கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 4, 2025
பார்வையிட்டோர்: 6,384 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கயல்விழி! இந்த இனிய அழகிய பெயருக்குச் சொந்தக்காரி ஓர் ஈழத் தமிழ்ப் பெண். 

கண்டாரைச் சுண்டி இழுக்கும் கவர்ச் சிமிகுக் கெண்டை விழிகள். 

காதலொடு காமப் போதையை உண் டாக்கும் கட்டான செட்டான பட்டுப் போன்ற மேனி! நான் நாள்தோறும் கயல்விழியைப் போன்ற பல இனப் பாவையரைச் சந்திக் கிறேன். அப்படியொரு நல்வாய்ப்பு எனக்கு. 

ஏன்? ஏன்? 

ஏன்? உங்கள் புருவங்கள் ஏதோ கேள்விக்குறியாக மேலே நொடிக்கின்றன? 

அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க! 

சும்மா, எந்த நேரமும் பேருந்து நிறுத்தம், பேரங்காடி, ஈரச் சந்தை, உணவு நிலையம் என்றெல்லாம் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நிற்கும் ‘சிலதுகள்’ போல் என்னை எண்ணிவிடாதீர்கள். 

நான் ஒரு தாளிகை முகவர். 

ஒவ்வொரு நாளும் வாடிக்கை யாளர்களுக்கு நாளேடு பயனீடு செய்கிறேன். வாடிக்கையாளர் களின் வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்களைத்தாம் நான் குறிப்பிடுகிறேன். 

அவர்கள் கயல்விழியைப் போல் தமிழச்சிகள் மட்டுமல்ல சிங்கள, பிலிப் பினோ, தாய்லாந்து மங்கையரும் ஆவர். 

நான் அவர்களின் உதவிக்கும் உவகைக் கும் உற்றதொரு நண்பனாகப் பழகி வருகிறேன். 

அவர்கள் தங்களின் துயரங்களை என்னோடு பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களது வாழ்க்கைக் கதைகளை, இல்லை இல்லை வாழ்வில் நடந்தவற்றைக் கேட்டால் நமது கண்கள் கலங்காமல் இருக்காது. 

வறுமையின் பொருட்டும் வாழ்க்கைத் தேவைகளின் பொருட்டும் (அவர்களில் பலர் கல்லூரி வரைப் படித்தவர்கள்) இங்கே வீட்டு வேலைக்காரிகளாகப் பணிசெய்து பொருளீட்ட வந்துள்ளனர். 

அப்படிப்பட்ட அந்த ஏழைகளை, ஏதிலிகளை இங்கே சில முதலாளிகள் சிறைப் பறவைகளாகப் பூட்டி வைத்திருக்கின்றனர். 

ஒரு சிலரோ அவர்களை மிகுந்த கொடுமை களுக்கும் உள்ளாக்கு கின்றனர். மனித நேயமற்ற மாபாவிகள். 

நாகரிகமும் நல்லொழுங்கும் பணிவன்பும் சமத்துவமும் நன்நடை போடும் நமது நாட்டில் இப்படிச் சில முதலாளிகள் முரடர்களாகத் திரிவது மானக் கேடுதான். 

அப்பப்பப்பா, வீட்டு வேலை செய்வது என்பது எவ்வளவு அல்லல் மிகுந்தது என எனக்குத் தெரியும். 

நான் என் இளம் வயதில் ஐந்தாண்டுக் காலம் சில வீடுகளில் பணி செய்யும் சிறுவனாக இருந்திருக்கிறேன். 

சுமார் ஐம்பதாண்டு களுக்கு முன்ன ரெல்லாம் சிங்கப்பூரில் இந்தியக் குடும் பங்களில் வீட்டுப் பணிகள் செய்ய படிப்பதற் கென்று தமிழகத்திலிருந்து வருகை தந்த என்போன்ற சிறுவர்கள்தாம் அமர்த்தப் பட்டனர். 

வீட்டில் விடியற்காலை ஐந்தரை மணிக் கெல்லாம் விழித் தெழுந்து சட்டிப்பானை கள் கழுவுதல், வீட்டை தூய்மை செய்தல், சந்தைக்குச் செல்லுதல் சமையலுக்கு உதவு தல் என்று சிறிது நேரங்கூட ஓய்வெடுக்க முடியாதபடி வேலைகளைக் கொடுத்துக் கொண்டே இருப்பார் வீட்டுக்கார அம்மாள். 

அதனோடு விடுவார்களா? 

பகலில் அம்மாள் உடம்புப் பிடித்து விடச் சொல்லுவார். 

இரவிலே ஐயா கால் பிடிக்கச் சொல்லுவார். சிறு தவறு செய்தால் கூட எண்ணற்ற பேச்சுகள் கிடைக்கும். 

சில வேளைகளில் அடியும் விழும். அன்று நான் பட்டுத் துய்த்த அந்தத் துயரங்களை இன்று நினைத்தாலும் எனது கண்களிலே நீர்த்துளிர்க்கும். 

அதனால்தான் இந்தப் பணிப்பெண் களின் நிலைமைகளை என்னால் உணர முடிகிறது. அதற்காகத்தான் அவர்களோடு கலந்துரையாடி என்னால் முடிந்த உதவிகளும் செய்து வருகிறேன். 

சில சீனர் வீடுகளில் வேலை செய்யும் தமிழ்ப்பெண்களுக்கு நமது உணவை வாங்கிக் கொடுப்பது, புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் பெற உதவுகின்றது எனலாம். 

கயல்விழியும் எனக்கு அந்த வகை யில் அறிமுக மான பெண் தான். ஆனால் அவளி டம் சற்று வேறுவிதமாக உறவாட நினைத் தேன். அவளது காந்த விழிகள் என்னைக் கருத்து மாற வைத்தன. அவளது சிற்றி டையும் சீரான மார்பழகும் என்றனின் சிந்தையைச் சிதறடித்தன. கார்கூந்தலும் கனிந்த பேச்சும் எனைக் கலக்கமுறச் செய்தன. நெஞ்சிலே மாற்றம் நினைவிலே புதுத்தோற்றம். 

கயல்விழி! 

ஈழத்தில் நடக்கும் இன ன மீட்சிப் போரால் ஏழையாக்கப் பட்டவள். அவளுடைய தந்தை தொழில் இழப்புக்காளாகி அந்தத் துயரத்தில் நடமாட முடியாதபடி படுத்தப் படுக்கையராய் வாழ்க்கையை ஓட்டு கிறாராம். 

அவளது குடும்பத்திற்கு அவள்தான் ஆதரவு. காதலித்தவரை மணமுடிக்கும் நேரத்தில் கைவிட்டு விட்டு இங்கு வந்து கடுமையாய் பாடுபடுகிறாள் அவள். 

காதலித்தவரும் அவளுக்காகக் காத்திரா மல் அண்மையில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு விட்டாராம். 

பாவம், கயல்விழி கூம்புகை (சோகம்) கொண்டிருந்தாள். நோவுகை (வேதனை)யில் நொந்து கொண்டிருந்தாள். 

அவளது நோவுதனைப் போக்கத் துணைபோன நான் அவளை மேவுதற்கு ஆசைப்பட்டுவிட்டேன். 

எனது விருப்பத்தை அவளிடம் நேரிடையாகச் சொல்லத் துணிவில்லாமை யால் மடலெழுதி அவளிடம் கொடுத்தேன். முதல்நாள் பெற்றுக்கொண்ட அவள் மறுநாளே பதில் மடல் தந்தாள். 

எனது ஆசைக்கு அடிபணிந்திருப்பாள் என்ற ஆவலோடு மடலைப் பிரித்துப் படித்தேன். 

நண்பரே! 

உங்களை நல்லவர் என்று எண்ணித்தான் நான் உங்க ளோடு பேசவும் பழகவும் முற்பட்டேன். எனது குடும்பச் சூழ்நிலைகளை யும் எனது வாழ்க்கை நடப்பு களையும் மனந் திறந்து உங்களிடம் சொன்னதெல்லாம் உங்க ளை ஓர் உடன் பிறப்பாகக் கருதித்தான். 

நீங்கள் எனக்கு உதவுபவர் போல் நடந்து இப்பொழுது என்னைத் தவறான பாதைக்கு அழைக் கிறீர்கள். நீங்கள் இத்தகைய எண்ணம் படைத்தவர் என்று எனக்குத் தொடக்கத்திலே தெரிந்திருந் தால் நான் உங்கள் முகத்திலேயே விழித் திருக்க மாட்டேன். 

நான் மானத்தைப் பேணும் தமிழ்ப் பெண். ஒழுக்கமான ஒரு தாய்க்குப் பிறந்தவள். எந்தச் சூழ்நிலையிலும் காசுக்காகவோ உடல் இன்பத்திற்காகவோ ஒழுக்கம் தவறமாட்டேன். 

என்னை நீங்கள் இவ்வளவு கீழ்த்தரமாக எண்ணியது கண்டு வெட்கப்படுகிறேன். நோவல் கொள்கிறேன். 

உங்களோடு பழகிய நாட்கள் இப்போது எனக்கு முள்ளில் புரண் டெழுந்த நாட்களாகப் படுகின்றன. 

