அமாவாசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 248 
 
 

‘நீர் எப்பிடி என் கார் பார்கிங்க்ல வண்டிய நிறுத்தலாம். உம்ம பவுன்டரிக்குத்தான் பளிச்சின்னு எல்லோ மார்க் இருக்கு. அப்புறம் எங்கிட்டே எதுக்குவரணும்?’

‘சிடியில பிளாட் வீடு வாங்கிட்டு அதுவும் இந்த கன்னா பின்னா ஆளுவுளு கூட மல்லுக்கட்டவேண்டிருக்கு’

‘எனக்கு இப்ப வண்டி வாங்க முடியல்லே. பிளாாட் கடன மொதல்ல அடைக்கணும் நான் என்ன பண்ண முடியும்’

‘சார் அது வரைக்கும் என் பெரிய வண்டி கொஞ்சம் முன்ன பின்ன நிக்கட்டுமே’

‘என்ன சாரு நீங்க பேசுறது. எனக்குன்னு மார்க்கு பண்ணினது எனக்கு. உங்க வண்டி ஒரு அங்குலம் கூட எனக்குன்னு உள்ள இடத்துல நுழையக்கூடாது’

‘இப்ப என்னன்னுதான் சொல்றீங்க’

‘உங்க வண்டிய எடுத்து நவுத்துங்க. ஏன் எடம் கெடக்கும் சும்மாகூட கெடக்கும் இல்ல செமந்துகிட்டு கெடக்கும்’

‘மதியம் எடுத்து வைக்கறன்’

‘செய்யற்து தப்பு அப்புறம் என்ன அத மதியம் வந்து சரி பண்ணுறது’

‘நீர் போஸ்ட் ஆபிசுல வேல செய்யுறா அளு அதான் அந்த இந்த புத்திய காமிச்சீட்டீறு’

‘நா எங்க வேல செஞ்சா உமக்கு என்ன நீரு கோயம்படுல மாம்பழ லோடு வியாபாரம் பண்ற அந்த புத்திய பத்தி நான் ஏதாவது சொன்னேனா’

‘வாய மூடும் அல்பை’ சொல்லிய வண்டியின் சொந்தக்காரர் வண்டியை எடுத்து நகர்த்தி தன் மஞ்சள் கோட்டுக்குள் நிறுத்திக்கொண்டார்.

‘இப்ப் திருப்திதான’

‘ஆமாம் சார். நமக்குன்னு வேண்டாம் உங்களுக்கும்னு வேண்டாம். என்ன சொல்றீங்க’

‘போதும் நிறுத்துங்க.நான் பாத்துகுறேன்.ஆப்பு வைக்க எனக்கும் தெரியும் நீர் தாங்க மாட்டீரு பாரும்’

தரைதளத்தில் குடியிருக்கும் அவர் தன் வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார். அவனுக்கு கொஞ்சம் அச்சமாக இருந்தது.இருந்தாலும் நாம் என்ன தப்பாகக் கேட்டு விட்டோம். நம் உரிமை நாம் கேட்டோம். சமாதானப்படுத்திக் கொண்டான்.

ஒரு பத்து நாள் ஆனது.

வாசல் கதவை யாரோ தட்டிய மாதிரி இருக்கவே போய் திறந்து பார்த்தான்.

‘நீங்க யாரு’

‘நாங்க இப்ப டிஸ்டிரிக்ட் கோர்ட்டுலேந்து வர்ரம் அய்யாவுக்குதான் நெனக்கிறேன் ஒரு தபால் இருக்கு நீங்கதான் கே.கிருட்டினமூர்த்தியா’

‘பேரு. ஒ கே எனக்கும் கோர்ட்டுக்கும் சம்பந்தம் இல்லையே. எனக்கு எதுக்கு தபால். ஏதோ தப்பு இருக்கு. நல்லா பாருங்க’

‘உங்க அப்பா பேரு கண்ணுசாமி சரியா’

‘ஆமாம் சாரு’

‘அப்ப நீங்கதான் விலாசத்துல இருக்குற பிளாட் நம்பர் ஃப்ளோர் நெம்பர் அபார்ட்மென்ட் பேரு தெரு பேரு எல்லாம் சரித்தானே’

‘இல்ல நா வாங்க மாட்டேன் இதுல தப்பு இருக்கு’

‘வாங்குன வாங்குங்க வாங்கல்லேன்னா வாரண்டுதான் வரும். அய்யா கவுர்மென்ட் வேல பாக்குறது எண்ணைக்கும் நெனப்பு இருக்கட்டும்’

‘இப்ப என்ன சொல்றீங்க’

‘யோவ் கையெழுத்து போடு தபால வாங்கு, உம்மகிட்ட ஒரு காபிக்கு வழி இருக்காது சட்டம் மட்டும் நல்லா பேசுவீரு’

அவன் கையெழுத்து போட்டு தபால் வாங்கினான்.

‘எதனா ஒரு நல்ல வக்கீல பாரு உனக்கு எது உள்ளாற என்னா இருக்குதுன்னு வெளங்கிடப் போவுது’ வந்தவன் உடனே அங்கிருந்து கிளம்பினான். தபாலை வாங்கிய அவன் அதை நேராக அவன் குலதெய்வம் மதுரகாளி படத்தின் முன்னே வைத்து பிரார்த்தனை செய்துவிட்டு பிரித்தான்.

‘இப்பவும் நீர் 25 அக்டோபர் 2014 அன்று உம் வீட்டு ஜன்னலைத் திறந்து காக்கைக்கு சோறு வைப்பதகாச் சொல்லி கா கா என்று அழைத்து காகமும் வந்து கீழ் வீட்டுக்காரரின் விலை உயர்ந்த கோட்டு மற்றும் பட்டு ஆடைகளை நாசம் செய்ய காரணமாகி பின்னர் உம்மை வந்து ‘ஏன் அய்யா இப்ப்டி செய்யலாமா? என்று கேட்ட உம் குடியிருக்குக்கு நேர் கீழ் தள குடியிருப்புக்காரர் திரு ஜீவநாதன் த/பெ காப்ரியேல் என்பவரிடம் ‘உன்னால என்னாத்த புடுங்க முடியுமோ புடுங்கிக்க’ என்று கேட்டு மிக மிக அவமானப்படுத்திவிட்டதாகவும் ஆக உம் மீது இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டு இருக்கிறது. இது சம்பந்தமாக நீர் இன்னும் பதினைந்து தினங்களுக்குள் உமது பதிலை உமது வக்கீல் மூலமாகவோ அல்லது நீர் தனித்தோ இந்த கோர்ட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டியது. இது தவறும் பட்சத்தில் உம் மீது மேலும் மான நஷ்ட மற்றும் கிரிமினல் வழக்குத் தொடர்ந்து பிடி வாரண்ட் பிறப்பிக்க ஏதுவாகும் என்பதை நீர் அறியவும்’

அவனுக்குத்தலை கிர்ரென்று சுற்றியது. காலண்டரை எடுத்துப் பார்த்தான். அக்டோபர் 25 மகாளய அமாவாசை என்று போட்டிருந்தது. அன்று அவன் மகாளய தர்ப்பணம் முடித்து காக்கைக்குச்சோறு வைத்தது உண்மை. காகங்கள் வந்தன. உண்டன. தன் தாயும் தந்தையும் அவன் பாசமாய் வளர்த்த தங்கையும் காக்கை உருவில் வந்து சோறு உண்டு போனதாக அகமகிழ்ந்து போனதும் கூட உண்மை. ஆனால் கீழ் வீட்டுக்காரர் பட்டுச்சேலையும் கோட்டும் காய வைத்ததும் அவை விஜயம் செய்த காக்கைகள் எச்சத்தால் விணாகிப் போனதும் அவர் அது கேட்கத் தன்னிடம் வந்து போது தான் அவரைக் கண்டபடி திட்டியதாகச் சொல்வதும் எல்லாம் திட்டமிட்ட சதிவேலை. அவரை ஒரு நாள் அவருடைய காரை நகர்த்தி அதனை தன் மஞ்சள் கோட்டுஎல்லைக்குள் நிறுத்தி வைக்கச் சொன்னதற்கு அவரின் எதிர்வினை இது என்பது அவனுக்கு மண்டையில் சட்டென்று உரைத்தது.

இனி செய்வதற்கு என்ன இருக்கிறது.யாரைக்கலந்து ஆலோசிப்பது.கோர்ட்டு அதன் வழி வழி சமாச்சாரங்கள் இதுவரை அவன் பார்த்தது இல்லையே. திடீரென யூனியன் தலைவரின் நினைவு வந்தது. அப்படி ஒன்றும் அவன் யூனியன் தலைவர்களுக்கெல்லாம் அவன் பரிச்சியமானவனும் இல்லை.யூனியன் காரர்கள் அவன் போன்றோரை இம்சிப்பதற்கு மட்டுமே அவதாரம் எடுத்து வந்திருப்பதாகத்தான் அவனுடைய கணக்கு. இந்த கோர்ட்டு நோட்டிசு விவகாரம் அலுவலகத்தில் யாருக்கும் தெரிந்தால் என்னாகும்.அதுவேறு அச்சமாக இருந்தது.தன் அலுவலகப்பணிக்கு இடையே யூனியன் தலைவரை எப்படியும் சென்று பார்த்துவிடுவது என்ற முடிவோடு புறப்பட்டான். அலுவலகத்தில் யூனியனுக்கு என்று ஒரு அறை இருந்தது.அதனுள்ளாக தலைவர் அமர்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்தார்.

‘யாரு சாரு இந்த பக்கம் காத்து அடிக்குது.ஒரு நாளும் இல்லாத திரு நாளா’

‘வணக்கம் சார். இத படிச்சு பாருங்க’ அவன் வந்த கோர்ட்டு நோட்டிசினை ஒப்படைத்தான்.

தலைவர் தான் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு படிக்க ஆரம்பித்தார்.கவனமாகவே படித்தார். படித்து முடித்து விட்டு அவன் பக்கம் திரும்பினார்.

‘கொஞ்சம் கதவ சாத்திட்டுப்பேசுணும்’

அவன் கதவைச் சாத்திவிட்டு வந்து நின்றான்.

‘இப்ப நான் என்ன செய்யுணும்’

‘எனக்கு பயமா இருக்கு சார்’

‘பயப்பட்டு ஒண்ணும் ஆவாது. நாயி இருக்குன்னா அது நம்மை கடிச்சிடுமேன்னு பயப்படலாம். அதான் இப்ப நல்லா புடிங்கி வச்சிடுச்சில்ல இப்புறம் அந்த நாயிகிட்ட நமக்கு வேல என்ன? மேங்கொண்டு நாம பொழைக்க என்ன செய்யுறதுன்னுதான் பாக்குணும்’

‘அதான் சார்’

‘இது விஷயம் ஆபிசுல யாருக்கும் தெரியக்கூடாது. தெரிஞ்சா பெரிய பிரச்சனை.ஆபிசுல சொல்லிக்காம போலிசு கோர்ட்டுன்னு எங்கயும் நாம போகக்கூடாது சட்டம் அப்பிடி இருக்குது’

‘அப்ப என்ன செய்யுறது’

‘ அது கெடக்கட்டும் உம்ம பிரச்சனை எப்பிடி ஆரம்பிச்சுது?’

பிளாட் குடியிருப்பில் கீழ்த்தள காரேஜில் வண்டியை மஞ்சள்கோட்டுக்குள் நிறுத்துவது தொடர்பாக வந்த வாய்த்தகறாறு பற்றி விளக்கிச்சொன்னான்.

யூனியன் தலைவருக்கு சிரிப்பு வந்தது.

‘சாரு நாம எல்லாம் கவர்மென்ட் சர்வன்ட் நமக்கு.கையி வாயி இன்னொண்ணு.மூணும் பதனம் வேணும். மாச சம்பளத்துல பத்து ரூபா கொறஞ்சா நமக்கு அழுவ வந்துடும். எந்த கூட்டத்துக்கு எந்த போராட்டத்துக்கு நீரு வந்து இருக்குறீரு. ஒண்ணலயும் உங்க மூஞ்சிய நானு பாத்தது இல்லையே. எப்பனா பத்து காசு யூனியனுக்கு நன்கொடை குடுத்து இருப்பீரா இப்ப வந்து தலய சொறிஞ்சிகிட்டு நிக்குறீருல்ல’

அவன் பேசாமல்தான் இருந்தான். எல்லா விஷயமும் பேசத் தெரிந்தவன் தான். ஆனாலும்…

‘கோர்ட்டுபக்கம் ஒரு வக்கீலு ஆபிசு பக்கம் நீரு போயிடாதீரு தெரிதா. நம்ம ஆபிசுல பாத்துகிட்டே தான் இருப்பாங்க. அங்கங்க ஆளுங்க போவும் வரும். நாமள பலான எடத்துல பாத்துட்டான்னா புள்ளி வச்சிடுபுடுவான். அப்புறம் குய்யோ முறையோன்னா ஒண்ணுமாவாது.நொண்டிகிட்டுதான் சொச்ச காலமும் ஆபிசுல தள்ளுணும். எவன் எப்ப மாட்டுவான்னு தான் சுத்தி இருக்குற எல்லாரும் மனசுல கணக்கு போடுவான். வெளில பாக்க உம்மகிட்ட பல்ல காட்டுவான் சிரிப்பான் கொஞ்சுவான் அது பொய்யி. பொய்யி. எங்க மேல அதிகாரிவுளுக்கு ரவ ரவ பயம் இருக்குன்னா அது சின்ன விஷயம் இல்ல. அதுக்கு எம்மானோ வெல குடுத்துகிட்டு இருக்கம். அது எல்லாம் உமக்கு வெளங்காது’

‘இப்ப நானு என்ன செய்யுணூம்’

‘இந்த நோட்டிசை ரெண்டு செராக்ஸ் எடும். அதோடு ஒரு அஞ்சி ரூவா வச்சி எங்கிட்ட குடுத்த்ட்டு போவுணும்’

‘அஞ்சி ரூவான்னா’

‘இது. வெளங்குலயா ஐயாயிரம்’

‘வேற என்ன நானு செய்யுறது’

‘கட்ட பஞ்சாயத்து வச்சி இந்த பிரச்சனைய ராசி பண்ண பாக்குணும். உம் எதிரி எதுல எப்பிடி மடங்குவான்னு பாத்து அத சரிப்பண்ணி அப்புறம் சமாதானம் ஆவுணும். இந்த அஞ்சி ரூவா காணாது இது ஆரம்பம்தான். நம்ம ரூமு கதவு இன்னும் மூடிதான இருக்கு. எந்த கழுதயாவது காது வச்சிகிட்டு நாயாட்டம் கேட்டுகிட்டு நிக்கும்’

‘மூடிதான் இருக்கு சார்’

‘அப்ப சரி இன்னும் இருவது ஆவும்னு நெனக்கிறேன்.அப்புறம் நானு உம்மை பாக்குறேன்’.

அவன் இடத்தைக்காலி செய்தான். உள்ளுக்குள் சொர சொர என பயமாக இருந்தது.ரெண்டு செராக்ஸ் காபி கேட்டதில் ஒன்று தலைவரே எடுத்துக்கொண்டு போய் அலுவலத்தில் கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுத்துவிட்டால் நம் கதி என்னாகும் மனம் என்னவெல்லாமோ யோசித்தது. அருகில் இருக்கும் தன் வீட்டுக்கு நடந்தான்.

குடியிருக்கும் அபார்ட்மென்ட் வாயிலில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது.அதன் பூசைக்கார அய்யர் பிள்ளையார் சிலைக்கு நல்லெண்ணெய் தடவிக்கொண்டு இருந்தார்.அவன் பிள்ளையார் சிலையைப்பார்த்தான்.

‘இங்க தான் குடியிருக்குறீங்க பத்து நிஷம் கழிச்சிகூட நீங்க சாமிய வந்து பாக்கலாம் சேவிக்கலாம்’

‘அதுவும் சரி சாமி’ சொல்லி அபார்ட்மென்ட் வாசலுக்கு ப்போனான்.

வண்டி நிறுத்துமிடத்திற்குச்சென்று பார்த்தான்.அவனுக்குச்சொந்தமான இடத்தில் யாரும் வண்டியை நிறுத்தவில்லை.அவரவர்கள் வண்டி அவரவர்கள் கோட்டுக்குள் சமத்தாக இருந்தது. அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்தான்.பிறகு பிள்ளையாரைச்சென்று சேவித்தான். விபூதி வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டான்.

‘இண்ணைக்கு சாயந்திரம் ஒரு நல்ல சேதி வரும்.வந்தா பிள்ளையாருக்கு ஒரு அபிஷேகத்துக்கு கொடுக்கணும்’

‘சாமி நல்லது செய்யட்டும் நானு அபிஷேகத்துக்கு கொடுத்துடறன்’ அவன் பதில் சொன்னான். மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாத்தான் இருந்தது.பிரச்சனை வராதவரை கோவில் கோபுரங்கள் எல்லாம் சிறியதாக க்கண்ணுக்குத்தெரிந்தன.பிரச்சனையில் மாட்டிக் கொண்ட பிறகு கோபுர உயரங்கள் ஏனோ கூடிக்கொண்டன.

அன்று மாலையே அவன் வீட்டுக்கு யூனியந்தலைவர் ஆள் அனுப்பினார்.கோயம்பேடு மார்கெட் வாசலில் ஏழுமணிக்கு நிற்க வேண்டும் என்று சேதி வந்தது.அவன் பிள்ளையாரை மனதில் நினைத்துக்கொண்டு புறப்பட்டான்.கோயம்பேடு மார்கெட்டில் நல்லகூட்டம்.காய் கனிகள் அழுகிய துர் நாற்றம்.அவன் மூக்கைப் பிடித்துக் கொண்டான்.

கீழ்த்தள ஜீவ நாதன், யூனியன் தலைவரோடுபேசிக்கொண்டே நின்று கொண்டிருந்தார். அவரோடு பழ வணிகர் சங்க செயலாளரும் இடை இடையே பேசிக் கொண்டிருந்தார். யூனியன் தலைவர்தான் அவனுக்குஅந்த பழ வணிகர் சங்கத்தலைவரை அறிமுகம் செய்துவைத்தார்.

‘எனக்கு கோர்ட்டு செலவு அது இதுன்னு ஆயிடிச்சி என் வக்கீலுக்கு நான் காசி தரணும். ஒரு பத்து ரூவா கொடுங்க முடிச்சிகிடலாம்’

‘அப்புறம் இதுல பேச என்னா இருக்கு ராசியாவுறதுன்னுதான முடிவு’ என்றார் பழ வணிகச்செயலர். யூனியன் தலைவர் அவனைப்பார்த்தார்.

‘அய்யா எப்பிடி சொல்றிங்களோ அப்பிடி’ என்றான் அவன்.

‘இது எப்பவும் கவனத்துல இருக்குணும்’ என்றார் பழ வணிக சங்கத்துக்காரர்.

யூனியன் தலைவரே பத்தாயிரம் ரூபாயை தன் வசமிருந்து எடுத்து ஜீவ நாதனிடம் ஒப்படைத்தார். தான் தயாராக வைத்திருந்த காகிதத்தை எடுத்து யூனியன் தலைவர் நீட்ட அதில் பிரச்சனை சுமுகமாக முடிந்தது என எழுதி நால்வரும் கையொப்பமிட்டனர்.

‘என் வக்கீலுகிட்ட இத குடுத்து நான் முடிச்சுகுறன்’ என்றார் ஜீவ நாதன்.

‘சாரிங்க’

‘அண்ணைக்கு நா ரொம்ப அலச்சல்ல வந்தன் வண்டி ரவ நவுத்தி நிறுத்திபுட்டன். கரண்டும் சரியா இல்ல வந்து வந்து போச்சி. அத இவ்வளவு தூரம் கொண்டுனு போயிட்டு இப்ப ராசியாகி திரும்பறம்’

‘வெரி சாரிங்க வெரி வெரி சாரிங்க’ அவன் சொல்லி முடித்த்தான்.பழ வணிக சங்கத்தலைவரும் ஜெப நாதனும் புறப்பட்டனர்.

தான் தயாராக க்கொண்டுவந்த செக் புக்கை எடுத்து ஒரு செக் ஸ்லிப்பில் அவன் கையெழுத்து மட்டும் போட்டு யூனியன் தலைவரிடம் கொடுத்தான்.

‘மொதல்ல அஞ்சி குடுத்து இருக்கன்.இப்ப எவ்வளவு இன்னும் தரணும்’ அவனே அறியாமல் அவன் முகம் மகிழ்ச்சிப்பிரவாகத்தில் மலர்ந்து இருந்தது.

‘உம்ம பேங்க் அக்கவுண்ட்ல எவ்வளவு பணம் இருக்குது’

‘ஒரு பதினைந்து ஆயிரத்துக்குள்ள இருக்கும்’

‘அதான் பிளாங்க் செக்க நீட்டுறீரு’ சொல்லிய தலைவர் புறப்பட்டார். பிள்ளையார் கோவில் குருக்கள் சொன்ன மாதிரியே அதுவும் அன்று மாலையே அந்த நல்லது நடந்து விட்டதாகவும் அபிஷேகத்துக்கு சாமான்கள் வாங்க ஒரு லிஸ்ட் தயாரிக்க வேண்டும் என்றும் மனதில் எண்ணினான்.

‘ஒரு சேதி நீரு காரு கீரு வாங்குனப்பறம் அத நிறுத்தற எடத்த பாத்துக்கலாம். அதுவரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசியும்’ என்றார் கொஞ்ச தூரம் போய் திரும்பிய யூனியன் தலைவர்.’ஒரு நன்றிகெட்ட வேல வொலகத்துக உண்டுன்னா அது எங்க தொழிற்சங்கவேலதான்’ சொல்லிக்கொண்டே தலைவர் நடந்தார். அவனுக்கு அதெல்லாம் காதிலா விழுந்தது.

ஒன்று அவனுக்கு மறந்துபோனது. இனி அமாவாசைக்கு அமாவாசை காக்கைக்கு எப்படிச் சோறு வைப்பது என்பதுதான் அது.

– ஜூலை 2015.

எஸ்ஸார்சி எஸ்ஸார்சி (பிறப்பு: மார்ச் 4 1954) என்கிற எஸ். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் இளநிலைக் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *