அழகிலும் அழகு
கதையாசிரியர்: கி.சந்திரசேகரன்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 166
(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று பொழுது புலர்ந்து வானமும் வையமும் தனிச் சோபையுடன் தோற்றம் அளித்தன. வானம் முழுவதும் பட்சிகளின் பல விதக் கீதங்களும், காற்றின் மெல்லிய வீச்சில் கலந்து மணக்கும் மலர்ப் பரிமளமும் நிறைவின் பொலிவை விளம்பரமாக்கின.
குடிலில் மகரிஷி அத்திரி அநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அரைக் கண்ணால் எதையோ எதிர்பார்க்கும் குறிப்புடன் இங்கும் அங்குமாய்க் கவனித்துக்கொண் டிருந்தார். உள்ளே அனசூயை நரைத்த கூந்தலை வாரி அள்ளிச் செருகியபடியே மகரிஷியின் தினசரி பிற்பகல் ஓமங்களை வளர்ப்பதற்கான சடங்குகளில் ஈடுபட்டிருந்தாள்.
இரண்டொரு சீடர்கள் ஓமத்துக்கு வேண்டிய நெய் சமித்து முதலிய பண்டங்களை நெருப்புக் குண்டத்தின் அருகில் ஒழுங்காக வைத்துக்கொண் டிருந்தார்கள். அமைதி நிலவிய ஆசிரமத்தில் துளியும் தூய்மையைக் குறைக்கும் பொருள் ஏதும் காணப்படவில்லை. சாணம் போட்டு மெழுகிய இடங்களில் எங்கும் அழகழகான வெள்ளிய கோலங்கள் கண்ணைப் பறிக்கும் பாங்குடன் மங்கலத்தையே நினைப் பூட்டின.
எதையோ யோசித்தவராய் மகரிஷி உள்ளே எட்டிப் பார்த்துப் புன்னகை பூத்தார். கிழவி முதிர்ந்த வயசிலும் சிரமத்தைப் பாராது தன் பதிக்குப் பணியாற்றும் பொறுப்பில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். ஆனால் மகரிஷியின் வதனத்தில் நெளிந்த சிரிப்புக்குக் காரணம் கிழவியின் தோற்றம் அல்ல. அவருடைய மனம் பழைய சம்பவங்களைப் புரட்டிக் கொண்டும், புதிய தொன்றை எதிர்பார்த்தும் நின்றதுதான்.
பழைய நினைவுகள் கண் முன்னே நாடக மேடையில் காணப்படும் காட்சிக்கு ஒப்ப ஓடி மறைந்தன. அனசூயையின் தந்தையார் உயர்ந்த வம்சத்தைச் சேர்ந்த தனவந்தர். அவள் தாய் அரிய வித்தைகள் பயின்று சாஸ்திரம் கற்றவரின் மகள். இவ்விருவருக்கும் ஒரே புதல்வி யாய் அனசூயை பிறந்து வளர்ந்தாள்.
ஒரு நாள், அவள் தந்தையிடம். ரிஷிகுமாரன் ஒருவன் குருவின் உத்தரவை மேற்கொண்டு. யாகங்களுக்கெனச் சுவர்ணம் யாசனை செய்ய வந்தான். முகத்தில் நல்ல தேசு ஒளிர்ந்தது. அவனுடைய குணமோ உடலமைப்பின் ஒழுங்கைவிட இன்னும் அதிகமாய்ப் பாராட்டும்படி தோன்றியது.
அனசூயையை யாருக்குப் பாணிக்கிரகணம் செய்து கொடுப்பது என்பதில் தாய் தந்தையர் இருவருக்கும் ஒரே கவலை. ஏனெனில் அவள் பருவ வயசு கிட்டுவதற்குள்ளாகவே எல்லையற்ற வைராக்கிய மனப்பாங்கைப் பெற்றிருந்தாள்; அதுவே அவர்கள் கவலைக்குக் காரணம். ரிஷிகுமாரனைப் பார்த்தது முதல் அனசூயையின் தந்தைக்கு, இவனை ஏன் மாப்பிள்ளை ஆக்கிக்கொண்டு உயர்ந்த சம்ரட்சணையை மகளுக்குச் செய்யலாகாது?” என்று ஓர் எண்ணம் உள்ளே எழும்பி எழும்பிச் சிதறியது. எண்ணம் வலிமை பெறாததற்குக் காரணம். அவள் தாய்க்கு ரிஷியின் மனைவியாய்த் தன் ஒரே மகள் ஆவதில் விருப்பமில்லாததே. ஆனால் கடவுளின் திருவுள்ளத்தை விலக்குவார் யார்?
அதிகாலையில் அனசூயை தந்தையின் பூஜைக்காக மலர் கொய்யத் தோட்டத்தில் நுழைந்தாள். அச்சமயம் ரிஷிகுமாரன், முழுவதும் சேகரிக்க வேண்டிய வேள்விக்கான சுவர்ணத்தை இன்னும் திரட்டவில்லை யாகையால், ஒரு மூலையில் ஒதுங்கிப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அனசூயை அவனது தெளிவான வதனத்தை நின்று கவனித்தாள். அவள் தன் வயசுக்குள்ள மனக்கிளர்ச்சி ஏற்பட்டதை அறியலானாள். ‘ஆம், இவரே எனக்கு மாலையிட வேண்டியவர்’ என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டவள், தந்தையின் கருத்தும் அவ்விதம் இருக்கவே. மனவெழுச்சியுடன் பொழுது போக்கலானாள். ஆனால் அத்திரி என்ற அந்த இளைஞன். ‘கல்யாணமா? எனக்கா? கிடையாது? நான் நித்தியப் பிரம்மசாரியாகவே இருக்கப் போகிறேன்’ என்றான். அவனுடைய குருவை அணுகி அனசூயையின் தந்தை விண்ணப்பிக்க, அவர், ”அப்பனே! உன் குருகுலவாசம் முடிந்து விட்டது. உன் பிரயத்தனத்தினால் வேண்டிய சுவர்ணமும் திரட்டித் தந்து வேள்வியும் முடிந்துவிட்டது. என் ஆசிகளுடன் அனசூயையை நீ ஏற்பதுதான் உனது வருங்கால வாழ்க்கைக்கு நல்லது. என் விருப்பத்தைத் தட்டாதே. அனசூயை மனத்தினால் உன்னை வரித்தபின் வேறு ஒருவனையும் அவள் விரும்பாள். அவ்விதம் ருப்பதுதான் இந்நாட்டுப் பெண்களின் பண்பாட்டின் உயர்வுக்குக் காரணமாகும். இனித் தாமதியாதே” என்றார்.
என்ன செய்வான் இளைஞன்? தனக்கு மனைவியாகப் போகிற வளை மணப்பதற்கு முன் ஒரு தடவை சந்திப்பதில் தீவிர வேகம் கொண்டான். தனிமையில் அவளிடம், “பெண்ணே, உன் இதயம் தேடு வதற்குரியவன் என்னைப் போன்றவன் அல்ல. நான் வனவாசி. மேலும் என்னுடன் இல்லறம் நடத்துவதில் கஷ்டமுண்டு; என்னிடம் நீ உறவு வைத்துக் கொள்வதில் சங்கடம் இருக்கலாம். நான் கடவுளிடம் இனிப் பிறவாமையை வேண்டுகிறேன். என்னோடு நீ வாழ்வது உன் ன்பங்களுக்கு இடைஞ்சலையே உண்டாக்கிக் கொள்வதாகும் என்றான்.
அனசூயை யோசிக்கவே இல்லை? “தங்களை நான் வரித்து விட்டேன். இனித் தங்கள் உத்தரவுப்படி நடப்பது ஒன்றே என் குறிக்கோள். என்றைக்காவது தாங்கள் இல்லறம் வேண்டுமென்று விரும்பினால் அன்று நான் தடை செய்யேன். ஆயினும் என் முழு நேரத்தையும் உங்கள் தொண்டில் கழிப்பேன். தாங்கள் தவம் கிடைக்கையில் நானும் கடவுளை வழிபடுவேன். இது நிச்சயம்” என்று வாக்குறுதி கொடுத்தாள்.
இவர்கள் இருவருக்கும் நடந்த சம்பாஷணையை வேறு எவரும் அறியாததனால், கல்யாணமானபின் எல்லா விதச் சௌகரிங்களையும் செய்ய அவள் பெற்றோர் முனைந்தனர். ஆயினும், அனசூயை அவர் களைத் தடுத்துவிட்டாள். மணக்கோலம் புனையும்போது ஆபரணங் களைத் தன் தாய் அணிவதற்கு நெருங்கி வந்ததும், ”அம்மா, இவற்றை அவர் வெறுப்பார். வேண்டுமானால் இவற்றைப் பேழையில் பத்திரப்படுத்தி வைத்துச் சீதனமாய்க் கொடுத்துவிடு. அவர் விரும்பும்பொழுது அவற்றை அணிவேன். இல்லையேல் என்னை ஆட்கொண்ட தெய்வம் என்றைக்கு என்னிடம் வருமோ அன்று அதற்கு அவற்றை அணிவித்துப் பார்த்துக் களிப்பேன்” என்று கூறி, தாய் தன்னிடம் தந்த பேழையை இரு கரங்களாலும் பெற்றுக்கொண்டாள். அவ்விருவரும் உல்லாச மாகவே தங்கள் இருப்பிடத்துக்குப் போயினர். ஆனால் அத்திரி தனிமையில் அவளிடம் ஒன்று கேட்டுக்கொண்டார்: “பிரியே, மற்ற எல்லாரையும் போல நாமும் இருப்போமா, அல்லது சரீர சுகத்தை நாடாது உள்ளத்து உவகையைப் பெரிய லட்சியமாக்கிக் கொண்டு தவ வாழ்க்கையில் ஈடுபடுவோமா? துளியும் சந்தேகமின்றி உன் உள்ள நோக்கை என்னிடம் வெளியிட வேண்டும்” என்றார்.
அனசூயை பதில் சொல்லும்பொழுது முகத்தில் ஒருவிதமான சந்தேகத்தின் நிழலே விழாமல்தான் இருந்தது.’ ‘ஆம், சுவாமி,இல்லற வாழ்க்கை எவ்வளவோ உயர்ந்ததாயினும் உள்ளத்துள்ளே இருப்பதைத் தேடி அடைவதற்கு இல்லறமும் தடையாகலாம். நாம் இருவரும் விரத வாழ்க்கையையே மேற்கொள்வோம். ஆனால் ஒன்று மட்டும் தாங்கள் எனக்கு அருள் வேண்டும். என் அழகு அழிவுடையது. என்றென்றும் அழிவற்ற அழகு என்னை அணுகினாலன்றி என் ஆசை பூர்த்தியாகாது. உருவற்ற பரப்பிரம்மம் உருக்கொள்ளும்பொழுது நாம் இருவரும் அதை வணங்குவோம். அறிவு நிரம்பியதே அழகு என்று எண்ணும் ஆற்றலை எனக்குத் தாங்கள் முதலில் அருள வேண்டும். நான் அந்த நாளையே எண்ணிக் காத்திருப்பேன். சதை சுருங்கி, தலை நரைத்து, உடல் ஒடுங்கிவிட்டாலும் என் கரங்களால் அழகுத் தெய்வத்தை நானே அணிகளால் அலங்கரிக்கும் பேரின்பம் கிட்டுமாறு எனக்கு அருள வேண்டும்.
அத்திரி மகரிஷி தம் கைப்பிடித்தவளின் ஆர்வம் தம் ஆர்வத்தை விடவும் மேலோங்கி விளங்குவதைக் காணும்போது பிரமித்து விட்டார்.
ஆனால் அன்று தொடங்கி அவள் வரத்தை வழங்குவதற்குரிய காலத்தை எப்போதும் எதிர்நோக்கி இருந்தார்.
“அனசூயே!’
“சுவாமி!”
“இன்று விடியும் நேரத்தில் என் கண்முன் உருவங்கள் தெரிந்தன அவர்களில் இருவர் முனிவர் கோலம் பூண்டிருந்தனர். அவ்விருவருடன் மிகவும் ஆயாசமே தெரியாமல் துள்ளி ஓடிவந்த பெண்ணின் அங்கங்களில் அலங்காரங்களே அதிகம் காணவில்லை. அவளை அழகுபடுத்தியவை அவளது புன்னகையும், மனத்தில் எழுந்த களிப்புமே. இவ்விதம் வந்தவர்கள் வேஷம் தரித்தவர்களா அல்லது உண்மையிலே அவர்களும் நம்மைப் போன்ற தவ வாழ்க்கையில் ஈடுபட்டவர்களா என்று நான் நிர்ணயிப்பதற்குமுன் அம்மூன்று உருவங்களும் மறைந்தன. உனக்கு என்ன தோன்றுகிறது. சொல்!”
“சுவாமி, நான் எதைச் சொல்ல? தாங்கள் தெரிந்துகொள்ளாததா? ஆனால் ஒரு கணம் என் மனம் இன்புறுகிறது. கூட வந்த பெண்ணின் அலங்காரங்களற்ற தோற்றம் எப்படி இருந்தது? சொன்னால் நானும் தெளிவை எய்துவேன்”.
“சொல்லுகிறேன்” என்று ஆரம்பித்தவர் ஒரு கணம் நிதானித்துக்கொண்டு இரு கண்களையும் உள்நோக்கில் செலுத்தினார். பிறகு சொல்லுவார்:
”ஆம், அவளுக்கு அணிகளே இல்லை. ஒன்றிரண்டு மட்டும் காதுகளில் இருந்தன. கால்களிலும் பாதசரம் ஒலித்தது. மற்ற அலங்காரங்கள் இல்லை. னால் நீ சொன்ன பின்பே அவை இல்லை என்ற ஞாபகம் வருகிறது. ஏனெனில் அவளுடைய அழகெல்லாம் அவளுடைய உள்ளப் பெருக்கில்தான் மண்டிக் கிடந்தது. அவ்வளவு சந்தோஷம் தாண்டவமாடியது அவளிடம். அவள் யாரோ.தெரிய வில்லையே?”
அனசூயை இப்பொழுது கலகலவென்று நகை செய்தாள். அத்திரி மகரிஷி திடுக்கிட்டு அவளைக் கவனித்தார். “சுவாமி, தாங்கள் எவ்வளவு சரியாய்க் கவனித்திருக்கிறீர்கள்? கனவுதான அல்லது நனவில் கற்பனைதானா, தெரியவில்லை. இருப்பினும் என் உள்ளத்தில் ஏதோ கூறுகிறது, இன்று நமக்கு ஒரு பெருவாழ்வின் திவலை அநுப வத்துக்கு வரும் என்று. எல்லாம் சீக்கிரத்திலேயே தெரியும். ஆயினும் ஒன்றுதான் இன்னும் எனக்கு விளங்கவில்லை. என்னிடம் என் பெற்றோர்கள் ஒப்படைத்த பேழையைத் திறந்துகூடப் பார்க்க இடம் தராத என் மனம் ஏன் இன்னும் அதை வைத்திருக்க வேண்டும்? சரியான பாத்திரத்தினிடம் அதைக் கொடுத்துவிட்டால் ஒரு பொறுப்பு என்னை விட்டு நீங்கும். பளு ஒன்று சில வேளைகளில் என் மனத்தை அழுத்துகிறது. ஒருவித ஆசையையும் வளர்க்கா த என் உள்ளம் இந்தப் பேழையைச் சரியான இடத்தில் சேர்க்க வேண்டுமே என்று ஏன் உந்துகிறது? சுவாமி, இதனைத் தீர்த்து வையுங்கள்.”
“எல்லாம் அவனுடைய திருவிளையாடல். நமக்குக் காத்திருப் பதைத் தவிர, வேறு ஒன்றும் செய்வதற்கு உரிமை கிடையாது.”
சீடர்களில் ஒருவன் ஓடி வந்தான்; “குருநாதா. மூவர் எதிரே வந்துள்ளனர், அரண்யத்தின் எல்லையில். நம் குடிலின் பாதையிலேயும் வருவதற்குத் திரும்பினார்கள். டோடியும் வந்தேன். தங்களை அவர்கள் பார்க்க வருவார்களென்றே எண்ணுகிறேன். என்ன பொலிவு அவர்களிடம் காண்கிறது, தெரியுமா? மேனியின் வடிவமும், ஏறு போன்ற நடையின் காம்பீர்யமும் அவர்களை ரிஷிகள் மட்டுமல்ல, வேறு உலகில் வசிப்பவர்களாகவே தோன்றவைக்கின்றன. கூட வருகிறாள் ஒரு பெண். அவளை அவர்கள் பின்னும் முன்னுமாய்க் காத்து வருகிறார்கள். அவள் இடையே இருப்பதால் அவர்களும் தம்மிடையே புதையலொன்றைக் காத்துவருவதைப் போலக் கவனித்து வருகிறார்கள். குருநாதா! இங்கேதான் வருகிறார்களா என்று திரும்பவும் பார்த்து வரட்டுமா? உத்தரவு கொடுங்கள். நன்றாய் அவர்களைப் பார்த்து ந்து சரியாகக் கூறுகிறேன்” என்றான். அவனிடம் பரபரப்பு மட்டு மல்ல; காணாததைக் கண்டது போன்ற பிரமையும் கலந்திருந்தது.
அத்திரி மகரிஷி நின்றபடியே யோசித்தார். ஒரு முறை இமைகளை இறுக மூடினார். கண்ணுள்ளே முன் கண்ட அதே காட்சி யைத் திரும்பவும் காணப் பெற்றார். சிந்தை தெளிந்தவராய்ப் பகருவார்: ”குழந்தாய், போய்வா. அவர்கள் உன் வருகையை நினைந்து காத்திருக்க மாட்டார்கள். நான் அறிவேன்; இங்கேதான் நிச்சயம் வருவார்கள். இவ்வாறு சொல்விவிட்டு, அனசூயே!” என்று மூதாட்டியின் பக்கம் திரும்பினார். ஆனால் அனசூயையை அங்கே காணவில்லை. அவள் தன் கரங்களில் தட்டேந்தி வாயிலில் நிற்பதைப் பார்த்தார்.
“சுவாமி, அவர்களோடு வரும் பெண்தெய்வம் நான் காண விரும்பும் அழகின் உருவமாய்த்தான் இருக்க வேண்டும் என்று என் மனம் கூறுகிறது. நான் பேழையைத் திறக்காமல் பாதுகாத்திருந்ததும் வீண் போகவில்லை” என்றாள்.
சக்கரவர்த்தி திருமகன் ராமன் முன்னும், டையே சீதையும், லட்சுமணன் பின்னேயும் ஒருவர் பின் ஒருவராய் வாசலில் வருவதைக் கண்கொள்ளாச் சேவையாய் மகரிஷியும் அவர் பத்தினியான மனைவியும் பார்த்துக் கண்களால் உண்டனர்.
ராமன் சிரசைத் தாழ்த்திக் கரம் குவித்துப் பணிந்து வணங்கினான். சீதை கீழே விழுந்து பெரியவர்களின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். லட்சுமணன் ராமனைப் போலவே செய்துவிட்டு மிகவும் அடக்க ஒடுக்கமாய்த் தூரத்தில் நின்று கொண்டான்.
“தசரதருடைய அருமைக் குமாரர்களா நீங்கள்? எனக்கு நீங்கள் கானகம் வந்த விவரம் தெரியவந்தது. அதோ என் மனைவி அனசூயை நிற்கிறாள். அவளை முதலில் நீங்கள் நன்கு அறியவேண்டும். பல காலம் செய்த தவங்களெல்லாம் உருக்கொண்டவள் அவள். அவளை நன்கு அறிவீர்களானால் உங்கள் வனவாசமும் பயனுடைய தாகும். உன் தேவியை, ராமா. முதலில் அந்த மூதாட்டியிடம் நெருங்கிப் பழகச் சொல்லு” என்றார். கனிவும் களிப்பும் ததும்பும் மொழிகளில்.
“தேவி, உன் செவிகளில் விழுந்தனவா? உனது பாக்கிய மெல்லாம் இன்றே முழுவதும் வந்து கூடும். உடனே மூதாட்டியை அணுகி உன் உபசாரங்களை யெல்லாம் அவரிடம் தரிவி; அவர் சொற்படியும் நட” என்றான்.
சீதை தாவி அனசூயையை வணங்கி நின்றாள். கிழவி வாய் திறவாமலே அசையாமல் சீதையைத் தலையிலிருந்து கால்வரையில் கூர்ந்து கவனித்தாள். தன்னை ஆழ்ந்து கவனிக்கும் பார்வையைக் கண்ட தேவி முகம் சிவந்து, வெட்கி, கால்கள் கீழே பாவாமல் இங்கும் அங்குமாய்த் தடுமாறி நின்றாள். அனசூயை வாய் திறந்தாள்; முத்துக்களைச் சொரிந்தாள்; உவமைகளைக் கொட்டினாள்; உலகையும் தன்னையும் மறந்தாள்.
“அடி என் கண்ணே, உனக்கு இத்தனை அழகைக் கொடுத்த தெய்வம் என்னிடம் அல்லவா உன் அங்கங்களுக்கென்று ஆபரணங்களை வைத்துப் பத்திரப்படுத்தியிருக்கிறது? உன், உள்ளழகைக் கண்டேன், அம்மா ! எந்தப் பெண்ணும் செய்ய இயலாத காரியத்தை அல்லவா நீ சாதித்திருக்கிறாய்? கணவன் பெருமையும் புகழும் பணமும் உடைய வனானால் எல்லாப் பெண்களும் கூடத்தான் இருப்பார்கள். ஆனால் அவனுக்கு முன் அவற்றைத் தானும் துறக்கும் மனைவியை எவனும் அடைந்ததில்லை, அம்மா. என் கணவர் என்னை வரித்தபொழுது, நாங்கள் இருவரும் ஓர் உடன்பாடு செய்து கொண்டோம். ஒருவரை ஒருவர் அவரவர் தவங்களிலிருந்து வழுவாது பார்த்துகொள்ள வேண்டுமென்று. ஆனால் உன்னைப் போல். இடுக்கண் எது வரினும் சரி, காடும் வீடும் ஒன்றென்று நினைக்கும் தீர்மானத்தை மேற்கொள்வதை யார் இது வரையும் கண்டிருக்கிறார்கள்? அரசன் மகள் நீ. உன் பாதம் நோக நீ நடந்து வந்திருக்கிறாய். ஆனால் உன் கால் விரல்களில் துளியும் புண்ணோ, காயமோ காணவில்லையே! மனத்தில் இல்லாதது உடலில் மட்டும் சம்பவிக்குமா? அம்மா, உன் பேற்றை என்னவென்று சொல்லுவேன்?”
சீதையின் அங்கமெல்லாம் வேர்த்தது. எதனால் பெரிய கிழவி, மகாபதிவிரதையான அனசூயை, இவ்விதமெல்லாம் தன்னைப் பாராட்டு கிறாள் என்று தீராத யோசனையும் வேதனையும் உண்டாயின அவளுக்கு. உன் கதையைச் சொல்லு; கேட்க என் காதுகளை நான் தீட்டிக்கொள்கிறேன்” என்றாள் கிழவி.
“என் பாக்கியமெல்லாம் என் கணவரைப் பெற்ற மகானின் அருளினால் தான். என் தந்தை வைத்துப் பூசித்த சிவதனுசை ஒருவரும் வளைக்கக்கூட இயலாதபொழுது, என் பதி அதை வளைத்து ஒடித்து விட்டார். உடனே தாம் சொன்னதை மெய்யாக்க என் பெற்றோர் முன்வந்தனர். கையில் தங்கப் பாத்திரத்தில் தீர்த்தத்துடன் கன்னிகா தானம் செய்ய நின்ற என் தந்தையை என் கணவர் கவனித்துவிட்டு, ஐய, என் தந்தையார் உத்தரவின்றி உம் மகளை மணக்க என்னால் இயலாது. அவரிடம் தெரிவித்து, அவர் சம்மதித்தால்தான் நான் இவளை ஏற்பேன்” என்றார். தந்தையினிடம் கெளரவமுள்ளவர் என் பதைக் கண்டு மனம் ஒரு பக்கம் பூரித்தாலும், என் விதி காரணமாக என்னை அவர் தீண்டாதபடி அவர் தந்தையின் தீர்மானம் ஒரு சமயம் இருந்துவிட்டால் என்ன செய்வது என்றே கதிகலங்கினேன். என்னை வளர்த்தவர்களும் கலங்கிவிட்டனர். எங்களையெல்லாம் பெரும் கவலையிலிருந்து காப்பாற்றியவர் என் கணவரின் தந்தையான பெருந்தகையே!”
சீதை இதைச் சொல்கையில், ராமனால் தான் நிராகரிக்கப்பட்ட கட்டாயமாகிய முதல் சோதனையை நினைத்துப் பெருமூச்செறிந்தாள். ஆனால் அனசூயை சீதையை இறுகத் தழுவிக்கொண்டு. என் ராஜாத்தி, உன்னை மனைவியாய்ப் பெற்ற கணவன் தெய்வமாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உன்னை அவன் கரம் தீண்ட முடியாது. ஆம், எனக்குச் சட்டென்று ஞாபகம் வந்துவிட்டது. இதோ வருகிறேன் என்று, அனசூயை தள்ளாடிக்கொண்டே உள்ளே சென்று, ஒரு சிறு பேழையை இரு கரங்களாலும் எந்திக்கொண்டு வந்து நின்றாள். சீதைக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
திறவுகோல் துரு ஏறிக் கிடந்தது. வெகு நாட்களாய் அதை உபயோகிக்காததால் அது பூட்டைச் சட்டென்று திறக்கவில்லை. பெட்டியைத் திறந்து பார்த்தால், அவ்வளவும் நகைகள்! கண்ணையே கூசச் செய்யும் தன்மை உடையவை! ஒவ்வொன்றாய் மூதாட்டி எடுத்துப் பார்த்துவிட்டு, “என் பெற்றோர் இந்தப் பேழையை எனக்கு விருப்ப மானபொழுது திறக்கச் சொன்னார்கள். அந்த வேளையும் இன்றுதான் வந்தது. எங்கே என் கண்மணி, உன் அங்கங்களில் இவற்றை கையாலேயே நான் பூட்டுகிறேன். சற்று என் வேண்டுகோளை மறுக்காதே” என்றாள்.
சீதை வெறித்து அவற்றையே கவனித்துக்கொண்டிருந்தாள்.
கிழவியின் ஆர்வத்தைப் பார்த்தால் அவள் சிறுமியாகிவிட்ட வளாய்த் தோன்றியது. இவ்வளவு நகைகளின் பெயர்கள்கூட அந்தக் கிழவிக்குத் தெரியுமோ என்று ஐயப்படும்படி அவ்வளவு ஆபரணங்கள் விதவிதங்களாக இருந்தன.
“இதோ காசுமாலை; உன் கழுத்தில்தான் காசுகள் கனமின்றி மிளிர்கின்றன. இதோ வங்கி: உன் இடக் கைக்குத்தான் பொருத்தம். வங்கி வெட்கப்படட்டும், தன் சிறுமையைக் கண்டு. இதோ பாவிலி. இதோ ஜிமிக்கி. இதோ உன் இடையைத் தன் அழுத்தமான அளவில் அடக்கிக்கொள்ளக் காத்திருக்கும் ஒட்டியாணம். இதோ. உன் பிற அங்கங்களில் ஒளியிட, விண்ணில் ஏறும் இளம் சந்திரன் போன்ற திருகுப்பூ. உன் கரங்களைத் தீண்ட யாருக்கும் பாத்தியம் இல்லை; உன் கணவனைத் தவிர. ஆனால் இந்த முத்து வளையல்களால் காத்திருக்கவே முடியாது. அவை இரண்டும் போட்டி இடுகின்றன, வட்ட அளவில் உன் கரங்களைவிடத் தாங்களே ஒருகால் அதிகமாய் இருப்போமோ என்று அறிய. இந்தா வாசனைப் பூச்சு. உன்னிடம் சுபாவமாய் எழும் சுவாசனையை விடவா இதன் பரிமளம் இருக்க முடியும்? ஏதோ வீண் செருக்கு இதற்கு!”
அனசூயை தான் பேசுவதும் செய்வதும் சீதைக்கு மேலு ம் மேலும் வெட்கத்தையே உண்டாக்கும் என்பதை மறந்துதான் விட்டாள். ஆபரணங்கள் எல்லாவற்றையும் அவற்றுக்கு உரிய இடங்களில் உள்ளவைபோல் பார்த்துப் பார்த்துச் சேர்த்தபின், ஒரு கணம் நின்று அழகு பார்த்துவிட்டுப் பின்வறுமாறு சொல்லலானாள்:
“என் அழகுத் தெய்வமே, உன் அழிவற்ற அழகுக்கு ஆபரணமும் தேவையா? இருப்பினும் உன்னிடம் சேருவதற்கே இத்தனை காலமும் காத்திருந்தவை போல, இவையும் தாமாக ஆங்காங்கே தக்க இடங்களில் பொருந்திக்கொண்டு விட்டன. இனி நீ உன் கணவனை இந்தக் கோலத்தோடுதான் காணவேண்டும். போ. அவன் காத்திருப்பான்” என்றாள். இவ்வாறு சொல்லித் தனது கரத்தினால் ஒரு தடவை சீதையைத் தடவிக் கொடுத்து, மெதுவாய் ராமன் இருக்குமிடம் உந்திவிட்டாள்.
ராமன் எதைக் கண்டான்? திருவின் திருவே கண்ணைக் கவர்வது போல் நினைத்தான். மனம் சிறிது நெகிழ்ந்தான். “கானகமும். கல்லும் முள்ளும் திருவை இன்று சேவிக்கின்றனவே!” என்றுதான் எண்ணிக் கலங்கியிருப்பானோ? இல்லை; அனசூயையும் பெண்தானே? அவளும் இளமையில் அழகாய்த்தானே இருந்திருப்பாள்? ஆயினும் துளி அசூயைகூட இல்லாமல் சீதையைத் தன் கரங்களாலேயே அவள் அழகுபடுத்தினாளே! அவள் அல்லவா உலகிற்கு ஓர் அணி!” என்று எண்ணி மனம் பூரித்திருக்க வேண்டும்.
– கலைமகள், வம்பர், 1963 .
– கலைமகள் பொன்விழாக் கதம்பம் (1932-1981), பொன்விழா வெளியீடு, முதல் பதிப்பு: ஏப்ரல் 1982, கலைமகள் காரியாலயம், சென்னை.