நீங்கள் இதுவரை எனக்கு வாங்கித்தந்த உணவும் பிற பொருட் களும் நஞ்சாகவும் குப்பைத் தொட்டியில் பொறுக்கிய இழிவுப் பொருட்களாகவும் தோன்றுகின்றன. 

இனிமேல் நீங்கள் எதுவும் தரவேண்டாம். என்னைப் பார்ப்பதையும் தவிர்த்து விடுங்கள். 

உங்கள் உறவோ நட்போ இனி எனக்குத் தேவையில்லை. அதற்கு நான் முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். 

இதுவரை நீங்கள் செய்த உதவி என்றும் எனது நன்றிக்குரியது. 

இப்படிக்கு. 
(நான் எனது பெயரைக்கூட எழுத விரும்பவில்லை) 

கடிதத்தைப் படித்ததும் நிலைகுத்தி நின்றேன். நான் எதிர் பார்த்தது ஒன்று நடந்தது ஒன்றாகி விட்டதே என்று வருந்தினேன். 

சே! சிறிது நேர இன்பத்துக்காக, மனத் தில் ஏற்பட்ட அலை வாசை (சபலம்)யால் ஒரு நல்ல பெண்ணின் சினத்திற்கு ஆளாகி விட்டோமே என்று நெஞ்சம் கனன்றது. 

வேலை செய்ய வந்திருக்கும் ஏழைப் பெண்தானே, நம் ஆசைக்கு இணங்காமலாப் போய்விடுவாள் என உள்ளியது தவறாகப் போய்விட்டதே. 

விடுப்புக்கூட இல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவள் சில மநேரம் இன்புற்றிருக்க மறுக்கவா போகிறாள். அது அவளுக்குக் கசக்கவா போகிறது என்று நான் தப்புக்கணக்குப் போட்டது எத்தனை முட்டாள் செயல். 

சீச்சீ மானக்கேடாய்ப் போய்விட்டதே. இனி எப்படி நேர் காண்பது? என்றெல்லாம் மனம் குழம்பினேன். 

பார்க்கின்ற பழகுகின்ற பெண்களெல் லாம் நமது உள்ளவா (இச்சை)விற்கு இணங்குவார்கள் என எண்ணுகின்ற என்போன் றோர்க்கு இது சரியான பாடம். 

எனது திருந்திய நிலையை அவளுக்கு எப்படித் தெரிவிப்பது? 

அவள்தான் என் முகத்தில்கூட விழிக்க மாட்டேன் என்று எழுதியுள்ளாளே. 

எப்படியும் எனது மன்னிப்பு வேண்டலை அவளிடம் தெரிவிக்க வேண்டுமென்று ஒரு மடல் எழுதி அவளிடம் சேர்ப்பிக்க ஒவ்வொரு நாளும் அலைகிறேன். ஆனால், அவளோ வீட்டின் வெளியே தலைகாட்டுவதே இல்லை. 

உண்மையிலேயே கயல்விழி ஒரு நல்ல தமிழ்ப்பெண் மட்டு மல்ல, உயர்ந்த தன்மானம் கொண்ட ஈழப்பெண் என்பதை இன்றளவும் நிலைநாட்டி விட்டாள். 

‘கடும் பசியேயானாலும் புல் தின்னாது கொடும் புலி’ எனும் முன்னோர் மொழிக்கொப்ப வாழும் கயல்விழியே நீ வாழ்க! 

– இந்தச் சிறுகதை ‘தமிழ்முரசில்’ (13-6-1993) வெளிவந்தது. பின்னர், மலேசிய ஏடான ‘மலேசிய நண்பன்’ ஏட்டில் 22-10-2010இல் வெளியீடு கண்டது. 

– மண்மணச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2014, பாத்தேறல் இளமாறன் வெளியீடு, சிங்கப்பூர்.

பாத்தேறல் இளமாறன் (தமிழ் தெரிந்த சமையற்காரர்)  தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள நாட்டுச் சாலையில் 2-1-1945ல் பிறந்த பாத்தேறல் இளமாறனின் இயற்பெயர் மெ. ஆண்டியப்பன். 12'ம் வயதில் சிங்கப்பூருக்கு வந்த இவருக்குச் சமையல் கை வந்த கலை. ஆர்ச்சர்ட் சாலையிலுள்ள X ஆன் சிட்டி கடைத் தொகுதி திறக்கப்பட்டபோது அதில் சாப்பாட்டுக் கடை நடத்த உரிமை பெற்ற ஒரே தமிழர் இவர். மணமான இவர் தம் குழந்தைகளுக்கு கண்ணகி, தமிழ்க் கோதை,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *