அப்பாவின் துயரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 229 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்கால்களின் கீழ் ஏதோ ஊர்ந்து வழிவதுவாய் உணர்ந்து வந்த எனக்கு விழிப்பு நிகழ்ந்தது. பதைத்து கால்களை வேகமாய் இழுத்து எழுந்தேன். இருள் பரவியிருந்தது. கால்களைத் தொட்டுப் பார்த்தேன் ஈரமாய் இருந்தது. மணந்து பார்த்தேன் புரிந்துவிட்டது. இருளை ஊடறுத்த சிறு ஒளியையேனும் உருவாக்கும் அவகாசம் விழிகளுக்குப் போதாதிருந்தது. கால்களை இரண்டு “எட்டு” வைத்ததும் மோதுப்பட்டு நின்றேன். கைகளை இருளொடு துலாவினேன். கைபோய் மெலிதாய் அடித்து நின்றது. அப்பாதான் நிற்கிறார் எனப்புரிந்துவிட்டது. “அம்மா” என்ற என் குரல் இருளின் அமைதியைக் கிழித்தது. என்னடா தம்பி என்ற குரலோடு சிறு வெளிச்சத்தின் உருவாக்கம். அம்மா நெருப்புக்குச்சைப் பத்த வைத்து கைவிளக்கில் கொழுத்த முனைவது தெரிந்தது. கை விளக்கோடு வந்து “என்னடா இப்பவும் பெய்து போட்டாரே. உந்த மனிசனோட நாங்கள் படுறபாடு நடுச்சாமத்திலயும் நித்திரை கொள்ள விடுகுதே” அம்மா நித்திரை எரிச்சலோடு சத்தம் போட்டா. “தம்பி சாக்கை எடுத்து போட்டுவிட்டா இந்த நேரம் பார்த்துக் கரண்டும் நிண்டுபோச்சு” அம்மாவின் வேண்டுகோள்படி அங்கால கிடந்த ஈரச்சாக்கை எடுத்து ”பெய்த’ இடத்துக்கு போட்டேன். அப்பா நெல்லுவிதைப்பது போலவும் கொத்துவது போலவும் புல்லுப்பிடுங்கி அரிப்பது போலவும் கைகளை அசைத்துக் கொண்டிருந்தார். கண்கள் பயங்கரமாய் முழிசியபடியிருந்தன. 

‘அப்பா” என்றபடி அவரை உலுப்பினேன். நான் நின்ற திசைக்கு வேறுபக்கமாய் என்ன என்று கைகளின் சைகையோடு “கொஞ்சம்” முனகினார். திரும்பவும் அவரை உலுப்பினேன். இப்பவும் வேறுதிசையை வெறித்தார். எப்போதாவது நான் செய்யும் அந்தச் “சிகிச்சையைத்’ தொடங்கினேன். அப்பாவுக்கு கைகொடுப்பதாய் கொடுத்து மெதுமெதுவாய் விரல்களை அமத்தத் தொடங்கினேன். பெருவிரல் தவிர்ந்த ஏனைய விரல்களை கொஞ்சம் வேகமாய் இன்னும் அமத்தினேன். ஏங்கோ பாய்ந்திருந்த அவரது பார்வை நான் நின்ற திசைக்குக் குவிந்து நோவோடு நோக்கின. கைகளை நான் இளக்க அவர் என் விரல்களை அமத்தத் தொடங்கினார். திடீரென்று விழிகளில் ஒரு ஒளியின் பிரகாசம் உட்கார்ந்தி ருப்பதாய்த் தோன்றிற்று. 

நான் ஒருவாறு கைகளை உதறி அவரைச் சுதாகரிக்க வைக்க முயன்றேன். என்ன வேணும் என்று கைகளால் கேட்டேன். “அப்பு தன்னைப் பேசிப்போட்டாராம். அவருக்கு அடிக்க வேணும்” என்றார். அவர் எப்பவோ செத்துப் போனார் என்றேன் சைகையால். கன்னத்தின் வலப்புறமாய் சுட்டுவிரலை வட்டமாய்ச் சுற்றி “உனக்கு விசரோ” என்றார். 

“ஆளுக்கு வரவர யோசனையும் கூடுது கண்ணும் தெரியுதில்லை கதைக்கமாட்டாத மனிசனை என்ரை தலையில கட்டிப்போட்டு ஆத்தையும் அப்பும் நிம்மதியாய் போட்டினம் நான் தான்…” அம்மா வழமையான தன் புலம்பல் பல்லவிக்குள் இறங்கத் தொடங்கினார். 

“கொண்டே ஆளைப்படுக்க வைப்பம்” என்று நினைத்தபடி அப்பாவின் கைகளைப் பிடித்து இழுத்தேன். ஆ…. என்று தோள் மூட்டைப் பிடித்தபடி “நோகுது” என்ற வார்த்தைகள் ஒலியின்றி பார்வையால் உள்வாங்கப்பட்டன. அவரின் இடுப்பை என் வலக்கையால் சுற்றியபடி கட்டிலருகே கொண்டு சென்று கட்டிலின் நுனியினில் அவரின் கையைப் பதிக்கவைத்தேன். பிறகு அவரே இருந்து கொண்டார். படு என்று தலையை வலப்பக்கமாய்ச் சரித்து உள்ளங்கையையும் கன்னத்தோடு சேர்த்து காட்டினேன். “ஓ” என்று விட்டுப் படுக்காது அவரின் கைகள், யாருடனோ பேசுவது போலவும், அடிக்க கை ஓங்குவது போலவும் இன்னும் ஏதேதோ செய்து கொண்டிருந்தன. படுக்கப் பாயும் இல்லாது அதில் நிற்க மனமும் இல்லாது அங்காலே இருந்த கதிரையில் போய் இருந்தேன். அம்மா மேசையில் விளக்கை வைச்சுட்டு முணுமுணுத்துக் கொண்டு போய் பாயில சுருண்டுபடுத்தா. 

என் நித்திரை குழம்பி அப்பா பற்றிய கவலையில் மனம் தள்ளாடியபடி நடக்கத் தொடங்கியது. “எங்களுக்கும் அப்பாவுக்கும் இப்பிடிப்பலன் போல இத யாரால மாத்த முடியும்? அப்பா எப்படி இருந்தவர்? கதைக்க மாட்டாதவர் என்றாலும் சந்தோஷமா நிம்மதியாத்தான் வாழ்ந்தவர். அப்பாவிடம் இப்போது கூட ஏதோ ஒரு அசாதாரண சக்தி பதுங்கியிருப்பதாய் நான் நம்புகின்றேன். அப்பாவை ஒரு ஞானியோ என்று கூட இந்த நிலையிலும் நான் யோசிக்கின்றேன். 

தாடி படர்ந்திருக்கும் கன்னம், ஒளிகுன்றி வெளிறியிருக்கும் விழிகள், இவற்றை ஊடறுத்து அப்பாவை நோக்குகையில் அவருள் அமர்ந்திருக்கும் நீண்ட வெளிகளாலான அமானுஷ்ய அமைதிச் சாம்ராஜ்யத்துள் ஏதோவோர் சக்தி உட்கார்ந்து தன் பிரமாண்டமான ஒளிக்கரங்களால் ஆசீர்வதிப்பது போலான பிரேமை என்னுள் நீண்டு நிலைத்திருக்கிறது. 

எனக்கு அம்மாவை நினைத்தால் இன்னொரு பக்கத்தில் ஆச்சரிய வெள்ளம் என் உள்ளத்து அணை உடைந்து ஆக்கிரமித்து விடுகிறது. சாதாரண ஆசைகள் கொண்ட ஒரு பெண் எவ்வாறு கதைக்கமுடியாத கேட்க முடியாத ஒருரைக் கலியாணம் செய்யத் துணிந்தா? அம்மாவைக்கூட எத்தனையோ தரம் பொறுக்கமுடியாது கேட்டிருக்கின்றேன். அம்மா சொல்லுவா கந்தப்பு சாத்திரி சொன்ன மாதிரி “குற்றமுள்ளவன்தான் வருவான்” என்றால் என்ன செய்ய முடியும்? அம்மா அப்பிடிச் சொல்லும் போது வடிந்து போன அவவின் கனவுகளை ஓரளவேனும் என்னால் அறிய முடிந்தது. 

திருதராட்டினன் கண் தெரியாதவன் என்பதற்காய் காந்தாரி தன் ஒளிக்கண்களை கறுப்புத் துணியால் கட்டி இறுதிவரை வாழ்ந்தாளாம். ஆனால் அம்மா வாயையோ கண்ணையோ துணியால் கட்டி வாழவில்லைத்தான். தன் வாழ்க்கையோ ஒருவகையான யாராலுமே கெதியாய் ஆற்ற முடியாத் தியாகத்துக்கு உட்படுத்தி கறிவேப்பிலையில் இருந்து கத்திரிக்காய் வரை கனமரக்கறிகளை சந்தையிலே விற்று தன் வாயையும் வயிறையும் கட்டி எங்களை வளர்த்தா, வளர்க்கின்றா. 

இப்ப ஒரு பதினைந்து வருசமாவல்லோ அப்பாவுக்கு நரம்புத் தளர்ச்சி, ஆனால் அதுக்கு முந்தி ஆள் நல்ல திறமான தோட்டக்காரன் எண்டு ஆக்கள் எல்லோரும் சொல்லுகையில் ஒருவகைப் பெருமிதம் எழும். ஆனால் மறுபக்கமாய் மீந்திருக்கும் கனவுகளின் வெளிவராத் தொகுதிகள் நெஞ்சை உறுத்தி நிற்கிறது. நரம்புத்தளர்ச்சிக் குளிசையைக் கனக்கப் பாவிச்சுத்தான் கண்ணின் ஒளி மங்கி மங்கிப் போவதாய் ஆக்கள் சொல்லுகையில் ஏதோ செய்தெம்மை வெளியொன்றில் வீசி எறிகிறது. 

கத்தக முடியாத சீவனாய் இருந்தும் திடகாத்திரமான உடம்பும் ஒளிவீசும் கண்களும் முகத்தில் விளைந்திருக்கும் பொலிவும் எதையும் தாங்கும் நெஞ்சும் என்றிருந்த அப்பா எப்படி இப்படி… ஒளி குன்றிய கண்களும், நிலையற்றுத் திரியும் ஒழுங்கற்ற மனமும், உப்பிய வயிறும், அதிகமாய் நடக்காததால் வீங்கிய கால்களுமாய்…. மாறிப்போனார். எல்லாத்துக்கும் காரணமான அந்நிகழ்வு என்ன? நிகழ்வுக் காரணத்தைக் கேள்வியாய்த் தூக்கி… மனம் தன்னுள் சிறகு பொருத்தி அம்மாவும் அத்தையும் அடிக்கடி சொல்லும் கதையோடும் நிகழ்வோடும் விடையை தூக்கி வந்து ஒரு கணப்பொழுதுள் என் முன் விரித்தன. 


தவராசா, சிவபாதம் யார் இந்த இருவரும் என்று நீங்கள் முழிசலாம். அவர்கள் அப்பாவின் தமக்கையின் இரண்டு ஆண்சிங்கங்கள். தகப்பன் எப்போதோ செத்துப்போக இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்பைத் தம் தலையிலே தூக்கி வைத்துக் கொண்டவர்கள். தங்கள் மாமனின் மேல் தீராத அன்பும், பாசமும் கைவரப் பெற்றவர்கள். அப்பா எல்லா வேலையும் தோட்டத்தில செய்யிறதலில நிபுணன். ஆனா மருமக்கள் அவரைக் கடைசி வரைக்கும் மருந்தடிக்க விடுகிறதில்லை. அவருக்கு அது ஒவ்வாமை ஆகிடுமோ என்று பயந்தனராம். 

அப்பாவுக்கு 35 வயசாகியும் கலியாணம் நடக்கையில்லையாம். அப்பாவை ஏன் கல்யாணம் கட்டையில்லை என்று சனம் நக்கலடிக்க அப்பா கோபிச்சுக் கொண்டு கொஞ்ச நாளாத் தோட்ட வேலைகளைப் பகிஷ்கரிச்சுப் போட்டாராம். மருமக்கள் தான் கஷ்டப்பட்டு அம்மாவைக் கண்டுபிடிச்சு, நாங்கள் எல்லா உதவியும் செய்யிறம் நீங்கள் கட்டுங்கோ எண்டு உத்தரவாதம் கொடுத்தவையாம். இப்படியாக கலியாணம் முடிஞ்சு நான் பிறந்தனாம். அதில தவராசா அத்தானுக்கு பொம்பிளைப் பிள்ளையளெண்டா உயிராம். ஆனா நான் பிறந்தோண்ண எனக்கு பொம்பிளைப் பிள்ளை மாதிரி காப்பு, இரண்டு மூண்டு சங்கிலி எண்டு போட்டு வடிவுபார்க்கிறவராம். என்ரை சாத்திரத்தின்படி நான் பிறந்து பத்து மாசத்தில் பிதாவுக்கு இராணுவ சீருடையின ரால் ஆபத்து என்று சாத்திரி சொன்னதால அப்பாவை வெளியிலை விடாமல் பாதுகாத்திச்சினமாம். ஆனால் நடந்ததுதான் என்ன? 


1985.04.28ம் திகதி வழமைபோலவே விடிந்தது. தவராசாவும் சிவபாதமும் காலைமை எழும்பி கத்தரிக்காய் ஆய்ஞ்சு வந்து இரண்டு உரப்பையுள் நிரப்பி சந்தைக்கு கொண்டு போய் வித்துப் போட்டு ஒரு காப்பறை அரிசியும் வாங்கிக் கொண்டு வந்து மாமியிடம் கொடுத்தார்கள். அப்போதுதான் இரும்பு மாதவடியில் ஆமியின் ப்ரக் கிளைமோரில் அகப்பட்டு இராணுவத்தினர் சின்னா பின்னமாகினர். எங்கும் வெடிச்சத்தம் பதற்றம் அப்போதுதான் வீட்டடியால் ஓடிக் கொண்டு வந்த மாணிக்கத்தார், புளியடிக்கு ஆமி வந்திட்டாங்கள் எண்டு சொல்லியபடியே ஓடினார். தவராசா சிவபாதம் இருவரிடமும் பதற்றம் தொடங்கியது. இருவரும் எங்காவது போவதற்குத் தயாரானார்கள் றேடியோ லைசன்ஸ், பொயிலைப் பாடத்துக்கு கீழ் வைச்ச சங்கிலி எல்லாத்தையும் எடுத்துக் கொடுத்திட்டு கொற்றாவத்தையை நோக்கி ஓடினார்கள். அந்தத் தோட்டவெளியில் முதலில் மிளகாய்த் தோட்டத்திற்குள் ஒளிந்திருந்தார்கள். ஏதோ சப்பாத்துக் காலடி அண்மிப்பதாய் அருட்டுணர்வு நிமிர பக்கத்து தறைக்குள் புகுந்தார்கள். 

பதுங்கிப் பதுங்கி பின்வாங்கி ஒளிந்து, நிமிர்ந்து பின்தான் அது மரவள்ளித்தறை என விளங்கியது. கீழ் இலைகள் உதிர்ந்து வெட்டையாய் இருந்தது. சுதாகரித்து மாறுவதற்கிடையில் முன்னுக்கு இராணுச் சீருடைகள் டேய் கொட்டியா… 

“….”

“….”

“….”

கையில் இறுகியிருந்த அடையாள அட்டைகளுடன் சிவபாதம் காதுக்குள்ளால் இரத்தம் வந்தும்.. தவராசா பிடரி இரத்தத்தால் நனைந்திருக்கவும்… “அம்மா தண்ணி… தண்ணி என்ற கடைசிக்குரல்கள் காற்றில் கரைந்திருந்த நினைவில்… 

மீன் விக்கிறவள் ஒருத்தி வந்து அம்மா தண்ணி தாங்கோ எண்டு வாங்கிக் குடிச்சுப்போட்டு யாரோ இரண்டு பெடியளை மரவள்ளி யுக்குள்ள சுட்டுப் போட்டிருக்காம் என்று சொன்னபின்னர்… வேறு ஆக்களும் அது தவராசா, சிவபாதம் என்று அடையாளம் சொன்ன பின்னர் தான்…. 

“….”

“….”

“….”

அப்பாவும் பக்கத்து வீட்டு “பிளேன்” சித்தப்பாவும் கொண்டு வந்து இருவரையும் இரத்தத்தோட… கட்டிலில் கிடத்தின பிறகு, அப்பா இறுகிய முகத்தோடு பார்த்துக் கொண்டே நின்றாராம். அழுகை ஓலத்தினால் வீடு அதிர்ந்து கொண்டிருக்க அப்பா மட்டும் அழாது பார்த்துக் கொண்டு நின்றாராம். இன்றும் கூட ஒருநாளும் அப்பா அழுததாய் நானும் கண்டதில்லை. அம்மாவும் கண்டதில்லை. 

“உள் உடைந்து” தனக்குள் அழுது தன் கோலத்தை அழித்துக் கொண்டிருக்கும் அப்பாவின் மனம் உடைந்து… ஞாபகங்கள் சிதறி…. 

தெல்லிப்பளை, மந்திகை என்று மாறி மாறி வைத்திருந்தும் ஒருக்கால் மாறி, பிறகு தொடர்ந்து…. மருமக்களின் ஞாபகங்கள் அவரை வருத்தி… வருத்தி 

அம்மா இப்போது கூடச் சொல்லுவா…..கத்தரிக்காய் வித்துப் போட்டு வந்து இதுதான் கடைசிக் கத்தரி என்றிட்டு ஒரு காப்பறை அரிசி கொடுத்து அதையே எட்டுக்குச் சமைத்தது… 

பொயிலைப்பாடம் வித்து T.V வாங்கவேணும் என்று நினைத்த சிந்தனை… அம்மாவுக்கும் அப்பாவுக்கும் புதிசாய் வீடுகட்ட வாங்கிய….காணி 

அம்மா இப்போது கூட விக்கி விக்கி அழுவா, எனக்குக் கூட கண்ணீர் துளிர்க்கிறது. புல்லரிக்கிறது. 

ஆனால் அம்மா இடையில வந்தவ, அப்பா? ஆனால் இது வரைக்கும் அவர் அழவில்லை. இறுகிச் செருகியிருக்கும் சோகத்திற்கும் விடுதலை கொடுக்க முடியாது… தவிக்கும் அப்பா…! 


ஏதோ தண்ணி சிந்தும் சத்தம் என் நினைவைக் கலைத்தது. ஐயோ….அப்பாதான் திரும்பவும்…

(பரிசுச் சான்றிதழ் பெறும் சிறுகதை)

யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட தருமராசா அஜந்தகுமார் 1984 ஆம் ஆண்டு பிறந்த ஓர் இளைஞன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட இரண்டாம் வருட மாணவனாகிய இவர் படிக்கும் காலத்திலிருந்து எழுத்துத்துறையில் மிகுந்த ஆர்வம் காட்டி எழுதிவருகின்றார். சமுதாயக் கண்ணோட்டத்தில் தன் பார்வையைச் செலுத்தி, தான் பெற்ற அனுபவங்களுடன் நின்று இலக்கியம் படைத்துவருகின்றார். ‘ஞானம்’ ‘மல்லிகை’ சஞ்சிகைகளில் இவர் கவிதைகள் வெளிவந்துள்ளன. வீரகேசரி, சங்குநாதம், புதிய தரிசனம், உதயன் போன்றவற்றில் பத்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், ஏராளமான கவிதைகளையும் எழுதியுள்ளார். வலம்புரி பத்திரிகை இவரின் முதற் கவிதை 2000ஆம் ஆண்டு வெளிவந்தது. அப் பத்திரிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் (2002) பாராட்டுப் பரிசு பெற்றார். சிறுவர் இதழான ‘துளிர்’ சஞ்சிகை ஆசிரியராகப் பணியாற்றிய இவர் தற்பொழுது வெளிவந்துகொண்டிருக்கும் ‘புதிய தரிசனம்’ சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து இலக்கியப்பணியை மேற்கொண்டுவருகின்றார். 

– கொக்கிளாய் மாமி (சிறுகதைகள்), தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன், முதற்பதிப்பு: செப்டெம்பர் 2005, ஞானம் பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *