ராகவனைக் கேட்டாள். 

“தெரியாது…முடிந்திருக்கா விட்டாலும் இன்னொரு தரம் போக விருப்பமில்லை.” 

“ஏன்” 

“உங்களைப் போலத்தான் எனக்கும் புகை பிடிப்போர் நடுவில் இருக்கப் பிடிக்காது.” 

“நீங்கள் குடிப்பீர்களா.” 

“உம் பீர் எடுப்பேன்… சீரியஸான ட்ரிங்ஸ் எடுப்பதில்லை.” இவன் இப்படிச் சொல்ல அவள் சிரித்தாள். 

”ஏன் சிரிக்கிறாய் டெவீனா” 

“மூன்று வருடப் படிப்பு முடிவதற்கிடையில் மைக்கல் சொல்வதுபோல் எத்தனையோ விடயங்களை புரிந்து கொள்வாய்”. 

இருவரும் சிரித்தார்கள். 

டெவீனா காரை நிறுத்தினாள்.

“ஏன் நிறுத்தி விட்டாய்.” 

“இந்த செப்டம்பர் மாதத்திலும் பூரண நிலவு அழகாகத் தெரிகிறது. அதன் பிரதிபிம்பம் தெறித்து விழும் தங்கத் தகடுகளாகத் தேம்ஸ் நதியில் பிரதிபலிக்கிறது. அதை ரசிக்கிறேன்.” 

ராகவன் மறுமொழி சொல்லவில்லை. 

திடீரென்று அவனின் மாமா மகள் இந்திராவின் ஞாபகம் வந்தது. வவுனியா நகரில் அவர்கள் குடும்பம் வசித்தபோது ராகவன் குடும்பம் அநுராதபுரத்திலிருந்து மாமா வீட்டுக்கு வருவார்கள். 

இந்திரா மிகவும் அழகாகப் பாடுவாள். இவனை விட ஐந்து வயது குறைந்தவள். இவன் பதினொரு வயதாக இருக் கும்போது கள்ளமறியாத குழந்தை வயதில் அவள் தன் குழந்தைக் குரலில் அவள் தகப்பன் சொல்லிக் கொடுத்த பாரதியார் பாடல்கள் பாடுவாள். 

“சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற்பாட்டிசைத்துத்
தோணிகளோட்டி விளை யாடிவருவோம்.” 

இந்திராவின் மழலைத் தமிழை ரசிப்பான் ராகவன். அவளுக்கு ஆறு வயது. அச்சம் நாணம் தெரியாத அருமையான வயது. 

“தேம்ஸ் நதியில் நிலவு தெறிப்பதைப் பார் என்று சொன்னது பைத்தியகாரத் தனமாக இருக்கிறதா” 

இவனை நினைவிலிருந்து இழுத்தாள் டெவீனா. வன்னி நகரமும் லண்டன் மத்தியில் ஏகாதிபத்தியத்தின் பிரதிபலிப்பாகத் தெரியும் பாராளுமன்றக் கரையோரமும் எத்தனை வித்தியாசமான உலகங்கள். 

அவள் கேள்விக்கு இன்னும் மறுமொழி சொல்லாதது. அவனுக்கு ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும். 

”ஐயாம் சாரி ராகவன்…சீக்கிரம் வீட்டுக்குப் போக வேணுமா” 

ஸ்ரீவனை வீட்டுக்குக் கொண்டு போகத் துடித்த அதே ஆதரவான குரல். 

இந்தப் பெண்ணை இரண்டு நாளைக்கு முன் யாரென்றே தெரியாது. 

குளிர் தோலையுரிப்பேன் என்று பயமுறுத்தியது. ஆனா லும் அவன் மனதில் ஏதோ ஒரு புதுவிதமான சந்தோசம். 

“என்ன யோசிக்கிறாய்.” 

“என்னை உனக்கு முன்பின் தெரியாது. இரண்டு நாள் உறவில்…” 

“உன்னை நம்பி இந்த நடுச்சாமத்தில் இந்தப் பாலத்தில் போரடிக்கிறேன் என்று நினைக்கிறாயா” 

அவன் மறுமொழி சொல்லவில்லை. 

“ஒருத்தரில் ஒருத்தர் நம்பிக்கை, அன்பு, மரியாதை இல்லாவிட்டால் உலகம் எப்போதோ தலைகீழாகப் போயிருக்கும் ராகவன். நீ எனது சக மாணவன், பெரும்பாலும் ஒரே விதமான நோக்கங்களும் எதிர்பார்ப்புகளும் இருக்கும் என்று நினைக்கிறேன்.” 

அவள் வார்த்தைகளைத் தெளிவாகச் சொன்னாள். வித்தியாசமான ஒரு திருப்பம் என்று நினைத்தான். 

ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன் ஸ்ரீவனை வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். 

அவன் தனது உடம்பைச் சரியாகப் பார்ப்பது முக்கியம் என்று அவள் பிரசங்கம் செய்யத் தொடங்கியதும் ஸ்ரீவன் வழக்கம் போல் மெல்லச் சிரித்தான். 

“நீ மிகவும் பிடிவாதமான பெண். உனக்குச் சரி எனப்பட்டதை நேரே சொல்கிறாய், செய்தும் விடுகிறாய்.” ஸ்ரீவன் இப்படிச் சொன்னதும் அவள் கொஞ்ச நேரம் மறுமொழி சொல்லாமல் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினாள். பின்னர் கொஞ்சம் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டபடி சொன்னாள். 

“ஸ்ரீவன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று உந்துதல் இருக்கும்போது அதை எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பது பிடிவாதம் போல் தெரிந்தாலும் அது வாழ்க்கையின் கடமை என்று நினைக்கிறேன்.” 

ராகவனும் ஸ்ரீவனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர். ஸ்ரீவனின் முகத்தில் அசாதாரணமான ஒரு புன்னகை. ஆயாசத்துடன் சொன்னான்: 

“டெவீனா உன்னை எனது சக மாணவியாக அடைந்ததற்கு மிகவும் சந்தோசப்படுகிறேன்.” 

“ஐயையோ அப்படி ஒன்றும் பெரிதாகச் சொல்ல வேண் டாம். எனது தகப்பனுக்கு நான் பிலிம் கொலிஜ்சுக்கு வந்தது விருப்பமில்லை. இடது சாரிகளும், அனக்கிஸ்ட்டுகளும் இந்த L.C.P. க்கு வருவார்கள் என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.” 

அவள் வேடிக்கையாகச் சொன்னாள். 

“ஆமாம் யாரோ உனது தகப்பனுக்கு மிஸ்டர் ஜான் பேர்ன்ஸ்ரைன் பற்றிச் சொல்லியிருப்பார்கள்.” 

ராகவன் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். 

“என்ன இன்னும் ஏதோ யோசிக்கிறாய்.” 

டெவீனா காருக்குள் இருந்து கிறிஸ்ப்பாக்கட் ஒன்றை எடுத்து அவனுக்குக் கொடுத்தாள். 

அவன் நேரத்தைப் பார்த்துக் கொண்டான். நேரம் பதி னொரு மணியாகிக் கொண்டிருந்தது. 

“வீட்டில் பேசுவார்களா” அவள் கேட்டாள். 

இல்லை என்று தலையாட்டினான். 

“திடீரென்று ஸ்ரீவனை வீட்டுக் கொண்டு போக வந் தாயே உனது போய் பிரண்ட் பிலிப் கோபிக்க மாட்டானா” 

“வாட்” அவள் அதிர்ச்சியுடன் கேட்டாள். 

“எனது போய் பிரண்ட் பிலிப் என்று சொன்னாயா” அவளின் குரல் உயர்ந்திருந்தது. 

அவனுக்கு அவளின் திடீர் மாற்றம் புரியவில்லை. ஒரு சில வினாடிகள் அமைதி. 

அவர்களை கடந்து சில கார்கள் போய்க் கொண்டிருந்தன. “ஒரு இந்தியனிடமிருந்து இப்படியான பேச்சைத்தானே எதிர்பார்க்க வேண்டும்.” 

அவள் குரலில் திடிரென்று ஒரு ஏமாற்றத்தின் தொனி, ஆயாசம் கலந்த எரிச்சலின் தொனி அது என்று அவனுக்குப் புரிந்தது. 

“நீ நேற்று கொலிஜ்ஜுக்கு வந்த நேரத்திலிருந்து முடிந்த நேரமெல்லாம் புவனாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாயே…” 

அதற்குக் காரணம் என்ன என்று அவள் கேட்கவில்லை.

”ஐயம் சாரி பிலிப் உங்கள் போய் பிரண்ட் என்று நினைத்து விட்டேன்.”
 
அவள் மறுபொழி சொல்லவில்லை. 

“அத்துடன் ஒரு விடயம் நான் இந்தியனில்லை. இலங்கைத் தமிழன்.” 

அவள் வாய் சட்டென்று பூட்டுப் போட்டாற் போன்ற மௌனம். 

காரை நோக்கி நடந்தாள். 

என்னடா இது கரைச்சல் என்று அவன் தனக்குள் முணு முணுத்துக் கொண்டான். இருவரும் காரில் ஏறிக் கொண்டார்கள். 

“குழந்தைத் தனமாக நடந்ததற்கு மன்னிக்கவும்.” அவள் முணு முணுத்தாள். 

இப்போது அவன் மௌனம் தாறுமாறாக எதையும் சொல்லி அவளிடம் தர்க்கம் செய்ய விரும்பவில்லை. 

கார் குறுக்குப் பாதைகளில் போனபடியால் அவள் எங்கு போகிறாள் என்று தெரியவில்லை. 

அவன் ஜன்னலுக்குள் வெளியால் பார்த்தான். கார் யூஸ்ரன் ஸ்ரேசனைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. 

“என்னை இந்த இடத்தில் இறக்கி விட்டால் நான் ட்ரெயின் எடுத்துப் போகிறேன்.” 

அவன் சொன்னான். அப்போது கார் ஹம்ஸ் ரேட் ரோட்டில் போய்க் கொண்டிருந்தது. 

“ஓ மை கோட். ஏதோ ஞாபகத்தில் என் வீட்டுக்குப் போகும் வழியில் போய்க் கொண்டிருக்கிறேன்.” 

குரலில் உண்மையான தவிப்பு. 

“பரவாயில்லை. பழக்க தோஷம்… இந்த இடத்தில் இறக்கி விட்டால் நான் எப்படியோ வீட்டுக்குப் போய்ச் சேருகிறேன்.” 

“வேண்டாம், இந்த நேரத்தில் குடிகாரர்கள் தொல்லையி ருக்கும். நானே கொண்டு போய் விடுகிறேன்.” அவளின் இரக்க சுபாவம் அவன் மனதைத் தொட்டது. 

“பிலிப் எனது போய் பிரண்ட் இல்லை. நீண்ட கால சினேகிதன். எனது தகப்பனும் அவனது மாமாவும் வியாபாரக் கூட்டாளிகள்…. நீண்ட காலமான உறவு…..’ அவள் விளக்கம் சொன்னாள். அவன் கேட்டுக் கொண்டிருந்தான். 

“நீங்கள் பிலிப்புடன் என்னைச் சேர்த்துப் பேசியது எனக்கு ஆச்சரியமில்லை. ஆனால் இந்தியரான…சாரி இலங் கையரான உங்களிடமிருந்து முற்போக்கு விதமான நோக்கு இருக்குமென்று நினைத்தேன். உங்கள் கலாச்சாரத்தைப் பொறுத்தவரையில் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் பழகுவதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது சர்வ சாதாரணம் என்று நினைக்கிறேன். நான் வித்தியாசமான உலகத்தில் பிறந்து வளர்ந்தவள்.உங்களின் கலாச்சாரத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. எனது கலாச்சாரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாது…” 

“மனம் விட்டுப் பேசியதற்கு நன்றி” 

கார் ஹாம்ஸ்ரெட்ஹீத் என்ற லண்டனிலுள்ள பெரிய பார்க்கைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. 

“எனக்குப் பிடித்த இடங்களில் ஒன்று” 

அமைதியான அந்த இரவில் அந்தப் பார்க்கின் நடுவே போவது ஏதோ கனவில் நடப்பது போலிருந்தது. 

அவன் நேரத்தைப் பார்த்தான். இரவு பண்ணிரண்டாகி விட்டது. அம்மாவுக்குச் சொல்லி விட்டுத்தான் வந்தான். ஆனாலும் அவள் இவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு தவிப்பாள். 

“அம்மா தேடுவாளா” 

அவன் ஆமாம் என்பது போல் தலையாட்டினான். 

“நீங்கள் அதிர்ஷ்டசாலி” அவன் பெருமூச்சு விட்டாள்.

“உங்களுக்கு அம்மா இல்லையா” 

”அம்மா இருக்கிறாள். மிகவும் அழகான அம்மா…” இன்னுமொருதரம் பெருமூச்சு. கார் இப்போது ஹைகேட் பக்கம் திருப்பிக் கொண்டிருந்தது. 

“எனது வீட்டைக் காட்டத்தான் இந்தப் பக்கம் கொண்டு வந்தேன்.” 

காரை நிறுத்திவிட்டு ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டினான். பணக்காரர்கள் வாழும் பக்கம் பணக்கார வீடு? மௌனமாகத் தெரிந்தது. 

“வீட்டில் யாருமில்லை. அப்பா கென்யாவில் இருக்கிறார். வியாபார விடயமாகப் போய் விட்டார். அம்மா…” 

அவள் சொல்ல வார்த்தைச் சொல்லாமல் ஒரு வினாடி மௌனமாக இருந்தாள். பார்வை வெறித்திருந்தது. 

“போவோமா.” 

கார் ஹரிங்கேய் நகரை அடைந்தபோது நேரம் இரவு கிட்டத்தட்ட ஒரு மணியாக இருந்தது. 

இவளின் கார் வீட்டுக்கு முன்னால் நிற்கவும் அவனின் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு அவன் சகோதரி கீதா, மைத்துனர் மகாலிங்கம், குழந்தை சத்தியா என்போர் வெளி யில் வரவும் சரியாக இருந்தது. 

அவர்களைத் தொடர்ந்து அம்மாவும் வந்தாள். ”அம்மா இது என்னுடன் படிக்கும் டெவீனா ஸேர்லிங், லிப்ட் தந்தாள்.” அத்தனை பேரும் அவளை ஏறிட்டுப் பார்த்தனர். 

அத்தியாயம் – 6

அம்மா ராகவனுடன் முகம் பார்த்துப் பேசிப் பல நாட்களாகி விட்டன. டெவீனாவுடன் நடுச் சாமத்தில் மகனைக் கண்ட அதிர்ச்சி அவளை மிகவும் தாக்கி விட்டது என்பது அவனுக்குப் புரிந்தது. 

மகாலிங்கம் தனக்குத் தெரிந்த கற்பனைகளையெல்லாம் விரித்து விட்டிருக்கலாம். அம்மாவின் உலகம் ராகவனின் உலகத்திலிருந்து அப்பாற்பட்டது என்பது அவனுக்கு தெரியும். ‘எனது சினேகிதன் ஒருத்தனுக்குச் சுகமில்லாமல் வந்தது. அதுதான் அவனைக் கொண்டு போய் சவுத் லண்டனில் சேர்த்துவிட்டு வந்தோம்.” 

அவன் அம்மாவுக்குச் சொன்னதை எவ்வளவு தூரம் நம்பினாள் என்று தெரியாது. 

நான்கு குழந்தைகளும் ஏதோ கடவுள் துணையால் நல்லப டியாக வாழ்கிறார்கள் என்று நிம்மதியாக இருந்தவனுக்குக் கடந்த சில மாதங்களாக நிம்மதியில்லை என்பது முகத்தில் தெரிந்தது. 

அவனுக்கு அம்மாவுக்கு முழுக்க முழுக்கத் திருப்தி தரும் வழியில் நடந்து கொள்வது என்பது முடியாத காரியமாகப் பட்டது. அதனால் பெரும்பாலும் தேவையானவற்றை மட்டும் பேசிக் கொள்வது என்று முடிவு கட்டிக்கொண்டான். கல்லூரி யில் இவர்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து விட்டார்கள். 

ராகவனின் பிரிவில் பிலிப், டெவீனா, ஸ்ரீவன், மைக்கல், ஜேன் என்று ஆறுபேர் குறிப்பிடப்பட்டார்கள். 

மைக்கல் ஒலிப் பதிவில் மிகவும் திறமையானவன் என்று தெரியும். 

திரைப்படப் பட்டப் படிப்புக்கு வருமுதலே ஒரு மியுசிக் கொம்பனியில் வேலை செய்தவன். 

ஸ்ரீவன் அமெரிக்காவில் ஒரு நாடகக் கம்பனியில் மிக வும் அனுபவம் பெற்றவன். அத்துடன் ஸ்கிரிப்ட் எழுதுவதில் மிகவும் திறமையானவன். 

ராகவனும் டெவீனாவும் தங்கள் பிரிவில் கமரா வேலை செய்வதை விரும்பினார்கள். 

ஜேன் புரடக்ஸனின் பெரும்பாலான வேலைகளில் பங் கெடுத்தாள். 

ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு விரிவுரையாளர்கள் பொறுப்பாக இருப்பார்கள். 

இவர்களின் பிரிவுக்கு மிஸ்டர் ஜான் பேர்ன்ஸ்டைன் பொறுப்பாக இருந்தது, ராகவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரைக் கண்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டான். 

“உங்கள் குறுப்புக்குப் பொறுப்பாக இருப்பதில் மிகவும் சந்தோசப்படுகிறேன். வித்தியாசமான கலாச்சாரப் பின்னணி, குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்களின் கலைச் சிந்தனை எப்படித் திரைப்படமாகப் பிரதிபலிக்கப் போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” 

ராகவனுக்கு அவர் சொன்ன வார்த்தைகள் சாதாரணமான வையாகத் தெரியவில்லை. ஒரு தீர்க்க தரிசனமான வார்த்தைக ளாகப் பட்டன. 

‘பிலிப்பும், டெவீனாவும் மிகவும் வசதியான ஆங்கில வர்க்கத்திலிருந்து வந்தவர்கள். மைக்கல், நீ, என்போல கலாச் சார வேறுபாடுகள் மட்டுமல்ல, குடும்ப உறவுகளிலும் வித்தி யாசமாக வளர்க்கப் பட்டவர்கள்; ஸ்ரீவன் தன்னை முதன் நாளே யாரென்று அடையாளம் காட்டி விட்டது நிம்மதியான விடயமாக இருக்கிறது. இல்லை என்றால் சில மாணவர்கள் சில கால கட்டத்தில் ஸ்ரீவனைப் புரிந்து கொள்ளாமல் விட்டால் அந்த நிலையும் பல குழப்பங்களையும் கொண்டு வரலாம்.” 

ஸ்ரீவன் அடிக்கடி சுகவீனமாக வரும் நிலையை அதிபருக் குச் சொல்லலாமோ என்று ஒரு கணம் யோசித்தான்.ஆனாலும் அது ஸ்ரீவனின் தனிப்பட்ட விடயம் என்று மெளனமானான். 

“ராகவன் உன்னிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். எங்கள் கல்லூரிக்குப் பெருமை தரவேண்டும் என்று எதிர்பார்க் கிறேன். உனது மனம் திறந்து பேசும் சுபாவம் எனக்கும் பிடித்து விட்டது. இனி வரும் மூன்று வருடங்களையும் மிகவும் பொறுப்பான முறையில் பாவிக்கப் பழகிக் கொள். என்னிடம் எதுவும் தேவையாயிருந்தால் எந்தத் தயக்கமும் இல்லாமல் கட்டாயம் வரவும்.” 

நன்றி சொன்னான். தனக்குச் சொன்ன அறிவுரைகளை மற்ற மாணவர்களுக்கும் சொல்லியிருப்பார் என்று அவன் உணர்ந்து கொண்டான். 

”கெட்டித்தனமான இரண்டு பெண்கள் உனது குறுப்பில் இருக்கிறார்கள். நல்ல புரடக்ஸனாக ஏதும் செய்யுங்கள். முதலாம் வருடத்திலிருந்து உங்கள் திறமையை அவதானித்துக் கொண்டிருப்பார்கள்.” 

புவனா அறிவுரை சொன்னாள். அன்ரோனியோ தன்னு டைய சினேகிதன் ஒருத்தனின் புரடக்ஸனுக்குக் கமரா வேலை செய்ய டெவீனாவையும் ராகவனையும் உதவி செய்ய முடி யுமா என்று கேட்டது ராகவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

“நாங்கள் எங்கள் முதலாவது டேர்ம் புரடக்ஸன் இன்னும் தொடங்கக் கூட இல்லை…” ராகவன் தயங்கினான். 

“தெரியும். டெவீனாவின் 8, M.M. புரடக்ஸனைப் பார்த் தேன். அவள் இங்கு வருவதற்காக எடுத்த பத்து நிமிட புரடக்ஸன் பார்த்திருப்பாய் என்று நினைக்கிறேன். 

அன்ரோனி கேட்ட போது தான் டெவீனாவின் 8. M.M. படத்தைப் பார்க்கவில்லை என்று சொன்னான். 

“பியுட்டிபுல் வேர்க். தகப்பனின் தேயிலைத் தோட்டத்து வேலையாட்களை எடுத்த படம். என்னவென்றுதான் அப்படி ஒரு பணக்கார மனுஷனுக்கு இப்படி ஒரு இளகிய மனம் படைத்த பெண் பிறந்தாளோ தெரியாது.” 

அன்ரோனியோ தான் ஒரு இடது சாரி என்றும் தனது குடும்பம் இத்தாலியில் காலம் காலமாக கம்யூனிஸ்டுகளாக இருந்து முசோலியின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர் கள் என்றும் சொல்லியிருக்கிறான். 

பிலிப்பை மைக்கலுக்குப் பிடிக்காது, ஸ்ரீவனை ஏனோ தானோ என்று நடத்துபவன் பிலிப், டெவீனா பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவள் என்று கிண்டலடிப்பவன். ஜேன், இவர்களுடன் சேர்ந்து வேலை செய்வது பிரச்சினையாக இருக்கப் போகிறதா அல்லது சுவாரசியமாக இருக்கப் போகிறதா என்று ராகவனுக்குத் தெரியவில்லை. 

முதலாவது புரடக்ஸனுக்குத் தேவையான முதல் மீட்டிங் ஸ்ருடன்ஸ் பார் மூலையில் நடந்தது. மாணவர்களின் கூச்சல் ஒரு பக்கம், குடிப்போரின் கும்மாளம் ஒரு பக்கம், அத்துடன் சிகரெட் புகைப்பிடித்தாலே டெவீனாவுக்குப் பிடிக்காது. 

“யாருக்கும் ஆட்சேபனையில்லை என்றால் எனது பிளாட் டில் அடுத்த மீட்டிங்குகளை வைத்துக் கொள்ளலாமே” 

ஸ்ரீவன் எல்லோரையும் பார்த்துச் சொன்னான். ‘நிறை யப் பீர் தருவாயா?” மைக்கல் கேட்டான். 

“நீ தேவையான அளவு பீர் வாங்கிக் கொண்டு வா எனக்கு ஆட்சேபனையில்லை.” ஸ்ரீவன் திட்டமாகச் சொன்னான். 

“மைக்கல் புகைபிடிப்பதானால் வீட்டுக்கு வெளியில் – சாரி பிளாட்டுக்கு வெளியில் போய்ப் பிடிக்கணும்” டெவீனா உத்தரவு போட்டாள். 

மைக்கல் முணு முணுத்துத் தன் அதிர்ப்தியைத் தெருவித் துக் கொண்டான். 

மகன் அடிக்கடி லேட்டாக வருவது அம்மாவுக்குப் பிடிக்க வில்லை என்பது அவளின் பேச்சிலிருந்து புரிந்தது. 

“நீ எப்போது இந்தப் படிப்பைத் தொடங்கினாயோ அப்போதே எனக்கு நிம்மதி போய் விட்டது.” 

அம்மா இப்படி சலித்துக் கொண்டது அவனுக்கு ஒரு விதத்தில் ஆச்சரியமாக இருக்கவில்லை. இவன் திரைப்படக் கல்லூரிக்குப் போனதே அவளால் புரிந்து கொள்ள முடியாதது என்று அவனுக்குத் தெரியும். 

ஒரு நாள் பின்னேரம் அவன் வீட்டுக்கு வந்தபோது மைதிலி வந்திருக்கவில்லை. பெரும்பாலான நேரங்களில் சத்தியா தன் பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருப்பாள். அவளுமில்லை, அம்மா தனியாக இருந்தாள். ராகவனுக்குப் பிடித்த சமையல் செய்து கொண்டிருந்தது, சமயலறையிலி ருந்து வந்த மணத்திலிருந்து தெரிந்தது. 

அவள் முகம் கொடுத்துப் பேசாததற்குக் காரணம் தெரிந்தாலும் அவனாக அது பற்றி பேசத் தயாரில்லை. 

“முகம் கழுவிக் கொண்டு சாப்பிட வா”

வெந்தயக் குழம்பு, பருப்புக்கறி, வெண்டிக்காய்ப் பொரி யல், பப்படம், ரசம், வடை அத்தனையும் செய்திருந்தாள் அம்மா. 

“கணேஸ் இந்தக் கிழமையும் வரல்லயா” ஏதோ பேச்சுக் காகக் கேட்டான். கணேஸ் வேல்ஸ் நாட்டில் வேலை செய்கி றான். கொம்பியூட்டர் எஞ்சினியர், எப்போதும் பிஸி என்று சொல்கிறான். 

அதற்கு மேலான பிஸி என்னவென்று தெரியும். வேல்ஸ் நாட்டில் ஒரு தமிழ் வீட்டிற் தங்கியிருக்கிறான். ராகவன் குடும்பத்தினருக்கு எத்தனையோ வருடமாகத் தெரிந்த குடும்பம். 

தியாகராஜா மாமா, வேல்ஸ் நாட்டில் ஒரு யூனிவர்சிட்டிப் பேராசிரியராக இருக்கிறார். அவர் மகளின் அழகு கணேசுக்குப் பிடித்து விட்டது என்று அவன் பேச்சிலிருந்து தெரிந்தது. 

அம்மாவுக்கு அது பற்றி உள்ளார சந்தோசம் என்று தெரியும். கமலாவின் கண்களின் கவர்ச்சி அலாதியானது. 

அவள் பதினைந்து வயதாகவிருந்தபோதே பாதையில் போவோரைத் திரும்பிப் பார்க்க வைத்தவள். கல கல வென்ற பெண்மை, சாந்தமான கண்கள், கெட்டிக்காரப் பெண். டென் ரிஸ்ட் ஆகப் பட்டமெடுத்து வேலை செய்கிறாள். 

தியாகராஜாவின் ஒரே ஒரு மகள். மகன் ஒருத்தன் டொக்ட ராகப் படித்துக் கொண்டிருக்கிறான். 

அம்மாவின் நிம்மதிக்கு இப்போது தான் தொல்லை தருவதாக அம்மா நினைப்பது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. 

டெவீனா வந்த நாளிலிருந்து அம்மாவின் முகத்தில் சந்தோசமில்லை. 

“வெந்தயக் குழம்பு நல்லாயிருக்கும்மா.” 

“அப்படியா” அவள் குரலில் கிண்டல். 

“உங்கள் சமயலுக்கு யார் போட்டி போடுவார்கள் அம்மா” 

”உனது வெள்ளக்காரப் பெட்டைக்குத் தமிழ்ச் சாப்பாடு சமைக்கத் தெரியுமா” அம்மாவின் குரலில் இப்போது கிண்ட லில்லை. அவனுக்கு எரிச்சல் வந்தது. ஒரு நடுச்சாமம் காரில் கூட்டிக்கொண்டு வந்த பெண்ணை அவனின் வாழ்க்கையுடன் இணைக்கிறாளே! ‘ஒரு ஆணுடன் ஒரு பெண் பழகினால் அதற்குக் காரணம் ஒன்று மட்டும்தானா’ டெவீனா கேட்ட கேள்வியை அம்மாவிடம் கேட்க வேண்டும் போலிருந்தது. 

அவன் மறுமொழி சொல்லவில்லை. சொல்ல விருப்ப மில்லை, அம்மாவுடன் தேவையில்லாத பேச்சுக்கள் வைத்துக் கொண்டால் வீணான மனக்குழப்பங்கள்தான் பெருகும் என்று தெரியும். 

இருவரின் மௌனத்தைக் கலைப்பதையும் போல் டெலி போன் மணியடித்தது. 

இவன் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் அம்மாதான் எடுத் தாள். பின்னர் இவனைப் பார்த்தாள். “உனக்குத்தான் டெலி போன்” அவள் குரலில் எரிச்சலும் ஆத்திரமும் இழையோடி யது. அவன் அம்மாவை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு அம்மாவிடமிருந்து டெலிபோனை வாங்கினான். 

“ஹலோ ராகவன், ஹரிங்கேயில் பெரிய சண்டை என்று T.V. யில் காட்டுகிறார்கள். கவனமாக இரு” டெவீனா பதற்றத் துடன் சொன்னாள். 

ஜோய்ஸ் கார்டினர் என்ற கறுப்புப் பெண் போலிஸாரால் தாக்கப்பட்டாள். ஒரு கறுப்புப் பெண்ணை ஆங்கிலேயப் போலிஸார் அநியாயமாக நடத்தியதால் ஆங்கிலேயப் போலி ஸாருக்கும் கருப்பு இளைஞர்களுக்கும் தகராறு நடந்து கொண் டிருந்தது தெரியும். அந்தக் கலவரம் அன்றிரவு பூகம்பமாக வெடித்தது. 

ராகவன் அன்றிரவு பெரும்பாலும் டெலிவிஷனுக்கு முன் உட்கார்ந்திருந்தான். 

ஹீத் பிளேக் என்ற போலிஸ்காரரைக் கறுப்பு இளைஞர் கள் அடித்துக் கொலை செய்து விட்டதாகச் செய்தி சொல்லப் பட்டது. 

கட்டிடங்கள் உடைக்கப்பட்டன. பொலிஸ்கார்கள் எரிக்கப்பட்டன. 

காலம் காலமாக அடக்கி வைத்திருந்த கறுப்பு இளைஞர்க ளின் ஆத்திரம் அன்றிரவு கரை புரண்டது. 

மனிதர் ஒருத்தரை ஒருத்தர் அடக்க நினைத்தால் கடைசி யில் ஒடுக்கப்பட்ட மக்கள் கொதித்தெழுவார்கள் என்பதற்கு அடையாளமாக அன்று ஹரிங்கேய் நகரம் எரிந்தது. 

இவன் வீட்டுக்கு ஒரு மைலுக்கு அப்பால் கலவரம் நடந்தாலும் பொலிஸ்கார்களின் சைரன்களும் போலிஸ் ஹெலிகொப்டர்களின் பயங்கர அலறல்களும் பயங்கரமான நிலையைப் பிரதிபலித்தது. 

டெவீனா இன்னொரு தரம் போன் பண்ணினாள்.”நிலமை சரியில்லா விட்டால் நாளை கொலிஜ்ஜுக்கு வராதே…. நான் வேண்டுமானால் வந்து கூட்டிக் கொண்டு வருகிறேன்.” 

“வேண்டாம்” அவன் அவசரத்துடன் மறுத்தான். 

– தொடரும்…

– அவனும் சில வருடங்களும் (நாவல்), முதல் பதிப்பு: ஜூலை 2000, குமரன் பப்பிளிஷர்ஸ், சென்னை.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *